பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 29, 2009

தொழில்நுட்பத்தை தடை செய்வது தீர்வு இல்லை - Paulo Coelho

இப்போது எல்லாம் ஆங்கில நியூஸ் பேப்பரில் ஏதாவது படித்தால் அதை யதிராஜ்க்கு அனுப்பிவிடுகிறேன். பத்து நிமிஷத்தில் அதை எனக்கு திரும்ப அனுப்பிவிடுவார், தமிழில்!

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் தமிழ் பத்திரிக்கையில் வருவதில்லை. சில நாட்கள் அவருக்கு அனுப்பிய செய்தி இங்கே உங்கள் பார்வைக்கு.

2009 ஆண்டு முழுவதுமே பதிப்பாளர் உலகத்திற்கு அச்சமூட்டக்கூடிய ஆண்டாக இருந்தது. இந்த பயத்திற்கான காரணம் கணிப்பொறி ஊடகங்கள் என்ற பிசாசு என்றால் அது மிகையல்ல.


சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து என்னுடைய முகவர் ஒரு கெட்ட செய்தியைத் தாங்கி வந்தார். அதாவது, என்னுடைய நாவலான, “The Alchemist" - இன் பதிப்பாளர், தன்னுடைய பதிப்பிக்கும் தொழிலை நிறுத்தி விடுவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிந்தது. காரணம், அந்த ஆண்டில் மொத்தமே அவர் பதிப்பித்தவைகளில் வெறும் 3000 பிரதிகளுக்குக் கீழாகவே விற்பனையாகியுள்ளதுதான். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கும், முயற்சிகளுக்குமிடையே வேறொரு ரஷ்ய மொழி பதிப்பாளரைக் கண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவர் உக்ரைனில் உள்ள “கீவ்” நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். பதிப்பு வேலைகளுக்குத் தேவையான காகிதங்களைக் கொள்முதல் செய்வதிலும் அவருக்கு மிகுந்த சிரமங்களிருந்தன. ( பொதுவாகவே அப்பொழுது பதிப்பிக்கும் காகிதங்களுக்கு பஞ்சம் நிலவியது.)

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், சில வாரங்களுக்கு முன்னர், என்னுடைய புத்தகத்தின் சட்டத்திற்கு புறம்பான ரஷ்ய மொழி பெயர்ப்பு இணைய தளங்களில் காணக் கிடைத்தது. ஆக இச்சட்டத்திற்கு புறம்பான இணைய பதிப்புகளே, ரஷ்யாவில் என்னுடைய புத்தகத்தின் விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம் என உடனடியாக முடிவு கட்டினேன்.

மற்ற நூலாசிரியர்களைப் போலவே, நானும் என்னுடைய புத்தகங்கள் அதிக அளவில் படிக்கப்பட வேண்டுமென்று விரும்பினேன். சந்தையில் புத்தகங்கள் கிடைக்காத போதும், அதே சமயம் பதிப்பாளர்களுக்கும், புத்தகங்களை பதிப்பிப்பதற்குண்டான காகிதங்கள் கிடைக்காத போதும், ஏன் நாமே இணையத்தில் பதிப்பிக்கக் கூடாது என்று எண்ணினேன்? உடனடியாக ஏற்பட்ட உத்வேகத்தின் வெளிப்பாடாக, என்னுடைய இணையதளத்திலேயே, என்னுடைய புத்தகத்தின் சட்டத்திற்கு புறம்பான ரஷ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டேன். படிக்க விரும்புவோர், கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்வதற்கும் ஏதுவாக.

2000 ஆவது ஆண்டின் முடிவில், என்னுடைய உக்ரேனிய பதிப்பாளர், மிகுந்த உற்சாகத்துடன், என்னுடைய புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பின் பதிப்புகள் சுமார் 10,000 காப்பிகள் (Copies) விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்தார். இவ்விற்பனை, 2001 இன் முடிவில் ஒரு லட்சமாகவும், 2002 இல் ஒரு மில்லியனாகவும் உயர்ந்தது.

அச்சமயத்தில், என்னுடைய இணையத்தில் நான் வெளியிட்டிருந்த சட்டத்திற்குப் புறம்பான ரஷ்ய மொழிபெயர்ப்பு குறித்து பல ஈ-மெயில்கள் வந்த வண்ணமிருந்தன. அதில் பெரும்பாலானவை இவ்வாறிருந்தன, “ உங்களுடைய படைப்புகள் கிடைக்கப்பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது”. ரஷ்யா என்பது ஒரு மிகப்பெரிய தேசம், தவிர விநியோகம் என்பது இங்கு ஒரு சிக்கலான விஷயம். ஆகவே விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இணையம் பெரும் பங்காற்றுகிறது, என்பதே எனது தீர்மானமாக இருந்தது.

இவ்வுற்சாகத்தின் காரணமாக, என்னுடைய மற்ற படைப்புகளையும் இணையம் வாயிலாக வெளியிடத் துவங்கினேன். இதனால் சட்ட சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டேன். என்னுடைய நூல்களின் ரஷ்ய மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டாலும், வேறொருவரால் மொழி பெயர்க்கப்பட்டவற்றில் எனக்கு உரிமை இல்லை. இதுதான் சட்ட சிக்கல்களுக்குக் காரணம். இதற்கு நான் கண்டுபிடித்த வழி, எல்லா படைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஒரு சட்டத்திற்கு புறம்பான இணைய தளத்தில் வெளியிடுவது.

இவ்விஷயம் சமூக வலைத்தளங்களின் வாயிலாகப் பரப்பப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்தது. இச்சமயத்தில், இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு ”மியூனிச்” நகரில் நடைபெற்ற, டிஜிட்டல், வாழ்வு மற்றும் கலை தொடர்பான கருத்தரங்கில், ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அவ்விணைய தளத்திற்கு வந்து போவதாகப் பேசினேன். அங்கு எல்லா மொழி இணைய புத்தகங்களும் கிடைக்கும், ஜெர்மன் முதல் மலையாளம் வரை. இதற்கிடையே, எப்போதுமில்லாத அளவில், பதிப்பாளர்கள் வெளியிட்ட என்னுடைய நூல்களும் விற்றுத் தீர்ந்தன. என்னுடைய சட்ட விரோதமான இணைய பதிப்புகள் பற்றி எந்த பதிப்பாளரும் என்னிடம் புகார் செய்யாததால், அவ்விஷயம் அவர்களுக்குத் தெரிந்த போதிலும், அவர்கள் அதில் தலையிட விரும்பவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டேன்.

இதனிடையே ”மியூனிச்” நகரில் நான் பேசியவற்றின் சாராம்சம் மறுநாளைய செய்தித் தாள்களில் வெளியானவுடன், என்னுடைய தொலைபேசி ஓயாமல் கதறத் தொடங்கியது. என்னுடைய இணைய பதிப்புகள் பற்றித் தெரிந்து கொண்ட பதிப்பாளர்கள், அது பற்றிக் கேட்டனர். அனைவருமே, இதனால் உங்களுடைய புத்தகங்களில் விற்பனை குறைய வாய்ப்பிருக்கிறது என்ற ரீதியில் எச்சரித்தனர்.

2005 ஆம் ஆண்டு முதலேயே என்னுடைய பதிப்புகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன, ஆயினும் புத்தக விற்பனையில் எவ்வித சறுக்கலும் இல்லை என்று வாதிட்டேன். இணையத்தின் வாயிலாக, தொன்று தொட்டு நடைமுறையிலிருக்கும் அச்சகத்தில் பதிப்பிக்கும் முறை லாபமடைந்தது என்று கொள்ளலாம் என்றாலும் அதற்காக வருந்தவே செய்கிறேன். நான் பதிப்பாளர்களை மதிக்கிறேன், ஆயினும் புத்தகக் கடைகளில் நடப்பவற்றிற்கு மாறாக அவர்கள் கருதுவது சிறிதே சலிப்படைய வைக்கிறது. இதற்கிடையே என்னுடைய புத்தகங்கள் 100 மில்லியன் அளவிற்கு விற்றுத் தீர்ந்தன. அதனால் எனக்கு சில உரிமைகளும் கிட்டின. அது என்னவெனில், இணைய பதிப்புகள் தவறான முன்னுதாரணமாக இருப்பினும், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது.

நடந்தவற்றை நான் எப்படி விவரிப்பது? பேராசை என்பதை பொருளாதார உலகம் மட்டுமே விவாதப் பொருளாக பாவிக்கவில்லை, மாறாக எந்தவொரு விஷயத்திலும் பிரத்யேக உரிமை பாராட்டும் எந்தவொரு நிறுவனமுமே, அது தகவல் தொடர்பு சார்ந்ததாக இருக்கட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருள் சார்ந்ததாக இருக்கட்டும். என்னுடைய விஷயத்தில், மக்கள் என்னுடைய இணைய பதிப்புகளைப் படித்தார்கள், அவற்றை விரும்பினார்கள், அதனை கடையில் சென்று புத்தகமாக வாங்கவும் செய்தார்கள். இது சில காலங்களுக்குத் தொடர்ந்தது. சோமர்ஸெட் மாம் கூறியது போல், “ நாம் எழுத வேண்டுமென்பதற்காக எழுதுவதில்லை, எழுதியே ஆகவேண்டுமென்பதற்காக எழுதுகிறோம்”. இதனுடன் நான் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்வேன், “நமது எழுத்துக்கள் படிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் எழுதுகிறோம்”.

பதினாறாம் நூற்றாண்டில், ஒரு கத்தோலிக்க திருச்சபை, “தடை செய்யப்பட்ட புத்தகங்கள்” என்றொரு பட்டியலை வெளியிட்டது. அது பெரும்பாலான புத்தகாசிரியர்களை அபாய நிலைக்குத் தள்ளினாலும், அத்திருச்சபை இருந்த சுமார் நான்கு நூற்றாண்டு காலம் வரை அப்பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டவண்ணமிருந்தது. மிக சமீபத்தில், கருத்துக்களால் வேறுபட்ட சில சோவியத் எழுத்தாளர்கள், தங்களது புத்தகத்தின் சிறு அளவிலானவற்றைத் தொகுத்து தொடர்ந்து வெளியிட்டனர். தங்களது எண்ணங்களை வேண்டுவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு. அவர்களில் இருவர், அலெக்சாண்டர் சோல்ஜெனித்ஸின் மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றனர்.

பைல் ஷேரிங் (File Sharing) - இங்கினால் பாதிப்பிற்குள்ளான சில இசை நிறுவனங்களைப் போலல்ல, பதிப்புலகம். ஐபோன் மற்றும் ப்ளாக்பெரி போன்றவற்றிற்கான மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்களான, Kindle, Nook, மற்றும் Sony's Reader போன்றவை இணையத்தில் கிடைப்பது போல், பதிப்பாளர் தனது படைப்புகளை Blog'இல் வெளியிட்டார். இம்முயற்சிகளைத் தடை செய்யும் நோக்கமுடைய நாடுகளான பிரான்ஸ் போன்றவை, இவற்றைத் தடை செய்ய சட்டமியற்றின. காலப்போக்கில் இந்நாடுகள் தங்களது எழுத்தாளர்கள் மதிப்பிழந்து போவதையும் காண நேரிடும்.

தடை செய்வது இதற்கு சரியான தீர்வல்ல. தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி நல்ல இலக்கியங்களை வெளிக்கொணர்வதே சரியான தீர்வாகும்.

என்னுடைய பதிப்புகள் சந்தைகளில் அதிக அளவில் விற்பனை ஆவதன் காரணமாகவே, நான் இணையத்தில் வெளியிடுவதாக சிலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. என்னுடைய பதிப்புகளை நான் இணையத்தில் வெளியிடுவதனாலேயே, என்னுடைய படைப்புகளின் விற்பனை அதிகரிக்கிறது.

இன்று யாரேனும் என்னிடம், வெறும் மூன்று பேர் படிப்பதற்காக ஒரு படைப்பை உருவாக்க, 3 மில்லியன் டாலர் வேண்டுமா அல்லது 3 மில்லியன் வாசகர்கள் படிப்பதற்கான படைப்பை உருவாக்க, 3 மில்லியன் டாலர் வேண்டுமா என்று கேட்டால் நான் பின்னதைத் தான் தேர்வு செய்வேன்.


நான் மட்டுமல்ல, அனைத்து எழுத்தாளர்களுமே இம்முடிவைத்தான் எடுப்பர்.

-- Paulo Coelho

( Paulo Coelho என்ற இந்த எழுத்தாளர் இதுவரை 26 புத்தகங்கள் எழுதியுள்ளார். Alchemist என்ற இவரது படைப்பு 65 மில்லியன் காப்பிகள் அளவிற்கு விற்றுத் தீர்ந்துள்ளது.)

( Source: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/et-cetera/Why-digital-media-is-a-novelists-best-friend/articleshow/5368489.cms, தமிழில் யதிராஜ் )

3 Comments:

வீரராகவன் said...

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினால் என்றார் திருமூலர். எனவே கால மாற்றத்திற்கு ஏற்ப வானொலி பெட்டியிலிருந்து தொலைக் காட்சி பெட்டிக்கும், நாடக மேடையிலிருந்து திரைப்படங்களும் (வண்ணத்திரை), வண்ணத்திரையிலிருந்து சின்னத் திரைக்கும் தொழில் நுட்பத்தை தடை செய்வது தீர்வு இல்லை என்பது தெளிவாகவே புரியும்.
இதனால் அடுத்த தொழில் நுட்பத்தை எதிர்கொள்ளும் அழியாத கலை படைப்புகளே தேவை.
இந்த இணைய கால கட்டத்திலும், இலட்சக் கணக்கில் புத்தகங்கள் சென்னை கண்காட்சியில் விற்று தீருவது ஒரு எடுத்துகாட்டு.

கானகம் said...

நல்ல மொழிபெயர்ப்பு.. படிக்கச் சுகமாய் இருந்தது. நான் படித்த இன்னொரு அருமையான மொழிபெயர்ப்பு சொல்வனத்தில் வரும் மைத்ரேயன் எழுதும் “ புரிந்துகொள்” என்ற தொடர். அது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதை நம்பக் கடினமாய் இருக்கும்..

ஜெயக்குமார்

Badri Seshadri said...

பாலோ கொய்லோ தன் புத்தகங்கள் விற்பதற்கு முழுக் காரணம் இணையம்தான் என்பதாகப் பேசுகிறார். அது முழு உண்மை என்று தோன்றவில்லை. அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.

ஆனால் இணையம் ‘சாம்ப்ளிங்’ என்ற வசதியைத் தருகிறது. ஒருவன் இன்னமாதிரி எழுதுகிறார் என்றே தெரியாவிட்டால் அவரது புத்தகத்தை யாரும் வாங்கிப் படிக்காமல் போல நேரிடலாம்.

பல புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (முக்கியமாக புனைவு எழுதுபவர்கள்) தங்களது சில படைப்புகளை (அல்லது ஒரு படைப்பையாவது) இலவசமாக இணையத்தில் தரலாம். அதைப் படித்து ஆர்வம் கொள்ளும் வாசகர்கள் அவரது பிற படைப்புகளைக் காசு கொடுத்து வாங்கலாம்.

தொழில்நுட்பத்தை நிச்சயம் இடக்கையால் புறந்தள்ளக் கூடாது. அதனை ஏற்றுக்கொள்கிறேன்.