பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 26, 2009

மதுமாதுபப்ளிசிட்டி

நான் சென்னை நகரில் குடியேறி 34 வருடங்கள் ஆகின்றன. நாக்கை வறட்டி தலை சுற்றிய வெயில் முதல் வீட்டுக்குள் நுழைந்த வெள்ளம் வரை அனுபவித்தாயிற்று. நான் பிறந்த மார்கழி மாதம் சென்னை நகரின் வசந்த காலம். அளவான வெயில்; அளவான குளிர்; இப்போதெல்லாம் அளவான மழை கூட உண்டு.



மார்கழியை சென்னையில் மறக்க முடியாத மாதமாக ஒவ்வோராண்டும் ஆக்குபவை புத்தகக் கண்காட்சியும் இசைவிழாக்களும்தான். இசை விழாக்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் புத்தகக் காட்சி.

பதிப்பாளர்கள்-விற்பனையாளர்கள் சங்கமான `பபாசி' இதுவரை நடத்திய வருடாந்தர புத்தகக் காட்சியில் பார்வையாளனாகவோ, பங்கேற்பாளனாகவோ ஒரு வருடம் விடாமல் 32 வருடங்களாகக் கலந்துகொண்டிருக்கிறேன். 22 வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் அரங்கு வைத்த முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமை என்னுடைய `ஏழு நாட்கள்' இதழுக்கு உண்டு. சென்னை நகரத்துக்கென்றே தொடங்கிய அந்த இதழ் புத்தகக் காட்சி நடந்த 15 நாட்கள் மட்டுமே வெளிவந்த பெருமையையும் சம்பாதித்துக் கொண்டது. இன்னொரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் நாடகப் பிரதிகளை அரங்கில் வைத்த இரவே கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சமூக, கலாசார, நாட்டு நடப்பு விஷயங்கள் பற்றி மக்கள் கருத்துக் கணிப்பை அன்றாடத் தேர்தலாக நடத்தும் அரங்கு என்னுடையதுதான்.

சிநேகமும் வசதிக் குறைவும் நிறைந்த காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் சில ஆயிரம் பேர்கள் வந்து கொண்டிருந்த புத்தக் காட்சி, இப்போது சற்றே அந்நிய உணர்வுடன் பெரும் வசதிகளோடு பல லட்சம் பேர் வரும் நிகழ்வாக வளர்ந்திருக்கிறது. இதற்குப் பின்னால் எந்த சுய விளம்பரமும் சொந்தப் பிரதிபலனும் பாராமல் உழைக்கிற ஒரு டஜன் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கும் மேலாக அப்படிப்பட்டவர்கள் புதிது புதிதாகத் தொடர்ந்து வந்து ஈடுபட்டுக் கொண்டே இருப்பது ஓர் ஆச்சரியம். அதற்குக் காரணம் புத்தக பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் அதை வெறும் வியாபாரமாகப் பார்ப்பதில்லை. ஏதோ சமூகத்துக்கு நம்மால் ஆன நல்லதைச் செய்கிறோம் என்ற நினைப்பு பதிப்பாளர்களுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தகக்காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை, வாங்கும் நூல்களின் எண்ணிக்கை, மொத்தத் தொகை அளவு எல்லாம் அதிகரிக்கின்றன. ஆனால் இவையெல்லாமே பெருகி வரும் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பெரும் வளர்ச்சியல்ல. இன்றும் நம் சமூகத்தில் நூற்றுக்குப் பத்து பேர்தான் புத்தகம் வாங்குகிறார்கள். முன்பு ஒரு லட்சம் பேர் இருந்தபோது பத்தாயிரம் பேர் வாங்கினால், இப்போது பத்து லட்சம் பேருக்கு ஒரு லட்சம் பேர் புத்தகம் வாங்குவார்கள். விகிதாசாரம் அதிகரிக்கவில்லை.

எண்ணிக்கை அதிகரித்ததனால் நிறைய பதிப்பாளர்களால் தொழிலில் முன்பை விட தாக்குப் பிடிக்க முடிகிறது. முன்பை விட நிறைய லாபம் பார்க்க முடிகிறது.

ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.

அதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.

ஒரு டீசண்ட் டான நடுத்தர வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு எழுத்தாளன் மாதம் 20 ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க வேண்டு மென்றால், ஒரு வருடத்தில் அவ னுடைய 100 ரூபாய் விலையுள்ள புத்தகங்கள் மொத்தம் 24 ஆயிரம் பிரதியாவது விற்கவேண்டும். அதிக வாசகர் வரவேற்பைப் பெற்ற என்னுடைய `அறிந்தும் அறியாமலும்' புத்தகம் சென்ற ஒரு வருடத்தில் 2 ஆயிரம் பிரதிகள் விற்றிருக்கிறது. இதுவே நல்ல விற்பனைதான் என்று தொழில் விற்பன்னர்கள் சொல்கிறார்கள். மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்க, நான் எழுதிய 12 புத்தகங்களும் வருடந்தோறும் தலா 2 ஆயிரம் பிரதிகள் வீதம் விற்றாகவேண்டும்!

இந்தச் சூழ்நிலைதான் தமிழில் பலரை முழு நேர எழுத்தாளராக விடாமல் தடுத்து விடுகிறது. சினிமாவில் ஒரு பாட்டு எழுதினால் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை தருகிறார்களாம். கவிஞனாக இருப்பதை விடப் பாடலாசிரியனாக இருப்பதுதான் லாபகரமானது. கவிஞனென்றால் கவிதைகளை வெளியிடவே யாரும் முன்வரமாட்டார்கள். சொந்தக் காசில் வெளியிடவேண்டும். கவிதைப் புத்தகம் விற்பதே இல்லை. சொந்தக் காசில் அச்சிட்டு விசிட்டிங் கார்ட் மாதிரி பார்க்கிறவர்களுக்கெல்லாம் விநியோகிக்கலாம்.

அதே நிலைமைதான் நாடகப் புத்தகங்களுக்கும். ஏனென்றால் ஒரு தலைமுறைக்கே நாடகம் என்றால் என்ன என்று தெரியாது. டி.வியில் வருகிற சித்தி, அரசி, கோலங்கள் இதையெல்லாம்தான் நாடகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதினார் என்று சொன்னால், அவர் சீரியல் எழுதியதாகவே இங்கே அர்த்தம் கொள்ளப்படும்.

ஓர் இலக்கியப் பத்திரிகை, ஒரு புத்தகக் கடையில் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த எனக்கு விழா நடத்தியவர்கள் பூச்செண்டு அளித்தபோது `இது வேண்டாமே; நூல்களை நினைவுப் பரிசாகக் கொடுங்கள்' என்று சொன்னேன். உடனே மதுமாதுபப்ளிசிட்டி பைத்தியமான ஒரு கோமாளி எழுத்தாளர், நான் பூச்செண்டுக்கு எதிரி என்று ஆரம்பித்து இணையத்தில் வசை பாடித் தீர்த்துவிட்டார். நான் பூச்செண்டுக்கு எதிரி இல்லை என்பது ஓ வாசகர் எல்லாருக்கும் தெரியும். தமிழில் புத்தகங்கள் விற்பதில்லை; எனக்கு நட்சத்திர ஓட்டல் பாரில் போய் குடிக்கப் பணமில்லை; ஓசியில் மது கிடைத்தாலும் வீடு திரும்ப ஆட்டோ காசு கிடைப்பதில்லை என்று புலம்புவதே இந்தக் கோமாளி எழுத்தாளர்தான்.


புத்தகங்களை வாங்குகிற, பரிசாகத் தருகிற ஒரு கலாசாரத்தை நம் சமூகத்தில் எழுத்தாளனே ஊக்குவிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள்? (கலைஞர் கருணாநிதி ஒரு எழுத்தாளராக இருக்கவேதான் அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகளாக நூல்களைத் தரவேண்டும் என்று அரசாணை பிறப்பித்து அதற்காக என்னிடம் பூச்செண்டு பெற்றார்!) எழுத்தாளனே புத்தகப் பரப்பலுக்கு எதிராக உளறிக் கொண்டிருந்தால், தொடர்ந்து ஜவுளிக்கடை, நகைக்கடை அதிபர்களிடம் கையேந்திக் கொண்டு, இண்டர்நெட் பிச்சைக்காரனாக அவமானப்படத்தான் வேண்டி வரும்.

பெற்றோர்கள் இன்று குழந்தைகளை மார்க் வாங்குவதற்காக விதவிதமாகத் தொல்லைப்படுத்துகிறார்கள். (`எல்லாம் அவங்க நல்லதுக்குத்தான்' என்ற அன்புக் கொடுமை வேறு.) தங்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள், நல்ல நாடகங்கள், நல்ல கவிதைகள் என்று அறிமுகப்படுத்தும் பெற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். பிறந்த நாள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் ஒவ்வொன்றுக்கும் புத்தகங்களைப் பரிசுகளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு குடும்பமும் தொடங்கவேண்டும். வாஸ்து, சமையற்குறிப்பு, சுய முன்னேற்றப் புத்தகங்களையே ஒவ்வொரு மாதமும் யாரும் வாங்க முடியாது. நல்ல கதை, கவிதை, பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் என்று வாங்குவது மெல்ல மெல்ல வளரும்.

தமிழ் நாட்டில் மூன்று கோடி படித்த குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் வெறும் நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவது என்ற பழக்கத்தை மேற்கொண்டால், வருடத்துக்கு 3600 கோடி ரூபாய்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் விற்கமுடியும். (டாஸ்மாக் விற்பனை எந்தப் பிரசாரமும் இல்லாமல் இப்போதே 13 ஆயிரம் கோடி ரூபாய்.)

முதலில் `ஓ' படிக்கும் குடும்பங்கள் எல்லாம் மாதாமாதம் புத்தகம் வாங்க வேண்டுமென்று இந்தப் புத்தாண்டில் உறுதிமொழி எடுத் துக் கொள்ளுங்கள். டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் என் அரங்கத்தில் புத்தகம் வாங்க வந்தீர்களென்றால், இந்தக் கட்டுரை நறுக்குடன் வாருங்கள். அதைத் தரும் ஒவ் வொருவருக்கும் வாங்கும் புத்தகத்தில் 30 சதவிகிதம் விலை தள்ளுபடி தருவேன்!

ஒரு மகிழ்ச்சித் தகவல்:

சில வாரங்கள் முன்னர் சேத்துப்பட்டு ரயிலடியில் ஆதரவற்றிருந்த மன நலம் குன்றிய ஒருவரைப் பார்த்துவிட்டு பேன்யன் அமைப்புக்கு என் தோழி போன் செய்தபோது, அவர்கள் தற்போது அத்தகைய நபர்களை புதிதாக தம் இல்லத்தில் சேர்ப்பதில்லை என்று தகவல் சொன்னதைக் குறித்திருந்தேன். இதையடுத்து பேன்யனின் நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்தார்கள். புதிதாக சேர்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்தத் தகவலை போனில் சொன்ன பேன்யன் ஊழியர் கனிவாக சொன்னாரா, கடுமையாக சொன்னாரா என்று மட்டும் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். கனிவாகத்தான் சொன்னார். எனக்கும் என் தோழிக்கும் வருத்தமெல்லாம், வேறு எங்கே பாதிக்கப்பட்டவரை அனுப்பலாம் என்று கேட்டால், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பது பற்றித்தான்.

ஓ பக்கச் செய்தி பார்த்துவிட்டு உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாசாகர் தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் சேத்துப்பட்டில் இருந்த நபரை தமது காப்பகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வித்யாசாகருக்கு நன்றி.

தெருவில் காணப்படும் மன நலம் குன்றியவர்கள் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்தால் அவர்கள் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையையும் எழுதியிருந்தேன். இணைய எழுத்தாளரும் மருத்துவருமான நண்பர் புருனோ நான் எழுதியது 108 சேவையைக் குறைத்து மதிப்பிடும் ஆபத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். நிச்சயம் அப்படி இல்லை. 108 சேவையின் சிறப்பே பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆம்புலன்ஸிலேயே சிகிச்சையைத் தொடங்கிவிடும் இந்த முறை சிறப்பானது என்பதே என் கருத்துமாகும். உயிர் ஆபத்தில் இருப்பவர்களுக்கான சேவை இது. மன நலம் குன்றி தெருக்களில் அனாதைகளாக திரிவோருக்கும் இது போன்ற ஒரு சேவை தேவை என்பதே என் வலியுறுத்தல்.

சேத்துப்பட்டு ரயிலடியில் மன நோயாளிகள் அடிக்கடி காணப்படுவது தொடர்பான என் பதிவுக்கு வந்த மேற்படி எதிர்வினைகளுக்கு நன்றி. இதுவரை எந்த எதிர்வினையும் காவல் துறையிடமிருந்தோ, அரசிடமிருந்தோ வரவில்லை என்பதுதான் வருத்தம்..

இந்த வாரத் திட்டு

சபையை நடக்க விடாமல் கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கும் எம்.பிகளுக்கும் அதனால் 12 நிமிடத்துக்குள் ஐந்து சட்டத் திருத்தங்களை நிறைவேற்றிய மக்களவைக்கும் இ.வா.தி

இந்த வாரப் பூச்செண்டு

சிங்கப்பூர் நூலகத்துக்கு நிகராகக் கட்டி வருவதாக தமிழக அரசு சொல்லும் தரமணி அண்ணா நூலகத்துக்காக வீடு வீடாகப் போய் புத்தகங்களை நன்கொடை பெற்று வந்தால் சிறப்பு மதிப்பெண் தரப்படும் என்று அறிவித்திருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு இ.வா.பூ

( நன்றி: குமுதம் )

9 Comments:

நலம் பெறுக said...

சாரு நிவேதிதாவையெல்லாம் எழுத்தாளர் எனும் அடைமொழியோடு அழைப்பதும் தவறு..

மிகவும் கேவலமான ஒழுக்கம் குறைந்த நடவடிக்கைகளைப் பகிரங்கமாக எழுதுவது ஒருவித நடையழகு என்பதைப் போல பாவனை காட்டி வரும் அவர் தமிழ் எழுத்து உலகில் ஓர் இழுக்கு

கானகம் said...

// தமிழ் நாட்டில் மூன்று கோடி படித்த குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் வெறும் நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவது என்ற பழக்கத்தை மேற்கொண்டால், வருடத்துக்கு 3600 கோடி ரூபாய்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் விற்கமுடியும். (டாஸ்மாக் விற்பனை எந்தப் பிரசாரமும் இல்லாமல் இப்போதே 13 ஆயிரம் கோடி ரூபாய்.)//

இது ஒரு மிகப்பெரிய காந்திய சிந்தனை.

இந்தியாவில் கதர், கிராமக் கைத்தொழில்களை நாம் ஊக்குவிக்க இந்தியாவில் உள்ள அனைவரும் குறைந்தது ஒரு ரூபாய்க்கு கதர் கைவினைப் பொருட்களை வாங்கினால் குறைந்த பட்சம் நூறுகோடிக்கான பொருளாதாரம் கிராமக் கைத்தொழில்களுக்குக் கிடைக்கும். 10 ரூபாய் செலவழித்து பெப்சி, கோக் குடிக்க தயங்காத நாம்,வீட்டிற்கு கதர்க் கடையில் கிடைக்கும் திரைச்சீலைகளை உபயோகப் படுத்துவதில்லை, போர்வைகள், காலணிகள் என எண்ணற்ற கதர், கிராமக் கைவினைப்பொருட்களை வாங்கி கிராமக் கைத்தொழில்களை வாழவைக்க வேண்டும்.

சந்துல கிராமக் கைத்தொழில்களுக்கு ஒரு ஜே போட்டிருக்கேன்..இதைப் படிச்ச ஒரு பத்துப் பேரு கதர் துணிய வாங்குனா எவ்வளவு நல்லா இருக்கும்?

அப்படியே புத்தகத்தையும் வாங்குங்கப்பா..

ஜெயக்குமார்

கானகம் said...

//மிகவும் கேவலமான ஒழுக்கம் குறைந்த நடவடிக்கைகளைப் பகிரங்கமாக எழுதுவது ஒருவித நடையழகு என்பதைப் போல பாவனை காட்டி வரும் அவர் தமிழ் எழுத்து உலகில் ஓர் இழுக்கு//

சாக்கடையை சுற்றி வரும் பன்றிகள் போல அவரது எழுத்துக்கும் ஒரு ரசிகர் கூட்டம்..

ஹூம், என்னத்தைச் சொல்ல?

ஜெயக்குமார்

Santhappanசாந்தப்பன் said...

இன்றைக்கு தமிழ்நாட்டு நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு, தமிழ் படிக்க தெரியாது என்று சொல்லுவதே பழக்கமாகி விட்டது. இன்றைக்கு இளைஞர்களாயிருக்கும் பெற்றோர்களும் அதை ஊக்குவிக்கிறார்கள் என்பது அதை விடக் கொடுமை.

எங்கே "தமிழ்" புத்தகம் வாங்கப் போகிறார்கள்?

Gnanaputhran said...

We have to "educate" the school teachers to encourage reading and book buying habits in the children. You can see a sea change in which the next generation will make reading as a habit and buy books. Another easier and simpler thing is to revamp the the public library system. This requires our CM to spend 15 minutes to pass a G.O.

வலைஞன் said...

பதிப்பாளர்கள் இவ்வளவு குறைவான ராயல்டி கொடுப்பதின் காரணம்?
திரு பத்ரி விளக்குவாரா?
(அவர் குறைவாக கொடுக்கிறார் என சொல்லவில்லை .பதிப்பாளர் சார்பில் அவர் விளக்கம் அளிக்கலாம்!)
சாரு நிவேதிதா பற்றிய கருத்துக்கள் தேவையற்றவை தனி மனித ஒழுக்கத்தை விட பொது வாழ்வில் இருக்கும் மனிதர் ஒழுக்கமே நமக்கு கவலை தருகிறது,திவாரிக்கு என்ன தண்டனையும் போறாது

Anonymous said...

ஒரு காலத்தில் திருமணங்களில் மு. வ. புத்தகங்களைப் பரிசாக அளித்தார்கள். இப்போது புத்தகம் கொடுத்தால் “ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ புத்தகம் கொடுத்தான்யா.. அல்பன்” என்று இகழ்வார்கள். சமீபத்தில் சென்றிருந்த ஒரு திருமணத்திர்ல் உறவினர்களுக்கெல்லாம் வெற்றிலைப் பாக்குடன் ஒரு நாலாயிர திவ்யப் பிரபந்த புத்தகம் வைத்துக் கொடுத்தார்கள்.
50,100 பிரதிகளை வாங்குபவர்களுக்கு 40% தள்ளூபடி கொடுக்கலாம். அப்போதும் பதிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
-டில்லி பல்லி

Anonymous said...

புத்தகம் பரிசாகக் கொடுப்பதில் (நான் சந்தித்திருக்கும்) ஒரு சங்கடம், வாங்குபவர்கள் நான் படித்து முடித்த புத்தகத்தை பேக் செய்து கொடுக்கிறோம் என்று நினைத்துவிடுகிறார்கள். அதாவது, genuine-ஆகப் புத்தகப் பரிசு தரும் எண்ணம் இல்லை, காசு மிச்சப்படுத்துவதற்காக வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு புத்தகத்தைப் பொட்டலம் கட்டிக் கொடுத்துவிட்டான் என்கிற சிந்தனை பலருக்கு இருக்கிறது.

ஆனாலும் நான் விடுவதாக இல்லை, என் மகளின் நண்பர்கள் பிறந்த நாள் தொடங்கி, என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் திருமணங்கள், மற்ற விழாக்கள்வரை சகலத்துக்கும் (அவரவர் வயதுக்கு ஏற்ப) புத்தகங்களைமட்டுமே பரிசளிக்கிறேன் (என்னுடைய புத்தகங்களை அல்ல :)) அவர்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய வேறு புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கிப் பரிசளிக்கிறேன் :) ஆரம்பத்தில் கேலி செய்வார்கள், ’அது என்னோட கொள்கை’ என்று தெளிவாகச் சொல்லிவிடலாம், அவர்கள் சிரித்தாலும் பரவாயில்லை, என்றைக்காவது படிப்பார்கள் என்கிற நம்பிக்கைதான்.

ஆனால் ஒன்று, பரிசாக வந்த புத்தகத்தை கிழித்துக் குழந்தை மலஜலம் துடைக்கவும், டேபிளுக்கு முட்டுக்கொடுக்கவும் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் எதுவும் செய்வதற்கில்லை :-S

- என். சொக்கன்,
பெங்களூரு.

Anonymous said...

---------
50,100 பிரதிகளை வாங்குபவர்களுக்கு 40% தள்ளூபடி கொடுக்கலாம்.
---------

ஐம்பது, நூறா இல்லை அம்பதாயிரத்து நூறா?
தெளிவாகச் சொல்லுங்க அனானி ....

அனானி 10.