பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 31, 2009

2009 இட்லிவடை விருதுகள்

இவ்வாண்டின் ”சிறந்த” விருதுகள் அறிவிக்க சொல்லி ஒரு கமெண்ட் வந்தது. நமது பங்குக்கு நாமும் கொஞ்சம் கொளுத்திப் போடலாம் இந்த ஆண்டுன் ”சிறந்த” இட்லிவடை விருதுகள்.....

டிஸ்கி : இவ்விருதுகளில் பல, இவ்வாண்டுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இதே விருதுகள் அல்லாமல், ஸிமிலரான வேறு விருதுகள் வழங்கப்படலாம்.இவ்வாண்டின் சிறந்த அந்தர் பல்டி:

இவ்விருது சந்தேகமற காங்கிரஸ் கட்சிக்குப் போகிறது. அர்த்த ஜாமத்தில் அறிவித்த தெலங்கானா இன்று அந்தரத்தில் தொங்குகிறது. இதற்காக சிறந்த ”அந்தர் பல்டி” விருது காங்கிரஸிற்கு வழங்கப்படுகிறது.

குறிப்பு: இவ்வாண்டிற்கான அந்தர் பல்டி விருதுக்கு பரிசீலிக்கப்பட்டோரில், திருமாவளவனுக்கும் காங்கிரஸிற்குமிடையே பலத்த போட்டி இருந்த்து. பாபர் மசூதி கட்டுதற்கு புறப்படுதல், பிறகு அடுத்த ஆண்டு புறப்படுவதாகச் சொல்லி, அதற்கடுத்த ஆண்டும் போய் இன்னும் ஏதும் செய்யாமலிருத்தல், காங்கிரஸ் கட்சியுடன் விரோதம், பிறகு கூட்டணி, ராஜபக்‌ஷேவை கண்டமேனிக்கு வசவியது, பிறகு கைகுலுக்கி புன்னகை பூத்த்து வரை பல அந்தர் பல்டிகளை இவர் அடித்திருந்தாலும், கடைசி சுற்றில் 0.1 புள்ளி வித்யாசத்தில் காங்கிரஸ் இவ்விருதினைத் தட்டிப் பறித்து விட்ட்து. ஆனாலும் திருமா கவலையுற வேண்டாம். அடுத்த தேர்தலுக்குள் அடிப்பதற்கு இன்னும் பல்டிகள் பல இருக்கின்றன.

உட்கட்சிப் பூசல்:

இவ்வாண்டின் சிறந்த உட்கட்சிப் பூசலுக்கான விருது பா.ஜ.க விற்கு. கடந்த சில ஆண்டுகளாக இவ்விருதினைத் தொடர்ந்து பெற்று வந்த காங்கிரஸிடமிருந்து இவ்வாண்டு பா.ஜ.க இதனைத் தட்டிப் பறித்து விட்டது.

அம்பேல்:

இவ்வாண்டில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலுமே, டெபாஸிட்டை, தேர்தல் கமிஷனுக்கு தானமாக்க் கொடுத்த கேப்டனுக்கு சிறந்த அம்பேல் விருது.

“U” Turn:

இவ்வாண்டின் சிறந்த “U Turn” விருதினை முறையே, இளைஞர் காங்கிரஸ் போஸ்டரில் காட்சியளித்து விட்டு பிறகு காணாமல் போன, இளைய தலைவலி, ச்சே, தளபதி விஜய்யும், தமிழகம் வந்துவிட்டு, டெல்லியின் தலைநகரான(??) கோபாலபுரத்திற்கு தண்ணி காட்டிவிட்டுச் சென்ற ராகுலும் பகிர்ந்து கொள்கின்றனர்.செக்ஸ் ஸ்காண்டல்:

இவ்வாண்டு பல பாலியல் முறைகேடுகளைச் சந்தித்திருந்தாலும், கவர்னர் மாளிகையையே கலகலக்கச் செய்த, 80 வயது ராஸ லீலா நாயகன், என்.டி.திவாரிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. N D என்பதற்கு Night Duty என்றும் சொல்லுகிறார்கள். உண்மையா ?

(குறிப்பு: இவ்விருதுப் பட்டியல் தயார் செய்யும் நேரத்தில் வந்த் முக்கியச் செய்தி, 1980’லேயே இவரது முழு நீள இரவு லீலை உளவுத் துறையின் மூலம் படமாக்கப்பட்டு, வீடியோ கேஸட் உளவுத்துறை வசம் உள்ளதாம். எனவே இவ்விருதிற்கு இவர் தகுதி படைத்தவர் என்று கூறுவதை விட, இவ்விருதிற்கு இவரையடையும் தகுதி இருக்கிறது என்று கொள்ளலாம்.)பெண்ணுரிமைவாதி :
இவ்வாண்டின் சிறந்த ”பெண்ணுரிமைவாதி” விருது, பகுத்தறிவாளர்களே கண்டு பொறாமைப்படும் வகையில் பல பெண்களுக்கு உரிமை கொண்டாடிய டைகர் உட்ஸிற்கு வழங்கப்படுகிறது.சமத்துவவாதி:

தமது படங்களிலெல்லாம் சாதி ஒழிப்பு பற்றிப் பேசிவிட்டு, பிரச்சனை வந்த்தும், அய்யகோ என்னைக் காப்பாற்றுவோர் இல்லையா என ஜாதிக் கட்சி மாநாட்டில் புலம்பிய விவேக்கிற்கு, சிறந்த சமத்துவ்வியாதி, ச்சேச்சே, சமத்துவவாதி விருது வழங்கப்படுகிறது. இன்று குமுதத்தில் மன்னிப்பு கேட்டதற்கு வேறு ஏதாவது விருது கொடுக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறோம்.

குலத்தொழில்:

குலத்தொழில் சட்ட்த்தை எதிர்த்து விட்டு, கட்சி நட்த்துவதையே குலத்தொழிலாக்கிவிட்ட வீரமணிக்கு இவ்வருட்த்திற்கான சிறந்த குலத்தொழில் முனைவோர் விருது வழங்கப்படுகிறது.க்ரேட் எஸ்கேப்:இவ்விருது ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவிற்கு!! பல எதிர்ப்புகள், சிபிஐ ரெய்டுகள் எல்லாவற்றையும் மீறி தற்காலிகமாக எஸ்கேப் ஆகியுள்ள ராசாவிற்கு.மாடலிங் :மாடலிங்கிற்கான சிறப்பு விருது கேரள அரசியல்வாதியும், கேரள இலக்கியவாதியுமான சாரு நிவேதிதாவிற்கு. ஜாக்கி ஜட்டிகள், கெவின் கெலின் ஜட்டிகளின் விற்பனை விண்ணை முட்டுமளவிற்கு இவரால் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தாரே இவ்விருதிற்கு சாருவை பரிந்துரைத்தனர்.

பாரபட்சம் பாராமல் அனைத்து விதமான லுங்கிகளுக்கும் விளம்பரம் தேடித் தந்த்தால், ஞானிக்கு மேலாடைப் பிரிவில் மாடலிங் விருது வழங்கப்படுகிறது.விழா நாயகன் ::இவ்வாண்டிற்கான சிறந்த விழா நாயகன் விருது கலைஞருக்கு. அயராத அரசு பணிகளுக்கிடையே, முள்கிரீடமான முதல்வர் பதவியையும் சுமந்த வண்ணம் வரலாறு காணாத விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வாங்கியமைக்காக.

முகமூடி::

இவ்வாண்டிற்கான முகமூடி விருது, திரைப்பட இயக்குனர் சீமான், திருமா, வைகோ போன்றோர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரபாகரன் இருக்கும் வரை, கிரிக்கெட் பார்ப்பவர்கள் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு வாய்கிழிய பேசிய சீமான், இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. ஆதலால் அவருக்கு இம்மூவருள் சிறந்த முகமூடி விருது அளிக்கப்படுகிறது. இவர்களுடன் போட்டி போட்ட இட்லிவடை தோல்வி அடைந்தார் என்பது கொசுறு தகவல்.

போஸ்ட்மார்ட்டம்இவ்வாண்டின் சிறந்த போஸ்ட்மார்ட்டம், மைக்கேல் ஜாக்ஸன் மரணம். இன்னும் முடிந்த பாடில்லை.

ஊழல்வாதிகள்


சிறந்த ஊழல்வாதிகளுக்கான சிறப்பு விருதுகளைத் தட்டிச் செல்வோர் முறையே மது கோடா மற்றும் சத்யம் ராமலிங்க ராஜூ. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரியாத்தால் மாட்டிக் கொண்டனர். ஆயினும் விருதுக்குத் தகுதி படைத்தவர்களாயினர்.குணச்சித்திரம்:பல்வேறு பரிமாணங்களில் சிறப்பான முறையில் தமது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்திர நடிப்பிற்கான விருது கர்நாடக முதல்வர் எதியூரப்பாவிற்கு வழங்கப்படுகிறது.

திரைக்கதை:

சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கஸாப்பிற்கு வழங்கப்படுகிறது. பிடிபட்ட நாள்முதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய கதைகளை ஸ்ருஷ்டிப்பதால், இவ்விருது அஜ்மலுக்கே. "அந்த பணம் என்னுடையது ஆனால் அந்த பேண்ட் என்னுடையது இல்லை" போன்ற வசனத்துக்கு சிறப்பு விருது என்ன வழங்கலாம் என்று விருது கமிட்டி யோசிக்கிறது.திகில் திலகம்::எந்த வேளையில், எங்கே, எப்படி வருவார் என்று தெரியாமல் அனைவரையும் திகிலில் ஆழ்த்திய பன்றிக் காய்ச்சலுக்கும் ஒரு விருது, திகில் திலகம்.

சீரியஸாக சிந்திக்கும் வேளையில்::


இவ்வாண்டில் பலர் உண்மையிலேயே பல நல்ல விருதுகளுக்குத் தகுதி படைத்தவர்களாகின்றனர். அவர்களுள் சிலர்

சந்திரனில் தண்ணீர் இருப்பதாக்க் கண்டறிந்த சந்திராயனை வடிவமைத்த நமது விஞ்ஞானிகள்.

மாருதிக்கு அடுத்து சிறிய ரக கார் அறிமுகத்தில் புரட்சி செய்த டாடா நிறுவனத்தார்.


இவை தவிர,

பத்திரிக்கையுலகம் என்ற பறந்த வான்வெளியில் புதிதாகத் தோன்றியுள்ள நட்சத்திரங்களான, இளைய தலைமுறை மற்றும் சூரியக்கதிர் ஆகிய இரண்டும் துருவ நட்சத்திரங்கள் போல் பிரகாசமாக ஒளிர இட்லிவடையின் வாழ்த்துக்கள்.


உண்மையான உழைப்பின் காரணமாக ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நோபல் பரிசு வாங்கிய இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரஜை ராமகிருஷ்ணன் வெங்கட்ராமனுக்கு ஷொட்டுக்களும், ஒன்றுமே செய்யாமல் நோபல் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு சில குட்டுகளும்.

லிபரன் அறிக்கை கின்னஸ் உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஜெயலலிதா ரெஸ்ட் எடுப்பதால் அவர் விருது வாங்க வரமாட்டார், அதனால் அவருக்கு இந்த ஆண்டு எந்த விருதும் இல்லை. மன்னிக்கவும்

இந்திய கிரிக்கெட் அணிக்கு "அப்டியே "ஷாக்காயிட்டேன்" ( வடிவேலு ஸ்டைலுல் படிக்கவும் ) கொடுக்கப்படுகிறது.


மற்ற விருதுகள் வாசகர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.

Read More...

Wednesday, December 30, 2009

புத்தகக் கண்காட்சி பற்றி பா.ராகவன் ( டிவிட்டர் வழியாக )


புத்தகக் கண்காட்சி பற்றி பா.ராகவன் டிவிட்டர் வழியாக. படங்கள் எல்லாம் பா.ராகவன் புதிதாக வாங்கிய 5MP Mobileலில் எடுத்தது. சோதனைக்காக எனக்கு அனுப்பியது.


* இந்த ஆண்டு எக்கச்சக்க கடைகள். ஒருமுறை முழுக்க நடந்தால் கால் வலி வந்துவிடுகிறது. நக்கீரன் ஸ்டால் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிலை அழகு.

* ஆனால் அது மகா அலெக்சாண்டரா, கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போனா என்றுதான் சரியாகத் தெரியவில்லை. ( ராமானுஜ தாத்தாச்சாரியராக இருக்க போகிறார் )

* அதே நாற்ற டாய்லெட். அதே இழுத்துத் தைத்த கோவண கார்ப்பெட் தரை. அதே அபாயகரமான ஊசலாடும் மின்சார ஒயர்கள். அதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்டீன்.

* அரங்கினுள்ளே கிடைக்கும் டீ, வெளியே கேண்டீனில் கிடைக்கும் தக்காளி சூப் இரண்டும் இன்று நன்றாக இருந்தன. மற்றவை பற்றி அடுத்த தினங்களில்.

* பெங்களூர் புத்தகக் கண்காட்சி மாதிரி என்று கிளப்பிவிட்ட புண்ணியவான்கள் ஒழிக. சென்னை புத்தகக் கண்காட்சி தன் அடையாளங்களை இழக்கவில்லை. ( அப்பாடா )

* தொடக்கவிழா நிகழ்ச்சியின் ஓர் அம்சம் மட்டுமே இக்கட்டுரையில் உள்ளது. என் அனுபவங்கள் தனியே இன்னொரு கட்டுரையாக வரும். ( இந்த பதிவு இல்லை அது வேற :)

* இப்போதெல்லாம் எல்லா கலைஞர் விழாக்களிலும் ஜெயகாந்தன் ஆஜராகிவிடுகிறார். ஆனால் மீசை இன்னும் அதே சைஸில்தான் இருக்கிறது. ( எங்களுக்கு புரிகிறது )

* ஏனோ கலைஞர் மோட்டார் காரில் கண்காட்சிக்குள் வழக்கம்போல் இம்முறை திக்விஜயம் செய்யவில்லை. ஏற்பாடெல்லாம் செய்திருந்தும்.


* விழா மேடையை மீடியாக்காரர்கள் முற்றிலும் மறைத்துவிட்டதால் கூட்டத்தில் யார் கண்ணிலும் கலைஞர் படவில்லை. ரேடியோ கேட்பது போலிருந்தது நிகழ்ச்சி.* ட்விட்டர் சார்பில் @spinesurgeonஉம் பதிவுலகம் சார்பில் @luckykrishnaவும் வந்திருந்தார்கள். கவிஞர் உமாஷக்தி இலக்கிய உலகம் சார்பாக. ( அவர்களுக்கு இது தான் உலகம் )

* விழா தொடங்குமுன் ஒரு கார் வந்து நின்றது. உடனே கனிமொழியே வருக, கவிமொழியே தருக என்று ஒரு பாட்டு போட்டார்கள். ஆனால் வந்தது, தமிழச்சி. ( கனி மொழி என்றாலே அது தமிழ் தான் இதுல என்ன சந்தேகம் )
* புதிய தலைமுறை ஸ்டாலில் பயங்கரக் கூட்டம். விசாரித்தால் இதழ்கள் இலவசம்! ( புதிய தலைமுறை இலவசம் என்றால் ஓடுகிறார்கள் சரியா ? )

* புதிய தலைமுறை, சூரியக்கதிர் இரண்டு புதிய பத்திரிகைகளும் கண்காட்சியில் ஸ்டால் போட்டிருக்கின்றன. புதிய வரவுகள் ( சூரியக்கதிர்ல 'க்' கிடையாது தெரியுமா ? )

* தமிழினியில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு ஒரு கனமான நூலாக வந்திருக்கிறது. வாங்க வேண்டும். ( சபாஷ் சரியான போட்டி )


* கிழக்கு பதிப்பகம் என்ற பெயர்ப்பலகை வைக்க முடியாது என்று பபாசி சொல்லிவிட்டது பற்றி பாரா வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். ( நல்ல வேளையாக கலைஞர் என்பதற்கு பதில் கருணாநிதி என்று தான் எழுதுவேன் என்று அவர்கள் அடம்பிடிக்கவில்லை. )


( கிழக்கு பதிப்பகம் என்ற பெயருக்கு பதிலாக பிரசன்னாவை நிறுத்தியிருக்கிறார்கள். இதை வைத்து அடையாளம் காண்பது சுலபம். இவரிடம் இளையராஜா பற்றி 'தாராளமாக' பேசலாம், கட்டணம் கிடையாது. )


( பிராக்கெட்டில இருப்பது இட்லிவடை கமெண்ட்ஸ் )

Read More...

நேசமுடன் 21 இதழ் - வெங்கடேஷ்

இந்த வாரத்திலிருந்து நேசமுடன் இதழ் இட்லிவடையில் வருகிறது.

இடைத்தேர்தல்: சில பாடங்கள்

நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும் சொல்லப்பட்டாலும் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் எல்லாம், மக்களுக்கு சலுகைகள் கொடுப்பதும் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிப்பதும் நடந்துவருகின்றன. இந்தியாவில் பொதுத் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த வகை கவனிப்புகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் தவறு என்றோ சரியென்றோ வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

1. இடைத்தேர்தலில், பா.ம.க. பங்கேற்கவில்லை. தம் தொண்டர்களை, 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தும்படி, அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருந்தார். வந்தவாசி தொகுதியில் பா.ம.க.வினரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கே முப்பது பேர் மட்டுமே 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒன்று, மக்களுக்கு 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கவேண்டும். அல்லது, பூத்களில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வாய்ப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது, 49 ஓ பற்றித் தெரிந்தும், மக்கள் தம் ஓட்டுக்களை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

ராமதாஸ் தம் கட்சிக்காரர்களை 49 ஓவைப் பயன்படுத்தச் சொன்னபிறகும் இதுதான் நிலைமை என்றால், எவ்வளவு தொண்டர்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசியலில் தம்மை முக்கிய கட்சியாகக் கருதும் பா.ம.க., எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும்? ஒரு கருத்தை கட்சித் தலைவர் சொன்னால், அதன் தொண்டர்கள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா? இங்கே நடந்தாற்போல் தெரியவில்லை. சொந்த பலத்தை விடக் கூட்டணி பலத்திலேயே இத்தனை ஆண்டுகள் அரசியல் நடத்தியிருக்கிறது பா.ம.க. என்று சொல்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வந்தவாசி இடைத்தேர்தல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

2. புதிய சூறாவளியாகக் கிளம்பிய கேப்டன் விஜய்காந்த்தின் வேட்பாளர்கள், இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கவில்லை. வந்தவாசியில் 7063 வாக்குகளும், திருச்செந்தூரில் 4186 வாக்குகளும் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, 2006 பொதுத் தேர்தலில், வந்தவாசியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சிவசண்முகம், 9096 வாக்குகளையும் திருச்செந்தூர் தொகுதியில் கணேசன் 3756 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இரண்டு தொகுதிகளிலும் 75 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. அதிமுகவின் ஓட்டுகளை விஜய்காந்த் பிரிக்கிறார் என்று தியரி உண்டு. இன்னொரு தியரி, இளைஞர்கள் அவர் பின்னால் திரள்கிறார்கள் என்பது. இரண்டுமே இங்கே நடைபெற்றார் போல் தெரியவில்லை.

3. இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்காவிட்டால், நிச்சயம் இவ்வளவு அபரிமிதமான வாக்குகள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் விவரமானவர்கள். அவர்கள் தங்களுக்கு எது சரியோ அதை உணர்ந்தே வாக்களித்திருக்கின்றனர். அவர்களுடைய முடிவை, தீர்மானத்தைக் குறை சொல்லுவது, பூனை கண்ணை மூடிக்கொண்ட கதைதான்.

4. என் மனத்திருப்திக்கு முக்கிய காரணம், மக்கள் பெருமளவில் வெளியே வந்து வாக்களித்திருப்பதுதான். திருச்செந்தூரில் உள்ள மொத்த வாக்காளர்கள் :1,40,150. வாக்களித்தவர்கள்: 1,10,931. வந்தவாசியில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 1,58,210. வாக்களித்தவர்கள்:1,32,750. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் அரசியல் மேலும், அரசாங்கத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சிஸ்டத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. பெருநகரங்களைப் போலல்லாமல், இவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருப்பதே கவனிக்கத்தக்க அம்சம். பெருநகரவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

2009 - மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்

2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.

ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 -- ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.

2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.

செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.

திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.

இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

2009 - மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை

2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:

1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுமன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.

2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.

3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.

4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.

5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.

6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.

2009 - மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்

1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.

3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.

4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

5. பணவீக்கமும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.

2009 - மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்

தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:

1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.
2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?
3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.
4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.
5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.
6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.
7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!
8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.
9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.

2010 - செய்ய நினைக்கும் விஷயங்கள்

2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.

1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.

2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.

3. மாதம் ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.

4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.

5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.

6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.

எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேசமுடன் வெங்கடேஷ்
- ( http://nesamudan.com/ )

Read More...

நடிகர் விஷ்ணுவர்த்தன் - அஞ்சலி
18 September, 1950 - 30 Decemeber 2009

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. கன்னட நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்த்தன் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் தமிழில் `விடுதலை' படத்தில் சிவாஜி, ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

Read More...

Tuesday, December 29, 2009

சவாலே சமாளி! - ஸ்ரீவத்சன்

தேசத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்” என்று பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் பேசியுள்ளார். நேற்றைய தினம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர், அவரின் தலைமை மற்றும் பல்வேறு மட்ட்த்திலான கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் அவர் பேசியதாவது, தேசத்தை தீவிரவாதம், மதவாதம், நக்ஸலிசம், மற்றும் பிராந்திய வேறுபாடுகள் போன்ற பல சவால்கள் சூழ்ந்துள்ளன. அவற்றைத் திறமையாக எதிர்கொள்ள காங்கிரசாலேயே முடியும் என்று பேசியுள்ளார். இதனை ஆமோதித்து தியாக தீபம், அன்னை சோனியாவும் உரை நிகழ்த்தினார்.


அவர் சொன்னது எந்த சவால்களைப் பற்றியோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தெரிந்து காங்கிரஸ் எதிர்கொண்ட சவால்களை இங்கு பார்ப்போம்..

அக்காலத்தில் நம் முன்னோர்கள், “வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார்” என்று அனுபவத்தை பழமொழியாகச் சொல்லிவிட்டுப் போயினர். இன்று அவர்கள் இருந்திருந்தால், அரசாங்கத்தை நட்த்திப் பார் என்றும் சொல்லிவிட்டிருப்பர். அவ்வாறான சவால்கள் நிறைந்த ஒரு காரியம்தான் அரசாங்கத்தை நிர்வகிப்பது. அவ்வாறான ஒரு சவாலான விஷயத்தைத்தான் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக காங்கிரஸ் நட்த்தி வருகிறது. ஒன்றா, இரண்டா..எவ்வளவு சவால்கள், பிரச்சனைகள், இடையூறுகள்?? அவற்றையும் திறம்பட நிர்வகித்தாலொழிய இன்றுவரை கல்லா கட்டுவது கடினம்.

1999 இல் காங்கிரஸ் ஆட்சியமைத்த விதமே சவாலானதுதான். முதலில் ஜனாதிபதியிடம் 273 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விட்டு, பிறகு அது இல்லையென்றான பிறகு மூக்குடைபட்ட்தில் துவங்கி, பிரதமராக வருவதற்கு அயல்நாட்டுப் பின்னணியால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை ஜனாதிபதி விவரித்ததும், இயலாமையைத் தியாகமாகச் சித்தரித்து, அதை இன்றுவரை நிலைநாட்டிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சவால்.இமாலயத் திருடன் குவாத்ரோக்கியை விடுவிக்கப் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? தேசிய ஜனநாயக்க் கூட்டணியால் முடக்கப்பட்டிருந்த அவனது அயல்நாட்டு வங்கிக் கணக்குகளை விடுவித்த்திலிருந்து, இண்டர்போல் அவனைக் கைது செய்ததை மறைத்து, நீதிமன்றத்தில் அவர் உத்தமதோத்தமர் என்று தோத்திரம் சொல்லி விடுவித்தது வரை எவ்வளவு கஷ்டங்கள்?? சிபிஐ மீது குவாத்ரோக்கி வழக்குத் தொடுக்காத குறை! இதெல்லாவற்றையும் சமாளிப்பதென்பது என்ன சாதாரண காரியமா?

அடுத்த்தாக பிரதமர் குறிப்பிட்ட விஷயம் தீவிரவாதம். இது மிகப்பெரிய சிக்கலான சவால். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின மற்றும் சுதந்திர தின உரைகளில் மட்டும் தீவிரவாத்திற்கெதிரான இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, பிறகு அடுத்த தாக்குதல் நிகழும் வரை மதச்சார்பின்மையை நிலைநாட்டும் பொருட்டு அமைதி காப்பதும், பிறகு கண்டனம் தெரிவிப்பதும் எவ்வளவு சவாலான காரியம் என்பதை செய்து பார்த்தால்தான் அதன் வலி தெரியும்.

அடுத்து மதவாதம். பெரும்பான்மையான ஹிந்துக்களின் ஓட்டுவங்கியால் பதவிகளை அடைந்து விட்டு, பிறகு அவர்களை மட்டம் தட்டுவது ஒரு சவால்தான். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதனை திறம்பட செய்வதில் வல்லவர்கள். ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம், ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, எதிர்ப்பு வரும்போல் தெரிந்ததும், இமயமலை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் ராமரும் உண்மை, ராமாயணமும் உண்மை என அதே சுப்ரீம் கோர்ட்டில் அந்தர் பல்டி அடிப்பதென்பது ஒரு சவாலில்லை என்று சொல்பவர்கள் அடி முட்டாள்களாகத்தான் இருப்பர். பிறகு அடித்த பல்டிக்கு வலு சேர்க்கும் பொருட்டு, தஸரா பண்டிகையில் வில் அம்பு ஏந்தி ராவணன் பொம்மையின் தலையை சீவி, ஹிந்து வாக்குவங்கியை ஸ்திரப் படுத்திக் கொண்டனர்.


அதே போல் தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் போய்விடுமென்று, தீவிரவாத்தினை சிறுபான்மையினரோடு, குறிப்பாக இஸ்லாமியரோடு தொடர்பு படுத்துவதென்பது காங்கிரஸாருக்கே உரித்தான கலை.


அடுத்து நக்ஸலிசம். நாட்டை எதிர்நோக்கும் சவால்களில் தீவிரவாதமும், நக்ஸலிசமும் தனித்தனியாக்க் கூறப்பட்டிருப்பதால், காங்கிரஸ் அரசைப் பொருத்தவரை நக்ஸலிசம் தீவிரவாத்தில் சேராது என்பது புலனாகிறது. ஏற்கனவே அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் பெருமக்கள் இதனைக் கூறியுள்ளனர். வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்ட்த்தினால் உருவாவதே நக்ஸலிசம். அதையும், காஷ்மீர தீவிரவாத்த்தினையும் ஒன்றாக பாவிக்க்க் கூடாது என்றெல்லாம் நக்ஸலிசம் எவ்வாறு காந்தியத்தை பேணுகிறது என்று அறிக்கைகளின் வாயிலாக அளந்து தள்ளினர். கேவலம், ஆயுதமேந்தி, அங்குமிங்கும் மக்களையும், காவலர்களையும் கொன்று குவித்து, ஜனத்தொகையை குறைக்க முயலும் அஹிம்சா கூட்டத்தைப் போய் பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தீவிரவாதிகளென்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்ற முனைவது எவ்வளவு பெரிய சவால்?

அனுதினமும், கம்யூனிஸ்டுகள் எப்போது காலை வாருவார்களோ என்று பயந்து பயந்து சுமார் நாலரை வருடம் ஆட்சி நட்த்துவது என்பது நரக வாழ்விற்கு ஒப்பானது. நம்து ஆட்சியில் நல்லது செய்ய எண்ணுவதே அரிது. அதிலும் தப்பித் தவறிப் போய் அநிச்சையாக எதாவது செய்ய முனைந்தாலும் கம்யூனிஸ்டுகளின் கெடுபிடி இருக்கிறதே அப்ப்ப்பா!! தவிர அமைச்சரவையில் நடக்கும் மாற்றங்கள் வேறு வெளியிலிருப்போர் சொல்லித்தான் தெரிய வேண்டிய நிலை என்பது மிகவும் கொடுமை. இதுகூடவா சவாலில்லை?அடுத்து கூட்டணிக் கட்சியினர் செய்யும் அட்டூழியங்களையும் மீறி ஆட்சி நட்த்துவதை என்னவென்று சொல்வது? ஸ்பெக்ட்ரத்தில் முறைகேடுகள், சேது சமுத்திரத் திட்ட்த்தில் முறைகேடுகள், சிபு சோரனின் தலைமறைவு என எவ்வளவு விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது? இடையிடையே தீவிரவாதிகளின் குடும்பத்தாருக்காக வேறு தூக்கம் பசி இழக்க வேண்டியிருக்கிறது. இதைக் கூடவா சவாலென்று ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்??இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய சவால், இட்துசாரிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான். அப்பப்பா!! போதும் போதுமென்றாகிவிட்ட்து அரசைக் காபந்து செய்வதற்குள். எப்படியோ ஒருவிதமாக சமாஜ்வாதி கட்சியிடம் கெஞ்சிக் கூத்தாடி, அடுத்தவர்களுக்கு கவர் கொடுத்து, கழக வழியில் கவர் செய்யுங்கள் என்று சொன்னால், கேமராவுக்கு முன் கொடுத்து மாட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் பாஜக வினர் வேறு கொடுத்த கவரிலிருந்தவற்றைக் கொட்டிக் கலவரப் படுத்திவிட்டனர். எப்படியோ, குப்பற கவிழ்ந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையென்று ஆஸ்வாசப் படுத்திக் கொள்வதற்குள் அடுத்த தேர்தல் வந்து விட்ட்து.அடுத்து தேர்தலையும் வெற்றி கொண்ட பின் அடுக்கடுக்கான சவால்கள். மும்பை தாக்குதல், சீன ஊடுருவல், ஆந்திர முதல்வர் நாற்காலிப் பிரச்சனை என எண்ணிலடங்காத பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு கண்டாயிற்று. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றதானதொரு பிரச்சனை தெலங்கானா. சந்திரசேகர ராவின் உண்ணாவிரத்த்தைத் தொடர்ந்து, பா.சிதம்பரத்தை விட்டு, தனி தெலங்கானா உருவாக்குவோமென்று குழந்தையைக் கிள்ளி விட்டு, எதிர்த்த லோக்கல் காங்கிரஸாரைத் திருப்தி படுத்த, இப்போதைக்கு ஒன்றுமில்லை என தொட்டிலையும் ஆட்டி விட்டாகி விட்ட்து. விளைவு, ஆந்திரா பற்றி எரிகிறது. இதை விட திறமையாக எப்படி ஒரு கடினமான சவாலை சமாளிப்பது? இந்த சவால் போதாதென்று, ஆந்திர கவர்னர் வேறு. நல்லகாலம் அவரே ராஜிநாமா செய்து, சவாலை சங்கடத்தில் ஆழ்த்தாமல் விட்டரோ பிழைத்தோம்.இதற்கிடையே முல்லை பெரியாற்று விஷயம் வேறு. நடுவே கலகமியற்ற முயன்ற கழகத்தை, சிறு சிபிஐ ரெய்டின் மூலம் சிக்க வைக்க முயன்றதால், கழகம், கலகத்தை விட்டு சற்றே கமுக்கமானது. அத்வானி இத்தகைய சவால்களை சந்தித்தாலல்லவா தெரிந்திருக்கும் அரசு நடத்துவது எவ்வளவு சிரம்மென்று?? இது தெரியாமல், நான் வீக்கான பிரதமரென்று பிதற்றித் திரிகிறார்.இப்படியாக நமது பார்வையில் பல சவால்களைச் செவ்வனே சமாளிக்கும் கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. இப்போதாவது பிரதமர் சொல்வதை ஒத்துக் கொள்ளுங்கள். அரசு எதிர்நோக்கும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள காங்கிரஸ் தவிர ஏதாவதொரு கட்சியால் முடியுமா?

- ஸ்ரீவத்சன்


Read More...

தொழில்நுட்பத்தை தடை செய்வது தீர்வு இல்லை - Paulo Coelho

இப்போது எல்லாம் ஆங்கில நியூஸ் பேப்பரில் ஏதாவது படித்தால் அதை யதிராஜ்க்கு அனுப்பிவிடுகிறேன். பத்து நிமிஷத்தில் அதை எனக்கு திரும்ப அனுப்பிவிடுவார், தமிழில்!

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் தமிழ் பத்திரிக்கையில் வருவதில்லை. சில நாட்கள் அவருக்கு அனுப்பிய செய்தி இங்கே உங்கள் பார்வைக்கு.

2009 ஆண்டு முழுவதுமே பதிப்பாளர் உலகத்திற்கு அச்சமூட்டக்கூடிய ஆண்டாக இருந்தது. இந்த பயத்திற்கான காரணம் கணிப்பொறி ஊடகங்கள் என்ற பிசாசு என்றால் அது மிகையல்ல.


சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து என்னுடைய முகவர் ஒரு கெட்ட செய்தியைத் தாங்கி வந்தார். அதாவது, என்னுடைய நாவலான, “The Alchemist" - இன் பதிப்பாளர், தன்னுடைய பதிப்பிக்கும் தொழிலை நிறுத்தி விடுவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிந்தது. காரணம், அந்த ஆண்டில் மொத்தமே அவர் பதிப்பித்தவைகளில் வெறும் 3000 பிரதிகளுக்குக் கீழாகவே விற்பனையாகியுள்ளதுதான். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கும், முயற்சிகளுக்குமிடையே வேறொரு ரஷ்ய மொழி பதிப்பாளரைக் கண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவர் உக்ரைனில் உள்ள “கீவ்” நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். பதிப்பு வேலைகளுக்குத் தேவையான காகிதங்களைக் கொள்முதல் செய்வதிலும் அவருக்கு மிகுந்த சிரமங்களிருந்தன. ( பொதுவாகவே அப்பொழுது பதிப்பிக்கும் காகிதங்களுக்கு பஞ்சம் நிலவியது.)

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், சில வாரங்களுக்கு முன்னர், என்னுடைய புத்தகத்தின் சட்டத்திற்கு புறம்பான ரஷ்ய மொழி பெயர்ப்பு இணைய தளங்களில் காணக் கிடைத்தது. ஆக இச்சட்டத்திற்கு புறம்பான இணைய பதிப்புகளே, ரஷ்யாவில் என்னுடைய புத்தகத்தின் விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம் என உடனடியாக முடிவு கட்டினேன்.

மற்ற நூலாசிரியர்களைப் போலவே, நானும் என்னுடைய புத்தகங்கள் அதிக அளவில் படிக்கப்பட வேண்டுமென்று விரும்பினேன். சந்தையில் புத்தகங்கள் கிடைக்காத போதும், அதே சமயம் பதிப்பாளர்களுக்கும், புத்தகங்களை பதிப்பிப்பதற்குண்டான காகிதங்கள் கிடைக்காத போதும், ஏன் நாமே இணையத்தில் பதிப்பிக்கக் கூடாது என்று எண்ணினேன்? உடனடியாக ஏற்பட்ட உத்வேகத்தின் வெளிப்பாடாக, என்னுடைய இணையதளத்திலேயே, என்னுடைய புத்தகத்தின் சட்டத்திற்கு புறம்பான ரஷ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டேன். படிக்க விரும்புவோர், கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்வதற்கும் ஏதுவாக.

2000 ஆவது ஆண்டின் முடிவில், என்னுடைய உக்ரேனிய பதிப்பாளர், மிகுந்த உற்சாகத்துடன், என்னுடைய புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பின் பதிப்புகள் சுமார் 10,000 காப்பிகள் (Copies) விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்தார். இவ்விற்பனை, 2001 இன் முடிவில் ஒரு லட்சமாகவும், 2002 இல் ஒரு மில்லியனாகவும் உயர்ந்தது.

அச்சமயத்தில், என்னுடைய இணையத்தில் நான் வெளியிட்டிருந்த சட்டத்திற்குப் புறம்பான ரஷ்ய மொழிபெயர்ப்பு குறித்து பல ஈ-மெயில்கள் வந்த வண்ணமிருந்தன. அதில் பெரும்பாலானவை இவ்வாறிருந்தன, “ உங்களுடைய படைப்புகள் கிடைக்கப்பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது”. ரஷ்யா என்பது ஒரு மிகப்பெரிய தேசம், தவிர விநியோகம் என்பது இங்கு ஒரு சிக்கலான விஷயம். ஆகவே விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இணையம் பெரும் பங்காற்றுகிறது, என்பதே எனது தீர்மானமாக இருந்தது.

இவ்வுற்சாகத்தின் காரணமாக, என்னுடைய மற்ற படைப்புகளையும் இணையம் வாயிலாக வெளியிடத் துவங்கினேன். இதனால் சட்ட சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டேன். என்னுடைய நூல்களின் ரஷ்ய மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டாலும், வேறொருவரால் மொழி பெயர்க்கப்பட்டவற்றில் எனக்கு உரிமை இல்லை. இதுதான் சட்ட சிக்கல்களுக்குக் காரணம். இதற்கு நான் கண்டுபிடித்த வழி, எல்லா படைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஒரு சட்டத்திற்கு புறம்பான இணைய தளத்தில் வெளியிடுவது.

இவ்விஷயம் சமூக வலைத்தளங்களின் வாயிலாகப் பரப்பப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்தது. இச்சமயத்தில், இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு ”மியூனிச்” நகரில் நடைபெற்ற, டிஜிட்டல், வாழ்வு மற்றும் கலை தொடர்பான கருத்தரங்கில், ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அவ்விணைய தளத்திற்கு வந்து போவதாகப் பேசினேன். அங்கு எல்லா மொழி இணைய புத்தகங்களும் கிடைக்கும், ஜெர்மன் முதல் மலையாளம் வரை. இதற்கிடையே, எப்போதுமில்லாத அளவில், பதிப்பாளர்கள் வெளியிட்ட என்னுடைய நூல்களும் விற்றுத் தீர்ந்தன. என்னுடைய சட்ட விரோதமான இணைய பதிப்புகள் பற்றி எந்த பதிப்பாளரும் என்னிடம் புகார் செய்யாததால், அவ்விஷயம் அவர்களுக்குத் தெரிந்த போதிலும், அவர்கள் அதில் தலையிட விரும்பவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டேன்.

இதனிடையே ”மியூனிச்” நகரில் நான் பேசியவற்றின் சாராம்சம் மறுநாளைய செய்தித் தாள்களில் வெளியானவுடன், என்னுடைய தொலைபேசி ஓயாமல் கதறத் தொடங்கியது. என்னுடைய இணைய பதிப்புகள் பற்றித் தெரிந்து கொண்ட பதிப்பாளர்கள், அது பற்றிக் கேட்டனர். அனைவருமே, இதனால் உங்களுடைய புத்தகங்களில் விற்பனை குறைய வாய்ப்பிருக்கிறது என்ற ரீதியில் எச்சரித்தனர்.

2005 ஆம் ஆண்டு முதலேயே என்னுடைய பதிப்புகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன, ஆயினும் புத்தக விற்பனையில் எவ்வித சறுக்கலும் இல்லை என்று வாதிட்டேன். இணையத்தின் வாயிலாக, தொன்று தொட்டு நடைமுறையிலிருக்கும் அச்சகத்தில் பதிப்பிக்கும் முறை லாபமடைந்தது என்று கொள்ளலாம் என்றாலும் அதற்காக வருந்தவே செய்கிறேன். நான் பதிப்பாளர்களை மதிக்கிறேன், ஆயினும் புத்தகக் கடைகளில் நடப்பவற்றிற்கு மாறாக அவர்கள் கருதுவது சிறிதே சலிப்படைய வைக்கிறது. இதற்கிடையே என்னுடைய புத்தகங்கள் 100 மில்லியன் அளவிற்கு விற்றுத் தீர்ந்தன. அதனால் எனக்கு சில உரிமைகளும் கிட்டின. அது என்னவெனில், இணைய பதிப்புகள் தவறான முன்னுதாரணமாக இருப்பினும், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது.

நடந்தவற்றை நான் எப்படி விவரிப்பது? பேராசை என்பதை பொருளாதார உலகம் மட்டுமே விவாதப் பொருளாக பாவிக்கவில்லை, மாறாக எந்தவொரு விஷயத்திலும் பிரத்யேக உரிமை பாராட்டும் எந்தவொரு நிறுவனமுமே, அது தகவல் தொடர்பு சார்ந்ததாக இருக்கட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருள் சார்ந்ததாக இருக்கட்டும். என்னுடைய விஷயத்தில், மக்கள் என்னுடைய இணைய பதிப்புகளைப் படித்தார்கள், அவற்றை விரும்பினார்கள், அதனை கடையில் சென்று புத்தகமாக வாங்கவும் செய்தார்கள். இது சில காலங்களுக்குத் தொடர்ந்தது. சோமர்ஸெட் மாம் கூறியது போல், “ நாம் எழுத வேண்டுமென்பதற்காக எழுதுவதில்லை, எழுதியே ஆகவேண்டுமென்பதற்காக எழுதுகிறோம்”. இதனுடன் நான் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்வேன், “நமது எழுத்துக்கள் படிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் எழுதுகிறோம்”.

பதினாறாம் நூற்றாண்டில், ஒரு கத்தோலிக்க திருச்சபை, “தடை செய்யப்பட்ட புத்தகங்கள்” என்றொரு பட்டியலை வெளியிட்டது. அது பெரும்பாலான புத்தகாசிரியர்களை அபாய நிலைக்குத் தள்ளினாலும், அத்திருச்சபை இருந்த சுமார் நான்கு நூற்றாண்டு காலம் வரை அப்பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டவண்ணமிருந்தது. மிக சமீபத்தில், கருத்துக்களால் வேறுபட்ட சில சோவியத் எழுத்தாளர்கள், தங்களது புத்தகத்தின் சிறு அளவிலானவற்றைத் தொகுத்து தொடர்ந்து வெளியிட்டனர். தங்களது எண்ணங்களை வேண்டுவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு. அவர்களில் இருவர், அலெக்சாண்டர் சோல்ஜெனித்ஸின் மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றனர்.

பைல் ஷேரிங் (File Sharing) - இங்கினால் பாதிப்பிற்குள்ளான சில இசை நிறுவனங்களைப் போலல்ல, பதிப்புலகம். ஐபோன் மற்றும் ப்ளாக்பெரி போன்றவற்றிற்கான மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்களான, Kindle, Nook, மற்றும் Sony's Reader போன்றவை இணையத்தில் கிடைப்பது போல், பதிப்பாளர் தனது படைப்புகளை Blog'இல் வெளியிட்டார். இம்முயற்சிகளைத் தடை செய்யும் நோக்கமுடைய நாடுகளான பிரான்ஸ் போன்றவை, இவற்றைத் தடை செய்ய சட்டமியற்றின. காலப்போக்கில் இந்நாடுகள் தங்களது எழுத்தாளர்கள் மதிப்பிழந்து போவதையும் காண நேரிடும்.

தடை செய்வது இதற்கு சரியான தீர்வல்ல. தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி நல்ல இலக்கியங்களை வெளிக்கொணர்வதே சரியான தீர்வாகும்.

என்னுடைய பதிப்புகள் சந்தைகளில் அதிக அளவில் விற்பனை ஆவதன் காரணமாகவே, நான் இணையத்தில் வெளியிடுவதாக சிலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. என்னுடைய பதிப்புகளை நான் இணையத்தில் வெளியிடுவதனாலேயே, என்னுடைய படைப்புகளின் விற்பனை அதிகரிக்கிறது.

இன்று யாரேனும் என்னிடம், வெறும் மூன்று பேர் படிப்பதற்காக ஒரு படைப்பை உருவாக்க, 3 மில்லியன் டாலர் வேண்டுமா அல்லது 3 மில்லியன் வாசகர்கள் படிப்பதற்கான படைப்பை உருவாக்க, 3 மில்லியன் டாலர் வேண்டுமா என்று கேட்டால் நான் பின்னதைத் தான் தேர்வு செய்வேன்.


நான் மட்டுமல்ல, அனைத்து எழுத்தாளர்களுமே இம்முடிவைத்தான் எடுப்பர்.

-- Paulo Coelho

( Paulo Coelho என்ற இந்த எழுத்தாளர் இதுவரை 26 புத்தகங்கள் எழுதியுள்ளார். Alchemist என்ற இவரது படைப்பு 65 மில்லியன் காப்பிகள் அளவிற்கு விற்றுத் தீர்ந்துள்ளது.)

( Source: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/et-cetera/Why-digital-media-is-a-novelists-best-friend/articleshow/5368489.cms, தமிழில் யதிராஜ் )

Read More...

Monday, December 28, 2009

சொல்வனத்தில் ஒரு சுகானுபவம்

டிசம்பர் இசை சீசன் சென்னையைத் தொடர்ந்து, பிரபல வலைத்தளங்களான இட்லிவடை மற்றும் பல வலைத்தளங்களிலும் களை கட்டி வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய தேதியில் கர்நாடக இசைக்கு ஓர் அறிமுகம் தேவையில்லையென்றாலும், இசை ஆர்வலர்கள் தங்களுடைய ஆர்வத்தை மேலும் ரீசார்ஜ் செய்து கொள்ளவும், கர்நாடக இசையை ரசிப்பதின் ஆரம்ப கட்டத்திலுள்ளவர்களுக்கு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் இது போன்ற கட்டுரைகள் பேருதவியாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சொல்வனத்தின் இசைச் சிறப்பிதழ் மிகவும் அமோகம். சொல்வனம் போன்ற வலைத்தளங்களுக்கு அறிமுகமில்லாத என்னைப் போன்ற இணையப் பாமரர்களுக்கும் அதனை விருந்தாக்கிய இட்லிவடைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியைத் தெரிவித்தே ஆக வேண்டும். இட்லிவடை இதனை வெளியிடாமல் போயிருந்தால், நிச்சயம் ஒரு நல்ல கட்டுரைத் தொகுப்பை படிக்க இழந்த துர்பாக்ய நிலைக்கு ஆளாகியிருப்பேன்.

அதிலும் குறிப்பாக கர்நாடக இசையின் மேதா விலாஸங்களான திருமதி. டி.கே.பட்டம்மாள், கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு புதிய முகவரி கொடுத்த உயர்திரு. அரியக்குடி ஸ்ரீ. ராமானுஜ ஐயங்கார் போன்றோர்களைப் பற்றிய (யும்) கட்டுரைகள் மிகவும் அபாரம். உண்மையாகச் சொன்னால் இந்த இயத்திரத்தனமான சமூகத்தில், அதுவும் இணைய தளத்தில் இதுபோன்றதொரு கட்டுரைத் தொகுப்பை எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் அருமை. யதேச்சையான நிகழ்வாக, இன்று மதியம் பொதிகைத் தொலைக்காட்சியில், திரு. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஒளிபரப்பினார்கள். அவருடைய இளம் பிராயம் முதல், அவர் எவ்வாறு இசைக்கே தனது வாழ்வை அர்பணித்து இன்றைய தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று காட்டும் வகையில் சுமார் ஒரு மணிநேர நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அவருடைய சிஷ்யர்கள் முதல் அபிமானிகள் வரை பலரை பேட்டி கண்டு அரியக்குடியுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அரியக்குடியின் குருகுலவாசிகளான கே.வி.நாராயண ஸ்வாமி, திரு. ராஜமய்யர் போன்றோர்களும், அவருடைய சம காலத்திய வித்வான்களான திரு. செம்மங்குடி போன்றோர்களும் த்த்தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, ஒரு கணம் அவர்களுடைய காலத்திற்கே நம்மை இட்டுச் சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது (பேட்டிகள் எல்லாமே பழைய வீடியோ பதிவுகள், தவிர பேட்டியளித்தோரில் பலர் இன்று இல்லை).

இடையிடையே அரியக்குடி இசையமைத்த திருப்பாவை பாடல்கள் மற்றும் அவர் கச்சேரிகளில் பாடிய கீர்த்தனைகளை சிறிது சிறிதாக ஒளிபரப்பியது மிக அற்புதமானதாக இருந்த்து. இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதைப் பொருத்தவரையில் பொதிகைக்கு நிகர் அதுவே. தவிர, இட்லிவடை மற்றும் சொல்வனம் போன்ற தளங்களிலிருந்து மென் மேலும் இதுபோன்ற நல்ல கட்டுரைத் தொகுப்புகளை மிகுந்த பிரயாசையுடன் எதிர்பார்க்கிறோம்.

தேசிகனின் கல்யாணி ஆலாபனை மிகவும் அருமை. சீசன் ஸ்பெஷலாக, சீசன் சிறுகதை என அசத்திவிட்டார். கல்யாணியில் சங்கீதம் கற்றுக் கொண்டது பற்றியதான சரித்திர நிரவல் வயிறு வலிக்க வைத்து விட்டது.

இசை ரசிகர்களுக்கும் மற்ற அனைவருக்கும் இட்லிவடையின் சார்பாகவும், என் சார்பாகவும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

- யதிராஜ்

Read More...

நோ கமெண்ட்ஸ்

Read More...

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.

இன்னும் சில தினங்களில் 2009 நம்மிடம் விடை பெற்று, ரைட்டு நான் கிளம்புறேன்... செல்லத் தம்பி, தங்க்க் கம்பி 2010 வர்ராறு, அவர் ரொம்ப நல்லவரு. நல்ல காலம் பொறக்கும், நல்ல காலம் பொற்க்கும்னு, கையிலிருக்கிற உடுக்கைய சுழற்றி, குறி சொல்லிட்டு போகுது.

ஆம்! ஒவ்வொரு வருடமும் நல்லா இருக்கும் எனும் நம்பிக்கையுடனே நாம் தொடங்குவோம். வரும் வருடமும் வளமான நலமான வாழ்வை தர வேண்டி, இட்லிவடையின் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காற்றாய் கடந்து சென்ற 2009 ; நிகழ்வுகளாய் பொது, அரசியல், சினிமா எனும் நினைவுகளை மட்டும் நம்மோடு விட்டுச் சென்றது. ஒரு சாமான்யன் கண்ணோட்டத்தில் பார்த்து சில முக்கிய நிகழ்வுகளை அசை போடுவோம். அது விட்டுப் போச்சே இது இல்லையே என வரப் போகும் பின்னூட்டங்களுக்கு இப்பவே ஒரு சாரி. என்ன செய்யுறது புடவைக்கு ரெண்டு பக்கம், பதிவுக்கும் ரெண்டு பக்கம் (A4 ல).

பொது

* வங்கியின் பெரிய தலைகள் அடங்கிய உச்ச கட்ட குழு, அரசியல் பொருளாதார மேதைகள் தொடங்கி பொட்டி கடைக்காரர் வரை பயந்து கால் நடுங்கி இந்த ரிசஷன் எப்பப்பா சரியாகும், அடுத்த ஆறு மாசத்தில சரியாகுமா என கேட்க வைத்தது. தொடங்கியது என்னவோ போன வருடத்தின் இறுதி என்றாலும், துள்ளிக் குதித்து குத்தாட்டம் போட்டது இந்த வருடந்தான். அமெரிக்கா தொடங்கி ஆண்டிபட்டி வரை ஒரே ஆட்டம். இந்த ஆட்டம் நிக்க இன்னும் ஒரு வருசத்துக்கு மேலாகும் எனும் ஆருடம் தான் ஈரக் குலைய பதற வைக்குது.

*ரிப்போசாம் உடைத்து, வெங்கட ராமகிருஷ்ணன் வாங்கிய நோபல் பரிசு, எங்காளுய்யா என நம் காலரை தூக்கி விட வைத்தது. உடைத்த ரிப்போசோம், மருத்துவத்தில் மேன்மை பெற மனித உயிரை ரிப்பேர் செய்ய தொடரும் ஆய்வுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

*பாகப் பிரிவினை செய்து பக்கத்தில போன பாகிஸ்தான் சத்தமில்லாம செஞ்ச கூசக்களித்தனம் வெளியில் தெரிந்ததால், உலக நாடுகள் கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்த்தால் சவுண்ட் குறைக்க வேண்டியதாயிற்று. போதாக்குறைக்கு பலவீனமான, அசந்தா கால் வார்ற அரசியல் அமைப்பினால், செய்யும் சேட்டையை கொஞ்சம் அமுக்கி வாசித்தது.

* சப்பையான மூக்கு இருந்தாலும், நம் எல்லைக்குள் மூக்கை விட்டு, மஞ்சக்காரன் நம் எல்லையை எட்டிப் பார்த்தான். நெஞ்சுல இருக்கிற மஞ்சா சோற எடுத்துருவேண்டா என சவுண்ட் விட நேரம் வந்த்தோ என அரசல் புரசலாய் சிட்டிசன் வெடிக்கிறார்கள்.

அரசியல்

* குடும்பத்துக்குள்ள குத்து வெட்டா இருக்குது, ஒட்டவே ஒட்டாது, என ஆருடம் சொல்லப்பட்ட முக்கிய கட்சி, மிகவும் வெற்றிகரமாய் பாகப் பிரிவினை செய்து, இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுமுகமா ஒடும் என்பதாய் தீர்க்கப்பட்டது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி கூட, மக்கள் அதை அங்கீகரித்ததாகவே தெரிகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு ஸ்பெக்டரமுமாய் (வண்ணமுமாய்) வளர்ந்து கொண்டே இருக்கிறது.

* புரட்சித்தலைவர் வென்றெடுத்த மு.க. எதிர்ப்பு எனும் சக்தியை, ஒருங்கிணைக்கத் தவறி, பொது மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால் அவர் தொடங்கிய கட்சி, எக்ஸாம் ஸ்கூட் அடிப்பது போல, தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டது. சோர்வுகளை உதறி, சோக்கா நிமிர வாழ்த்துக்கள்.

* ஹேய்.. லெப்ட்ல போ, அப்பாலிக்கா ரைட்ல போ, என மூத்த அரசியல் கழகங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டின, பழக் கட்சி, தேர்தல் தோல்வியில் மக்கள் மற்றும் கழகங்களின் ஆதரவை ஒரு சேர இழந்து நம்ம பழம் அழுகிப் போச்சே என அழுதுகொண்டு இருக்கிறது. மோட்டு வளை பார்த்து கொண்டு அடுத்து என்ன செய்யுறதுன்னு ஆலோசனை செய்ய வைச்சுறுச்சு இந்த வருடம்.


* எதிர்கால தமிழகம், இளையதலைமுறைத் தலைவன், என அதிரடியாய் களம் இறங்கிய முரசு, கொஞ்சம் கொஞ்சமாய் வால்யூம் குறைந்து, நேற்றைய நிலவரப் படி தேர்தல் துறைக்கு தன் டெப்பாசிட்டை தொகையை தானம் செய்தது.


* தொலைக்காட்சியின் அரசி; மனைவியின் துணை, இத்தனை நாள் அரசியல் அனுபவம், சக கலைஞனின் வளர்ச்சி எல்லாம் பார்த்து, நான் டாஸ்மாக் இல்லை, பாஸ் மார்க் என கொடி ஏத்திய குமாரன், பாவம் காற்றில் விட்ட கோட்டையை நினைத்து கன்னத்தில் கை வைத்து இருக்கிறார்.

*தேர்தல்ல தோல்வி, ஆட்சிதான் போச்சுன்னு பாத்தா, உள்கட்சி பூசல்ல மக்களுக்கு அறிமுகமான அத்தனை தலைவரும் போச்சேன்னு தாமரை தள்ளாடுது. போட்டி போடுற பக்கத்துல உள்ள கட்சியோட கை ஓங்கி போச்சு, வலுவான எதிர் கட்சி இல்லாம, மத்தியில் விவகாரமும் வீங்கி போச்சு.


சினிமா

* இசைப் புயல் ரகுமான், ஒலி மேதை ரசூல் பூக்குட்டி என களம் இறங்கி ஆஸ்கார் வென்று நம் பல வருடத்து ஏக்கம் தணித்தார்கள் நம்ம செல்லக் குட்டிகள். வாங்கிட்டு வந்த அவார்டுக்கு ஒரு ரிவார்டு. இட்லி வடை சார்பில அந்த டேபிளுக்கு ஒரு ஸ்பெஷல் இட்லி வையுங்கப்பா.* குறைந்த பட்ஜெட்டில், எளிமையான திரைவடிவத்தில் தரத்தில் உயர்ந்திருந்த படங்கள் சில பட்டையை கிளப்பின. இத.... இத .... இதத்தான் நாங்க எதிர்பார்த்த்தோம் என சினிமா ரசிகர்கள் வசூலில் வக்கணையாச் சொன்னார்கள். உன்னைப் போல் ஒருவன், பசங்க, நாடோடிகள், ஈரம், இன்னும் பல..............* என்னைப்பாரு என் பட்ஜெட்ட பாரு, என மிகுந்த பொருட் செலவில் தயாரானாலே படம் பிச்சுக்கும் என களத்தில் நின்றவர்கள், அடிச்ச ஆடிக்காத்துல உச்சி குடுமி பிச்சிக்கிட்டு போச்சு. படங்களின் பேரைச் சொல்லி ஏன் விவகாரம் பண்ணுவானேன்னு அடுத்த இலைக்கு சாம்பார் ஊத்திடுவோம்.

* தன் இரண்டு படங்களிலும் வெற்றி பெற்று ஒப்பனிங் ஓவரில் பவுண்டர் விளாசிய வெற்றி வீரனாய் சூர்யா வலம் வருகிறார்.

அடுத்த வருட எதிர்பார்ப்பு

நீண்ட நெடுங்காலம் அரசியலில் பணியாற்றி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாய் அறிவித்த மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞருக்கு பாராட்டும் பூமாலையும்.

சிலருக்கு பிடிக்கல என்றாலும் உண்மை இதுதானே. ரஜினியின் புதிய சினிமா எந்திரன் ரீலீஸ் உலகெங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வியாபாரமும், காசும், நம் கோடம்பாக்கத்தை தேடி வரப் போகிறது. வெற்றி பெற வாழ்த்துவோம்.


சராசரி சினிமா ரசிகனாய் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன், மிஷ்கினின் நந்தலாலா, இன்னும் பலவற்றை எதிர்பார்ப்போம். நம்மை குஷிப்படுத்தும் என விஷ்ஷூவோம்.


*ராவணன் என பெயரிட்டு இறு மொழிகளில் செதுக்கிக் கொண்டு இருக்கும் மணிரத்னத்தின் படம் மணியாக இருக்கட்டும். விக்ரம் கேரியரில் வின்னாக நிறையட்டும்.

*உலக நாயகன் புதுப்படம் பூஜை இன்னும் போடலன்னாலும் சூப்பரா வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.

- லாரன்ஸ் ( http://padukali.blogspot.com/ )

இட்லிவடை தொடந்து கட் & பேஸ்ட் கம்மியாகவும், விருந்தினர் பதிவுகள் அதிகமாக பரிமாறப்பட்டது, :-)

Read More...

சொல்வனம் இசைச் சிறப்பிதழ்

அன்புள்ள இட்லிவடை,

பின்வரும் விளம்பரத்தை உங்கள் தளத்தில் வெளியிடமுடியுமா? (இணைத்திருக்கும் படத்தோடு சேர்த்து). உண்மையிலேயே இந்த இதழ் தயாரிப்பில் வேலை பெண்டு நிமிர்த்தி விட்டது. நிறைய வாசகர்கள் படித்தால் உற்சாகமாக இருக்கும்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்
இட்லிவடை வாசகர்கள் பற்றி உங்களுக்கு இப்படி ஓர் எண்ணம் இருப்பது... நான் என்ன செய்ய இதோ நீங்க அனுப்பிய விளம்பரம் கீழே....


அன்புள்ள இட்லிவடை வாசகர்களுக்கு,

25-12-2009 சொல்வனம் இதழ், இசைக்கலைஞர்களின் பேட்டிகள், இசைக்கலைஞர்கள் குறித்த கட்டுரைகள், இசை தொடர்பான சிறுகதைகள் என இசைச்சிறப்பிதழாய் மலர்ந்துள்ளது. படித்துத் தங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்
http://www.solvanam.com

இட்லி வடை போல அரசியல் செய்யாமல் - சங்கீதத்தில் அரசியல் கலக்காமல் - கலக்க வாழ்த்துகள்.


Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது.

இதையொட்டி அதிகாலை 3.45 மணி அளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் ரத்தின அங்கி அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிக்கோட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் எனப்படும் தங்க கொடி மரம் அருகே வந்தார்.

அங்கிருந்து பரமபத வாசல் பகுதிக்கு வரும் நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டருளினார்.

அதிகாலை 4.45 மணி அளவில் பரமபதவாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்து நிற்கும் பக்தர்கள் வெள்ளத்துடன் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சந்திரபுஷ்கரணி கரையை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணல்வெளி வழியாக நான்காம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு காலை 5.30 மணிக்கு திருக்கொட்டகை வழியாக வந்து சேர்ந்தார். தொடர்ந்து காலை 6.30 மணி வரையில் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அங்கு நடைபெறும் சாதரா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு அன்று மூலவர் ரெங்கநாதருக்கு முற்றிலும் நல்முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்படும். இந்த முத்தங்கியில் 7 நாட்களுக்கு ரெங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

உற்சவர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்கு புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

விழாவை முன்னிட்டு இரவு பகல் 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக நேற்று பகல்பத்து திருநாளின் நிறைவு நாளான பத்தாம் திருநாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அர்ச்சுன மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன்பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு ஆரியபட்டாள் வாசலுக்கு வந்து அங்கிருந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தது. இரவு 9 மணி அளவில் மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தார்.


பொதிகை தொலைக்காட்சியில் இன்று காலை மூன்று மணிக்கு ( திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம்) இரண்டு சொர்க்கவாசலையும் திறந்து அசத்தினார்கள்

Read More...

Sunday, December 27, 2009

வைகுண்ட ஏகாதசி மகிமை( படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் )

Read More...

சன்டேனா ரெண்டு (27-12-09) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்.....கல்வி ஸ்பெஷல் .செய்தி # 1

கள்ள ஓட்டுக்கள் மற்றும் முறைக்கெடுகள் அற்ற தேர்தலை நடத்தும் நோக்கொடு தேர்தல் ஆணையம் கொண்டுவந்து, வெற்றிகரமாக நடைமுறை படுத்தி உள்ள திட்டம் வெப்-கேமரா மூலம் ஓட்டுப் பதிவு செய்யும் திட்டம்.

கம்ப்யூட்டர் மானிட்டரில் மேல் பகுதியில் சிறிய அளவில் இரண்டு வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு கேமரா எதிரே நடப்பவற்றை அப்படியே ஆன்-லைனில் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு பிரதிபலித்தது. ஓட்டுப்போடவருபவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரது எண்ணை கம்ப்யூட்டரில் தட்டியதும், வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது படம் திரையில் தெரிந்தது. அதை சரிபார்த்துவிட்டு அவரை கேமரா முன் நிற்க வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துக்கொண்டு ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்.


இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம், யாரெல்லாம் ஓட்டுப் போடாதவர்கள் என்ற பட்டியல் முழுவதுமாக தெரிந்துவிடுகிறது. ஓட்டுப்போட்ட நபரின் படம் அவரது தற்போதைய படமும் பதிவாகிவிடுவதால் 100 சதவீதம் கள்ளஓட்டை தடுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அவ்வப்போது படங்களுடன் வாக்காளர் பட்டியல் என்ற அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருப்பார். அதன்படி இந்த தேர்தல் எந்த குழப்பமும் இன்றி முடிந்திருப்பதன் மூலம் தேர்தல் கமிஷன் மற்றும் தொழில்நுட்பம் வெற்றிபெற்றிருப்பதாக கருதலாம்.

இதை சாதித்து காட்டி இருப்பவர்கள் நம் மாணவர்கள்.

வெப்-கேமரா மூலம் ஓட்டுப் பதிவு செய்யும் பணியை முதல் முறையாக கல்லூரி மாணவர்களை நியமித்தது தேர்தல் கமிஷன்.இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே செய்த வேலையை மாணவர்கள் செய்தனர்.

வெப்-கேமரா' பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் கூறியதாவது:

"இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் முறையாக மாணவர்களை பயன்படுத்தி, எங்கள் மாணவ சமுதாயத்தை பெருமைப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன். தேர்தல் பணியில் "வெப்-கேமரா' பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு கமிஷன் பயிற்சி அளித்தது. பின், ஆளுக்கு ஒரு லேப்-டாப், இரண்டு "வெப்-கேமரா'க்கள் கொடுத்து ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு கேமரா மூலம் பூத்தில் உள்ள வளாகம் முழுவதும் உள்ள சூழ்நிலையை படம் பிடிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு பூத்திலும் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் கமிஷன் நேரடியாக தெரிந்து கொள்ளும். இரண்டாவது கேமரா, வாக்காளர்களை படம் பிடிக்கவும், ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது படத்தை சரிபார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. ஓட்டு பதிவு முடிந்தவுடன் தகவல்கள் அனைத்தும் "சிடி'க்களில் பதிவு செய்தோம். இவற்றை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம்.

இப்பணிக்காக 750 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. பணம் எங்களுக்கு முக்கியமில்லை. நியாயமான, தேர்தல் நடைபெற எங்களுக்கும் சிறு வாய்ப்பு வழங்கியதைத் தான் நாங்கள் பெரும்பாக்கியமாக கருதுகிறோம். தேர்தல் கமிஷன் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தோம் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது "கூறினார்கள்.

மேலும்,

"தேர்தல் பணியில் மாணவர்களாகிய எங்களை ஈடுபடுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. கள்ள ஓட்டுக்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்'" என்று தெரிவிததனர் நம் மாணவர்கள்.

தேர்தல் பணியில் மட்டும் இல்லை. படித்த, சமூக பொறுப்பு உள்ள மாணவர்கள் அரசியலிலும் ஈடுபட வேண்டும். ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர அவர்களால் மட்டுமே முடியும் (சட்டகல்லூரி மாணவர்கள்
விதி விலக்கு).


செய்தி # 2


நோபல் பரிசு பெற்ற இரண்டு இந்திய அறிஞர்கள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

முதலில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் :

"வகுப்பறையில் எழுத வைப்பது போதாதென்று, வீட்டுப் பாடமும் கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தும் பழக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் " என்கிறார் அமர்த்யா சென் தனது ஆய்வறிக்கையில்.

அது ஆரம்பக் கல்வியில் பாடத் திட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி, ஒட்டு மொத்தமாக மாற்றியமைக்க அவர் ஆலோசனை கூறுகிறார்.
இருபது ஆண்டுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது, இன்றைய குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் சுமை அதிகம். முன்பெல்லாம் படிப்பதும் எழுதுவதும் குறைவு. பாட்டு, ஆட்டம், விளையாட்டு அதிகம். அதனால் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம், மனதுக்கு உற்சாகம் கிடைத்தது. சிறந்த வாழ்க்கைக்கான அடித்தளம் அமையும் இடமாக பள்ளிகள் விளங்கின.


கல்வியின் நோக்கமே கை நிறைய சம்பாதிக்க வழி அறிவதுதான் என்ற நுகர்வு கலாசார சித்தாந்தத்தின் தாக்கம் அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது. மதிப்பெண் வேட்டையால் விளையாட்டுப் பருவத்தை தொலைத்தனர் குழந்தைகள். வீட்டிலும் புத்தகம் நோட்டுடன் காலத்தை கரைக்கும் எந்திரங்களாக மாறிப் போனார்கள். போட்டி நிறைந்த உலகில் மதிப்பெண்களின் இன்றியமையாமை குறித்த நிபுணர்களின் பிரசங்கத்தில் பெற்றோரும் கிறங்கி, வீட்டுப் பாடம் செய்து முடிக்க டியூஷன் சென்டருக்கு குழந்தைகளை துரத்துகின்றனர். அதிகாரி, ஆசிரியர்,பெற்றோர் முக்கோணத்தின் வேகச்சுழற்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் குழந்தைகள் திணறுகின்றன. இதன் விளைவாக வாசிப்பது, எழுதுவது, எண்ணுவது ஆகிய ஆதார திறமைகளை அவர்களால் அடைய முடியாமல் போகிறது.

பிரைவேட் டியூஷன் என்பது வகுப்பறைக்கு நிகரான அத்தியாவசியமாக மாற்றப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத பெற்றோர் வசதியற்றவர்களாகவும் இருந்து விட்டால் திண்டாட்டம்தான். ஆரம்பக் கல்வியில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வீணாகின்றன. எனவே, பாடத் திட்டத்தை மாற்றி அமைத்து, வீட்டுப் பாடத்துக்கு விடை கொடுத்தால் டியூஷன் தானாக மறையும் என்கிறார் பொருளாதார மேதை அமர்த்யா சென்.

இரண்டாவதாக,

வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் :

" இந்தியாவில் ஏராளமான விஞ்ஞானிகள் உள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால், ஒரு பயோடெக்னாலஜி தொடர்பான விஷயத்தில் மேற்கொள்ளப்படும் தீவிரமான ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு உதவ தயாராக உள்ளேன். பயோடெக்னாலஜி என்பது மிகவும் கடினமான ஒரு பாடம் தான்.இங்குள்ள டாடா இன்ஸ்டிடியூட், இந்திய அறிவியல் பயிற்சி மையம், அடிப்படை அறிவியலுக் கான தேசிய மையம் ஆகியவற்றில் ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.


ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சிக்காக என்னிடம் அவர்கள் உதவி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளேன். என்னிடம் உதவி கேட்காதபட்சத்தில், நானாக முன்வந்து அவர்களுக்கு உதவ முடியாது.அதே நேரத்தில் சம்பிரதாயமான விஷயங்களில், அது சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

ஒருவரை வேலைக்கு தேர்வு செய்யும்போது, அவரது பின்னணியை பார்க்க கூடாது.பிரபலமான பள்ளியில் படித்தவரா, சாதாரணமான பள்ளியில் படித்தவரா என்பதை பார்க்கக் கூடாது. அந்த வேலைக்கான தகுதி அவருக்கு உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு, கவுரவ பேராசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக
வந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களுக்காக வருவேன். இந்த கொள்கையில் மாற்றம் எதுவும் இருக்காது "

நோபல் பரிசு பெற்ற பின், முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்தபோது மும்பையில் இவ்வாறு பேட்டியில் தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.


(நன்றி..இனி அடுத்த வாரம்).

-இன்பா

Read More...

Saturday, December 26, 2009

பபாசிக்கு ஒரு வேண்டுகோள்

இட்லி வடையாருக்கு,

இந்த மடலை வேண்டுகோளாக கருதி தங்கள் பதிவில் வெளியிட இயலுமா ?

சென்னையில் வருடம் தோறும் நிகழும் புத்தகத் திருவிழாவிலே உடல் ஊனமுற்றோருக்கு செய்து தரப்படும் வசதிகளை இன்னும் மேம்படுத்தலாம் என்பது என் எண்ணம்

அரங்கத்தின் மிக அருகிலே ஒரு ப்ரத்யேக பார்க்கிங் ஏரியா அமைத்து அவர்களின் வாகனங்களை அது வரை அனுமதிக்கலாம்.. இதனால் வாயிலில் இருந்து அரங்கம் வரை உள்ள நீண்ட வழியில் அவர்கள் நடந்து செல்லும் சிரமத்தை குறைக்கலாம்.

அரங்கத்தினுள் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் எண்ணிக்கையில் போதுமான அளவில் இல்லை.. தற்போது இரயில் நிலையங்களில் உடல் ஊனமுற்றோருக்கு பயனளிக்கும் வகையில் இயங்கும் பாட்டரி வாகனங்கள் புத்தகக் காட்சி அரங்கத்தினுள்ளும் இயக்க ஆவண செய்யலாம்.

இதற்கு ஏர்டெல் போன்ற புரவலர்களை அணுகினால் அவர்களும் தங்கள் விளம்பரத்தினை அரங்கத்தினுள் செய்துகொள்ள ஏதுவாகவும் அப்படியே உடல் ஊனமுற்றோருக்கு உதவிடவும் ஏதுவாக அமையலாம் அல்லவா


இதனை இட்லி வடையில் ஒரு பதிவாக வெளியிட்டால் பதிப்பகத்தார் சங்கத்தின் கவனத்துக்கு செல்ல அதிக வாய்ப்பாகும் என்பதால் இதனை ஒரு வேண்டுகோளாக ஏற்கவும் ப்ளீஸ்

Read More...

மதுமாதுபப்ளிசிட்டி

நான் சென்னை நகரில் குடியேறி 34 வருடங்கள் ஆகின்றன. நாக்கை வறட்டி தலை சுற்றிய வெயில் முதல் வீட்டுக்குள் நுழைந்த வெள்ளம் வரை அனுபவித்தாயிற்று. நான் பிறந்த மார்கழி மாதம் சென்னை நகரின் வசந்த காலம். அளவான வெயில்; அளவான குளிர்; இப்போதெல்லாம் அளவான மழை கூட உண்டு.மார்கழியை சென்னையில் மறக்க முடியாத மாதமாக ஒவ்வோராண்டும் ஆக்குபவை புத்தகக் கண்காட்சியும் இசைவிழாக்களும்தான். இசை விழாக்களைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் புத்தகக் காட்சி.

பதிப்பாளர்கள்-விற்பனையாளர்கள் சங்கமான `பபாசி' இதுவரை நடத்திய வருடாந்தர புத்தகக் காட்சியில் பார்வையாளனாகவோ, பங்கேற்பாளனாகவோ ஒரு வருடம் விடாமல் 32 வருடங்களாகக் கலந்துகொண்டிருக்கிறேன். 22 வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் அரங்கு வைத்த முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமை என்னுடைய `ஏழு நாட்கள்' இதழுக்கு உண்டு. சென்னை நகரத்துக்கென்றே தொடங்கிய அந்த இதழ் புத்தகக் காட்சி நடந்த 15 நாட்கள் மட்டுமே வெளிவந்த பெருமையையும் சம்பாதித்துக் கொண்டது. இன்னொரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் நாடகப் பிரதிகளை அரங்கில் வைத்த இரவே கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சமூக, கலாசார, நாட்டு நடப்பு விஷயங்கள் பற்றி மக்கள் கருத்துக் கணிப்பை அன்றாடத் தேர்தலாக நடத்தும் அரங்கு என்னுடையதுதான்.

சிநேகமும் வசதிக் குறைவும் நிறைந்த காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் சில ஆயிரம் பேர்கள் வந்து கொண்டிருந்த புத்தக் காட்சி, இப்போது சற்றே அந்நிய உணர்வுடன் பெரும் வசதிகளோடு பல லட்சம் பேர் வரும் நிகழ்வாக வளர்ந்திருக்கிறது. இதற்குப் பின்னால் எந்த சுய விளம்பரமும் சொந்தப் பிரதிபலனும் பாராமல் உழைக்கிற ஒரு டஜன் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கும் மேலாக அப்படிப்பட்டவர்கள் புதிது புதிதாகத் தொடர்ந்து வந்து ஈடுபட்டுக் கொண்டே இருப்பது ஓர் ஆச்சரியம். அதற்குக் காரணம் புத்தக பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் அதை வெறும் வியாபாரமாகப் பார்ப்பதில்லை. ஏதோ சமூகத்துக்கு நம்மால் ஆன நல்லதைச் செய்கிறோம் என்ற நினைப்பு பதிப்பாளர்களுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் புத்தகக்காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை, வாங்கும் நூல்களின் எண்ணிக்கை, மொத்தத் தொகை அளவு எல்லாம் அதிகரிக்கின்றன. ஆனால் இவையெல்லாமே பெருகி வரும் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பெரும் வளர்ச்சியல்ல. இன்றும் நம் சமூகத்தில் நூற்றுக்குப் பத்து பேர்தான் புத்தகம் வாங்குகிறார்கள். முன்பு ஒரு லட்சம் பேர் இருந்தபோது பத்தாயிரம் பேர் வாங்கினால், இப்போது பத்து லட்சம் பேருக்கு ஒரு லட்சம் பேர் புத்தகம் வாங்குவார்கள். விகிதாசாரம் அதிகரிக்கவில்லை.

எண்ணிக்கை அதிகரித்ததனால் நிறைய பதிப்பாளர்களால் தொழிலில் முன்பை விட தாக்குப் பிடிக்க முடிகிறது. முன்பை விட நிறைய லாபம் பார்க்க முடிகிறது.

ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.

அதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.

ஒரு டீசண்ட் டான நடுத்தர வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு எழுத்தாளன் மாதம் 20 ஆயிரம் ரூபாயாவது சம்பாதிக்க வேண்டு மென்றால், ஒரு வருடத்தில் அவ னுடைய 100 ரூபாய் விலையுள்ள புத்தகங்கள் மொத்தம் 24 ஆயிரம் பிரதியாவது விற்கவேண்டும். அதிக வாசகர் வரவேற்பைப் பெற்ற என்னுடைய `அறிந்தும் அறியாமலும்' புத்தகம் சென்ற ஒரு வருடத்தில் 2 ஆயிரம் பிரதிகள் விற்றிருக்கிறது. இதுவே நல்ல விற்பனைதான் என்று தொழில் விற்பன்னர்கள் சொல்கிறார்கள். மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்க, நான் எழுதிய 12 புத்தகங்களும் வருடந்தோறும் தலா 2 ஆயிரம் பிரதிகள் வீதம் விற்றாகவேண்டும்!

இந்தச் சூழ்நிலைதான் தமிழில் பலரை முழு நேர எழுத்தாளராக விடாமல் தடுத்து விடுகிறது. சினிமாவில் ஒரு பாட்டு எழுதினால் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை தருகிறார்களாம். கவிஞனாக இருப்பதை விடப் பாடலாசிரியனாக இருப்பதுதான் லாபகரமானது. கவிஞனென்றால் கவிதைகளை வெளியிடவே யாரும் முன்வரமாட்டார்கள். சொந்தக் காசில் வெளியிடவேண்டும். கவிதைப் புத்தகம் விற்பதே இல்லை. சொந்தக் காசில் அச்சிட்டு விசிட்டிங் கார்ட் மாதிரி பார்க்கிறவர்களுக்கெல்லாம் விநியோகிக்கலாம்.

அதே நிலைமைதான் நாடகப் புத்தகங்களுக்கும். ஏனென்றால் ஒரு தலைமுறைக்கே நாடகம் என்றால் என்ன என்று தெரியாது. டி.வியில் வருகிற சித்தி, அரசி, கோலங்கள் இதையெல்லாம்தான் நாடகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதினார் என்று சொன்னால், அவர் சீரியல் எழுதியதாகவே இங்கே அர்த்தம் கொள்ளப்படும்.

ஓர் இலக்கியப் பத்திரிகை, ஒரு புத்தகக் கடையில் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த எனக்கு விழா நடத்தியவர்கள் பூச்செண்டு அளித்தபோது `இது வேண்டாமே; நூல்களை நினைவுப் பரிசாகக் கொடுங்கள்' என்று சொன்னேன். உடனே மதுமாதுபப்ளிசிட்டி பைத்தியமான ஒரு கோமாளி எழுத்தாளர், நான் பூச்செண்டுக்கு எதிரி என்று ஆரம்பித்து இணையத்தில் வசை பாடித் தீர்த்துவிட்டார். நான் பூச்செண்டுக்கு எதிரி இல்லை என்பது ஓ வாசகர் எல்லாருக்கும் தெரியும். தமிழில் புத்தகங்கள் விற்பதில்லை; எனக்கு நட்சத்திர ஓட்டல் பாரில் போய் குடிக்கப் பணமில்லை; ஓசியில் மது கிடைத்தாலும் வீடு திரும்ப ஆட்டோ காசு கிடைப்பதில்லை என்று புலம்புவதே இந்தக் கோமாளி எழுத்தாளர்தான்.


புத்தகங்களை வாங்குகிற, பரிசாகத் தருகிற ஒரு கலாசாரத்தை நம் சமூகத்தில் எழுத்தாளனே ஊக்குவிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள்? (கலைஞர் கருணாநிதி ஒரு எழுத்தாளராக இருக்கவேதான் அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகளாக நூல்களைத் தரவேண்டும் என்று அரசாணை பிறப்பித்து அதற்காக என்னிடம் பூச்செண்டு பெற்றார்!) எழுத்தாளனே புத்தகப் பரப்பலுக்கு எதிராக உளறிக் கொண்டிருந்தால், தொடர்ந்து ஜவுளிக்கடை, நகைக்கடை அதிபர்களிடம் கையேந்திக் கொண்டு, இண்டர்நெட் பிச்சைக்காரனாக அவமானப்படத்தான் வேண்டி வரும்.

பெற்றோர்கள் இன்று குழந்தைகளை மார்க் வாங்குவதற்காக விதவிதமாகத் தொல்லைப்படுத்துகிறார்கள். (`எல்லாம் அவங்க நல்லதுக்குத்தான்' என்ற அன்புக் கொடுமை வேறு.) தங்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள், நல்ல நாடகங்கள், நல்ல கவிதைகள் என்று அறிமுகப்படுத்தும் பெற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். பிறந்த நாள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் ஒவ்வொன்றுக்கும் புத்தகங்களைப் பரிசுகளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு குடும்பமும் தொடங்கவேண்டும். வாஸ்து, சமையற்குறிப்பு, சுய முன்னேற்றப் புத்தகங்களையே ஒவ்வொரு மாதமும் யாரும் வாங்க முடியாது. நல்ல கதை, கவிதை, பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் என்று வாங்குவது மெல்ல மெல்ல வளரும்.

தமிழ் நாட்டில் மூன்று கோடி படித்த குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் வெறும் நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவது என்ற பழக்கத்தை மேற்கொண்டால், வருடத்துக்கு 3600 கோடி ரூபாய்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் விற்கமுடியும். (டாஸ்மாக் விற்பனை எந்தப் பிரசாரமும் இல்லாமல் இப்போதே 13 ஆயிரம் கோடி ரூபாய்.)

முதலில் `ஓ' படிக்கும் குடும்பங்கள் எல்லாம் மாதாமாதம் புத்தகம் வாங்க வேண்டுமென்று இந்தப் புத்தாண்டில் உறுதிமொழி எடுத் துக் கொள்ளுங்கள். டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் என் அரங்கத்தில் புத்தகம் வாங்க வந்தீர்களென்றால், இந்தக் கட்டுரை நறுக்குடன் வாருங்கள். அதைத் தரும் ஒவ் வொருவருக்கும் வாங்கும் புத்தகத்தில் 30 சதவிகிதம் விலை தள்ளுபடி தருவேன்!

ஒரு மகிழ்ச்சித் தகவல்:

சில வாரங்கள் முன்னர் சேத்துப்பட்டு ரயிலடியில் ஆதரவற்றிருந்த மன நலம் குன்றிய ஒருவரைப் பார்த்துவிட்டு பேன்யன் அமைப்புக்கு என் தோழி போன் செய்தபோது, அவர்கள் தற்போது அத்தகைய நபர்களை புதிதாக தம் இல்லத்தில் சேர்ப்பதில்லை என்று தகவல் சொன்னதைக் குறித்திருந்தேன். இதையடுத்து பேன்யனின் நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்தார்கள். புதிதாக சேர்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்தத் தகவலை போனில் சொன்ன பேன்யன் ஊழியர் கனிவாக சொன்னாரா, கடுமையாக சொன்னாரா என்று மட்டும் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். கனிவாகத்தான் சொன்னார். எனக்கும் என் தோழிக்கும் வருத்தமெல்லாம், வேறு எங்கே பாதிக்கப்பட்டவரை அனுப்பலாம் என்று கேட்டால், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பது பற்றித்தான்.

ஓ பக்கச் செய்தி பார்த்துவிட்டு உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாசாகர் தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் சேத்துப்பட்டில் இருந்த நபரை தமது காப்பகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வித்யாசாகருக்கு நன்றி.

தெருவில் காணப்படும் மன நலம் குன்றியவர்கள் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்தால் அவர்கள் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையையும் எழுதியிருந்தேன். இணைய எழுத்தாளரும் மருத்துவருமான நண்பர் புருனோ நான் எழுதியது 108 சேவையைக் குறைத்து மதிப்பிடும் ஆபத்தை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். நிச்சயம் அப்படி இல்லை. 108 சேவையின் சிறப்பே பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆம்புலன்ஸிலேயே சிகிச்சையைத் தொடங்கிவிடும் இந்த முறை சிறப்பானது என்பதே என் கருத்துமாகும். உயிர் ஆபத்தில் இருப்பவர்களுக்கான சேவை இது. மன நலம் குன்றி தெருக்களில் அனாதைகளாக திரிவோருக்கும் இது போன்ற ஒரு சேவை தேவை என்பதே என் வலியுறுத்தல்.

சேத்துப்பட்டு ரயிலடியில் மன நோயாளிகள் அடிக்கடி காணப்படுவது தொடர்பான என் பதிவுக்கு வந்த மேற்படி எதிர்வினைகளுக்கு நன்றி. இதுவரை எந்த எதிர்வினையும் காவல் துறையிடமிருந்தோ, அரசிடமிருந்தோ வரவில்லை என்பதுதான் வருத்தம்..

இந்த வாரத் திட்டு

சபையை நடக்க விடாமல் கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கும் எம்.பிகளுக்கும் அதனால் 12 நிமிடத்துக்குள் ஐந்து சட்டத் திருத்தங்களை நிறைவேற்றிய மக்களவைக்கும் இ.வா.தி

இந்த வாரப் பூச்செண்டு

சிங்கப்பூர் நூலகத்துக்கு நிகராகக் கட்டி வருவதாக தமிழக அரசு சொல்லும் தரமணி அண்ணா நூலகத்துக்காக வீடு வீடாகப் போய் புத்தகங்களை நன்கொடை பெற்று வந்தால் சிறப்பு மதிப்பெண் தரப்படும் என்று அறிவித்திருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு இ.வா.பூ

( நன்றி: குமுதம் )

Read More...

யாருக்கும் வெட்கமில்லை!!

கடந்த சில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளால் வெறுப்படைந்து மனமுடைந்த பாஜக, ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் பதவிக்கான வேள்வியில், தனது கொள்கைகளை அவிர்ப்பாகமாகக் கொடுத்து பதவி வரம் பெற முன்வந்துள்ளது.இந்த வேள்வியில் பாஜகவிற்கு வரமளிக்கும் தேவாதி தேவனாக ஷிபு சோரன் காட்சி தருகிறார்.

81 இடங்கள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக கூட்டணி 20 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், ஷிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும், ஷிபு சோரனின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்குமளவிற்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், குழப்பங்களும், குதிரை பேரங்களும் நடைபெற்று வருகின்றன.

எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், சோரனுடன் கூட்டணி சேர்ந்து தனது விட்டுப் போன பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் காரணமாக, சோரனுடன் சேர்ந்து மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்போம் என கூறத் துவங்கியது காங்கிரஸ். ஆனால் முதல்வர் நாற்காலியை சோரனுக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை. சோரனுக்கும் இதே நிலைதான். நான் எப்போதுமே கிங்தான், கிங் மேக்கர் இல்லை என பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, எந்த கட்சியுமே எனக்கு எதிரியில்லை. என்னுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் சேர்ந்து ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பாஜகவைக் குறிவைத்து வசனம் பேசினார். பேசிய வசனத்திற்கு இப்போது தக்க பலன் கிடைத்துள்ளது.


காங்கிரஸும், ஷிபு சோரனும் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் கூட்டாளிகள். சென்ற மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சோரன் மத்திய அமைச்சராக இருந்தார். பின்பு அவருடைய செயலாளர் சசிநாத் ஜாவை கடத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதன் பிறகு மன்மோகன் சிங் அவர்களின் கடுமையான வற்புறுத்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தலைமறைவானார். இவர் மீது மொத்தம் 9 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் சுமார் எட்டு கொலை வழக்குகள். இவ்வாறான அஹிம்சையை வலியுறுத்திய காந்தி மஹான் வளர்த்த கட்சி, இந்த அஹிம்சாவாதிக்கு அமைச்சர் பதவி வழங்கி கட்சிக் கொள்கையை நிலைநாட்டியது. இது இவரது முதல் சாதனை. பிறகு அமைச்சராக இருந்த போதே தலைமறைவானது இவரது இரண்டாவது சாதனை. பிறகு தில்லி உயர்நீதி மன்றம், சசிநாத் ஜா கொலை வழக்கில் ப்ராசிக்யூஷன் தரப்பும், சிபிஐ யும் சரியான முறையில் செயல்படாமல், வழக்கை பலவீனமாக்கிவிட்டதாக தனது கண்டனத்தையும் தெரிவித்து, வழக்கிலிருந்து ஷிபு சோரனையும் விடுவித்தது. பிறகு தேர்தலில் போட்டியிடாமலேயே ஜார்கண்ட் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் சாசனச் சட்டத்தின் படி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வேண்டும். அவ்வாறு 2009 ஜனவரியில் போட்டியிட்ட ஷிபு சோரன், தேர்தலில் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டார். இவரைத் தோற்கடித்தவர் அரசியலுக்கு மிகவும் புதியவர், கட்சியும் புதிது. அவர் சந்தித்த முதல் தேர்தலே இதுதான். இவ்வாறு முதலமைச்சராக இருக்கும்போதே ஒருவர் தோற்கடிக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறான பல சாதனைகளுக்கு உரித்தானவர்தான் இந்த ஷிபு சோரன்.

கடந்த லோக் சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் சரிவை சந்தித்த பாஜக, இப்பொழுது துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக் கொண்டு சோரனை ஆதரிக்க முனைந்துள்ளது. இதே பாஜக, 2004 ஆண்டு, ஷிபு சோரன் மீதான, 30 ஆண்டுகளாக நிலுவையிலிருக்கும் ஒரு கைது வாரண்டைக் காரணம் காட்டி பாராளுமன்றத்தையே நடக்க விடாமல் அடித்தது. தவிர, இதே ஜார்கண்ட் தேர்தலில் சோரன் தனது கட்சி வேட்பாளர்களாக நக்சல்களைக் களமிறக்கிய போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. ஆனால் இப்போது பதவி ஆதாயங்களுக்காக, ஒரு கிரிமினல் பின்னணியுடைய, சர்வமும் ஊழல்மயம் என்ற தன்மையுடைய ஒரு நபரை முதல்வராக ஒப்புக் கொண்டுள்ளது.

சோரனுக்கும், பாஜகவிற்கும் கொள்கையளவிலோ அல்லது எந்த விதத்திலும் சிறிதளவு ஒற்றுமை என்பதும் கிடையாது. பாஜக ஆட்சியில் ஊழல் என்பது சொல்லும்படியான அளவில் கிடையாது. ஆனால் அமைச்சராக இருந்த சோரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன, தவிர பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்தியாவிலேயே தீவிரவாதத்தையும், மாவோயிஸத்தையும் வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக. ஆனால் ஷிபு சோரன், இத்தேர்தலில் நக்சலைட்டுகளை தனது வேட்பாளர்களாக களமிறக்கினார். இவ்வாறு பல கொள்கை முரண்பாடுகளை கொண்டுள்ள போதிலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டும், அற்பத்தனமான பதவிகளை அனுபவிக்கும் பொருட்டும், ஒரு நேர்மையான தலைவர்களைக் கொண்ட தேசியக் கட்சி ஒரு கிரிமினலை ஆதரிக்க முன்வந்துள்ளது தேசத்திற்கே மிகவும் தவறான முன்னுதாரணம். இது நல்லதல்ல.

- யதிராஜ்

ஷிபு சோரனை விட தகுதி வாய்ந்தவர் யாராவது இருந்தா சொல்லுங்க


Read More...

Friday, December 25, 2009

பா.ஜ.கவின் மரபு

இன்று இல.கணேசன் கிறிஸ்தவர்களைப் போல இஸ்லாமியர்கள் தேசபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதன் அறிக்கையின் முழு விவரம் கீழே...

சென்னை அண்ணாசாலையில் புதிதாக அமைய உள்ள தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன.

ராஜாஜி முதல்வராக இருந்தபோது இதுபோல இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.நாடு விடுதலைப் பெற்ற சமயத்திலேயே செய்திருக்க வேண்டிய பணியை இப்போதாவது செய்கிறார்களே என மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சில சின்னங்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் தங்கள் நினைவாக வைத்த நினைவுச் சின்னங்கள் அல்லது அவர்களது வெற்றிச் சின்னங்கள்.நம்மைப் பொருத்தவரை அவை அடிமைச் சின்னங்களே. ராஜாஜி காலத்தில் மட்டுமல்லாது தற்போதும் கூட இத்தகைய சிலைகள் அகற்றப் படுவதற்கு எந்த தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏழாம் எட்வர்டும் ஐந்தாம் ஜார்ஜும் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது என எந்த கிறிஸ்தவரும் கருதவில்லை. மாறாக, ஏழாம் எட்வர்டும் ஜார்ஜும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் என்ற தேச பக்தி உணர்வுடன் உள்ளார்கள்.

இதைத்தான் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகளிடமும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் எதிர்பார்க்கிறோம்.


400 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தவர் பாபர். இந்த நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தை இடித்துவிட்டு அதை மசூதியாக மாற்ற ஆணையிட்டார்.ஆணையை நிறைவேற்ற முயன்ற அவரது தளபதி மீர்பாகி, அதை முழுமையாக செய்ய இயலவில்லை. எனவே ஸ்ரீ ராமர் ஆலயத்தின் கீழ் பகுதியை ஆலயமாகவே விட்டு விட்டு மேல் பகுதியை மட்டும் மசூதி கோபுரம்போல் மாற்றினார்.

அந்த பிரச்சனைக்குரிய கட்டி டத்தைத்தான் பாபர் மசூதி என் கிறார்கள். அது நம்மை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த முயன்ற அந்நிய மன்னனின் அடிமைச் சின்னம். அதை அப்புறப்படுத்த முயலும்போது தேசபக்தர்கள் எவரும் எதிர்க்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் கிறிஸ்தவர்களது நல்ல உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


எவ்வளவு பெரிய கராத்தே மாஸ்டராக இருந்தாலும் வீட்ல பொண்டாட்டிகிட்ட அடி வாங்குவது தான் மரபு அதே போல எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், பா.ஜ.கவில் காமெடி செய்வதும் மரபு தான்!

Read More...

வெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - ஜெய் ஹனுமான்

இந்தப் படத்தை எனது நண்பர் ஒருவர் பார்க்கக் கொடுத்தார்.. ராமர் அணிலுக்கு கோடு போட்டதையே நமக்கு நம்ப கஷ்டமா இருக்கு, இதில என்ன சார் அணிலுக்கு ட்ரெஸ் போட்டு படமெடுத்திருக்காய்ங்க.." என்று கேட்டதற்கு

"இதில அணில் பேசும்,, பாடும், ஆடும்" என்றார்

என்ன பிரமாதமா இருக்கப்போகுதுனு நினைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்...


ஆரம்பம் முதல் கடைசிவரை அப்படியே கட்டிப்போட்டு வைத்திருந்தது படம் என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு கட்டத்தில் அணில்கள் மீண்டும் டேவிட்டிடம் சேர்ந்தால் பாவம் நல்லா இருந்திருக்குமே என நாமே வருத்தப்படும் அளவு திரைக்கதையும், அதைப் படமாக்கிய விதமும்.. யார் டேவிட் என்பதெல்லாம் கீழே..

ஒரு கிறிஸ்துமஸ் மரத்தில் வாழும் ஆல்வின், தியோடர் மற்றும் சைமன் என்ற பெயர்கொண்ட மூன்று அணில்கள் பேசும், பாடும், ஆடும். சிரித்துக் கும்மாளமிட்டு, விளையாடி அந்த மரத்தில் வாழ்ந்து வருகிறது. ஒரு நாள் , அந்த மரம் வெட்டப்பட்டு நகரத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது கிறிஸ்துமஸ் மரமாக ஒரு பெரிய நிறுவனத்தின் லாபியில் நிறுத்த. மூன்று அணில்களும், அந்த மரத்துடன் நகரத்திற்கு வருகின்றன.

அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒரு இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் டேவிட் செவில்லி எனப்படும் நமது கதாநாயகனின் ( இசையமைப்பாளன்) இசை காலத்திற்கு ஏற்றதாக இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறான். வருத்தத்தோடு வெளிவரும் அவனது கையிலுள்ள கூடையில் அணில்கள் அமர்ந்துகொண்டு ஒரு பாதுகாப்பான புகலிடம் தேடி அவனது வீட்டிற்குச் செல்கின்றன.

டேவிட்டுக்குத் தெரியாமல் அந்த வீட்டில் நுழைந்துகொள்ளும் அணில்கள் வீட்டை துவம்சம் செய்கின்றன.. இருப்பினும் தங்களது பாடும் திறனால் டேவிட்டைக் கவர்ந்து வீட்டிற்குள் நிரந்தர இடம் பிடிக்கின்றன.பின்னர் அதைப் பிடித்துவிடும் டேவிட்டிடம் தாங்கள் பேசவும், பாடவும் , ஆடவும் முடியும் எனச் சொல்கின்றன. அவனது வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கும்படி வேண்டுகின்றன. முதலில் மறுத்துவிட்டு அவைகளை வெளியே அனுப்பிவிடுகிறான். மழைபெய்கிறது..அனில்கள் மூன்றும் இணைந்து அருமையான குரலில் பாடுகின்றன.. ஆச்சரியம் தாளாமல் கதவைத் திறக்கிறான்.. அங்கு இந்த மூன்று அணில்களும் இருக்கின்றன. அவைகளை உள்ளே அனுமதிக்கிறான்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தானே உணவும், தங்க இடமும் தருவதாகவும், அவனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கிறான். அதற்குப் பதிலாக அணில்களை பாடல்களைப் பாடவைத்து அதை அவனை வெளியேற்றிய இசை கம்பெனியிடம் வெளியிடக் கேட்கிறான். அந்தக் குரலுக்கு கிடைக்கும் வரவேற்பைப்பார்த்து டேவிட்டும், அணில்களும் வருமானத்தைப் பங்கிடும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்

அணில்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. வருமானம் குவிகிறது. இசைத்தட்டு வெளியிடுபவனுக்கும் ( இயான் ஹாக்), இசையமைப்பாளனுக்கும்...இடையில் பிரிவை உண்டாக்கி அணில்களை டேவீட்டிடமிருந்து பிரிக்கிறான். அணில்களும் இயானை நம்பி டேவிட்டை விட்டுப் பிரிகின்றன.

இயான் அவைகளை கிட்டத்தட்ட அடிமைகளைப்போல நடத்தி அவைகளை உலகம் முழுக்க சுற்ற வைக்கிறான். இறுதியில் அவனது இரக்கமில்லாக் குணத்தை உணரும் அணில்கள் டேவிட்டிடம் மீண்டும் சேர்வதுடன் சுபம்..

இதில் அணில்களின் கொட்டம் அவைகள் காட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் மரத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. அதன் குரலும், உடல் மொழியும் கொள்ளை அழகு.

கிட்டத்தட்ட மனிதனைப்போலவே பேசியும், சிந்திக்கவும் செய்கின்றன..

பாடல்கள் வெற்றியடைய ஆரம்பித்த பின்பு மேடையில் பம்பரமாய் சுழன்றாடுகின்றன..

மேடைப்பாடகர்களைப்போல வாயருகில் மைக்வைத்து ஆடிக்கொண்டெ பாடும், ஆடும் காட்சிகளும்..அவைகளுக்கு இயான் வீட்டில் கிடைக்கும் அருமையான விருந்துக்கு அவைகள் செய்யும் ரகளையும் கலக்கல்..

நல்ல இனிமையான இசையுடன், நல்ல ஒளி மற்றும் ஒலிப்பதிவுடன் வந்திருக்கும் இந்த படம் குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்

வாசகர்கள் எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!

வாரா வாரம் வெள்ளிக்கிழமை ஜெய் ஹனுமான் சினிமா விமர்சனம் எழுதுவார் என்று நம்புகிறேன் :-)


Read More...

Thursday, December 24, 2009

சுப்புடுவும் நானும் - கடுகு

நண்பர் கடுகு ( இட்லிவடைக்கு போட்டியாக ) புது வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். அதன் முகவரி கடைசியில் சொல்லுகிறேன்...

'சுப்புடுவும் நானும்' என்ற கட்டுரையை என் பார்வைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு அனுப்பினார். உடனே நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கு தெரியும் அவருக்கு தெரியாது. இதோ அந்த கட்டுரையை இங்கே போட்டாச்சு. ( அவருக்கு என் நன்றி :-) )

ஏன் இந்த கட்டுரையை அவர் வலைப்பதிவில் போடவில்லை என்று நீங்கள் கேட்கலாம், இட்லிவடையில் போட்டால் என்ன அவர் வலைப்பதிவில் போட்டால் என்ன எல்லாம் ஒன்று தான் :-)

கட்டுரை கீழே....

சுப்புடுவும் நானும் - கடுகு

சுப்புடுவுக்கு சங்கீதத்தில் எவ்வளவு ஆர்வமோ அவ்வளவு ஆர்வம் தமிழ் பத்திரிகைகளின் மீதும் உண்டு. அதிலும்,குமுதம் இதழின் மீது அபார மோகம்.

நான் 1963’ல் டில்லி சென்ற பிறகு குமுதத்தில் தொடர்ந்து கட்டுரைகள், பேட்டிகள் என்று எழுத ஆரம்பித்தேன். நான் டில்லிக்குப் புதுசு. என்பதால் அவரைச் சந்திக்கக் கூட சந்தர்ப்பம் வரவில்லை. சுப்புடுவைப் பற்றி யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை.ஆனால் அவர் என்னைக் "கண்டுபிடிக்க" முயற்சி செய்திருக்கிறார்,. அவருடைய உறவினர் சென்னை கிருஷ்ணகான சபா துணைச் செயலர் வெங்கடேஸ்வரனை விசாரித்திருக்கிறார் என்பது பின்னால் தெரிந்தது.. நான் டில்லி செல்லுமுன் வெங்கடேஸ்வரனும் நானும் சென்னை ஜி.பி.ஓ.வில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

அவர் சுப்புடுவிடம் பேச்சுவாக்கில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ”அப்படியா? நல்லதாப் போச்சு, அவருக்குக் கடிதம் எழுது. என்னை வந்து பார்க்கச் சொல்,” என்று கேட்டுக் கொண்டார்.

வெங்கடேஸ்வரனிடமிருந்து எனக்குக் கடிதம் வந்ததும் சுப்புடுவிற்கு ஃபோன் செய்து விட்டுப் போய்ப் பார்த்தேன். வேடிக்கை என்ன தெரியுமா? அவர் அலுவலகமும் (நிதி அமைச்சகம்) என் அலுவலகமும் (பி. அண்டி. டைரக்டரேட்) வெகு அருகில் இருந்தன. நடுவே ஒரே ஒரு கட்டடம் தான்!

குமுதம் எழுத்தாளன் என்பதால் எனக்கு தடபுடல் வரவேற்பு. நிறைய பேசினார். "இதோ பாருமய்யா.... உமக்கு மேட்டருக்கு நிறைய ஆலோசனைகளைத் தருகிறேன். உசிதமானவற்றை நீர் எழுதும்" என்றார். கிட்டதட்ட தினந்தோறும் அவரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.

டில்லியில் பல முக்கியப் பிரமுகர்களை அவருக்கு நன்றாகத் தெரியும். பல கிசு கிசுக்களும் தெரியும்!. அவரைச் சந்திக்கப் பலர் அடிக்கடி வருவார்கள். அவர்கள் பேசுவதை நான் கேட்டுக் கோண்டிருப்பேன்.
.
ஒரு நாள், "அதிருக்கட்டும் ,,, உங்களுக்கு நாடகம் நடிப்பதில் ஆர்வமுண்டா" என்றார்.
”உண்டு சார். .. டைரக்டர் ஸ்ரீதர் என் கிளாஸ்மேட். பள்ளிக்கூட நாட்களில் நான் ஸ்ரீதரின் குரூப். பிறகு ஜி பி.ஓ.-விலும் நிறைய நாடகங்கள் நடித்திருக்கிறேன். சோ, கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்களைப் போட்டிருக்கிறேன் என்று சொன்னதும், என் ரேட்டிங் ரொம்ப உயர்ந்து போய்விட்டது. காரணம் சுப்புடுவின் அபிமானம் மிக்க கலைஞர்கள் அவர்கள்!

டில்லி சௌத் இந்தியன் தியேட்டர் நாடகங்களை சுப்புடு தான் டைரக்ட் செய்வார். தியேட்டர் நண்பர்களிடம் ’ஆஹா ஓஹோ’ என்று என்னை அறிமுகம் செய்து வைத்ததுடன் நாடகத்தில் ஒரு நகைச்சுவை கதா பாத்திரத்தையும் கொடுத்தார். சௌத் இந்தியன் தியேட்டர் மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள், டில்லி கணேஷ், விமல் பாலு, டில்லி குமார், பாரதி மணி,, டி.டி. சுந்தரராஜன், ஆடிட்டர் கிருஷ்ணகுமார் ( பின்னால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஸ்டேட் மினிஸ்டர் ஆனவர் இவர்) என்று பலர். பின்னால் “பணம் பேசுகிற்து” என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகத்தை அவர் டைரக்ட் செய்தார்; சௌத் இந்தியன் தியேட்டர் மேடை ஏற்றியது

சுப்புடு அவ்வப்போது "ஏன்யா இவரைப் பற்றி எழுதேன், அவரைப் பற்றி எழுதேன்" என்பார். சிலவற்றில் தாட்சிண்யம் லேசாக இருக்கும். தாட்சிண்யத்துக்கு எழுத எனக்குப் பிடிக்காது. மேலும் குமுதம் எஸ்.ஏ.பி.அவர்களின் கூர்ந்த அறிவுத்திறன் எப்படியாவது கண்டுபிடித்துவிடும். என்பது மட்டுமல்ல, அத்துடன் எனக்குப் பெரிதாக ஒரு "வணக்கம்" போட்டு விடுவார் என்பதும் தெரியும். இருந்தாலும் பல நல்ல ஆலோசனைகளை சுப்புடு எனக்குச் சொல்லியிருக்கிறார். பல சமயங்களில் எனக்குப் பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

சுப்புடுவுக்கு கர்நாடக இசையின் மேல் அபார ஈடுபாடு உண்டு. கர்நாடக இசையில் நான் பெரிய பூஜ்யம் (இன்னும் பலவற்றிலும் பூஜ்யம்தான். அதை எல்லாம் விவரித்தால் கட்டுரை திசை மாறிவிடும்.) நான் பூஜ்யம் என்று தெரிந்தும் என்னிடம் அவர் மணிக்கணக்கில் பேசி இருக்கிறார். புரியாவிட்டாலும் நான் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

டில்லியில் என் அலுவலகத்தின் பின்பக்கக் கட்டடம் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் அலுவலகம். அங்கு தான் பிரபல யு. என். ஐ. கேன்டீன் இருந்தது. தினந்தோறும் அங்கு சுப்புடு வருவார். சுற்றி 10 , 15 பேர் நின்றுகொண்டு அவருடன் அரட்டை அடிப்போம். கலகலப்புக்குக் குறைவே இருக்காது. சென்னையிலிருந்து வரும் கலைஞர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். மணி இரண்டு ஆனதும் சபை கலையும். என்னிடம் "வாய்யா ... சர்தார் படேல் சிலைக்குக் கீழ் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்" என்பார்.

பார்லிமென்ட் வீதியில் சர்தார் படேல் சிலை இருக்குமிடம் ஒரு பெரிய டிராபிக் ஐலண்ட்.. அதன் பீடத்தில், உட்கார வசதியாக மேடைகள் உண்டு. அதில் சுப்புடுவும் நானும் உட்கார்ந்து கொண்டு (”அரே பைய்யா , பசாஸ் பைஸேகோ மூங்க்பலீ தே தோ” என்று கூப்பிட்டு வேர்க்கடலை வாங்குவார்.) வேர்க்கடலையோடு சேர்த்து, பல இசைக் கலைஞர்களையும் டில்லி பிரமுகர்களையும் 10,20 நிமிஷங்கள் மெல்லுவோம். சுமார் 15 வருஷம் அரட்டை விவர்ங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை!

இந்த காலகட்டத்தில் அவர் சென்னைக்கு டிசம்பர் சீசனில் வந்து விமரிசனங்கள் எழுத ஆரம்பித்தார். விகடனிலும் எழுதினார்.

குமுதத்தில் தன் பெயர் வரவேண்டும், தன் படம் வரவேண்டும் தன்னைப் பற்றி ஒரு குறிப்பாவது வரவேண்டும் என்ற பேரவா அவருக்கு உண்டு. எல்லாவற்றிற்கு மேலும் எஸ்.ஏ.பி அவர்களைப் பார்த்துப் பேசவும் பயங்கர ஆசை. (நான் சென்னை வந்தபோதெல்லாம் எஸ் ஏ. பி அவர்களைப் பார்த்துவிட்டுப் போவேன். அந்த சந்திப்பைப் பற்றிய விவரங்களை அவ்ரிடம் சொல்வதுண்டு.) பின்னால் அவர் படம், கட்டுரை எல்லாம் குமுத்தில் வந்தன.

ஒரு சமயம் டிசம்பரில் அவர் சென்னை வந்த சமயம் நானும் சென்னை வந்திருந்தேன்.. "சுப்புடுவைக் கதிருக்கு எழுதச் சொல்லுங்களேன்" என்றார் சாவி.

”ஏற்கனவே விகடனில் எழுதுகிறார். கதிரிலும் எழுதுவது சரியாக இருக்காது. என்பார். கச்சேரிகளின் ஹைலைட்ஸ்களை துணுக்காக எழுதச் சொல்லலாம் விமரிசனங்களாக எழுதினால் சில சமயம் மிக மிக நீண்ட கட்டுரைகளாக எழுதி விடுகிறார்” என்றேன். “ நீங்களே அவரைக் கேட்டு எழுதி விடுங்களேன்” என்று சாவி சொன்னார். சுப்புடு டில்லி திரும்பியதும் அவர் சொன்ன தகவல்களை எழுதி அனுப்பினேன். யார் பெயரும் போடாமல் கட்டுரைகள் பிரசுரமாயின. அவைகளுக்கு நல்ல வரவேற்பு. கிடைத்தது.

பின்னால் சாவி அவரை முழுமையாகக் கபளீகரம் செய்து கொண்டார். கதிரில் அவரே எழுதினார். டில்லியிலிருந்து கட்டுரைகளை அனுப்புமுன் எனக்குக் காட்டுவார். ஏதாவது திருத்தம் சொன்னால் “நீயே அதை எழுதி விடு: என்பார்.(ஏதோ சுப்புடுவுக்காக நான்தான் விமரிசன்ம் எழுதினேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். என் பங்கு ஒரு விழுக்காடு தான்!)

ஹார்மோனியம் வாசிப்பதில் அவர் மன்னன். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். யார் வெளிநாடு போனாலும் “ யமஹா கீ போர்ட் வாங்கி வரும்படி கேட்பார். அந்த காலத்தில் வாங்கி வருவது சற்று கஷ்டமான் காரியம். டாலர் பஞ்சம். கஸ்டம்ஸ் கெடுபிடி. ஆகவே எல்லாரும் சாக்லேட்தான் வாங்கி வருவார்கள். அவர் காலமாவதற்குச் சில வருஷங்களுக்கு முன்பு ஒன்றை வாங்கி விட்டார்.

* * * * * *
அவர் நோய்வாய்ப் பட்டிருந்த சமயம். ஏதோ ஒரு பத்திரிகையில் சுப்புடுவின் உடல் நிலை பற்றி செய்தி வந்திருந்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள், செய்தியைப் பார்த்தும், சுப்புடுவைப் பார்க்க அவர் வீட்டுக்கே போய் விட்டார். காலனிவாசிகளுக்கு ஒரே வியப்பு!

கலாமிடம் சுப்புடு சொன்னாரம்:”நீங்கள் என்னை வந்து பார்த்ததுக்கு மிக்க நனறி... உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். நான் காலமானதும். ராஷ்டிரபதி பவன் மொகல் கார்டனிலிருந்து ஒரு ரோஜாப்பூவை எடுத்து வந்து என் உடல் மீது நீங்கள் வைக்க வேண்டும்.”

அதன்படியே, சுப்புடு காலமானத் தகவல் கிடைத்தும், கலாம் அவர்கள் ரோஜாப் பூவுடன் வந்தார்.

சந்தேகமில்லாமல் சுப்புடு ஒரு அசாதாரண விமரிசகர்தான்!
சந்தேகமில்லாமல் கலாம் அவர்கள் ஒரு அசாதாரண குடியரசுத் தலவர்தான்!

சந்தேகமில்லாமல் இட்லிவடை அதிர்ஷ்டம் செய்த வலைப்பதிவு தான்!

கடுகு வலைப்பதிவு முகவரி

Read More...