பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 29, 2009

தொடரும் நிதி நிறுவன மோசடிகள்

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது முதல், முதலீடுகள் செய்வது வரை கவர்ச்சித் திட்டங்களையும், விளம்பரங்களையும் நம்பி மோசம் போவது என்பது தமிழக மக்களுக்குப் புதிதல்ல. கடந்த ஒருவார காலமாக, நிதி நிறுவன மோசடிகள் மீடியாக்களில் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு பல நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் போட்டி போட்டுக் கொண்டு புற்றீசல் போல் கிளம்பின. தனியார் தொலைக்காட்சிகளில் விதம் விதமான அறிவிப்புகள், விளம்பரங்கள்!! 35% வட்டி மற்றும் 10% ஊக்கத் தொகை, இரு ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பு மற்றும் ஐந்து ஆண்டுகளில் பல ஏக்கர் தேக்குமரத் தோட்டங்கள் என்று இவ்வாறான கவர்ச்சி அறிவிப்புகளின் பட்டியல் மிக நீளம். கவர்ச்சி விளம்பரங்களையே நம்பி ஏமாறும் நமது மக்கள் புற்றீசல் போலப் புறப்பட்ட இந்நிறுவனங்களில், விட்டில் பூச்சிகள் போல், முன் யோசனைகள் ஏதுமின்றி சம்பாதித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தனர். ஆனால் கண்ட பலன் பூஜ்யம். காவல்துறையினரிடம் முதலிழந்ததை புகார்களாக அளிக்க நாயாக அலைந்ததுதான் கண்ட பலன். அவர்கள் இழந்த பணத்திற்கு என்ன கதி என்பது இன்று வரை மர்மம்தான்.இவ்வாறான மோசடிகள் சமீபகாலமாகக் குறைந்திருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் மூன்று மிகப்பெரிய மோசடிகள் நிகழ்ந்தேறியுள்ளன. இதில் முதன்மையானது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "சிட்டி க்ரூப்" நிறுவனம் தொடர்பானது. பல ஆண்டுகளாக, மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகக் கூறப்படும் இந்நிறுவனம்தான் இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சுமார் பத்தாயிரம் முதலீட்டாளர்களிடம், பல நூறு கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்நிறுவனம் ஒரு "ISO 9001" தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம். தவிர, இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஆந்திர அரசின் முத்திரையிடப்பட்ட பத்திரங்களை முதலீட்டிற்கான அத்தாட்சியாக வழங்கியுள்ளது. அதை நம்பித்தான் முதலீடு செய்ததாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக, பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரு சங்கம் அமைத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தவிர, வெளி மாநிலத்திலிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் சென்னையில், காவல் துறையினர் "சிறப்பு கெளன்டர்கள்" அமைத்து புகார்களை வாங்குகின்றனர்.

அடுத்த இரு மோசடிகள் மிகவும் வேதனையான அதே சமயத்தில் வேடிக்கையானவை. திருப்பூர் மற்றும் திருச்சியைச் சேர்ந்த இருவேறு நிதி நிறுவனங்கள் ஒரே மாதிரியான மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், இரண்டே மாதத்தில் நான்கு லட்சமாகத் திருப்பித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர். அதாவது, முதல் ஆறு வாரத்திற்கு ஒவ்வொரு வாரமும், ஐம்பதாயிரம் வீதமும், இரண்டாவது மாத முடிவில் முதலீடு செய்த ஒரு லட்சத்தைத் திருப்பித் தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளனர். ஓரிருவருக்கு வாக்குறுதிப்படி பணமும் கொடுத்துள்ளனர். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். ஏனையோருக்கு பின் தேதியிட்ட காசோலைகளாகக் கொடுத்துள்ளனர். இவ்வாறான காசோலைகள் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்தை அணுகியபோது, நிறுவனம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஏமாந்த முதலீட்டாளர்கள் இப்பொழுது காவல் நிலையத்திற்கு படையெடுத்துள்ளனர். ஒரு லட்சத்தை எவ்வாறு இரண்டே மாதத்தில் நான்கு மடங்காகத் திருப்பித் தருவார்கள்?? அதற்காக அவர்கள் செய்யும் முதலீடுகள் என்ன? அவற்றிற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது பற்றி மக்கள் ஏனோ சிந்திக்கவில்லை. இது மாதிரியான மக்களின் மனப்போக்குதான் இவ்வாறான மோசடி நிறுவனங்களின் முதலீடே!!

ஆசையே அழிவிற்குக் காரணம் என்பது புத்த பெருமானின் வாக்கு; பேராசை பெரு நட்டம் என்பது நமது சொல் வழக்கு. நமது அரசாங்கத்தால் நடத்தப்படும் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தெருவிற்குத் தெரு இருப்பினும், முன்பின் தெரியாத, திடீரென்று முளைத்த நிதி நிறுவனங்களிடம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழப்பது நம்மவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. அரசாங்க வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பினும், கேட்ட மாத்திரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும். தவிர, முதலுக்கும் பாதுகாப்பு. இவ்வளவு மோசடி அனுபவங்களுக்குப் பிறகும் மக்கள் ஏன் இன்னும் இதனை உணரவில்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது. ஏமாந்த முதலீட்டாளர்களை தொலைக்காட்சியில் காணும் பொழுது மெத்தப் படித்தவர்களாகத்தான் தெரிகிறது. இவர்கள் ஏன் சிந்திக்கத் தவறுகின்றனர்?? கிராமப் புறங்களில் வாழும் படிப்பறிவில்லாத பாமரர்கள் கூட தபால் அலுவலகங்களையே தமது சேமிப்பிற்கு நாடுகின்றனர். இவ்வாறான கவர்ச்சி வலையில் பெரும்பாலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வதில்லை.


ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு போன்றவை நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் விதித்திருந்தும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் எவ்வாறு நினைத்த மாத்திரத்தில் கிளம்புகின்றன என்று விந்தையாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, " எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா; ரொம்ப நல்லவன் போலருக்கு!" என்று நிதி நிறுவனங்கள் மக்களைப் பார்த்து நினைப்பதாகவே தோன்றுகிறது. இனியாவது மக்கள் பாடம் கற்பார்களா??

படம்: லாபத் தொகை நிறுத்தப்பட்டதால் முதலீட்டாளர்கள், சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள "சிட்டிலிமோஸின்ஸ்'' நிறுவனத்தை முற்றுகையிட்டனர். சமாதானப்படுத்தி பார்த்தது காவல் துறை ஆனால் கூட்டத்தினர் கலைந்து போகவில்லை. இதனால் லேசான தடி-அடி நடத்தி கூட்டத்தினரை போலீசார் கலைத்தார்கள்.

12 Comments:

கௌதமன் said...

அதிகமா ஆசை படுற முதலீட்டாளரும் - அதிக ஆசை காட்டும் நிதி நிறுவனமும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல !
இது இந்த சடையப்பா பன்ச்.

Rahul said...

/**ஆசையே அழிவிற்குக் காரணம் என்பது புத்த பெருமானின் வாக்கு; பேராசை பெரு நட்டம் என்பது நமது சொல் வழக்கு.
ஏமாந்த முதலீட்டாளர்களை தொலைக்காட்சியில் காணும் பொழுது மெத்தப் படித்தவர்களாகத்தான் தெரிகிறது. இவர்கள் ஏன் சிந்திக்கத் தவறுகின்றனர்??**/


உடல் உழைப்பில்லாமல் பணம் இரட்டிப்பாக வேண்டும் என்பது தான் காரணம், அவ்வாறு நினைப்பவர்கள் உப்பு தின்பவர்கள் வேறு வழியே இல்லை தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். ஆசை துன்பத்திற்கு காரணம், பேராசை பெருந்துன்பத்திற்கு காரணம். பங்கு சந்தையில் பணம் இழந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருப்பதில்லை ஏனெனில் தெரிந்து தான் குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள், பிறகென்ன நஸ்டம் வந்தால் அனுபவிக்க வேண்டியது தான்.படித்தவன் தான் எப்போதும் தவறு செய்வான், ஏனெனில் நாம் கற்றது வெறும் ஏட்டு சுரைக்காய்!!

கௌதமன் said...

நிதி இரண்டெழுத்து
விதி இரண்டெழுத்து
சதி இரண்டெழுத்து
காசு இரண்டெழுத்து
மாசு இரண்டெழுத்து
லூசு இரண்டெழுத்து
சம்பந்தப் படாத இரண்டேழுத்துகள்
இரண்டு உண்டு - அவை
நீதி மற்றும் மதி (மலையாள மதியும் சேர்த்துத்தான்!)

Rahul said...

படம் அருமையான தேர்வு!!! எவ்வளவுதான் பேசினாலும் கொஞ்சம் கலங்கச் செய்கிறது, அந்த அம்மையார் கீழே விழும் காட்சி.

R.Gopi said...

கௌதமன் சாரோட சடையப்பா பன்ச் நல்லா இருக்கு...

அதிகமா ஆசைப்படற தொழிலாளியும்
அதிக ஆசை காட்டும் முதலாளியும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல !

இது லேட்டஸ்ட் "வடையாப்பா" பன்ச்....

butterfly Surya said...

இவையெல்லாம் பேராசையுடன் இருப்பவர்களே வேண்டுமென்று தெரிந்தே செய்யும் தவறுகள் தான். இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது.

முறையற்ற வருமானம் மற்றும் லஞ்ச பணங்கள் இது போன்று கம்பெனிகளில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது.

முதலீட்டாளர்கள் பேராசை உள்ளவரை இன்னும் ஆயிரம் கம்பெனிகள் வரும். விழும்.


அப்போதும் புத்தி வராது.

Unknown said...

//அதிகமா ஆசை படுற முதலீட்டாளரும் - அதிக ஆசை காட்டும் நிதி நிறுவனமும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல !
//

அதிகமா பன்ச் டயலாம் பேசுற நடிகரையும் அதிக தத்துவம் பேசுற நடிகரையும் நம்புனவுங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல !

வலைஞன் said...

யாராவது 12%(வருடம்) க்கு மேல் வட்டி கொடுப்பதாக சொன்னால் அது fraud.நம்பாதீர்கள்.

Sivakumar said...

இது போன்ற நிதி நிறுவனங்கள் திமுக ஆட்சியின் போது
தான் தங்கள் கைவரிசையைக் காட்டி பொதுமக்களை
நிர்கதியில் ஆழ்த்துகின்றன.
சென்ற முறையும் இதே போன்று திமுக ஆட்சியில் தான்
நிதி நிறுவனங்கள் மூடின.
இப்போதும் அதே நிலைமை.....
எங்கேயோ இடிக்கிறதே!!!!

Erode Nagaraj... said...

//அதிகமா பன்ச் டயலாம் பேசுற நடிகரையும் அதிக தத்துவம் பேசுற நடிகரையும் நம்புனவுங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல !//

:) :) :) :) :)

Rahul said...

/***jaisankar jaganathan said...
//அதிகமா ஆசை படுற முதலீட்டாளரும் - அதிக ஆசை காட்டும் நிதி நிறுவனமும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல !
//

அதிகமா பன்ச் டயலாம் பேசுற நடிகரையும் அதிக தத்துவம் பேசுற நடிகரையும் நம்புனவுங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல !***/

Why should i beleive the actors??? we have to recognize their art not them.

SUBBU said...

ஆசையே அழிவிற்குக் காரணம்