பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 25, 2009

மாணிக்க வீணை ஏந்தும்...

'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்' - அருமையான வீணை இசைப்பாடல்! கலைமாமணி K.சோமு எழுதி, இசையமைத்து, பி. சுசீலா அவர்களின் தேன்குரலில் மோகன ராகத்தில் உருவான பாடல். 'கலைவாணி நின் கருணை தேன் மழையே' - இதுவும் பி. சுசீலா பாடிய இன்னொரு இசைப்பாடல். சரஸ்வதி பூஜையின் விடியற்காலை பொழுதை இத்தைகைய செந்தமிழ் பக்திஇசை பாடல்களோடு துவக்குவோம்.


படிக்கும் புத்தகங்களை அடுக்கிவைத்து, குழந்தைகளுக்கு கல்வியின் பெருமைகளை
விளக்கும் உயரிய பண்பாடும், முதல் முதலாய் பள்ளி செல்லும்போது, ஆசிரியரின்
பாதங்களை தொட்டு வணங்கும் குரு பக்தியும் வேறு எங்காவது இருக்கிறதா?

சரஸ்வதி விளக்கம் :
சரஸ் என்றால் நீரோடை என்று பொருள். அடியவரின் மனம் என்ற தெளிந்த நீரோடையில் வசிப்பவள் என்ற பொருளில் சரஸ்வதி என்றனர். இதற்கு முந்தைய நாமம் சர்வமோகினி என்று போற்றுகிறது. அனைவரையும் மயக்குபவள் என்பது அதன் பொருள்.
அந்த மோகினியின் பிடியிலிருந்து விடுபட்டு, எப்படி அம்பிகையை அறிவது? அவளே அறிவுத் தெளிவை அளிக்கும் சரஸ்வதியாக விளங்குகிறாள்.

கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர். சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள். தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர் (டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும், சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள் இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம், மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது. நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர். அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள். இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள். மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி, தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில் பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.

கலைவாணி திருக்கோவில், கூத்தனூர் திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு ஸ்ரீஹரிநாகேஸ்வரர் என்பது திருநாமம். இதுபற்றியே இவ்வூரும் ஹரிநாகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது.

அமைதி தவழும் சூழல்தான் தவமேற்கொள்ளத் தகுந்த இடம். அத்தகைய அமைதி நிறைந்தது இவ்வூர். எனவேதான் கலைமகளும் தான் தவம் மேற்கொள்ள இவ்வூரைத் தேர்ந்தெடுத்தாள். அவ்வாறு கலைமகள் நித்ய வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த காரணத்தால் இது அம்பாள்புரி என்றும் அதுவும் மருவி அம்பாபுரி என்றும் வழங்கப்படலாயிற்று.
பின்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழமன்னன் இரண்டாம் இராச இராசன் தன் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரைப் பாராட்டி அம்பாபுரியைப் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். அன்று முதல் இவ்வூர் கூத்தனின் ஊராகி 'கூத்தனூர்' என்றழைக்கப் படலாயிற்று.

கலைமகளுக்கென்று அமைந்த ஒரே ஒரு கோயில் தமிழகத்திலுள்ள இந்த கூத்தனூர்க் கோயில் ஒன்றே. தனியாக இராஜ கோபுரம் என்று ஒன்று கிடையாது. பெரிய மதில்களுடன் ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இக்கோயில். பலிபீடத்தின் முன்னே சரஸ்வதியை நோக்கி அன்னம் உள்ளது.

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் படம் - பதிவுடன்.

சரஸ்வதி பூஜை - உங்கள் சிந்தனைக்கு

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சரஸ்வதி பூஜையை வருடந்தோறும் கொண்டாடுகிறோம். ஆனால், பஸ்சிலும், ஆட்டோக்களிலும் பொதிமூட்டை சுமந்தபடி பள்ளி செல்லும் குழந்தைகள், ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு, பிஞ்சு மனங்களை நசுக்கும் பெற்றோர், மதிப்பெண்களை வைத்து மாணவர்களை எடை போடும் கல்வி முறை.. இவை எதுவும் மாறுவதாய் தெரியவில்லை.

தனியார் பள்ளிக்களில் பணத்தை கொட்டி படிப்பதுதான் நல்லகல்வி என்னும் மடத்தனம் அதிகரித்துவருகிறது. அரசுபள்ளியில், தமிழ்வழி கல்வி முடித்து சாதித்தவர்கள் ஐ.டி. உட்பட எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். எங்கு படிக்கிறோம் என்பதைவிட, எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை மக்கள் என்றைக்கு உணரப்போகிறார்கள்??
கல்வி நிலையங்கள் இன்று பணம் கொழிக்கும் வியாபார நிலையங்கள். ரவுடிகள், குண்டர்கள் எல்லாம் இன்றைய தேதியில் கல்வி தந்தைகள். தன்னிடம் டியூஷன் வராத ஏழை மாணவனை பெயில் ஆக்கிய ஆசிரியர்களை நான் பார்த்துஇருக்கிறேன். மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை பற்றிய செய்திகள் நாள்தோறும் வருகின்றன. இதையெல்லம் பார்க்கும்போது எங்கோ படித்த ஒரு கவிதை என்
நினைவுக்கு வருகிறது. "சரஸ்வதியின் கையில் உள்ள வீணையை பிடுங்கி, அதற்குபதில் அவள் கையில் கொள்ளிகட்டையை கொடுத்துவிட்டோம்".

சரஸ்வதி பூஜைக்கு செய்தி சொல்ல மகாகவி பாரதியை அழைக்கிறேன்.

இன்னரும்கனிச்சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம்ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதினாயிரம்நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும்புண்ணியம்கோடி
ஆங்கோர்ஏழைக்குஎழுத்துஅறிவித்தல்

-இன்பா

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே


வாசக நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நலவாழ்த்துக்கள்.


13 Comments:

Unknown said...

சகலகலாவல்லி மாலை பத்தி எழுதலியா

Kasu Sobhana said...

சனிப் பெயர்ச்சி + பண்டிகைகள் எல்லாமும் இட்லி வடைக்கு
சாதகமாக அமையவும், எழுநூறு தாண்டிய ருசிகர்கள் எண்ணிக்கை விரைவில் ஆயிரம் ஆகவேண்டும் என்றும் 'எங்கள்' வாழ்த்துக்கள் உரித்தாகுக!
engalblog.

cho visiri said...

Sirappu Vidumurai Vazhththukkall endru koorinaal podhadha?

Anonymous said...

very nice post

thanks IV and Inba

Anonymous said...

Not able to read posts in Google Reader. Please do the needful.

Festival greetings on Saraswathi Pujai / Vijayadasami eve.

Mahesh

Anonymous said...

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நலவாழ்த்துக்கள்.

மானஸ்தன் said...

மிக நல்ல பதிவிற்கு நன்றி திரு இன்பா. கலைமகள் உங்களின் நல் எழுத்துப் பணி தொடர நிச்சயம் அருள் புரிவாள்.

@Jaishankar
என்னப்பா! உம்மை ரொம்ப நாளா ஆளையே காணும்? திருச்சில இடி மின்னலோட மழைன்னு பேசிக்கறாங்க? நாட்டு நிலவரம் எப்படி உள்ளது? நலம்தானே?

Anonymous said...

Athiravi, Nellai.

There is a temple in Tirunelveli Town, exclusively for SARASWATHY.

This temple is just opposite to Kanthimanthi (Nellaiyappar) koil and in front of Amman Sannathy.

Please visit that temple also whenever you go to Nellaiappar temple.


ATHIRAVI

Anonymous said...

Ravivarma's Painting is awesome and charming

Blackscorpion said...

அனைத்து இட்லிவடை வாடிக்கையாளர்களுக்கும்,
இனிய விடுமுறை தின (!)நல்வாழ்த்துகள்....
:)) :))

Unknown said...

//நாட்டு நிலவரம் எப்படி உள்ளது? நலம்தானே?
//

இல்லை. எனக்கு கல்யானம் ஆயிடுச்சு .

R.Gopi said...

நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்...

//jaisankar jaganathan said...
//நாட்டு நிலவரம் எப்படி உள்ளது? நலம்தானே?//

இல்லை. எனக்கு கல்யானம் ஆயிடுச்சு .//

யப்பா... லொள்ளுல லொள்ளு, இது பெரிய லொள்ளுடா சாமி....

கௌதமன் said...

Gopi,
Jaisankar Jaganathan + Lollu = Jollu + ?????