கல்கி 13.9.09 இதழில் இரா.முருகன் கமலுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு, அனுபவம்... பற்றி எழுதியிருந்தார். அந்த கட்டுரையை இட்லிவடையில் போட விருப்பம் என்று கேட்டிருந்தேன் அனுப்ப முடியுமா ? என்று கேட்டிருந்தேன். உடனே அனுப்பிவிட்டார். அவருக்கு என் நன்றி.
கட்டுரை கீழே
வாழ்க்கையின் சுவாரசியமான முரண்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பேரிழப்பு. ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருக்கும் அரங்கில் விளக்குகள் அணைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. நான் அரங்கின் திரைக்கு அந்தப் பக்கமாக ஒரு நாற்காலியில். தமிழ் இலக்கிய, திரையுலகங்களில் இருந்து பிரமுகர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் வெறும் இலக்கிய முகம் மட்டும் கொண்ட நான் நாலு வார்த்தை பேசக் காத்திருக்கிறேன். அமரர் சுஜாதாவைப் பற்றி நாலு வார்த்தையில் என்ன பகிர்ந்து கொள்வது? சுஜாதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் மாபெரும் கூட்டம் அது.
கிரேஸி மோகன் உள்ளே வந்து என் அருகில் அமர்கிறார். நான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். அவரோடு அந்த நிமிடம் ஆரம்பமான ஆழ்ந்த நட்பு பற்றித் தனியாக இன்னொரு அத்தியாயம் எழுதலாம். கிரேஸியைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவரைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.
முழுக்கை கருப்புச் சட்டை, நீல ஜீன்ஸ், முகத்தை கிட்டத்தட்ட முழுக்க மறைத்த தேன்கூடு தாடி. அதையெல்லாம் மீறி, பளிச்சென்று தீட்சண்யமாக ஒளிரும் விழிகள். அடக்கமான, அழுத்தமான குரல். மோகன் கிசுகிசுவென்று அறிமுகப்படுத்த, அவர் என் கையைப் பற்றிக் குலுக்குகிறார். ‘நான் கமலஹாசன்’.
நான் தாடியைக் கவனிப்பதை அறிந்தவர்போல், ‘இது மர்மயோகிக்காக’ என்கிறார். என்ன கதை என்று கேட்கலாமா? போன நிமிடம் அறிமுகமான மிகப் பிரபல கலைஞரிடம் அவ்வளவு உரிமையோடு கேட்க எனக்குத் தயக்கம்.
நண்பர் டைரக்டர் வசந்த் உள்ளே வந்து கமலைப் பேச அழைக்கிறார். ‘மர்மயோகியில் நீங்களும் பங்கு பெறணும்’. ஒரு வினாடி அந்தக் கண்கள் சிரிக்கின்றன. திரும்பவும் அவை ஒளிர மேடைக்கு அவர் நடக்கிறார். அந்த நிமிடத்தில் இருந்து அவரைத் தொடர்ந்து நடக்கிறதில் எனக்குப் பெருமைதான்.
அந்த ஞாயிற்றுக்கிழமை பகல். அவர் அலுவலகத்தில் ஹோம் தியேட்டர் பகுதிக்கு என்னை அழைத்துப் போகிறார். ‘இது மருதநாயகம் டிரைலர்’. மர்மயோகியா மருதநாயகமா? மருதநாயகம் தான். ‘இதுவும் சீக்கிரம் பயன்படும்’. அவர் கண்கள் சுருக்கமாக சிரிக்கின்றன. லேப் டாப் கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலைத் திறக்கிறார்.
‘மர்மயோகி முழு ஸ்கிரிப்ட். வெர்ஷன் மூணு’.
அவசரமாகப் படிக்க முற்படுகிறேன். மணலூர், பாண்டிய மன்னன், சமணர்கள், கழுமரம் என்று அங்கங்கே கண்ணில் தட்டுப்படும் வார்த்தைகள் மனதை இழுத்துப் பிடிக்கின்றன. ‘சரித்திரப் படம்’. அவர் சொல்கிறார். ‘பிற்காலச் சோழர்களுக்கு முன்பா, பின்பா?’ நான் ராஜராஜசோழனை மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறேன். கி.பி 975க்கு முற்பட்ட சரித்திரம் என்றால் சான்றும் ஆதாரமும் வேணுமே.
‘ஆமா, வேணும்’. என்னைக் கூர்ந்து பார்க்கிறார் கமல். ‘நிறைய ஆய்வு நடத்தியிருக்கேன். களப்பிரர் காலம். வேள்விக்குடி செப்பேடுகள் தெரியுமா?’
மூன்றாம், நான்காம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் இருண்ட பகுதியாகச் சித்தரிக்கப் படுகிற ஒன்று. தமிழகத்தைத் தமிழர் இல்லாத யாரோ பிறர் ஆண்ட களப்பிரர் காலம் அது. அதை வைத்து என்ன ஆராய்ச்சி?
அடுத்த நிமிடம் கமல் என்ற கலைஞர் அங்கே காணாமல் போக, ஒரு சரித்திர ஆய்வாளர் என்முன் தேன்கூட்டுத் தாடியோடு உட்கார்ந்திருக்கிறார். இருண்ட அந்தக் களப்பிரர் காலமும், கதாபாத்திரங்களும் கமல் குரலில் மெல்ல எழுந்து அறை முழுக்கப் பரவ இடமே நிறைந்து நிற்கிற பிரமை. அவர் எனக்காக சிருஷ்டித்த வெர்ச்சுவல் ரியலிட்டி அது.
ஆற்றொழுக்கான ஆங்கில நடையிலும் நல்ல தமிழிலும் அவர் சொல்லிப் போக நான் வினாடிக்கு வினாடி வெவ்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் அவர் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘History is the journal of victors till questioned’. போகிற போக்கில் உதிர்க்கிற அந்த வாக்கியத்தின் அழுத்தத்தில் அமிழும் முன்னால் இன்னொரு துண்டுப் படத்தை ஓட விடுகிறார். பரீட்சார்த்த முறையில் மர்மயோகிக்காக எடுத்த காட்சி அது. படகுத் துறை. நகரும் படகு.
‘சந்தனம் ஏத்திப் போகணுமா? கூலி அதிகமாகுமே’. படகுக்காரன் சொல்கிறான்.
‘கூலி பாரசீக வார்த்தை இல்லையோ?’ எனக்கு நியாயமாகப் பட்ட சந்தேகத்தைக் முந்திரிக்கொட்டையாகக் கிளப்புகிறேன்.
‘திருக்குறள் எந்த நூற்றாண்டு?’ அவர் திரும்பக் கேட்கிறார். ராக்கெட் அறிவியல் கூடத் தெரிந்து கொண்டுவிடலாம். திருக்குறள் காலத்தை எப்படி ஆராய்ச்சி செய்ய? ‘அது களப்பிரர் காலத்தை ஒட்டியது’. கமல் சரித்திரப் பேராசிரியராக காரணங்களை அடுக்கிப் போகிறார். ‘கூலி?’ நான் நினைவூட்டுகிறேன். ‘ஞாபகம் இருக்கு’ அவர் அழுத்தமாகச் சொல்லிவிட்டு’தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்’ என்று சட்டென்று குறள் சொல்கிறார். அந்தக் கண்கள் இன்னொரு முறை சிரிக்கின்றன. ‘குறள்லேயே கூலி இருக்கே’.
அடுத்த சில மாதங்கள் மர்மயோகி திரைக்கதையை செப்பனிட்டு அங்கங்கே திருத்தி, மாற்றி எழுதி அவர் பத்தாவது டிராப்ட் வரை வந்து விட்டார். என் லேப் டாப்பிலும் அவர் உபயோகிக்கும் சாப்ட்வேர் குடியேற, எழுதினதை உடனுக்குடன் படிக்க, அங்கங்கே சின்னச் சின்னதாக உதவ காலம் நகர்கிறது. ஈ-மெயிலிலும், தொலைபேசியிலும், நேரில் சந்திக்கும் வார இறுதி நாட்களிலும் ஒர் ஆசானாக எனக்கு திரைக்கதை என்ற மாயவித்தையைக் கற்பிக்கிறார். இந்த வடிவம் எனக்குப் பழக்கமான நாவல், சிறுகதை, கவிதை எல்லாம் கலந்த ஒன்று. அதையெல்லாம் கடந்த வித்தியாசமான படைப்பு உருவாக்கக் கை கொடுப்பது.
மர்மயோகி கொஞ்சம் பொறுத்து வரட்டும் என்று முடிவாகிறது. அதற்குள் இன்னும் இரண்டு திரைக்கதை முழு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார் கமல். அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் கூடச் செல்ல மூச்சு முட்டுகிறது. ஆனாலும் முயற்சி செய்கிறேன்.
ஒரு சாயங்கால நேரத்தில் மொபைல் ஒலிக்கிறது. அவர்தான்.
‘எ வெண்ட்ஸ்டே இந்திப் படம் பார்த்துட்டீங்களா?’
அவரோடு அமர்ந்து பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. நசிருதீன் ஷா, அனுபம் கெர் ஆகிய அற்புதமான கலைஞர்களின் அழுத்தமான நடிப்பில் உருவான ஆர்ப்பாட்டம் இல்லாத படம். இதை எதற்கு என்னைப் பார்க்கச் சொல்கிறார்?
‘இந்தப் படத்தை தமிழ்லே எடுக்கறோம். நீங்க தான் வசன கர்த்தா’.
ஒரு நிமிடம் வாயில் வார்த்தை வராமல் தடுமாறுகிறேன். அந்தக் கண்கள் மறுபடி சிரிக்கின்றன.
‘தமிழ்ச் சூழல், தமிழகச் சூழல். பொதுவான இந்தியச் சூழல். எல்லாம் தெளிவாக இருக்கணும். கதையை அதுக்கு ஏத்த மாதிரி மாத்தி அமைக்க வேண்டியிருக்கு. அப்படியே தெலுங்கு வெர்ஷனும் தயாராகணும்’
தயாராகிறது. மோகன்லால் முதல்தடவையாகக் கமலோடு இணைந்து நடிக்கிறார் என்ற அடுத்த செய்தி பரபரப்பை அதிகமாக்குகிறது. தெலுங்கில் அதே பாத்திரத்தை வெங்கடேஷ் செய்கிறார் என்பது அடுத்த செய்தி.
‘இது ஒரு குறுகிய காலத் தயாரிப்பு. ரெண்டே மாசத்துலே முழுப் படமும் முடிச்சாகணும்’.
என்னிடமும் டைரக்டர் சக்ரியிடமும் அவர் சொல்ல அது எப்படி முடியும் என்கிறதுபோல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். ‘முடிச்சுடலாம். திட்டமிட்டு செயல்பட்டா ஒரு கஷ்டமும் இல்லே. ஐ வில் டேக் கேர்’. கமல் அபயம் தருகிறார். சட்டென்று ஒரு நம்பிக்கை அலையாகப் பரவுகிறது.
அடுத்த பதினைந்து நாட்களில் மும்முரமாக ‘வெண்ட்ஸ்டே’யின் தமிழ், ஸ்கிரிப்ட் உருவாகிறது. தினமும் நீண்ட உரையாடல்கள். காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள் பற்றிய சர்ச்சைகள். கமல் என்ற பன்முகத் தோற்றம் கொண்ட மாபெரும் கலைஞனின் ஆளுமை மெய்மறக்க வைக்கிறது. ஒவ்வொரு பாத்திரமாகவும் உருமாறி கான்பரன்ஸ் அறை வட்ட மேஜையில் வசனங்களுக்கு உயிர் கொடுக்கிறார். நிற்பதும் நடப்பதும் பணிவதும் மிரட்டுவதும் பயப்படுவதும் பயப்படுத்துவதுமான அந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. மூலக் கதையோடு கொஞ்சம் போல் தொப்புள்கொடி உறவு மட்டும் கொண்டு இவை இயங்கும் விதமும் சிந்திக்கும் விதமும் புதுமையானது.
‘வசனம் எழுதறதை விட மௌனத்தை எழுதறது தான் கஷ்டம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே’
கமல் என் எழுத்துக்கு ஜீவன் அளிக்கிறது போல் நடந்து கொண்டே உரக்கப் படித்தபடி சில திருத்தங்களுக்கான ஆலோசனை தெரிவிக்கிறார். ‘பாதி வார்த்தை, பாதி வாக்கியம் சொன்னாலும் பரவாயில்லை. அதுக்குப் பின்னாலே ஒரு அர்த்தமுள்ள மௌனம் பொருத்தமாக இழைந்து வந்தா நீங்க சொல்ல வேண்டியதை முழு வீரியத்தோடு சொல்லிவிட முடியும்’. அந்தக் கண்கள் எத்தனையாவது முறையாகவோ சிரிக்கின்றன.
‘திரைக்கதை ஒரு சவாலான இலக்கிய வடிவம். வசனம் எழுதறது அதிலே ஒரு பகுதி மட்டும் தான். தமிழ் எழுத்தாளர்கள்லே இந்த வடிவத்தை சரியாகப் புரிஞ்சு கையாண்டவர்கள்’. அவர் சொல்லி நிறுத்துகிறார். அர்த்தமுள்ள மௌனம். சவாலை நீங்க ஏத்துக்கறீங்களா என்பது போல் அவர் புருவம் உயர்த்தி என்னைப் பார்க்கிறார். என் நம்பிக்கையைப் பார்வையிலேயே அவரிடம் தெரிவிக்கிறேன்.
‘கிட்டத்தட்ட படப்பிடிப்பு முழுக்க ஹைதராபாத்தில் வச்சுக்கலாம்னு இருக்கேன். வந்துடுங்க’. அன்புக் கட்டளை. ஆபீஸ் இருக்கே? வாரக் கடைசியிலே வரலாமே? வாரக் கடைசியில் மனமும் உடலும் பயணத்துக்குத் தயாராக இருக்கின்றன.
ராமோஜி ராவ் பிலிம் சிட்டி உணவு விடுதியில் அவசர அவசரமாக டைரக்டர் சக்ரியோடு ஒரு நீண்ட மீசை குங்குமப் பொட்டுக் காரர் காலைச் சாப்பாடு சாப்பிட்டபடி என்னைப் பார்க்கிறார். அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். அவரும். கலையாக்கத்தில் புதிய உயரங்களை சதா சிருஷ்டிக்கும் தோட்டா தரணி அலம்பிய கை காயும் முன்னால் சக்ரியோடும் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனியோடும் ஷுட்டிங் ப்ளோருக்கு ஓடுகிறார்.
‘போலீஸ் கமிஷனர் ஆபீஸ் பார்த்திருக்கீங்களா?’ அந்த அவசரத்திலும் என்னைப் பார்த்து விசாரிக்கிறார் தோட்டா.
நான் எழுதிய காட்சி நினைவு வருகிறது. எழுத்தில் வடித்தது எழுந்து நிற்பதைக் காண உடனே வரச் சொல்லி விட்டு தோட்டா துப்பாக்கியிலிருந்து விடுபட்ட மாதிரி பறக்கிறார்.
ஒயர்கள், காமிரா, டிராலி, ஒலிப்பதிவு சாதனம், ஒளிவிடும் விளக்குகள், ரிப்ளக்டர்கள், பூம் மைக் இப்படி பலபட்டடையான சமாசாரங்களைக் கடந்து உள்ளே போகிறேன்.
போலீஸ் கமிஷனரின் நெருக்கடி நேர செயல்பாட்டு அறையான வார் ரூம் ஒரு போர்ப் பாசறை போல் சகலவிதமான கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு சாதனங்களோடு இயங்கத் தயாராக இருக்கிறது. நிஜமான கம்ப்யூட்டர்கள், நிஜமான மற்ற உபகரணங்கள். நடிகர்கள் மட்டும் வேடம் புனைந்தவர்கள்.
‘ஹலோ’. குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். மிடுக்கான காக்கிச் சட்டையில் ‘ஐ.ஜி.ராகவன் மாரார்’ என்று பெயர் அறிவிக்கும் பேட்ஜ். நீள நிமிர்ந்து நிற்கும் மோகன்லால் என் கரத்தைக் குலுக்கி வரவேற்கிறார். நான் பெயர் வைத்துப் படைத்த பாத்திரம் இப்படி ஆறடி உயர ஆஜானுபாகுவாக அவதாரம் எடுத்து எனக்கு முன்னால் நிற்கும் அனுபவம் முற்றிலுமே புதியது. சினிமாவே தனி அனுபவம் தான்.
மோகன்லாலோடு பேசிக் கொண்டிருக்கும்போது வெளியே இருந்து மொபைலில் குறுஞ்செய்தி. கமல் வந்து விட்டார்.
அவசரமாக வெளியே வரும்போது மேல் தளத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரோ வேகமாக இறங்கி வருகிறார்கள். கிட்டத்தட்ட மோதல். நிமிர்ந்தால் அது நமிதா. ‘மேலே ஜெகன்மோகினி ஷூட்டிங்’. உதவி டைரக்டர் சொல்கிறார். நமிதாவுக்கு சாரி சொல்லக் கூட நேரம் இன்றி (எதுக்கு?) கமலை சந்திக்க அவருடடய ஊர்திக்குச் செல்கிறேன். அதற்குள் அவரே இறங்கி ஓடி வருகிறார்.
அவர் முகத்தில் கோபம். கண்கள் சிவந்து ரௌத்ரமே உருவெடுத்தது போல் என் முன் வந்து நிற்கிறார். நான் என்ன தப்பு செய்தேன் கமல் சார்? கேட்க வாயெடுக்கும் முன் அவர் கணீரென்ற குரலில் பேச ஆரம்பித்து விடுகிறார். குற்றம் சாட்டும் குரல். அவர் விரல் நீண்டு என்னைச் சுட்டுகிறது.
‘ஏன் நான் ஆத்திரப்படக் கூடாதா?’
என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து சீற்றம், சிலிர்ப்பு, ஆற்றாமை, சோகம் எல்லாம் ஒன்று மாற்றி ஒன்று வானவில்லாக வர்ண ஜாலம் பொழிய அவர் பேசிக் கொண்டே போகிறார். அவர் என் மேல் கோபப்படவில்லை. ஒரு முக்கிய காட்சியில் உரையாடல் எப்படி இருக்கலாம் என்று யோசித்தவர் சட்டென்று மனதில் பொறி தோன்ற எழுந்து ஓடி வந்திருக்கிறார்.
அதை உள்வாங்கி வசனமாக மாற்ற அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்த உணர்ச்சிப் பிரவாகம் நீண்ட நேரம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருந்து பஞ்ஜாரா ஹில் பகுதிக்குப் படப்பிடிப்பு தளம் மாறுகிறது. புதிதாகக் கட்டி உயர்ந்து கொண்டிருக்கும் ஒரு பதினாலு மாடிக் கட்டிடம். கீழே இருந்து மொட்டை மாடிக்குப் போக 280 படிகள் ஏற வேண்டும். ‘வாங்க, மேலே போய் டிஸ்கஸ் செய்யலாம். ஷூட்டிங் அங்கேதான்’.
கமல் தடகள விளையாட்டு வீரர் போல் நடுவிலே ஒரு இடத்திலும் மூச்சு வாங்காமல் இயல்பாகப் படி ஏறி பதினாலாம் மாடியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். மூச்சு வாங்க கையில் லாப்டேப் கம்ப்யூட்டரோடு நான் மேலே போகிறேன். உரையாடலைப் படித்து விவாதித்து முடிவு செய்கிறோம்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்து முறை படி ஏறி இறங்கி எனக்கும் பழகிப் போகிறது. நாலு மாடி ஏறிவிட்டு சுற்றுப்புற இயற்கை சூழலை ரசிக்கிற சாக்கில் கொஞ்சம் நின்று மூச்சு வாங்கி விட்டு ஓய்வு எடுக்காமல் நானும் கொஞ்சம் மெதுவாக நடந்தாவது தினசரி ரெண்டாயிரத்து எண்ணூறு படி ஏறி இறங்கி என் காலே என் உடலிலிருந்து தனியாகப் பிரிந்த அங்கமாகக் கூட வருகிறது.
பட்டப் படைக்கும் வெய்ய்யிலில் இதுதான் இமயமலைச் சாரல் என்று மனதில் கருதிக் கொண்டதுபோல் கமல் சுபாவமாக நடந்து ஓரமாகப் போய் எட்டிப் பார்க்க ஷூட்டிங் ஆரம்பம். காட்சி முடிந்து அறைக்குத் திரும்பியவர் என்ன யோசித்தாரோ. மறுநாள் காலை பதினாலு மாடி ஏறி வந்ததும் வராதுமாக, ‘நேத்து எடுத்த கடைசி ஷாட்டை திரும்ப எடுத்துடலாம்’.
தொடர்ந்து வசனம் வரும் அந்தக் காட்சியின் இறுதிப் பகுதியில் பேச ஆரம்பித்து சட்டென்று நிறுத்தி அவர் திடீரென்று எதையோ செய்கிறார். படத்தின் டிபைனிங் மூமெண்ட் பதினைந்து செகண்ட் மட்டும் வரும் அந்த முக்கியமான காட்சி என்று நான் அடித்துச் சொல்வேன். நான் ஆரம்பித்து வைக்க ஷூட்டிங்கில் ஈடுபட்டிருக்கும் முழு யூனிட்டுமே எழுந்து கைதட்டுகிறது. எந்த சலனமும் இல்லாம கமல் படி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
சாயங்காலச் சூரியனின் இதமான சிவப்புக் கதிர்கள் அந்திக்குக் கட்டியம் கூற பின்னணியில் பக்கத்து பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் குரல் காற்றில் மிதந்து வருகிறது. எங்கோ ரயில் போகிற ஓசை. அப்புறம் முழு அமைதி. இதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கமல் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
நாளை 'உன்னை போல் ஒருவன்' ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பத்துக்கு மத்தியில் அட்லீஸ்ட் இந்த கட்டுரையாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட வேண்டியது தான் :-). நாளை ரிலீஸ் ஆகுமா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, September 17, 2009
கமல தளம் - இரா.முருகன்
Posted by IdlyVadai at 9/17/2009 10:13:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
30 Comments:
கமல் துதிபாடுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்,கமல் தமிழகத்திற்கு கிடைத்த கலைப் பொக்கிஸம்,இதற்குமேல் நான் ஏதும் சொல்வதற்கில்லை!!
ஜல் ஜல் ஜல் ....
ஜிங் ஜிங் ஜிங்
கோலிவுட்டுல - இந்த சப்தம்
புதுசு இல்லீங்கோ!
so you are also one another chingchak of kamal. kamal works very hard. every one knows that. but hardly there are some good results.
excellent article. ira.mu rocks as usual.
கட்டுரை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சினிமா சான்ஸ் பெறும் எழுத்தாளர்கள் புகழ்ந்து எழுதும் எல்லா கட்டுரைகளுக்கும் பொதுவாக ஒரு துதி இசை சேர்ந்துவிடுவதைக் கவனித்தீர்களா? இதை முருகனை மறந்துவிட்டு மனுஸ்யபுத்திரன் பெயரை சொன்னாலும் பொருந்திப்போகும். பாலாவினை, வசந்தபாலனை பற்றி ஜெயமோகன் எழுதியவைகளும் இப்படித்தான் இருந்தன. (அவரது இணையதளத்தில் இருக்கிறது.)ஜீவாவை பற்ரி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியதும் அப்படித்தான் இருக்கும்.
An excellent capsule from Shri Era. Murukan. adorable flow of writing, and i wish him good deal of success in his forthcoming projects, as well.
"நிலை வருமா"? நாளை திரையில் இப்படம் வரும் "நிலை வருமா" என்ற பொருள் வரும் மஞ்சள் கமண்டுடன் முடித்து இருப்பது இட்லிக்கே உள்ள முத்தாய்ப்பான நக்கல்.
Anbulla Idlyvadai,
Unnaipol oruvan naalai release agirathu. High court anumathi alithu vittadhu.
நல்ல கட்டுரை!
/**** kggouthaman said...
ஜல் ஜல் ஜல் ....
ஜிங் ஜிங் ஜிங்
கோலிவுட்டுல - இந்த சப்தம்
புதுசு இல்லீங்கோ!***/
எங்குதான் இல்லை???? ஜல் ஜிங் ஜல் ஜிங்.....
photo erukkiranvanga yarau our list kondunga. kamal, mohanlal thaviura yar iurrkkangane theriyala
ஜால்ரா ஒலி 1950களில் தொடங்கி ஜிங்சக் ஜிங்சக் என்றே ஒலிபெயர்க்கப்படுகிறது. அதை யாரும் மாற்றாதீர்கள்.
//நான் பெயர் வைத்துப் படைத்த பாத்திரம் இப்படி ஆறடி உயர ஆஜானுபாகுவாக அவதாரம் எடுத்து எனக்கு முன்னால் நிற்கும் அனுபவம் முற்றிலுமே புதியது. சினிமாவே தனி அனுபவம் தான்.// கம்பீரமான போலீஸ் அதிகாரி பாத்திரம் “A Wednesday"இலேயே உள்ளது.. ஏதோ இவர் தான் மூலக்கதையில் இல்லாத ஒரு பாத்திரத்தை சிந்தித்து உருவாக்கியது போல எழுதி உள்ளது கமலுடன் பழகிப் பழகி மற்றவர் படைப்பை காப்பியடித்து விட்டு தனது உருவாக்கம் என்று நாக்கூசாமல் புளுகும் தன்மை இரா.முருகனுக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதையே காட்டுகிறது. ராகவன் மாரார் என்ற பேரைத்தவிர அந்தக் கதாபாத்திரத்தின் வேறெந்தக் குணாதிசயத்தையும் இவர்கள் தமிழுக்காக மெருகேற்றியிருக்க முடியாது. ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அதே நேரம் தெளிவான எண்ணங்களையும் செயல்பாட்டையும் கொண்டதாகத்தான் மூலக்கதையில் அனுபம் கேரின் பாத்திரம் படைக்கப்பட்டு இருந்தது.
சொல்ல முடியாது, கதையின் வீரியம் குலையாமல் கொண்டு செல்வதற்காக, பாட்டுக்கள் கூட இல்லாமல் காண்பவரின் கவனம் குலையாவண்ணாம் இருந்த ஒரு நேர்கோட்டுக் கதையை, கமல் எப்போதும் செய்வது போல் குலைத்துதான் இருப்பார் என்ற சாத்தியமும் உள்ளது. அப்படி இருந்தால், மாரார் பாத்திரமும் மாற்றப்பட்டு, க்ளைமாக்ஸில், கமல் கதாபாத்திரத்துடன் சேர்ந்து “கம்பீரமாக” டிஷ்யும் டிஷ்யும் போடுவதாக இரா. முருகன் “வடிவமைத்து”இருக்கிறாரோ என்னவோ.. அவ்வாறு இல்லை அக்கதாபாத்திரத்தின் தன்மையில் மாற்றமில்லை என்றால் பேரைத்தவிர அப்பாத்திரப்படைப்பின் வேறெதற்கும் இவர் சொந்தம் கொண்டாடக்கூடாது..
ஆனால், கமலுக்கு சிங்சக் அடிப்பவர் இதையும் சொல்வார் இன்னமும் ஒரு படி மேலே சென்று இது நாங்கள் புதிதாக எழுதிய கதை என்று சொன்னாலும் சொல்வார்.
over jaalra post
there were lot of mokkai flims from kamal in which he can only able to understand the so called his great writings
Nandu
அந்த அஞ்சலி நிகழ்ச்சியின்போது இரா. முருகனை நானல்லவா அறிமுகப்படுத்தி வைத்தேன் கமலுக்கு? அதுவும் முருகன் கேட்டுக்கொண்டதால் அல்லவா? எதற்ககாக என்னை இருட்டடிப்பு செய்து விட்டார்?
படிக்கும் போதே நல்லாருக்கு!
சினிமாவின் முதல் பாடம் Hypeஐ கற்றுக்கொண்டுவிட்டார் முருகன். wednesday படத்திலேயே வசனம் மிக குறைவுதான். அதை மொழிபெயர்க்க கடின உழைப்போ திறமையோ பெரிதாக ஒன்றும் தேவையில்லை. கமல் சொன்ன வசனங்களை கம்ப்யூட்டரில் டைப் அடித்து ப்ரிண்ட் செய்யும் ஸ்டெனோக்ராஃபர்தான் முருகன் என்பது பலரின் கருத்து. சரியான டகிள் பாண்டி ஐயா முருகன்! க்ரேஸி மோகனை முத்ல் முறை சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர் கமலிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கமலை இப்படி புகழ்ந்த இவரின் வாய் / எழுத்து 2, 3 படங்களுக்கு வசனம் எழுதி பணம் கிடைக்காமல் போகும்போது அடிப்பார் U Turn பாருங்களேன். அது வரை ’உண்ட பக்கர மான பக்கர ஹை ஹை ஹை’ என்று ஜால்ரா சகிதம் கோஷம் போட்டுக் கொண்டிருக்கட்டும் பாவம் முருகன். கோவணாண்டியாய் நிற்க வைத்து விடுவார்கள் கூடிய சீக்கிரம்.
/***லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
அந்த அஞ்சலி நிகழ்ச்சியின்போது இரா. முருகனை நானல்லவா அறிமுகப்படுத்தி வைத்தேன் கமலுக்கு? அதுவும் முருகன் கேட்டுக்கொண்டதால் அல்லவா? எதற்ககாக என்னை இருட்டடிப்பு செய்து விட்டார்?**/
உழுபவன் கலப்பை போச்சேனு கவலைப்பட்டால், கொல்லன் கொலுவு போச்சேனு சந்தோசப்பட்டானாம்....
கமலுக்கு ராம் அவர்க்ள் கமலை அறிமுகம் செய்திருக்கலாம். அருகில் கிரேசி அவர்கள் இருந்திருக்கலாம். நினைவு மறதியில் அவர் அப்படி எழுதியிருக்கலாம். ஆனால் எது எதில்தான் தன்னை நுழைத்துகொண்டு புகழ்பெற விரும்புகிறார்கள் என்பதில் ஒரு அளவே இல்லையா? ராம் அவர்களின் பின்னூட்டம் அருவருப்பானது. முருகன் புகழ்பெறும் போதில் சேறு பூச நினைப்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. அவரது ஜால்ரா கட்டுரை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் ராம் அவர்களின் இந்த பின்னூட்டம் தவறு என்பது உண்மை.
ராகுல் & ரசிகன்
என்னய்யா இது அநியாயமாக இருக்கிறது? LA ராம் முருகனின் நீண்ட நாள் நண்பர். ராம் ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், பண்பாளர். அவர் யாரிடமும் எதுவும் இதுவரை எதிர்பார்த்ததில்லை. இரா.முருகன் இப்படி இருட்டடிப்பு செய்ததில் அவருக்கு மனத்தாங்கல். அதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்க்கு கூட அவருக்கு உரிமை இல்லையா என்ன?
Have some empathy please!
/***டகிள் பாட்சா said...
ராகுல் & ரசிகன்
என்னய்யா இது அநியாயமாக இருக்கிறது? LA ராம் முருகனின் நீண்ட நாள் நண்பர். ராம் ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், பண்பாளர். அவர் யாரிடமும் எதுவும் இதுவரை எதிர்பார்த்ததில்லை. இரா.முருகன் இப்படி இருட்டடிப்பு செய்ததில் அவருக்கு மனத்தாங்கல். அதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்க்கு கூட அவருக்கு உரிமை இல்லையா என்ன?
Have some empathy please!***/
அவர் தான் அறிமுகப்படுத்தினாரா என்று எனக்கு தெரியாது, அப்படியே இருந்தாலும் என்ன மற்றும் ஏன் எதிர்பார்க்க வேண்டும் அறிமுகப்படுத்தியதற்காக???? அது எல்லாம் ஒரு தேவை இல்லாத விளம்பரம் என்று நினைக்கிறேன்.
//**அவர் யாரிடமும் எதுவும் இதுவரை எதிர்பார்த்ததில்லைஎதிர்பார்த்ததில்லை**//
பொய்யாகி விட்டதே சார்!!! அவர் தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும் என்று ஏததீப்பார்க்கிறாரே???
ராகுல்
ராம், முருகனிடம் ‘என்னை பற்றி எழுது’ என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆனால் அவர் உண்மைக்கு புறம்பாக வேறு ஒருவர் ‘intro' செய்தார் என்று சொல்லும்போது ஒருவர் உதாசீனம் செய்யப்பட்டதாக உணர்வது மனித இயல்புதானே! ராம் மனித நேயமிக்க நல்ல மனிதர். ராமிடம் பேசியோ பழகியோ இருந்தால் அல்லது உங்களுக்கு இது போல ஒரு நண்பன் செய்திருந்தால் நீங்களும் இதை உணர்ந்திருப்பீர்கள். அவர் ஏற்கெனவே நொந்து போயிருக்கலாம். அதில் வேல் பாய்ச்சாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றாக பதிவு செய்திருக்கிறார் இரா.முருகன்.
சூடாக வாங்கிப்போட்டமைக்கும் பாராட்டுகள்.
படம் பட்டைய கெளப்புதாமே ? பாக்ஸ் ஆபீஸ் ஸ்டேட்டஸ் கிடைக்குமா ?
/***அவர் ஏற்கெனவே நொந்து போயிருக்கலாம். அதில் வேல் பாய்ச்சாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.**/
வேல் பாய்ச்சிஇருந்தால் மன்னிக்கவும். எனது பேச்சால் அடுத்தவர் மனம் நோகிறது எனும் போது வருத்தம் அளிக்கிறது!!! உண்மை தெரியாமல் பேசியதும் என் தவறு தான்!!!
அன்புள்ள ராகுல், ரசிகன், டகிள் பாச்சா,
'இடலி வடை'யில் வருத்தத்துடன் பின்னூட்டமிட்ட பிறகு நேற்று நான் ஒரு காரியம் செய்தேன்: உரிமையுடன் முருகனுக்கே ஒரு சின்ன கடிதம் எழுதினேன். அதன் தலைப்பு: 'கொஞ்சம் வருத்தம் தான்!'
நேற்றிரவே அவரது பதிலில் 'shall make amends in my next article. our friendship is much larger in context and deep in mutual respect and affection.' என்று அன்புடன் முருகன் எழுதியிருந்தார்.
முருகனும் நானும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்கள், ம்யூச்சுவல் ரசிகர்கள். சென்னை சென்றால் நான் அவரிடம் பேசாமல் இருப்பதில்லை. இசை, சினிமா, தொழில்நுட்பம் என்று பல தளங்களில் எங்கள் நட்பு விரிகிறது. நல்ல, திறமையான, ஆர்வமிக்க நண்பர் என்பதால் மற்றொரு திற்மையான நண்பரான கமலிடன் உரிமையுடன் அறிமுகம் செய்து வைத்தேன். வெத்து ஆள் என்றால் கமலிடம் அறிமுகம் செய்து வைப்பேனா?
கமலின் அப்போதைய தேவைகளும், முருகனின் திறமையும் தெரிந்து தான் அந்த அறிமுகத்தை நான் செய்து வைத்தேன். அது நல்லபடியாகத் தொடர்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே.
"நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலே, இல்லை?" என்று தசாவதாரத்தின் போதே கமல் கேட்டார். 'ராம்' என்ற பெயருடன் ஒரு கதாபாத்திரமே திரைக்கதையில் எழுதப்பட்டது. ஆனால், இயக்குனர் K.S. ரவிக்குமார் மிகவும் விரும்பியும் கூட, நான் நடிக்கும்படியான சூழ்நிலை அப்போது அமையவில்லை. சினிமாவில் இதெல்லாம் மிக சகஜம். அதனாலென்ன? 'ஜக்குபாய்' படத்தில் என்னைப் பார்க்கத்தான் போகிறீர்கள்!
கமல் அளவுக்கெல்லாம் நான் என்ன மிகப்பெரிய நடிகனா? இல்லையே! நான் நாடகம், சினிமாக்களில் நடித்தாலும் என் ஆர்வம், பலம் எழுத்து+இயக்கம். அதில் ஏதாவது சாதிக்க முடியுமா என்பதே என் குறிக்கோள். நடிப்பது ஒரு ஜாலிக்காக!
நாளையே நான் கமலுடைய படத்தில் முருகன் வசனத்தில் நடிக்கலாம். அல்லது என் வசனத்தில் முருகனும் நடிக்கலாம்!
மலிவான சுய தம்பட்டம் எனக்குத் தேவை இல்லை. ஆண்டவன் அருளால் இணையத்திலும் வெளியிலும் ஒரு நல்ல எழுத்தாளனாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். இன்னும் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறதே!
'Friends are friends they say, until the first black day' என்கிறான் Aleksandr Solzhenitzyn. நல்லவேளையாக எங்களுக்குள் அந்தக் கருப்பு தினம் நிகழவில்லை!
எது எப்படியோ, ஒரு நல்ல நட்பு ஒழுங்காகக் காப்பாற்றப்பட்டு விட்டதில் எனக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே! ஏனென்றால், நட்புக்கு நான் அடிமை!
//"நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலே, இல்லை?" என்று தசாவதாரத்தின் போதே கமல் கேட்டார்.//
ஐயா, உமது டகிளுக்கு ஒரு அளவே இல்லியா? சுயதமட்டம் பிடிக்காது என்று சொல்லிவிட்டு இந்தப் பின்னூட்டம் முழுமையும் அதைதானே செய்திருக்கிறீர்கள்? இப்போதுகூட முருகன், தன் தவறுக்கு திருத்தம் செய்வதாக சொன்னாரே தவிர, நீங்கள் தொடர்ந்து அவரை அவமதித்துதான் வருகின்றீர்கள். என்னவோ இந்த வாய்ப்பே நீங்கள்போட்ட பிச்சை என்பதுபோல்!! ஒருவர் பரவலாக பிரபலமடைகிறார் என்றதும் உடனே அவரை இழுத்து வைத்து முகத்தில் பீயை அடிக்கும் கலாச்சாரம் இணையத்துக்கு புதிதல்ல. அந்த குழுவில் நீங்களும் உண்டு என்பதுதான் புதிது! நன்றாக இருங்கள்.
ராகுல்தான் பிகிலா?
பின்னூட்டத்தில் மனக்கழிவுகளை வெளியேற்றும் உமக்கும், தெருவோரம் குந்திக்கினு ‘இருக்கின்ற’ அவர்களுக்கும் ஒரு பேதமுமில்லை.
காசு விசயத்தில் கமல்
எப்பவுமே
கொஞ்சம்
greedy and fraud pola.
கமலுடன் காபி குடிக்கும் நண்பர்கள் கொஞ்சம் விளக்க வேண்டும்.
LA Ram should have written the email first to murukan than posting his comment here.If they are such good friends where is the need to accuse in public and make amends later.These writers create an impression will that they will crawl before kollywood for getting chances. Writing for films gives fame, money and attention and recognition. But these come with a price. How many of these writers will come together to fight for a fellow writer when there is a case of plagarism complaint against
kollywood. Jeyamohan has responded to the accusation that Kanjeevaram is based on the script/story in such a way that Kollywood will be happy with him.
'திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் பட்டு கதை – காஞ்சீவரம் ஆகியுள்ளது என்கிறார். வெற்றி பெற்ற கதை ( சிறந்த நடிகர் ) என்பதால் இந்த சாடலா…. வெற்றி இல்லாவிட்டால் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவாரா? எழுத்தாளர்கள் இந்த தருணத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?'
JM writes
'காஞ்சீவரம் குறித்து தெரியவில்லை. பலசமயம் கதைகள் வாய்மொழியாகக் கூட பரவக்கூடும் என்றும் படுகிறது'.
He is trying to please Kollywood
and if he does not know anything about this issue why should he writer
'பலசமயம் கதைகள் வாய்மொழியாகக் கூட பரவக்கூடும் என்றும் படுகிறது'.
/****Anonymous முகில்வண்ணன் said...
ராகுல்தான் பிகிலா?****/
Hi Mukil,
ராகுலுக்கு பிகிலா வந்து பின்னூட்டம் போட வேண்டிய அவசியம் இல்லை!!! என்ன சொன்னாலும் அது ராகுல் என்ற பெயரிலே வரும்.
Post a Comment