பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 31, 2009

80% ஹாலிவுட் + 20% மசாலா = 100% கோலிவுட்


இந்த வார குமுதத்தில் வந்த முதல் பக்க கட்டுரையில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்

ஹாலிவுட் படங்களிலிருந்து கதையின் கருவை 80% இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ற லோக்கலான திரைக்கதை 10% கமர்ஷியல், யதார்த்தமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் 5%, கிளாமர் டேஸ்ட்டுக்காக குளுகுளு பாடல் காட்சிகள் 2%, காமெடி கலாட்டாவிற்குகாக சைடு ட்ராக் காமெடி 2% .... கோலிவுட் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்முலா


அந்த கட்டுரையில் சில முக்கிய படங்களின் பெயர்களை கொடுத்து அவர்களுக்கு எங்கிருந்து இன்ஸ்பிரேஷன் வந்தது ( அல்லது சுட சுட எடுக்கப்பட்டது ) என்று ஒரு சின்ன பட்டியல் தந்துள்ளார்கள்.

21 grams - சர்வம்
Bangkok Dangerous - பட்டியல்
Network - வேகம்
Hardcore - மகாநதி
Planes Trains and Automobiles - அன்பேசிவம்
What bob can do - தெனாலி
Hot bubblegum and American Pie - பாய்ஸ்
Shop around the corner - காதல்கோட்டை
Big - நியூ
Very Bad things - பஞ்சதந்திரம்
Sliding Doors - 12B
Too Much - காதலா காதலா
She Devil - சதிலீலாவதி
Butch Cassidy & The Sundance Kid - திருடா திருடா
Fear - காதல் கொண்டேன்
Barefoot in the park - அலைபாயுதே
Sense and Sensibility - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Brewster's Millions - அருணாசலம்
Corsican Brothers - அபூர்வ சகோதரர்கள்
Life of David Gale - விருமாண்டிகுறிப்பு : இவை சாம்பிள்கள் தான் பட்டியல் இன்னும் நீளமானது என்று கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு தெரிந்த 'சுட்ட படங்களை' பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சிம்பு, வடிவேலு, விவேக்... என்று எல்லா ரசிகர்களும் கலந்துக்கொள்ளலாம் :-)

எனக்கு தெரிந்து திருவிளையாடல் தவிர மற்ற எல்லா படமும் சுட்ட படம் தான் போல!

Read More...

Thursday, July 30, 2009

அம்மாமி கிடைக்காமலா போய்டுவா? - கலைஞர் அறிக்கைமேலே உள்ள படம் போன மாதம் விகடனில் வந்த கேலிச் சித்திரம்..
அதற்கு கலைஞர் ரியாக்ஷன் கீழே...

கலைஞர் அறிக்கை....

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும் - "அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன்'' என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும் -என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது -சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும்- கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என "கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல" ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ! என் துணைவி ஆம்- உன் அண்ணி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி - அதே ஆனந்த விகடன் 25-4-1954-ல் எழுதிய "மனோகரா'' திரைப்பட விமர்சனத்தையும் -அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன்.

"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், "தாய்'' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது "மனோகரா''.

மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருத மென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.

தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

"மகனே, பொறுத்தது போதும்... பொங்கி யெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.

வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.''

இவ்வாறு விகடன் விமர்சனம்

எழுதியது 1954ல்!

எனக்கு கோபம் இருந்திருந்தால்...

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு மனோகரா படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா? அதே போல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட "பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்'' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?

அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அ.தி.மு.க. ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா?

உருப்படியான பதிவு எதுவும் போடலையா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு :-)

Read More...

நீயா? நானா? மல்லுக்கட்டும் சாருநிவேதிதா

இந்த வார விகடனில் வந்த ...

என் சக எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரைப் போல் எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை உண்டு. ஆனால், கதை வசனம் எழுதி அல்ல... நடிகனாக. சில இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வசந்தபாலன் நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிஇருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சியிலும் சற்றேதலை காட்டலாம் என்று 'டாக் ஷோ'க்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் மட்டும் ஒப்புக்கொள்வது உண்டு.

இப்படியாக விஜய் டி.வி-யின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நான் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதால் 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பிடிக்கும். ஆனாலும், அதில் கலந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்னை இருந்தது. பிரதான விருந்தினராக வரவழைத்துவிட்டு, கடைசியில் காசு எதுவும் கொடுக்க மாட் டார்கள். ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.

ஆனால், ஒருமுறை 'நீயா நானா'வில் கலந்துகொள்ள அழைத்தபோது, அதே தேதியில் கேரளாவின் கொச்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருந்தேன். (தமிழ்நாட்டைவிட அடியேனை கேரள மக்களுக்கு அதிகம் தெரியும்). அதனால் என் இயலாமையை 'நீயா நானா' குழுவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் கொச்சிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கே தெரியும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது என்று!

இன்னொரு சமயம், விஜய் டி.வி-யின் இன்னொரு நிகழ்ச்சிக்காக நளினி ஜமீலாவுடன் நானும் கலந்துகொண்டேன். அதில் கலந்து கொள்ள நளினி ஜமீலாவுக்கும், அவருடைய உதவியாளருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து வரவும் திரும்பவும் விமான டிக்கெட், அவர்கள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க ஹோட்டல் செலவு, விலை உயர்ந்த பட்டுப் புடவை என்று மொத்தம் 30,000 ரூபாய் செலவு செய்தார்கள். ஆனால் எனக்கு என்ன என்று கேட்டபோது, 'நாளை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்!' என்றார்கள்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். விஜய் டி.வி-க்கும் எனக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டார் ஒரு நபர். அவர் சொன்னபடி அந்த 'நாளை' என்ற நாள் இன்னும் வரவே இல்லை. நானும் ஒரு போன் செய்து பார்த்தேன். 'இதோ ஒன் அவர்ல அனுப்பிவைக்கிறேன் சார்!' என்றார் எந்தப் பதற்றமும் இல்லாமல். ஆனால், அந்த 'ஒன் அவரு'ம் இன்னும் வரவில்லை. சரி, போ என்று நானும் விட்டுவிட்டேன்.

அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளை யாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.

இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி 'நீயா நானா' சூட்டிங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அந்த மீடியேட்டர். இரண்டு காரணங்களைச் சொல்லி, அழைப்பை மறுத்தேன். ஒன்று, இலவச சேவை. அதையும் பகலில் செய்தால் பரவாயில்லை. இரவு 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இரண்டு மணிக்குத்தான் முடிப்பார்கள். அது வேறு பெரும் தொல்லையாக இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் பலர் இளம் பெண்கள். கல்லூரி மாணவி கள். அவர்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கடைசியாக என் வீடு வந்து சேர மூன்று மணிக்கு மேல் ஆகி விடும்.

'இந்த முறை அப்படி நடக்காது. 10 மணிக்கே சூட்டிங் ஆரம்பம். 12 மணிக்கு அனுப்பிவிடுவேன்!' மீடியேட்டரின் வாக்குறுதி. 'பணம்?'

'எப்போதும் கொடுப்பது போல் நிகழ்ச்சி முடிந்ததும் கை மேல் பணம்!'

'என்னது... எப்போதும் கொடுப்பது போலா? எப்போதய்யா அப்படிக் கொடுத்தீர்கள்?'

'ஐயோ சார்! நீங்கள் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லையா? இந்த முறை அப்படி நடக்காது. நிகழ்ச்சி முடிந்ததும் கொடுத்துவிடுவார்கள்! எட்டு மணிக்கே வண்டி வந்து விடும். கூடவே, மேடத்தையும் அழைத்து வாருங்கள்' என்றார். காரணம், நிகழ்ச்சி அப்படி. திருமணம், மறுமணம் என்பது தலைப்பு. நானும் அவந்திகாவும் மறுமணம் செய்துகொண்டவர்கள்.

சொன்ன நேரத்துக்கு வண்டி வரவில்லை. அவந்திகாவுக்கு டி.வி. என்றாலே அலர்ஜி. 'அடப் போய்யா, நீயும் உன் டி.வி-யும்!' என்று சொல்லிவிட்டு அவள் படுத்துத் தூங்கிவிட்டாள். ஒருவழியாக வண்டி வந்து சேர்ந்தது. ''12 மணிக்கு மேலதான் சார் சூட்டிங். அதனாலதான் மெதுவா கிளம்பி வந்தேன்!'' என்றார் டிரைவர்.

போய்ப் பார்த்தால் கோபிநாத் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். பாவம், காலையிலிருந்து இரண்டு சூட்டிங்கில் கலந்துகொண்ட களைப்பு. 'நீயா நானா' சூட்டிங் ஆரம்பித்தபோது மணி நடுநிசி ஒன்றரை. பாவம், அத்தனை பார்வையாளர்களும் 10 மணியில்இருந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சூட்டிங் முடியும்போது சரியாக அதிகாலை 3.45 மணி. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுமார் நான்கரை மணி. தூக்கக் கலக்கத்தில் பணம் பற்றிக் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது அதே ஸ்டீரியோ டைப் பதில். 'நாளை கொடுத்து அனுப்புகிறேன்!' ஆனால், இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை. மறுநாளும் மறுநாளும் போன் செய்தேன். இப்போது மீடியேட்டர் என் போனை எடுப்பதில்லை. வேறு போனிலிருந்து பேசினால் வைத்துவிடுகிறார். அவந்திகாவை விட்டுப் பேசச் சொன்னால் 'அவரோட மச்சான் பேசுகிறேன், மாமா பேசுகிறேன்' என்கிறார்.

இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு என் மனதில் எழும் கேள்விகள்:

பிரதான கெஸ்டாக ஒருவரை வரவழைத்துவிட்டு இப்படித்தான் நடத்துவீர்களா?

காலை நான்கு மணி வரை ஒருவரிடம் வேலை வாங்கிவிட்டு, அதற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டாமா? இதுதான் சமுதாய மறுமலர்ச்சியைப்பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அடையாளமா?

இப்படி நடுநிசி வரை இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சூட்டிங்கை முன்வைத்து காக்கச் செய்வது சித்ரவதை இல்லையா?

அன்புடன்,
சாருநிவேதிதாசாரு ஏவுகணைக்கு பதில் என்ன சாரு..? என்று நீயா? நானா? ஆண்டனிடம் கேட்டால்...

நீயா? நானா? வருத்தமும் திருத்தமும்!

சாருநிவேதிதாவின் கடிதம் கிடைக்கப் பெற்றதும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆண்டனியிடம் கடித விவரம் குறித்துக் கேட்டோம்...

''பணம் கொடுத்துப் பேச வைத்தால் செட் செய்த நாடகம் போன்றாகிவிடும் என்பதால், எங்களுடைய டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் தருவது இல்லை. என்.டி.டி.வி. உள்ளிட்ட சேனல்களில்கூட அந்த மரபு இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை அழைத்துவரும் பொறுப்பை சுந்தர்ராஜன் என்ற நபரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்கள் ஊழியர் கிடையாது. பணப் பட்டுவாடா அவர் மூலமாகவே நடந்தது. இந்த விவகாரத்தில் நான் சாருவையே சப்போர்ட் செய்வேன். அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், அவரைப் போன்ற சிறு பத்திரிகையாளர்கள், நல்ல எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிகழ்ச்சியில் அவர்களைப் போன்றவர்களுக்குத் தொடர்ந்து ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம்.

நளினி ஜமீலா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட நல்ல உள்ளம்கொண்ட நளினிக்கு என் சொந்தப் பணத்தில் இருந்துதான் அந்தச் செலவுகளைச் செய்தேன். படப்பிடிப்பு நடக்கும் நேரம், காலம் குறித்து சாருவிடம் சரிவரத் தெரிவிக்காததும் அந்த மீடியேட்டரின் தவறே. இனி, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்களை அழைத்து வரும் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளேன். எது எப்படியோ நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகின்றன!'' என்கிறார் ஆண்டனி வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆண்டனியிடம் நாம் பேசிய சிறிது நேரத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார் சாரு நிவேதிதா. ''இப்போதான் ஆண்டனி என்கிட்ட பேசினார். நிகழ்ந்த தவறுகளுக்கும் சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதுவரை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, வழங்கப்படாமல் இருந்த தொகையையும் இரண்டொரு நாட்களில் சேர்ப்பிக்கப்படும்னு சொன்னார். அந்த மீடியேட்டருடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம்னும் சொன்னார்!'' என்று தெரிவித்தார்.
( நன்றி: விகடன் )

நல்ல வேளை ஆண்டனி சாருவிடம் பேசினார், இல்லை "ஆண்டனிக்கு கருடபுராணத்தின்படி என்ன தண்டனை?" என்று சாரு ஒரு பதிவு போட்டிருப்பார்.

Read More...

Wednesday, July 29, 2009

தடைக்கு தடை - அ.ராசா - ஜூவி மோதல்

இந்த வார ஜூவியில் என்ற தலைப்பில் வீடியோவுடன் கூடிய நியூஸை போட்டிருக்கிறார்கள். முதல் முறையாக ஜூவி இந்த செய்தியை ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறது.

இன்று ஆ.ராசா பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடப்பது நன்மைக்கே என்று நம்புவோம். நிச்சயம் ஜூவி இந்த பிரச்சனையை சும்மா விடாது என்று நினைக்கிறேன்....


டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ்...

ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப் பினர் என்றும் முன்னாள் கதர் வாரிய மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் என்றும் இவரது கறுப்பு - சிவப்பு பெயரோடு சொல்கிறது விசிட்டிங் கார்டு'! பளிச்சென்று முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த விசிட்டிங் கார்டில் புன்னகை பூக்கிறார்கள். எம்.ஏ., எம்.ஃபில் முடித் திருப்பதாகவும் சொல்கிறது இவரது கார்டு.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்தில் தான் இவருக்கு வீடு என்றாலும்,

காயத்ரி ஸ்ரீனிவாஸ் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ளஅவருடைய பங்களாவில்!

''ஆளுங்கட்சியின் பெயரால்... மத்திய - மாநில அமைச்சர்களிடம் சொல்லி காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கி றார்கள். அவர்களில் டாப் மோஸ்ட் புள்ளிதான் சத்தமில்லாமல் செயல் படும் காயத்ரி ஸ்ரீனிவாஸ்...'' என்று தொடர்ந்து பல மாதங்களாக நமக்கு வந்துகொண்டிருந்த தகவல்களை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டிருந்த சமயத்தில்தான், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கான்ட்ராக்ட் கள்எடுத்துக் கொடுக்கும் இடைத்தரகர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார்.

''அநியாயம் நடக்குதுங்க. முந்தியெல்லாம் காசு கொடுத்தா, அது போக வேண்டிய இடத்துக்கு முழுசா போயிடும். வேலையும் முடிஞ்சிடும். இப்போ நடுவில் உள்ள நந்திகளுக்கு தீனி போட்டே எங்க சொத்து அழிஞ்சுடும் போலிருக்கு. அதிலும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் மூலமா போனா, ரெட்டிப்பு செலவு ஆகுது. என்ன பண்றது? வேற யார் மூலமா போனாலும் காரியம் நடக்காதுனு கட்சிக்காரங்களே சொல்றாங்களே...'' என்று சலித்துக் கொண்டார் அந்த இடைத்தரகர்

அப்போதும் நாம் நம்பத் தயாராக இல்லை. ஜூ.வி-க்கு மிக நம்பகமான ஒரு நபர், ''ரகசிய வீடியோ பதிவாகவே ஒரு பேரம் நடத்திப் பார்த்துவிட்டால் என்ன?'' என்று முன்வர... அடுத்தடுத்து நடந்தன வேகமான ஏற்பாடுகள். இடைத்தரகர் அளித்த விவரங்களை மிக கவனமாக உள்வாங்கிக் கிரகித்துக்கொண்டபின்.... இரண்டு பேராக இந்த ஆபரேஷனைச் செய்வது என்று முடிவானது. அதாவது, இடைத்தரகர் போல நடிக்க ஒருவர்.... மத்திய அரசின் கான்ட்ராக்டைப் பெற விரும்பும் ஆந்திர மாநிலத்துக் கம்பெனியின் அதிகாரியாக ஜூ.வி. நபர் ஒருவர்...!

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை சாலைகளில் பதிப்பதற்காகத் தொலைத் தொடர்புத் துறையின் - பி.எஸ்.என்.எல்-லின் டெல்லி தலைமையகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த டெண்டர் அறிவிப்புதான் இந்த இருவர் டீமின் 'பொறி'!

காயத்ரி ஸ்ரீனிவாஸை தொடர்பு கொள்ளக்கூடியது என்று நம்மிடம் அளிக்கப்பட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார் 'இடைத்தரகர்' (அதாவது இடைத்தரகராக நடிக்க முன்வந்தவர்). ஏற்கெனவே இன்னொரு நபர் மூலம் கான்ட்ராக்ட் தொடர்பான விவரங்களை காயத்ரி ஸ்ரீனிவாஸ் காதுக்கு அனுப்பி வைத்துவிட்டு... அதன்பிறகுதான் செல்போனில் விஷயத்துக்கு வந்தார். அந்த ஆடியோ பதிவு இதோ ('இடைத்தரகர் தொடர்புகொண்ட செல் நம்பர் 9442578555. தொடர்பு கொண்ட தேதி ஜூலை 23, வியாழன் மதியம் சுமார் 3 மணி) -

இடைத்தரகர்: ''மேடம்... அவங்க என்ன சொல் றாங்க... இப்ப... அதாவது... டெண்டர் டேட் ஆகஸ்ட் ஏழாம் தேதி தள்ளி வச்சிருக்காங்க.''

எதிர்முனை பெண் குரல்: ''சரி!''

இடைத்தரகர்: ''இப்ப டெண்டர் ஃபைல் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு நைட் கிளம்பி சனிக்கிழமை காலையிலே உங்களை பார்க்கட்டுமா?''

எ.மு.பெ.கு: ''எங்கே வந்து பார்க்கறீங்க?''

இடைத்தரகர்: ''கோயமுத்தூர்ல?''

எ.மு.பெ.கு: ''ரைட்டு! அவங்க (டெண்டர் எடுக்க விரும்பும்) கம்பெனியோட ஜி.எம்-மையும் ஒருதடவை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணுவாரு...''

இடைத்தரகர்: ''அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணு வாரு... இன்பிட்வீன் உங்களுக்கு என்ன சேரவேண்டியதோ அதை பேசிட்டு ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி த்ரீ டேஸ்ல குடுக்கச் சொல்லிடறேன். ஏன்னா... நாள் நெருங்கிதான் இருக்கு!''

எ.மு.பெ.கு: ''ஆகஸ்ட் ஏழுன்னா ஃபுல் டீடெயில் ஸையும் கொண்டாந்துடுங்க.. அவரு(?) சி.எம்.டி-யை (பி.எஸ்.என்.எல். அதிகாரி?) வச்சுப் பேசுவாரு. சனி, ஞாயிறு மெட்_ராஸ்ல இருப்பாருனு நினைக்கிறேன்... இல்லேன்னா ஊட்டி வந்திடுவாரு. அப்படி ஊட்டி வந்தார்னா, நீங்க கோயமுத்தூர் வரும்போது ஊட்டிக்குப் போய் பார்த்துடலாம்.''

இடைத்தரகர்: ''ஓ.கே... ஓ.கே. உங்களை முதல்ல பார்த்துட்டோம்னா அவங்களுக்கு சேட்டிஸ்ஃபை ஆயிடும்!''

எ.மு.பெ.கு: ''ரைட்டு!'

இடைத்தரகர்: ''ஏன்னா... மேடம்னாலேதான் எல்லாம் முடியும்னு நான் சொல்லி வச்சிருக்கேன்!....''

இவ்வாறாக நீளும் அந்த தொலைபேசி உரையாடலின் பதிவை முதலில் பத்திரப்படுத்திக் கொண்டோம். ''மீடி யேட்டரே இதுல கிடையாது... டைரக்டா அவரே(?)தான் பேசுவாருங்க'' என்பது போன்ற டெல்லி தொடர்புகள் தவிர, வேறு பல விஷயங்களும் அந்த உரையாடலில் பேசப்படுகின்றன. இப்போதைக்கு அவை இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாததால் வாசகர்களின் பார்வைக்கு அளிக்கவில்லை!

ஜூலை 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு கோவையில் பீளமேடு அண்ணாநகர் வீட்டில் காயத்ரி ஸ்ரீனிவாஸ் எதிரில் இடைத்தரகராக ஒரு நபரும் ஜூ.வி. நபரும் ஆஜராகிவிட்டார்கள். நேராக அந்த வீட்டுக்குப் போய்விட முடியவில்லை. பக்கத்துத் தெருவிலேயே நம்மை நிற்கும்படி செல்போனில் உத்தர விட்டார்கள்!

நாமும் அங்கே இனோவா காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க... 'ராஜேஷ்' என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு நபர் அங்கே வந்து காரில் ஏறிக்கொண்டு காயத்ரி ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வழி காட்டினார் (நமது வீடியோ கேமரா பதிவு முழுவதும் இவரும் வருகிறார். விவரமறிந்த தி.மு.க. வட்டாரத்தில் இவர் உருவத்தைக் காட்டி விசாரித்தபோது, ''ராஜேஷ்னா சொன்னாரு? இவர் பேரு சந்திரமோகனாச்சே... அருப்புக்கோட்டை பக்கத்துல பாளையம்பட்டிதான் இவரோட சொந்த ஊரு. அருப்புக்கோட்டையில் கேபிள் ஆபரேட்டரா கஷ்டப்பட்டு ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார் சந்திரமோகன்... செஞ்சியார் மத்திய அமைச்சரா இருக்கும்போது சி.பி.ஐ. வழக்கில் அவரோட உதவியாளர் பாபு மாட்டுனாரே ஞாபகம் இருக்கா..? பாபுவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா சந்திரமோகன் ஆயிட்டாருன்னு பிறகு சொன்னாங்க. இப்ப கோவை ஏரியாவில் காரு, பங்களானு ஜம்முனு இருக்கிற சந்திரமோகன், தன்னை காயத்ரி ஸ்ரீனிவாஸோட உதவி யாளர்னு சொல்லிக்கிறாரு'' என்று நமக்கு வேறுவிதமான விளக்கம் 'ராஜேஷ்' பற்றி கிடைத்தது!).

நிற்க....

'ராஜேஷ்' என்கிற சந்திரமோகன் இனோவா காரில் ஏறிக்கொண்டதோடு இடைத்தரகரிடமும் ஜூ.வி. நபரிடமும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு திருப்தி ஆனவுடன்தான், காயத்ரி ஸ்ரீனிவாஸின் பங்களா வுக்கு அழைத்துச் சென்றார். மேற்கொண்டு நடந்ததை ஜூ.வி. நபர் இங்கே விவரிக்கத் துவங்குகிறார் -

வீட்டுக்குள் போன 'ராஜேஷ்', அங்கிருந்த வேலைக் காரரிடம், ''பீமா எக்கட?'' (பீமா எங்கே) என்றார். கொஞ்ச நேரத்தில் கொழுகொழுவென்று ஒரு கறுப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி ஓடி வந்தது.

''அது எதுவும் செய்யாதுங்க. எங்க மேடமுக்கு எல்லாமே இந்த பீமாதான்'' என்றபடி எங்களை சோபாவில் அமரச் செய்த 'ராஜேஷ்' கலை நயம்மிக்க ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டு ஹாலின் ஷோகேஸில் ஸ்டாலின், ஆற்காட்டார், அன்பழகன் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் காயத்திரி ஸ்ரீனிவாஸ் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் அழகாக, வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தன் மகனோடு தானும் சேர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனியாக தொங்க விட்டிருந்தார் காயத்ரி.

பீமா, ஹாலைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து பெட் ரூமுக்குள் போனபிறகு காயத்ரி பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு பிரசன்னமாகி, எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டார்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ்: ''என்ன மேட்டர்? செப்பண்டி!''

இடைத்தரகர் : ''ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் டெண்டர்தான், மேடம்... தமிழ்நாட்டுல இருநூறு கிலோ மீட்டருக்கு கேபிள் பதிக்க (என்னைக் காட்டி) இவங்க கம்பெனி பிளான் பண்ணுது!''

காயத்ரி: ''என்ன பர்ப்பஸ்?''

காரில் அந்த வீட்டை அடையும்போதே 'ராஜேஷ்' வசம் இடைத்தரகர் முழு விவரம் சொல்லி, டெண்டர் காப்பியும் கொடுத்திருந்ததால்... அவரே காயத்ரியிடம் எல்லாம் விளக்குகிறார், தெலுங்கில்!

இடைத்தரகரைப் பார்த்து காயத்ரி: ''ராஜா(?) சேஸ்தாரு... ராஜாதான் செய்வாரு!''

இடைத்தரகர்: ''மேடம் பத்தி சொன்னாங்க. கேள்விப்பட்டுதான் உங்களைப் பிடிச்சு இந்த வேலையைச் செய்யலாமுன்னு....''

காயத்ரி: ''பை எலெக்ஷன் வருது... எப்படியும் (கட்சியில் எனக்கு) புரோக்ராம் கொடுத்துடுவாங்க. தொகுதிக்குப் போகணும். அதில்லாம பீமாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். டெல்லிக்கு, சென்னைக்குப் போனாலும்கூட பீமாவையும் கூட் டிட்டுப் போயிடுவேன். போன வாரம் மினிஸ்டர்(?) இங்கதான் தங்கியிருந்தாரு!''

இடைத்தரகர்: ''இந்த வீட்டுலயா?''

காயத்ரி: ''குன்னூருக்குப் போனவர், போன வேகத்துலயே இறங்கிட்டாரு. அவருக்கு குளிர் ஒத்துக் காது. கோயம்புத்தூர் வந்து ரெஸிடன்ஸியில அவரு தங்கிட்டாரு. அமைச்சரை ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அவங்க ஒய்ஃப் எங்க வீட்டுல தங்குனாங்க. உங்க மேட்டரை அமைச்சர்கிட்ட சொல்லிடறேன். உங்களை இந்த வேலைக்காக யார் முன்னால உட்கார வைக்கிறேங்கறதுதான் இங்க முக்கியம்! இதைப் போலத்தான் பி.எஸ்.என்.எல். கான்ட்ராக்ட் ஒண்ணை முடிச்சுக் கொடுத்தேன். இதோ இவரோட ('ராஜேஷ்' பக்கம் கைகாட்டி) ஃபிரெண்டுக்குதான் முடிச்சுக் கொடுத்தோம். அது பி.எஸ்.என்.எல். விளம்பர கான்ட்ராக்ட்...''

இடைத்தரகர்: (ஏற்கெனவே விவரம் தெரிந்தவராக) ''செஞ்சியார் பி.ஏ-வா இருந்த பாபுவுக்கா?''

காயத்ரி: ''ஆமா...!''

இடைத்தரகர்: ''ராஜாவுக்கு வேணுங்கறதை நாங்களே தரணுமா?''

காயத்ரி: ''அவர் வாங்க மாட்டார். என்ன பண்ணணுங்கறதை அவரே சொல்லுவார்!''

ராஜேஷ்: ''அதையெல்லாம் ஸ்பிளிட் பண்ணி பிரிச்சுடுவாங்க...''

காயத்ரி: ''நீங்க உங்க மேட்டரை மினிஸ்டரை வெச் சிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணணும். சி.எம்.டி-யெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. என்ன பண்ணணுமோ அதை அவர் பார்த்துக்குவாரு. (டெல்லி?) சஞ்சார் நிகம் ரிசப்ஷன்ல உங்களை உட்கார வெச்சு, மேலே அனுப்பிடுவேன். என் பேர்கூட (விசிட்டர் புக்கில்?) வராது. மினிஸ்டரே கூப்பிட்டாதான் உங்களால அந்த கட்டடத்துக்குள்ள போகமுடியும். அவரோட பி.ஏ. செந்திலியாவும் அங்கே இருப்பார். உங்களுக்கு மினிஸ்டர் பர்ஸனல் சிட்டிங் கொடுப்பார். அதுக்கெல்லாம் நான் கியாரண்டி! ஆனா ஒண்ணு.. நாங்க ஃபிளைட் சார்ஜ் போட்டு டெல்லிக்கு வர மாட்டோம். என்கூட ஒருத்தர் வருவாரு. பெரிய புராஜெக்ட்னாத்தான் மினிஸ்டர் வருவாரு...''

ராஜேஷ்: ''இந்த மாதிரி விஷயமெல்லாம் ஒரே சேனல்லதான் நீங்க மூவ் செய்யணும்!''

காயத்ரி: ''நான் ரொம்பவும் வெளியில வரமாட்டேன். தமிழ்நாட்டுல இ.பி. விவகாரங்களையெல்லாம் இவருதான் (ராஜேஷ்) பார்த்துக்குவாரு. மேட்டூர் தெர்மல் பிளான்ட்ல ஆஷ் எடுக்கறதுக்கெல்லாம் இவர்தான் போவாரு. ஸ்டேட்ல இ.பி., ஹெல்த், டிரான்ஸ்போர்ட், ஹைவேஸ் எதுனாலும் நம்ம வேலையை முடிச்சுக்கிடலாம்.''

ராஜேஷ்: ''ஆமா... நாலும் நைன்ட்டி நைன் பர்சன்ட் முடிச்சிடலாம்!'''

காயத்ரி: சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்?) நம்ம பையன் தான். என் சொந்த முயற்சியிலதான் மினிஸ்டர் ஆனான். இ.பி-யிலும் பெரிய லெவல்னா சொல்லுங்க. நீட்டா முடிச்சுடலாம். எங்க இருந்தாலும் என்னோட பாலிஸி என்ன தெரியுமா? சம்பந்தப்பட்ட அமைச்சரோடவே டைரக்ட் சிட்டிங் ஏற்பாடு செஞ்சிடுவேன். சக்சஸ்தான் எனக்கு முக்கியம்!''

இடைத்தரகர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிப்பது பற்றி சொல்லச் சொல்ல... காயத்ரி சிறு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 244 கிலோமீட்டருக்கு வை-மேக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதிப்பதற்கான கான்ட் ராக்ட் என்றும், இந்த மாநிலத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கான விவகாரம் என்றும் ராஜேஷ§டன் உரை யாடல் நடக்கிறது. 3-ஜி மற்றும் வை-மேக்ஸ் பற்றி விளக்கமாகவே கேட்டுக் கொள்கிறார் காயத்ரி.

''தமிழ்நாட்டுல மட்டும்தான் கான்ட்ராக்ட் எடுப் பீங்களா? ஆந்திரா, கர்நாடகாவுலகூட எடுக்கலாமே..?'' என்றும் என்னிடம் (ஜூ.வி. நபர்) கேட்டபடியே கையடக்க நோட்டில் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

என்னை (ஜூ.வி. நபர்) கான்ட்ராக்ட் பெற விரும்பும் கம்பெனியின் ஜி.எம். என்று அறிமுகப்படுத்தியிருந்ததால் இடையிடையே சில விவரங்களை 'ராஜேஷ்' கேட்டு செக் பண்ணிக்கொண்டே இருந்தார். உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, 'ராஜேஷ்' வைத்திருந்த செல்போனை வாங்கி யாருக்கோ டயல் செய்தார் காயத்ரி. படுஅந்நியோந்நியமாக அவர் பேசியதன் விவரம் இதுதான் -

''நான்தான் காயத்ரி ஸ்ரீனிவாஸ்! நேத்து நைட் வந்துட் டீங்களா? (இடைவெளி) ஊட்டிக்கு வர்றீங்களா? (இடை வெளி) எப்ப டெல்லிக்குப் போறீங்க? (இடைவெளி) அப்படியா, சரி நான் நேர்ல வந்து உங்களைப் பார்க் கறேன்!''

போனை கட் செய்தவர் எங்கள் பக்கம் திரும்பி, ''இந்த வீக் அவர் ஊட்டிக்கு வரலையாம். திங்கள்கிழமை டெல்லிக்குக் கிளம்புறாராம். அவர் ஊட்டிக்கு வந்தார்னா இப்பவே உங்களை இவருகூட ('ராஜேஷ்' என்கிற சந்திரமோகன்) அனுப்பி வச்சிருப்பேன்!''

இடைத்தரகர்: ''நீங்க எப்ப அரசியலுக்கு வந்தீங்க, மேடம்?''

காயத்ரி: சிரித்துக் கொண்டே.. ''ஆச்சு, இருபது வருசமாச்சு..! நான் அரசியலுக்கு வந்ததே பிஸினசுக்காகத்தான்... வேற எதுக்கும் இல்ல!''

மீண்டும், பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் கேபிள் பற்றி விலாவாரியாகப் பேசினார். திரும்பவும் சந்திரமோகன் டெண்டர் குறித்த விஷயங்களை காயத்ரிக்கு தெலுங்கிலும் தமிழிலுமாக விளக்கினார்.

''மொத்த கான்ட்ராக்டையும் உங்க ஒருத்தருக்கே தரமாட்டாங்க புரிஞ்சுதா?'' என்றும், ''உங்க கான்ட்ராக்டுக்குள்ளே இன்னொருத்தர் யாராச்சும் ஒரு பார்ட் எடுத்து செய்யறதா இருந்தா, அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும், புரிஞ்சுதா?'' என்றும் காயத்ரி எங்களிடம் கேட்டு உறுதி வாங்கிக்கொண்டார்.

இடையிடையே தி.மு.க-வின் பெருந்தலைகள், குடும்பங்கள் பற்றி சில 'புள்ளி'விவரங்கள் வந்து விழுந்தன. அவையெல்லாம் இந்த விவகாரத் தோடு தொடர்பில்லாதவை என்பதாலும், தேவையில்லாமல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதாலும் இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறோம்.

ராஜேஷ்: ''கேபிள் பதிக்கிற கான்ட்ராக்ட் மட்டும்தான் நீங்க எடுக்கப் போறீங்களா..? இல்லாட்டி அதுக்கான கேபிளும் சப்ளை பண்ண விரும்பறீங்களா?''

இடைத்தரகர்: ''கேபிள் பதிக்கறதுக்கு மட்டும்தான் நாங்க டெண்டர் கேட்கலாமுன்னு இருக்கோம். மொத்த புராஜெக்ட் காஸ்ட் எப்படியும் இருநூறு கோடிக்கு மேல வரும்னு சொன்னாங்க...''

காயத்ரி: ''கோடின்னா அந்த வீடு(?) கண்டிப்பா உள்ளே வந்துடும், புரியுதுங்களா, அதான்... சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளே வரும். (அடுத்தடுத்து ஆளுங்கட்சியில் சில பெரிய பெயர்களாகச் சொல்லி) .......... பிரஷ்ஷர் வரும். இப்படித்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு சம்பந்தமா பி.எஸ்.என்.எல் விளம்பர கான்ட்ராக்டை பாபு கேட்டப்ப, அமைச்சர் தரலை. 'நீ பாகிஸ்தான் மேட்ச் வரும்போது விளம்பரம் கேளு, தர்றேன்'னாரு. சொன்னபடியே தந்தாரு. ஏன்னா எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி அவர் போயாகணும். அவர் உட்கார்ந்திருக்கற இடம் அந்த மாதிரி. தனக்கு சிம்மாசனம் கொடுத்த(?) இடத்துக்கு ஏதாவது கொடுத்தாகணும்ங்கறது அவரோட பாலிஸி. சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ஒரு இணை அமைச்சரை தனியா போட்டு இதையெல்லாம் வாட்ச் செய்வாங்க. அதிகாரிங்க ஒரு லாபி பண்ணுவாங்க. நம்ம அமைச்சர் அவங்களை மறுத்துப் பேச மாட்டார். ஏன்னு உங்களுக்குப் புரியுதா? நாமளா இருந்தா... 'நான்தான் மந்திரி! மூடிட்டு கையெழுத்துப் போடு'னு (அதிகாரிகளிடம்) சொல்லுவோம். அவர் அப்படியெல்லாம் இல்லை!''

இடைத்தரகர்: ''இவ்வளவு யதார்த்தமா பேசறீங்க... இவ்ளோ தூரம் இன்ட்ரடியூஸ் பண்றீங்க. உங்களுக்கு ஒரு ட்வென்ட்டி லேக்ஸ் (இருபது லட்சம்) வரைக்கும் கொடுக்கலாம்னு இவங்ககிட்டே (என்னைக் காட்டி) சொன்னேன், மேடம்!''

காயத்ரி: ''பணத்தை முதல்ல வாங்க மாட்டோம். முதல்ல டெல்லிக்குப் போவோம். நானும் உங்களைப் புரிஞ்சுக்கணும் இல்லையா... நீங்க டெல்லிக்கு வாங்க. அங்கே ரிசப்ஷன் எப்படி இருக்குனு பாருங்க. அப்புறமா பார்த்துக்கலாம். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. இந்த புராஜெக்டை சக்ஸஸ் பண்ணிக் காட்டுறேன். அப்புறம் நீங்களே பார்த்துக் கொடுங்க! அந்தக் குடும்பமே(?) தலையிட்டாலும் பரவாயில்லை. ஆற்காட்டாரை வெச்சு முடிச்சுத் தரேன்!''

ராஜேஷ்: ''இங்கதான் பெரிய குடும்பம்... பிரஷ்ஷர்னு இருக்கும். வேற ஸ்டேட்லயெல்லாம் இப்படியெல்லாம் இல்ல!''

காயத்ரி: ''மேட்டர்னு பெத்தாயின முந்தட்டுல பெட்டுத்தோம். (விஷ யத்தை பெரியவர் முன்னாடி வெப்போம்) சக்சஸ் சேஸ்தாம். நீங்க மினிஸ்டரைப் பார்க்கும்போது நல்லா விளக்கமா புரியுறமாதிரி பேசிடணும். இல்லைன்னா அவர் தன்னோட பி.ஏ-வைப் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாரு. எப்ப டெண்டர் முடியுது? டெண்டர் போட்டுத்தான் இதைப் பண்ணணுமா? மினிஸ்டரே பண்ணிடக் கூடாதா?''

உடனே, இடைத்தரகர் முதலி லிருந்து அந்த டெண்டர் பற்றி விவரிக்கும் காட்சிகளும், அதை காயத்ரி குறிப்பெடுத்துக் கொள்வதும் நாங்கள் கொண்டு போன ரகசிய வீடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

காயத்ரி: ''மினிஸ்டர் தொகுதிக்கு வந்தா இதைப் பத்திப் பேச முடியாது. இந்தப் பொம்பளை இங்க ஏன் வந்தாங்கன்னு தொகுதியில பார்ப்பாங்க. அவரும் நம்மளை பார்க்க மாட்டாரு. நாம் டெல்லிக்கு போய்த்தான் இந்த மேட்டரை முடிக்கணும். புதன்கிழமை டெல்லிக்குப் போயிடணும். வியாழக்கிழமை காலையில மினிஸ்டர் வீட்டுக்குப் போய் நேர்ல உங்க விஷயத்தைப் பத்திப் பேசிடுவேன். அப்புறம் நிகம் (தொலைத் தொடர்பு டெல்லி அலுவலகம்) வந்து பார்த்திடுவாரு...''

இடைத்தரகர்: (என்னைக் காட்டி) ''நான்தான் இந்த கம்பெனிக்காரங்களை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கேன். ரொம்ப நாளா உங்க அப்பாயின்ட் மென்ட் கிடைக்காம கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்க வெச்சிட்டேன். எனக்கு இதுல என்ன பங்குங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க, மேடம்...''

காயத்ரி சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார்.

ராஜேஷ்: ''அம்மா யாரையும் விட்டுர மாட்டாங்க. நீங்க கேக்கவே வேண்டியதில்லை. அவங்களை

நம்புங்க...''

மீட்டிங் முடியும் தருணத்தில் திரும்பவும் அறைக்குள் இருந்து பீமா வருகிறது. நாம் கொண்டு போயிருந்த ஸ்வீட் பாக்ஸை வாயால் கவ்வி காயத்ரியிடம் கொடுக்கிறது.

காயத்ரி: ''எதுன்னாலும் இது என்கிட்டதான் கொடுக்கும். எனக்குப் பிடிச்சதை கொடுக்கும். என் மனசு இதுக்குப் புரியும்!'' என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே இடைத்தரகர் தயார் செய்து எடுத்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல். தொடர்பான டெண்டர் கோப்புகளை பீமா சட்டென்று கவ்விக்கொண்டு ஓடவும்....

காயத்ரி: ''பார்த்தீங்களா... பீமா கவ்வியாச்சு. இந்த வேலையை பீமா செய்யச் சொல்லுது!'' என்றபடியே வாசல் வரை வந்து எங்கள் இருவருக்கும் விடை கொடுத் தார்.

அடுத்தநாள், ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 'இடைத்தரகராக' நடித்தவருக்கு போன் செய்தார் 'பிரகாஷ்' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர். அழைப்பு வந்த செல் நம்பர் 9842299722.

''மினிஸ்டர்கிட்டே பேசியாச்சு... நாங்க அந்த கம்பெனி ஜி.எம்-கிட்டே அர்ஜென்ட்டா பேசணும். முக்கியமா மேடம்தான் பேசணும்னு சொன்னாங்க. அவரைப் பேசச் சொல்லுங்க'' என்கிற ரீதியில் அடுத்தடுத்து போன் வந்துகொண்டே இருந்தது.

'ராஜா' என்றும் 'மினிஸ்டர்' என்றும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் கூறுவது மத்திய அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவருமான ஆ.ராசாவை குறிப்பிட்டுத்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சரின் பெயரால் நடக்கும் இந்த பேரத்தின் மூலம் நிஜமாகவே கான்ட்ராக்ட்டுகளை முடிக்க முடியுமா... அப்படி இதற்குமுன் முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டு பிடிக்கும் பொறுப்பை மத்திய - மாநில அரசுகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த ஆபரேஷனுக்குப் பிறகு நமது இருவர் டீம் பதிவு செய்து கொண்ட விவரங்களையும், எந்த இடத்திலும் அளிக்கத் தயாராகஇருக்கிறோம்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்கிற இந்தப் பெண்மணி ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்! அவரிடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரே விசாரணை நடத்தினால் எதிர்க்கட்சிகளாலும் மற்றவர்களாலும் அது ஒருதலைபட்சமாக பார்க்கப்படும் என்று முதல்வர் கருதினால்... பேசாமல் இதை சி.பி.ஐ. விசாரணைக்கேகூட விட்டுவிடலாம்.

இதுவரை காயத்ரி பேசிய தொலைபேசி எண்கள்... இதுவரை அவர்மூலம் முடிக்கப்பட்ட(?) கான்ட்ராக்ட் தொடர்பான தகவல்கள்.... அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்.... இப்படி எல்லா விவரங்களையும் சி.பி.ஐ. மூலமாக வெளி உலகத்துக்குக் கொண்டு வந்து 'அக்னிப் பிரவேசம்' செய்ய தி.மு.க. அரசு தயங்காது என்றே நம்புவோம்!
( நன்றி: ஜூவி, விடியோ துண்டுகள் ஜூவி சைட்டில் இருக்கிறது)
மத்திய அமைச்சர் ஆ.ராசா பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராசா பற்றி ஜூனியர் விகடன் செய்தி வெளி யிட்டிருந்தது. அதில் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு செய்திகளை பிரசுரித்தது.
.
இதனை எதிர்த்து ராசாவும், அவருடைய மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு முதலில் விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
பின்னர் விசாரித்த நீதிபதி கே.சந்துரு அந்த தடையை நீக்கியதுடன் ராசாவின் அவதூறு வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு செலவுக்காக ஜூனியர் விகடனுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராசாவும், அவரது மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையான சுதந்திரம் கிடையாது. மோசடி செய்து புகைப்படத்தை வெளியிடுவது, குடும்ப உறுப்பினர்களை பற்றி தனிப்பட்ட விவரங்களை எழுதுவது என்பது, குறிப்பாக அவர்களது குழந்தைகளது உரிமையை பாதிக்கும் செயலாகும். இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு இரண்டு தரப்பிலும் விசாரித்து செய்தியை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஜூனியர் விகடனுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு அந்த பத்திரிகை சார்பில் பதிலளிக்கப்பட்டபோது செய்தி நூறு சதவீதம் உண்மையானதல்ல என்று பதிலளித்துள்ளது.

எனவே ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிப்பதுடன் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

ராசா மற்றும் அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்தும்அவர்கள் உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
( நன்றி: மலைசுடர் )மஞ்சள்1: வீடியோ ஆரம்பத்தில் "பழைய பாத்திரம் இரும்பு பேப்பார்..." என்று வெளியே ஒருவர் விற்றுக்கொண்டு போகும் சத்தம் கேட்கிறது!

மஞ்சள்2:
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்

Read More...

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்

அருண் வைத்யநாதனை இங்கு பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் இணையம் பரவலாக ஆரம்பித்த சில வருடங்களில் தமிழோவியம் என்றொரு தமிழ் இணைய இதழைத் தன் நண்பருடன் இணைந்து துவக்கினார். பின்னர் தனியாக அவரது ப்ளாகில் எழுதி வந்தார். தனக்குச் சரியென்று தோன்றுவதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும், நகைச்சுவை கலந்தும் தன் எழுத்தில் வெளியிடும் பிரபலமான வலைப்பதிவராக இருந்தார்.

அருண் ஐ டி வேலைக்காக அமெரிக்கா வந்த பொழுதிலும் தன் தணியாத தாகமான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியுயார்க் ஃப்லிம் அகடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும் படங்களை எடுத்தும் வந்தார். அருண் இயக்கிய குறும் படங்கள் உலக அளவில் பல்வேறு அவார்டுகளை வென்றன. குறும் பட உலகில் ஒரு கவனிக்கத்தகுந்த இயக்குனரானார். இருந்தாலும் முழு நீளப் படம் ஒன்றை அதையும் தமிழில் எடுப்பது ஒன்றே அவர் கனவாக இருந்தது. அந்தக் கனவு பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் இப்பொழுது நனவாகியிருக்கிறது. அவர் எழுதி இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படம் சென்றவாரம் திரையரங்குகளில் தமிழ் நாட்டிலும் அமெரிக்காவிலும் வெளியிடப் பட்டு அனைத்துப் பத்திரிகை விமர்சனங்களின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. சீர்காழியைச் சேர்ந்த அருண், தற்பொழுது வசிப்பது நியுஜெர்ஸியில். அங்குதான் இந்தப் படத்தையும் முழுக்க எடுத்திருக்கிறார். விமர்சனம் கீழே...

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம் ச.திருமலை

அச்சமுண்டு அச்சமுண்டு பல விதங்களில் தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக விளங்குகிறது. முதலில் ரெட் காமிரா என்னும் தொழில் நுட்பத்தில் எடுக்கப் பட்ட படம். ரெட் என்னும் இந்தக் கேமரா டிஜிட்டல் சினிமா கேமரா. நேரடியாக விடியோவை ஹார்ட்-டிஸ்கில் சேமித்து விடலாம். தற்போதைய கேமராக்களைப் போல ஃபிலிம்
போட்டுப் படம் பிடிக்கத் தேவையில்லை. அதுதான் கேம்கார்டரே செய்து விடுமே
என்று கேட்கலாம். கேம்கார்டரின் resolution மிக மிகக் குறைவு. மற்ற டிஜிட்டல் கேமராக்களைப் போலில்லாமல் இதில் CMOS based sensor இருப்பதால் அசாத்தியமான துல்லியம் கிட்டுகிறது. விலை கிட்டத்தட்ட 20000 டாலர். ஆனால் இவ்வளவு வசதிகளை இந்த அளவுக்குக் குறைந்த விலையில் தந்ததால்தான் அது பெரிய வெற்றியடைந்திருக்கிறது, மேலதிக விபரங்களுக்குப் பார்க்க: http://en.wikipedia.org/wiki/Red_camera

அ அ ஒரு த்ரில்லர். ஆனால் சஸ்பென்ஸ் படம் அல்ல. ஒரு த்ரில்லர் என்பதற்காக பார்ப்பவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வலிந்து சேர்க்கப் பட்ட எந்தக் காட்சிகளும் இதில் கிடையாது. திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார் அருண். அபத்த காமெடி, ஆபாச குத்துப் பாட்டு, ஹீரோ வானத்தில் பறந்து போடும் சண்டைகள், அழுவாச்சி காட்சிகள்,. திகில் காட்சிகள், ரத்தம், வெட்டு, குத்து போன்ற எந்த உபத்திரவங்களும் இல்லாமல் திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட தெளிந்த நீரோட்டம் போன்ற ஒரு சிம்ப்பிளான சினிமா அ அ. சொல்லப் போனால் எந்தத் திருப்பமோ, திகிலோ, டிராமாவோ இல்லாமல் இது இப்படி என்று எடுக்கப் பட்டிருக்கும் ஒரு சிம்ப்பிளான திரைப்படம். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்தப் படம் பலருக்கும் பிடிக்காமல் போகலாம். ஏக் தீன் அச்சானக் போன்ற இந்தித் திரைப்படங்களையும், யவனிகா போன்ற மலையாளப் படங்களையும் பார்த்து இது போல இயல்பான திரைப்படங்கள் தமிழில் வருவதில்லையே என்று பெருமூச்சு விடுபவர்களின் குறையை அருண் தனது முதல் தமிழ் முயற்சியிலேயே தீர்த்திருக்கிறார்.

தமிழில் எந்த விதச் சினிமாத்தனங்களும் இல்லாமல் இது போல யதார்த்தமான நேர்த்தியுடன் வந்த படம் பாலு மகேந்திராவின் “வீடு”, உன்னைப் போல் ஒருவன் போன்ற ஒரு சில அபூர்வமான படங்கள் மட்டுமே. அச்சமுண்டு அச்சமுண்டு அமெரிக்க வாழ் தமிழர்களின் பொதுவான வாழ்க்கையை அப்படியே எந்தவித மிகையும் இன்றி சித்தரிக்கிறது. அமெரிக்கா வாழ் ஐ டி தமிழரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த சினிமா மிகைப் படுத்தாமல் சொல்கிறது. தூர தேசத்தில் வாழ நேரும் பொழுது ஏற்படும் தனிமை, அதை நம் ஆட்கள் எதிர் கொள்ளும் விதம், மன அமைதிக்காக நாடும் கோவில், நம் சடங்குகளில் நாட்டம், கணவன் மனைவிக்கிடையே கலாச்சார ரீதியாக ஏற்படும் ஊடல்கள், நட்புகள், வார இறுதிக்கள் என்று எங்கள் ஒருவரது வீட்டில் நடக்கும் வாராந்திரக் காட்சிகளை அப்படியே சினிமாவாக மாற்றி பாதி படம் ஓடி விடுகிறது. கார்களில் பழைய பாடல் கேட்டுக் கொண்டு போவது, இந்திய பலசரக்குக் கடைகளுக்குப் போவது, மன நிம்மதி தேடி கோவில்களுக்குச் செல்வது, ஆம்வே ஆசாமிகளுக்குப் பயப்படுவது, கிரிக்கெட் விளையாடுவது, வாரா வாரம் பிறந்த நாள் விழாக்களுக்கு ஆஜராகுவது என்று அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையை வெகு இயல்பாக படமாக்கியிருக்கிறார்.

அமைதியான நதியாக மகிழ்ச்சியுடன் போய்க் கொண்டிருக்கும் ஒரு கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் கொண்ட சிறிய தமிழ் குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராமல் தாக்கும் ஒரு கொடூரமே கதை. கதையில் எதுவும் புதிது இல்லை. இதே போன்ற பல சைக்கோ கதைகள் பல ஹாலிவுட் படங்களிலும், இந்தியப் படங்களிலும் சொல்லப் பட்டிருப்பதுதான், இருந்தாலும் சிறு குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது செக்ஸ் வக்கிரத்திக்குப் பயன் படுத்தும் வன்முறை இன்னமும் கூட பலரும் அறியாத ஒரு குற்றமாக இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்குப் புதிதாக வரும் தமிழர்களுக்கு ஃபிடோபைல்களைப் பற்றிய பொது அறிவு அவ்வளவாக இருப்பதில்லை. மற்றபடி வழக்கமான ஒரு சைக்கோ தாக்குதல் கதைதான்.அந்தக் கதையைச் சொல்லிய விதமும், சினிமாவாக மாற்றிய விதமுமே அருணின் அ அ வை பிற தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் வேறு படுத்திக் காட்டுகிறது.

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாகிய மணிரத்னம், கமலஹாசன் போன்றோர் முதல் இப்பொழுதைய தமிழ் பட உலகின் பிரதான இயக்குனர்களாகிய பாலா, அமீர், ஆகியோர் கூட தொடத் துணியாத யதார்த்தத்தையும், இயல்பான கதையோட்டத்தையும் அருண் தொட்டிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு மைல் கல் படம். இத்தனையாண்டுகாலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிய கமலஹாசன் கூட ஒரு சண்டை இல்லாத, வன்முறை இல்லாத, ஒரு காதல் இல்லாத, ஒரு முத்தம் இல்லாத, ஒரு காமெடி இல்லாத, ஒரு அதிரடி இல்லாத சினிமாவை எடுக்கத் துணிந்தவர் இல்லை. மலையாளத்தில் இது போன்ற முயற்சிகள் நிறைய வந்துள்ளன ஆனால் தமிழில் ஒரு பாலு மகேந்திராவின் ஒரே ஒரு முயற்சிக்குப் பிறகு ஒரு அருண் வைத்யநாதன் அத்திப் பூத்தாற் போல வந்திருக்கிறார். அமீர், சசி, பாலா போன்ற இளைய தலைமுறை இயக்குனர்களுக்கும் கூட காதல், குத்து டான்ஸ், ஆபாசக் காமெடிகள் ஆகியவற்றைத் தவிர்க்கத் தெரிந்திருந்தாலும் கூட அந்த இடத்தை கட்டற்ற வன்முறை கொண்டுதான் நிரப்புகிறார்களே அன்றி வன்முறை சார்ந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வந்து படங்கள் எடுக்கத் துணிவதில்லை. இன்னமும் மதுரை வட்டார அருவாள் வெட்டுக்களில் இருந்து இந்தப் புதிய இயக்குனர்களாலும் கூட வெளியேற முடியவில்லை. ஒன்று சதையை நம்புகிறார்கள் அல்லது உள்ளே இருக்கும் எலும்பையும் ரத்தத்தையும் நம்புகிறார்களே அன்றி, கதையை நம்புவோரும் , உலகத் தரமான படங்களை தமிழில் முயற்சிப்போரும் கூட தமிழ் சினிமா உலகில் இல்லை. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் மொழி போன்ற ஜனரஞ்சகமான படங்கள்தான் உலகத் தரமான படங்கள் என்ற ஒரு வித மாயையில் தமிழ் ரசிகர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

படத்தின் பலம் அருணின் திரைக்கதையும், இயக்கமுமேயாகும். ஸ்நேகாவும், பிரசன்னாவும் அப்படி ஒரு இயல்பான நிஜ தம்பதிகள் போலவே எங்கள் அக்கம் பக்கத்தில் வாழும் ஒரு தம்பதியினராகவே மாறி நடித்திருக்கிறார்கள். ஒரு இளம் தமிழ் தம்பதியினர் வாழும் வீட்டில் காமெராவை ஒளித்து வைத்து எடுத்தாற்போல அவ்வளவு இயல்பாக அவர்களது அந்நோன்யம் வெளிப்படுகிறது. அப்படி ஒரு கணவன் மனைவி ஸ்நேகத்தை தன் இயக்கத்தால் சாத்தியப் படுத்தியிருக்கிறார் அருண். வில்லனாக வரும் ஜான் ஷே ஒரு ஹாலிவுட் நடிகர். அவரிடமும் அவரது திறமைகள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார் அருண். ஒரு இந்திய இளம் இயக்குனரிடம் தனக்கு இப்படி ப்ரேக் கிடைக்கும் என்று அவரும் கூட நினைத்திருக்க மாட்டார். சிறு குழந்தைகளைக் கடத்திச் சென்று தன் பாலியல் இச்சைகளுக்குப் ஆட்படுத்தும் சைக்கோவாக வரும் ஜான் ஷே. வில்லன் என்பதற்காக எந்தவிதமான பிரத்யோகமான வில்லத்தனமும் செய்வதில்லை. அவரது நோக்கம் தெரிய வந்த பிறகு அவரது சிரிப்பே தேவையான அச்சத்தையும் திகிலையும் ஏற்படுத்தி விடுகிறது. இறுதிக் காட்சிகளில் நடக்கும் சண்டைகள் கூட சாதாரணமாக எந்தவித அதிரடித் திருப்பமும் வில்லத்தனமும் இல்லாத, சாதாரணமாக வீட்டில் உள்ள சாமான்களை வைத்து தள்ளு முள்ளுக்களாகவே அமைத்திருக்கிறார் இயக்குனர். ஹாலிவுட்டில் வெற்றிகரமான இயக்குனரான மனோஜ் நைட் ஷியாமளன் கூட தன் படத்தில் திகில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே சில காட்சிகளை அமைத்திருப்பார். அது போன்ற எந்தவிதமான சமரசங்களையும் தன் படத்தி நுழைக்காதது இயக்குனருக்குத் தன் திறமையின் மீதிருக்கும் முழு நம்பிக்கையைக் காட்டுகிறது.

இங்கு வாழும் பெரும்பாலான அமெரிக்கத் தமிழர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்த பிரக்ஞை அவ்வளவாக இருப்பதில்லை. தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ குழந்தைகளை பிறரிடம் நெருங்க அனுமதிக்கக் கூடாது, சிறு குழந்தைகளிடம் பாலியல் அத்து மீறல்களைச் செய்பவர்களும், கடத்திக் கொண்டு போய் அனுபவிக்கும் கொடூரர்களும் நிறைந்த உலகம் இது. இந்தியாவும் இந்த கொடுமைகளுக்கு விதி விலக்குக் கிடையாது. அப்படி பரவலாக எல்லோராலும் அறியப் படாமல் இருக்கும் ஒரு வன்முறையை இந்தப் படம் தொட்டுச் செல்கிறது. அதற்காக எந்தவிதப் பிரச்சாரத்திலும் இறங்குவதில்லை. பட ஆரம்பத்திலேயே செக்யூரிட்டி படிக்கும் நியூஸ் பேப்பரின் தலைப்புச் செய்தியாக காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய நியூஸ் இருப்பது, பாம்பு ஒன்று இரவில் சீறுவது, குழந்தை ரித்திக்கா பர்த் டேவுக்குப் போகும் வீட்டில் காணாமல் போவது அங்கு சின்னாபின்னமாக இருக்கும் பொம்மைகள், கவுண்ட்டி ஃபேரில் கோமாளி குழந்தையிடம் நெருங்குவது, ராபிட்சனின் தவிப்புகள், காணாமல் போகும் சிறுவனின் தாய் தூரத்தில் அழுவது, என்று ஏராளமான இடங்களில் மிக மென்மையாக தனது இயக்குனர் முத்திரையை துருத்திக் கொண்டு தெரியாமல் மிக மிக சப்டிலாகப் பதித்திருக்கிறார் அருண். பிரசன்னா, ஸ்நேகா, குழந்தை அக்‌ஷயா, ஜான் ஷே ஆகிய அனைவரின் முழுத் திறமையையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார். பிரசன்னாவின் அலுவலக நண்பராக நடித்திருக்கும் நவீண் நாதன் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பிரபலமான நாடக நடிகர். அவரது இயல்பான நடிப்பையும் நன்கு பயன் படுத்திக் கொண்டிருக்கிறார் அருண். பிரசன்னா தன் மெருகேறிய அமைதியான மென்மையான நடிப்பினால் நம்மைக் கவர்கிறார். தமிழில் இவரது திறமைகள் வீணடிக்கப் படாமல் இருந்தால் நடிப்பில் பல உயரங்களை எட்டும் திறமை கொண்டவராகவே நம்பிக்கையளிக்கிறார்.

கார்த்திக் ராஜாவின் இசையில் வரும் காட்சிகளின் பின்னால் மெலிதாக வரும் பாடல்கள் யாவும் சிறப்பாக கேட்டவுடனேயே மேலும் கேட்க்கத் தூண்டும் பாடல்களாக அமைந்துள்ளன. படம் முழுவதும் வரும் பின்னணிக் காட்சிகளில் வரும் இசையும் கூட அதிர வைக்காமல் மிரட்டாமல் சூழலுடன் இணைந்து செல்கின்றன. வில்லன் தன் விரக தாபத்தில் நெளியும் காட்சிகளுக்கு இசைக்கப் பட்டிருக்கும் இசை குறிப்பிடத் தக்கது.


முதல் படம் என்பதினால் சாதாரணமான கதையாக இருந்தாலும் தன் சொந்தக் கதையை நம்பியே இறங்கியிருக்கிறார் அருண், அடுத்த முயற்சிகளில் இருந்து தமிழின் திறமையான எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பயன் படுத்தி தன் முழுத் திறமையையும் இயக்கத்தில் மட்டுமே செலவிடலாம்.

இந்தப் படம் அருண் வைத்யநாதனிடம் இருக்கும் திறமையை வெளிக் காட்டியுள்ளது. இனி துணிந்து தயாரிப்பாளர்கள் தயக்கமில்லாமல் இவரிடம் நம்பி படங்களை ஒப்படைக்கலாம். எளிதில் திறக்க முடியாத தமிழ்த் திரையுலகின் இரும்புக் கதவுகளைத் திறக்கும் சாவியை, தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய அலையைப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பாஸ்போர்ட்டை அருணுக்கு இந்தப் படம் அளித்துள்ளது. விவேக்/வடிவேலு காமெடி இல்லாமலும், முமைத்கான் ஆட்டம் இல்லாமலும், முலைகளின் மேல் முதலீடு செய்யாமலும், லிட்டர், லிட்டராக ரத்தம் கொட்டாமலும், அருவாள்கள் இல்லாமலும், பொறுக்கிகளின் காதல் கதைகளை நம்பாமலும் மிக நேர்த்தியாக மலையாளப் படத்திற்கு இணையாக தமிழிலும் ஒரு சினிமா செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அருண். அவர் காட்டியுள்ள பாதையில் ஒரு சில படங்களேனும் வருடத்திற்கு எடுக்கப் படும் என்றால் தமிழ் சினிமாவிலும், தமிழர்களின் ரசனையிலும் ஒரு ஆரோக்யமான ஒரு மாற்றம் ஏற்படும். அருண் பாதையில் தமிழ் சினிமா போகப் போகிறதா அல்லது தமிழ் சினிமா பாதையில் அருண் போகப் போகிறாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

- ச.திருமலை

Read More...

Monday, July 27, 2009

பெரியாரின் பேச்சும், எழுத்தும் எல்லோருக்கும் பொது - நீதிபதி

திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் குடியரசு பத்திரிகை நடத்தினார். இதில் 1925 முதல் 1938-ம் ஆண்டு வரை கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி-மதம் இல்லை, பிராமணர் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, தேசிய ஒருமைப்பாடு போன்றவை குறித்து எழுதி வந்தார்.

இதனை 27 பாகங்களாக தொகுத்து வெளியிட பெரியார் தி.க. கடந்த ஆண்டு முடிவு செய்தது.

இதையடுத்து பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளரும், தி.க. தலைவருமான கி.வீரமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பை வெளியிட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. எனவே இதை பெரியார் தி.க. வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஆண்டு சொற்பொழிவு தொகுப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணை கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கினார்.

’’பெரியாரின் பேச்சும், எழுத்தும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் கால கட்டங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் அவர் கருத்துக்களை தைரியமாக எடுத்துரைத்தார்.


காப்பிரைட் (காப்புரிமை) என்ற பெயரில் அவருடைய எழுத்தையும் பேச்சையும் முடக்கி வைக்க கூடாது. அவருடைய கருத்துக்களை வழக்கு ஆவண கட்டுக்குள் மூடி வைத்து விடக்கூடாது.

பெரியாரின் 130-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரது சொற்பொழிவு, எழுத்துக்கள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்து இரு பிரிவினர் சண்டை போடுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

பெரியாரின் சொற்பொழிவு, தத்துவங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவே பெரியார் தி.க.வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அவர்கள் பெரியாரின் சொற்பொழிவு தொகுப்புகளை வெளியிடலாம்.

இதற்கு எதிரான வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’என்று தீர்ப்பளித்தார்.


Read More...

Sunday, July 26, 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு ராதாரவி கண்டனம்

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்து தான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் `ஸ்லம் டாக் மில்லினர்' அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படஉலகை மறந்துவிட்டார்.

அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ கலைஞர்களுக்கு மற்ற மாநிலத்தில் தான் மதிப்பு ஜாஸ்தி. உத: டி.கே.பட்டம்மாள்

Read More...

நோ கமெண்ட்ஸ்தூ'ன்னு துப்ப முடியாது ஏன்னா பல் இடுக்குல மாட்டிகிட்டது து.பருப்பு !

Read More...

Saturday, July 25, 2009

பாட்காஸ்ட்


ஒவ்வொரு வாரமும் இந்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எதைப் பற்றிப் பேசப்போகிறார்கள், என்பதன் முன்னறிவிப்பையும், கிழக்கு பதிப்பகத்தின் புதிய நூல்கள் பற்றி அறிவிப்பையும், மொபைலில் எஸ் எம் எஸ்ஸாகப் பெற விரும்புகிறவர்கள் START NHM என டைப் செய்து, 575758 என்கிற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி பொற்றுக்கொள்ளலாம்.

Read More...

Friday, July 24, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - ஓரு தந்தையின் அனுபவம்

சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 - சுரேஷுக்கு நேர்ந்த அனுபவம் இங்கே பதிவாக. இதை கோபிநாத் "குற்றம் நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் போடுவாரா ?


திரு. எடிட்டர் அவர்களுக்கு,

ஸ்டார் விஜய் டிவியில், சமீபகாலமாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற என் மகன் சாய் அபிஜித்தும் சி.டி.யில் குரல் வளத்தைப் பதிவு செய்து அனுப்பி, அதன் வாயிலாக சென்னை வர்த்தக வளாகத்தில் 7.7.2009 அன்று நடைபெற்ற ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டி.வி.யிலிருந்து கடிதமும் கொரியர் மூலம் பெற்று என் மகனும் கலந்து கொள்ளச் சென்றான்.
காலை 8 மணிக்கே நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் இருப்பது அவசியம் என்பதால், நேரத்திலேயே அங்கு சென்றடைந்தோம். அங்கோ சுமார் ஆயிரம் சிறுவர் சிறுமியருக்கு மேல் தம் பெற்றோருடன் வெயிலில் 9.00 மணி வரை காத்திருந்து படிவம் பெற்று நிகழ்ச்சியும் 11.30 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சி முழுவதற்கும் மூவர் மட்டுமே நடுவர்களாக அறிமுகமும் செய்து வைக்கப்பட்டு, சுமார் 12 மணி அளவில் குழந்தைகள் குரல் வளத்தை நிரூபிக்கும் ஆடிஷனும் தொடங்கியது. எம்மையும் மற்றும் சிலரையும் 2 மணியளவில் கூப்பிடுவதாக அறிவித்தனர். ஆனால் மாலை 4.30 மணிவரையிலும் 625 சிறுவர் சிறுமியரே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர்.
என் மகனின் அடையாள எண்ணோ 1364. 12 மணியிலிருந்து 4.30 மணி வரையிலும் 625 பேர்களே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் 4.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சுமார் 900 பேர் ஆடிஷன் முடித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனில் எந்த அவசர கோலத்தில் இந்நிகழ்வு முடிக்கப்பட்டது என்பதை அனைவரும் உணரலாம். என் மகனை ஆடிஷன் செய்ய நடுவர் பாப் ஷாலினி இருந்தார். இவன் இரண்டு வரிகூட பாடாத நிலையில் அடுத்து வேறு பாடலை பாட பணித்துள்ளார்.
ஷாலினி அவர்கள் இரண்டாவ பாடலிலும் இரண்டு வரிகளைக்கூட கேட்காமல் Rejected என்ற பொத்தானை அழுத்தி என் மகனை அனுப்பி வைத்துவிட்டார்.
என் மகன் பாடுவது இது முதல் முறையல்ல. கடந்த 4 ஆண்டுகளாக இன்னிசை நிகழ்ச்சிகளில் திரைஇசை பாடல்களை பாடி வருபவன்தான். இவர்கள் எந்த அளவுகோலை வைத்து குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிரே. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படாத பல குழந்தைகள் கண்களில் கண்ணீருடன் மன அழுத்தத்தோடு வெளிவருவதை பார்த்தால் பெற்றவர்களும் மற்றவர்களும் மனமுடைந்து போவர். அதிலும் மன வேதனையில் வரும் குழந்தைகளையும் விஜய் டி.வி. கேமரா ஆபரேட்டர்கள் துரத்தித் துரத்திப் படம் பிடிப்பது எதற்கென்றே தெரியவில்லை.
தயவு செய்து எந்த டி.வி. சேனலாகட்டும். சின்னஞ் சிறுவர்களின் எதிர்காலத்தை, கனவுகளை அழித்துவிடாதீர்கள் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள். உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து வளர்க்க வேண்டிய சின்னஞ்சிறார்களை பெற்றோரும், மீடியாக்களும் அதளபாதாளத்தில் தள்ளிவிடாதீர்கள். இன்றைய சின்னஞ் சிறியோரே நாளைய ஒரு SPBஆகவோ அல்லது ஆஸ்கார் புகழ் ரஹ்மானாகவோ தோன்ற வல்லவர்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வோமாக... வாழ்க இந்தியா... வெல்க நமது இளைஞர் பட்டாளம்.

இவண்,
ஏ.ஆர். சுரேஷ்,
ஆழ்வார்திருநகர் அனெக்ஸ்,
சென்னை – 87.
[ Edited Address and Phone numbers ]


Read More...

சினிமாவுக்கு கலைஞர் தந்த இனிமா - வாலி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் `பொன்னர் சங்கர்’ திரைப்பட தொடக்க விழாவில் காவியக் கவிஞர் வாலி வாழ்த்திப் பாடிய கவிதை..

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது
அக்கரைத் தமிழே!
எங்கள் மண்
என்னும் பெண்
மங்கலம் காக்கும்
குங்குமச் சிமிழே!
நீ மட்டும் இல்லையெனில் - புகழ்
நீண்ட இனத்தாரின் -
நிலையும் கலையும்
நீர்க்குமிழே!
***

உனது பேனா - ஓர்
உறை வாள்; அதன்
உள்ளே தமிழ்த்தாய்
உறைவாள்!
முடை நாற்றமெடுக்கும்
மூடத் தனங்களின்
முனைகள்
முறியுமா தானா? - அவற்றை
முறித்திருக்கிறது -
மூனா கானா பேனா!
***
உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது!
உலக
உருண்டையில் -
ஒரு மூலையில் உள்ள
ஒரு தமிழனுக்கு -
ஜலதோஷம் என்றால் - உனக்குத்
தும்மல் வருகிறது; அவனுக்கு
சந்தோஷம் என்றால் - உனக்குத்
துள்ளல் வருகிறது!

***
தாழ்ந்திருந்தது
தமிழன் தகத்து; அதை
உயர்த்தியது
உந்தன் எழுத்து!
உன் தமிழெனும் சம்மட்டியால்
தகர்த்திருக்கிறாய்,
எத்துணையோ தடவை
எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;
உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

***உன்
வருகைக்கு முன் ...
மடமையெனும்
மலச்சிக்கலில் -
தவித்துக் கிடந்தது
தமிழ் சினிமா: அதன்
குடல் சுத்தமாக - நீதான்
கொடுத்தாய் இனிமா!

***
தமிழின்
தகத்தகாயமான
உயரங்களை
உனது -
வசனம் தொட்டது; தமிழுக்கு
விசனம் விட்டது!
***
தித்திக்கத்
தித்திக்க - நீ
தீட்டிய
தீந்தமிழ் -
உரையாடல்களை
உச்சரித்த
உதடுகளுக்கு வந்தது
சர்க்கரை வியாதி; தமிழ்
உலகுக்கு வந்தது
சமூக நீதி!

***
நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

***
திரும்பவும் கலைஞரின் பேனா
திறக்கிறது மூடி; அது
புதுரத்தம்
பாய்ச்ச -
கும்மென்றிருக்கும்
கோடம்பாக்கத்தின் நாடி!
கலைஞரின்
கைவண்ணத்தில் வரும்
‘பொன்னர் சங்கர்’ - ஒரு
வின்னர் சங்கர்!

கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை! ( நன்றி: Kasu Sobhana)


Read More...

இடைத்தேர்தல் புறக்கணிப்பு யாருக்கு லாபம் ?

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக, பா.ம.க, மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. தேர்தல் புறக்கணிப்புக்கு 'அடுத்த திருமங்கலம்' என்று கூறி, எதற்கு நாங்கள் போட்டி போடணும் என்று இவர்கள் சொல்லும் காரணம்.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி இப்படி செய்யலாமா என்று சில பத்திரிக்கைகள் கேள்வி எழுப்புயுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதும் கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எதிர்கட்சி தலைவியிடம் பொறுப்பை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ? பொது மக்களுக்கு பொறுப்பு பற்றிய கவலையைவிட பருப்பு பற்றிய கவலை தான் தற்போது அதிகம்.

இந்த தேர்தல் புறக்கணிப்பே காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க அம்மாவின் மூவ் என்கிறார்கள் சிலர். எப்படி என்று யாரும் விளக்கம் அளிக்கவில்லை. திமுக தலைவர் தான் சாப்பிடும் உணவில் கூட காங்கிரஸ் கூட்டணி உணவாக சாப்பிடுகிறார். அப்படி இருக்க அம்மாவால் எப்படி கூட்டணியை உடைக்க முடியும் ?

ஆனால் ஒன்று நிச்சயம் - தேமுதிக இந்த தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிடும். யார் ஜெயித்தால் நமக்கு என்ன யார் தோற்றால் நமக்கு என்ன ? இந்த ஐந்து தொகுதி மக்களுக்கும் பணத்தைத் தராமல் போனால் வாக்காளர்கள் ஏமாற்றமடைவார்களே என்பதுதான் இட்லிவடையின் ஆதங்கம்.

கடைசி செய்தி: இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டி என்கிறார் இல.கணேசன். அட்லீஸ்ட் தமிழ் இந்து மும்தாஜை நம்பி இருக்கிறது ஆனால் இவர் யாரை நம்பி இருக்கிறார் ? ஆண்டவா !


பிகு: மானஸ்தன் லீவில் இருக்கிறார். முதல் பின்னூட்ட இடம் காலியாக இருக்கிறது.

Read More...

Wednesday, July 22, 2009

கலாம் - காந்தி - நமக்கு என்ன ?

புதிய செய்தி...
இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்கா செல்லும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கலாம் ஏறுவதற்கு முன்பு அவ்விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சாதாரண பயணியைப் போல சோதனை நடத்தியதாக கலாமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கலாம் இவ்விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும் தற்போது இவ்விவகாரம் வெளியே வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'இப்போதுதான் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை மன்னிப்புக் கேட்குமாறும் கூற உள்ளோம்' என்றார் அவர்.

இந்நிலையில், அவ்விமான நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபர்ணா கூறுகையில், இது விமான பாதுகாப்பின் வழக்கமான சோதனைதான் என்றும் விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு என சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பழைய செய்தி கீழே...


அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது காந்தி சமாதிக்கு அவர் செல்வதற்கு சற்று முன்பாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் சமாதியை சுற்றிலும் மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தினர். இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் அவர்கள் இப்படி கீழ்த்தரமாக சோதனை நடத்தியது நாடு முழுவதும் பேசப்பட்டது. இன்று போல் அன்றும் பாராளுமன்றத்தில் இந்த பிரச்னையை எதிர்கட்சிகள் கிளப்பி தங்கள் மன வேதனையை வெளிப்படுத்தின.


காந்திக்கே இந்த நிலமை என்றால் ?

Read More...

Monday, July 20, 2009

மந்திரி ராஜாவுக்கு அபராதம் - ஜூவிக்கு 10K தருகிறார்

மத்திய அமைச்சர் ராஜா பற்றி செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு விதிக்கப் பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறது...

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அமைச்சர் ராஜாவு பற்றி ஜூனியர் விகடன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. தனக்கும், தனது குடும்பத்திற்கு எதிராக அப் பத்திரிகை செய்திகள், படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளி யிட்டு வருகிறது என்றும், இவை உண்மைக்கு மாறானவை என்றும், எனவே இவற்றை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்


என்று மத்திய அமைச்சர் ராஜா சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 28.4.2009-ல் உத்தரவு பிறப்பித் திருந்தார். இந்த தடையை நீக்கக்கோரி விகடன் பத்திரிகை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் என்ற முறையில், பொது நபர் என்ற அடிப்படை யிலேயே ராஜா பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தில் நடைபெற்ற விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திகள் வெளியிடப்பட்டன. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை யைப்பற்றி செய்திகள் வெளியிட வில்லை. எனவே இதில் அவதூறு என்பதற்கு இடமில்லை.

மேலும் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தை தான் நாங்கள் வெளியிட்டோம். எனவே, தடையை நீக்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சந்ரு, இடைக்கால தடை விதிப்பதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் பற்றியும், அவர்களுடைய குடும்பத் தினரை பற்றியும், கடந்த கால வாழ்க்கை குறித்தும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள முழு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட வாழக்கையும் வெளிப்படையாகி விடும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்தி வெளியிடவில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள வர்கள் தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடாமல் தடுக்க முன் தடை பெறுவதற்கு எந்த சட்டமும் இல்லை.

இப்படி தடை விதிக்க முற்படுவது விமர்சன குரல் வளையை நெறிக்கும் முயற்சியாகும். அரசியல் நோக்கத்தோடு விதிக்கப்படும் தணிக்கைக்கு சமமானதாகும் என்றும் அத்தகைய நடவடிக்கை ஆட்சேபனைக்கு உரியது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை அலட்சியப்படுத்த வேண்டும். சில நேரங்களில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கப்பட முடியாததாகும். எனவே, ஏற்கனவே விதிக்கப்டடிருந்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது.

மேலும் மனுதாரருக்கு (மந்திரி ராஜா) ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ஜூனியர் விகடனுக்கு வழங்க உத்தரவிடுகிறேன்.


மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....." முன்பு கலைஞர் சொன்னது.

( படம்: Description:Communications and IT Minister A. Raja gestures while replying, on being cornered by journalists about irregularities over the allocation of radio spectrum for high-speed mobile services in New Delhi, 07 November 2008 )

Read More...

Sunday, July 19, 2009

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

கர்நாடக இசை உலகில் மாமேதை என்று சொல்லலாம் டி.கே.பட்டம்மாளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடையை மீறி மேடைகளில் பாரதியா‌ரின் பாடல்களை பாடியவர். இந்தியா சுதந்திரமடைந்தபோது (அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு) அகில இந்திய வானொலியில் பாரதியா‌ரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடலை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.


ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.


இந்திய படை வீரர்களுக்காக 1999ல் சென்னையில் 18 மணிநேர கச்சேரி செய்து நிதி திரட்டினார்.


காஞ்சிபுரத்தில் 1919ல் பிறந்த டி.கே.பட்டம்மா‌ள், தனது பத்தாவது வயதிலேயே வானொலியில் பாடினார். மத்திய அரசு 1971-ம் ஆண்டு இவருக்கு `பத்ம பூஷண்' விருதையும், 1998-ம் `பத்ம விபூஷண்' விருதையும் வழங்கி கவுரவித்தது.

அவரது மறைவுச் செய்தி வெளியானதும் கலைஞர்கள் பல திரளாகச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். எதிர்கட்சி‌க் தலைவர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டார்.

பாரதியின் பாடல்களை பரப்பியதில் கணிசமான பங்கு வகித்தவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடையை மீறி மேடைகளில் பாடியவர், 'பத்ம பூஷண்','பத்ம விபூஷண்' போன்ற விருதுகளை வாங்கியவரை, தமிழக அரசு மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கண்டுக்கொண்டதாக இதுவரை செய்தி இல்லை. அவரது மறைவுக்கு அரசு சார்பில் எவ்வித இரங்கல் செய்தியும் வெளியிடப்படவில்லை. அரசு சார்பில் அமைச்சர்களோ, அதிகா‌ரிகளோ அஞ்சலி செலுத்தியதாகவும் செய்தியில்லை.

பிரபல சரோட் இசைக் கலைஞரான உஸ்தாத் அலி அக்பர் கான், அமெரிக்காவில் போன மாதம் காலமானார். பிரதமர் உடனே இரங்கல் செய்தி வெளியிட்டார். டி.கே.பட்டம்மாள் பற்றி யாரும் அவருக்கு சொல்லவில்லை போலும். வாழ்க!

சென்னை கிரீன்வேஸ் சாலை டிஜிஎஸ் தினகரன் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை படுக்கையிலிருந்தே கருணாநிதி கையெழுத்திட்டார் போன்றவை சில பழைய செய்திகள்.

இரங்கல் கவிதை தேவையில்லை, முதலமைச்சர் என்ற முறையில் இல்லை என்றாலும் கலைஞர் என்ற முறையில், இரண்டு வரி இரங்கல் செய்தி தெரிவிக்கலாம்( பிரமணராக இருந்தால் கூட )

Read More...

Saturday, July 18, 2009

விகடனுக்கு கலைஞர் போட்ட பூணூல்

இங்கே படம் இருந்தது :-)

விளக்கம் கீழே...

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! என்ற விகடன் கட்டுரைக்கு முரசொலியில் ஆண்டி போண்டி கருத்து...

ஆண்டி :- "ஏன்ய்யா ‘நீயின்றி நானில்லை’ என்ற திரைப்படத் தலைப்பு - ஜெயலலிதா எழுதிய கதையின் தலைப்பு - என்பதாக ஆனந்த விகடனில் அரசியல் அறியாத் தமிழன் மிரட்டியிருக்கிறாரே?"

போண்டி:- "அரசியல் அறியாத அந்தத் தமிழனுக்கு திரைப்படங்கள் பற்றியும் எதுவும் தெரியாது போலிருக்கிறது. விகடனை நிறுவிய எஸ்.எஸ்.வாசன் ‘நந்தனார்’ படத்தைத் தயாரித்து வெளியிட்ட போது - இன்னொரு ‘நந்தனார்’ படமும் அதே சமயம் திரையிடப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது போலும்! ரஜினி நடித்த பில்லா - இப்போது அஜித் நடித்த ‘பில்லா’வாக வெளியிடப்படவில்லையா? நீயின்றி நானில்லை ஜெயலலிதாவின் தலைப்பு என்று அறியாத் தமிழன் மிரட்டலாமா?

கருணாநிதிக்கு பகிரங்கக் கடிதம் என்று எழுதி கலைஞர் மீது சேறுவாரி இறைத்துள்ள - இந்த ஈர விறகாக இருக்கமுடியாத - அரசியல் அறியாத் தமிழன் "ஜெயலலிதா வுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்" என்று அவரது சோபன்பாபு காலத்திய வாழ்வு - வாக்கில் தொடங்கி - இன்று வரையிலான விவரங் களைத் தொகுத்து எழுதித் தந்தால் - விகடன் ஆசிரியர் வெளியிட்டு விடுவாரா? பூணூல் இல்லாத - அல்லது பூணூல் போட்டுக் கொள்ள முடியாத அந்த அறியாத் தமிழன் யோசிக்கலாமே!"
( நன்றி: முரசொலி )

படம்: கலைஞர் அடிக்கடி விகடனுக்கு பூணூல் போடுகிறாரே, பூணூல் போட்டால் விகடன் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் ஹி ஹி

Read More...

Friday, July 17, 2009

கிணறு வெட்ட பூதம்...!ஸ்ரீ ரமேஷ் சதாசிவத்தின் உண்மை கதை. கடந்த 6 வருடங்களில் இந்த மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை. சினிமாவில் போலி ஹீரோக்களை பார்த்து கைத் தட்டுகிறோம். நிஜ ஹீரோவை இங்கே பாருங்கள்...

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.

- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.

இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ...

சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனில் நீர் கடந்த ஒன்பது மாதங்களாக துர்நாற்றம் அடித்து வருகிறது. இது பற்றி மேன்ஷன் உரிமையாளர் திரு.நாராயணனிடம் புகார் செய்தேன். அவர், "நீ மட்டுந்தாப்பா இப்படி சொல்ற. நான் உன் ஒருத்தனுக்காக போர்ல கை வைக்க முடியுமா? புடிச்சா பாரு, இல்ல காலி பண்ணிக்க" என்றார். உடனடியாக வேறு இடம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால், வேறு இடம் பார்க்கும் எண்ணத்தை அப்போதைக்கு தள்ளி வைத்தேன். பின்னர் இது பற்றி மற்ற அறைவாசிகளிடம் பேசிய பொழுது, அவர்களும் நீரின் தரம் குறித்து அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பதும், அவர்களும் திரு.நாராயணனிடம் புகர் செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு திரு.நாராயணன் அவர்கள், 'நீ மட்டுந்தான் சொல்ற, பிடிக்கலன்னா காலி பண்ணு' வசனம் பேசியிருந்ததும் தெரிய வந்தது. இதனால் பத்து பேர் ஒன்றாக சென்று புகார் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

ஒரு கூட்டமாக எங்களை கண்டவுடன் திரு.நாராயணன் தன் வசனத்தை சற்றே மாற்றினார். , "தம்பி நீங்க எப்பவோ ஒரு நாள் வந்த வாசனைய இன்னும் நினச்சுட்டு இருக்கீங்க. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க இருக்கீங்க? பேசாம காலி பண்ணிருங்க!."

"சார் நாங்க காலி பண்ணும் போது பண்றோம். இருக்குற வரைக்கும் குளிக்க வேணாமா? அந்த பம்பையாவது ஆஃப் பண்ணி வைங்க சார். அந்தப் பம்ப போட்டா தான் தண்ணி நாறுது."

"அதப்பெடி காசு செலவு பண்ணி பம்ப வெச்சிட்டு, அத போடாம இருக்கிறது? பம்பு கெட்டு போயிராதா? நீங்க என்னா என் பில்டிங்க்ல இருந்துக்குட்டு என்ன அதை செய்யு இத செய்யுன்னு சொல்லிக்கிட்டு? பிடிச்சா இருங்க, இல்ல காலி பண்ண வேண்டியது தானே?"

இவர் இந்த காலி பண்ணு வசனத்தை தவிர வேறெதுவும் பேச மாட்டார் என்பது புரிந்தது.

"சரிங்க சார். தண்ணிய டெஸ்ட் பண்ணலாம். அப்படி தண்ணில ஏதோ தப்பிருக்குன்னு ரிசல்ட் வந்தா, அப்பவாவது ஏதாச்சும் செய்வீங்களா?", என்றேன்.

டெஸ்ட் என்கிற வார்த்தை அவருக்குள் அமிலம் கக்கியது போலும். மனிதர் சற்றே படபடத்தார்.

"பண்ணுயா. பண்ணு. நீ பண்ற டெஸ்ட்டு என் பில்டிங்க்ல இருக்க நூறு பேருக்கு நல்லது பண்ணுதுன்னா, அதப் பாத்து சந்தோஷப்படுற மொதல் ஆளு நான் தான்."

"சரி நான் டெஸ்ட் ரிசல்டோட வந்து உங்கள பாக்குறேன்" என்றேன்.

தலையை சொறிந்தவர், "உனக்கேன் வீண் சிரமம். அதக் கூட நானே பண்ணிக்கறேனே!" என்றார்.

அவர் பண்ண மாட்டார் என்பது தெரியும்.

எழிலகத்தில் உள்ள தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை அணுகினேன். அவர்கள் நீரில் மனித மலம் கலந்திருப்பதாக சான்றிதழ் வழங்கினார்கள். அதிர்ச்சியும் ஆத்திரமும் என்னை ஆட்கொண்டன. தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இளநிலை நீர் ஆய்வாளர் திருமதி. சந்த்ரிகா நாங்கள் பயன் படுத்தும் நீரில் மனித மலத்தின் கலவை மிக அதிக அளவில் இருப்பதாக கூறினார். நூற்றுக்கு ஒன்று இருந்தாலே அந்த நீர் பயன்படுத்த அருகதையற்றதாகிறது, அப்படி இருக்கையில் நூற்றுக்கு முப்பத்தாறு என்கிற விகிதம் எள்ளளவும் சகித்துக்கொள்ள கூடிய அளவில்லை என்றார். இந்த சான்றிதழை காட்டிய பிறகும் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் திரு.ஷண்முகம் அவர்களிடம் இது பற்றி பேசும் படி கூறினார்.

அன்றிரவே சான்றிதழோடு மேன்ஷனின் ஒவ்வொரு அறைக்கும் அன்வர், அனிமேட்டர் பாலா, மற்றும் நான் ஆகிய மூவரும் சென்று நாங்கள் பயன்படுத்தும் நீர் எவ்வளவு அருவருக்கத்தக்கது என்பதை சக மேஷன் வாசிகளிடம் எடுத்துச் சொன்னோம்.

எங்கள் மேஷனில் ஒரு அலுவலக அறை உள்ளது. அந்த அறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை ஏழு மணிக்கு பூஜை செய்ய திரு.நாராயணன் வருவார். அந்த நேரத்தில் மேன்ஷனில் உள்ள அனைவரும் ஒன்றாக சென்று சான்றிதழோடு திரு.நாராயணன் அவர்களை சந்தித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய்யும்படி கோரிக்கை வைப்பதென முடிவெடுத்தோம். அன்று அவர் வருவது தெரிந்தவுடன் அனைவரும் அலுவலக அறைக்கு வந்தார்கள். சான்றிழின் பிரதியொன்றை அவரிடம் கொடுத்தேன். அவர் சான்றிதழையும் கூட்டத்தையும் கண்டவுடன் மிரண்டார். "சரி இப்ப என்ன அந்த பம்ப போடக் கூடாதா? சரி, போடல. யப்பா வாட்ச் மேன், இனி அந்த பம்ப போடாதப்பா." அவர் அப்போதைக்கு நிலைமையை சமாளிக்க அப்படிச் சொல்கிறார் என்பது எங்களுக்கு புரிந்தது.

"சார், ஒரு ப்ளம்பர கூப்பிட்டு எங்க கசிவு இருக்குன்னு பாக்க சொல்லுங்க சார். அதுவரைக்கும் ஒரு அடி பம்ப் போட்டுக் கொடுங்க"

"சரி சொல்றேன்" தன் கைபேசியை எடுத்தார். ப்ளம்பரை அழைக்க முயற்சித்தார். பின்னர் எங்களிடம், "பாரு உங்க முன்னாடி தான் நான் ஃபோன் பண்றேன். எடுக்க மாட்டேங்கறான். என்ன என்னப்பா செய்ய சொல்றீங்க?"

"சார் மெட்ராசில ஒரே ப்ளம்பர் தான் இருக்காரா?" கூட்டத்திலிருந்து குரல் வந்தது.

"நீங்க கேட்குறது ரைட்டு தான் தம்பி.." தலையை சொறிந்தவர், "ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. ரெடி பண்ணிறேன்", என்றார்.

கூட்டம் கலைந்தது.அவரின் கலக்கமும் தான். அடுத்து ஒரு வாரம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வாரம் கழித்து நிதானமாக ஒரு துறுப்பிடித்த அடி குழாயை மாட்டினார்.

என் தம்பி வேறு எங்காவது அறையெடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான். "இது லேலைக்கு ஆகாது" என்றான்.

"சரி போகலாம். அங்கயும் இது மாதிரி வேற பிரச்சனை இருந்தா? மறுபடியும் வேற எடம் தேடுறதா?"

"சண்ட போடணும்னா போடலாம். நம்ம வேலையையும் பாக்கணும் இல்ல?"

"அப்புறம் ஏன் ராமர பத்தி, கிருஷ்ணர பத்தி, காந்தி பத்தியெல்லாம் பெரும பேசணும். அந்த அரசியல்வாதி அப்படி தப்பு பண்றான் இவன் இப்படி பண்றானு வாய்க் கிழிய பேசிட்டு கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குது அத அப்படியே விட்டுட்டு விலகி போயிறதா? அவன் மாசம் ரெண்டு லட்சம் சம்பாரிப்பான். ஆனா அவனுக்கு காசு கொடுக்கிறவனுக்கு நல்ல தண்ணிக் கூட கொடுக்க மாட்டான். அத அப்படியே விட்டுட்டு நாம விலகிப் போகணும். நம்ம என்ன சும்மாவா கேட்குறோம்? காசு கொடுக்கல?"

என் தம்பி ஒரு புன்னகை உதிர்த்தான். "சரி, அடுத்து என்ன பண்றது?"

நான் மீண்டும் ஒவ்வொரு அறைக்கும் சென்று அனைவரையும் சந்தித்து அவர்களின் கையெழுத்தை பெற்றேன். அந்த காகிதத்தோடு தண்ணீர் மற்றும் மின்சார குறைபாடுகள் பற்றிக் கூறி அவற்றை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக் கொண்டு அப்படி நிவர்த்தி செய்யாத பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு நீதி மன்றத்தை அணுக வேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிட்டு ஒரு பதிவுத் தபால் ஒன்றை அனுப்பினேன். அந்த தபாலை பெற திரு.நாராயணன் மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் என் அறைக்கு வந்து என்னை காலி செய்து விடும்படிக் கூறி சண்டைப் போட்டுவிட்டுப் போனார்கள். கடிதம் என்னிடம் திரும்பி வந்தது.

எழிலகத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் திரு.ஷண்முகம் அவர்களை சந்தித்தேன். அவர் நடந்தவற்றையெல்லாம் ஒரு புகாராக எழுதி நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆணையர் திரு.ராஜாராமன் இ.ஆ.ப அவர்களிடம் கொடுக்கச் சொன்னார்.

திரு. ராஜாராமன் அவர்கள் என் புகாரையும் நான் சமர்ப்பித்த சான்றிதழையும் அடிப்படையாக கொண்டு திரு.நாராயணனிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அது மட்டும் அல்லாது, சென்னை மாநகராட்சி, சென்னை குடி நீர் வாரியம், மற்றும் மின்சார வாரியம் ஆகியவற்றுக்கும் கடிதம் அனுப்பி மேன்ஷனின் நிலைப் பற்றி விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். எங்கள் மேஷன் மட்டும் அல்லாது சென்னையின் அனைத்து மேன்ஷனின் நிலை பற்றியும் விசாரணை நடத்தும் படி பரிந்துரை செய்தார்.

நாராயணன் திரு.ராஜாராமன் அவர்கள் அனுப்பிய பதிவுக் கடிதத்தையும் பெற மறுத்தார். கடிதம் மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கே சென்றது. மீண்டும் நாராயணன் என்னிடம் வந்து மேன்ஷனை காலி செய்துவிடும்படி காரசாரமாக கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் திரு.ராஜாராமன் அவர்களின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு வாரியம் வாரியாக அதிகாரிகள் பிரவேசிக்கத் துவங்கினார்கள்.

முதலில் குடிநீர் வாரியத்தில் இருந்து ஒரு பொறியலாளர் வந்தார்.

குடிநீர் வாரியம் வழங்கும் நீரில் குறையிருந்தால் மட்டுமே தன்னால் நிவர்த்தி செய்ய முடியும் என்றும். இங்கு பிரச்சனை போர் பம்ப்பில் இருப்பதால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக் கிழமை காலை சுமார் பத்து மணியளவில் மாநகராட்சியிலுருந்து வந்திருக்கும் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாக நாராயணனின் மகன் என்னை அழைத்தார். நான் வெளியே சென்று பார்த்த பொழு இடுப்பில் கைககளும் கண்களில் கனலும் வைத்தபடி ஒரு குண்டான மனிதர் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன், "ஏன்யா தண்ணி சரிலைன்னா வேற மேன்ஷனுக்கு போறது தானே?" என்றார். நான் அவர் பெயரைக் கேட்டேன். அவர் சொல்ல மறுத்தார். சுகாதாரத் துறையிலிருந்து வந்திருப்பதாக சொன்னார். "சார், உங்கள விசாரணை பண்ணி நடவடிக்கை எடுக்க சொல்லி அனுப்பிருக்காங்க. முடிஞ்சா பாருங்க.. இல்லனா விடுங்க நான் கன்ஸ்யூமர் கோர்ட்ல பாத்துக்குறேன்" என்று சொல்லி விட்டு நான் கிளம்பிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து தேனீர் பருகச் சென்றேன். திரும்பி என் அறைக்கு வந்த பொழுது என் தொலைப்பேசி இணைப்பு ஜன்னலருகே துண்டிக்கப் பட்டிருந்ததை கண்டறிந்தேன். யார் வேலை என்பது புரிந்தது. பி.எஸ்.என். எல்-லில் பின்னர் புகார் செய்யலாம் என முடிவு செய்து என் கணினியை துவக்கினேன்.

என் அறைக்குள் நாராயணன், அவரது மகன், வாட்ச் மேன் மற்றும் ஒரு தடியர் ஆகிய நால்வரும் வந்தார்கள். நாராயணனும் அவரது மகனும் என் அறையினுள் நின்றார்கள். தடியர் வாச்சற்படியில் நின்றார். வாட்ச் மேன் அறைக்கு வெளியே நின்றார். நான் நாற்காலியிலிருந்து எழுந்தேன். நாராயணன் அதை தன் பக்கம் இழுத்துக் கொண்டு அமர்ந்தார். கச்சேரியை ஆரம்பித்தார்கள்.

"பிடிக்கலன்னா காலி பண்ண வேண்டியது தானேடா... என்னா நீ கோர்ட்டு கீட்டுன்ற... நீ வாடகையும் கொடுக்க மாட்ட. கரன்டு பில்லு எவன் உன் அப்பனா கட்டுவான்.."

நான் வாடகைக்கு கொடுக்க சென்ற பொழுது அவர் மனைவி, "உன் வாடகையே வேணாம் நீ காலி பண்ணிக்கோ" என்றார். பிறகு எப்படி வாடகை கொடுப்பது?

"சார் வாடக கொடுக்காம எங்கேயும் நான் ஓடிரல. நீங்க முதல தண்ணிய ரெடி பண்ணுங்க. நீங்க தண்ணிய ரெடி பண்ணா நான் ஏன் கோர்ட்டுக்கு போறேன்"

உடனே தடியர், "டேய்..யார் எடத்துல இருந்து என்னா பேசுற... நீ கோர்ட்டுக்குள்ள போவ.. உயிரோட வெளிய வர மாட்ட.. பாக்குறியா?"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கோர்ர்டுக்கு போறது உறுதி."

தடியர், "இவங்கிட்ட பேசுணா வேலைக்கு ஆகாது. இவன உள்ள உட்கார வச்சு தண்ணி நல்லாருக்குனு எழுதி கொடுத்துட்டு காலி பண்ண சொல்லலாம்..." என்றார்.

நாராயணனின் மகனிடம் திரும்பி, "நம்ம கான்ஸ்டபிள வரச் கொல்லு என்றார்."

"சரி வாங்க... போலீஸ் ஸ்டேஷன் போலாம்" என்றபடி அறையை விட்டு வெளியே வந்தேன். உடனே தடியர், "டேய்.. எங்க ஓடப் பாக்குற.. வா வந்து உள்ள உட்காரு" என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் என் கையை அவரிடம் இருந்து இழுத்து விடுவித்துக் கொண்டேன். பின் மேன்ஷனுக்கு வெளியே வர முயற்சித்தேன். அப்பொழுது நாராயணன் என் தோள்களில் பின்னால் இருந்து தொங்கியபடி, "விடாத. புடி புடி புடி இவன", என்றார். நான் சுவற்றையும் கேட்டையும் பிடித்து இழுத்துக் கொண்டு மேன்ஷனை விட்டு வெளியேறினேன். எனக்கிருந்த ஒரே நோக்கம் என்ன சண்டை நடந்தாலும் அது மேன்ஷனுக்கு வெளியே நடக்க வேண்டும் என்பது தான். நான் மேன்ஷனை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் உள்ளேயே நின்று விட்டார்கள். அறையை பூட்டுவது பற்றியோ, செருப்பு அணிவது பற்றியோ கவலை படாமல் காவல் நிலையத்தை நோக்கி வேகமாக ஓடினேன். மணி சுமார் பனிரெண்டு இருக்கும். கால் வெயில் காரணமாக் சுட்டெறித்தது. எதையும் பொருட்படுத்தாமல் நேராக காவல் நிலையத்தை ஓடிச் சென்றடைந்தேன்.

காட்சிக்குள் காவலர்கள் வந்து விட்டதால் அடுத்து வணக்கம் போடப் போகிறேன் என நினைக்காதீர்கள். இப்பொழுது தான் இடைவேளை.

காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் என்னை நிதானமாக வரவேற்றார். "சார் நான் சரவணம் மேன்ஷன்..."

"இரு இரு... ஓடி வந்திருக்க... முதல்ல தண்ணி குடி..." என்றார்.

தண்ணீர் குடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் காவலர் அனைவரும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் தேனீர் குடிப்பது சாதாரணம் தான். ஆனால் அதை உபயம் செய்து கொண்டிருந்தவரை பார்த்த பொழுது தான் எனக்கு லேசாக தலை சுற்றியது. காரணம் அந்த தேனீரின் உபய கர்த்தா என்னை என் அறையில் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த அதே தடியர் தான். அதில் வேதனை என்னவென்றால் காவலர்களில் சிலர், "சார் எனக்கொரு டீ... எனக்கொரு டீ" என்று கேட்டுக் கேட்டுக் குடித்தது தான்.

அதன் பிறகு நான் பேசிய பேச்செல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருந்தது. எல்லா பிரச்சனைகளையும் விட்டு விட்டு நான் வாடகைக் கொடுக்காத ஒரு குறையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். "சார் நான் வாடகை எப்படியும் இன்னைக்கு இல்ல நாளக்கி கொடுக்கத்தான் போறேன், அவங்க என்ன கொன்றுவேன்னு மிரட்டுனாங்க. அதனால பாருங்க செருப்புக் கூட போடாம ஓடி வந்திருக்கேன் அத முதல்ல விசாரிங்க சார்" என்றேன்."அதெல்லாம் அப்புறம் விசாரிக்கிறோம் நீ முதல வாடகைய கொடுயா" என்றார்கள். வெங்கடாசலம் என்கிற காவலர் என்னிடம் ஒரு கைப் பேசியை கொடுத்து, "இந்தா யாருக்கு ஃபோன் பண்றியோ பண்ணு. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல, வாடகை நீ கொடுத்தாகணும்" என்றார். அலுவலகத்தில் இருந்த என் தம்பியை அழைத்து பணம் எடுத்து வரச் சொன்னேன்.

வாடகையை கொடுத்த பிறகு, நான் ஒரு புகார் பதிவு செய்ய வேண்டும் என்றேன். ஒரு பேனாவும் பேப்பரும் தந்தார்கள். புகாரை நான் எழுதிக் கொண்டிருக்கையில். "யோவ், என்ன நாவலா எழுதுற? சீக்கிரம் முடிய்யா? நான் வீட்டுக்கு போறதில்ல" போன்ற வசனங்களால் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம். எனினும் ஒருவழியாக நடந்தவற்றை எல்லாம் எழுதி முடித்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதை என்னை மிரட்ட வந்த நால்வரிடமும் படித்துக் காட்டினார். ஐவரும் வழைப் பழ ஜோக்கை கண்டது போல விலாவாரியாக சிரித்தார்கள்.அதன் பிறகு புகார் கடிதத்தை ஒரு கோப்புக்குள் வைத்து விட்டு, "சரி ரமேஷ். நீங்க கெளம்புங்க. நாங்க என்னான்னு விசாரிக்கிறோம்" என்றார். நான் புகாருக்கான ரசீது ஒன்றைக் கேட்டேன். வெங்கடாச்சலம் முகம் சுளித்தார். ஆய்வாளரிடம் பேசும்படி கூறிவிட்டு முகம் திருப்பிக் கொண்டார்.

ஆய்வாளர் முனைவர். திரு. செல்வகுமார் காவல் நிலைய வாசலில் சாலையோரத்தில் நின்றபடி சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். நானும் என் தம்பியும் அவரருகே சென்று கடிதத்துடன் நின்றோம். அவர் கடிதத்தை என்னிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டு பேசுவதை தொடர்ந்தார். நான் அவரது பெயரைப் பார்த்து, முனைவர் பட்டம் பெற்ற காவல் ஆய்வாளரா என ஆச்சரியப் பட்டேன். அவர் என் பக்கம் திரும்பி, "என்ன பேட்ஜ பாக்குற? என்ன? என்ன பத்தி கம்ப்ளெயின் பண்ண போறியா? இந்தா நல்லா பாத்துக்க, போய் எவன்கிட்ட வேணா சொல்லு எனக்கு கவலையில்ல" என்றபடி என் முகத்துக்கு நேராக பேட்ஜை கொண்டுவந்தார். அவர் அப்படி செய்தது மிகவும் கீழ்த் தரமாக தெரிந்தது.

என் தம்பி, "என்ன சார்? பேட்ஜ பாத்தது ஒரு தப்பா?" என்றான். பளீரென்று அவன் முகத்தில் அறைந்தார். "என்ன கேள்வி கேக்குற? போலீச கேள்வி கேக்குற அளவுக்கு நீ என்ன பெரிய இவனா நீ" என்று மீண்டும் அவனை அடிக்க கையெடுத்தார். நான் இடையில் புகுந்து என் இடது கையால் அவர் இடது கையை பிடித்துக் கொண்டு, வலது கையால் அவரை தடுத்தபடி, "பேசிட்டிருக்கும் போதே அவன எதுக்கு இப்ப அடிக்கிறீங்க? முதல்ல என்னா ஏதுன்னு விசாரிங்க சார்" என்றேன்.

"போலீஸ் கையவே புடிக்கறீயா நீ." எனக்கு ஒரு அறை விழுந்தது. "நீ உள்ள நட. முதல்ல உன்ன விசாரிக்கிறேன்" என்று என்னை பிடித்து உள்ளே தள்ளினார். முதுகிலும் ஒரு குத்து விழுந்தது. நானும் என் தம்பியும் காவல் நிலையத்துக்குள் கொண்டு செல்லப் பட்டோம். பின்னாலயே ஆய்வாளர் வந்தார். வரும் பொழுது, "இவனுங்க ரெண்டு பேத்தையும் ஜட்டியொட உட்கார வைங்க. பேப்பர்காரன கூப்புடுங்க. நாளைக்கு இவனுங்க ஃபோட்டோ பேப்பருல வரட்டும்" என்றார்.

உடனே வெங்கடாசலம் என் பெயர், பெற்றோர் பெயர், வயது ஆகியற்றை ஒரு குற்றவாளிகளை பதிவு செய்யும் நோட்டில் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்த நாடகம் ஆச்சரியமாக இருந்ததேயன்றி ஆதிர்ச்சியாக இல்லை. எனக்கு பயமும் தோன்றவில்லை. "எழுதுங்க எழுதுங்க தாராளமா எழுதுங்க" என்ற படி என் சட்டியையும் கழற்றினேன். "இந்தா இங்க ஒரு மச்சம், இங்க ஒரு மச்சம் நோட் பண்ணிக்கங்க" என்றேன். என் தம்பி தயங்கிய படி என் கையைப் பிடித்தான். அவனிடம் "இரு இரு. என்னா பண்ணீறாங்க பாப்போம்" என்றேன். ஆய்வாளர், "உங்கள எஃப்.ஐ.ஆர் போட்டு கோர்ட்டுல நிறுத்துவோம்" என்றார். "நானும் அத தான் எதிர்ப்பாக்குறேன்" என்றேன். ஆய்வாளர் மௌனமானார். வெங்கடாசலம் குறிப்பேட்டை மூடிவைத்தார். மிரட்டல் நாடகம் ஒரு முடிவுக்கு வந்தது. குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழிக்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆய்வாளரும் வெங்கடாசலமும் இன்னும் ஒரு சில காவலர்களும் அன்று என் கண்ணுக்கு தெரிந்தார்கள்.

பின்னர் நான் ஆய்வாளரிடம் அவர் என்னை எதற்காக அடித்தாரென்று கேட்டேன். அவர் எங்களை அடித்தது குற்றம் என்று பலமுறை சொன்னேன். "என்ன ஒருத்தன் கொன்றுவேன்னு மிரட்டுறான். அவன் கிட்டருந்து தப்பிச்சு உங்க கிட்ட வந்தா. நீங்க போட்டு அடிக்குறீங்க. என்ன சார் என்கொய்ரி இது?" அவர் ஒரு போலியான பணிவுடன், "சரி சார். நீங்க டீச் பண்ணுங்க. எப்படி என்கொய்ரி பண்ணுறது?" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தொடர்ந்தார். "இங்க பாரு, நீ தப்பு பண்ணுனனு நான் சொல்லல. ஆனா நீ பேசுன விதம் தப்பு. நீ எங்க போனாலும் எப்படி பேசறங்கறத வச்சுத் தான் உன் காரியம் நடக்கும். அதனால எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கோ. ஒரு இன்ஸ்பெக்டருக்கிட்ட அப்படியாய்யா பேசுவ?"

'நான் எங்கய்யா பேசுனேன். நீ தான் விடவேயில்லையே. சரி விடு மனுஷன் நிதானத்துக்கு வந்துருக்காப்ல. பேச்ச வளக்காம, பிரச்சனைய சொல்லுவோம் ' என நினைத்தபடி, "சார். நான் பேட்ஜ பாத்தத தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல. உங்க பேரு முன்னாடி டாக்டர் இருந்தது அது கொஞ்சம் ஆச்சர்யமா பாத்தேன். சரி, இந்தக் கம்ப்ளெய்ன்ட கொஞ்சம் படிங்க" என்றேன். மனிதர் எந்த சலனமும் காட்டாமல் வெளியே சென்றுவிட்டார். கடைசி வரை அந்த புகாரை அவர் படிக்கவேயில்லை.

துணை ஆய்வாளர் திரு. த. ராதாகிருஷ்ணன் என்னிடம் வந்தார். "என்னய்யா? இன்ஸ்பெக்டருக்கிட்ட இந்தப் பேச்சு பேசுற? ஊது என்றார்." சரக்கடித்த தெம்பில் பேசுகிறேன் என நினைத்துவிட்டார் போலும். என்னுள்ளிருக்கும் சரக்கு, ஸ்ரீ ராமரின் நாம ஜபம் என்பதை நான் ஊதிய பொழுது அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

வெளியே சென்று ஆய்வாளரிடம் ஏதோ பேசி விட்டு திரும்பினார். "யோவ் உனக்கே இவ்வளவு டென்ஷன் இருந்தா. நைட்டு பூரா அலைஞ்சுட்டு வர அவருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும். நல்ல பசங்க, அவிங்கள போய் அடிச்சுட்டமேன்னு ரொம்ப வருத்தப்படுறாருய்யா. அவங்க மேல ஒண்ணும் தப்பு இல்ல அவங்க உரிமைய அவங்க கேட்குறாங்கன்னாரு. சாயங்காலம் வந்து உங்ககிட்ட பேசுறேன்னாரு. அதுவரைக்கும் அப்படி வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு, எங்கள் பதிலுக்கு காத்திராமல் போனார். மாலை வரை காத்திருந்தோம். இடையில் தயிர் சாதம் வாங்கிக்கொடுத்தார்கள். மாலை மாற்றலாகி செல்லும் காவலர்களுக்காக ஒரு சிற்றூண்டி விருந்து நடந்தது. எங்களுக்கும் இனிப்பு காரங்களை வழங்கினார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு, துணை ஆய்வாளர் திரு.ராதாகிருஷ்ணன் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். மாலை சுமார் ஆறு முப்பதாகியிருந்தது. "சொல்லுங்க ரமேஷ், என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றார், தன்னால் முடிந்த மிகச் சிறந்த புன்னகையை உதிர்த்தபடி. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முடிவு செய்ய வேண்டியது அவரல்லவா? நான் முடிவு செய்ய என்ன இருக்கிறது? "சார். நான் என்ன முடிவு பண்றது சார். என் டெலிஃபோன் வயர கட் பண்ணி என்ன கொன்னுருவேன்னு மிரட்டியிருக்காங்க. அவங்க மேல நடவடிக்கை எடுங்க சார்."

"இங்க பாரு உன்ன என் தம்பி மாதிரி நெனச்சு சொல்றேன். தேவையில்லாத பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிடுற. உனக்கு தண்ணி சரியில்லையா? நீ வேற எடம் பாத்துகுட்டு போ. அத விட்டுட்டு மத்தவனுக்கெல்லாம் நீ ஏன் கஷ்டப்படுற?.." என்று ஆரம்பித்து ஒரு கதா காலட்சேபமே செய்தார். அதில் உபதேச ஆர்வத்தில் நான் இப்படியெல்லாம் வலை தளத்தில் பதிவு செய்வேன் என்பது தெரியாமல், "யோவ் இப்ப என்னய எடுத்துக்க. நான் இந்த வேலைக்கு லஞ்சம் கொடுத்து தான் வந்தேன். நான் கொடுக்கலன்னா வேற எவனாவது கொடுத்திருப்பான். இந்தக் காலத்துல நீ என்னயா? சுத்த வெவரம் கெட்டவனா இருக்க? இந்த எலக்ஷன்ல கள்ள ஓட்ட போட விடாம தான் இருந்தேன். நேரம் ஆக ஆக கட்சி ஆளுங்க அதிகமா வர ஆரம்பிச்சாங்க. விடாம இருக்க முடியுமா? விடாம இருந்தா என் குடும்பத்த அவன் சும்மா விடுவானா?" என்றார்.

"யோசிங்க ரமேஷ். யோசிச்சு பாத்து சொல்லுங்க. இப்ப நம்ம என்ன பண்ணலாம்?"

"அவங்க மேல நடவடிக்கை எடுங்க."

"என்னய்யா நீ, இவ்வளவு தூரம் சொல்றேன், சொன்னதயே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க? அவனுந்தாயா உன் மேல கம்ப்ளெயின் பண்ணியிருக்கான்?"

"சரி. அப்ப என் மேலயாவது நடவடிக்க எடுங்க."

த.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என் தோள்களில் ஓங்கி அறைந்தார். என் சட்டையை பிடித்து இழுத்து என்னை எழ வைத்தார். "போ. போய் அங்க உட்காரு." என்னை பிடித்து வெளி அறைக்குத் தர தரவென இழுத்துத் தள்ளினார். இரண்டு அறைகளுக்கும் இடையிலான நிலைப்படியில் நின்று கொண்டார். "யோவ். லூஸாயா நீ. சரியான மென்ட்டல் கேசு மாரி பேசிக்கிட்டு இருக்க?" என் தம்பியிடம் திரும்பி, "என்னயா இன்னக்குதான் இவன் இப்படியா? இல்ல எப்போதுமே இப்படித்தானா?" என்றார். அதன் பிறகு மீண்டும் தன் மேஜைக்கு என்னை அழைத்தார். "வாய்யா. வந்து உட்காரு. என்னய்யா? உங்கூட பெரிய தல வலியா இருக்கு.!" மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினார். அது மீண்டும் அரை மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்தது.

"ரூல்ஸ் தெரியாம பேசிக்கிட்டு இருக்க. சிவில் கேசுக்கெல்லாம் ரெசீது கொடுக்கக் கூடாதுய்யா" என்றார்.

"சார் என்ன சார் சொல்றீங்க? என்ன கொன்றுவேன்னு நாலு பேரு வந்து மிரட்டியிருக்காங்க. என் டெலிஃபோன் வயர கட் பண்ணியிருக்காங்க. இது கிரிமினல் இல்லையா?" என்றேன்.

"இங்க பாரு. கொம்ப விட்டுட்டு தும்ப பிடிக்கக் கூடாது. பிரச்சன எங்க ஆரம்பிச்சுது?"

"தண்ணில"

"அது சிவிலா? கிரிமினலா?"

"அது சிவில் தான் சார்... ஆனா .."

"சொன்னா புரிஞ்சுக்கயா. இதுக்கெல்லாம் ரெசீது கொடுக்க முடியாதுய்யா"

இறுதியாக, "அவங்க மேல ஆக்ஷன் எடுக்காட்டி கூட பரவால்ல. எனக்கு ரசீது மட்டுமாவது தாங்க சார்" என்றேன்.

"யோவ் உன்ன என்னால சமாளிக்க முடியாது. போ. போய் இன்ஸ்பெக்ட்டருகிட்ட நீயே பேசிக்க. அவரு கொடுக்க சொன்னா, நான் கொடுக்குறேன்" என்றார்.

ஆய்வாளரிடம் சென்றேன். அவர் நூறு பேர் மலம் கலந்த நீரில் குளிப்பது பற்றியோ, எனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றியோ, துண்டிக்கப் பட்ட என் தொலைப்பேசியை பற்றியோ எல்லாம் கேட்காமல், என் தாடியைப் பற்றியும், நான் அணிந்திருக்கும் துளசி மாலைப் பற்றியும் விசாரித்தார். பின்னர் ஒரு பாக்கெட் மிக்ஸர் அன்பளித்தார். கிளம்பி காரில் சென்று அமர்ந்து கொண்டார்.

நான் பின் தொடர்ந்து சென்று ரசீது கேட்டேன். உடனே காரில் இருந்து இறங்கினார். "அக்னாலஜ்மெண்ட் கேக்குறாங்க. அது அவங்க உரிம. நம்ம நம்ம ரூல்ஸ் படி தானே செய்ய முடியும். இவங்களுக்கு நாப்பத்தியொன்னுல புக் பண்ணிரு. இல்ல இல்ல 75 ல ஒரு கேஸ் புக் பண்ணிரு." என்னிடம் திரும்பி, "நீங்க ரெண்டு பேரும் கோர்ட்டுல ஒரு எட்நூறு ரூபா, ஃபைன் கட்ட வேண்டி வரும். பாத்துக்குங்க. சப்- இன்ஸ்பெக்டர் உங்களுக்கு போட்டுத் தருவார். போங்க" என்றவர் காரில் ஏறி விரைந்தார்.

மீண்டும் திருவாளர். ராதாகிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தேன். அவர் மீண்டும் ரசீது கொடுக்க முடியாதென்றார். அதன் பிறகும் பேச்சு வார்த்தை சிறிது நேரம் தொடர்ந்தது. பின்னர், "யோவ் நீ வேலைக்கு ஆக மாட்ட, உங்கப்பாகிட்ட நான் பேசுறேன். உங்க அப்பா நம்பர் சொல்லு."

எனக்கும் அவர் வேலைக்கு ஆக மாட்டார் என்பது புரிந்தது. இரவு ஒன்பதரை மணிக்கு அப்பாவுக்கு தொலைபேசியில் நானும் என் தம்பியும் காவல் நிலையத்தில் இருக்கிறோம் என்றால் அவர் பயப்படக் கூடும். அம்மாவும் பயப்படக் கூடும். "அப்பாகிட்ட பேச வேணாம் இருங்க" என்றேன். என் கைப் பேசி வேறு அவரிடம் தான் இருந்தது. மதியமே அதை வாங்கி ஆஃப் செய்து வைத்துவிட்டார்கள். கொஞ்ச்ம நேரம் மௌனமாக இருந்தேன். ராதாகிருஷ்ணன் மீண்டும், "யோவ் இப்ப நீ எழுதி கொடுக்கிறியா இல்லயா யா?" என்றார்.

"சரி எழுதி கொடுக்கிறேன்" என்றேன்.

நாராயணனிடம் எந்த தகராறும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும், மேன்ஷனை ஜூன் முப்பதுக்குள் காலி செய்து விடுவதாகவும் எழுதிக் கொடுத்தோம்.

காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய பொழுது மணி ஒன்பதரை இருக்கும்.

அன்வரும் குமரேஷும் எங்களுக்காக வெளியே காத்திருந்தார்கள். அவர்களோடு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றொம்.

வெள்ளை நிற முகத்தோடு குழுலூதும் நிலையில் கிருஷ்ணர் நின்றிருந்தார். அவரை கோக்கி நகர முயற்சித்தேன். மொட்டை மாடி எங்கும் தூய நீர் நிரம்பியது. அதில் என்னை நான் அமிழ்த்தினேன். அந்த நீர் என்னை புனிதப் படுத்தியது. கண் விழித்த பொழுது மணி அதிகாலை நான்கு. எனக்கு அப்பொழுது தோன்றிய முதல் எண்ணம், இதை இப்படியே விடக் கூடாது என்பது தான்.

வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்திருக்கிறேன். போலீஸிடம் வாங்கிய இரண்டு அறைகளால் நான் எந்த விததிலும் குறைந்து விட போவதில்லை. என் மனதிலிருந்த கேள்வி படிதவனாகிய என்னிடமே இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யும் காவலர்கள் படிக்காத பாமரர்களிடம் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள். ஒரு தவறை நாம் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது, அது தவறு செய்பவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் செயலாகத் தான் அமைகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதில் தெளிவானேன்.

உடனே என் தம்பியை எழுப்பினேன், அன்வரையும் குமரேஷையும் என் அறைக்கு அழைத்தேன். அன்று மீண்டும் காவல் நிலையம் சென்று என் புகாருக்கான ரசீது கேட்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். இந்த முறை வக்கீலோடு செல்லலாம் என்று சொன்னேன். மற்ற மூவரும் இதற்கு சம்மதித்தார்கள்.

அன்று வக்கீலை சந்தித்த பொழுது, மீண்டும் அதே காவல் நிலையம் சென்று புகார் செய்வதை விட காவல் துறை ஆணையரிடம் புகார் செய்யலாம் என அறிவுரை சொன்னார்கள்.

இதற்கிடையில் என் தம்பி எழுத்தாளர் திரு.ஞாநி அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்தான். அவர் தன் சக பத்திரிக்கையாளர் ஒருவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த பத்திரிக்கையாளர் எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்கு ஒரு மானசீக தூணாகவே அவர் திகழ்கிறார். நான் அவரிடம் காவல் துறை தலைமை ஆணையரை சந்தித்து புகார் செய்ய முடிவு செய்திருப்பதுப் பற்றி கூறினேன். "அது மட்டும் பத்தாது இவனுங்கள உடனே மீடியால எக்ஸ்போஸ் பண்ணிரலாம்" என்றார். காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கும் பொழுது புகாரின் பிரதிகள் சிலவற்ற்றை கொண்டு வரச் சொன்னார். நிருபர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஜூன் பத்தாம் தேதி நான் எங்கள் வக்கீல் வெண்ணிலாவுடன் ஆணையரை சந்திக்கச் சென்றேன்.

புகாரை கேட்கும் ஆய்வாளர், "என்ன தம்பி, போலீஸ் மேலயே கம்ப்ளெயின் கொண்டு வந்திருக்க? நாளைக்கு அவன் உன் மேல பொய்க் கேஸ் போட்டு உள்ள தள்ளுனா என்ன பண்ணுவ? இதெல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி" என்றார்.

"என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன் சார்" என்றேன்.

வக்கீல், அவர்கள் துறை என்பதால் நம்மை குழப்ப ஏதாவது சொல்வார்கள், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம், நேராக ஆணையரிடம் பேசிக் கொள்ளலாம் என்றார். ஆணையரை சந்திக்க சென்ற பொழுது எல்லாரையும் இரண்டு மூன்று பேராக விட்டவர்கள் என்னை மட்டும் தனியாகத் தான் போக வேண்டும் என்று வக்கீலை உள்ளே வர விடாமல் தடுத்துவிட்டார்கள். உள்ளே சென்ற பிறகும் ஆணையரிடம் என் புகாரை விளக்கும் பொழுது நாராயணன் என்னை மிரட்டியதோடு கதையை முடித்துவிட்டார்கள். "மிரட்டுறாங்களா?" என்று ஆணையர் திரு.ராஜேந்திரன் என்னை பார்த்து கேட்டார்." நான் உடனே, "அத போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லப் போனா அங்க இன்ஸ்பெக்டரும் சப்- இன்ஸ்பெக்டரும் என்னயும் என் தம்பியும் அடிச்சு ஒன்பது மணி நேரம் உட்கார வெச்சி வர 30ந்த் தேதி காலி பண்ண சொல்லி எழுதி வாங்கிட்டாங்க சார்" என்றேன்.

"இத அந்த ஸ்டேஷனுக்கு பார்வர்ட் பண்ணாதீங்க. நுங்கம்பாக்கம் ஏ.ஸி யை நேரடியா என்னனு பாக்கச் சொல்லுங்க" என்றார். அதில் முத்திரை பதித்தார்கள். கையெழுத்திட்டார். என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லி, பின் அழைத்தார்கள். மக்கள் தொடர்பு அலுவலர் தொலைப் பேசியில் துணை ஆணையர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு புகாரைப் பற்றி கூறி, உடனே விசாரிக்கச் சொன்னார்.

மறு நாள் ஆங்கில நாளிதழ் டெக்கான் க்ரானிக்கலில் செய்தி வெளியானது. (11--6-2009.)

அதன் பிறகு ஜூன் 25 வரை எந்த விசாரணையும் நடை பெறவில்லை. ஜூன் 26 என் தம்பியும் பாலா என்கிற நண்பரும் மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தார்கள். ஆணையர், "இந்த புகார் ஏற்கனவே வந்ததே என்றாராம். மீண்டும் துணை ஆணையரை விசாரணை செய்யும்படி உதரவிட்டார்.

அன்று மாலை நுங்கம்பாக்கம் துணை ஆணையர் எங்கள் மேன்ஷனுக்கு வந்தார். உடன் ஆய்வாளர் முனைவர். திரு.செல்வக்குமாரும் வந்திருந்தார்.

நுங்கம்பாக்கம் துணை ஆணையர் விசாரணை செய்ய வந்தாரா அல்லது தேர்தல் நடத்த வந்தாரா என்பதில் நான் இன்னும் குழப்பத்தில் தான் உள்ளேன். காரணம் நீரில் மனித மலம் கலந்ததற்கான சான்றிதழ் என்னிடம் இருந்தது. அது மட்டும் அல்லாமல் தரை தளத்திலேயே சுமார் பத்து பேர் நீர் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு மேன்ஷனில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று நீரின் தரம் பற்றி கேட்டறிந்தார். புகாரை கொடுத்த நானும் புகாரை மறுக்கும் நாராயணின் மகனும் இருக்கும் பொழுது என்னை கீழேயே இருக்கச் செய்துவிட்டு நாராயணின் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக செல்வது எந்த விதத்தில் நடுநிலையான விசாரணை என்பது எனக்கு புரியவில்லை.

நாராயணன் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். முன்னுக்குப் பின் முரணாக துணை ஆணையரின் கேள்விக்கு பதிலளித்தார். அந்த முரண் பாடுகளைக் கூட ஒரு புன்சிரிப்புடன் ரசித்த படி, "பாத்து பண்ணிக் கொடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்"

என்னை மிரட்டியது பற்றியோ, என் தொலைப் பேசி துண்டிக்கப் பட்டது பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

மறுநாள் காலை சுமார் பத்து மணியளவில் நாராயணன் மேன்ஷனை எல்லோரும் ஜூலை பதினைந்துக்குள் காலி செய்து விட வேண்டும் என ஒவ்வொரு அறைக்கும் நோட்டீஸ் கொடுத்தார். நீர், மின்சாரம் ஆகியவற்றை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தால் இந்த அவசர முடிவு என குறிப்பிட்டுருந்தார். அது வரைக்கும் யாருக்கும் நீர் வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேன்ஷனில் உள்ள அனைவரும் அவரை இது பற்றி அணுகிய பொழுது. ஒன்று நீங்கள் அனைவரும் காலி செய்ய வேண்டும் இல்லையெனில் அறை எண் 3,5,8 மற்றும் 11ல் இருப்பவர்கள் காலி செய்ய வேண்டும் எனக் கூறினார். மீண்டும் காவல் நிலையம் சென்றொம்.

காவல் நிலையத்தில் நான், என் தம்பி, குமரேஷ், அன்வர், பாலா ஆகிய ஐவரும் காலி செய்ய வேண்டும் என்று நாராயணின் மகன் தலைமையில் பதினைந்து மேன்ஷன் வாசிகள் புகார் செய்தார்கள். காவலர் திரு.வெங்கடாசலம் காரணம் கேட்டார். நாங்கள் நீரின் தரம் பற்றி சர்ச்சை செய்வதால் தங்கள் அனைவருக்கும் நீர் வழங்குவதை நாராயணன் நிறுத்திவிட்டதாகவும். நாங்கள் காலி செய்துவிட்டால் தங்களுக்கு உடனே நீர் கிடைக்கும் என்று காரணம் சொன்னார்கள். திரு.வெகடாசலம் நாராயணனின் மகனிடம் அவர்களுக்கு நீர் வழங்காதது பற்றி காரணம் கேட்டார்.

"டேங்க் கழுவணும் சார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் உத்தரவு" என்றான்.

"என்னா பதினஞ்சு நாளா டேங்க் கழுவற?"

"இல்ல சார் இன்னிக்கு மட்டும் தான்"

"அப்ப நாளலருந்து தண்ணி தருவல்ல"

"தருவோம் சார்"

வெங்கடாசலம் அந்த பதினைந்து பேரிடமும், "வீட்ட காலி பண்ண வக்கறது போலீஸ் வேல கிடையாது. அதெல்லாம் நீங்க கோர்ட்டுல பாத்துக்குங்க" என்றார்.

நாராயாணனின் மகனிடம் "தண்ணிய கட் பண்றது, கரண்ட கட் பண்றது இதெல்லாம் பண்ணாத" என்றார். அவனும் சம்மதித்தான்.

நாராயணன் அவர்களின் அதிரடி நடவடிக்கை தோல்வியடைந்தது.

மீண்டும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் திரு.ஷண்முகம் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன். இந்த முறை நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ராஜாராமன் அவர்களை நேரடியாக சந்தித்து நடந்தவற்றிக் கூறச் சொன்னார். திரு.ராஜாராமன் அவர்கள் நுகர்வோர் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். "அத க்ளீன் பண்ணா என்ன? இவனுக்கெல்லாம் நாலு கேஸ் போட்டு அலைய வெச்சாத்தான் புத்தி வரும். ஏற்கனவே நான் அனுப்புன லெட்டர வேற திருப்பி அனுப்பிச்சுருக்கான். செக்ஷன் 12 டி ல நான் ஒரு கேஸ் போட்றேன். தனிப் பட்ட முறையில நீங்க பாதிக்கப் பட்டதால ஒரு லட்சம் கேட்டு நீங்க ஒரு கேஸ் போடுங்க" என்றார். காவல் ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் எழுதி என்னை மீண்டும் அவரை சந்திக்கும்படி சொன்னார்.

மறுநாள் ஜூலை ஒன்றாம் தேதி மீண்டும் காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் செய்தேன். அவர் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார். அதுபற்றி கூற நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்குச் சென்றேன். அங்கு திரு.ஷண்முகம், "உங்க ஓனர் எங்க ஆளு கொண்டு போன லெட்டர வாங்கிட்டார். இல்லனா கதவுல ஒட்டியிருப்போம். இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு கேஸ் ஃபைல் பண்ணிரலாம்" என்றார்.

ஜூலை மூன்றாம் தேதி எனக்கு ஒரு பதிவுத் தபால் வந்தது. அது ஜூன் ஐந்தாம் தேதி எங்கள் மேன்ஷனுக்கு வந்து தன் பெயரை சொல்ல மறுத்த அலுவலரிடம் இருந்து வந்திருந்தது. அவர் சரவணம் மேன்ஷனின் நீரில் மனித மலக் கலவையில்லை என்றும், அது குடிக்க தகுந்தது என்றும் சான்றிதழ் வழங்கியிருந்தார். கையால் தொடக் கூட தகுதியற்ற நீரை குடிக்கத் தகுந்தது என்று சான்றிதழ் வழங்கிய கடமையுணர்ச்சியை என்னவென்று புகழ்வது? இதைப் பற்றி திரு.ஷண்முகம் அவர்களிடம் கூறினேன். அவர் அந்த சுகாதார அதிகாரி மீதும் ஒரு வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.

இதற்கிடையில் எங்கள் பத்திரிக்கையாள நண்பர் ஜூனியர் விகடன் நிருபர் திரு.பாலச்சந்திரன் அவர்களிடம் இது பற்றி சொல்லச் சொன்னார். நான் அவரை விகடன் அலுவலகத்தில் சந்தித்து நடந்தவற்றை கூறினேன். ஜூலை எட்டாம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் "நூறு மில்லி தண்ணீரில் முப்பத்தாறு மில்லி அசிங்கம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

மேன்ஷனில் உள்ள நீர் சரியில்லாததால் அடி குழாயிலிருந்து குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பயன்படுத்தி வந்தோம். ஜூன் ஐந்தாம் தேதி அதில் மண் போடப்பட்டிருந்தது. இது குறித்து காவல் துறைக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக புகார் செய்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லை.

அன்வர் ஏழாம் தேதி மீண்டும் எண் நூறை அழைத்து புகார் செய்தார். அவர்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்யச் சொன்னார்கள். அங்கே புகாரை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். எனினும் காவலர் ஒருவரை அனுப்பினார்கள்.காவலர் திரு வெகடாச்சலம் நாங்கள் புகார் செய்ததற்காக மிகவும் கடிந்து கொண்டார். மேலும் அடிகுழாயில் யார் கல்லும் மண்ணும் போட்டார்கள் என்பது பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் எங்களை நீதி மன்றத்தை அணுகும் படி கூறிவிட்டு சென்று விட்டார். அன்வர் காவல் நிலையத்தில் புகார் செய்த போதும், வெங்கடாச்சலம் எங்கள் மேனஷனில் விசாரணை நடத்திய போதும் நிகழ்ந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறோம்.

மாநில மனித உரிமை நீதிமன்றத்தில் ஜூன் பதினொன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளோம்.

குற்றவியல் நீதி மன்றத்திலும் என்னை மிரட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.

நுகர்வோர் நீதி மன்றத்திலும் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.

திரு. நாராயணன் ஆரம்பத்திலேயே எங்கள் புகாருக்கு செவி சாய்த்திருந்தால், ஒரு பத்தாயிரம் ரூபாய் செல்வில் ஒரே நாளில் அல்லது அதிக பட்சம் மூன்று நாட்களில் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும். அல்லது நான் காவல் நிலயம் சென்ற பொழுதாவது ஆய்வாளரோ துணை ஆய்வாளரோ தங்கள் கடமையை முறையாக செய்திருந்தால் அப்பொழுதாவது முடிந்திருக்கும். ஆனால் நாராயணன் என்கிற ஒரே ஒரு பணக்காரரின் பிடிவாதத்தாலும் சில அதிகாரிகளின் சோம்பேறித்தனம் மற்றும் பொருளாசையாலும் இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

இன்னும் எவ்வளவு தூரம் வளர்கிறதோ...?


அடிகுழாயில் கல் போட்டு அதை சிதைத்தது குறித்து அன்வர் புகார் செய்ய சென்ற பொழுது F5 காவல் நிலையத்தில் நடந்த உரையாடல்.

புகாரை முன்னிட்டு வெங்கடாசலம் என்கிற காவலர் செய்த விசாரணை.

( Source: http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html )

Read More...