பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 23, 2009

ஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும்

ஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும் --ஹரன் பிரசன்னா

மதுரையில் புத்தகக் கண்காட்சிக்காக சென்றுகொண்டிருந்தபோதுதான் மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. என்னை அழைத்து அந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றிச் சொன்ன நண்பரும் நானும் பகிர்ந்துகொண்ட முக்கியமான விஷயம், நமது அடுத்த தலைமுறை சந்திக்கப்போகும் பிரச்சினைகளைப் பற்றி. காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு வருவதும், வேலைக்குச் செல்லும் ஒருவர் மீண்டு வீடு திரும்புவதும், ஒரு மாநாட்டுக்குச் செல்லும் அரசியல் தலைவரோ தொண்டரோ உயிரோடு திரும்ப வருவதும் பெரும் சாகசங்களில் ஒன்றாக அமையும் நாளாக இந்தியா சென்று கொண்டிருக்கிறது. BAD ஆபரேஷன் (Bombay – Ahmedabad – Delhi) என்று பெயர் வைத்து, தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் செயல்கள் மக்கள் மனத்தில் பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியிருக்கிறன. அதில் ஒருவன் அடையும் கோபத்தின் உச்சத்தை, யதார்த்தமாக சாத்தியமில்லாதது என்றாலும், மனக்குமுறலோடு முன் வைக்கிறது A Wednesday (ஒரு புதன்கிழமை) திரைப்படம்.

இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தீர்வல்ல. மாறாக, அது கோபத்தின் வெளிப்பாடு. இயலாமையின் உச்சி. நான்கு தீவிரவாதிகள் கொல்லப்படும்போது, ஒரு ஹீரோ வொர்ஷிப் உள்ள ரசிகன் தன் ஹீரோவின் படத்தில் அடையும் மனநிலையைப் பார்வையாளர்களும் அடைகிறார்கள். தங்களால் சாதிக்கமுடியாததை தங்கள் ஹீரோக்கள் செய்வதைப் பார்த்துப் புளகாங்கிதப் படும் மனோபாகம் இங்கேயும் எழுவதைப் பார்க்கவேண்டும். இதுவே படத்தின் ஆதாரமும் கூட. எல்லா மக்களுக்குள்ளும் ஒரு தீவிரவாதி உறங்கிக்கொண்டே இருக்கிறான். அத்தீவிரவாதம், மக்களை அழித்துக்கொண்டிருக்கும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகவும் இருக்கலாம். தன் பெயரைச் சொல்லாத ஒருவன், தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தீவிரவாதியாக மாறுகிறான். அவன் செய்யும் கொலைகளுக்கு எதிராக அவன் சொல்லும் காரணங்கள் மிக எளிமையானவை. நான் வேலைக்குச் சென்றால் திரும்பவும் உயிரோடு வருவேன் என்று என் மனைவிக்கு எவ்வித உத்திரவாதமுமில்லை. தினமும் புன்முறுவல் புரியும் ரயில் சிநேகிதரை மறுநாள் காணவில்லை. முதல்நாள் குண்டுவெடிப்பில் இறந்து போயிருக்கிறார். இந்த குண்டுவெடிப்புக்குகளுக்குக் காரணமாணவர்கள் உயிரோடு திரிகிறார்கள். மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அது சரியல்ல. இதுவே அவன் சொல்லும் காரணம்.

எளிமையான ஓர் அதிகாரியைப் போல அறிமுகமாகும் நஸ்ருதீன் ஷா, கடைசி காட்சியில் அடையும் கொந்தளிப்பு அசர வைக்கிறது. எந்த ஒரு காட்சியிலும் தன் எல்லையைத் தாண்டாமல், மிக இயல்பாக அவர் நடித்திருப்பது படத்தின் முக்கிய விஷயம். அவரது உடல்மொழி அசாத்தியமானது. குண்டுவெடிக்கப்போகும் முன்பு அவர் கை நரம்புகள் முறுக்கித் தெரியும் காட்சி அதில் ஒன்று. காவல்துறை அதிகாரியாக வரும் அனுபம் கேரும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும், ஒரு சில காட்சிகளில் தேவையற்ற பதற்றமும் முகபாவமும் காட்டுகிறார். ஒருவகையில் இது இயக்குநரின் தவறும் கூட. அனுபம்கேருக்கு வரும் சில காட்சிகள் மசாலாத்தனம் கொண்டவை. என்றாலும், இவர்கள் இருவருமே இப்படத்தை சுமந்து செல்கிறார்கள்.

இப்படத்தின் முக்கியமான விஷயம், இப்படத்தின் கதை. இன்றைய நிலையில், இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவது கூட, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஊடகங்கள் நிறுவிவிட்ட நிலையில், வெகுஜனங்களான ஊடகமாக மாறிக் கிடக்கும் ஒரு திரைப்படத்தில் இத்தகைய கதை ஒன்றை நினைத்துப் பார்ப்பது கூட அசாரதாரணமான விஷயம். அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும். நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் இஸ்லாமியர்கள்; ஒருவர் ஹிந்து. நான்கு தீவிரவாதிகளும் தாங்கள் எந்த குண்டுவெடிப்பில் பங்கு பெற்றவர்கள் என்று கூறி, அதற்காகப் பெருமைப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். இத்தகைய தீவிரவாதிகளுக்கு சட்டம் சொல்லும் பதில் என்ன? சட்டத்தின் பதில் கிடைக்க ஆகும் தாமதத்தில் இவர்கள் என்ன ஆகிறார்கள்? பிணையில் வெளிவரும் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களை யார் கண்காணிக்கிறார்கள்? இதில் இவர்கள் விடுதலையும் ஆகிவிட்டால், ஏதேனும் ஒரு முற்போக்குக் கட்சியிலோ அல்லது மதக் கட்சியிலோ தலைவராகவும் ஆகிவிடமுடியும். இதை இன்று நாம் நிஜத்தில் கண்டுகொண்டிருக்கிறோம். மதானிக்காக குரல் எழுப்பாத முற்போக்கு கட்சிகளே இல்லை எனலாம். கடமை தவறாத ஒரு காவல்துறை அதிகாரியின் பெயர் ஆரிஃப் என்றதும், நஸ்ருதீன் ஷா ஒரு நிமிடம் அர்த்தத்தோடு சிரிக்கிறார். தீவிரவாதத்துக்குத் துணைபோகும் சில இஸ்லாமியர்களுக்கு எதிராக இத்தகைய அர்த்தம் உள்ள சிரிப்பை உண்டாக்க, பெரும்பாலான இஸ்லாமியர்கள் முயலவேண்டும். தங்கள் மதம் தீவிரவாதத்துக்கு எதிரானதல்ல என்கிற நம்பிக்கையை அவர்கள் எல்லோர் மனத்திலும் கொண்டுவரவேண்டும். இதுவே இந்தியத் தேவை, யதார்த்தமான அணுகுமுறையும் கூட. உண்மையில் நான் இந்த விமர்சனத்தைக் கூட, பெயரில்லாமலே எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால், பெயரைச் சொன்னாலே அதை வைத்துப் பின்னணி தேடி, ஒரு முன்முடிவு கொள்ளும் சமூக நிலையையும் இப்படம் சுட்டிக் காண்பிக்கிறது. கடைசிவரை நஸ்ருதீன் ஷா தன் பெயரைச் சொல்வதே இல்லை. காரணம், தன் பெயர் தன் மதம் எதுவெனச் சொல்லிவிடும். பின்பு, தீவிரவாததுக்கு எதிரான முனை மழுங்கி அது அரசியலாகிவிடும். இயக்குநர் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லாமல் விட்டிருப்பது மிகச்சிறந்த உத்தி மட்டுமல்ல, ஊடகங்களின் மீதான கடுமையான விமர்சனம்.

இப்படம் முன்வைக்கும் செய்திதான் தீர்வா என்றால், நிச்சயம் இது தீர்வாக இருக்கமுடியாது. இப்படம் தரும் செய்தியை அடிப்படையாக வைத்து நாம் தீர்வை அடையவேண்டும் என்றால், அது தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளிலும், தீவிரவாதிகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகளிலும் இருக்கிறது. சட்டம் என்பது ஒரு கோமாளி அல்ல, ஒரு சர்வாதிகாரி என்கிற பயத்தை அது குறைந்தபட்சம் தீவிரவாதிகளுக்காகவது உண்டாக்கவேண்டும். ஆனால் வெற்று ஜனநாயகம் பேசித் திரியும் போலிகள் மலிந்த நம் நாட்டில் இது எப்போது சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. இந்தக் கோபத்தைச் சொல்கிறது ‘ஒரு புதன்கிழமை.’ முதல்வன், ஜெண்டில்மேன் வகையறாக்கள் போல இதுவும் ஒரு fantasy வகைத் திரைப்படமே. அந்த fantasyயை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்றைய தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்; முதல்வன், ஜெண்டில்மேன் போன்ற ரசிகத் தன்மையுள்ள படங்களாக அல்லாமல், ஒரு விவாதத்துக்குரிய படைப்பாக.

இதை ஒரு திரைபப்டம் என்று அணுகுவோமானால், தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு கொண்டாடப்படவேண்டிய படமில்லை என்றே சொல்லுவேன். படத்தோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற, எரிச்சலூட்டும் பின்னணி இசை. ஒரு நல்ல படத்துக்கு வேண்டிய அமைதி இப்படத்தில் இல்லவே இல்லை. வேகமான திரைக்கதை என்பது குறுகிய நொடிகள் கொண்ட எடிட்டிங் என்று நினைத்துவிட்டார் எடிட்டர். ஒரு வெகுஜன திரைப்படத்துக்குரிய வேகத்தோடு நகர்கின்றன காட்சிகள். முக்கியக் கதையை விட்டுவிட்டுப் பார்த்தால், எரிச்சலூட்டும் பல காட்சிகள் படமெங்கும் குவிந்துகிடக்கின்றன. குறிப்பாக அனுபம்கேர் வரும் பல காட்சிகள். இவையெல்லாம் சாதாரண ரசிகனை சிரிக்க வைக்கும், அல்லது உசுப்பேற்ற வைக்கும் காட்சிகள்.

முதல் காட்சியில் ஒருவர் தன் மனைவியை அடித்துவிட்டதாகக் குற்றம் சொல்லும் காட்சியிலிருந்து, வெடி குண்டை கண்டுபிடிக்கச் செல்லும் அதிரிகாரியிடம், ‘உனக்கு குழந்தை இருக்கிறதா, இருந்தாலும் குண்டு கண்டுபிடிக்கச் செல்வாயா, இறந்தாலும் பரவாயில்லையா’ என்றெல்லாம் கேட்பது, ஒரு இளைஞன் தொலைபேசி அழைப்பை கண்டுபிடிக்க வரும்போது வரும் தேவையற்ற தொலைபேசி அழைப்பு, அனுபம்பேர் ‘கடைசியில் ஆரிஃபை .... வேறு வழியில்லை’ என்பதும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் ஆரிஃபை சந்தேகப் படத் துவங்குவதுமான காட்சிகள், நஸ்ருதீன் ஷா நல்லவர் என்று தெரிந்ததும் பொதுமக்கள் அடிக்கும் பல்டி வரை பல்வேறு க்ளிஷேக்கள் படம் நெடுகிலும் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் அடியோடு இயக்குநர் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் படம் நெடுக நஸ்ருதீன் ஷாவும், அனுபம்கேரும் பேசிக்கொண்டிருந்தாலும், மனதை அள்ளும் காட்சிகள் எவை என்றால் யோசிக்கவேண்டியிருக்கிறது.

நான்கு தீவிரவாதிகளை காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ஒரு பேருந்தில் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சி முக்கியமானது. ஆரிஃப் இஸ்லாமியர் என்பதைக் கண்டுகொள்ளும் திவிரவாதி அவனிடம் பேசத்துவங்குகிறான். ஆனால் ஆரிஃப் அவனிடம் சிக்குவதில்லை. கடைசியில் தான் இறப்பதற்கு முன்பும் ஆரிஃபிடம் இஸ்லாமியப் பாசத்தை முன்வைத்துப் பேசத் துவங்குகிறான். ஆரிஃப் ‘அதற்கு நீ இந்தியாவிற்கு வந்திருக்கக்கூடாது’ என்று சொல்லி சுட்டுத் தள்ளுகிறான். இதுபோன்ற, மனதில் ஊடுருவும் காட்சிகள் குறைவுதான். படத்தின் ஒட்டுமொத்த எண்ணமும், வேகமான காட்சிகளில் மட்டுமே குவிந்துவிட்டதால் ஏற்பட்ட பிரச்சினை இது.

ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வெடிக்கிறது, அடுத்த வியாழக் கிழமை குண்டு வெடிக்கிறது, அதற்கு ஒரு புதன்கிழமையில் ஒரு சாதாரண குடிமகன் தரும் பதிலை சுவாரஸ்யமாகச் சொல்கிறது ‘ஒரு புதன்கிழமை.’ கதையின் தைரியத்துக்ககவே நிச்சயம் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். இத்திரைப்படத்தை தமிழில் கமல் எடுக்கப்போகிறார் என்பது சோகமான செய்தி. ’உங்கள் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாராமே’ என்று நஸ்ருதீன் ஷாவிடம் கேட்டபோது, ‘எல்லா கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கலாமே’ என்றாராம். நல்ல பதில்தான். கமல் இத்திரைப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. கூடவே, மூன்று இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகளுக்கு பதிலாக மூன்று இந்து அடிப்படைத் தீவிரவாதிகளைக் காண்பிப்பார். இஸ்லாமிய மக்களின் மனத்தில் இருக்கும் அச்சத்தைப் பற்றிப் பேசுவார். இதில் தவறில்லை, ஆனால், இந்துத் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசுவார். இந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யும் வசனங்கள் இல்லாவிட்டால் கமலுக்குத் தூக்கம் வராது. அதேசமயம், இஸ்லாமிய கிறித்துவ நம்பிக்கைகளின் மீதான கிண்டல் சிறிதும் இராது. தேவைப்பட்டால் அதைப் பாராட்டவும் செய்வார். இத்தகைய ஆபத்துகளோடு தயாராகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து எந்தவொரு சாதாண குடிமகனும், நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும், கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்.

சுரேஷ் கண்ணன் எழுதிய பதிவு

விஸ்வாமித்திரா எழுதிய பதிவு

பின்குறிப்பு: திநகர் புத்தகக் கண்காட்சியில் இருந்தபோது திடீரென ஒருவர் வந்தார். கருப்பாக, சாதாரண உயரத்துடன், தலையில் லேசாக எட்டிப் பார்க்கும் வழுக்கையுடன். ‘இங்க ஹரன் பிரசன்னா யாரு’ என்றார். நாந்தான் என்றதும் ஒரு சிடியைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த சிடி இட்லிவடை அனுப்பியது! ஏற்கெனவே அரட்டையில் இட்லிவடை தான் சிடி அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். நான் வந்தவரிடம் யாரென்று கேட்கவில்லை. நான் அவர் யார் எனக் கேட்டு, அவர் ‘நான் தான் இட்லிவடை’ என்று சொன்னாலும், ‘நான் இட்லிவடை இல்லை’ என்று சொன்னாலும் என்னால் நம்பமுடியப்போவதில்லை. அரட்டையில் இட்லிவடை வழக்கம்போல ‘வேற எதாவது படம் வேணும்னாலும் சொல்லுங்க’ என்கிறார். அந்த சிடியில் :) நகைப்புக் குறி வேறு! நஸ்ருதீன் ஷாவைவிடக் கடுமையான இயலாமையில் இருக்கிறேன். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்கிற பழமொழி பொய்க்காது.

( நன்றி: ஹரன் பிரசன்னா(இட்லிவடையின் சிறப்பு சினிமா விமர்சகர்))

13 Comments:

R.Gopi said...

//இத்திரைப்படத்தை தமிழில் கமல் எடுக்கப்போகிறார் என்பது சோகமான செய்தி. ’உங்கள் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாராமே’ என்று நஸ்ருதீன் ஷாவிடம் கேட்டபோது, ‘எல்லா கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கலாமே’ என்றாராம். நல்ல பதில்தான். கமல் இத்திரைப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. கூடவே, மூன்று இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகளுக்கு பதிலாக மூன்று இந்து அடிப்படைத் தீவிரவாதிகளைக் காண்பிப்பார். இஸ்லாமிய மக்களின் மனத்தில் இருக்கும் அச்சத்தைப் பற்றிப் பேசுவார். இதில் தவறில்லை, ஆனால், இந்துத் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசுவார். இந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யும் வசனங்கள் இல்லாவிட்டால் கமலுக்குத் தூக்கம் வராது. அதேசமயம், இஸ்லாமிய கிறித்துவ நம்பிக்கைகளின் மீதான கிண்டல் சிறிதும் இராது. தேவைப்பட்டால் அதைப் பாராட்டவும் செய்வார். இத்தகைய ஆபத்துகளோடு தயாராகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து எந்தவொரு சாதாண குடிமகனும், நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும், கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்.//

****************

கமலின் ஆத்திக மற்றும் நாத்தீக நிலைப்பாடை பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லும்போது - கமல் கருப்பு சட்டை மட்டும் போட்டுக்கொண்டால் பெரியார் பக்தனாக ஆகிவிடுவோம் என்ற ரெண்டும்கெட்டான் நிலையில் உள்ளவர் என்பார்.

தான் அக்ரகாரத்தை விட்டு பகுத்தறிவு பாசறைக்கு வந்து விட்டதாக நினைத்து கொள்வதுதான் சோகம் என்றும் கூறுவார்.

கமல் நல்லவர் இல்லேன்னு சொல்ல முடியாது. ஆனா, நல்லவரா இருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்ல வந்தேன் ........... (வசன உபயம் - உலக நாயகன்)

உப தகவல் - அவருக்கு கலைஞானி என்ற அறிய பட்டத்தை தன் பரந்து விரிந்த தோள்களில் சுமந்து செல்ல அள்ளி கொடுத்தவர் (எல்லாத்தையும் இவரு அள்ளி குடுக்க மாட்டாரு, பட்டம் தானே, அள்ளிக்கோ, வாங்கிக்கோன்னு குடுப்பாரு) நம்ம "தல" தான் என்பதை உங்கள் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

Anonymous said...

தீவிரவாதத்துக்குத் துணைபோகும் சில இஸ்லாமியர்களுக்கு எதிராக இத்தகைய அர்த்தம் உள்ள சிரிப்பை உண்டாக்க, பெரும்பாலான இஸ்லாமியர்கள் முயலவேண்டும். தங்கள் மதம் தீவிரவாதத்துக்கு எதிரானதல்ல என்கிற நம்பிக்கையை அவர்கள் எல்லோர் மனத்திலும் கொண்டுவரவேண்டும் -mudalil ungalai pondra ennam ullaverkal mara vendum ulakathil muslim matum than theeveravathya?gujaratil indru varrai muslimkal agathikalaka irkurarkal atu entha vagai terrorisom?srilankavil muslimkal veerati adikapatopothu?

Anonymous said...

‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து எந்தவொரு சாதாண குடிமகனும், நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும், கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்'

This is worst thing which you did with right to you have pen.I dont know how can you compare kamal with nasirudeen shah.
are u a mad/?Comparing rajini kamal also not a fair think to do.
I have recomentation to you haran plz study well about the movie and actors before writing. with out any knowledge dont publish these kind od worst comments in the site.

M Arunachalam said...

I have missed this movie when it was released & it was removed from screening within a week due to poor response.

However, I read about it in the following blog of Gowrishankar

http://www.gowrishankar.info/2008/11/wednesday.html

After reading the above blogpost, I hired a DVD & watched it.

The film runs for about 90 minutes only but is a racy one. One of the really good movies I have watched in recent times.

Forget about Komali Hassan, no Tamilian worth his salt will have the GUTS to take this movie as it is. Because it portrays present-day reality without any dilution.

This movie has to be shown to all the voters BEFORE this election so that people will REMEMBER TO VOTE OUT THIS USELESS & TERRORIST-FRIENDLY UPA GOVT.

If and when this movie is remade by Komali Hassan in Tamil, expect atleast 1 scene where the Nasarudeen Shah character (Komali only) is bound to have a lip-lock with ...... whom? There are no lady characters in "A Wednesday". Hmmm. Yeah...with the lady TV reporter who will be hovering around the Commissioner's office.

After all, this is the same guy who re-made the Hindi "Droh Kaal" in Tamil as "Kurudhi Punal" where he inserted kissing scenes with Gouthami. He knows how to get "his" work done - even at the cost of making the movie to fail.

I hope IV will not come under "Maami" pressure once again to delete this post & my comments because it refers to "Komali" Hassan.

Anonymous said...

உலகநாயகனை இப்படி கிண்டல் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். 'அன்பே சிவம்' பார்த்திருக்கிறீர்களா? எத்தனை அருமையான படம் அது! உண்மையைத் தோலுரித்துக்காட்டும் நேர்மையான படைப்பாளிகள் கமலஹாசனைப் போன்ற வெகுசிலரே!

M Arunachalam said...

//தோலுரித்துக்காட்டும் படைப்பாளிகள் கமலஹாசனைப் போன்ற வெகுசிலரே!//

That is what I am also saying. Heroine's skin - I mean. He! He!!

Anonymous said...

கருப்பாக, சாதாரண உயரத்துடன், தலையில் லேசாக எட்டிப் பார்க்கும் வழுக்கையுடன். ‘இங்க ஹரன் பிரசன்னா யாரு’ என்றார். நாந்தான் என்றதும் ஒரு சிடியைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

That's Kamala Hasan in disguise :).

Unknown said...

//கருப்பாக, சாதாரண உயரத்துடன், தலையில் லேசாக எட்டிப் பார்க்கும் வழுக்கையுடன்// ஐஐஐஐஐ! மிகுந்த பிரகாசத்துடன இருந்தாரா?

கருப்புசாமிகுத்தகைதாரர் said...

பிரசன்னா எத்தனை டிஸ்க்ளெய்மர் போட்டாலும் புத்திசாலித்தனமான காட்சி ரூப சப்பைக்கட்டுகள் கட்டினாலும் சிலவற்றை ஒளிக்க இயலாது. நீங்கள் வெகு விரைவில் அந்நியன் மாதிரி ஆகிவிடப்போகிறீர்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது. வேலை மெனக்கெட்டு ஆளைப் பிடித்து உங்களுக்கு நீங்களே சிடி கொண்டுவந்து கொடுக்கச் சொல்வதெல்லாம் சற்றே ஓவராகத் தோன்றவில்லை? ஆனாலும் இந்தக் காட்சி நிஜமென்றால் உங்கள் திரைக்கதை அமைப்பு நேர்த்தியை வியக்கிறேன்.உங்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தைப் பரிசளிக்க விரும்புகிறேன்! [http://nhm.in/shop/978-81-8368-142-1.html] சிடி கொண்டுவந்துகொடுத்த நபரையே அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.

Anonymous said...

இந்தப் படத்தை அப்படியே எடுக்கும் துணிச்சல் கமல் ஹாசனுக்குக் கிடையாது.

அதில் மோகன்லால் வேறு நடிக்கிறாராம். மோகன்லாலுக்கு ஏதோ கெட்ட நேரம் போலிருக்கிறது. கமல் ஹாசன் படத்தில் ஒரே ஒரு நடிகர்தான் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நடிக்க முடியும் அது கமல் ஹாசன் மட்டுமே. இந்திப் படத்தில் எந்தவிதமான மசாலாவும் சினிமாத்தனமும் கிடையாது. மிக நேரடியாக ஆனால் அழுத்தமாக எடுக்கப் பட்டிருக்கும் ஒரு இயல்பான திரைப்படம். ஆனால் கமல் ஹாசன் இந்தப் படத்தைத் தமிழில் எடுக்க முயன்றால் அதில் குறைந்த பட்சம் அவருக்கு ரெண்டு ஹீரோயின்களாவது வேண்டும். ஒருவரைத் தீவீரவாதிகள் கொன்று விட்டதால் இன்னொரு காதலியுடன் பழி வாங்கக் கிளம்பி விடுவார். ரெண்டு கதாநாயகிகளுடன் குறைந்த பட்சம் ரெண்டு டூயட்களாவது அவரது நடனத் திறமையை ஆயிரத்தி ஓராவது தடவையாக நிரூபிக்கக் காட்டியே ஆக வேண்டும்.

மேலும் இந்திப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷா ரோலில் மட்டும் அல்லாமல் போலீஸ் கமிஷனராக வரும் அனுபம் கேர் ரோலிலும், இன்னும் சில இன்ஸ்பெக்டர்கள் ரோலிலும், கம்ப்யூட்டர் ஹாக்கராக வரும் சின்னப் பையன் ரோலிலும், டி வி பெண்ணின் ரோலிலும், தீவீர்வாதிகளாகவும், நஸ்ரூத்தின் ஷாவுடன் ஃபோனில் மட்டும் பேசும் திரையில் முகம் காட்டாத அவரது மனைவியாகவும், ஏன் வெடிகுண்டை மோப்பம் பிடிக்கும் நாய்களில் ஒன்றாகவும் கூட அவரே அல்லது அவர் மட்டுமே நடிக்க விரும்புவார்.

இந்திப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷாவின் பின்புலம் எதுவும் காட்டப் படுவதில்லை. அவர் பெயரோ குடும்பமோ எதுவுமே யாருக்கும் தெரிவிக்கப் படுவதில்லை. அவர் முகமில்லாத ஒரு மும்பைக்கர் அவ்வளவுதான். ஆனால் கமலஹாசன் அப்படி சும்மா வந்து விட்டுப் போய் விட முடியுமா என்ன? அவருக்கு மனைவி கொல்லப் படுவதைக் காண்பிக்க ஒரு ஃப்ளாஷ் பேக் காதலிக்கு ஒரு காட்சி என்று நிறைய சேர்க்க வேண்டி வரும்.

அப்புறம் இந்தியில் நஸ்ருத்தீன் ஷா சண்டையெல்லாம் போடுவதில்லை. ஒரு சோர்ந்து போன ஆபீஸ் குமாஸ்தா போல அமைதியாக வந்து விட்டுப் போகிறார். கமலஹாசனுக்கு குறைந்தது ரெண்டு ஃபைட்டாவது வைக்க வேண்டும். தீவீரவாதிகள் தப்பித்துப் போவது போல வைத்து அவர்களை இவர் காரிலும் பின்னர் போட்டிலும் சேஸ் செய்து பிடித்துக் கொல்வது போலக் காட்சி வைத்தால்தான் அது கமல் ஹாசன் படமாக இருக்கும்

இந்திப் படத்தில் பயங்கரவாதிகளை இந்திய முஸ்லீம்களாகக் காட்டுகிறார்கள். என்ன அநியாயம். மதச்சார்பின்மையைத் தூக்கி நிறுத்தும் ஈ.வெ.ரா.வின் சீடர் அப்படிக் காட்டி விட முடியுமா என்ன? ஆகவே தமிழ் வெர்ஷனில் தீவீரவாதிகள் நிச்சயம் இந்து பயங்கரவாதிகளாகவோ அல்லது பெயர் சொல்லப்படாத தீவீரவாதிகளாகவோதான் இருப்பார்கள். அல்லது சினிமாவில் அவரது முதல் மனைவியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரர்களாகவும் கூட இருக்கலாம். ஆனால் அந்த பயங்கரவாதிகள் சிவனடியார்களாக இருக்கப் போவது நிச்சயம். வார்த்தைக்கு வார்த்தை தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் நமச்சிவாயம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கப் போகிறார்கள். நாலு பாட்டு, நாலு ஃபைட்டு உறுதியாக இருக்கும். நஸ்ருத்தின் ஷா உட்கார்ந்த இடத்தில் இருந்து அலட்டாமல் பேசும் வசனத்தை இவர் ஒரு அறையில் சுத்தி சுத்தி சுத்தி வந்து நம்மை தலை கிறு கிறுக்க வைத்து வேறு பேசுவார். எல்லா கொடுமைகளையும் நாமும் பார்க்கத்தானே போகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளை தன் படத்தில் காண்பித்து உண்மையைச் சொல்லும் ஆண்மை கமால் ஹஸனுக்கு நிச்சயம் கிடையாது. அந்த விஷயத்தில் நீரஜ் பாண்டேவும், அனுபம் கேரும், நஸ்ருத்தீன் ஷாவும் அபாரத் துணிவுடன் இந்த சினிமாவை எடுத்திருக்கிறார்கள்.

இப்படி இந்தியில் அபூர்வமாக இந்தியில் வரும் நல்ல படங்களை கமல் ஹாசன், பீ வாசு ஆகியோர் தமிழில் எடுக்கக் கூடாது என்று யாராவது சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கினால் புண்ணியமாகப் போகும். குசேலன் என்ற பெயரில் ’கத பறயும் போள்’ என்ற ஒரு நல்ல படத்தை எப்படி பீ வாசு சீரழித்தார் என்று நாம் சமீபத்தில் பார்த்தோம். மோகன்லால் கமலஹாசனுடன் நடிப்பதற்குப் தான் கற்றுக் கொண்ட மாஜிக்கைக் கொண்டு மாயமாக மறைந்து போய் விடலாம்.

மற்றொரு ’அன்பே சிவம்’ உருவாகி வருகிறது. அனைவரும் ஜாக்கிரதை!

Anonymous said...

ஒரு புதன்கிழமை ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் உசுப்ப வேண்டும். இந்தப் படம் ஒரு வித ஃபான்டஸிதான். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் பொழுதும் ஒரு சாதாரண இந்தியனின் மனதில் எழும் பழிவாங்கும் உணர்வை திரையில் சாத்தியப் படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதை மிக யதார்த்தத்துடன், வலுவாக, மசாலா இல்லாமல் சொல்லியிருப்பதில்தான் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது. அந்தக் காரணத்தினாலேயே படம் பார்ப்பவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த சினிமாவாக அமைந்து விடுகிறது.


ஒரு சாதாரண இந்தியனால் இந்தப் படத்தில் வரும் நஸ்ருத்தீன் ஷா போலச் செயல்பட முடியாது. இருந்தாலும் இஸ்லாமிய பயங்கர்வாதத்திற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் தன்னிடம் இருக்கும் ஒரே வலுவான ஆயுத்த்தைப் பிரயோகிக்கலாம். அது என்ன?

நஸ்ருத்தீன் ஷாவிடம் இருக்கும் கம்ப்யூட்டரை விட, தொழில்நுட்பங்களை விட, ஆர்.டி.எக்ஸ். குண்டுகளை விடவும் வலுவான ஆயுதம் ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது அதுதான் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய அவனிடமிருக்கும் ஜனநாயக ஆயுதம். பயங்கரவாதிகளை அழிக்க விரும்பும் இந்தியன் செய்ய வேண்டிய ஒரே காரியம், அந்த பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும் அரசியல்வாதிகளைத் தங்களிடம் இருக்கும் வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டு என்ற ஆயுதம் மூலம் அகற்றுவதுதான்.

இந்த முறையும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தவறி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அதே மைனாரிட்டி அடிவருடி அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்தால் ஒவ்வொரு நாளும் மக்கள் உடல் சிதறிச் சாகும் நிலையை அந்த ஆண்டவனால் கூட மாற்ற முடியாது. தானும் தன் உற்றமும் சுற்றமும் உடல் கருகிச் சாவதோ, பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழ்வதோ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு புதன்கிழமை போன்ற சினிமாக்கள் இந்தியர்களிடம் சிறிய விழிப்புணர்வுக்கு வலிகோலுகின்றன. அப்போதும் விழித்துக் கொள்ள மறுப்பவர்களுக்குப் பெரும் தீமைகள் ஏற்படும்போது உலகில் யாரும் அனுதாபம் காண்பிக்க மாட்டார்கள். நாமே நமக்கு எதிரிகளாகிவிடுவதுதான் மிகப் பெரிய அபாயம்.

ஒரு புதன்கிழமையை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

Anonymous said...

I think harans original name M.Arunachalam.If they are mad please call one kelpauk ambulance...

kamal fan said...

www.unnaipoloruvan.com/trailer.html