பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 13, 2009

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

'நான் கடவுள்' படம் தமிழ்த் திரையுலகம் இதுவரையில் காணாத காட்சிகளைக் காண்பிக்கிறது. கதையின் நிகழ்களமாக எடுத்துக்கொள்ளப்படும் பிச்சைக்காரர்களின் உலகம் இதுவரை யாரும் திரையில் காணாதது. அதற்காக பாலா மெனக்கெட்டிருக்கும் விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு பிச்சைக்காரரையும் தேர்வுசெய்து நடிக்க வைத்திருப்பதற்கே நிறைய நாள்கள் தேவைப்பட்டிருக்கும். ஏழாவது உலகம் நாவலை படித்திருக்காத பலருக்கு, இத்திரைப்படம் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. அதேபோல் தமிழ்த்திரையுலம் காணாத இன்னொரு விஷயம், சன்யாசிகளின் வாழ்க்கை. ஹிந்துமதம் தொடர்பான எந்த ஒரு காட்சியையும் விமர்சனத்தோடும், கேலியோடும், கிண்டலோடும் மட்டுமே எடுக்கும் தைரியம் கொண்ட கமல்ஹாசன், பாலசந்தர் வகையறாக்களுக்கு மத்தியில், இந்து மதச் சார்பான குரல்கள் - அது நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட - எங்கேயும் வெளிவந்துவிடக்கூடாது என்ற கருத்தியல்கள் கொண்ட சிற்றிதழ்ச் சூழலில், உள்ளதை உள்ளபடி, அதுவும் அதை ஒரு மாபெரும் மக்கள் ஊடகத்தில் காண்பிக்கும் தைரியம் பாலாவிற்கு இருந்திருக்கிறது. படம் முழுக்க காவி நிறம். இந்த ஒரு காரணத்தினாலும், அகோரி தொடர்ந்து சமிஸ்கிருத வசனங்கள் பேசியபடியே வருவதானாலும் இது ஹிந்துத்துவ படம் என்கிற கருத்து ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் இத்திரைப்படம் இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் கருத்தைவிட அதிகமாக, இறையால் கைவிடப்பட்டதாகக் கருதிக்கொள்ளும் விளிம்பு நிலை மக்களின் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளதாகவே நான் காண்கிறேன். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மதத்தின் மீதும் கரிசனம் காட்டப்படவில்லை என்பதே. இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.

பிதாமகன் திரைப்படம் வந்தபோது, பாலாவிற்கு மனப்பிறழ்ச்சி என்கிற வகையிலெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. (இத்தகைய திரைப்படங்கள் வருவதற்கு ஒரு இயக்குநரின் மனப்பிறழ்ச்சிதான் காரணம் என்றால், அந்த மனப்பிறழ்ச்சி நிறைய இயக்குநர்களுக்கு வரட்டும்.) அதே விமர்சனங்கள் இத்திரைப்படத்திலும் தொடரக்கூடும். பாலாவின் கதாநாயகர்கள் அசாதரணர்களாகவே வருவது, இவ்விமர்சனத்தின் பின்னாலிருக்கும் முக்கியமான காரணம். பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் ஏன் அப்படி அசாதரணனாக இருக்கவேண்டும் என்பதற்கு எவ்விதக் காரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படத்திலும் அதுவே தொடர்கிறது. ருத்ரன் அகோரியாக வாழ்கிறான். அவனை யாரும் நெருங்கமுடியாது. அவன் யாரையும் அடித்து வீழ்த்தி வெற்றிகொண்டு விடுவான். இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின்னர்தான் நம்மால் இப்படத்தைப் பார்க்கவே முடியும். தனது முந்தைய படங்களின் வழியே, பாலா இதற்கு நம்மைப் பழக்கிவிட்டார் என்பதால் இதனை அப்படி ஏற்றுக்கொண்டுவிட முடிகிறது. ஆனால், இதே போன்ற பாத்திரங்களின் வழியே தொடர்ந்து படமெடுப்பதைப் பற்றி பாலா யோசிக்கத் தொடங்கவேண்டும். மிக வித்தியாசமான ஒரு திரைப்படம், மசாலா திரைப்படம்தான் என்கிற வட்டத்துக்குள் சிக்குவது இது போன்ற சித்திரிப்புகளாலேயே.

பிதாமகனில் செய்த இன்னொரு தவறை பாலா மீண்டும் செய்திருக்கிறார். காவல்நிலையத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்திற்குத் தேவையில்லாதவை மட்டுமல்ல. ஒருவித தவம் போலச் செல்லும் படத்தின் அமைதியை வெகுவாகக் குலைக்கின்றன.

இத்திரைப்படத்தில் பாலாவின் வெற்றி, விளிம்பு நிலை மனிதர்களை அவர் காட்சிப்படுத்தியிருப்பதில் இருகிறது. ஒருவகையில் இது ஜெயமோகனின் வெற்றி. பிச்சைக்காரர்கள் சதா அழுதுகொண்டே இருப்பதில்லை. அவர்களின் உலகம் கேலி, கிண்டல், காதல் உள்ளிட்ட எல்லாவற்றினாலும் ஆனது. பிச்சையெடுக்கும் சிறுவன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. மிகக் கடுமையான திரைக்கதையை வசனத்தின் மூலம் சமனாக்கியிறார் பாலா. ஜெயமோகனின் நக்கல் வசனங்கள் திரைப்படம் முழுவதும் வியாபித்துக் கிடக்கின்றன. இவையே படம் பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றச் செய்கின்றன. இல்லையென்றால் இத்திரைப்படம் திரைப்பட விழாவிற்கு மட்டுமான திரைப்படமாகியிருக்கும்.

ருத்ரனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு வேலை அதிகமில்லை. புஜங்களைத் தூக்கியபடி, முடியில் முகத்தை மறைத்துக்கொண்டு, சதா கஞ்சா போதையில் கண்களைச் சுழலபட்டி நடக்கவேண்டும். அவரது வேலையை மிக நன்றாகவே செய்திருக்கிறார். இவ்வேடத்தில் அஜித்தை நினைத்துப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. பாலாவிற்கு என்னதான் தன்னம்பிக்கை அதிகம் என்றாலும், அஜித்தை முதலில் ஒப்பந்தம் செய்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். பூஜாவின் நடிப்பு அசத்தல். ஒரு தேசிய விருதுக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். பூஜாவின் உழைப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும்.

திருநங்கைகள் தொடர்ந்து தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வரும் விதம் குறித்து குமுறியவர்களுக்கு இதம் தரும் வகையில், இத்திரைப்படத்தில் திருநங்கையின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக வருபவர், மற்ற எந்தக் கதாபாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார். தமிழில் இது ஒரு சாதனை. அவர்கள் மேல் தேவையற்ற காட்சிரீதியிலான கிண்டல்கள் வைக்கப்படவில்லை. திருநங்கைகளைப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கும் அவலம் எல்லாம் இல்லாமல், அப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலாவைப் பாராட்டவேண்டும். அதோடு, இதுபோன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவார். அது அவரது எஜமானாலேயோ அல்லது ஒரு பொதுஜனத்தாலேயோ அல்லது இருவருமாலேயோ நிகழும். இது போன்ற க்ளிஷே காட்சிகள் இப்படத்தில அறவே தவிர்க்கப்பட்டிருப்பது இன்னொரு முக்கிய விஷயம். அதன் காரணம், பாலா பூஜாவை ஒரு நடிகையாகப் பார்க்காமல், ஒரு பிச்சைக்காரப் பெண்ணாக மட்டும் பார்த்திருப்பதுதான் எனலாம். பெரும்பாலான தமிழ்ப்படங்களில் இது நிகழ்வதே இல்லை என்பதே இத்தகைய அபத்தக் காட்சிகள் இடம்பெறுவதற்கான காரணம்.

ருத்ரனின் அம்மாவாக நடிக்கும் பெண்மணிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஒரு சிக்கலான மனநிலையைச் சொல்லவேண்டிய அவருக்கு அழமட்டுமே தெரிகிறது. இதுபோன்ற காட்சிகளில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பதே நல்லது. கவிஞர் விக்கிரமாதித்யன் ஆச்சரியமான சந்தோஷம்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது படத்தின் இசை. இத்திரைப்படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜாதான். குணா, மகாநதி, ஹே ராம், விருமாண்டிக்கு அடுத்து வந்திருக்கும் மிகச்சிறந்த இசைக்கோவை உள்ள திரைப்படம் இதுவே. நெஞ்சை அதிர வைக்கும் இசை, மனதை உருக வைக்கும் இசை, காட்சியின் வீர்யத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் இசை என இளையராஜா மாறாத உருவங்களில்லை. இசையில் நெருப்பு எரிகிறது. நதி ஓடுகிறது. சங்கு ஒலி சங்கை அறுக்கிறது. ஹே ராம் திரைப்படத்திற்கே இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்றுதான் நினைக்கிறேன். பாடல்களைப் பொருத்தவரை, ஓம் சிவோகம் பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். மது பாலகிருஷ்ணனின் மயக்கும் குரலில் ஒரு பாடல் வருகிறது. ஆனால் அது மனதில் தங்கவே இல்லை.

ஒளிப்பதிவு வெகு அழகு. காசி நகரக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் காமராவின் வேகம் அசர வைக்கிறது.

பெரும்பாலும் வித்தியாசம் மற்றும் பிரம்மாண்டம் ஒருங்கே இணைந்த தமிழ்த் திரைப்படங்களை (ஹே ராம், குருதிப்புனல், மகாநதி, குணா போன்றவை) கமல்ஹாசனே தந்திருக்கிறார். அதை இம்முறை பாலா தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருமாண்டிக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் இல்லாத நிலையில், நான் கடவுள் அக்குறையைத் தீர்க்கிறது. கமல் செய்யும் நுண்ணரசியல் எதுவும் இல்லாமல், பின்னோக்கங்கள் எதுவும் இல்லாத தெளிவான படமாகவும் 'நான் கடவுள்' இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஹே ராம் போல, இது தமிழ்த் திரையுலகின் மைல்கல்லா என்றால் கிடையாது. ஆனால் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் இது ஒன்று. நந்தாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சேது, பிதாமகன், நான் கடவுள் என பாலாவின் கிராஃப் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இத்திரைப்படம் இதுவரை வந்திருக்கும் பாலாவின் படங்களில் சிறந்த படம். வரும் படங்களில், இன்னும் அதிக உயரத்தை பாலா தொடுவார் என உறுதியாக நம்பலாம்.

இட்லிவடைக்கு ஸ்பெஷலாக எழுதி கொடுத்த ஹரன் பிரசன்னாவிற்கு நன்றி

மஞ்சள் கமெண்ட் எதுவும் இல்லை ;-)

31 Comments:

Anonymous said...

ஜெயமோகனுக்காக அடித்த ஜால்ரா.

கிரி said...

//தமிழில் இது ஒரு சாதனை. அவர்கள் மேல் தேவையற்ற காட்சிரீதியிலான கிண்டல்கள் வைக்கப்படவில்லை. திருநங்கைகளைப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கும் அவலம் எல்லாம் இல்லாமல், அப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலாவைப் பாராட்டவேண்டும்//

வழிமொழிகிறேன்

கிரி said...

படத்தில் உள்ள சில லாஜிக் இடறல்களையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

இருந்தாலும் நல்ல முயற்சியை பாராட்டி ஒரு நல்ல விமர்சனம்

கானகம் said...

இந்த அருமையான விமர்சனத்தை ஜெயமோகனுக்கு ஜால்ரா என எழுதும் ரசிக கண்மணிகளை என்ன சொல்வது ???

ஜெயமோகன் மட்டுமா இங்கு பாராட்டப்படிருகிறார். ?? இளையராஜா, பிச்சைக்காரப் பெண் வேடம் தரித்தவர், கவிஞர் விகிரமாதித்தியன், பாலா இன்னும் விரிவாக சிறப்பாக அலசி இருக்கிறார் பிரசன்னா.

உள்குத்து கண்டு புடிச்சே உருப்படியா எழுத விட்ராதீங்கப்பு..

ஜெயக்குமார்

வாழவந்தான் said...

//மஞ்சள் கமெண்ட் எதுவும் இல்லை ;-)//
அத கூட மஞ்சா பேக்ரவுண்டுல போட்டாதான் மக்கள் பாக்குறாங்க
சில வருஷமா மஞ்சளின் கருணையில் தமிழ்நாடு இருக்குறதால இப்படி ஆகிடிச்சோ??

Anonymous said...

இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது
கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது
அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு
இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.

Anonymous said...

நேற்று பல கடும் விமர்சனங்களையும் மீறி இந்த படத்தை பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் என மனதில் எழுந்த அத்தனை எண்ணங்களையும் திரு. ஹரன் பிரசன்னா வின் எழுத்தில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலேயே இது ஒரு நல்ல தமிழ் திரைப்படம். இதை திறமையாக அடுத்த பாலா வுக்கு என் வாழ்த்துக்கள். திரு. பிரசன்னா சரியாக கூறியது போல, இது எந்த மதத்தையும் வோட்டு வங்கிக்காக எதிர்த்து பகுத்தறிவு பேசி திரியும் மு.க., தி.க. போலிகள் போல் அல்ல, ஒவ்வுறு கட்சிகளும், வசங்ககளும் நெற்றி பொட்டில் அடிக்கின்றன...அவர்களுக்கு மட்டும் அல்ல... நமக்கும் தான் ..

இந்த சமூக அவலங்களையும் அதை நடைமுறை படுத்திகொண்டுள்ள நமது சமூக காவலர்களையும் (அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தான் என் முதல் குற்றவாளிகள்) எண்ணி எண்ணி பார்த்து மனம் வெறுத்து போனேன். நமது இந்திய சமுதாயத்தின் கடை கோடியில் இவர்களை போன்ற சக மனிதர்களை சாக விட்டு விட்டு நாமும் நம்மால் (இவர்களாலும்) தேர்தெடுக்க பட்டவர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ..விலங்குகளுக்கு நீல சிலுவை ..அது இது என்று மட்டும் பிதற்றி கொண்டுள்ளோம்.இந்த சமுக அவலங்களுக்கு எதிரான எனது இயலாமையை நினைத்து மிகவும் வெட்க படுகிறேன்... அந்த படத்தில் வரும் அகோரி நம்மை விட எவ்வளவோ மேல் ....இந்த சமுதாய அழுக்குகள் எதுவும் அவனை கறை படுத்தவில்லை.

கொடும்பாவி-Kodumpavi said...

மஞ்சள் பெயின்ட் இல்ல சொல்றது கூட அதே நிறத்தில் போட்டு காண்பிக்கிறீர்களே இட்லி வடை. இது தான் உங்க லொள்ளு..!

Anonymous said...

அருமையான விமர்சனம்...

Anonymous said...

These reviews are well written than the movie itself.

Anonymous said...

// ஜெயமோகனுக்காக அடித்த ஜால்ரா//

இல்லவே இல்லை. இதுவரை வந்த விமர்சனங்களில் நான் சிறந்த ஒன்றாகக் கருதுவது இதைத் தான். பாரபட்சமற்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது.

// இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.//

உண்மை. இதைப் பார்த்தாவது அவர்கள் திருந்தினால் சரி ஹரன் அண்ணா...

//இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் கருத்தைவிட அதிகமாக, இறையால் கைவிடப்பட்டதாகக் கருதிக்கொள்ளும் விளிம்பு நிலை மக்களின் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளதாகவே நான் காண்கிறேன்//

உண்மை. உங்கள் விமர்சனம் மிக நேர்மையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

// இத்தகைய திரைப்படங்கள் வருவதற்கு ஒரு இயக்குநரின் மனப்பிறழ்ச்சிதான் காரணம் என்றால், அந்த மனப்பிறழ்ச்சி நிறைய இயக்குநர்களுக்கு வரட்டும்//

அய்யா... இது என்ன வரமா... சாபமா? எப்படியோ தமிழ்த் திரைப்பட உலகில் நல்லது நடந்தால் சரி!

// மது பாலகிருஷ்ணனின் மயக்கும் குரலில் ஒரு பாடல் வருகிறது. ஆனால் அது மனதில் தங்கவே இல்லை//

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. ராஜாவின் ரமண மாலையில் வரும் அற்புதமான உள்ளத்தை உருக்கும் பாடல் அல்லவா பிக்ஷை பாத்திரம் ஏந்தி வந்தேன்... Anyway Hats off idlyvadai and Haran Prasanna for the good review. It's Late But Latest [:-)

அழகிய சிறியவன்

Anonymous said...

படமும் அருமை. விமர்சனமும் அருமை.

அகநாழிகை said...

நல்ல பதிவு. படம் எதிர்பார்ப்புகளை எற்படிதியாதாலேயே ஏமாற்றங்களையும் தந்துள்ளது.

IlayaDhasan said...

//இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.
//
அருமையாக என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள் ...திரை கலைஞர்கள் மட்டுமல்ல ...அரசியல் 'கலைஞர்' மற்றும் பகுத்தறிவு பேசும் புத்திசாலிகளுக்கும் கூட ...

Anonymous said...

Many didn't feel the film was grest as some of the critics / reviews say.
I do not want to comment anything about the movie or the review.

A small question to IV:

IV, this was your feeling after you came out of Slumdog
"படம் முடிந்து வெளியே வரும் போது இந்தியா ஒரு பிச்சைக்கார, எல்லா இடங்களும் சேரியாக இருக்கும் அழுக்கு தேசம் போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது. இதைத்தான் என்னுடன் பேசிய அமெரிக்கரும் இந்தியா பற்றி தெரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்"

how did you feel after coming out of this movie?

ஓகை said...

'நான் கடவுள்' படத்திற்கு நன்றாக விமர்சனம் எழுதியிருக்கிறார் ஹரன் பிரசன்னா. இளையராஜாவின் இசை அற்புதமாக இருக்கிறது என்றாலும் இவரது விமர்சனத்தில் அதை சற்று தூக்கலாக விவரித்திருக்கிறார்.

//அவன் யாரையும் அடித்து வீழ்த்தி வெற்றிகொண்டு விடுவான். இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின்னர்தான் நம்மால் இப்படத்தைப் பார்க்கவே முடியும். தனது முந்தைய படங்களின் வழியே, பாலா இதற்கு நம்மைப் பழக்கிவிட்டார் //

இந்த குற்றச்சாட்டு எந்த அளவுக்கு பொருத்தமானது என்று புரியவில்லை. படத்தின் கதாநாயகன் உடல் ரீதியாக மிகப் பலம் பொருந்தியன் என்று பாத்திர அறிமுகத்திலேயே காட்டிவிடுகிறார். பாத்திரத்தைப் படைப்பது கதையாசிரியர்தானேயன்றி விமர்சகர் அல்லரே.

//பிதாமகனில் செய்த இன்னொரு தவறை பாலா மீண்டும் செய்திருக்கிறார். காவல்நிலையத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்திற்குத் தேவையில்லாதவை மட்டுமல்ல. ஒருவித தவம் போலச் செல்லும் படத்தின் அமைதியை வெகுவாகக் குலைக்கின்றன.//

இந்தக் காட்சிகள் எனக்கு வெகு இயல்பாகவே தோன்றின. மேலும் படத்துடன் ஒன்றியே இருந்தது. படத்தின் ஒரு முக்கிய சம்பவத்ததை இக்காட்சிகள் சார்ந்து இருக்கின்றன.

//ருத்ரனின் அம்மாவாக நடிக்கும் பெண்மணிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஒரு சிக்கலான மனநிலையைச் சொல்லவேண்டிய அவருக்கு அழமட்டுமே தெரிகிறது. இதுபோன்ற காட்சிகளில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பதே நல்லது.//

அந்த அம்மா ந்ன்றாகவே செய்திருக்கிறார். அப்படி ஒரு அம்மாதான் ருத்திரனுக்கு அமைந்திருப்பதான கதாசிரியரின் கற்பனையில் பிரசன்னா அநியாயமாக குறுக்கிடுகிறார்.

மற்றபடி பிரசன்னாவின் விமர்சனத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.

நடராஜன்.

Joomla Techie Sathish said...

நல்ல விமர்சனத்தை வரவேற்கிறேன்...

ரிஷபன்Meena said...

ஹரன் பிரசன்னா வின் விமர்சனம் ரொம்ப ஆற அமர அழகாக செய்யப்பட்டிருக்கிறது. தற்போது பத்திரிக்கைகளில் அல்லது தொலைக்காட்சிகளில் விமர்சனம் என்ற பெயரில் முழுக் கதையும் சொல்லித் தொலைத்து படம் பார்க்கும் போது பல சுவராஸ்யங்களை இல்லாமல் அடித்து விடுகிறார்கள். ஒரு நல்ல விமர்சனம் இப்படி தான் இருக்க வேண்டும்.

Unknown said...

Very well written review.
//கமல் செய்யும் நுண்ணரசியல் எதுவும் இல்லாமல், பின்னோக்கங்கள் எதுவும் இல்லாத தெளிவான படமாகவும் 'நான் கடவுள்' இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.//

This is so true. Great work Mr. Haran Prasanna.

Anonymous said...

Agori tribes existed in India long time back, it’s the fact even today that they eat human flesh and drink from the skull of the body they eaten. In the movie these facts are glorified into a heroic act or a religious ritual is not acceptable to many right minded people, in fact Agoris were disowned by Hindu religion long time back. Today many locals in Himalayan region considered Agoris are mentally retarded drug addicts and lot of the Agoris exist today are runaway drug addicts, mental patients. More than anything else these people require huge rehabilitation and proper treatments. Please check the BBC movie http://www.youtube.com/watch?v=3DeVovHw1RY&feature=related . In Darghas there are similar patients exist, There are so many Christian cults also out there… here is the sample one http://www.time.com/time/magazine/article/0,9171,745747,00.html . So, all the religions have these kinds of mentally retarded cults but only in our Hinduism we adore them with a god man status.

ஸ்ரீனி said...

//V, this was your feeling after you came out of Slumdog
"படம் முடிந்து வெளியே வரும் போது இந்தியா ஒரு பிச்சைக்கார, எல்லா இடங்களும் சேரியாக இருக்கும் அழுக்கு தேசம் போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது. இதைத்தான் என்னுடன் பேசிய அமெரிக்கரும் இந்தியா பற்றி தெரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்"

how did you feel after coming out of this movie?//

Let me tell how I felt. Upon watching Slumdog Millionaire, I felt disgusted. That movie picked out everything negative in India and projected it out in the most despicable manner. Everyone in the movie and hence every one in the country were depicted as lying thief and crook, where as the visiting Tourists were portrayed as saints who were ready to pardon and help even those who stole from them. In summary I felt that the makers of the SDM were no different than the villain Mamman( I think I got the name right) in the movie, both were banking to cash on the sympathy of people by projecting other's sufferings.

"நான் கடவுள்” also, I wouldn't say portray, but captures the sorrowful life the beggars, it shows their life's true colors, the support they offer to one another, their real positive attitude towards even the most negative things that happen in their life and their belief in the God. Unlike Slumdog Millionaire, I felt content that I saw a "Real" Good Movie.

You know, unlike SDM, I felt the background score in ”நான் கடவுள்” really enriched the movie. BTW, was there re-recording for SDM..? hmm.. I just heard here and there tunes sounding like old ARR jingles & bits & pieces of music from other movies..

Anonymous said...

ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில், படம் பார்த்தேன். ஏமாற்றம். இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆர்யா சில நேரங்கள் மட்டும் வந்து போகிறார். சில வார்த்தைகள். அதிலும் பாதி புரியவில்லை. வழக்கமான தோற்றமுடைய வில்லன்....ம்ம் ....பூஜா நடித்திருக்கிறார். அவர் பாடும்போது மட்டும் குரல் அழகாகிவிடுகிறது. சண்டை கட்சிகளெல்லாம் வழக்கம் போல் தமிழ் சினிமாவின் பாணி.
அழுக்கான உடை அணிந்து, பரட்டை தலையோடு உர்ர்ர் என்று வந்தால் நடிப்பா? ஐயோ!
பருத்திவீரனில் கார்த்திக்கின் நடிப்பு இதைவிட 100 டைம்ஸ் பெட்டெர். வசனங்கள் கூட ஓகே ரகம்.

தமிழ் சினிமாவில் இதைப் போன்று யாரும் படம் எடுக்க முடியாது என்று சொல்லி தமிழ் சினிமாவின் தரத்தை தாழ்த்தி விடாதீர்கள். பருத்தி வீரன், அன்பே சிவம் , மொழி போன்ற படங்கள் இதைவிட சிறந்த படங்கள். இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் கிரான் டோரினோ (Gran Torino) என்ற படத்தை பார்த்தேன். என்ன அற்புதமான நடிப்பு!!!! (Clint Eastwood) ஒருவேளை அந்த படத்தை பார்த்து விட்டு இதை பார்த்ததினால் தான் இப்படியோ?

ஆர். முத்துக்குமார் said...

பசி, எச்சில் இரவுகள் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா பிரசன்னா?

Unknown said...

//இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மதத்தின் மீதும் கரிசனம் காட்டப்படவில்லை என்பதே.//

இதை என்னால் ஏற்க்க முடியாது... (Who cares right?)

இரண்டு மணி நேர படம் முழுவதும்:
காவி,
கோவிலுக்குள் சண்டை,
வில்லனை ஆரத்தி தட்டை வைத்து அடிப்பது,
ஹிந்து கோவில் முன் மட்டும் பிச்சை எடுப்பது,
ஹிந்து கடுவுள் போல் மட்டும் வேசமிட்டு அவர்களையே விமர்சிப்பது,


இப்படி செய்து விட்டு இரண்டு வசனத்தில் மற்ற மதங்களை ஒப்புக்கு செர்கபடதாக என் கருத்து...

மற்றபடி ஓகே...

பாராட்டப்படவேண்டியவர்கள்:
ஆர்யா
பூஜா
மற்ற கதாபாத்திரங்கள்


பாலா இல்லை (i think i expect not more from bala --a story line)

--வாலுப்பையன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//இவ்வேடத்தில் அஜித்தை நினைத்துப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. பாலாவிற்கு என்னதான் தன்னம்பிக்கை அதிகம் என்றாலும், அஜித்தை முதலில் ஒப்பந்தம் செய்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். //

Ithu ungalukku rombha over-aga theriyavillaiya???
Ithu varai Entha padathilum kurippittu paraattum badiyana alavirku kooda illamal nadithu vantha arya-vaal ippadipattta nadippai velipadutha mudiyum bothu vaali, villan, varalaru ponra padangalil sirantha nadippai velipaduthi film-fare award vaangiya oru nadigar nadikka mudiyatha? Ithu enna nyayam? Ungalathu karuthu ennai vethanai paduthi vittathu...Ungalidam irunthu thaguntha bathilai ethirpaarkiren...nandri...

Anonymous said...

வெள்ளக்கார கிறித்தவன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கோவா இங்கல்லாம் பழங்குடி மக்களுக்கு காட்டின 'லவ்' பத்தி படி. என்னமோ ஆரியன் வந்து ஆயிரம் வருசம் அடிமையாக்கினான், யாரோ வந்து ஆட்டினாங்கன்னு.

அது என்னமோ திராவிடம்-ன்றயே, அது என்ன மதம்? எதோ தோமையார் வந்து திருவள்ளுவருக்கு கத்துக் கொடுத்தார்ன்னு புலம்பறாங்களே அதுவா? கேக்கவே கேவலமா இல்ல?

ஆரியன் மூவாயிரம் வருசம் திராவிடத்த அடிமையாக்கினான், சமஸ்கிருதத்த புகுத்தி தமிழக் கெடுத்தான்னு ஒரு சாதி வெறி கன்னடக்காரன் விட்ட கதையைக் கண்ண மூடிட்டு நம்புங்க. தமிழ்ல ஔவையார், கம்பர்ல்லாம் ஒன்னும் எழுதலை பாரு. எல்லாத்தயும் ஆரியன் கெடுத்தான் பாரு. ஒங்க புத்தி கம்பர் சாதி என்னன்னுதான் போகும்.

ஆயிரம் வருசம் இல்ல, அம்பது வருசம், நூறு வருசம் அடிமையா இருந்தவனுக்கு என்ன ஆச்சுன்னு பாரு. தொட்டியர், ராசகம்பளம் -ன்னு ராஜாவா ஆண்ட பரம்பரை எல்லாம் வெள்ளக்கார கிறித்தவன் வந்து இருந்த 200 வருசத்துல, BC, MBC list-க்கு போச்சு. இதுக்கும் ஆரியனையே கூவுங்க.

கட்டபொம்மனத் தூக்குல போட்ட கிறித்தவக் கூட்டம் சாமர்த்தியமா ஆரியன், ஆறாதவன்னு கிளப்பி விட்டான். அவனுக்கே தூக்கு தூக்குங்க. வெள்ளக்கார கிறித்தவன் உங்க மூதாதைக்கு லவ்-வ நல்லாக் குடுத்தான்.

Anonymous said...

//
இரண்டு மணி நேர படம் முழுவதும்:
காவி,
கோவிலுக்குள் சண்டை,
வில்லனை ஆரத்தி தட்டை வைத்து அடிப்பது,
ஹிந்து கோவில் முன் மட்டும் பிச்சை எடுப்பது,
ஹிந்து கடுவுள் போல் மட்டும் வேசமிட்டு அவர்களையே விமர்சிப்பது,


இப்படி செய்து விட்டு இரண்டு வசனத்தில் மற்ற மதங்களை ஒப்புக்கு செர்கபடதாக என் கருத்து...
//

அதெல்லாம் எடுத்திருக்கிறார்கள். சென்சாரில் வெட்டிவிட்டார்கள் என்பது பட்சி சொல்லும் கதை.


அப்படி சர்ச் முன்போ, தர்கா.பள்ளிவாசல் முன்போ பிச்சை எடுக்கும் கூட்டத்தைக் காட்டினால் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வந்து விடும் என்று கருதுகிறார்கள் சிலர்.

raja said...

naan kadavul is good - scene by scene... but as a full 2 hours 20 minutes film - lack of continuity is there,,there is no development in story after very first ten minutes,,bala could have shaped a better screenplay.

Unknown said...

As per your view, the last good movie of Tamizh cinema is Virumandy. This proves that Dasavatharam is a crap.

Anonymous said...

குமுதத்தின் மடியில் இருந்துகொண்டு குட்டிக்கொண்டிருக்கும் ஞானியின் இந்த வாரக் குட்டு நான் கடவுள் படம் எடுத்த பாலாவிற்கு.

அவரது குட்டில் அவர் சொல்லியிருப்பதன் சாரம் இது:

”நான் கடவுள் படத்தில் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்துப் பிழைக்கும் தாண்டவனும், அந்தப் படத்தை எடுத்த பாலாவும் ஒன்றுதானாம். ஏனெனில், இருவரும் பிச்சைக்காரர்களைக் காட்டிப் பணம் சம்பாதிக்கிறார்கள்.”

அட. வேறு எங்கோ படித்தது போலிருக்கிறதே என்று யோசித்துக்கொண்டே இட்லிவடையின் இந்தப் பதிவின் கமெண்டுகளைப் பார்த்தால்,

ஆ.... அதிர்ச்சி. அந்த கமெண்ட் இங்கே இருக்கிறது:

//In summary I felt that the makers of the SDM were no different than
the villain Mamman( I think I got the name right) in the movie, both
were banking to cash on the sympathy of people by projecting other's
sufferings.//

SDM = Slum Dog Millionaire

ஞானி ரொம்ப நேர்மையானவர். அதனால் இட்லிவடை பதிவுகளைப் படிப்பவராக இருந்தாலும் இந்தக் கமெண்டை அவர் காப்பி அடித்திருக்கும் வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

பிறகு எப்படி? யோசித்ததில் எனக்குத் தோன்றிய சில வாய்ப்புகள்:

ஞானி குமுதத்தில் இதை எழுதுவதற்கு முன்பாகவே, இதை யோசிக்கும் முன்பாகவே அவருடைய கருத்தை சீனி என்ற பெயரில் கமெண்ட் போட்டவர் காப்பி அடித்திருக்கலாம்.

அல்லது

சீனிதான் ஞானி

அல்லது

ஞானிகள் எல்லாரும் ஒரே போல யோசிப்பதால், ஞானிபோல சீனி யோசித்திருக்கலாம்

அல்லது

(ஞானி கோபித்துக்கொள்ளாவிட்டால்) சீனி போல ஞானி யோசித்திருக்கலாம்

சுவைக்காகக் காப்பியில் சீனி போடலாம். சீனி போட்டதைக் காப்பி போடலாமா?

”பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு”