பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 25, 2008

உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள்தான் இட்லிவடையா? - பா.ராகவன்

பா.ராகவன்...

கடந்த சில ஆண்டுகளில் இணையத் தொடர்புள்ள பலபேர் பல சமயம் என்னிடம் இக்கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இல்லை, நான் அவனில்லை என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையும் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் என்னைப் போலவே வேறு சிலரிடமும் வேறு பலர் இதே கேள்வியைக் கேட்க, அவர்களும் இதே பதிலை வெவ்வேறு சுருதிகளில் வெளிப்படுத்தியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். பிறகு இணைய நண்பர்கள் இக்கேள்வியைக் கேட்கப்போகிறார்கள் என்று எப்போதெல்லாம் உள்ளுணர்வு எச்சரிக்கிறதோ, முந்திக்கொண்டு நான் அவர்களைக் கேட்டுவிட ஆரம்பித்தேன். உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள்தானே இட்லிவடை?

ஐந்து வருடங்களில் யாரெல்லாம் இட்லிவடையாக இருக்கலாம் என்று சந்தேகப் பட்டியலுக்கு உள்ளே வந்தவர்கள் - எனக்குத் தெரிந்து இவர்கள்: கிருபா ஷங்கர், சுவடு ஷங்கர், ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன், தேசிகன், பாஸ்டன் பாலாஜி, ஹரன் பிரசன்னா, பத்ரி, ரஜினி ராம்கி மற்றும் அடியேன். சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.

இந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். ஒவ்வொருவரிடமும் நானும், என்னிடம் இந்த ஒவ்வொருவரும் பல சமயம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக இட்லிவடையை நடத்துவதாகவும் பேசப்பட்டது.

ஆரம்பத்தில் ஐயோ இப்படி அபாண்டமாகப் பேசுகிறார்களே என்று அடித்துக்கொள்ளும். போகப்போக அது பழகிவிட்டது. காரணம், கொஞ்சம் யோசித்ததுதான்.

1. எனக்கு வேலை இருக்கிறது. வேண்டாத அரசியல் பிட் நியூஸ்களை காப்பி பேஸ்ட் செய்துகொண்டிருக்குமளவுக்கு நாம் பொழுதுபோகாதவனில்லை.

2. ஐந்து வருட காலம் அடையாளம் மறைத்துத் திரியுமளவுக்குத் திறமைசாலி இல்லை.

3. இத்தனை தவறுகளுடன் கூடிய தமிழை என்னால் கனவில்கூட எழுதமுடியாது.

ஆனால் இட்லிவடை என்கிற பிரகஸ்பதி லேசுப்பட்ட ஆளில்லை என்பதையும் உணர்ந்தேன். மிகக் கவனமாக ஒரு பதிவை என்னுடைய மொழி அல்லது தேர்வு அல்லது விருப்பம் அல்லது ரசனையை அடியொற்றி எழுதுவார். அடுத்த பதிவைத் தடாலென்று பாபாவின் ஸ்டைலுக்குக் கொண்டுபோய்விடுவார். சம்பந்தமே இல்லாமல் ரஜினி ராம்கி மாதிரி சமூக சேவைகள் சிலவற்றில் திடீரென்று குதிப்பார். தடாலென்று என்னத்தையாவது கடிதம் மாதிரி எழுதிவிட்டு, என்றென்றும் அன்புடன் இட்லிவடை என்று பாலாவின் வயிற்றில் அமிலம் வார்ப்பார். யார் யாரையெல்லாம் சந்தேக லிஸ்டில் மக்கள் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரின் சாயலும் ஒவ்வொரு பதிவில் இடம்பெறும்படி மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்வார். மெசஞ்சரில் கூப்பிட்டுப் பேசினால் ‘சும்மா போட்டுத்தாக்குங்க’ என்று ஒரு வரி போடுவார். ஆஹா, இது பாபா அல்லவா என்று உச்சந்தலையில் பல்ப் எரியும்போதே :> என்று என் ஃபேவரிட் யாஹு பொம்மையைப் போட்டு வெறுப்பேற்றுவார்.

அதிகாலை துயிலெழுந்து முதல் தவணையாகப் எட்டு பற்களை விளக்கிவிட்டு அன்றைய தினத்தின் ஆன்லைன் நடவடிக்கைகளை யோசித்துத் திட்டமிடத் தொடங்கிவிடுபவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். எம்பெருமான் அவருக்கு ஏராளமான ஓய்வுநேரத்தை வழங்கியிருக்கவேண்டும் என்றும்.

பிறகு சிலகாலம் கழித்து எரிச்சல் மெல்ல மெல்ல விலகி ஒரு கட்டத்தில் இட்லிவடையை நான் ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு போஸ்டின் கீழும் அவரளிக்கும் ஒருசில வரி கமெண்டுகள் எனக்குப் புன்னகை வரவழைத்திருக்கின்றன. அவரது வலைப்பதிவின் வலப்பக்க பாக்ஸ் மேட்டர்களில் அவ்வப்போது மிக சுவாரசியமான விஷயங்கள் சேரும். [சமீபத்தில் ‘அம்மா தாயே..’] அவரது சகிக்கமுடியாத தமிழ்க்கொலை குறித்து ஒரு சில சமயங்களில் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ‘எல்லாம் அவசரத்துல போடறது சார். திருத்திக்கணும்’ என்பார். இன்னொரு சமயம், ‘நானே கேக்கணும்னு இருந்தேன். ஏன் அப்படியெல்லாம் எழுதறிங்க?’ என்று நம்மையே மண்டை காயச் செய்வார்.

அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை என்றுதான் மிகச் சமீபகாலம் வரை எண்ணியிருந்தேன். ஆனால் வலைப்பதிவின் மூலம் பணம் திரட்டி, தகுதி வாய்ந்த, வறுமையில் வாடும், கஷ்டத்தில் அவதிப்படும் நபர்களுக்கு அவர் உதவத் தொடங்கியதைப் பார்த்தபிறகு இது ஒரு நல்ல அனானி என்பது திட்டவட்டமாகப் புரிந்துபோனது.

இட்லிவடை யார் என்கிற கேள்விக்கு இனியும் இணையத்தில் அர்த்தமிருப்பதாக நான் கருதவில்லை. அவர் யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்னையில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். தமிழ் இணையம் முழுவதையும் கவலையில் ஆழ்த்திய போலிப் பிரச்னை அதன் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்த தருணத்தில் என்னுடைய ஜிமெயில் முகவரியும் களவு போனது நினைவிருக்கலாம்.

முகமறியாத இந்த நண்பர்தான் எனக்கு அதனை மீட்டுக்கொடுத்தது. பிறகு விசாரித்ததில், என்னைப் போல் வேறு சிலருக்கும் இட்லிவடை இந்த விஷயத்தில் உதவியிருப்பது தெரிந்தது. நன்றி சொல்லி மின்னஞ்சல் எழுதினால்கூட பதில் போடமாட்டாத அதிஜாக்கிரதைவாதி. மெசஞ்சரில் மட்டுமே பேசமுடியும். அதனாலென்ன, பெயர் இட்லிவடை, முகவரி ஜிடாக். தீர்ந்தது விஷயம்.

இந்த ஐந்தாவது பிறந்தநாள் சமயம் இட்லிவடையிடம் நான் கேட்டுக்கொள்ளும் விஷயங்கள்:

1. கொஞ்சம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். எட்டாங்கிளாஸ் இலக்கணப்புத்தகத்தை வாங்கிவைத்துக்கொண்டு படியுங்கள்.

2. கட் அண்ட் பேஸ்ட் அதிகமில்லாமல் அவ்வப்போதாவது சொந்தமாக எழுதுங்கள். உங்களுக்கு அருமையாக நகைச்சுவை எழுதவருகிறது.

3. எப்பப்பார் கருணாநிதியைத் திட்டிக்கொண்டே இருக்காதீர்கள். [வேண்டுமானால் ஆற்காடு வீராசாமியைத் திட்டுங்கள்.] போரடிக்கிறது. கொஞ்சம் மாற்றி கம்யூனிஸ்டுகளைத் திட்டுங்கள். ஹிந்துத்வர்களைத் திட்டுங்கள். தீவிரவாதிகளைத் திட்டுங்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த், ஜே.கே. ரித்திஷ் என்று திட்டுவதற்கு நபர்களா இல்லை நாட்டில்? வெரைட்டி காட்டுங்கள்.

4. வலது பக்க பாக்ஸ் மேட்டர்களை வாரம் ஒருமுறையாவது மாற்றுங்கள். கஷ்டம் என்றால் பாக்ஸ் மேட்டர் போடாதீர்கள்.

5. என்னோடு ஒருநாள் மாமி மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட வாருங்கள். வேண்டுமானால் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாருங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்.

சில மாதம் முன்பு ஹெல்மெட் போட்டுக்கொண்டு உங்களுடன் கைகுலுக்கி 'ஹலோ' சொல்லியிருக்கிறேன் ஞாபகம் இருக்கா ?

உங்க வீட்டுக்கு பக்கத்தில் பெரிய குழி தோண்டியிருக்கிறார்கள். அதை மூடியபின் சொல்லுங்கள், வீட்டுக்கே வந்து சாப்பாடு சாப்பிடுகிறேன்.

13 Comments:

Krish said...

இட்லி வடை குழுமத்தின் ஒவ்வொருவரும் " நான் அவனில்லை" என்று பதிவைப் போட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது! கடைசியில் இவர்கள் அனைவரும் தான் "இட்லிகள் வடைகள்" என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை!
அதுசரி, இட்லி வடையின் பெயர்க்காரணத்தை கூறுங்களேன்!

இலவசக்கொத்தனார் said...

//1. எனக்கு வேலை இருக்கிறது. வேண்டாத அரசியல் பிட் நியூஸ்களை காப்பி பேஸ்ட் செய்துகொண்டிருக்குமளவுக்கு நாம் பொழுதுபோகாதவனில்லை.

2. ஐந்து வருட காலம் அடையாளம் மறைத்துத் திரியுமளவுக்குத் திறமைசாலி இல்லை.

3. இத்தனை தவறுகளுடன் கூடிய தமிழை என்னால் கனவில்கூட எழுதமுடியாது.//

பாரா எம்மாம் பெரிய ரைட்டருன்னு இப்போதான் தெரியுது.

சாதாரணத் தமிழில் இவரு எழுதி இருக்கிறதை எழுதணுமுன்னா

1) இட்லிவடை ஒரு வேலை வெட்டி இல்லாத ஆளு.
2) சொந்த பெயரில் எழுத தில் இல்லாத ஆளு
3) தப்பும் தவறுமா இந்த மாதிரி எல்லாம் தமிழில் எழுதியே ஆகணுமா?

இதையே இட்லிவடை பெரிய ஆள்தான் என்ற ரேஞ்சுக்கு எழுதறாருன்னா சும்மாவா?

அட்டட்றா நாக்கமுக்க நாக்கமுக்க!! :))

இலவசக்கொத்தனார் said...

யப்பா க்ரிஷ்

அதான் வலது பக்கத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈஈழ பெயர்க்காரணம் இருக்கே!! :)

மடல்காரன்_MadalKaran said...

க்ரிஷ் சொல்வது போல் இட்லி வடை ஸ்பெஷலில் எழுதும் சில/பல/எல்லாருமே சேர்ந்தே கூட இந்த கேண்டீனை நடத்தலாம்.. உண்மையிலேயே இ வ குரூப் போட்டோ போடபோறது இல்ல.. ஏனென்றால் மொத்தத்தில் எல்லாருமே போட்டோ போட்டு சஸ்பென்சை உடைகாதீங்கன்னு சொல்லிகிட்டு வர்றாங்க..
இந்த போட்டோ ஸ்டண்டு 6 வருட தொடக்க விழா ஸ்பெஷல்..
இ வ நீங்க / நீங்கள் எல்லாரும் நடத்துங்க...

Sridhar V said...

//இட்லி வடை குழுமத்தின் ஒவ்வொருவரும் " நான் அவனில்லை" என்று பதிவைப் போட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது!//

அப்படித்தான் தெரிகிறது :) இல்லை இருப்பவர் இல்லாதவர் எல்லாரும் கலந்து ஒன்றக எழுதுகிறார்களோ என்னவோ.

என்னமோ முகமூடி போட்டுட்டு ஓவ்ர் டான்ஸ் காட்டறாங்கப்பா. நடக்கட்டும் நடக்கட்டும் :-)

Anonymous said...

எனக்கு உடன்பாடு இல்லை,
ஏன் நீங்க உங்கள அறிமுகப்படுத்தணும்!
அப்டி ஏதும் அவசியம் வந்ததா தெரியலையே!!
முகமூடிய கழட்டாதீங்க!!!
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.

ம்ம்ம்ம்ம்ம் இப்டி சொன்னாலாவது செய்வீங்களான்னு பார்ர்ப்ப்ப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

Anonymous said...

எனக்கு உடன்பாடு இல்லை,
ஏன் நீங்க உங்கள அறிமுகப்படுத்தணும்!
அப்டி ஏதும் அவசியம் வந்ததா தெரியலையே!!
முகமூடிய கழட்டாதீங்க!!!
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.

ம்ம்ம்ம்ம்ம் இப்டி சொன்னாலாவது செய்வீங்களான்னு பார்ர்ப்ப்ப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

enRenRum-anbudan.BALA said...

இவ,
வலைப்பதிவு பிரபலங்கள் "என்னை இட்லிவடை என்று நினைக்கிறார்கள்" என்பதை உள்ளுக்குள் சற்று பெருமையாக உணரும் / அதை வெளிப்படுத்தவும் செய்யும் உளவியலிலும், உமது அயராத உழைப்பிலும், தொழில்நுட்பத் திறமையிலும் தான் உமது வெற்றியின் ரகசியம் புதைந்திருக்கிறது :)

enRenRum-anbudan.BALA said...

இவ,
வலைப்பதிவு பிரபலங்கள் "என்னை இட்லிவடை என்று நினைக்கிறார்கள்" என்பதை உள்ளுக்குள் சற்று பெருமையாக உணரும் / அதை வெளிப்படுத்தவும் செய்யும் உளவியலிலும், உமது அயராத உழைப்பிலும், தொழில்நுட்பத் திறமையிலும் தான் உமது வெற்றியின் ரகசியம் புதைந்திருக்கிறது :)

enRenRum-anbudan.BALA said...

பா.ரா,
இப்ப கூட (இ.வ தொடங்கி) 5 வருடங்கள் ஆகி விட்டது என்று அவர் போட்ட பதிவில், குசும்பாக "என்றென்றும் அன்புடன் இட்லிவடை" என்று கையெழுத்திட்டிருந்தார் !!!

"ஏன்யா இப்டி?" என்றால், "எ.அ.பாலா எப்படி இந்த மாதிரி தப்பு செய்தீர்கள் ?" என்று மேலும் டென்ஷன் கொடுக்கிறார் :)

எ.அ.பாலா

ILA (a) இளா said...

பாராவின் நுண்ணரசியல் கண்டு வியந்தேன். கொத்ஸ்ன் விளக்கம் இன்னும் சூப்பரு

Boston Bala said...

தூள் :)

(கொத்ஸ் பொறிப்புரை மெய்யுணர்த்தும் திரிசமன் :P

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அப்பாடா! இந்த முகமூடி லிஸ்டில் நான் இல்லாதது சந்தோஷமாக இருக்கிறது!