இலவசமாக புகழ்ந்து எழுதிய பதிவு :-)
எல, நீ மூணாப்புதானல படிக்க? அந்தா போவுதான் பாரு. அவன் அஞ்சாப்பு முடிச்சுட்டான் தெரியுமா? அவனைப் பத்தி நீ என்னல நெனக்க? அப்படின்னு கேட்டா அந்தச் சின்னப் பையன் என்ன சொல்லுவான்? அவரு நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு சொல்லுவான். அதுவே அந்த அஞ்சாப்புப் பையன் கொஞ்சம் பெரிய கையா இருந்தா இவன் இன்னும் பம்முவான். இட்லிவடையைப் பத்தி நானும் சொல்லணுமுன்னா இப்படித்தான் பம்மணும். இந்த மாதிரி சம்பிரதாயமான பேசறதுக்கு முன்னாடி பழைய பதிவுங்களைப் புரட்டிப் பார்க்கலாமேன்னு போனா என்னென்ன மேட்டர் மாட்டுச்சு தெரியுமா?
இந்த மாதிரி எல்லாம் படிச்சுப்புட்டு, ஆஹா நீயுந்தானே ஆரம்பிச்ச புதுசுல ஏன் இந்தப் பெயர் அப்படின்னு பதிவைப் போட்ட, அப்புறம் ரீபஸ் அப்படின்னு சொல்லிக்கிட்டு விளையாட்டு செஞ்ச, பின்னூட்ட வெறி ஜாஸ்தி ஆகி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுன, புதசெவி அப்படின்னு சொல்லிக்கிட்டு கட் பேஸ்ட் செஞ்சுக்கிட்டு இருக்க, ஏப்ரல் பூல் எல்லாம் கூட செஞ்ச. அதுக்கெல்லாம் மேல நீயுந்தானே 2006லேர்ந்து பதிவு போட ஆரம்பிச்சயேய்யா. அப்போ அவந்தானா நீயின்னு சின்னப்புள்ளத்தனமாக் கேள்வி கேட்டா நான் நான் அளுதுருவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஒண்ணு சொல்லறேன் . அவரு அன்னிக்கே நான் யார்ன்னு தெரிய ரொம்ப நாள் ஆவாதுன்னு பதிவு போட்டாரு. ஆனா இன்னைக்கு வரைக்கும் பார்ட்டி யாருன்னு தெரியாதுன்னு சொல்லி பதிவு போட்டாக்கூட ஹிட் ஆவது. ஆனா என்னியத் தெரிஞ்சவங்க ரொம்ப பேரு இருக்காங்கப்பூ!
இன்னும் ஒரு மேட்டர். இட்லி வடை கவுஜ எல்லாம் எழுதிப் படிச்சு இருக்கேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவரு வெண்பா எல்லாம் எழுதினது இல்லை. அவருக்காக நம்ம வெண்பா ஒண்ணு. இனிமேலாவது நம்புங்கப்பா நான் அவனில்லை!
இன்றோடு அஞ்சாச்சு இட்லிவடை ஆரம்பிச்சு
கொண்டாட வந்தாச்சு கூத்தோட பாட்டாச்சு
வெண்பாதான் போட்டாச்சு வித்தியாசம் தந்தாச்சு
இன்னமுமேன் சந்தேகப் பேச்சு?
டிஸ்கி: என்னதான் ஆரம்பித்த புதிதில் இருந்து கட்பேஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தினவருதான்னாலும் இட்லிவடைப் பதிவுகள் வெறும் கட் பேஸ்டா இல்லாம நகைச்சுவை இழையோடும் கருத்துக்களோட வரும். அது மட்டும் இல்லாமல் கட் பேஸ்ட் இல்லாத பதிவுகளும் நிறையா வரும்.
ஆனா இப்போ எல்லாம் அந்த மாதிரி பதிவுகள் வரது ரொம்பக் குறைஞ்சு போச்சு. செய்திகள் கூட சுடச் சுட இருக்கிறது இல்லை. ரொம்ப போர் அடிக்குது. ஒரு வேளை இவ்வளவு பதிவுகள் போடுவதால் கூட தரம் குறையுதோன்னு சந்தேகமா இருக்கு. அதனால எண்ணிக்கை குறைந்தால் கூடப் பரவாயில்லை. நாங்கள் இட்லிவடையை தினத்தந்தி ரேஞ்சில் செய்திகளை முந்தித் தரும் ஆளாப் பார்க்கலை. மீண்டும் அக்மார்க் இட்லிவடைப் பதிவுகளைப் பார்க்க ஆசைப்படுகிறோம் அப்படின்னு சொல்லிக்கிறேன்.
ஐந்து வருடங்கள் தொடர்ந்து எழுதுவது என்பது ஒரு பெரிய விஷயம்தான். அதிலும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு இருப்பது இன்னும் பெரிய விஷயம். எங்க துளசி ரீச்சர் கூட இம்புட்டுப் பதிவு போட்டது இல்லை. இதைச் செய்ததிற்கு இட்லிவடைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்!! நன்றி!
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, October 31, 2008
ஆஹா! அவந்தானா நீயி! - இலவசம்
Posted by IdlyVadai at 10/31/2008 05:00:00 PM 6 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-10-08
நீண்ட நாட்களுக்கு பிறகு முனிக்கு எழுதும் கடிதம்
மைடியர் முனி,
தீபாவளி எல்லாம் ஆச்சா ? உங்களுக்கு அடித்த தந்தி வந்ததா ? இல்லை நீங்களும் தந்தி அடிக்க போயிட்டீங்களா ?
இங்கே தமிழ் நாட்டில் தந்தி இலாகா மேலே கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சி எல்லாருக்கும் சமீபத்தில் ரொம்பவே பாசம் வந்துவிட்டது எல்லாவற்றிற்கும் தந்தி அடிக்கச் சொல்றாங்க. தந்தி பாரம் (Form) தட்டுப்பாடு வந்து விடுமோ என பயமாக இருக்கு
தட்டுப்பாடு என்றவுடன் இந்தப் பொருளாதார சிக்கல் ஞாபகம் வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து தினசரி பேப்பரில் ப்யம் காட்டுகிறமாதிரி செய்திகள் வருதே. நீங்க பேப்பர் படிப்பீங்கதானே. ஒருவேளை நீங்க பாரதி ராஜா மாதிரியோ
நம்ம நிருபர்கள் சும்மா இல்லாமல் பாரதிராஜாவிடம் "உங்களை கைது செய்ய வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே?" என்று கேட்டதற்கு ரொம்ப டென்ஷனாகி ""நான் பேப்பர் படிப்பது கிடையாது. எனவே, உங்களுக்கு தெரிந்தது, எனக்கு தெரியவில்லை" என்று பதில் சொல்லியிருக்கார்.
பேப்பர் படிப்பதில்லை ஆனால் பத்திரிக்கை படிக்கிறார் பாரதிராஜா - குமுததில் கேள்வி பதில், ஜூவியில் பேட்டி இப்படி கலக்குகிறார். சமீபத்தில் தமிழ் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்காக பேரணி எல்லாம் நடத்தி சூப்பராக பேசினார்கள். பாரதிராஜா ஈழத் தமிழர்கள் தான் தமிழ் திரையுலகையே வாழ வைப்பதாக பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார். படம் ரிலீசான அடுத்த நாளே இணையத்தில் பரப்புவதை சொன்னாரோ என்னவோ.
பேப்பர் படிக்காத பாரதி ராஜா பேப்பரில் ஏன் காய்ச்சி காய்ச்சி எழுதறீங்கனு கேட்டு தினமலர் ஆபிசுக்குக்கு நேரிலே போய் மனு கொடுத்தார் பேசாம தந்தி அடிச்சிருக்கலாம் பாருங்க முனி இந்த "காய்ச்சி" அப்படினு சொல்றப்பவே சாராயம் நியாபகத்துக்கு வருது
முனிக்கு சாராயம் தான் படைப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். படையல் எல்லாம் தீபாவளிக்கு எப்படி இருந்தது ? விஷயம் தெரியுமா ? கடந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழகம் முழுவ தும் ரூ.60 கோடிக்கு பிராந்தி, விஸ்கி பாட் டில்கள் காலியாகின. சென்னையில் மட்டும் ரூ.4 கோடி சரக்குகள் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டு இரண்டு நாள் விடுமுறை என்பதால் மொத்தம் 200 கோடிக்கு 'டாஸ்மாக்'க்கில் விற்பனை நடந்திருக்கிறது ஆக 'நல்ல நாள்' என்றால் 'பட்டை' அடித்துவிட்டு கொண்டாடுகிறார்கள் தமிழர்கள். ராமதாஸ் என்னடா என்றால் மது ஒழிப்பு என்று கூவிக்கிட்டு இருக்கார்.
காமராஜ் ஆட்சி உண்டாவதற்கு தமிழக காங்கிரஸ் நல்லதொரு ஷார்ட்கட் கண்டுபிடிச்சிருக்கு
"திமுக ஆட்சியே காமராஜ் ஆட்சி தான்" - இதான் அந்த சூட்சுமம் கண்டுபிடிப்பு: கே.வி.தங்கபாலு ஆனால் அதற்கு பதிலாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். "திமுக ஆட்சி காமராஜ் ஆட்சி என்றால் கலைஞரே கூட ஒப்புக் கொள்ள மாட்டார்" என்கிறார்.
ஒருவேளை தான் நடத்துவது அண்ணாவின் ஆட்சிதான் வேறெதுவும் இல்லை என்று கலைஞர் சொல்லிட்டால் இருக்கவே இருக்கிறது கலைஞரை நேரில் சந்தித்து மன்னிப்பு வருத்தம் எல்லாம் சொல்லும் டெக்னிக். இளங்கோவனுக்குத் தெரியாதா
அப்புறம் கலைஞர் தான் காம்ராஜ் என சொல்லிடுவார் தங்கபாலு. அதுக்கு கலைஞர் மறுப்பு சொல்ல முடியாதே
அது கிடக்கட்டும் தீபாவளி அன்று டிவி நிகழ்ச்சி எல்லாம் பார்த்தாயா ?
நடிகர் விவேக் அப்துல் கலாமை பேட்டி கண்டார் அதை பார்த்தா யா ? சுவாரசியமான கேள்விகளுக்கு தகுந்த பதில் சொன்னார் கலாம். உதாரணத்துக்கு அவர் திருஷ்டி கழிய பூசணிக்காயை உடைப்பது பற்றி அவர் சொன்ன பதில். நடுநடுவே விவேக்கின் காமெடியை போட்டு எரிச்சலை கிளப்பியது. இந்த நிகழ்ச்சிக்கு திருஷ்டி பூசணிக்காய் உடைக்கவில்லை போலும்.
இத்தனை பெரிய பெர்சானாலிட்டியான கலாமிடம் ரொம்பவே அமெச்சூரா மெச்சூரிட்டி இல்லாத மாதிரியே விவேக் பேட்டி கண்டதை நீங்க மன்னிச்சுடுவீங்கதானே
உயிர்மையில் உயிர்மை புத்தகத்தின் விமர்சனம் வரும், வார்த்தையில் எனி இந்தியன் புத்தகத்தின் விமர்சனம் வரும், அதே போல கிழக்கு பதிபகத்தின் விமர்சனம் பிரசன்னாவின் வலைப்பதிவில் வருகிறது. அதுல பத்ரி மொழிபெயர்த்த புத்தகத்தின் விமர்சனத்தில் இப்படி எழுதியிருக்கிறார்
"ஒரு பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்றால் என் நினைவிலி கட்டமைப்பில் என் மனம் பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்று ஆழமாகப் பதிந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட நாவலில் திடீரென 'ங்கோத்தா' என்றும் 'மசுராண்டி' என்றும் வரும்போது, அந்த நினைவிலி கட்டமைப்பில் இருந்து நான் பிடுங்கப்பட்டு சென்னையில், அதுவும் 250 வருடங்கள் தூக்கி எறியப்பட்டு நிகழ்காலத்தில் நடப்படுகிறேன்"
ஆனாலும் பத்ரி பிலியண்டா மொழி'பெயர்த்துள்ளார்' என்று சொல்லிகிறார்.
ஒரு பாதயாத்திரை எழுத்தாளரும் மொட்டைமாடி எழுத்தாளரும் பேசுவைத்துக்கொண்டு எழுதுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியா ? இருவரும் கூகிள் சாட்டில் ஒரே நேரம் லாகின் ஆகிறார்கள். அப்படியே ஒரே நேரம் லாகௌட் ஆகிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் சும்மா திட்டிக் கொள்வதாகவும் அவர்கள் நல்ல சிநேகிதத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. நம்மளை வைத்து இவர்கள் காமெடி கீமடி பண்ணலியே ?
காமெடி என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது - இன்று எஸ்.வி.சேகர் முதல்-அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து இலங்கை தமிழர்களுக்காக ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி கொடுத்திருக்கிறார். என்ன தில்லு இவருக்கு ? நேற்று அம்மா குருபூஜைக்கு போனார். இவருக்கு என்னிக்கு பூஜையோ ? ஒரு சினிமா விழாவுல ”எல்லாரும் அம்மா அம்மாங்கறாங்க நீ என்ன அய்யாங்கறேனு” பேசினார். இப்ப அவரும் அம்மாவை அய்யோனு விட்டுட்டு அய்யாகிட்டே வந்துட்டாரானு தெரியல
இந்த சிரஞ்சீவி படா உஷார் பார்ட்டி முனி. பிரஜா ராஜ்ஜியத்துக்குள் நுழையும் எந்த அரசியல்வாதியையும் நம்ப முடியாதுனு அதனால நீங்க எல்லாம் உளவு பார்த்து சொல்லுங்க என்று தன்னுடைய Tech Fansசிடம் பேசிருக்காரு. அதுவுமில்லாமா மத்த கட்சிக்காரங்க என்ன செய்யறாங்கனு உளவு பார்க்கவும் சொல்லிருக்காரு. ஆனா நீங்க யாரும் எனக்கு நம்பிக்கை தூரகம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கார். இதுல என்ன கூத்துனா இவர் பேசியதையே ஒருவர் உளவு பார்த்து youtubeல் போட்டுவிட்டார்.
நார்மலா முனிதான் அடிக்கும் முனியை யாரும் அடிச்சிராம இருக்கனும் அதனால ஜாக்கிரதையா இரு சொல்லிபுட்டேன்.
(நேற்று டிராபிக் சிக்னலில் ரொம்ப நேரம் நின்னப்ப விசயகாந்த பேனரை பார்த்துக்கிட்டே இருந்தேன் அதான் இப்ப பஞ்ச் டயலாக் வருது)
என்றும் அன்புடன்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 10/31/2008 01:16:00 PM 6 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Thursday, October 30, 2008
இட்லிவடை செயற்குழு உறுப்பினர்கள் கூட்ட முடிவு
சின்ன வயசில் லீவுக்கு மும்பைக்கு போவதுண்டு. கிட்டத்தட்ட 2 நாள் பயணம்.(அப்பொழுதெல்லாம் ரயில் 5-6 மணி லேட் என்பது சர்வ சாதாரணம்). மும்பைக்கு சென்று பாத்ரூமில் உட்கார்ந்தால் கூட ரயிலில் போவது போன்ற ஒரு பிரமை ஏற்படும். கடந்த வாரம் இட்லிவடை பற்றி பலர்(?) எழுதியதை படித்தால் அதே போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது :-).
கலைஞருடன் ஒப்பிட்டு எழுதியதன் விளைவு - ஒரே பாராட்டு மழையில் நனைந்த எஃபெக்ட். நமிதா குத்தாட்டம் தான் பாக்கி.
நேற்று ராத்திரி சரக்கு மாஸ்டர் தலைமையில் நடந்த அனைத்து உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட உருப்படாத முடிவுகள் கீழே...
1. இட்லிவடைக்கு 'பந்த்' கிடையாது. தொடர்ந்து வேகும். யாரும் சந்தோஷப்பட வேண்டாம்.
2. கட் & பேஸ்ட் கம்மியாக இருக்கும் அல்லது இருக்காது ( சில முக்கிய பேட்டிகள், கட்டுரைகள் விதிவிலக்கு, செய்திகளை விமர்சிக்கும் பதிவுகள் அதிகம் வரும்). கட் & பேஸ்ட் வரும் பட்சத்தில், இப்போதே முன் தேதி குறிப்பிட்ட என் 'ராஜிநாமா' கடிதத்தை சரக்கு மாஸ்டரிடம் கொடுக்கிறேன்
3. தமிழ்நாட்டுக்கு வெளியிலும், இந்தியாவிற்கு வெளியிலும், உலகிற்கு வெளியிலும் நடக்கும் செய்திகளை கொடுக்க முயற்சி செய்கிறேன். வேலை வெட்டி இல்லாத சிலர் முன்வந்துள்ளார்கள், கூடிய சீக்கிரம் இது மாபெரும் 'மனித சங்கிலி'யாக மாறும் என்று நினைக்கிறேன்.
4. 'பாடி காட் முனி'க்கு வாரம் ஒரு கடிதமாவது போட இப்பொழுதே முனிக்கு 'தந்தி' அடிக்கிறேன். இட்லிவடை வாசகர்கள் எல்லோரும் போஸ்ட் ஆபீஸ் சென்று தந்தி அடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தந்தி அடிக்க காசு இல்லாதவர்கள் டாஸ்மார்க் சென்று அதையாவது அடிக்கவும்.
5. இனி நக்கல் பதிவுகள் 'பேரணி' போல் தொடர்ந்து வரும்.
6. எழுத்துபிலை இருந்தால் ஜெயலலிதா போல் தாராளமாக 'கண்டனம்' தெரிவிக்கலாம், கைது செய்யச் சொல்லலாம். தமிழர்கள் நலன் தான் எனக்கு முக்கியம்.
பிரணாப் முகர்ஜி சென்னை வந்து முதல்வரை சந்தித்துப் பேசிவிட்டு டில்லியில் டைப் அடித்து கொண்டு வந்த அறிக்கை மாதிரி இதையும் நினைக்க வேண்டாம் :-)
'இட்லிவடை 5 ஆண்டுகள்' தலைப்பில் இது கடைசி பதிவு. இனிமேல் என்னை திட்டி வரும் பதிவுகளுக்கு தான் இடமுண்டு.
இட்லிவடை வாசகர்களுக்கு நன்றி
( படம் உதவி: நண்பர் ராஜா, நன்றி )
Posted by IdlyVadai at 10/30/2008 09:25:00 AM 24 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Wednesday, October 29, 2008
நான் இட்லிவடை இல்லை - பினாத்தல்
எனக்கும் இதை எழுதியவருக்கும் என்ன வித்தியாசம் ? விடை கடைசியில்..
இட்லிவடையைப் புகழ்ந்து எழுதும் கூட்டத்து ஜோதியில் ஐக்கியமாவதில் காலதாமதமாகி விட்டது - அவ்வப்போது கொஞ்சம் வேலையும் பார்க்கச் சொல்கிறார்களே! ஆனால் இந்தக்கும்பலில் சேராமல் விட்டால், மீதம் இருப்பவர்கள் மட்டும்தான் இட்லிவடை என்று சொல்லிவிடுவார்கள் என்ற அச்சமும் மேலோங்க..
ஐந்து ஆண்டுகள் என்பது என்ன சாதனையா? (எனக்கும் நாலு ஆண்டு முடிந்துவிட்டது என்பதை இந்தப் பொன்னான தருணத்திலே..) ஐந்து ஆண்டுகள் இருப்பது என்பது சாதனை இல்லை. எப்படி இருக்கிறோம், எப்படி ஈர்க்கிறோம் என்பதுதான் ஒரு வலைப்பதிவின் சாதனையாகக் கொள்ள முடியும். அந்த வகையில், தொடர்ச்சியாக ஐந்து வருடமும் பதிவையும் போட்டுக்கொந்து, இட்லிவடை ரீடரில் வந்த கணம் ஓடிப்போய்ப் பார்க்கத் தூண்டுகிறதே, அது சாதனை.
செய்திகளை முந்தித் தருவது சாதனையா? ம்ஹூம்... இட்லிவடையைவிடவும் செய்திகளை முந்தித் தரும் செய்தி வலைத்தளங்கள் நிறையவே இருக்கின்றன. இட்லிவடையின் தனித்தன்மை செய்தியில் இல்லை, அந்த மஞ்சள் ஹைலைட்டுக்குள் அடங்கி இருக்கிறது. (இந்தப்பதிவுக்கு என்ன மஞ்சள் வரப்போகிறதோ என்று இப்போதே அடிவயிற்றுக்கலக்கம்!)
12 லட்சத்தைத் தாண்டிய ஹிட்டு சாதனையா? சப்பை மேட்டரு! நயனதாரா வயிற்றில் பம்பரம் விட்டார் லூஸ்மோகன் ரேஞ்சில் தலைப்பு வைத்து தினம் போடுங்கள்.. கொஞ்சம் கில்மா வேலையும் சேர்த்தால் ஒரு மாதத்தில் 12 லட்சம் காட்டலாம்! பின்னூட்டங்களை நம்பாத இட்லிவடையின் பதிவை ஏன் ப்ளாக்ஸ்பாட்டுக்குப் போய் பார்க்கவேண்டும், ரீடரே போதாதா என்று என்னைப்போலவே நினைக்கும் பலரால் இட்லிவடையின் ஹிட்டுக்களில் பாதி ரீடரில் காலாவதி ஆகின்றன என்பதுதான் உண்மை.
சரி.. நிறையப்பேர் புகழ்ந்துட்டாங்க.. என் பங்குக்கு நான் கொஞ்சம் திட்டிட்டும் போயிடறேன்.
பாரா சொன்னது போல, என்னதான் அவசரம் இருந்தாலும் இவ்வளவு தப்பும் தவறும் தமிழில் வரக்கூடாது. (எனக்கே நிறைய வரும் என்றாலும், இட்லிவடையோடு ஒப்பிட்டால் நான் தமிழறிஞன்!
வெட்டொட்டுப் பதிவுகளுக்கும் இட்லிவடை ஸ்பெஷல் பதிவுகளுக்கும் உள்ள விகிதம் எச்சரிக்கை அளவைத் தாண்டிவிட்டது. ஸ்பெஷல் பதிவுகள் அதிகம் வேண்டும். முனீஸ்வரர் லெட்டர் போட்டு மாதங்கள் ஆகின்றன.
பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்பது - சரியோ தப்போ - ஒரு கொள்கை; ஆனால் சில வேளைகளில் நியாயமான எதிர் பின்னூட்டம் வரும்போதும் பதில் சொல்லவில்லை என்றால் ஜகா வாங்கறான் பாருடா என்று தோன்றும் - அதைத் தவிர்க்க வேண்டும்.
இப்போதெல்லாம் அவ்வளவாக இல்லை, தேர்தல் சமயத்தின் போதெல்லாம் ஒரே மேட்டரை குமுதம் ரிப்போர்ட்டர், ஜூவி நக்கீரன் எல்லாவற்றிலும் இருந்து வெட்டி ஒட்டி - கோணம் வேறாக இல்லாத போதும் கூட - மேட்டருக்கலைவது போலத் தோற்றமளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சைட் பாரை கொஞ்சம் அப்டேட் பண்ணுங்க..உப்பு சத்தியாக்கிரகம் பத்தி ஜோக்ஸ் ஜோதிகாவும், வட்டமேஜை மாநாடு பத்தி மைக் முனுசாமியும் பேசினா நல்லாவா இருக்கு?
அம்புட்டுதேன்!
நான் Flash நியூஸை பதிவாக போடுவேன். இவர் Flashயே பதிவாக போடுவார் :-)
Posted by IdlyVadai at 10/29/2008 08:07:00 PM 3 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
இட்லிவடை - இப்போது இத்துப்போன கடை! - லக்கிலுக்
அப்பாடா கடைசியாக(?) என்னை புகழ்ந்து ஒரு நல்ல பதிவு.
2005 வரை வலைப்பதிவுகள் என்றொரு புண்ணிய ஷேத்திரம் இருந்ததே நமக்கு தெரியாது. சிஸ் இண்டியா, தட்ஸ் தமிழ் இணையங்களில் மட்டுமே தமிழர்கள் ஜீவித்திருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். தட்ஸ் தமிழ் கருத்துக் களத்தில் ரஜினி சார்பாக ஒரு தரப்பு கடுமையாக மோதிக்கொண்டிருக்க, பாமக சார்பாக இன்னொரு தரப்பு மும்முரமாக மோதிக்கொண்டிருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் அங்கிருந்த உறுப்பினர்கள் பலரும் பல கட்டுரைகளை எங்கிருந்தோ சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பேர் நாகரிகமாக சுட்ட சுட்டியை தருவார்கள். அதுபோல ஒருநாள் யதேச்சையாக கிடைத்த சுட்டி தான் இட்லிவடை.பிலாக்ஸ்பாட்.காம்.
எனக்குப் பிடித்த நாஷ்டா இட்லிவடையும், ஜமாவான வடகறியும். ஆட்டுக்கால் பாயாவோடு யாராவது இட்லிவடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உலகின் எந்த நாட்டு சிற்றூண்டியும் இந்த காம்பினேஷனிடம் பிச்சையெடுக்க வேண்டும். இட்லிவடை பெயரைக் கேட்டதுமே ஏதோ சமையல் குறிப்பு எழுதப்படும் இணையம் என்று உடனடியாக நினைத்தேன். அதில் ஏதோ அரசியல் கட்டுரை வந்ததும் ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். விகடன், குமுதம், தந்தி, தினமலர், துக்ளக், தினமணி என்று தமிழகத்தின் பத்திரிகைகள், நாளேடுகளில் இருந்து முக்கியச் செய்திகளை சுட்டுப் போட்டு வந்தது அப்போது தான் தெரிந்தது. அவ்வப்போது அதிரடி நகைச்சுவைக் கட்டுரைகளும், பதிவர்வட்ட பதிவுகளுமாக பட்டாசாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இட்லிவடை மீது அப்போது எனக்கு நடுநிலையான ஒரு பார்வை இருந்தது. ஆனாலும் இட்லிவடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல தன்னுடைய அதிமுக - பாஜக - இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவான சிந்தனைகளை பரப்பி வருகிறதோ என்ற சந்தேகமும் ஒரு புறத்தில் இருந்தது.
தொடர்ந்து இட்லிவடை துக்ளக் மற்றும் தினமணி கார்ட்டூன்களையே தன்னுடைய அடைப்பலகையில் இடம்பெறச் செய்துக் கொண்டிருந்த வேளையில் இட்லிவடைக்கு ஒரு மடல் அனுப்பினேன். முரசொலி கார்ட்டூனெல்லாம் வராதா என்று கேட்டேன். நான் கேட்டதற்காக ஒன்றோ இரண்டோ முரசொலியிலும், தினகரனிலிருந்தும் போட்டிருந்தார். வாசகர் குரலுக்கு அப்போதைக்கு இட்லிவடை நல்ல மதிப்பு கொடுப்பவர்(கள்) என்பதற்கு இது ஒரு சான்று. இட்லிவடையோடு எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது ஒரு பதிவர் சந்திப்பின் போது. இட்லிவடை ஒரு உளவாளியை அச்சந்திப்புக்கு அனுப்பி போட்டோக்களாக சுட்டுத்தள்ளி சென்சேஷனல் ஆக்கியது. அந்நேரத்தில் பல பதிவர்கள் போலி பிரச்சினை காரணமாக தங்கள் படங்கள் எங்கேயும் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னுடைய புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் இடம்பெறச் செய்ததும் இட்லிவடை தான். அதுவரை தொடர்ந்து இட்லிவடையை வாசித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்த நான் அதன்பிறகு இட்லிவடைக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தினேன். அப்பிரச்சினைக்கு பிறகு அனேகமாக ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே தவிர்க்க இயலாத நேரங்களில் இட்டிருப்பதாக நினைவு.
இட்லிவடையின் கருத்துக்கணிப்புகள் ஆஹா.. ஓஹோ..வென்று புகழுபவர்கள் நிறைய. என்னைப் பொறுத்தவரை இட்லிவடையின் வாசகர்கள் 95 சதவிகிதம் 'சாம்பார்' பார்ட்டிகள் தான். சாம்பார்கள் மெச்சிக்கொள்ளும் விதமான செய்திகளும், கணிப்புகளும் தான் இட்லிவடையில் வெளிவருகிறது. உதாரணத்துக்கு 2006ல் இட்லிவடை எடுத்திருந்த இந்தக் கருத்துக் கணிப்பை சொல்லலாம் - http://idlyvadai.blogspot.com/2006/01/blog-post_30.html. இக்கணிப்பு எந்தளவுக்கு நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். இட்லிவடையின் கருத்துக் கணிப்புகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளின் கணிப்பாக கொள்ளலாம்.
இட்லிவடையின் நகைச்சுவையுணர்வு அபாரமானது. ஒருமுறை பதிவர்களை சினிமாப்படங்களோடு ஒப்பிட்டு எழுதிய பதிவு, உலகம் அழிந்தால் பதிவர்கள் என்ன ஆவார்கள் என்று எழுதிய பதிவெல்லாம் நான் பலமுறை படித்து மகிழ்ந்தது. இட்லிவடையின் ஜிமெயில் ஹாக் செய்யப்பட்ட சம்பவம் ஒரு அட்டகாசமான க்ரைம் நாவலுக்கு உரித்தான மர்ம முடிச்சுகள் நிறைந்தது. யார் ஹாக் செய்தார்கள் என்று கண்டறிந்துவிட்டதாகவும், அதுகுறித்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இட்லிவடையார் சொல்லியிருந்தார். ஆனால் வழக்கம்போல லீஸில் விட்டுவிட்டார்.
இட்லிவடை ஒரு குழு என்றும் அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் கிளம்புவதுண்டு. எனக்கு இந்த கிசுகிசுக்களில் அதிக ஆர்வம். இட்லிவடைக்கு ஓரிரு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கலாம். பல பதிவர்கள் அனுப்பும் விஷயங்களை தன் பாணியில் இட்லிவடை வெளியிடலாம் என்பது தான் என் கணிப்பு. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ஹரன்பிரசன்னா இருக்கலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் வெளிப்படையாக தெரியும் கருணாநிதி வெறுப்புக்கு அவர் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் கலைஞரை பாராட்டிவரும் செய்திகளுக்கு கிருபாஷங்கர் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக பாஸ்டன் பாலாவுக்கு பங்கிருக்கும் என்று நம்புகிறேன். பெனாத்தல் இருப்பதாக சொல்லப்படுவது அநியாயம்.
இதெல்லாம் எனது கணிப்புதான். உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இட்லிவடை மெயிலை ஹாக் செய்தவராக நம்பப்படுபவர் தேசிகன் தான் இட்லிவடை என்று சொல்லுவதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. பத்ரி கூட இட்லிவடை குழுவில் இருப்பதாக சொல்லப்படுவது நல்ல நகைச்சுவை. வேண்டுமானால் பாரா இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் கூட இட்லிவடைக்கு அவ்வப்போது செய்திகளை பார்வேர்டு செய்திருக்கிறேன். இதனால் நானும் இட்லிவடை குழுவில் ஒருவனா என்று தெரியவில்லை. ஆனால் இக்குழுவில் இணைய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் ‘இட்லிவடையிலும் திராவிடக்குரல்' எழும்பும். என்றாவது இட்லிவடையில் கருணாநிதி வாழ்க என்று கோஷம் கேட்டால் லக்கியும் இட்லிவடைக் குழுவில் இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பிக்கலாம்.
இட்லிவடையின் முகமூடி (பதிவர் அல்ல) நிஜமாக கிழிந்தது என்றால் அது 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக என்று சொல்லலாம். கலைஞர் மீண்டும் அரியணை ஏறிய எரிச்சல் அதன்பிறகு தொடர்ந்து இட்லிவடை பதிவுகளில் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தன்னை வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவோடு இட்லிவடை வெளிப்படுத்திய காலமென்று 2008ஐ சொல்லலாம். திரட்டிகளில் இருந்து விலகுவது என்று இட்லிவடை எடுத்த முடிவு மிகச்சரியானது. ஆனால் அதற்கு பின்னால் என்ன என்ன காரணத்தை இட்லிவடைக்குழு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. முன்பெல்லாம் தினமும் எனக்கு இட்லிவடை பார்க்கும் வழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் இட்லிவடை என்ன சொல்லுவார் என்பதை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இருப்பதில்லை. இட்லிவடை ஒரு வெப் போர்ட்டலாக இன்னமும் மாறாதது ஆச்சரியம். ஆனால் இப்போதைய பாணியையே இட்லிவடை தொடர்ந்து கொண்டிருந்தால் வர வர மாமியார் கதை தான் ஆகும். உடனடியாக இட்லிவடைக்குழுவில் பழைய ஆட்களை தூக்கிவிட்டு வேறு ஆட்களை போடவேண்டும். ஈழப்போராட்டத்தைப் பற்றிய இட்லிவடையின் ஒருதலைபட்சப் பார்வை கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் விஷமமும் நிறைந்தது.
ஐந்தாண்டுகளை ஒரு வலைப்பூ துடிப்புடன் நிறைவு செய்வது என்பது இன்றைய தமிழ் வலையுலகைப் பொறுத்தவரை பெருத்த சாதனை. இவ்வகையில் திமுகவோடு இட்லிவடையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒரு பிராந்தியக்கட்சி உலகளவில் அரைநூற்றாண்டை கடந்தது ஒரு சாதனை என்பதால். இட்லிவடை கால்நூற்றாண்டு காலத்தையாவது நிறைவு செய்ய இந்த ஐந்தாண்டு நிறைவு காலத்தில் ஒரு எதிர்விமர்சகனாக வாழ்த்துகிறேன்.
இட்லிவடை குருப் கூட ஒரு குடும்பம் மாதிரி தான் அதனால் தாராளமாக திமுகவை ஒப்பிட்டு பார்க்கலாம் :-)
Posted by IdlyVadai at 10/29/2008 01:10:00 PM 18 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
வலையுலக கிருஷ்ண பரமாத்மா இட்லிவ்டை - எ.அ.பாலா
யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்று பாலா எழுதிய பதிவு மாதிரி இருக்கு :-). சினிமாவில் டபுள் ஆக்ட் கொடுப்பதில்லையா அதே மாதிரி தான் இதுவும்.
எனக்கு ரத்னா கேப் இட்லிவடையையும் பிடிக்கும், தமிழ் வலையுலக இட்லிவடையையும் பிடிக்கும்:) இன்று (27-10-2008), அதாவது 'தீபாவளி' அன்று, ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இட்லிவடையாருக்கு முதலில் "பாரா"ட்டுகளும், வாழ்த்துகளும்... இந்த 5 வருடங்களாக, கிருஷ்ண பரமாத்மா மகாபாரதத்தில் அடித்த லூட்டிக்கு இணையான ஒன்றை இவர் தமிழ் வலைப்பதிவுலகில் அடித்து வருகிறார் ;-)
முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வலைப்பதிவு பிரபலங்கள் கூட "என்னை இட்லிவடை என்று நினைக்கிறார்கள்" என்ற விஷயத்தை உள்ளுக்குள் சற்று பெருமையாக உணரும் / அதை வெளிப்படுத்தவும் செய்யும் உளவியலிலும், இ.வ-வின் அயராத உழைப்பிலும், தொழில்நுட்பத் திறமையிலும் தான் அவரது வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது :) அவரது வலைப்பதிவின் side bar சமாசாரங்களையும், அடிக்கடி மாறும் கொண்டையையும் (அதாங்க, அவரது கிராபிக் Blog Header!) பார்க்கும்போது, அவர் மென்பொருள் வல்லுனர் என்று சொல்ல முடியும். இ.வ வலைப்பதிவின் பிளாக் கவுண்டர், 12 லட்சத்து 38 ஆயிரச் சொச்ச எண்ணிக்கையை காட்டுகிறது. தமிழில் எழுதப்படும் ஒரு வலைப்பதிவுக்கு, இத்தகைய பரந்த வாசகர் வட்டத்தை இ.வ தக்க வைத்திருப்பது, மிக நிச்சயமாக ஒரு சாதனையே!
இட்லிவடையை நான் வாசிக்க ஆரம்பித்தது, நான் வலைப்பதிவு தொடங்கிய சமயத்திலிருந்து, அதாவது ஜூலை 2004-லிலிருந்து. "பத்ரிக்கு Temporary ரஜினி ரசிகனின் கடிதம்" என்று ஆகஸ்ட் 2004-இல் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் சர்ச்சையாகியவுடன், அருண் வைத்தியநாதன் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவை இ.வ பெருந்தன்மையாக நீக்கி விட்டார். அவர் மேல் சற்று மதிப்பும் வந்தது, தொடர்ந்து இந்த 5 ஆண்டுகளில் (தன் பதிவுகளுக்கு காட்டமான மறுமொழிகள் வந்தாலும்) அமைதியாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்து வருகிறார்.
இ.வ வுக்கு இயல்பாக நகைச்சுவை (பாடிகாட் முனீஸ்வரன் கடிதங்கள்!) கை கூடி வருவதும், அவருக்கு வெட்டி வேலை (cut & paste) பிடித்திருப்பதும், நல்ல கட்&பேஸ்ட் சமாசாரங்களை அவர் கவனத்திற்கு எடுத்து வர பல "செகரட்டரிகள்" அவருக்கு இருப்பதும், எதிலும் ரொம்ப தீவிரம் இல்லாமல் இயல்பாக இருப்பதும் இட்லிவடையின் நீண்ட வலையுலக இன்னிங்க்ஸுக்கு சில காரணங்கள் என்று நினைக்கிறேன்!
ஆரம்ப காலத்தில், நான் என் பதிவுகளில் (ஆச்சரியக்குறி) "!" அதிகம் பயன்படுத்தியதை வைத்து என்னை பயங்கரமாக ஓட்டியிருக்கிறார், அதன் விளைவாக நானும் "!"ஐ சற்று குறைவாகவே பயன்படுத்தி வருகிறேன் :) ஜெயேந்திரர் கைதின்போது நான் எழுதிய பதிவுக்கு தனது முதல் பின்னூட்டத்தை இட்டு, எனது இப்பதிவின் கருத்துகளுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தனது கருத்துகளை டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புகள் என்ற இடுகையில் கூறியிருப்பதாகவும் எழுதியிருந்தார். இ.வ வின் அந்தப் பதிவில் "கிருமி கண்ட சோழன்" "ரங்கராஜன் நம்பி"க்கு செய்த அநியாயத்திற்கு ஒருவர் பொங்கியெழுவதற்கு இணையான ஒரு கோபம் தெரிந்தது ! That was our first & only direct encounter :)
இட்லி வடையார் வலதுசாரி ஆதரவாளர் என்று சொல்வதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. தமிழ் வலையில் எழுதுபவர்களில் 80% பேர் வலதுசாரி சிந்தனை உடையவர்கள் தான், எல்லாரும் ஒத்துக் கொள்வதில்லை, அதான் மேட்டர்!!! எதிர்கருத்து உடையவர்களை ராவுவதற்கும், சில சமயங்களில் 'கில்மாஸ்' ஃபோட்டோ போடுவதற்கும் அனானிமஸாக இருப்பது இ.வ வுக்கு உதவியாக இருக்கிறது. அதோடு, இ.வ வின் resourcefulness என்னை மிகவும் கவர்ந்த விஷயம்! அதற்கு உதாரணம், ஒரு "மாபெரும்" வலைப்பதிவு சந்திப்பு சென்னையில் நடந்தபோது, அங்கு எடுத்த புகைப்படங்களை சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இட்லிவடை வலையேற்றியதைச் சொல்லலாம் :) அவருக்கு எப்படி இவ்வளவு (தினம் update செய்வதற்கு) நேரமும், உந்துதலும் கிடைக்கிறது என்பது புதிராகவே உள்ளது. இட்லிவடை, நிறைய சொத்து இருக்கிற, வேலைக்குப் போகத் தேவையில்லாத ஆளாக இருக்கலாம் எனபது என் அனுமானம் ;-)
2005-ஆம் ஆண்டு இறுதியில் இட்லிவடை எழுதிய 2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள் என்ற இடுகை satire வகை நகைச்சுவைக்கு ultimate எடுத்துக்காட்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. தமிழ்வலையின் Alltime டாப்-5 நகைச்சுவைப் பதிவுகளில் அப்பதிவுக்கு என்றுமே இடமுண்டு, குறிப்பிட்ட பதிவில் அவர் என்னை கலாய்த்திருந்தாலும் கூட :) அப்போது அவ்விடுகையை வாசிக்காதவர்கள் இப்போது வாசித்து விட பரிந்துரை செய்கிறேன்!
எனது வலைப்பதிவின் 301-வது இடுகையை, என்னைப் பற்றிய ஒருவிமர்சனப் பதிவாக இட்லிவடை எழுதித் தந்தார்! மிக நேர்மையான விமர்சனம் அது. இறுதியாக, இட்லிவடை மேல் எல்லாருக்கும் +/- விமர்சனம் இருக்கும், அதே சமயம் No one can ignore him/her and therein lies இட்லிவடை's popularity and success !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
!!!
Posted by IdlyVadai at 10/29/2008 10:00:00 AM 9 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
இட்லிவடை பற்றி கி.அ.அ.அனானி
கே.கே.எஸ்.எஸ்.ஆர் மாதிரி தன் பேருக்கு முன்னாடி நிறைய எழுத்தை கொண்டவர் இவர். இவர் தான் எ.அ.பாலாவா அல்லது எ.அ.பாலா தான் இவரா என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.
பாலா பதிவில் அடிக்கடி வந்து சிக்ஸ்ர் அடித்துவிட்டு போகும் இவர் இட்லிவடையை பற்றி...
ஒரு அனானி பற்றி இன்னொரு அனானி - இட்லிவடை பற்றி கி.அ.அ.அனானி
2005 கடைசியோ அல்லது 2006 ஆ ஞாபகமில்லை? சென்னையில் ஒரு பதிவர் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அது பற்றி புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டு விட்டார் என தமிழ் வலையுலகில் அங்கங்கே சரம் வெடித்துக் கொண்டிருந்த போது தான் பரபரப்பாக அப்படி செய்தது யார் என்று தேடுகையில் கவனித்தது " இட்லி வடை " என்ற வலைப்பதிவு.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட தொடர்ந்து " இட்லி வடை " பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய (முக்கால்வாசி) "கட்&பேஸ்ட்" செய்திகளாக இருந்தாலும் "இட்லி வடை" தனக்கென சில பாணிகளை வைத்திருப்பது "இட்லிவடை ஸ்பெஷாலிடி"
அவற்றில் சில கீழே:
அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்க,வந்தால் நல்லா இருக்குமே என்று ஆசையுடன் சிலரும், அய்யய்யோ வந்துரப் போறாரே என பீதியுடன் சிலரும் கவனித்துக் கொண்டிருக்க "வந்தா தடுக்க முடியாது,வராட்டி இழுக்க முடியாது" என்பது போன்ற டயலாக்குகள் சொல்லி "நழுவு மீனாகவே" இருக்கும் ரஜினிகாந்த் போல , அனைத்து தமிழ் வலையுலக மக்களையும் "அவரா இருக்குமோ? இவரா இருக்குமோ, தனி ஆளா இல்லை நிறைய பேர் சேர்ந்த குழுவா" என்று கெஸ்ஸிலேயே வைத்திருந்து அதை 5 வருடங்களாக மெயின்டெயின் பண்ணுவதும் அப்படி இருந்தும் கூட தன்னடக்கத்துடன் ?!!! ////ஒளிந்து கொண்டு எழுதுவதில் ஒரு சிறு சந்தோஷம் அவ்வளவுதான்.
இவ்வாறு எழுதுவதில் எனக்கு மிகவும் தெரிந்தவரை கிண்டல் செய்யமுடிகிறது, ஏன் என்னை நானே கிண்டல் செய்துக் கொள்கிறேன். இது ரொம்ப நாள் நீடிக்காது. மனிதர்கள் தப்பு செய்வார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான். It is only a matter of time !. காத்திருங்கள்//// என்று கூறுவது " வலையுலக சூப்பர் ஸ்டார்" இட்லி வடை ஸ்பெஷாலிடி.
தமிழ் நாட்டில் நகர்ப் புறங்களில் 2 மணி நேரம் மற்றும் கிராமப்புறங்களில் 5 மணி நேரத்துக்கும் மேலாக என்று ஆரம்பித்து போகப் போக கூடிக் கொண்டே போய் தமிழ் நாட்டையே இருளில் மூழ்கடித்தும் கொண்டிருந்த/இருக்கும்,சிறு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் குலைத்துக் கொண்டிருக்கும் மின்வெட்டைப் பற்றி மக்களுக்கு அறிக்கை அல்லது செய்தி மூலமாக நிலமை என்ன என்று உண்மையை உடனுக்குடன் தெரிவிக்காமல் மின் வெட்டு இல்லை , இல்லை என பொய் சொல்லி சாதித்து , பின் அறிவிக்கப்பட்ட / படாத என்று சொதப்பி காலங்கடத்திக் கொண்டிருந்து விட்டு, ரொம்ப நாள் கழித்து , 3 வயசு குழந்தை கூட நம்ம ஏரியாவுல 3 டு 5 கரண்ட் இருக்காது என மழலையில் "அப் டு டேட்" நியூஸ் சொல்லும் நிலை வந்த பின்னால் சாவகாசமாக "ஆமாம் தமிழகத்தில் மின் பற்றாக்குறை " என்று தலையைச் சொறியும் " அவுட் ஆஃப் டேட் " அமைச்சர் ஆற்காடு வீராசாமி மாதிரியில்லாமல் நல்லதோ கெட்டதோ செய்திகளை உடனுக்குடன் சூடு குறையாமல் தருவது "இட்லி வடை ஸ்பெஷாலிடி" 3
முதலமைச்சர் கருணாநிதி வருடம் தவறாமல் "குல்லா போட்டு " ரம்சான் நோம்புக்கஞ்சி குடித்தும் ,டிசம்பர் 25 அன்றும் ஒசாமா பின் லாடனும்,ஜார்ஜ் புஷ்ஷும் முறையே ஆப்கான் பதுங்கு குழியிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் இருந்தாலும் அவர்கள் முதற்கொண்டு அனைத்து உலக முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு ரம்சான் மற்றும் கிருஸ்துமஸுக்கு மறக்காமல் வாழ்த்துச்சொல்லி அனைத்து இந்துப் பண்டிகையும் மறக்காமல் மறந்து ஓரவஞ்சனை செய்யும் ஓட்டு அரசியல் போலல்லாமல் , தமது பதிவுகளுக்கு எதிர்த்தோ ஆதரித்தோ வரும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடுவது "இட்லி வடை ஸ்பெஷாலிடி"
15 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பெளலருக்கும் ஆசை, இந்த ஆளை அவுட் ஆக்கி விட வேண்டுமென்று. அதே போல எந்த ஒரு பேட்ஸ் மேனுக்கும் ஆசை இவரது ரெக்கார்டை முறியடிக்காவிட்டாலும் குறைந்த பட்சமாக இவரைப் போலவாவது பேட்டிங் செய்ய மாட்டோமா என்று. இவரது சாதனைகளை கணக்கெடுத்துப் பார்த்து எங்காவது ஓட்டை இருக்கிறதா, ஏதாவது குறை சொல்ல முடியுமா என தேடித் தேடி கடைசியில் "இவர் க்ரேட்தான் " என எதிரணியினர் கூட ஒத்துக்கொள்ளும் "மாஸ்டர் ஃப்ளாஸ்டர்" போல, எதிரணியினரே வலையுலக வாக்குப் பதிவு நடத்தி, அதில் "மாட்ச் பிக்ஸிங்" மாதிரி "சாய்ஸ்"களையும் வைத்தாலும் 272பேர் கலந்து கொள்ள அதிலும் 61 சதவிகதம் பேர் (167 பேர்) ஆதரவுடன் , எதிரணியினரே கூட இவர் சிறந்த வலைப் பதிவர்தான் என அரை குறை மனசுடன் ஒத்துக்கொள்ளும் படி 5 வருடங்களாக அடித்து ஆடி அசர வைப்பது வலையுலக சச்சின் டெண்டுல்கர் "இட்லிவடை ஸ்பெஷாலிடி"
சின்னத்திரை என்று சொல்லப்படுகின்ற தமிழ் டிவி சானல்கள் ஸ்டீரியோ டைப் மெகா சீரியல்களிலும் ,பிட் சினிமா நிகழ்சிகள் மற்றும் சினிமா காமெடி கருமங்களில் பார்வையாளர்களை இம்சை செய்து கொண்டிருந்த போது "கலக்கப் போவது யாரு?,ஜோடி ந 1 போல New concept, ரியாலிடி மற்றும் என்டெர்டெய்ன்மென்ட்களை புகுத்தி வித்தியாசமான நிகழ்சிகளை வழங்க கொஞ்சமேனும் முயன்ற விஜய் டிவி போல வலையிலும் "மை டியர் பாடி கார்ட் முனீஸ்வரனே" போன்ற பதிவுகளை தந்தது ( சன் மற்றும் கலைஞர் டி வி இந்த நிகழ்ச்சிகளை தங்களது சானலில் ஈ அடிச்சான் காப்பி அடித்தது போல் வலையிலும் பலர் இந்தப் பதிவுகளை காப்பி அடித்தனர் என்பதே இது எவ்வளவு பாப்புலர் பதிவு என தெரிந்து கொள்ளலாம்), செய்தி பதிவாக இருந்தாலும் கீழே மஞ்சள் பெயின்ட் அடித்த அவருக்கே உரித்தான "பன்ச் கமெண்ட்" போன்றவை சந்தேகமே இல்லாமல் "இட்லி வடை ஸ்பெஷாலிடி"
இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் .இவ்வளவு ஸ்பெஷாலிட்டி நிறைந்த "இட்லி வடை" பற்றி ஆனந்த விகடன் "ஒரு இணையம் அளவுக்கு நிறைவான வலைப்பூ!" என்று பாராட்டியதில் ஆச்சரியமே இல்லை .
Congratulations...IDLI VADAI for completing 5 exciting years in Tamil Blogdom & still Going Strong.
கி அ அ அனானி.
உங்களுக்கு ஒரு கேள்வி - ஏன் கடைசியில் "என்றென்றும் அன்புடன் கி.அ.அ.அனானி" என்று போடவில்லை :-)
Posted by IdlyVadai at 10/29/2008 08:04:00 AM 5 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Monday, October 27, 2008
போதுமடா டில்லி ! - கடுகு
எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீபாவளி ஸ்பெஷலாக எழுத்தாளர் கடுகு( அகஸ்தியன், பி.எஸ்.ரங்கநாதன்) எழுதிய 'போதுமடா டில்லி ! - நகைச்சுவை கட்டுரை கீழே...
போதுமடா டில்லி ! - கடுகு
நான் டில்லியில் சுமார் 40 வருஷங்கள் இருந்தேன். இதை ஏதோ மாபெரும் சாதனை மாதிரி பெருமை அடித்துக்கொள்கிறேனே என்று கேட்காதீர்கள்! டில்லியில் இருந்த போது நான் பட்டபாட்டைச் சொன்னால் ஒரே மூச்சில் நாலு எபிசோட் கஸ்தூரி, மெட்டி ஒலி, ஆனந்தம் பார்த்த மாதிரி உங்கள் கண்ணில் நீர் ஆறாகப் பெருகும்! எழையின் சிரிப்பில் இறைவனைக் காணாதவர்கள் கூட என் கண்ணீரில் சிரிப்பைப் பார்ப்பார்கள்!
சரி, விஷயத்துக்கு வருகிறேன். டில்லியில் இருந்த போது தபால்காரரைக் கண்டால் எனக்கு அலர்ஜி. யார், என்ன உதவி கேட்டு எழுதப் போகிறார்களோ என்ற பயம் தான்! டில்லியிலிருந்து இன்ன சாமான்கள் வாங்கி அனுப்பு என்று கேட்பதற்கு வரைமுறையே கிடையாது.
மோடா, ரொட்டிக்கல், மண்கிண்ணம் செட், மடக்குக் கட்டில், ஒன்றரை பேண்ட் டிரான்ஸிஸ்டர் என்று பல பொருள்கள் மீது சென்னைவாசிகளுக்கு மோகம் இருந்ததன் விளைவு எனக்கு செலவு, அலைச்சல், சோகம். போதாதென்று கெட்ட பெயரும் வந்துவிடும்.
''வாங்கி அனுப்பு. கிடைத்தவுடன் பணம் அனுப்புகிறேன்' என்பார்கள். நானும் அவர்கள் கேட்பதை வாங்கி அனுப்புவேன். ஆனால் இதுவரை யாரும் பணம் அனுப்பியதே கிடையாது. அவர்கள் ஊரில் வங்கி ஸ்ட்ரைக் விடாமல் நடந்து கொண்டிருக்கிறதோ என்னவோ! எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன்.
சில பேர் "என்னப்பா, டிரான்ஸ்சிஸ்டர் வாங்கி அனுப்பி இருக்கறே? திருச்சி ஸ்டேஷன் சரியாகவே வரவில்லை... ஒரு சாமான் வாங்கினா பார்த்து வாங்கணும்னு தெரிய வேண்டாமா? ...ஹும்" என்று சலிப்புடன் கடிதம் எழுதுவார்கள். அதன் பிறகு பணம் கேட்டு எழுதுவதற்கு நான் என்ன பைத்தியக்காரனா ?
+ + +
சில கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கும். "அன்புள்ள நண்பனுக்கு, என்னை உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முப்பது வருஷத்துக்கு முன்பு உன்னோடு கோலி விளையாடின கோபால் எழுதுகிறேன். அடுத்த மாசம் டில்லிக்கு வருகிறேன். ஹரித்வார், சிம்லா எல்லாம் போகணும். நான் பதினேழாம் தேதி சென்னைக்கு வர நாலு டிக்கட் ரிசர்வ் பண்ணிடு. நடு பர்த் வேண்டாம். கடைசி பர்த் வேண்டாம். பாத்ரூம் போறவங்க வரவங்க. கதவு திறந்து டமால்னு மூடற சப்தம், டிக்கெட் இல்லாத ஆக்கிரமிக்கறவங்க தொல்லை எல்லாம் இருக்கும். முடிந்தால் கிச்சன்-கார் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் ரிசர்வ் பண்ணவும்!... 17'ம் தேதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள், இரண்டு நாள் முன்னே பின்னே வாங்கிவிடு. அப்பறம் ராஷ்டிரபதிபவன், பார்லிமெண்ட் போய்ப் பார்க்க பாஸ் எல்லாம் வாங்கிவைத்துவிடு என்று ஏதோ ஹோட்டலில் "தோசை முறுகலாக இருக்கட்டும்; சாம்பார் வேண்டாம், சட்னி மட்டும் போதும்" என்று ஆர்டர் கொடுப்பது போல எழுதுவார்கள்! ஆனால் பணத்தை பற்றி மறந்தும் கூட எழுத மாட்டார்கள். (அல்லது எழுதுவதற்கு ஞாபகமாக மறந்துவிடுவாகள்.)
ஏண்டா, சின்ன வயசில் கோபாலுடன் கோலி விளையாடின பாவத்தைச் செய்தேனோ என்று விதியை நொந்துக்கொண்டு, எதைச் செய்யாவிட்டாலும் ரிடர்ன் டிக்கட்டை, நாலுமணி நேரம் கியூவில் நின்றாவது வாங்கிவைத்து விடுவேன். ஆரம்ப நாட்களில் அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு பதிவு செய்து வந்தேன். பின்னால் புத்திசாலித்தனம் வந்ததால் 'முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை' என்று எழுதுபவர்களுக்கு இரண்டு நாள் முன்னேயே திரும்பும்படி நான் ரிசர்வ் செய்ய ஆரம்பித்தேன். அவர்கள் கூடுதலாக இரண்டு நாள் இருந்தால், எனக்கு தானே கூடுதல் செலவு, தொல்லை மற்றும் அலைச்சல். அவர்கள் டில்லிக்கு வந்த பிறகு சாந்தினிசௌக், கரோல் பாக், சரோஜினி நகர் மார்க்கெட்,செங்கோட்டை என்று பல இடங்களுக்கு அழைத்து போய் நான் பட்ட அவதிகளைச் சொன்னால் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்!
+ + +
சரி, நண்பர்களை தட்டி கழித்துவிடலாம், உறவினர்களை எப்படி சமாளிப்பது? பல சமயம் கடிதங்களுக்குப் பதிலே போட மாட்டேன். செல் போன் இல்லாத பொற்காலம் அது. இல்லாவிட்டால் தப்பித்திருக்க முடியுமா? ஆனால் மாமனார் கடிதம் போட்டால் அதை ஒதுக்க முடியுமா?
ஒரு சமயம் என் மாமனார் டில்லிக்கு வந்திருந்தார். சாந்தினிசௌக் சண்டே மார்க்கெட் மிகவும் பிரபலம். டில்லிக்குச் சுற்றுப்பயணம் வருபவர்கள், சாந்தினிசௌக் மார்க்கெட்டில் சூப்பராய் காட்சி அளிக்கும் - ஆனால் உண்மையிலேயே சர்வ அடாஸ் பொருளை- வாங்கி ஏமாறுவார்கள். தாம் பெற்ற ஏமாற்றம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கையின்படி மற்றவர்களிடம் தாங்கள் வாங்கிய பொருளை பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அவர்கள் வாங்கிய பொருளை பற்றி பெருமை அடித்துக்கொள்ள முடியுமே தவிர உபயோகிக்க முடியாது!
சாந்தினி சௌக்கிற்கு போகாவிட்டால் ஏதோ தெய்வ குற்றம் என்கிற மாதிரி இரயிலைவிட்டு இறங்கியதும் இறங்காததுமாக என் மாமனார் 'மாப்பிளை, முதல் வேலையாக என்னை சாந்தினிசௌக் அழைத்து போங்க. மற்ற இடமெல்லாம் பார்த்தாலும் ஒன்று தான்,பார்க்காவிட்டாலும் ஒன்று தான்' என்றார். அவ்ர் சொன்னதை நான் மனைவியிடம் சொல்லிவிட்டு "இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கே அழைத்துக்கொண்டு போகிறேன் என்ன வேண்டுதலோ என்னவோ!" என்று சொன்னேன்.
"ஏன், உங்கமாவை அழைச்சிண்டு போனபோது இப்படி கேட்கலை. உங்க சித்தப்பா பொண்ணு பயங்கர பாமா, பெரியப்பா பிள்ளை 'ரம்மி' ராமசாமி, உங்க அக்கா பேரன் 'வால்' வரதுக்குட்டியை அழைச்சிண்டு போனீங்களே, அதெல்லாம் அவங்க வேண்டுதலா, இல்லை உங்க வேண்டுதலா?" என்று ஆரம்பித்து என் அருமை மனைவி கமலா சொன்ன பழிப்புரையை பொழிப்புரையாக எழுதினாலும் இக்கட்டுரை குறுநாவல் அளவிற்கு வளந்துவிடும்!
+ + +
இடம்: சாந்திசௌக். மாமனாரும் வாய் செத்த மாப்பிள்ளையான நானும் நடைப்பாதைக் கடையில் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்
"மாப்பிளை, இந்த ஏர் -பேக் நல்லா இருக்கு. இதுமாதிரி கிட்டன் வாங்கிண்டு வந்தான். என்ன விலை கேளுங்கோ" என்றார் மாமனார். அவருக்கு ஹிந்தி தெரியாது என்பதாலும், அந்தப் பொருளுக்கு விலை படிந்தால் பணம் கொடுக்க வேண்டியது நான் என்பதாலும் விலை கேட்க்கும்படி சொன்னார். "ஏக் ஸௌ பச்சாஸ். ஏக் தாம்" என்று கடைக்காரர் சொல்லிவிட்டு, காதில் வைத்திருந்த பீடியை எடுத்து புகைக்க ஆரம்பித்தான்.
"என்ன சொன்னான்? ஒரு இழவும் புரியலையே" என்றார் மாமனார்
கொஞ்சம் ஜாஸ்தியாக சொல்ற மாதிரி இருக்கிறது 150 ரூபாய் சொல்கிறான் என்று பயந்து பயந்து சொன்னேன். என்னவோ நான் தான் அதிக விலை சொல்லுவது போல் நினைத்துக்கொண்டு
என் மாமனார் "என்னது 150 ருபாயா ? கிட்டன் 30 ருபாய்க்கு வாங்கிண்டு வந்தான்..."என்றார் மாமனார்
"எப்போது" என்று கேட்கவில்லை. மாமனார் தொடர்ந்து "சரி போகட்டும். விலைவாசி எல்லாம் ஏறிண்டே இருக்கு. ஒரே விலை கேளுங்கோ, 38 ரூபாய்க்கு தருகிறானா என்று" என்றார்.
இதை கேட்டதும் என் நாக்கு உலர்ந்துவிட்டது வாயை திறக்க முயற்சித்த போது என் முதுகில் யாரோ டின் கட்டுவது போல் பிரமை ஏற்பட்டது!
முற்பகல் அவரது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால், இப்போது பிற்பகல் விளைகிறது! விதியை நொந்துக்கொண்டு மெதுவாகக் கடைக்காரரிடம் "ஒரே விலை கேட்க சொல்லுகிறார். 35 ரூபாய்க்கு தரமுடியுமா?" என்று ஹிந்தியில் கேட்டேன். உடனே கடைக்காரர் தன் மூன்றாவது கண்ணை திறந்துக்கொண்டு பேச... அதாவது கத்த ஆரம்பித்தார்.
"என்னையா நான் என்ன திருடிக் கொண்டுவந்த பொருளையா விக்கறேன்? உனக்கு நாக்குல நரம்பு இருந்தா இப்படி கேட்பியா ? மூளை, கீளை இருக்குதா? சரியான பைத்தியக்காரனா இருக்கே. சாவுகிராக்கி" என்பது போன்ற பல ஹிந்தி வசவுகளை மளமளவென்று அடுக்கி என்னை வைது தீர்த்தான்
"மாப்பிளை, என்ன சொல்றான்?" என்று மாமனார் கேட்டார்
"கொடுக்க முடியாதாம். திட்டறான்."
"என்ன திட்றான்? காரே புரே என்று ஹிந்தியில் ஏதோ கத்தினான். புரியலையே!"
விதி! அவனிடம் வாங்கிய திட்டுகளை செந்தமிழில் மொழிபெயர்த்து சொன்னேன்!
"அவன் திட்டறான், முட்டாள், அயோக்கியன் சாவுகிராக்கி, கஸ்மாலம்னு"
"என்னது நாலு திட்டுதானா? அவன் ஐந்து சொன்னா மாதிரி இருந்தது" என்று மாமனார் சொன்னார். மாப்பிளை வாங்கிய திட்டுகளை முழுமையாக தெரிந்துகொள்ளுவதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம்! விட்டு போன திட்டை சொன்னதில் அவருக்கு முகத்தில் திருப்தி ஏற்பட்டது!
சட்டென்று முகத்தை கடுமையாக்கிக்கொண்டு, "அவன் அப்படி திட்டினதும், பதிலுக்கு அவன் கிட்ட "ஏண்டா, 30-40 ரூபாய் சாமானுக்கு 150 ரூபாய் கேட்கிறது கொள்ளை இல்லையான்னு' உறைக்கிற மாதிரி கேட்கறது. ஹும், உங்களுக்கு ஒண்ணும் பவிஷு போறாது" என்றார். அதை தொடர்ந்து அவர் செய்த அர்ச்சனைகளை எல்லாம் எழுதி என்னை அவமானப் படுத்திக் கொள்ளப்போவதில்லை!
ஏர் பேக் வாங்காமல் ஊருக்கு போய்விட்ட மாமனார் ஒரு வாரம் கழித்துக் கடிதம் எழுதினார். "மாப்பிளை, அந்த ஏர் பேக் இங்கே 200 ரூபாய்க்கு விற்கிறது. அதனால்
அவன் சொன்ன 150 ரூபாய் பரவாயில்லை. ஒண்ணு வாங்கி அனுப்புங்கள்" என்று எழுதிவிட்டார். மறுபடியும் சாந்தினிசௌக் போய் கேட்டபோது ஒரே விலை 200 ரூபாய் என்று சொன்னான். ஏன் பதிலுக்குக் கேட்கப்போகிறேன்! பேசாமல் 200 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டு வந்து, கமலாவிடம், "150 ரூபாய்க்கு தரமாட்டேன் என்றான் கடைக்காரன். அடித்து பேசி வாங்கிவந்துவிட்டேன்" என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன்!
+ + +
இப்படி, பல நூறு அனுபவங்கள் டெல்லி வாழ்க்கையில்! எழுதி மாளாது!
ஆனால், இப்போதெல்லாம் தபால்காரரைக் கண்டால் நான் பயப்படுவதில்லை. செல்போன் மணி அடித்தால் தான் நான் பயத்தில் அலறுகிறேன்.
தினமும் "ஆண்டவா என்னை டில்லியிலிருந்து எப்போது கருந்தட்டாங்குடிக்கு மாற்றப் போகிறாய்?" என்று தான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
தீபாவளி ஸ்பெஷல் கட்டுரை எழுதித் தந்த கடுகுக்கு இட்லிவ்டையின் நன்றி.
Posted by IdlyVadai at 10/27/2008 12:22:00 PM 15 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், கட்டுரை, நகைச்சுவை
Saturday, October 25, 2008
கடுகு
கடுகு, அகஸ்தியன் என்ற புனைபெயரில் எழுதும் பி.எஸ்.ரங்கநாதன் விரல்விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை எழுத்தாளார்களில் ஒருவர். 75 வயது ஆகும் இளைஞர்.
இவரின் கேரக்டரோ கேரக்டர் என்ற புத்தகம் நிறைய பேருக்கு கண்ணில் பாடாமல் எல்லா புத்தக கடையிலும் ஒளிந்துக்கொண்டு இருக்கும். என்னிடம் இரண்டு காப்பி இருக்கு. இரண்டையும் சில தடவை படித்திருக்கிறேன்.
கடுகுக்கு 'பேஷ்' என்று சொன்னவர்களின் பட்டியல்:
- 'பேஷ்' என்று ராஜாஜி இவருக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார்
- இவர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு 'பேஷ்' என்று பாராட்டினார் கல்கி
- இவர் எழுத்தை பாராட்டி எஸ்.ஏ.பி ஒரு கடிதம் எழுதி தந்துள்ளார்
- சாவி இவரை நிறைய பாராட்டியுள்ளார்.
இவரும் இட்லிவடை வாசகர் என்பது சில நாட்கள் முன்பு தெரிந்து அதிர்ச்சி ஆனேன்.
இந்த தீபாவளிக்கு இட்லிவடைக்கு ஸ்பெஷலாக இவர் கட்டுரை எழுதி தருமாறு கேட்டுள்ளேன். பார்க்கலாம்.
கடுகு பற்றி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் அண்ணா நகர் டைம்ஸில் எழுதிய கட்டுரை கீழே...
கடுகு
சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ்.ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம். சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.
டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச்
செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைப் பெயரே நிரந்தரமாகி விட்டது.
குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லOEமணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமான போது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்தபோது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப்
பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64ம் வருடவாக்கில்.
அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அவரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.
அஞ்சல் துறையை விட்டு விலகிய பின் ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில சேர்ந்து பல வருடம் பயிற்சி பெற்றதால் ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்ட கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு ‘எழுத்துரு’ செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (கணினி பற்றி நான் சுத்த சுயம்பிரகாச ஞான சூன்யம். ‘எழுத்துரு’ என்றால் என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுவிடாதீர்கள். கீழே விழுந்து விடுவேன்.)
டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, கடுகு மூன்று பேரும் பால்ய நண்பர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் இவரைப் பார்ப்பதற்காக பெஸன்ட் நகர் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். காரில் உட்கார்ந்தபடிய பேசினாராம். உடல் நலம் குன்றி, பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஸ்ரீதரின் மனைவி அவர் சொல்வதை விளக்கிச் சொன்னாகவும் கடுகு வருத்தத்துடன் சொன்னார்.
கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’. சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய ஒரே புத்தகம் இதுதான் என்றும், இது ஒரு ரத்தினம் என்றும் சுஜாதா எழுதினார். (இரண்டு பாகங்கள்; விலை: நூறு ரூபாய். நந்தினி பதிப்பகம், 12/6, வெங்கடேஸ்வரா ·ப்ளாட்ஸ், வெங்கடேஸ்வரா நகர், முதல் தெரு, அடையார், சென்னை - 20.)
இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு (‘சுரபி’) என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர்.தான் கை கொடுத்தார். அவருடைய மகள் ஆனந்தி - அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி - அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ்பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய
மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும், தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது. கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்கு தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)
- ரா.கி.ரங்கராஜன்
( நன்றி: Anna Nagar Times - 24th August 2008 )
Posted by IdlyVadai at 10/25/2008 01:30:00 PM 12 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை
இட்லிவடைக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது - திருமலை
திருமலை எழுத்தை படிப்பவர்களுக்கு BP எப்போதும் ஏறும் :-)
ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் இட்லி வடைக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். பல விதங்களிலும் இது ஒரு சந்தோஷப் பட வேண்டிய செய்தி. வலைப் பதிவுகளை தொடர்ந்து நடத்துவது ஒரு அசாத்தியமான பணி. ஒரு விதக் கொள்கைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கங்கள் சார்ந்த வலைப் பதிவாளர்களுக்கு வேண்டுமானால் தங்கள் கொள்கைகள் மீதுள்ள உந்துதலினால் தொடர்ந்து வலைப் பதிவு செய்வதும் தங்களுக்குள்ள பின்புலத்தினாலும், கிடைக்கும் பிரதிபலன்களினாலும் பல ஆண்டுகள் தொடர்வதும் இயல்பான ஒன்றாக இருக்கும். ஆனால் எந்தவித லாப நோக்கும் இல்லாமல், பிரதிபலன்களை எதிர்பார்க்காமால், குறுகிய நோக்கங்கள் இல்லாமல் வெறும் தன்னார்வத்தினால் மட்டுமே ஒரு வலைப் பதிவை வெற்றிகரமாக, பல லட்ச்சம் வாசகர்களைச் சென்றடையும் விதத்தில் நடத்தி வருவது நிச்சயம் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு சாதனையே. அந்தச் சாதனையை நிகழ்த்திய இட்லி வடை(யர்களு)க்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகுக.
எனக்கு இட்லி வடை தளத்தை யார் நடத்துகிறார்கள் என்பது தெரியாது. ஒருவரா பலரா என்பதும் தெரியாது. கொள்கைகள், நோக்கங்கள், திட்டங்கள், பின்புலன்கள் ஏதும் உள்ளனவா என்பதும் தெரியாது. இருந்த போதிலும் கடந்த ஐந்து வருடங்களாக நான் தொடர்ந்து ஒரு இட்லி வடை ரசிகனாகவே இருந்து வருகிறேன். தினமலர், எக்ஸ்பிரஸ், நியுஸ் டுடே போன்ற அச்சு இதழ்கள் காலையில் கிடைக்காத குறையை அனுதினமும் காலையில் அருந்தும் காஃபியுடன் சேர்ந்து போக்குவது இட்லி வடையே. என் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப் போனது இட்லி வடை.
தமிழில் பொதுவாக, பெரும்பான்மையான இணைய தளங்களும், வலைப் பதிவுகளும் கடுமையான இந்திய துவேஷம், இந்து மத இழிவு, பிராமணக் காழ்ப்பு, இன வெறுப்பு, தீவீர்வாதம் போன்ற நச்சுக்களை மட்டுமே உமிழ்ந்து வருகின்றன. ஆபாசம், தனிநபர் துவேஷங்கள்,. மிரட்டல்கள், பளாக் மெயில்கள், நிறைந்த தமிழ் இணைய உலகின் நடுவில், தமிழ் இணைய்ம் என்றாலே மன நிம்மதியைக் குலைக்கும், பிரிவினைகளைத் தூண்டும், வன்முறை சார்ந்த, நாகரீகமானவர்கள் தவிர்க்க வேண்டிய இடம் என்ற சூழ்நிலையைப் போக்கி தமிழிலும் கூட ஆரோக்கியமாகவும், வெறுப்புணர்வின்றியும், நகைச்சுவையுணர்வுடனும், இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கையுடனும், எந்த மதத்தையும் இழிவு செய்யாத நோக்கத்துடனும் இயங்கி வரும், வந்த தமிழ் இணைய தளங்கள் வெகு சிலவே. முகமூடி, வந்தியத் தேவன், மாயவரத்தான், பாலா,செல்வன் ஆகிய சில நண்பர்கள் தமிழ் வலைப் பதிவுலகில் தொடர்ந்து இயங்கி வந்த பொழுதிலும், அவர்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமைகள்,. நேரமின்மை காரணமாக தொடர்ந்து எழுதி வ்ர இயலவில்லை.
பொதுவான வலைப் பதிவு முறையை விட்டு சற்றே விலகி, படிக்கச் சுவாரசியமான முறையில் இடை விடாது தொடர்ந்து இயங்கி வருவது இட்லி வடை மட்டுமே. இட்லி வடையை நடத்துபவரோ அல்லது நடத்தி வருபவர்களோ நிச்சயம் தொழில்நுட்பப் பின்ணணியில் உள்ள ஒரு 9-5 வேலையில் இருந்து வருகிறார்கள் என்றே நம்புகிறேன். அப்படிப் பட்ட வேலைப் பளுவிற்கும் நடுவே ஒரு வலைப் பக்கத்தை அதன் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து 5 வருடங்கள் நடத்துவது என்பது அசாத்தியமான ஒரு சாதனையே. அந்த சாதனையை நிகழ்த்திய இட்லி வடையை பிரமிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்துகிறேன்.
இட்லி வடை என்பது செய்திகளை முந்தி அளிக்கிறது. இட்லி வடை அரசியல், சமூக. திரைப்பட நிகழ்வுகளை யார் மனதும் புண்படாத விதத்தில் மென்மையான அங்கதத்துடன் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. துணிவான விமர்சனங்களையும் எப்பொழுதும் தன் வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறது. போலி மதச்சார்பின்மை, இந்து மத வெறுப்பு, பிராமண காழ்ப்பு, தனி நபர் மிரட்டல்கள் போன்ற இழி செயல்களில் ஒரு பொழுதும் இட்லி வடை ஈடு பட்டதில்லை. தமிழ் திரட்டியில் இருந்து, தன் வாசக எண்ணிக்கைக் குறைந்து விடுமோ என்ற அச்சமின்றி வெளியேறும் துணிவு, நேர்மை, அராஜகத்தை எதிர்க்கும் தார்மீகக் கோபம் இட்லி வடையிடம் இருந்தது போற்றத்தக்கது. இந்தக் குணங்களினாலேயே இட்லி வடையின் அபிமான வாசகனாக நான் மாறினேன் என்பதைக் கூறத் தேவையில்லை. தமிழின் ஜனரஞ்சகமான இதழ்களான விகடன் குமுதத்திற்கும் அரசியல் நேர்மையும், உண்மையும் தெளிவும் கொண்ட துக்ளக் போன்ற இதழ்களுக்கும் நடுவே ஒரு இடத்தை தமிழ் இணையத்தில் இட்லி வடை நிரப்புகிறது. பல செய்திகளை நாம் செய்திப் பத்திரிகைகள், வார இதழ்களில் வருவதற்கு முன்பாகவே கூட இட்லி வடை மூலமாக அறிந்து கொள்கிறோம். தேர்தல் போன்ற பரபரப்பான சூழ்நிலைகளில் அபாரமான வேகத்தில் செய்திகளையும் விமர்சனங்களையும் அளித்து வந்துள்ளது இணையப் பதிவு என்பது வெறும் அரட்டை இடம் என்ற எண்ணத்தைப் போக்கி ஆக்கபூர்வமாகவும் இட்லி வடை பல பணிகளை ஆற்றியுள்ளது. எளியவர்களையும், ஏழைகளையும், உதவி வேண்டுபவர்களையும் இனம் கண்டு தன் வாசகர்கள் மூலமாக உதவிக் கரம் நீட்டும் புனிதமான சேவைகளையும் இட்லி வடை மேற்கொண்டு வருகிறது.
இட்லி வடை. இந்தச் சாதனைகளுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
இட்லி வடைக்கு நிச்சயம் நேரம் கிடைப்பதும், கிடைக்கும் குறுகிய நேரத்தில் பல்வேறு தகவல்களையும் சேகரித்தும், விமர்சித்தும் வழங்குவது நிச்சயம் ஒரு சவாலான பணியாகவேதான் என்றும் இருந்து வரும் என்று நம்புகிறேன். இருந்தாலும் சாத்தியப் படும் எனில் இட்லி வடை தன் வட்டத்தைச் சற்றே விரிவு படுத்திக் கொள்ளலாம். மேலதிக ருசி கருதி ஒன்றுக்கும் மேற்பட்ட துறைசார்ந்த வடைகளைச் சேர்த்துக் கொள்வதோ, வெளியே முகம் காண்பிக்கத் தயங்கும் திறமையான ஒரு சில இட்லிகளை தன்னுடன் இணைத்துக் கொள்வதையோ இட்லி வடை பரிசீலிக்கலாம். ஏற்கனவே அப்படி இருக்குமாயின் எனது கருத்தைப் புறம் தள்ளவும். தமிழிலும். பொதுவாக இந்தியா சம்பந்தப் பட்டு வரும் நல்ல பல நூல்களை இட்லி வடை தன் வாசகர்களுக்கு இட்லி வடைக்கே உரிய சுவாரசியத்துடன் அறிமுகப் படுத்தலாம். வெறுமே திரைப் படத் தகவல்களை மட்டும் அளிப்பதற்குப் பதிலாக நல்ல திரைப்படங்கள் எங்கு காணப் பட்டாலும் இட்லி வடையில் இட்லி வடைப் பாணியில் அறிமுகப் படுத்தலாம். பொருளாதாரம் குறித்த தகவல்களையும், செய்திகளையும், விமர்சனக்களையும் அளிக்கலாம். இட்லி வடைக்குக் காணக் கிடைக்கும் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஜெயமோஹன் உபயத்தில் அதற்கான வாசகர் வட்டமும் விரிவடைந்துள்ளது. பரிசீலிக்கவும். அரசியல் விமர்சனங்களை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் அலசலாம், அளிக்கலாம்.
இட்லி வடை வலைப் பதிவையும், அதன் ஆசிரியர் (களையும்) இன்னும் நூறாண்டிரும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் பதிவுகள் இன்னும் கோடிக்கணக்கான தமிழர்களைத் தன் வாசகர்களாகப் பெற்று அவர்களை திராவிட இயக்க பாசிச சக்திகளில் இருந்தும், திராவிட கட்சி மாயையைகளில் இருந்தும், இன வெறுப்பிலிருந்தும், சுயநலத்தில் இருந்தும் வெளிக்கொணர தொடர செயல் பட வேண்டும், செல்ல வேண்டிய தூரமும் காலமும் அதிகம் உள்ளது. நீண்ட பயணம் காத்திருக்கிறது. தமிழ் வாசகர்களை அறியாமையில் இருந்தும் கவர்ச்சியிலும் போலித்தனமான அரசியல்வாதிகளின் பிடிகளில் இருந்து மீட்டு அவர்களிடம் இந்திய தேசீய ஒற்றுமை உணர்வையும், சிந்தனைத் தெளிவையும் வெறுப்பற்ற சகோதர்த்துவத்தையும் வளர்க்க இட்லி வடை தொடர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். அந்த மேலான நோக்கங்களைச் செயல் படுத்த இட்லி வடைக்கு ஆண்டவன் நீண்ட ஆரோக்யமான ஆயுளையும், மன நிம்மதியையும் அளிக்கப் பிரார்த்திருக்கிறேன்.
வாழ்க, வளர்க,
அன்புடன் வாழ்த்தும்
ச.திருமலை
எழுதிய திருமலைக்கும், எடிட் செய்த இட்லிவடைக்கும் நன்றி
Posted by IdlyVadai at 10/25/2008 11:47:00 AM 8 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள்தான் இட்லிவடையா? - பா.ராகவன்
பா.ராகவன்...
கடந்த சில ஆண்டுகளில் இணையத் தொடர்புள்ள பலபேர் பல சமயம் என்னிடம் இக்கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இல்லை, நான் அவனில்லை என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையும் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் என்னைப் போலவே வேறு சிலரிடமும் வேறு பலர் இதே கேள்வியைக் கேட்க, அவர்களும் இதே பதிலை வெவ்வேறு சுருதிகளில் வெளிப்படுத்தியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். பிறகு இணைய நண்பர்கள் இக்கேள்வியைக் கேட்கப்போகிறார்கள் என்று எப்போதெல்லாம் உள்ளுணர்வு எச்சரிக்கிறதோ, முந்திக்கொண்டு நான் அவர்களைக் கேட்டுவிட ஆரம்பித்தேன். உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள்தானே இட்லிவடை?
ஐந்து வருடங்களில் யாரெல்லாம் இட்லிவடையாக இருக்கலாம் என்று சந்தேகப் பட்டியலுக்கு உள்ளே வந்தவர்கள் - எனக்குத் தெரிந்து இவர்கள்: கிருபா ஷங்கர், சுவடு ஷங்கர், ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன், தேசிகன், பாஸ்டன் பாலாஜி, ஹரன் பிரசன்னா, பத்ரி, ரஜினி ராம்கி மற்றும் அடியேன். சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.
இந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். ஒவ்வொருவரிடமும் நானும், என்னிடம் இந்த ஒவ்வொருவரும் பல சமயம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் உள்ள அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக இட்லிவடையை நடத்துவதாகவும் பேசப்பட்டது.
ஆரம்பத்தில் ஐயோ இப்படி அபாண்டமாகப் பேசுகிறார்களே என்று அடித்துக்கொள்ளும். போகப்போக அது பழகிவிட்டது. காரணம், கொஞ்சம் யோசித்ததுதான்.
1. எனக்கு வேலை இருக்கிறது. வேண்டாத அரசியல் பிட் நியூஸ்களை காப்பி பேஸ்ட் செய்துகொண்டிருக்குமளவுக்கு நாம் பொழுதுபோகாதவனில்லை.
2. ஐந்து வருட காலம் அடையாளம் மறைத்துத் திரியுமளவுக்குத் திறமைசாலி இல்லை.
3. இத்தனை தவறுகளுடன் கூடிய தமிழை என்னால் கனவில்கூட எழுதமுடியாது.
ஆனால் இட்லிவடை என்கிற பிரகஸ்பதி லேசுப்பட்ட ஆளில்லை என்பதையும் உணர்ந்தேன். மிகக் கவனமாக ஒரு பதிவை என்னுடைய மொழி அல்லது தேர்வு அல்லது விருப்பம் அல்லது ரசனையை அடியொற்றி எழுதுவார். அடுத்த பதிவைத் தடாலென்று பாபாவின் ஸ்டைலுக்குக் கொண்டுபோய்விடுவார். சம்பந்தமே இல்லாமல் ரஜினி ராம்கி மாதிரி சமூக சேவைகள் சிலவற்றில் திடீரென்று குதிப்பார். தடாலென்று என்னத்தையாவது கடிதம் மாதிரி எழுதிவிட்டு, என்றென்றும் அன்புடன் இட்லிவடை என்று பாலாவின் வயிற்றில் அமிலம் வார்ப்பார். யார் யாரையெல்லாம் சந்தேக லிஸ்டில் மக்கள் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரின் சாயலும் ஒவ்வொரு பதிவில் இடம்பெறும்படி மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்வார். மெசஞ்சரில் கூப்பிட்டுப் பேசினால் ‘சும்மா போட்டுத்தாக்குங்க’ என்று ஒரு வரி போடுவார். ஆஹா, இது பாபா அல்லவா என்று உச்சந்தலையில் பல்ப் எரியும்போதே :> என்று என் ஃபேவரிட் யாஹு பொம்மையைப் போட்டு வெறுப்பேற்றுவார்.
அதிகாலை துயிலெழுந்து முதல் தவணையாகப் எட்டு பற்களை விளக்கிவிட்டு அன்றைய தினத்தின் ஆன்லைன் நடவடிக்கைகளை யோசித்துத் திட்டமிடத் தொடங்கிவிடுபவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். எம்பெருமான் அவருக்கு ஏராளமான ஓய்வுநேரத்தை வழங்கியிருக்கவேண்டும் என்றும்.
பிறகு சிலகாலம் கழித்து எரிச்சல் மெல்ல மெல்ல விலகி ஒரு கட்டத்தில் இட்லிவடையை நான் ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு போஸ்டின் கீழும் அவரளிக்கும் ஒருசில வரி கமெண்டுகள் எனக்குப் புன்னகை வரவழைத்திருக்கின்றன. அவரது வலைப்பதிவின் வலப்பக்க பாக்ஸ் மேட்டர்களில் அவ்வப்போது மிக சுவாரசியமான விஷயங்கள் சேரும். [சமீபத்தில் ‘அம்மா தாயே..’] அவரது சகிக்கமுடியாத தமிழ்க்கொலை குறித்து ஒரு சில சமயங்களில் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ‘எல்லாம் அவசரத்துல போடறது சார். திருத்திக்கணும்’ என்பார். இன்னொரு சமயம், ‘நானே கேக்கணும்னு இருந்தேன். ஏன் அப்படியெல்லாம் எழுதறிங்க?’ என்று நம்மையே மண்டை காயச் செய்வார்.
அவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை என்றுதான் மிகச் சமீபகாலம் வரை எண்ணியிருந்தேன். ஆனால் வலைப்பதிவின் மூலம் பணம் திரட்டி, தகுதி வாய்ந்த, வறுமையில் வாடும், கஷ்டத்தில் அவதிப்படும் நபர்களுக்கு அவர் உதவத் தொடங்கியதைப் பார்த்தபிறகு இது ஒரு நல்ல அனானி என்பது திட்டவட்டமாகப் புரிந்துபோனது.
இட்லிவடை யார் என்கிற கேள்விக்கு இனியும் இணையத்தில் அர்த்தமிருப்பதாக நான் கருதவில்லை. அவர் யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்னையில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். தமிழ் இணையம் முழுவதையும் கவலையில் ஆழ்த்திய போலிப் பிரச்னை அதன் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்த தருணத்தில் என்னுடைய ஜிமெயில் முகவரியும் களவு போனது நினைவிருக்கலாம்.
முகமறியாத இந்த நண்பர்தான் எனக்கு அதனை மீட்டுக்கொடுத்தது. பிறகு விசாரித்ததில், என்னைப் போல் வேறு சிலருக்கும் இட்லிவடை இந்த விஷயத்தில் உதவியிருப்பது தெரிந்தது. நன்றி சொல்லி மின்னஞ்சல் எழுதினால்கூட பதில் போடமாட்டாத அதிஜாக்கிரதைவாதி. மெசஞ்சரில் மட்டுமே பேசமுடியும். அதனாலென்ன, பெயர் இட்லிவடை, முகவரி ஜிடாக். தீர்ந்தது விஷயம்.
இந்த ஐந்தாவது பிறந்தநாள் சமயம் இட்லிவடையிடம் நான் கேட்டுக்கொள்ளும் விஷயங்கள்:
1. கொஞ்சம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். எட்டாங்கிளாஸ் இலக்கணப்புத்தகத்தை வாங்கிவைத்துக்கொண்டு படியுங்கள்.
2. கட் அண்ட் பேஸ்ட் அதிகமில்லாமல் அவ்வப்போதாவது சொந்தமாக எழுதுங்கள். உங்களுக்கு அருமையாக நகைச்சுவை எழுதவருகிறது.
3. எப்பப்பார் கருணாநிதியைத் திட்டிக்கொண்டே இருக்காதீர்கள். [வேண்டுமானால் ஆற்காடு வீராசாமியைத் திட்டுங்கள்.] போரடிக்கிறது. கொஞ்சம் மாற்றி கம்யூனிஸ்டுகளைத் திட்டுங்கள். ஹிந்துத்வர்களைத் திட்டுங்கள். தீவிரவாதிகளைத் திட்டுங்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த், ஜே.கே. ரித்திஷ் என்று திட்டுவதற்கு நபர்களா இல்லை நாட்டில்? வெரைட்டி காட்டுங்கள்.
4. வலது பக்க பாக்ஸ் மேட்டர்களை வாரம் ஒருமுறையாவது மாற்றுங்கள். கஷ்டம் என்றால் பாக்ஸ் மேட்டர் போடாதீர்கள்.
5. என்னோடு ஒருநாள் மாமி மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட வாருங்கள். வேண்டுமானால் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாருங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள்.
சில மாதம் முன்பு ஹெல்மெட் போட்டுக்கொண்டு உங்களுடன் கைகுலுக்கி 'ஹலோ' சொல்லியிருக்கிறேன் ஞாபகம் இருக்கா ?
உங்க வீட்டுக்கு பக்கத்தில் பெரிய குழி தோண்டியிருக்கிறார்கள். அதை மூடியபின் சொல்லுங்கள், வீட்டுக்கே வந்து சாப்பாடு சாப்பிடுகிறேன்.
Posted by IdlyVadai at 10/25/2008 07:44:00 AM 13 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Friday, October 24, 2008
சீமான், அமீர் கைது - திருமாவளவன் எப்போது ?
இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
இராமேஸ்வரம் கூட்டத்தில் தமிழ் உறவுகளின் அவலங்களை விவரித்துப் பேசினேன். அது சட்டவிரோதமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதற்காக கைது செய்யப்பட்டால் மகிழ்ச்சியோடு சிறைக்குச் செல்லக் காத்திருக்கிறேன்- சீமான்
பாரதிராஜாவும், சேரனனும் இந்த கைது பாட்டியலில் இருப்பதாக சொல்லுகிறார்கள்...
Posted by IdlyVadai at 10/24/2008 09:26:00 PM 16 comments
Labels: செய்தி
மனிதச் சங்கிலி நேரடி ரிப்போர்ட்
1) கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி தொடங்கியது.
2) பள்ளிச் சிறார்கள் சீருடையுடன் மழையில் நனைந்து கொண்டு சங்கிலியில் நிற்பதை காண முடிந்தது. (Both Boys and Girls)
3) சங்கிலியில் சில இடங்களில் கல்லூரி மாணவிகள் போலவும் காட்சியளிக்கின்றனர்.
4) பல முதியவர்களும் கையில் அட்டைகளுடன்(கோஷம்), மழையில் நனைந்தவாறு நிற்கின்றனர்
5) கோஷம் போடுபவர்கள் அட்லீஸ்ட் பாலிதீன் கவர் ஓவர் கோட்டாவது அணிந்திருக்கின்றனர்.
6) அமைச்சர் பொன்முடியை களத்தில் காண முடிந்தது.(குடை பிடித்துக் கொண்டிருப்பவருடன்)
7) போலிஸார் இருபது அடிக்கு ஒருவர் ஓவர் கோட்டோடு நிற்கின்றனர்.(பாவம்!!)
8) சன் டிவி வேனையும் பார்க்க முடிந்தது. கேமரா வெளியே தெரியவில்லை.
( நன்றி: யோசிப்பவர் )
Posted by IdlyVadai at 10/24/2008 04:31:00 PM 4 comments
அரசியல் சங்கலி அறிக்கை/பேச்சுக்கள் நல்ல தமாஷ்
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு கண்டனம் என்று ஆரம்பித்த பிரச்சாரம் இப்ப தீபாவளி பட்டாசு போல வெடிக்க கிளம்பியுள்ளது.
நிச்சயம் இந்த பிரச்சனை கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். யார் தனிமை படுத்தப்படுவார்கள் என்று பார்க்க வேண்டும்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்பது போக போக தான் தெரியும்.
வைகோ என்ன பேசினார் “நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம், ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்திச் செல்வான் (கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் ஆயுதம் ஏந்தத் தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் தயார் என்று பதில் அளித்தனர்). ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இளைஞர்களை திரட்ட முடியும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். அங்கேயுள்ள ஒருமைப்பாட்டை காப்பாற்ற இங்கேயுள்ள ஒருமைப்பாட்டை இழக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறேன். டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அந்த ஆட்சியை நாங்கள் எதிர்ப்போம்”
நேற்று: பாரதிராஜா கலைஞரை சந்தித்தார்
நேற்று மாலை இயக்குனர் பாரதிராஜாவும், செல்வமணியும் முதல்வர் கருணாநிதி திடீரென சந்தித்தனர். முதல்வரின் சிஐடி நகர் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது ராமேஸ்வரம் பொதுக் கூட்டம் குறித்து பாரதிராஜா விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று: காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் இப்படி சொல்லுகிறார்
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறோம் என்று திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் ஆகியோர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துக்களை வெளிப்படையாக பேசி பிரபாகரனை ஒரு ஹீரோ போன்று சித்தரித்துள்ளனர்.
இவர்கள் 5 பேரும் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றமாகும். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று 3 நாட்களுக்கு முன்பே நான் கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால், இன்று வரை அவர்களை கைது செய்யாமல் தமிழக அரசு இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொன்ன வைகோவை கைது செய்ய வேண்டும் என்று பேசினேன். அப்போது முதல்வர் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தோம்.
உடனே ஆற்காடு வீராசாமி போன்ற அமைச்சர்கள் எங்களிடம் வந்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறியதையடுத்து சபைக்கு வந்தோம்.
அப்போது, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொன்ன முதல்வர். சட்டத்தை கடமையாற்ற அனுமதிக்காமல் விட்டு விட்டார்.
பின்னர், சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன், விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதையும் சுட்டிக்காட்டினேன் சட்டமன்றத்தில் பேசினேன்.
சட்டம் இதுவரை அவரை கைது செய்யாமல் விட்டு விட்டது. அதன் விளைவு இன்றைக்கு வைகோ ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று இந்திய திருநாட்டில் தனித்தமிழ்நாடு என்றும் பேசியுள்ளார்கள் என்றால் பிரிவினை வாதத்திற்கு இவர்கள் இன்று தோல் தட்டி புறப்பட்டுவிட்டார்கள். இதுபோல், பல அரசியல் கட்சிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாமக நிறுவனர் ராமதாசும் விடுதலைப்புலிகள் போராளிகள் என்று புதிதாக ஒரு அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம். ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். இதற்கு ஆதரவாக பல பேர் புறப்பட்டு வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல். மதுரையில் இரண்டு ரெயில் பெட்டிகள் எரியும் அளவுக்கு போய் இருக்கிறது. தமிழகத்தில் இனி எங்கெங்கு எது எரியும் என்று தெரியவில்லை.
வைகோ, கண்ணப்பனை கைது செய்து விட்டு சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் போன்ற வரை கைது செய்யாதது ஏன்?
திமுக கூட்டணியில் இருந்துவரும் திருமாவளவனும் இன்றுவரை கைது செய்யாதது ஏன்?
அதைவிட கொடுமை என்வென்றால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய திரைப்பட இயக்குனர்கள் நேற்று முதல்வரை சந்தித்துள்ளனர். இந்த இயக்குனர்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும் என்று தமிழக மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடுகின்ற பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிற இவர்கள் போர்க்கால அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும்.
உடனடியாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரையும் தமிழக அரசு கைது செய்து தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும்.
இன்று: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு
"தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும்"
வைகோ கைது ஜெ கருத்து இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான தேச விரோத கருத்துக்களை தெரிவித்த திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்ற தேச விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நான் வெளியிட்ட அறிக்கை முதல்-அமைச்சரை வெகுவாக தாக்கியிருக்கிறது.
அதனால்தான் திடீரென்று நடவடிக்கை எடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பனை கைது செய்திருக்கிறார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோர் பேசுவதற்கு முன்பே, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த சீமான், அமீர், பாரதிராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ராம நாராயணன் போன்றோரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவர்களை ஏன் கைது செய்யவில்லை?
அதே போன்று, 25.01.2008 அன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து திருமாவளவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? விடுதலை புலிகளுக்கான ஆயுதப் பொருட்களை கடத்திய வன்னிய அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, தேசப்பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது தற்போதைய செயல்பாடுகளில் இருந்து தெளிவாகிறது.
வைகோ கைது கலைஞர் பேட்டி
“சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது” என்று கூறியுள்ள முதலமைச்சர், அந்தக் கடமை மேலும் தொடருமா? என்று கேட்டதற்கு, “தெரியாது” என்று பதிலளித்து, சட்டத்திற்கு தான் அளித்துள்ள சுதந்திரத்தைப் பறை சாற்றியுள்ளார்.
கைது - வைகோ கருத்து
காங்கிரஸ்காரர்களை திருப்தி படுத்த என்னை கைது செய்து உள்ளார் கருணாநிதி. இதன் மூலம் மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையும் காட்டுகின்ற கருணாநிதியின் முகத்திரை கிழிந்துவிட்டது.
இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுகிறது ?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 (ஏ): பிரிவினையை தூண்டுகிற வகையில் பேசினாலோ, எழுதினாலோ, அச்சிட்டு மற்றவர்கள் பார்வைக்கு தெரியும்படி செய்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 3 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்கலாம். கடுமையான அபராதமும் விதிக்கலாம் என்கிறது சட்டம். சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967, பிரிவு 13 (1) பியின் படி சட்ட விரோத செயல்களில் பங்கேற்றாலோ, அதற்கான ஆலோசனை வழங்கினாலோ அல்லது வாதிட்டாலோ, சட்ட விரோதமாக கூடுவதற்கு தூண்டினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கும் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
கடைசி செய்தி:
மதுரையில் சுப்பிரமணிய சுவாமி அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி பேசி வருவதை கண்டித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன என்பது தான் உண்மை. வைகோ கைது அரசியலே தவிர, தேசப்பற்றுச் சார்ந்த நடவடிக்கை அல்ல.
Posted by IdlyVadai at 10/24/2008 03:30:00 PM 2 comments
Labels: அரசியல், செய்தி, செய்திவிமர்சனம்
உண்மையைச் சொல்லிவிடுகிறேன் - ஹரன்பிரசன்னா
பிரசன்னா சில உண்மைகளை சொல்லியிருக்கிறார் :-)
உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இட்லிவடை யார்யார் என்று எனக்குத் தெரியும். அதன் சுட்டி இங்கே
சரி சரி, சும்மா ஒரு காமெடி செஞ்சு பார்த்தேன். மேல படிங்க.
நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பெயரிலி, கிருபா இட்லிவடையாக இருப்பாரோ என்கிற தொனி வர எழுதியிருந்தார். என்னடா எல்லாரும் இட்லிவடை என்று பேசிக்கொள்கிறார்களே என நினைத்து, அப்போதுதான் முதன்முதலாக இட்லிவடையைப் படித்தேன். அப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது மட்டுமே இட்லிவடையை வாசித்தேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இட்லிவடையை தொடர்ச்சியாகப் படிக்கிறேன்.
இட்லிவடையின் டைமிங் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. சில சமயம் அசர வைத்திருக்கிறார். சில சமயம் இந்த டைமிங் சொதப்புவதும் உண்டு என்றாலும், பெரும்பாலும் அவரது நகைச்சுவை ரசிக்கத்தக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.
கிருபா இட்லிவடையாக இருக்குமோ என நினைத்துத்தான் நான் இட்லிவடையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வரும் அரசியல் கருத்துகளையும் கிருபா எழுதுவாரா என்கிற சந்தேகம் வர, அடுத்தடுத்து நான் இட்லிவடை என்று பலரையும் சந்தேகப்பட்டேன். என் லிஸ்ட்டில் கிருபா, பத்ரி, பாஸ்டன் பாலாஜி, தேசிகன், பாரா, ரஜினி ராம்கி எனப் பலரும் வந்து போனார்கள். இப்படி நான் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த ஒரு நேரத்தில், கிருபா என்னிடம் நாந்தான் இட்லிவடையா எனக்கேட்டுவைத்தார். அட இப்படியும் ஒரு சந்தேகம் இருக்கா என ஆச்சரியப்பட்டு போனேன். நான் யாரையெல்லாம் சந்தேகப்பட்டேனோ எல்லோரும் என்னை சந்தேகப்பட்டிருக்கிறார்கள் எனபதும் எனக்குத் தெரிந்தது. இணையத்தில் ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூட நாலு பேரிடம் உதவி கேட்கும் என்னால் இட்லிவடையை நடத்தமுடியும் என்று நிறைய பேர் நினைப்பது குறித்து எனக்கே பெருமை தாங்கவில்லை. :)
பின்பு இட்லிவடையிடம் அடிக்கடி சாட் செய்ய ஆரம்பித்தேன். சாட்டில் அவரும் நாந்தான் இட்லிவடையாக இருக்குமோ என சந்தேகப்படுவதாகக்கூறி தனது கொழுப்பைக் காண்பித்தார். இட்லிவடை பலர் சேர்ந்த குழு என்கிறார்கள். நான் சாட் செய்யும்போது பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால் எதுவுமே வெளியில் கசிந்ததில்லை. பலபேர் சேர்ந்த குழு என்றால் இது எபப்டி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஒருவேளை சாட்டில் ஒருவர் மட்டுமே வருவாரோ என்னவோ.
இட்லிவடையால் எனக்குத் தனிப்பட்ட முறையில் நேர்ந்த துன்பங்களும் அதிகம். மனுஷ்யபுத்திரன் நாந்தான் இட்லிவடையா என்று கேட்டார். அவருக்கு இணைய பதிவுகள் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் லக்கிலுக்கும் நாந்தான் இட்லிவடை என்று ஆதாரங்களே காட்டிவிட்டார். மாயவரத்தானும் நாந்தான் இட்லிவடை என்றார். அட ராமா என்று நான் அசந்தே போய்விட்டேன். எல்லாருக்கும் ஒவ்வொரு காரணம். எல்லாமே தற்செயலாக நிகழ்ந்தவை.
பேங்காக் ரமேஷ் என்கிற பெயரில் ஒரு மடல் (உளியின் ஓசை தொடர்பாக) வந்திருந்தது. அது அடுத்த நாள் இட்லிவடையில் பிரசுரமாகியிருந்தது. உடனே மாயவரத்தான் நாந்தான் இட்லிவடை என நினைத்துவிட்டார். பின்புதான் எனக்கே தெரியும், மாயவரத்தாந்தான் பேங்காக் ரமேஷ் என்று! அவரிடம் சொன்னபோது ரொம்ப கொஞ்சமாக என்னை நம்பினார்!
இட்லிவடையின் பதிவுகளுக்கு வரும் முதல் கமெண்ட் என்னுடையது என்பதால் நான் இட்லிவடையாக இருக்கலாம் என்பது லக்கிலுக்கின் முடிவு. இலைக்காரன் எஃபெக்டாக இருக்கலாம் என நினைத்து இனிமேல் விளக்கம் கொடுக்கக்கூடாது என அப்படியே விட்டுவிட்டேன்.
இப்போது அந்த சஸ்பென்ஸ் உடையப்போகிறது. அப்போது என்னைப்போய் சந்தேகப்பட்ட நண்பர்களெல்லாம் சிரித்துக்கொள்வார்கள். நினைத்துப்பார்த்தால் ஒரு ஜாலியாகத்தான் இருக்கிறது.
இட்லிவடையின் பதிவுகள் வலதுசாரித் தன்மை கொண்டவை என்கிறார்கள். இடதுசாரிகளை விமர்சித்து, அடிப்படை வாதங்களை விமர்சித்து, முற்போக்கை விமர்சித்து எழுதினால் எப்படியும் ஹிந்து ஆதரவு முத்திரை வந்துவிடும். இட்லிவடைக்கும் அதே முத்திரைதான் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழ் வலைப்பதிவில் இட்லிவடை செய்திருக்கும் பங்கு மிகவும் முக்கியமானது. முற்போக்கு என்கிற முத்திரைக்காக எழுதாமல், இணைய வாழ் இலங்கைப் பதிவர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக போலியாக எழுதாமல் மனதில் பட்டதை எழுதியதற்காக இட்லிவடை என்றும் பாராட்டிற்குரியது.
இட்லிவடை யாரென்று வெளியில் தெரிந்துவிட்டால், அதன்பின்பு இட்லிவடையை மூடிவிடுவதே நல்லது. அப்போது இந்த தளம் வெளிக்கொண்டுவரும் களம் இல்லாமல் போகும். இது ஒரு பெரிய இழப்பே. ஆனாலும் இட்லிவடையில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை நானும் அறிய ஆவலாக இருப்பதால் சீக்கிரம் அவர்களின் புகைப்படத்தை வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்.
ஐந்து வருடங்களைச் சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துகள்.
நன்றி,
ஹரன்பிரசன்னா
(இட்லிவடையை புகழ்ந்து எழுதவேண்டிய என் தலைஎழுத்தை நொந்துகொண்டே இதை அனுப்புகிறேன்.)
பிரசன்னா நீங்க இவ்வளவு அப்பாவியா ?
மேலே இப்படி எழுதியிருக்கீங்ககிருபா இட்லிவடையாக இருக்குமோ என நினைத்துத்தான் நான் இட்லிவடையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வரும் அரசியல் கருத்துகளையும் கிருபா எழுதுவாரா என்கிற சந்தேகம் வர, அடுத்தடுத்து நான் இட்லிவடை என்று பலரையும் சந்தேகப்பட்டேன்.
பத்ரி பதிவில் கிருபாவின் கமெண்டை பாருங்க இங்கே இவருக்கா அரசியல் தெரியாது ?
Posted by IdlyVadai at 10/24/2008 02:32:00 PM 3 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
மின் சிக்கன கொள்கை வகுக்கத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது - செய்தி
ஆற்காடு வீராசாமி என்ற பெயரை வீராஸ்வாமி என்று மாற்றியதால் தான் இந்த மாதிரி பவர் கட் பிரச்சனை எல்லாம் இவருக்கு வருது என்பது என் கருத்து.
தமிழநாட்டில் பவர் கட் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை சைடு பாரில் - பவர் கட் ஜோக்ஸ் ஆரம்பித்துள்ளேன்.
ஆற்காட்டார் மனசு வைத்தால் தான் அதை நிறுத்த முடியும் :-)
Posted by IdlyVadai at 10/24/2008 02:09:00 PM 0 comments
இட்லி வடைன்னா யாரு? - ஐகாரஸ் பிரகாஷ்
ஐகாரஸ் யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும் அது பிரகாஷ் தான் என்று.
சில வருடங்களுக்கு முன்பு இவர் பேரை கேட்ட போது அட இது என்ன புதுமையான பேரா இருக்கே என்று கூகிளில் தேடினேன்.
எனக்கு தெரிந்து ஐகாரஸ் என்ற பெயர் சென்னையில் இரண்டு இடத்தில் இருக்கிறது ஒன்று - நம்ம ஐகாரஸ் பிரகாஷ் இன்னொன்று கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சைடில் ( கலைஞர் டிவி எதிர் புறம் ) மேனகா கார்ட்ஸ் இருக்கும் அங்கே ஒரு போர்டில் ஐகாரஸ் என்று எழுதியிருக்கும். ( பிரகாஷ் தான் இந்த போர்டை வைத்தாரா என்றூ தெரியாது )
இட்லி வடைன்னா யாரு?
இப்பவெல்லாம் பரவாயில்லை, ரெண்டல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு, நீங்கதானே இட்லிவடை என்று முகத்துக்கு நேராகவே கேட்டவர்கள் அனேகம் பேர். இல்லை என்று சொல்லி போரடித்துப் போய், ஒரு ஜாலிக்காக, இட்லிவடை நானாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று பூடகமாகப் பேசிக் குழப்பி ( இப்ப, தலைவர், அர்சியலுக்கு வந்தாலும் தடுக்க முடியாது, வராட்டியும் பிடிக்க முடியாதுன்னு, பேரிக்கால உக்காந்துகினு ஸ்டண்ட் அடிக்கிறார் இல்லையா, அது போல ), விடுவதுண்டு. கடந்த ஒரு வருடமாக இந்த டார்ச்சர் இல்லை. எனக்குத் திருமணமாகி சோபனராத்திரி கொண்டாடின அன்றிரவு கூட, இட்லி வடைப் பதிவுகள் அப்லோட் ஆகிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த லாஜிக்கை கப்பென்று பிடித்துக் கொண்டவர்கள், 'ஓ அவனா நீய்யி?' என்று இப்போதெல்லாம் கேட்பதில்லை.
இட்லிவடையின் பதிவுகளை, அது துவங்கிய நாளன்றே படிக்கத் துவங்கியது நினைவில் இருக்கிறது. தொட்டுத் தொடைச்சுப் பார்த்தால், இருந்ததே,40 சொச்சம் பதிவுகள் தான். எல்லோரும் புனிதர்களாக இருந்த காலத்தில், மசாலாவுக்கு, அப்போது வேறு வழி இல்லை. அதே சீசனில் தான், பெயரிலி, ரமணீதரன் என்ற பெயரில் பட்டயைக் கிளப்பிக் கொண்டிருந்தார். என்றாலும், அவர் பதிவுகளில், தான் யாரென்ற தடயத்தை விட்டுச் செல்வார் ( நான் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்). பெயரில் என்பது அவரா இவரா என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், தான் யார் என்பதை, புகைப்படத்துடன் பிரசுரம் செய்து, பின்னர் அந்த புனைப்பெயருடனேயே பதிவுலகில் தொடர்ந்தார்.
நன்கு அறியப்பட்ட ஒருவர், ஒரு புனைப்பெயரில் எழுதும் பொழுது, தான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளும் உந்துதல் இருக்கும். முகமூடி போட்டுக் கொண்டு எழுதியவர்களுக்கு இந்த உளவியல் புரியும். :-)புனைப்பெயருக்குள் இருக்கும் பிரபலம் யார் என்ற விவாதங்கள் கிளம்பும் பொழுது, அந்த உந்துதல் அதிகரிக்கும். ஒரு நாளில் அதுவாகவே வெடித்து விடும். ஆனால் இந்த மாதிரி டெம்ப்ட் ஆகாமல், ஒரு மர்மயோகி போல, ச்சே... கர்மயோகி போல, என் பணி செய்திகள் கொடுப்பதே என்று இருக்கும் இட்லிவடையின் temperament அசாத்தியமானது. ஹாட்ஸ் ஆஃப். ( இட்லி வடையின் நிசப்பெயர், வெங்கடாசலம் அல்லது குப்புசாமி என்று இருந்தால், எனக்கு ஆச்சர்யம் ஏற்படாது )
தமிழகத்தில் இருக்கும் பல லட்சக்கணக்கான அரசியல் பாமரர்கள் போல, நானும், ' மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக' என்ற நிலைப்பாடு கொண்டவனாதலால், இட்லிவடையின், அரசியல் inclination, எனக்கு அத்தனை உவப்பானதல்ல. பெரும்பான்மையான அரசியல் செய்திகளை சாய்ஸில் விட்டு விட்டு, அது தவிர்த்த, சினிமா வம்பு, இலக்கிய சர்ச்சை, விவகாரமான பேட்டிகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றைத்தான் விரும்பிப் படிப்பதுண்டு.
தமிழகத்தின் அரசியல் ஆர்வம் அபாரமானது. கலை, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு ஏதும் இல்லாமலிருப்பவர்கள் கூட, அரசியல் பேச்சுக்களில், தீவிரமாகக் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அனேகமாக அனைவருக்குமே ( நல்ல துட்டு சம்பாதித்துச் செட்டில் ஆகி, எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன எனும் விட்டேத்திகள் மற்றும் பாலிடிக்ஸ்? யக்.. இட் சக்ஸ் மேன் என்று பீட்டர் விடும் சினிக்குகள் தவிர்த்து ) ஏதேனும் அரசியல் அபிப்ராயம் இருக்கிறது. உற்சாகமாகப் பேசுகிறார்கள், தேடித்தேடி தகவல்களைப் படித்து விட்டு, மணிக்கணக்காக விவாதிக்கிறார்கள், ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மென்னியைப் பிடிக்கிறார்கள், வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அமைதியாக இருந்துவிட்டு, ஓட்டுச்சாவடியில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை டிப்பாசிட் இழக்க வைக்கிறார்கள், தொங்கு சட்டசபை எல்லாம் அமையவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தமிழனின் இந்தக் குணம் தான், பெரும்பான்மையாக அரசியல் மட்டுமே பேசும் இட்லி வடையின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம்.
இட்லிவடையின் ஐந்தாண்டுகளில் நான், அத்தளத்துக்கு அடிக்கடிச் சென்று வாசித்தது, தமிழகத்தின் பொதுத் தேர்தலின் பொழுதுதான். அந்த உழைப்பு, அரசியல் ஆர்வமுள்ள புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எத்தனை தூரம் உதவியாக இருந்தது என்று நண்பர்கள் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பொதுவாக வலைப்பதிவுகளில் ஆர்வமில்லாத என் நண்பர்கள் சிலர் கூட, இட்லிவடையை தொடர்ந்து வாசிப்பதை அறிவேன்.
விருந்தினர் பதிவு எழுதிப் பழக்கமில்லைங்கறதாலே, எப்படி முடிக்கிறதுன்னு தெரியலை.
என்னதான் இருந்தாலும், அஞ்சு வருஷம் என்பது அபார சாதனை. தொடர்ந்து சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்.
பிரகாஷ்
கொசுறு: Icarus is a very rare male first name and is not used as a surname (source: 1990 U.S. Census).
நன்றி very rare male - பிரகாஷ் :-)
Posted by IdlyVadai at 10/24/2008 12:30:00 PM 5 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
கொழுப்பை குறைத்துக்கொள்ளுங்கள் இட்லிவடை -ஜெயஸ்ரீ
நீண்ட இடைவெளிக்கு பிறகு வலையுலக ஆஸ்தான சமையல் மாமி அக்கா இட்லிவடை ஐந்து ஆண்டு ஸ்பெஷலில் பதிவு எழுதியுள்ளார். என்ன எழுதுவார் வழக்கம் போல் சமையல் குறிப்பு தான் :-) - நன்றி ஜெயஸ்ரீ மேடம்...
'கொழு(ப்பெடு)த்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி. கொள்ளை உணவில் சேர்ப்பதால் உடல் இளைக்கும். (குதிரை மட்டும் கனைக்கும்) கொள்ளைப் போலவே அல்லது அதைவிட அதிகமாக இஞ்சியே உடலின் கொழுப்பைக் குறைப்பதில் மிக முக்கிய உணவுப் பொருளாகும். அதனால்தான் கவிப்பேரரசர் கூட 'இஞ்சி இடுப்பழகி..' என்று பாடினார். எனவே இட்லிவடை தன் அன்றாட உணவில் இந்த கொள்ளு, இஞ்சி உணவுகளை தயாரித்து உண்டு, நாளடைவில் கொழுப்பைக் குறைக்கப் பரிந்துரைக்கிறேன்.
1. கொள்ளுப் பொங்கல்
குழந்தையாக இருக்கும்போது நான் குண்டாக இருந்ததால் என் குழந்தைமை காலத்து முக்கிய உணவாக இந்தப் பொங்கலே இருந்துவந்தது. செய்வது செம சுலபமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும். என் பாட்டி ஊஞ்சலில் என்னை உட்காரவைத்து ஊர்க்கதை சொல்லி, சுற்றிச் சுற்றி வந்து ஊட்டிவிட்டதில் பாட்டி (மட்டுமே) இளைத்தாள்.
தேவையான பொருள்கள்:
அரிசி - 1 கப்
உடைத்த கொள்ளு - 1/4 கப்
நெய் - 1/4 கப்
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 1
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை
செய்முறை:
கொள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
* ரவை உப்புமா மீந்துவிட்டால் அதை கொள்ளுடன் சேர்த்து வேகவைத்து, மேற்சொன்ன முறையில் செய்து ஜெயமோகன பின்நவீனத்துவ உப்புமா ரீமிக்ஸ் ரவை பொங்கலும் செய்யலாம்.
* கொள்ளுப் பொங்கல் சாப்பிட்டும் ஏன் கொழுப்பு குறையவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இத்தனை முந்திரியும் நெய்யும் சேர்த்தால்?
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, தக்காளிக் கொத்சு, கத்திரிக்காய் புளிக் கொத்சு, சின்ன வெங்காயச் சாம்பார், கதம்பச் சாம்பார், தாளகக் குழம்பு தவிர ஓரளவு அனைத்து குழம்பு, சாம்பார்களும்... முக்கியமாக இஞ்சி சாம்பார்
2. இஞ்சி சாம்பார்:
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
இஞ்சித் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
இரண்டு கப் தண்ணீரோடு, உப்பு, மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வேக வைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சார்(சுஜாதா அல்ல) கலந்து, நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதம், தயிர் சாதம், உப்புமா, சப்பாத்தி, பொங்கல் வகைகள்... முக்கியமாக கொள்ளுப் பொங்கல்.
3. கொள்ளு அடை
டிஃபனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கவே போரடிக்கும் நேரங்களிலோ, தொடர்ந்து வேறுவேலைகள் இருக்கும்போதோ, ஐந்தே நிமிடத்தில் அடைக்கு ஊறவைத்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போகலாம். தயாரிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னால் மிக்ஸியில் அரைத்தால் போதும். பெரிய முன்னேற்பாடுகளோ, தயாரிப்பில் பெரிய நுட்பங்களோ, தவறுகளுக்கோ இடமே இல்லாதது. அடுப்பில் கல்லில் வேகக் காத்திருக்கும் நேரத்தில் கையில் புத்தகத்தோடு இருக்கலாம்; இடை இடையே சமையலறையில் வேறு சின்னச் சின்ன வேலைகளை கவனிக்கலாம்; அலட்டிக்கொள்ளாமல் டிவி பார்க்கலாம், நிதானமாக ரங்கமணியோடு சண்டை போடலாம்; எதற்குமே வாய்ப்பு இல்லை என்றால் 'இட்லிவடை' யார் என்று விறுவிறுப்பாக யோசித்துக் கொண்டே சுறுசுறுப்பாக திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக எடுக்கலாம்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு - 2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப் (விரும்பினால்)
கடலைப் பருப்பு - 1/4 கப் (விரும்பினால்)
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
செய்முறை:
கொள்ளை 4, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். விரும்பினால் பருப்புகளும் சேர்த்துக் கொள்ளலாம். கேரளாவில் இந்த அடைக்கு பருப்புகள், தேங்காய் சேர்ப்பதில்லை. தமிழனுக்கு பருப்பு இல்லை என்றால் அடை வேகாது.
கொள்ளோடு மிளகாய், காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக ரவை பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பருப்புகளை ரவை பதத்தை விடப் பெரிதாகவே இருக்குமாறு அரைத்து, கொள்ளுக் கலவையோடு கலந்துகொள்ளவும்.
தேங்காய்த் துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, மெதுவாக அழுத்தாமல் கலந்துகொள்ளவும். (பொதுவாக காய்கறிகளை, ஏதாவது கலவைகளில் சேர்க்கும்போது கையாலோ, கரண்டியாலோ அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. நறுக்கப்பட்ட காய்களிலிருந்து அதன் சார்(சுஜாதா அல்ல) வெளியேறி, மாவில் கலந்து சுவையைப் பெருமளவில் கெடுத்துவிடும்.)
கெட்டியாக அரைத்த மாவைக் கையால் உருட்டி, அடுப்பில், தோசைக் கல்லில் தட்டவேண்டும்.
சுற்றிலும் எண்ணை விட்டு, நடுவிலும் துளை செய்து எண்ணெய் விடவேண்டும்.
நிதானமான சூட்டில், நன்கு சிவப்பாக வேகும்வரை காத்திருந்து திருப்பிப் போடவும்.
மீண்டும் சுற்றிலும், நடுவிலும் எண்ணை விட்டு இந்தப் பக்கமும் சிவக்கும் வரை காத்திருக்கவும். (செமத்தியாய் போரடிக்கும். இந்த காத்திருக்கும் நேரத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்று இந்தக் குறிப்பின் முதல் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.)
பின் மொறுமொறுப்பாக மாற இரண்டு பக்கமும் இன்னும் ஒரு முறை திருப்பிப் போட்டு சுடவைத்து எடுக்கவும்.
* பெருத்த இலக்கியவாதி நண்பர் வந்தால் உடனே கொள்ளு அடைக்கு ஊறப்போட்டுவிட்டு தொடர்ந்து பேசுவேன். அவர் எப்படியும், "நான் இதெல்லாம் சாப்பிடுவதில்லை, கவிதைதான் ஆகாரம்" என்றாலும் விடுவதில்லை.
* இட்லிவடை விரும்பினால் அடை மாவை சற்று கெட்டியாக அரைத்து வடை மாதிரியும் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அடைக்கு அவியல் என்று கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. அதுவாகவே அமைந்தால் ஒழிய நான் அப்படி மெனக்கெட்டதில்லை. (பொதுவாகவே எதற்கும் நான் அதிகம் மெனக்கெடுவதில்லை என்பது வேறு விஷயம்.) அதன் பங்காளிகளான மோர்க்குழம்பு ஃபாமிலி கூட ஓக்கேதான்.
குழம்பு, சட்னி வகைகளை ஒரு பழக்கதோஷத்தில் சும்மா சொல்லிக் கொள்ளலாம்.
என்னைக் கேட்டால் எதுவும் தொட்டுக்கொள்ளாமலே சாப்பிடலாம் அல்லது மிளகாய்ப் பொடி.
கடைசி அடையின்போது அதன்மேல் தயிரும் விட்டு சாப்பிடலாம்; அதை அடுத்து ஒரு காப்பி சாப்பிடப் போவதில்லை என்ற நிலை இருந்தால்.
என் மாமனார் அடையில் ரச மண்டியை விட்டுச் சாப்பிடுவாராம். என் பெண்ணும் இப்போது அப்படியே ஊறவைத்து சாப்பிடுகிறாள். இதெல்லாம் கூடவா ஜீனிலிருந்து வரும்??
“சே, இப்படி தயிரும் ரச மண்டியும் விட்டுச் சாப்பிடுவீங்கன்னா நான் ஏன் மெனக்கெட்டு அடையை மொறுமொறுப்பாக எடுக்கணும்? பேருக்கு வேகவைச்சுப் போடறேன்!” என்று முனகிக் கொண்டே ஆனால் அடுத்த அடையை அதைவிட சூப்பர் மொறுமொறுப்பாக எடுத்துப் போடுவேன். எனக்கும்தான் பொழுதுபோக வேண்டாமா?
கடைசியாக இஞ்சித் தொக்கு நன்றாகச் சேரும். ஓவர் பாராட்டில் பித்தம் தலைக்கேறாது.
4. இஞ்சித் தொக்கு
தேவையான பொருள்கள்:
இஞ்சி - 75 கிராம் (இளசானது)
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறு துண்டு
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயம்
செய்முறை:
இஞ்சியை நன்கு கழுவி, தோல்சீவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் கொத்தமல்லி, புளி, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, இஞ்சிக் கலவையைச் சேர்த்து, நிதானமான தீயில் நன்கு சுருளக் கிளறவும்.
ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பா அல்லது பாட்டிலில் எடுத்து வைக்கவும், ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.
* ஒரு மாதம் வரை கெடாது.
* வழக்கம்போல் நான் வெல்ல டப்பா வைத்த இடத்தை மறந்துவிட்டேன்.
5. இஞ்சி லேகியம்
தேவையான பொருள்கள்:
இஞ்சி (சதைபிடிப்பானது) - 350 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
கிராம்பு - 25 கிராம்
சீரகம் - 25 கிராம்
ஏலம் - 25 கிராம்
கோஷ்டம் - 25 கிராம்
வால்மிளகு - 25 கிராம்
சாதிக்காய் - 25 கிராம்
ஜாதிபத்திரி - 25 கிராம்
பசும்பால் - 1/2 லிட்டர்
கல்கண்டு - 750 கிராம்
தேன் - 100 கிராம்
செய்முறை:
இஞ்சியை மண்போக நன்கு கழுவி, தோல்சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியும் சிறிது நெய்யில் பொன்னிறமாகப் பொரித்து ஆறியதும் தூளாக்கிக் கொள்ளவும்.
மற்ற சாமான்களையும் எண்ணெய் விடாத வெறும் வாணலியில் லேசாக வறுத்து நன்றாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
கற்கண்டையும் பொடி செய்துகொள்ளவும். காய்ச்சிய பாலில் சேர்த்து பாகுப்பதம் வரும்வரை அடுப்பில் கிளறவும்.
இஞ்சித் தூள், மசாலாப் பொடியையும் சேர்த்து லேகிய பதம் வரும்வரை நிதானமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கடைசியாக தேனையும் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
ஒரு காற்றுப் புகாத டப்பா அல்லது பாட்டிலில் எடுத்து வைத்து தினமும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டுவர வேண்டும்.
இதனுடன் ஒரு கப் பசும்பால் சாப்பிடுவது(அனுபானம்) நல்லது.
*கொழுப்பைக் குறைப்பதுடன் நரம்பு மண்டலத்தை கோட்டையாக வைத்திருப்பதும் இஞ்சி லேகியத்தின் முக்கிய குணம். நரம்பு மண்டலம் உறுதியாக இருந்தால்...
...(யாராவது பெயர்த்தாலும்) பல் விழாது.
...(வலதுசாரிப்) பார்வை கெடாது.
...(பத்திரிகைகளை மாற்றி மாற்றி காப்பி பேஸ்ட் செய்தாலும்) வார்த்தை குறழாது.. சே குழறாது
...(எந்த நாட்டு நடப்புக்கும்) அஜீரணம் ஆகாது
...
...
அடித்துப் பிடித்து ஆறாம் வருடமும் அதனைத் தொடரும் ஆண்டுகளாவது கொஞ்சம் ஆரோக்யமாக செயல்பட வாழ்த்துகள்.
பி.கு(ஜெயஸ்ரீ): இந்த இஞ்சி லேகியத்தை இஞ்சி மருந்து என்றும் இஞ்சித் தொக்கை இஞ்சி ஊறுகாய் என்றும் சொல்பவர்களை பசிக்காத எலி தின்னட்டும்.
பி.கு (இட்லிவடை): எவ்வளவு முயன்றும் குறிப்பைத் தேத்தியதுபோல் மேக்கப் போட்ட புகைப்படங்களை தயாரிக்க முடியவில்லை. படம் காட்டும் விஷயத்தில் தாளிக்கும் ஓசையை அடித்துக்கொள்ள ஆளில்லை. (திரும்ப வந்து என்னை அவர் அடிக்காமல் பாடிகார்ட் முனிதான் காக்க வேண்டும்.)
வருடாந்திரக் கொண்டாட்டத்தில் உணவுக் குறிப்பு இல்லாமல் எப்படி முழுமையாகும் என்று நினைத்து நமது வலையுலக ஆஸ்தான சமையல் மாமி அக்காவை அவருடைய நண்பர் வழியாகக் கேட்டுப் பார்த்தோம். "எங்க வீட்டு கம்ப்யூட்டர் ஆன் செய்யும் சுவிச் எங்கே இருக்கு என்று மறந்து போச்சு" என்று பட்டென சொல்லிவிட்டார். (த்சொ! த்சொ!!) உணவுக் குறிப்பு இல்லாவிட்டாலும் இட்லிவடை பற்றிய 'உயர்ந்த' கருத்து ஏதாவது இருந்தால் எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். உயர்ந்த கருத்து எதுவும் இல்லாவிட்டாலும் உலக்கையால் நாலு அடியாவது கொடுப்பார் என எதிர்ப்பார்க்க, "இட்லிவடையா, யாரது? எனக்கு யாரையும் தெரியாது" என்று பிரசன்னமாக திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருக்கு மெயில் அனுப்பினால், அட்டாச்மெண்டில் பாம் வரும் என்று நண்பர் எச்சரித்தால் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் இந்த பதிவு :-)
வெச்சிருக்கறது சமையல் குறிப்பு பதிவு. அதுக்கு இவ்ளோ பந்தா ஓவர் மேடம்!
அதற்காக அப்படியே விட்டுவிட நாம் என்ன 'வார்த்தை'யா? அவரில்லாத வெற்றிடத்தை அவரைப் போல நாமே குறிப்புகள் எழுதி (ஸ்ஸ்ஸ்... அப்பாடா... எந்தப் பதிவுக்கும் இந்த ஐந்து வருடங்களில் இவ்வளவு மெனக்கெட்டதில்லை.) நிரப்பிவிட்டோம். மக்கள்ஸ், அவருடையதாக நினைத்து படித்து (மட்டும்) பார்க்கவும். செய்துபார்த்தால் நான் பொறுப்பில்லை.
இந்தப் பதிவு பத்ரிக்கு சமர்ப்பணம் :-)
Posted by IdlyVadai at 10/24/2008 11:50:00 AM 5 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Thursday, October 23, 2008
வைகோ கைது
இந்தியாவில் தடை செய்ய�பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். இதேபோல் ம.தி.மு.க. அவைத்தலைவர் மு.கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மாலை கைது செய்யப்பட்டார்
ஏன் இந்த் கைது நாடகம் ?
'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்து ஆவேசமாக பேசினார். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் முதல் ஆளாக வந்து களத்தில் நிற்பேன், நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன். இலங்கையில் தமிழ் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் அதை தடுத்தது இந்தியாதான்
ஜெ அறிக்கைபொடா சட்டம் இல்லாத தைரியத்தில் பிரிவினை பேசுகிறார்கள், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் தேச துரோகிகள், ராமேஸ்வரத்தில் திரைப்படத்துறையினர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தனித்தமிழ்நாடு என்று துணிச்சலாக பேசியுள்ளனர். இப்போது தமிழகத்தில் எனது ஆட்சி இருந்திருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியவர்களை நிச்சயமாக கைது செய்து இருப்பேன். எனது ஆட்சியில் இதுபோல் பேசியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தேன். தற்போது பொடா இல்லாவிட்டாலும், இப்போதுள்ள சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்'
காவல்துறை தலைமை இயக்குநரின் எச்சரிக்கையை மீறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதும் முதல்வர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பை மற்ற கட்சிகள் ஆதரித்து பேசும் நிலையில் காங்கிரசும், அ.தி.மு.க.வும் மட்டுமே எதிர்க்கின்றன.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய வைகோ அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். அவரது பேச்சுக்கும் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்யவேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரது அறிக்கை வைகோவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் அ.தி.மு.க.-ம.தி.மு.க. உறவில் விரிசல் ஏற்படும்நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம் விடுதலைப்புலிகள் விஷயத்தில் காங்கிரசும்-அ.தி.மு.க.வும் ஒத்த கருத்துடன் உள்ளன. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுடன் கூட்டு சேர மாட்டோம் என்றும் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியிருக்கிறார்.
இலங்கை பிரச்சினை விசுவரூபம் எடுத்து இருப்பதால் தமிழக அரசியலிலும் அது கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.
இந்த கைது ஏன் ?
விடுதலைப் புலிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில், விடுதலை புலிகள் அமைப்பை ஆதரித்து திருமாவளவன் பேசினார். அப்போது காவல் துறை சும்மா இருந்தது.
இயக்குனர் அமீர், சீமான் பேசினிர்கள் அப்போது காவல் துறை சும்மா இருந்தது.
ராமதாஸ் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை என்று காமெடி செய்தார் அதற்கும் காவல் துறை சும்மா இருந்தது.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவுக்கு இரங்கற்பா எழுதினார் அதற்கு காவல் துறை சும்மா இருந்தது
ஆனால் இப்ப வைகோ பேசியதற்கு கைது செய்திருக்கிறது.
இப்ப வைகோ கைதுக்கு ஜெ ஒன்றும் சொல்ல முடியாது, அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றால் கூட்டணி உடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆக வைகோ கைதால் கலைஞர் ஒரு கூட்டணியை உடைக்க பார்க்கிறார். வேற எந்த காரணமும் இல்லை.
சரி மிஸ்டர் கலைஞர் ராமதாஸ், திருமாவளவன் மற்றும் பலருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?
தலைவரே தமிழ்நாட்டில் மக்களுக்கு கரண்ட் இல்லை, அதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...
Posted by IdlyVadai at 10/23/2008 04:38:00 PM 21 comments
Labels: செய்திவிமர்சனம்
இணைய உலக சூப்பர் ஸ்டார் இட்லி வடையா? - முனீஸ்வரி கடிதம்
முனீஸ்வரி வேறயாரும் இல்லை, உஷா மேடம் தான் :-)
அன்பின் இட்லி வடை,
முனீஸ்வரி எளுதி கொள்வது. (இந்த உபாய குசேலனு, நீலாம்பரி எல்லாம் நமக்கு பளக்கம் இல்லே ) பொறந்த நாளு வாழ்த்துகள் கண்ணுங்களா! நம்ம தோஸ்து ஒருத்தரு, காலங்கார்த்தால ஒரு மெயிலு போட்டு இருந்தாரு. இது மேரி, நம்ம இட்லி வடைக்கு பொறந்த நாளு., வலையுல எலக்கண படி, நாலு பேரு கிட்ட, வாள்த்து வாங்கி போட போறாரு. ஒன் மெயில் ஐடி அவுரு தெரியாதாம், ஒன்னையும் எளுத சொன்னாருக்கா, அப்படின்னாரு. அதுக்கு இன்னான்னு தொடங்கிட்டேன்.
இன்னாத்தான் காப்பி பேஸ்ட் போட்டாலும் மை டியர் பாடிகார்ட் மூனீஸ்வரன் தான் என் பேவரெட்டு. ஆனா ஒரு விஷ்யம், ஒடனே மூனீஸ்கிட்ட பதில் கேட்டு வாங்கிப் போடு அப்பதான் நல்லா இருக்கும். காப்பி, பேஸ்ட் மேட்டர் எல்லாம் என்னிய மேரி, நோகாம நோம்பு கும்பிடுவங்களுக்கு சரி, ஆனா இப்ப எல்லாம் இட்லி வடை டல் அடிக்கிறாமாத்ரி கீதே! இன்னா மேட்டரூ? மூனீஸ்க்கு எளுதர கடுதாசுக்கூட டல்லு அடிக்குது? சுள்ளுன்னு இருக்க தேவலே? எலக்கியம், எலக்கியவாதிங்க, பதிவு அரசியலு, விசயகாந்து, கனிமொளின்னு கலந்து கட்டி, நக்கலு நையாண்டின்னு அடிச்சி ஆடி எம்மா நாளு ஆச்சு?
சென்னைக்கு போற சொல்ல எல்லாம், ஆராவது நாந்தான் இட்லி வடைன்னு நீங்க நெனைக்கீறீங்களான்னு கேப்பாங்க. இதுவர மூணு பேரு கேட்டுட்டாங்க. இதுல இன்னா டமாஸ்ன்னா, அந்த மூணு பேரையும் நா இட்லி வடை லிஸ்டுல சேக்கவேயில்லே. ஒருவேள அவனுங்கதான் இட்லி வடையா? இன்னாமோ எனிக்கு எதுக்கு அது எல்லாம்? கெழக்கா இருந்தா என்ன? மேக்கா இருந்தா என்ன? படிக்க நல்லா கீது! கண்ட்ன்யூ!
பழைய கதை, டாப்பு டென் எல்லாம் நெனப்பு வந்து ரொம்ப பீலீங்கா பூட்சுபா. பழைய ஆளுங்க, எத்தினி பேரு டாடா காட்டிட்டு பூட்டாங்க? நென்ச்சா பேஜாராகீது! அது ஒரு காலம், இன்னாமா போஸ்ட் போடுவாங்க. ஹும்!
எனிக்கும் இதே மாசம்தான் பொறந்த நாளு. நுனிப்புல் ஆரம்பிச்சி, மூணு வர்சம் ஆச்சு. எனிக்கும் இதேமேரி கேக்க இஸ்டம்தான். கமலகாசன் நெனப்பு
வந்துடுச்சு. கமலு படம் ரீலீசு ஆனதும், பெர்ய மனுஷாளுங்கள இட்டாந்து, பட்த போட்டு காமிப்பாரு. அல்லாரும் இதுதா படம், இன்னாமா எடுத்து இருக்காரு. அடுத்த ஆஸ்காரூ அவுருக்குதான்னு ஒணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு போவாங்க. அப்பால படம் ஊத்திக்கும் அது வேற விஸ்யம். அது மேரி, கூப்பிட்டு கேட்டா அல்லாரும் நல்லாகீதுன்னுதான் சொல்லுவாங்க. நுனிப்புல் மேரி, இனிப்பான புல் ஒலகத்துல கெடையாதுன்னு சொல்லி வெச்சாங்கன்னா வெய்யி, படிக்கிறவங்க கமுக்கமா சிரிச்சிக்கினு போவாங்கன்னு பெய்மா கீது. இணைய சூப்பர் ஸ்டார் (புலிய) பார்த்து இன்னாத்துக்கு சூடு போட்டுக்கணும்? இன்னா நா சொல்றது? சரி சரி, வந்த எட்த்துல ஏந்சொந்தகதை எதுக்கு?
வர்ட்டா? இன்றும் போல் என்றும் வாள்க!
இப்படிக்கு,
முனீஸ்வரி
ஐயோ என்னால நம்பவே முடியலை :-)
Posted by IdlyVadai at 10/23/2008 04:30:00 PM 11 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்