பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

ஐந்து கதவுகள் திறந்திருக்கின்றன - எஸ்.வி.சேகர்

கடந்த ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த நேரம்! அந்தக் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. விறுவிறுவென தலைமைச் செயலகம் வரை போனார் சேகர். அவர் தி.மு.க.வில் சேரப்போவதாக ஒரு பரபரப்பு கபகபவென பற்றிப் பரவிய நிலையில், ``நான் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கத்தான் போனேன்'' என்று காமெடி செய்தார் அவர்.

அது போன வருடம். இப்போது இந்த வருடமும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வழக்கம்போல எஸ்.வி.சேகருக்கு அழைப்பு இல்லை. இந்த முறையும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் அழைக்கப்படாத நிலையில், அவரது அடுத்த `மூவ்' என்ன? என்ற கேள்வி கிறுகிறுவெனக் கிளம்பியுள்ளது. அண்மைக் காலமாக தி.மு.க. தலைவர்களுடன் எஸ்.வி.சேகருக்கு `நெருக்கம்' இருப்பதைப் போன்ற தோற்றம் நிலவும் நிலையில், அவர் தி.மு.க.வுக்குப் போய்விடுவாரா? என்ற சந்தேகமும் லேசாக சதிராடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சுவாமிமலைக்குக் கிளம்பத் தயாராக இருந்த எஸ்.வி.சேகரை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் நாம் சந்தித்தோம்.

`கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களுடன் மணவிழாக்களில் பங்கேற்றிருக்கிறீர்களே?' என்று முதல் கேள்வியை அவர் முன்வைத்தோம்.

``நான் கலைத்துறைக்கு வந்து 34 வருடமாகிறது. இயல்பிலேயே நான் யதார்த்தவாதி. என் 53-வது வயதில்தான் ஓர் அரசியல் கட்சியில் இணைந்தேன். ஒரு கலைஞனாக எனக்கு எல்லோரிடமும் பழக்கம் உண்டு. ஆகவே, அடிக்கடி முகமூடியை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனது தம்பி ராஜா வைத்தியநாதனின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என் தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன் அரசுத்துறை செயலர் என்பதால் முதல்வர் அந்த விழாவுக்கு வந்தார். மணமகன் வீட்டார் என்ற முறையில், மேடையிலிருந்த நான் அவரை வரவேற்றேன். இது தவறா?

நடிகர் சத்யராஜ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் அவராகவே என்னை அழைத்துப் பேசினார். தி.மு.க.வினர் வந்து விட்டார்கள் என்பதற்காக நான் என்ன மேடையை விட்டா ஓடமுடியும்? நான் என்ன அரசு விழாக்களிலா கலந்து கொண்டேன்?''

`கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உங்களை நீங்கள் முன்னிறுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே?'

``சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.''

`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?'

``அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.''

`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'

``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''

`கடந்த இரண்டு பொதுக்குழு கூட்டங்களுக்கும் நீங்கள் அழைக்கப்படவில்லை. இதற்கு சசிகலாதான் காரணம் என்கிறார்களே?'

``நான் அப்படி நினைக்கவில்லை. காரணம், நான் கட்சியில் சேர்ந்த பிறகு அவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. ஆதிராஜாராம் மா.செ.வாக இருந்தபோது இருந்த அணுகுமுறை வேறு. இப்போது இருப்பது வேறு. எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை. போஸ்டர்களிலும் என் பெயரைப் போடவில்லை. இதெல்லாம் கட்சித் தலைமைக்குத் தெரியாமலா இருக்கும்?''

`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்.....?'

``நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்' என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன'' என்று கூறி முடித்துக் கொண்டார் சேகர்.

(நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

2 Comments:

Krishnan said...

"சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.'' :-)

Anonymous said...

சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன் - எஸ்.வி.சேகர்

சங்கர்ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரை பிடித்து ஜெயிலில் வைத்தாரே - அம்மா, அதுவும் சங்கராச்சாரியார் சொன்னதால் செய்யப்பட்டதா?