பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 17, 2008

திமுகவை விட்டு தயாநிதி மாறன் நீக்கம் ?

தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்தையும், மதுரையில் மதிமுக மாநாட்டில் வைகோ பேசியதையும் நேரடியாக ஒளிபரப்பியதால் திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் அவருடைய அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான "சன்" குழுமத் தொலைக்காட்சி செய்திகளில் மாநில அரசைக் குறைகூறும் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தி.மு.க.வின் ஆதரவு தொலைக்காட்சியாக இருந்தவரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் செய்திகளை புறக்கணித்து வந்தது "சன்" தொலைக்காட்சி. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தபோது கூட, தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று வைகோ வருத்தப்படும் நிலைதான் இருந்தது.

இப்போது அவருடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.

தேனியில் செப்டம்பர் 15-ல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பேசினார். அ.தி.மு.க.வின் ஆதரவு சேனலாக உள்ள ஜெயா தொலைக்காட்சி கூட அதை நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை. சன் நியூஸ் தொலைக்காட்சி தேனி பொதுக் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தது.

அதற்கடுத்த நாள் மதுரையில் ம.தி.மு.க.வின் மண்டல மாநாடு நடந்தது. அதையும் சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது.

தி.மு.க.வின் எதிர் முகாமைச் சேர்ந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. தலைவர்களின் கூட்டங்களை இப்படி நேரடியாக ஒளிபரப்பு செய்தது தி.மு.க. தலைமைக்குக் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

செப்டம்பர் 16-ல் ரேஷனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும் சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. எல்லா தலைவர்களின் நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து, நடுநிலையோடு செயல்பட சன் நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கடந்த வாரம் தயாநிதி மாறன் தில்லி சென்று திரும்பிய பிறகுதான், தி.மு.க.வுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி, ம.தி.மு.க.வில் முக்கிய தலைவர் ஒருவருடன் தயாநிதி நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் மதிமுக மற்றும் வைகோவுக்கு முக்கியத்துவம் கிடைப்பதாகவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

மக்களவையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களே இருக்கிறது. எனவே, தயாநிதியை கட்சியைவிட்டு நீக்கினாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது என்பது திமுக தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயம்.

உடனடியாக தயாநிதியைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று தலைமைக்கு நெருக்குதல்கள் அதிகரிக்கின்றன. திருச்சியில் 21-ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா வரை முதல்வர் பொறுத்திருப்பாரா அல்லது அடுத்த ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுப்பாரா என்பதே இப்போதைய கேள்வியாகும்.