பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் சென்னையில் தானமாக வழங்கப்பட்ட ஈரல் விமானத்தில் குஜராத் பறந்தது வெற்றிகரமாக பொருத்தியதால் நோயாளி உயிர் பிழைத்தார்
பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் அடைந்ததால் அவருடைய ஈரல் தானம் வழங்கப்பட்டு விமானம் மூலம் குஜராத் எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தானம் குறித்த விழிப்புணர்வு
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதிகளின் மகன் ஹிதேந்திரன் விபத்தில் காயம் அடைந்து பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டன. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
டாக்டர் தம்பதி அசோகன்-புஷ்பாஞ்சலி ஆகியோர், தாங்க முடியாத சோகத்திலும் கூட, தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவு இன்றைக்கு பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சென்னையில் மற்றுமொரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பிரபல `கார்ட்டூனிஸ்டு' மதன், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு 2 தம்பிகள் மற்றும் 4 சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம்நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். மதனின் 2-வது தம்பி முரளி (வயது 50). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மீனா (42) என்ற மனைவியும், அர்ஜுன் (16) என்ற மகனும் உள்ளனர். அர்ஜுன் அதே பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாசரம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, முரளி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை வீட்டில் உள்ளவர்கள் நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
உடல் உறுப்புகள் தானம்
அங்கு, முரளியின் தலையை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் ரத்தம் கசிந்தது தெரியவந்தது. உடனே, அவர் தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், முரளியின் மூளை செயலிழந்துவிட்டதாக கூறினர்.
இதனால், மரணம் உறுதி செய்யப்பட்ட முரளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் முரளியின் மனைவி மீனாவிடம் இதுகுறித்து கூறப்பட்டது. அவர் கனத்த இதயத்துடன் இதற்கு ஒத்துக்கொண்டார்.
பின்னர், அவரது மகன் அர்ஜுனிடம் கேட்கப்பட்டது. உடனே, அவர் `அய்யய்யோ... எனது தந்தையின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படுமா?' என்று கதறி அழுதார். உடனே, அர்ஜுனிடம், `இல்லையப்பா... உலகத்தில் நிறைய பேர் பலவித நோய்களால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உனது தந்தையின் உறுப்புகளை தானம் கொடுத்து உதவுவதால், பலரும் உயிர் பெறுவார்கள். இதனால் பல குடும்பங்களில் மீண்டும் ஒளியேற்றப்படும்' என்று கூறப்பட்டது. அதன்பின்னர், அர்ஜுனும் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தார்.
சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள செரியன் ஆஸ்பத்திரியில் இதய நோயால் சிகிச்சை பெற்றுவரும் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஒருவருக்கு, இதயம் தேவைப்பட்டது. அதேபோல், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு சிறுநீரகம் (கிட்னி) தேவைப்பட்டது.
குஜராத்தில் ஈரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவருக்கு, அவசரமாக ஈரல் தேவைப்பட்டது. ஈரலை பொறுத்தவரை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டவுடன், 3 மணி நேரத்திற்குள் பயன்படுத்தியாக வேண்டும்.
எனவே, டாக்டர்கள் முரளியின் உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம் மற்றும் சிறுநீரகங்களை சென்னையில் உள்ளவர்களுக்கும், குஜராத்தில் உள்ளவருக்கு ஈரலை கொடுப்பதற்கும் முடிவு செய்தனர்.
சென்னையில் உள்ளவருக்கு இதயம் கொடுப்பது நடைமுறைக்கு சாத்தியம். ஆனால், குஜராத் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒருவருக்கு எப்படி ஈரலை கொண்டுபோய் பொருத்துவது என்பது குறித்து டாக்டர்கள் விவாதித்தனர். குஜராத் டாக்டர்களுடன் கலந்து பேசினார்கள். மேலும், சென்னை செரியன் ஆஸ்பத்திரி டாக்டர்களுடனும் பேசினார்கள்.
டாக்டர்கள் முடிவு
இறுதியில் அனைத்து டாக்டர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, குஜராத்திற்கு விமானம் மூலம் ஈரலை பதப்படுத்தி அனுப்ப முடிவு செய்தனர். ஆனால், தேனாம்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்லவே குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். அதன்பின்னர், அங்கு போலீஸ் சோதனையை முடித்துக்கொண்டு விமானத்திற்கு செல்லவே 30 நிமிடங்கள் ஆகும்.
எனவே, இதுகுறித்து முன்னதாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் நேரத்தில் விமான நிலையம் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், அதிகாலை நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்த டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர்.
அதையடுத்து, நேற்று காலை 5 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முரளியின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன. உடனடியாக இதயம் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு ஜெ.ஜெ.நகர் செரியன் ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக காரில் கொண்டு செல்லப்பட்டது.
[ தேந்திரனின் இதயத்தை எடுத்து சென்றது போலவே, உதவி கமிஷனர் மனேகரன், காவலர் மோகன் இருவரும் போலீஸ் காரில் தயாராக இருந்தனர். காலை 6.07 மணிக்கு இதயத்தை எடுத்துக் கொண்டு, மதுசங்கர் வெளியில் வந்தார். சரியாக 14 நிமிடத்தில் ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால்தான், இதயத்தின் பயணம் நேற்று 4 நிமிடங்கள் தாமதமானது. இதயம் கொண்டு செல்லப்பட்டதும் 48 வயதுக்காரருக்கு பொருத்தப்பட்டது.
அதே நேரத்தில், ஈரல் மற்றொரு ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு விரைவாக விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு பகுதிக்கும் டாக்டர்கள் உடன் சென்றனர்.
2 சாதனைகள்
சென்னையில் இதய நோயால் அவதிப்பட்டவருக்கு 30 நிமிடத்திற்குள் இதயம் கொண்டுபோய் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது. முரளியின் ஈரல் விமானம் மூலம் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த 2 சாதனைகளும் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் நடந்தது. இறந்த முரளியின் ரத்தவகை `ஏ' பாசிட்டிவ் ஆகும். அதேபோல், இதயம், ஈரல், சிறுநீரகம் என தேவைப்பட்ட அனைவருமே, அதே ரத்தவகையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளியின் கண்கள் இரண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறந்து பலருக்கு உயிர் கொடுத்த முரளியின் உடல் நேற்று காலை 9 மணியளவில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முரளியின் மனைவி மீனா என் கணவரை சேர்த்திருந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் தேந்திரன் இருந்தான்.
தேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தகவலை மறுநாள் தினகரன் நாளிதழில் படித்தேன். அதன் பின்னர்தான், கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். என்னுடைய கணவரின் இதயம் யாருக்கு பொருத்தப்படுகிறது என்பதை நான் கேட்க விரும்பவில்லை. அந்த இதயம் நன்றாக வாழ்ந்தால் போதும். கணவரின் கண்கள் யாருக்காவது பயன்பட்டால் போதும்.
இவ்வாறு மீனா கூறியபோது அவரால் பேச முடியாமல் கண்கலங்கினார்.
பிற்பகல் 2.30 மணியளவில் அவரது உடல் பெசன்ட்நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி மாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் கடலில் கரைக்கப்பட்டது. உடல்தான் எரிந்து கடலில் கரைந்ததே தவிர, அவரது உடல் உறுப்புகள் உயிரோடு இருந்து, இரண்டு பேருக்கு உயிர் கொடுத்துள்ளது. 2 பேருக்கு பார்வை கொடுக்க காத்திருக்கிறது.
( செய்தி: தினத்தந்தி மற்றும் தினகரன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, September 26, 2008
இன்னொரு இதயம் தானம்
Posted by IdlyVadai at 9/26/2008 01:05:00 PM
Labels: செய்தி, மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
அறிவியல் வளர்ச்சியும்,
மனிதாபிமானமும் கைகோர்த்தால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதை இந்த இரு நிகழ்ச்சிகளும்
உணர்த்துகின்றன.
இறந்து போன திரு.முரளி ஜெயா டிவியின் மார்க்கெட்டிங் பிரிவில் மேனேஜராகப் பணியாற்றி வந்தவர். மிக சுறுசுறுப்பானவர். அமைதியானவர். தொழில் திறமையுள்ளவர். முன்பு ஆனந்தவிகடன் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றியவர். ஆனால் நிறைய சிகரெட்டுகள் பிடிப்பார்.. எதனால் இப்படி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. முடிய வேண்டுமென்றிருந்தது முடிந்துவிட்டதாக நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..
நேற்று முன்தினம் ஒரு அற்புதமான தியாகச் செயல் நடந்தது. தொடர்ந்து அடுத்தத் தியாகமும் நடந்ததுள்ளது..
இந்தத் தியாகப் பணி தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.. எனக்கும் இது போல் நடந்தால் என் குடும்பத்தாரிடமும் சொல்ல முடிந்தவர்கள் சொல்லிச் செய்யுங்கள்..
நல்ல செய்தி
Salutes to their Humanism.
மெல்ல ,மெல்ல மனிதநேயத்தின் தளிர்கள் துளிர் விடுகின்றன!!...
ஏதோ இனம் புரியாத உணர்வு உள்ளுக்குள்.
ஹித்தேந்திரன் பேப்பரில் படித்தது மட்டும் ,
முரளிசாரை நன்றாக தெரியும்மிக அற்புதமான மனிதர்.
உங்களிடம் திறமை இருந்தால் அதை மெருகேற்றி உங்களை மேலே கொண்டு வந்து விடுவார்.
உதவும் மனப்பான்மைகொண்ட அவர் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதைப்போல் அவர் வாழ்வும் வரலாற்றில் !
மனிதம் மண்ணில் இன்னும் வாழ்கிறது.
அன்புடன், கி.பாலு
Well done and many more donations like this must happen in future. But, governement must think of one more angle. Even when Kidney transplant is possible there are so many illegal rackets. If these things are added (heart, liver, etc.) the human value (monetarily)is increased. so, it is responsibility of Governement to plan and prevent forceful theft of human parts because its better safe than to be sorry once some wrong thing occurs. Once more our sincere salutes for the family for their kind human gesture at time of these sorrow happenings.
நீங்க இங்க மனிதத்தன்மையப் பற்றி பேசிகிட்டு இருக்கும் இந்த சமயத்தில்.. தலை நகரத்தில் மனிததன்மையற்ற மிருகங்கள் கோழைத்தனமாக உயிர்களுடன் விளையாடிவிட்டார்களே இ.வ. இத எங்க போய் சொல்ல.. அந்த கடவுள்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.
Entirely unrelated....
Any info on the survey done by Loyola College?
இது குறித்த செய்தி தினமலரில் வந்தது. ஹிதேந்திரன் குடும்பத்தார் செய்த தானம், மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
திரு.முரளி அவர்கள் மதனின் சகோதரர் என்பது அந்த செய்தியில் சொல்லப்படவில்லை. அதே போல் ஹிதேந்திரனின் உறுப்புத் தானம் குறித்த செய்திக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் திரு.முரளி அவர்களின் விசயத்தில் அளிக்கப்படவில்லை.
இது போல் உடல் உறுப்புகளை தானமாக அளிப்பது என்பது ஒரு மகத்தான சேவை. இதை செய்ய அந்த குடும்பத்தாருக்கு மிகப் பெரிய மனது வேண்டும். ஹிதேந்திரனும் குடும்பத்தாரும், முரளி அவர்களின் குடும்பத்தாரும் தங்களது துயரை மறந்து இதை செய்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்.
Post a Comment