தினமணி - 75 வாழ்த்துகள்இன்று(11) அகவை 75-ல் அடியெடுத்து வைக்கிறது உங்கள் "தினமணி'. இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப் பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி', தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது.
"தினமணி' பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார். "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
"தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம். அன்று முதல் இன்று வரை தனது பெயருக்குத் தக்கபடி "தினமணி' செயல்பட்டு வருகிறது என்பதே, அதற்குப் பெயர் சூட்டிய வாசகர்கள் இருவருக்கும், அந்தப் பெயரைத் தேர்வு செய்த சதானந்தத்துக்கும் நாம் செய்யும் கைமாறு!
சென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெருவில் அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட தேசிய தினசரியான
"தினமணி', பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். "தினமணி' நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!' என்று குறிப்பிடப்பட்டிருந்த, இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்' என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்' என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்'' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.
இதுதான் 1934-ல் "தினமணி' நாளிதழ் பிறந்த கதை. சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி', டி.எஸ். சொக்கலிங்கத்தின் தலையங்கம் மூலம் ஒரு மாபெரும் தேசத் தொண்டாற்றியது.
சுதந்திர இந்தியாவில் "தினமணி'யின் பங்கு அதைவிட அதிகரித்தது.
கடந்த 61 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் "தினமணி' தொடர்கிறது என்றால் அதற்கு, அதன் முன்னோடிகளான சதானந்த், ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் போட்டுத் தந்த அடித்தளம் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் "தினமணி' நாளிதழைக் கருதுவதுதான் காரணம்.
(இன்று பாரதி நினைவு தினம்; சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உரையாற்றிய நாள்; தினமணி நாளிதழ் பிறந்தநாள். தினமணி நாளிதழ் தொடங்கி 74 ஆண்டு பூர்த்தியாகிவிட்டது. முதல் நாளின் முதல் பக்கத் தோற்றம் இது.)முன்னாள் ஆசிரியர்களான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் தலையங்கமும், ஏ.என். சிவராமனின் "கணக்கன்' கட்டுரைகளும், தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் பேசப்படுகிறது என்பதே, "தினமணி' ஆற்றியிருக்கும் சமுதாயப் பணிக்கு உதாரணம். "ஐராவதம்' மகாதேவன், கஸ்தூரிரங்கன், மாலன், இராம. திரு. சம்பந்தம் என்று அவர்களுக்குப் பிறகு வந்த ஆசிரியர்களும்
"தினமணி' தனது லட்சியத்திலிருந்து தடம் புரண்டுவிடாமலும், அடிப்படை நோக்கங்களிலிருந்து மாறுபடாமலும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். அகவை 75-ல் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் அவர்களது பங்களிப்பை நினைவு கூறாமல் இருப்பது சாத்தியமல்ல.
இனி, இப்போதைய காலகட்டத்திற்கு வருவோம். என்றைக்கும் இல்லாத வகையில் இந்தியா பல சோதனைகளை எதிர்கொள்ளும் நிலை. தேசிய சிந்தனை தேய்ந்து, சுயநலமும், அந்நிய மோகமும், கலாசார சீரழிவும், வீண் படாடோபங்களும், இன்றைய இளைய தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கின்றன. ஐயாயிரம் ரூபாய் வருமானத்துக்குக் கீழேயுள்ள இந்தியக் குடிமகன் வாழமுடியாது, தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிலைமை. மதவெறியும், ஜாதிப் பூசல்களும் நம்மைக் கூறு போட்டுப் பிரிக்கும் அவலம்.
வல்லரசாகிவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் அதே வேளையில், செல்லரித்துப் போய்க்கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம். "உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை; பிணிகள் பலவுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு' என்கிற பாரதியின் வார்த்தைகள் இன்று இந்தியாவிலேயே உண்மையாகிக் கொண்டிருக்கும் அவலம்.
தமிழகத்தில் தமிழில் பேசுவதுகூடக் கேவலம் என்கிற நிலை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து, அமைச்சரவையும், தேர்தலில் வேட்பாளர்களும்கூட ஜாதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டிய துர்பாக்கியம். அரசியல் என்பது ஒரு பிழைப்பு என்கிற கேவலமான கருத்து வலுப்பெற்று வரும் கொடுமை.
"தினமணி' தொடங்கியபோது அன்னிய ஏகாதிபத்திய அரசை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை என்றால், இன்று நமது ஆட்சியாளர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.
கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும் காட்சிகள் மாறுவதில்லை என்கிற நிலைமைக்கு மாற்றத்தை யார் ஏற்படுத்துவது? சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண் பாட்டையும், தமிழர்தம் தனித்துவத்தையும் யார் காப்பாற்றுவது?
இதுவும் ஒருவகையில் ஒரு சுதந்திர வேள்விதான். கிடைத்தது கைநழுவிவிடாமல் காப்பாற்றும் போராட்டம். அடிப்படை இந்தியனின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம். அந்தப் பணியில் தன்னை அகவை 75-ல் தடம் பதிக்கும் "தினமணி' அர்ப்பணித்துக் கொள்கிறது. ஆம், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் "தினமணி' பங்காற்றும். நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்கும். சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழிகோலும்.
முதல் நாள், முதல் பிரதியை வெளிக்கொணர்ந்தபோதிருந்த அதே லட்சிய வெறியுடனும், வாசகர்கள் மீதுள்ள நம்பிக்கையுடனும், "தினமணி'யின் சமுதாயப் பணி தொடரும்... நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் உங்கள் "தினமணி'யின் பயணம் தொடரும்...
வைத்தியநாதன்
ஆசிரியர்
( நன்றி: தினமணி )
வாழ்த்துகள் தினமணி!!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 13, 2008
தினமணி - 75 - வாழ்த்துகள்
Posted by IdlyVadai at 9/13/2008 08:02:00 AM
Labels: கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
Well done Dinamani.Keep it up.Dinamani is the true national tamil news paper giving only reliable and unbiased and correct information.However in recent times the articles in dinamani cursing DMK is not acceptale.Tamil Nadu is the only state in India where the standards of living of the people is more.Compare the situation in Bihar where most of the people are very poor and in deep paverty.
Congrats dinamani.
Of all the news papers in Tamil Dinamani is the only paper that accomodates all sorts of writings. It also to some extent keeps a standard and some journalistic ethics(unlike dinamalam and dinakaran). Sometimes I find with regard to srilankan issue it gives only those news given by the srilankan military. While BBC is giving both sides why is it that such a standard paper does like this? is there any hidden reason. Any way no doubt of all the papers in Tamil Dinamani is the best. I congratulate them.
அன்று தான் சூரியா ஜோ கல்யாணமும் கூட என்ற சரித்த்திர முக்கிய நிகழ்வை தாங்கள் மறந்தது ஏனோ?
Post a Comment