பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 24, 2008

சூப்பர் ஸ்டார் தகுதியை இழக்கிறாரா ரஜினி?

"யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும்... நான் குதிரை... விழுந்த வேகத்தில் எழுந்துவிடுவேன்' - ரஜினி

சூப்பர் ஸ்டார் பற்றிய சர்வே இங்கே...

இந்த வாரம் தேவி, ஜூவி மற்றும், தினமலர் கட்டுரை..


தினமலர் கட்டுரை
"சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு இப்போது மீண்டும் சோதனைக்காலம். "குசேலன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், பணத்தை திருப்பித் தர வேண்டும்' என தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியிருப்பதும், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டு தமிழர்களின் எதிரியாகிவிட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதும் தற்போது ரஜினியைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள். இந்த இரு விவகாரங்களையும் சர்ச்சையாக்கி ஆளாளுக்கு ரஜினிக்கு "அட்வைஸ்' கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.


ரஜினியைப் பொறுத்தவரை அவர் பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்கிற உயரத்தில் மீடியாக்கள் அவரை வைத்துள்ளன. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் ரஜினிக்கு கிடையாது. ஒகேனக்கல் பிரச்னைக்கான உண்ணாவிரத மேடையில், ஒவ்வொருவரும் தொடர்ந்து வெளிப்படுத்திய ஆவேசத்தின் தாக்கம் தான், "உதைக்க வேண்டும்' என்ற வார்த்தையாக ரஜினி வாயில் இருந்து வந்து விழுந்தது. பின்னாளில் அது சர்ச்சையாகவும் உருவெடுத்தது.


இந்த பிரச்னை ஓய்வதற்கு முன்பாகவே குசேலன் பட விவகாரம் கிளம்பியது. சிவாஜி படத்தை எடுத்த வினியோகஸ்தர்கள் சிலர் நஷ்டப்பட்டதாகவும், அவர்களை திருப்திபடுத்தும் வகையிலும், பாலசந்தருக்கு உதவும் வகையிலும் தான் குசேலன் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். "குசேலன் படம் என் படம் அல்ல; அது பசுபதியின் படம்' என்று பட ரிலீசுக்கு முன்பே ரஜினி வெளிப்படையாக தெரிவித்தார். குசேலன் படப்பிடிப்பு நிலையில் இருந்தபோதே, சாய்மீரா நிறுவனம் 60 கோடி ரூபாய் என விலை வைத்து படத்தை வாங்கியது. 60 நிமிடங்கள் ரஜினி தோன்றும் படத்திற்கு 60 கோடி ரூபாய் என்று கோலிவுட் வட்டாரத்தில் அப்போதே பரபரப்பு ஏற்பட்டது. குசேலனில் ரஜினி தோன்றும் காட்சிகள், குறித்த விவரம் தெரிந்திருந்தும் அதற்கு பெரிய விலை கொடுத்து வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் வாங்கினர்.


இப்போது, "குசேலன் படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை' என தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். இது ரஜினி படம் என்று சொல்லி ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு. இந்த விஷயத்தில் ரஜினியைத் தலையிடச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர் இவர்கள். தமிழ்த் திரையுலகில் வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களுமே ஒரு ஹீரோவின் தலையெழுத்தையும், சம்பளத்தையும் நிர்ணயித்து வந்துள்ளனர்.


ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற ஸ்டார்களின் படங்கள் என்றால், பூஜையின் போதே கோடிகளைக் கொட்டிக் கொடுத்து இவர்கள் வாங்குவதால் தான், ஹீரோக்களின் சம்பளம் விண்ணைத் தொட்டது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய படங்கள் வசூலைக் குவித்தபோது, அதில் ஆதாயம் அடைந்தவர்களும் இவர்களே. அதே நேரத்தில், நல்ல படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, கொள்ளை லாபம் பார்த்த வரலாறும் இவர்களுக்கு உண்டு. "வைதேகி காத்திருந்தாள்' படத்தை கெஞ்சிக் கூத்தாடி அதன் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அடிமாட்டு விலைக்கு விற்கச் செய்து ரிலீஸ் செய்தார். அந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தபோது அதன் பலன் இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ போய்ச் சேரவில்லை.


பாலாவின் இயக்கத்தில் உருவான "சேது' படம் பிரிவியூ தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடி வேதனை படைத்த படம். பிரிவியூ பார்த்தவர்கள் எல்லாம் ஒதுங்கிக்கொள்ள, அந்தப் படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, படம் ஹிட் ஆனதால் பலரும் லாபம் பார்த்தனர். ஆனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அடுத்த படம் தயாரிக்கக் கூட வழியின்றி நின்றது வரலாறு. சமீபத்திய வரவான "சென்னை -28' படத்தையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி பெருத்த லாபம் அடைந்தவர்கள் வினியோகஸ்தர்கள் தான்.


தமிழ்த் திரையுலகில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பதற்காக, முதன் முதலில் பணத்தை திருப்பிக் கொடுத்தவர் மணிரத்னம். "மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிப்பில் உருவான "இருவர்' படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முறையில், சத்தமில்லாமல் பலருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் மணிரத்னம். அடுத்ததாய், "பாபா' படத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி பணத்தை திரும்பக் கொடுத்த சம்பவம் நடந்தது.


ரஜினியின் இந்த பெருந்தன்மையின் விளைவு தான் இப்போது குசேலனுக்காக, போர்க்குரல் எழுப்பும் சூழ்நிலை யை உருவாக்கித் தந்துள்ளது. திருட்டு "விசிடி' உச்சத்தில் இருக்கும் காலத்திலும் தியேட்டர்கள் வாழ்ந்ததற்கு ரஜினி நடித்த படங்கள் தான் காரணம் என்பதை மறந்துவிட்டு, இன்று ரஜினியின் இமேஜை சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர் திரையுலகின் ஒரு பகுதியினர்.


"யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும்... நான் குதிரை... விழுந்த வேகத்தில் எழுந்துவிடுவேன்' என்று பாபா பட தோல்விக்கு பின் ரஜினி ஒரு விழாவில் பேசினார். சந்திரமுகி மூலம் அதை நிரூபித்தும் காட்டினார். ரஜினியைச் சுற்றியுள்ள தற்போதைய சர்ச்சைகளில் இருந்தும் அவர் மீண்டும் வெளியே வந்து, நடிப்பால் மட்டுமல்ல; குணத்தாலும் நிரந்தர சூப்பர் ஸ்டார் தான் தான் என்பதை விரைவில் நிரூபிப்பார் என்று உறுதியாக நம்புகின்றனர் ரஜினி ரசிகர்கள்..தேவி கட்டுரை
Page3 - http://i36.tinypic.com/10ngr6a.jpg
Page4 - http://i36.tinypic.com/v4qadf.jpg
Page5 - http://i35.tinypic.com/29logmp.jpg
ஜூவி கட்டுரை
'இந்த அசோக்குமாரே நடிச்சிருந்தாக்கூட மக்க ளுக்குப் பிடிக்கலைன்னா பார்க்க மாட்டாங்க!'' -இது 'குசேலன்' படத்தில் ரஜினி ஓரிடத்தில் பேசும் ஒரு வசனம்.

''நான் நடிச்ச 'குசேலன்' படத்தை மொத்தமா வாங்கியிருக்கிற சாய்மீரா நிறுவனத்தைவிட எனக்குத் தான் ரொம்ப டென்ஷனா இருக்கு..!'' -இது 'குசேலன்' கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது.

இப்போது மறுபடி திரும்பிப் பார்க்க வைக்கிற வசனங்களாகி விட்டன இவை!

வழக்கமாக, தமிழ்நாட்டில் ரஜினி படம் வெளியாகும் நாளை அவருடைய ரசிகர்கள் தீபாவளி, பொங்கல் போல் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், 'குசேலன்' மட்டும் 'போகி' ஆகி, ரசிகர்களின் உற்சாகத்தைப் போக் கடித்துவிட்டது!

ரஜினி படத்தின் க்ளிப் பிங்கைக் காட்டினாலே, உற்சாகக் கடலில் நீந்தி, முழு ஆதரவு கொடுத்து அந்தப் படத்தை வெற்றியடையச் செய்யும் ரசிகர்கள், 'குசேல'னில் ரஜினி இளமை துள்ளக் காட்சியளித்தபோதும் ஏனோ ரசிக்கவில்லை..!

தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் 'கையைச் சுட்டுக் கொண்டோம்' என்று சொல்லி, சில கோரிக்கைகளை முன்வைத்து, படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்துக்கும் செவன் ஆர்ட்ஸ் ஃபிலிம்ஸ§க்கும் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நம்மிடம், ''தியேட்டர் வெச்சிருக்குறவங்களுக்கு இந்த வருஷம் சோதனை காலம். முதல்ல 'பீமா' அப்புறம் 'குருவி', 'குசேலன்', 'சத்யம்' இப்படி வரிசையா படங்களைத் திரையிட்டுச் சூடு பட்டோம்! 'தசாவதாரம்' படத்துலதான் போட்ட காசைத் திருப்பி எடுத்தோம். ரஜினி, படம் பூரா நடிக்கிறார்ங்கிற நம்பிக்கையிலதான் அறுபது கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆச்சு. 'குசேலன்' கேசட் ஃபங்ஷன்ல ரஜினியை வச்சிக்கிட்டே டைரக்டர் பி.வாசு, 'குசேலன் சூப்பர் ஸ்டாரோட படம்'னு பேசினார். அப்பவே ரஜினி அதை மறுத்துப் பேசியிருக்கலாமே... ஏன் மௌனமா இருந்தார்? 20 சதவிகிதம், 30 சதவிகிதம் நஷ்டம்னா பேசாமப் போயிருப்போம். 80 சதவிகிதம், 90 சதவிகிதம் நஷ்டத்தை எப்படித் தாங்கிக்க முடியும்? இதுக்கு முந்தி இதே ரஜினியின் படங்கள் மூலமா லாபம் சம்பாதிக்கலை யான்னு சிலர் கேக்கு றாங்க. எல்லாரும் ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும்... பொதுவா எந்தப் புதுப்படம் ரிலீஸ் ஆனாலும், அதை வெளியிடுற விநியோகஸ்தர்களுக்கோ தயாரிப்பாளர்களுக்கோ 65 சதவிகிதம் கிடைக்கும். தியேட்டர்காரங்களுக்கு வெறும் 35 சதவிகிதம்தான். அதிலும் ரஜினி படம்னா அவங்களுக்கு 70 சதவிகிதம், எங்களுக்கு 30 சதவிகிதம்தான். சம்பாதிச்ச அந்தக் காசு கரன்ட் செலவு, ரசிகர்கள் உடைச்ச ஸீட்களை மாத்துற செலவுக்கே சரியா போயிடும்.

எங்க ஊரு ஜனங்க ரஜினி படத்தை ரிலீஸ் பண்ணினா, அந்த தியேட்டரை உசரத்துல நிறுத்தி வச்சுப் பார்ப்பாங்க. அந்த கௌரவத்துக்காகத்தான் ரஜினி படத்தை ரிலீஸ் பண்றோம். பலரும் நினைக்கிற மாதிரி கோடிகோடியாப் பணத்தைக் கோணிப் பையில கட்டிக்கிட்டுப் போகலை'' என்றார் சூடாக.

பெரும் விலைக்குக் 'குசேலன்' படத்தை வாங்கிய பிரமீட் சாய்மீரா நிறுவனத்தின் துணைத்தலைவர் சிவஸ்ரீ சீனிவாசனிடம் பேசினோம். ''நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வழக்கமாகத் தமிழ் திரைப்பட உலகில் பிரச்னை ஏற்படும்போது அதை எந்த வகையில் தீர்த்து வைப்பார்களோ அந்த விதமாக 'குசேலன்' பட விஷயத்திலும் பேசிவருகிறோம். எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துப் பொதுமக்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை'' என்றார்.

ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும், 'பி.வாசுவின் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டோம்' என்று சொல்வது குறித்து அவரிடமே பேசினோம்.

''நான் யாருக்கும் தப்பான வாக்குறுதிகளைத் தரலை. ஆரம்பத்திலிருந்தே என்னைப் பேட்டி கண்ட எல்லா சேனல்களிலும் 'ரஜினி சார் கெஸ்ட் ரோல்தான் செய்கிறார்' என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறேன். ஒரிஜினலான 'கத பறையும் போள்' படத்தில் மம்மூட்டி 15 நிமிஷம் மட்டும்தான் வந்து போவார். ஆனால், 'குசேலன் படத்தில் ரஜினி சார் நிறைய வரவேண்டும். அப்போதுதான் அவரது ரசிகர்களைத் திருப்திபடுத்தமுடியும்' என்பதற்காக அவர் படத்தில் 55 நிமிஷம் வரும்படி காட்சிகளை அமைத்தேன்.

ஏதோ தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து எல்லாப் படங்களும் ஓஹோ வென்று ஓடிவிடுவதைப் போலவும், சரித்திரத்திலேயே முதல்முறையாக 'குசேலன்'தான் தோல்வியடைந்ததைப் போலவும் மீடியாக்கள் எல்லாம் தோற்றம் ஏற்படுத்துவது எதற்காக, யாருக்காக? 'குசேலன்' அந்த ஊரில் அப்படியாச்சு, இந்த ஊரில் இப்படியாச்சு என்று ஒட்டுமொத்தமாக வரிந்து கட்டிக்கொண்டு பரபரப்பு செய்ய வேண்டிய அவசியம்தான் என்ன?

அட, என்னைப் பத்திக்கூட பேசுங்க. ஆனா, ரஜினி சார் ரொம்ப நல்ல மனுஷர். அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்து, உயரமான இடத்துல உட்காரவச்சு அழகு பார்த்த அதே தமிழ்நாட்டுல அவருக்கு எதிர்ப்பா இப்படி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கவேண்டிய அவசியம்தான் என்ன?! எனக்கு இது புரியாத புதிரா இருக்கு!

சரி, இவ்ளவு நஷ்டமாச்சுன்னு பட்டியல் போட்டுக் காட்டறாங்களே... 'சந்திரமுகி' படத்துல கொள்ளைக் கொள்ளையா லாபம் பார்த்த கணக்கை எடுத்து வெளியே வச்சுப் பேசச் சொல்லுங்க, பார்ப்போம்!'' என்று தணியாத ஆவேசத்தோடு கேட்டு முடித்தார் இயக்குநர் பி.வாசு.

எது எப்படியோ... 'நாலைந்து பேரை குபேரனாக்கி, திரையிட்டவர்களை மட்டும் குசேலனாக்கிவிட்டது இந்தப் படம்' என்ற புகார் அப்படியே சூடாகத்தான் இருக்கிறது.


நிஜ குசேலர்கள்!

'' 'குசேலன்' படத்தால் எங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம். அதனால், சாய்மீரா நிறுவன வாசலில் சாகும்வரை உண்னாவிரதம் இருக்கப் போகிறோம்'' என்று அறிவித்திருக்கிறார்கள், ஆந்திர திரைப்பட விநியோகஸ்தர்கள். 'குசேலன்' படப்பெட்டிகளை சென்னைக்கு ரயிலேற்றிவிட்டு, ரஜினியின் கடைக்கண் பார்வைக் காகத் தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் இவர்களின் சார்பாக, 'ராயலசீமா ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேஷன்' சங்கத்தைச் சேர்ந்த சசிதர்பாபு நம்மிடம் பேசினார்-

''தமிழில் எடுத்ததைப் போலவே தெலுங்கிலும் தனிப் படமாகவே 'குசேல'னை எடுத்தார்கள். நடிகர் பசுபதி நடித்த பாத்திரத்தில் ஜகபதிபாபு தெலுங்கில் நடித்தார். அதனை அஸ்வின் தத் தயாரித்தார். பிரமிட் சாய்மீரா நிறுவனம், அஸ்வின் தத்திடமிருந்து படத்தை வாங்கி, எங்களுக்கு விற்றது. நான் ராயலசீமா ஏரியாவை 2 கோடியே 65 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். இதுவரை 65 லட்சம்தான் கலெக்ஷன் ஆகியிருக்கு. குண்டூர் ஏரியாவை 1 கோடியே 20 லட்சத்துக்கு வாங்கியவருக்கு 30 லட்சமும் இதே விலைக்கு வாங்கிய விசாகப்பட்டினம் ஏரியாவில் 20 லட்சமும்தான் கிடைத்திருக்கிறது. 80 லட்சம் கொடுத்து வாங்கிய மேற்கு ஆந்திராவில் 60 லட்சம் நஷ்டமாகியிருக்கிறது'' என்று அடுக்கியவர்,

''படத்தில் ரஜினி என்கிற மந்திரம் இருப்பதால்தான் 'குசேல'னை இவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம். ரிலீஸ் தேதிக்கு முன்பு ஒரு பிட் ரீலைக்கூட எங்களுக்குக் காட்டவில்லை. அதனால், படம் எப்படிப் போகும் என்பதை முன்கூட்டியே எங்களால் கணிக்க முடியவில்லை. மொத்தத்தில், எங்கள் தலையில் இடி விழுந்திருக்கிறது. இதனை அறிந்து, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பத்து கோடி கொடுத்திருப்பதாகச் செய்தி வெளியானது. அதைப் பார்த்துவிட்டு சென்னை வந்து சாய்மீரா நிறுவனத்திடம் எங்கள் துயரங்களைச் சொன்னோம். அவர்கள், 'அப்படியெல்லாம் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை' என்றார்கள். ரஜினியாவது எங்கள் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் எங்கள் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக பிச்சையாக நினைத்துப் பணம் கொடுத்தாலும், பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கோம்'' என்றார் சோகமாக!

10 Comments:

Anonymous said...

இட்லி வடையாரே! ரஜினி செய்திக்கு ஒரு முற்றும் போடுங்க...

நம்ம மூத்த தலைவர் கருணாநிதியும், சிதம்பரம் அவர்களும் பா மா. க வாய் கூட்டணியில் சேருமாறு கேட்கப்போகிரார்கலம். அதைப்பற்றி விரிவான செய்தி போடுங்க...

பாவம் நம்ம பெருசு...

நல்லதந்தி said...

சூப்பர்ஸ்டார் என்பது பட்டமல்ல!.ஜனங்களாக ரஜினிக்குச் சூட்டிய பெயர்.அதை இழக்கச் செய்ய எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாது!.
நல்லவங்களுக்கு கடவுள் நிறைய சோதனைக் கொடுப்பான் ஆனா கைவிட்டு விடமாட்டான்....மாணிக்பாட்சா

Anonymous said...

குசேலன் படம் ரீலிஸ் ஆன தியேட்டர்களில் முதல் வாரத்தில் கிடைத்த வசூல் எவ்வளவு? நிருபர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அத படிச்சாலே ஒரு முடிவுக்கு வந்துடலாம்.

Anonymous said...

``ஆமாம். மற்றொரு சேதியைக் கேள். உச்ச நடிகர் என்று பெயரெடுத்தவர், கைவசம் உள்ள அனிமேஷன் மற்றும் ரோபோ படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டே ஒதுங்கும் முடிவில் இருக்கிறாராம்.''

``நிஜமாகவா?''

``எனக்கு வரும் தகவல்கள் அப்படித்தான் கூறுகின்றன. நட்புக்கான படமும் வசூல் ரீதியாகப் பாதிப்படைந்துள்ள நிலையில்தான் இப்படியொருசிந்தனை வந்துள்ளதாம். மீண்டும் மீண்டும் கொடுத்த `வாய்ஸ்' காரணமாக இனி அரசியலும் சரிப்பட்டு வராது என்று அவருக்கு நெருக்கமானநண்பர்கள் எடுத்துச் சொன்னபோதுதான் இந்த முடிவைச் சொன்னாராம் அவர்.''

``அதிருக்கட்டும். குசேலன் திருட்டு டி.வி.டி. எல்லாம் வந்துவிட்டதாமே.''

``ஆமாம். படம் வெளியான மூன்றாம் நாளே வந்துவிட்டதாம். எப்போதும் இதுபோல ரஜினி புதுப்பட டி.வி.டி.கள் வந்தால் போலீஸில் போட்டுக் கொடுக்கும் ரசிகர்கள் இம்முறை அமைதியாக இருக்கிறார்களாம். காரணம் கேட்டால், நிஜமான பஞ்ச் டயலாக்தான் காரணம் என்று சிம்பிளாகச் சொல்லி முடிக்கிறார்களாம்.''

17.08.08 வம்பானந்தா

Anonymous said...

ஒரே ஒரு கேள்விதான்,

வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் 60 வயது ஓய்வு பெறும் வயது.

ஆனால் இந்த "சீனியர்சிட்டிசன்" நடிகர்கள் எல்லாம் எப்போதுதான் ஒய்வு பெறுவார்கள்.

சீனியர் சிட்டிசன்களை பற்றியே செய்தி போடும் சீனியர் சிட்டிசன் இட்லி வடை! வாழ்க !

Anonymous said...

அடுத்த "பின்னூட்ட சண்டை ஆரம்பம்."

" டோரா & புஜ்ஜி வாழ்க !!"

Anonymous said...

என்னபா, எப்பொழுது பார்த்தாலும் அந்த "ரசினி" செய்தியே போஸ்ட் செய்கிறாய்?

"இப்ப வருகிறேன்", அப்ப வருகிறேன் என்று யாரையும்(!)ஏமாற்றாமல் மக்கள் பணியாற்றி வரும் "மண்ணின் மைந்தன்", வருங்கால முதலமைச்சர், "அரசியல் சூப்பர் ஸ்டார்" கேப்டனின் பிறந்த நாள் செய்திகளைப் போடாத இ.வ வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

இட்லிவடை :


தமிழ்மணத்தில் மீண்டும் இட்லிவடையாரின் பதிவுகள் இடம் பெருகின்றன , என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக இட்லிவடையின் மவுசு வலையுலகில் குறைந்துவிட்டதால் இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன.

http://athisha.blogspot.com/2008/08/blog-post_21.html

enna matteru? raasiyaahivitteerhalaa?

just say ur HITS in ur blog & express ur hit rate.

IdlyVadai said...

//இட்லிவடை :


தமிழ்மணத்தில் மீண்டும் இட்லிவடையாரின் பதிவுகள் இடம் பெருகின்றன , என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக இட்லிவடையின் மவுசு வலையுலகில் குறைந்துவிட்டதால் இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன.

http://athisha.blogspot.com/2008/08/blog-post_21.html

enna matteru? raasiyaahivitteerhalaa?

just say ur HITS in ur blog & express ur hit rate//

இந்த நியூஸ் தந்த உங்களுக்கு நன்றி. ( இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் :-)

நான் யாருடனும் சண்டை போடவில்லை ராசியாவதற்கு

ஹிட் ரெட் எல்லாம் நானே பார்ப்பதில்லை, alexa.com போய் நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Anonymous said...

MANASU neenga solla varuvathu enna. Padam Passa Faila? Kulappama Irukku.