பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 27, 2008

விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்

இன்றைய முரசொலி, பழ.நெடுமாரன் ஸ்பெஷல் அவருக்காக ஒரு கவிதை மற்றும் இரண்டு கட்டுரை - குளிப்பாட்டி-நடுவீட்டில் விட்டாலும் என்று கட்டுரை முடிகிறது.

கட்டுரை 1 - விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்.
கட்டுரை 2 - ஒரு நரைமயிரின் மகத்துவமும் மகாத்மியமும்!

இந்த இரண்டு கட்டுரையும் புரிய வேண்டும் என்றால் இந்த பதிவை படிக்க வேண்டும்.

“விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்”அறிவுரை வழங்குவது என்பது பொதுவாக நல்ல குணம்தான்.

ஆனால், முதலாவதாக, அப்படி அறிவுரை வழங்குகிறவர்களுக்கு சில தகுதிகள் வேண்டும்.


இரண்டாவதாக, அப்படிப்பட்ட அறிவுரையை யாருக்கு வழங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.அறிவே இல்லாதவர்கள் அறிவுரை வழங்க முற்படுவதும், அறிவின் சிகரமாக திகழ்கின்றவர் களை நோக்கி அறிவே இல்லாதவர்கள் அறிவுரை வழங்குவதும் முட்டாள்தனமாகும்.


தெரிந்தோ, தெரியாமலோ இந்த இரண்டு குற்றங்களுக்கும் ஆட்பட்டு இருக்கிறார், பழ.நெடுமாறன் என்பவர்.

பழ.நெடுமாறன், தமிழக அரசியலில் ஊசிப்போன பண்டம். அவர் எழுதிய ஒரு கட்டுரையை ‘தினமணி’ ஒரு நடுபக்கத்தில் வெளியிட்டு தன் பெருமையை குறைத்துக் கொள்ளுவதா என்பதுதான் என் கவலை.

( ஊசி போன பண்டத்துக்கு முரசொலியில் ஒரு கவிதை + 2 கட்டுரை பேஷ் பேஷ் )

கட்டுரையில்தான் என்ன அரிய பெரிய கண்டுபிடிப்பு இருக்கிறது.

இராமாயணத்தில் தசரதனின் காதோரம் ஒரு மயிர் நரைத்திருந்ததை தசரதன் கண்டுவிட்டானாம்.

அய்யோ! வயதாகிவிட்டதே என்று கூறி, இராமனுக்கு முடிசூட்ட முற்பட்டானாம்.

ஆனால் தலைவர் கலைஞர் வயதாகிவிட்ட பின்னரும், அடுத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் இருக்கிறாராம்.

எனவே, தலைவர் கலைஞர் புதிய தசரதனாம்.

இப்படி ஒரு கண்டுபிடிப்பு அவர் கட்டுரையில்.

இது கண்டுபிடிப்பல்ல; காழ்ப்பு-பொறாமை.
( நல்ல வேளை இவர் பார்ப்பனராக இல்லை, இல்லை என்றால் அவர்கள் குணம் என்று சொல்லியிருப்பார் )

அவரோடு பிறந்த நன்றிகெட்ட தன்மை.

காதோரம் மயிர் நரைத்தவர்கள் எல்லாம் இந்திய நாட்டு அரசியல் அரங்கிலிருந்தும், பதவியிலிருந்தும் இறங்கிவிட்டார்களா?

காதோரம் மயிர் நரைப்பதுதான் அரசியலில் "ரிட்டையர்மெண்டா"
( காதே இல்லாதவர்களுக்கு காதோரம் நரை எப்படி இருக்கும் )

பண்டித ஜவஹர்லால் நேருவும், பட்டேலும், மேற்கு வங்க ஜோதிபாசுவும்-ஏன் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராசரும்-பக்தவச்சலமும்-வெங்கடராமனும், மயிர் நரைக்கும் முன்பே பதவியிலிருந்து இறங்கிவிட்டவர்களா?
( என்ன ஒரே மயிரா இருக்கு )

ஏன்? நெடுமாறன் குறிப்பிட்ட இராமாயணக் காலத்து தசரதன், காதோரம் மயிர் நரைத்ததைக் கண்ட பின் வயதாகிவிட்டது இனி பதவி வேண்டாம் என்ற நல்லெண்ணத்திலா இராமனுக்கு முடிசூட்ட நினைத்தான்?

தசரதனின் சூதுமதியை "நாவலர் சோமசுந்தர பாரதியார்" தாம் எழுதிய "தசரதன் குறையும் கைகேயி நிறையும்" என்ற ஆராய்ச்சி நூலில் அற்புதமாக, ஆதாரத்தோடு படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

"தசரத சக்கரவர்த்தி கைகேயியைத்தான் விரும்பு வேட்குங்கால், தன் அயோத்தியர சாங்கத்தை அவளுக்கு சுல்கமாகத் தந்தான்"

(‘சுல்கம்’என்பது மணமகன் மணமகளுக்கு திருமணத்தின் போது தரப்படும் சீதனமாகும்)

அப்படி என்றால், அறத்தின்படியும்-சட்டத்தின்படியும்-பழைய நெறியின் படியும் அயோத்தி அரசு பரதனுக்குத்தான் உரிமை. ஆனால் பரதனுக்குரிய ராஜ்ஜியத்தை தசரதன், இராமன், மீதுள்ள பற்றால், பரதன் இல்லாத சமயம் பார்த்து இராமனுக்கு தர செய்த ஏற்பாடுதான் காதோரம் மயிர் நரைத்தது என்ற சாக்குபோக்கு!

இதை நாவலர் பாரதியார், வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சருக்கம்-4, சுலோகம் : 24-27 லிருந்து எடுத்து,

"பரதன் தேசாந்திரம் போயிருக்கிறான். என்றைக்குப் பரதன் மாமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் அபிடேகத்திற்கு தக்க காலம் என்பது என் கருத்து. அவன் பட்டணத்திற்கு திரும்ப வராதிருக்கும் வரைதான் உன் பட்டாபிடேகத்திற்கு தகுந்த காலம் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகையால், நாளையே உனக்கு இளவரசபிடேகம் செய்ய நிச்சயித்திருக்கிறேன்" என்று தசரத மன்னன் இராமனிடம் கூறினான் என்று எழுதியிருக்கிறார்.

இந்த இடத்தில் விவரமான தசரதனை விவரமில்லாத நெடுமாறன் புரிந்துகொள்ள வேண்டும்.

"இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான்."

என்று எழுதி இருக்கிற நெடுமாறன் அவர்களே!

இப்பொழுது தெரிகிறதா-தசரதனின் பதவி பற்றற்ற தன்மை?

தசரத மன்னனுக்கு இருந்த சங்கடம் தலைவர் கலைஞருக்கு இல்லை.

எனவே, அவர் எவ்வளவு காலம் பதவியில் இருப்பது என்பது அவரது விருப்பம் அல்ல. அது எங்களுடைய விருப்பம்.

இந்த விவரமெல்லாம் நெடுமாறனுக்கு தெரிய நியாயமில்லை.

காலமெல்லாம் அவர் கட்சிக்குக் கட்சி தாவுவது-உண்ட வீட்டுக்கே துரோகம் செய்து ஒரு கட்சி தொடங்குவது, அதையும் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைப்பது, எவன் வீட்டுத் திருமணமானாலும் மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு நடுத்தெருவில் மல்லுக்கு நிற்பது-இப்படியே அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கையே முரண்பாடாக அமைத்துக் கொண்ட நெடுமாறன் அவர் எழுதிய கட்டுரையில் அவர் வைத்த வாதத்தில்தான் எத்தனை முரண்பாடுகள்?

தலைவர் கலைஞர் ஏன் தசரத மன்னனைப் போல் காதோரம் மயிர் நரைத்த பின்னும் பதவியிலிருந்து விலகவில்லை என்றும் கேட்கிறார்.

தலைவர் கலைஞர் பதவியிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன் என்று சொன்னால்-

முதலமைச்சர் ஏன் அப்படி சொல்கிறார் தெரியுமா?

விலைவாசி உயர்வு, காவேரி-முல்லைப் பெரியாறு-ஈழப் பிரச்சனை-மீனவர் பிரச்சனை-கச்சத்தீவு பிரச்சனை-சேது கால்வாய் பிரச்சனை-போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை-அதனால்தான் ஓய்வுபெற விரும்புவதாக முதல்வர் கூறுகிறார் என்றும் நெடுமாறன் எழுதுகிறார்.

ஏதோ இந்த பிரச்சனை எல்லாம் கலைஞர் இந்த முறை முதல்வராக வந்த பின் முளைத்த பிரச்சினையைப் போலவும்-அதைத் தீர்க்க வழி தெரியாது கலைஞர் திண்டாடி-பதவியே வேண்டாம் என்று ஒதுங்குவது போலவும் நெடுமாறன் எழுதுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான வாதம் என்பது எவரும் புரிந்துக் கொள்ளலாம்.

இதேபோல்தான் அமைச்சர்களைப்பற்றி தலைவர் குடும்பத்தைப் பற்றி சேற்றை வாரி இறைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இருக்கிறார்.

கழகத்தில் நெடுமாறன் இருந்த காலத்திலிருந்தே தலைவர் கலைஞரை அவருக்குப் பிடிக்காது.

அண்ணாவிற்கு பிறகு தலைவர் கலைஞர் கழகத் தலைவரான பின்பு அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றிருக்கின்ற காரணத்தால், நெடுமாறனையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தார்.

சட்டமன்றத்தில் மரியாதை கொடுத்தார்.

ஜெயலலிதா இவரை சிறையில் அடைத்தபோது இவர் அரசியல் அனாதையானார்.

அப்பொழுதும், கலைஞர் இவருக்கு ரட்சகரானார்.

ஆனாலும், நெடுமாறன் சுபாவம் மாறவில்லை.

என்ன செய்வது? அடுத்த தேர்தலில் நாம் தோற்போம் என்று இந்த அரசியல் வாழாவெட்டி நமக்கு சாபமிடுகிறார்.

எதையோ குளிப்பாட்டி-நடுவீட்டில் விட்டாலும்-அது வாலை குழைத்துக் கொண்டு போகும் என்பார்களே அந்த கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு நரைமயிரின் மகத்துவமும் மகாத்மியமும்!

க ம்பராமாயணத்தில் ராமனின் பெருமைகள் பேசப்படுகிறது. சீதை - கற்பின் கலை என்று போற்றப்படுகிறாள். அனுமனின் புகழ் பாடப் பெற்றிருக்கிறது. தம்பி லெட்சுமணன், நாவாய் செலுத்தும் குகன், ராவணனை வழிமறித்துப் போரிட்ட ஜடாயு என்ற கழுகு, ராமனுக்கு உதவி செய்வதற்காக ஆருயிர் அண்ணனுக்கே துரோகம் இழைத்து விட்டு ராமன் பக்கம் சேர்ந்த சுக்ரீவன், விபீஷணன் பற்றியெல்லாம் - அவர்களது மகத்துவம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் - பாடல் பாடலாய் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது.

ராமனின் தந்தையான தசரத மகாராஜாவின் காதோரத்து மயிர் - அதாவது இந்தக் காலத்து பாஷையில் சொல்வதானால் - கிருதாவில் முளைத்த வெள்ளை மயிரின் ‘மகத்துவம்’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறனை மிகவும் கவர்ந்திருக்கிறது!

மறைந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (அ.ச.ஞா.) 1940களிலேயே கம்பராமாயணப் பாத்திரங்களால் கவரப்பட்டு ‘தம்பியர் இருவர்’ ‘அரசியர் மூவர்’ ‘ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்புகளில் லெட்சுமணன் - பரதன், கோசலை - கைகேயி - சுமத்திரை - ராவணன் போன்ற கதாபாத்திரங்களை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் தனது கவிதைகளில் என்பது பற்றி அற்புதமான இலக்கிய விமர்சன நூல்களை எழுதியிருக்கிறார்.

காலஞ்சென்ற எஸ்.ராமகிருஷ்ணன் ‘சிறியன சிந்தியாதான்’ என்ற தலைப்பில் கம்பன் படைப்பு பற்றி எழுதியிருக்கிறார்.

இன்னும், டி.கே.சி., ம.பொ.சி., பி.ஸ்ரீ., இஸ்மாயில் போன்றோரும் - கம்பனின் கதாபாத்திரங்கள் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிவிட்டதாலோ என்னவோ -

பழ.நெடுமாறன் வியந்து பாராட்ட தசரதனின் காதோரத்து நரைமயிர்தான் கிடைத்தது போலும்!

தசரதன் ஒருநாள் கண்ணாடியின் முன் நின்று தனது முகத்தைப் பார்த்தபோது காதோரத்தில் நரைமயிர் அவன் கண்ணில் படுகிறது. அந்த நரைமயிர் அவனுக்கு அதுவரையில் இல்லாத வகையில் ஒரு ஞானோதயத்தை அவனுக்குப் பிறக்க வைக்கிறது. அது என்ன?

"அடடா, நமக்கு வயதாகி விட்டது ; நமது மகன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது" - என்ற ஞானோதயம்தான் அது.

"மன்னனே யவனியை மகனுக்கீந்து நீ

பன்னருந்தவம்புரி பருவ மீதெனக்

கன்ன மூலத்தினிற் கழற வந்தென

மின்னெனக் கருமைபோய் வெளுத்த

தோர் மயிர்"

என்ற கம்பனது இந்தப் பாடல் வரிகள் நெடுமாறனைப் பரவசப்படுத்தியிருக்கிறது.

உடனே அவருக்குக் கம்பன் நினைவெல்லாம் பறந்து போய்விட்டது. கலைஞரின் நினைவு முன்னைவிட அதிகமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது.

நரைமயிரைக் கண்ட மாத்திரத்தில் தசரதன் பதவி துறக்க முன்வந்தானே; கருணாநிதி அந்த உதாரணத்தை ஏன் இன்னமும் பின்பற்றவில்லை - என்று கடுப்பாகி - கனல்தெறிக்க கலைஞர் எதிர்ப்புக் கட்டுரை ஒன்றினை ‘தினமணி’யில் எழுதிவிட்டார்.

நெடுமாறன் எப்போதுமே - தி.மு.க.வுக்கு எதிரானவர், கலைஞரை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆகவே கம்பராமாயணத்தில் அவர் கண்ட நரை மயிர்கூட அவரை கலைஞருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதத் தூண்டி விட்டதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. ஆகவே - அவரது வாடிக்கையான கலைஞர் எதிர்ப்பால் விளைந்த அந்தக் கட்டுரையைப் பற்றி விமர்சிப்பதை விட - அவரது உள்ளங் கவர்ந்த அந்த நரைமயிரின் மகத்துவம் அல்லது மகாத்மியம் எப்பேர்ப்பட்டது என்பதைப் பற்றி மட்டும் இங்கே பரிசீலிக்கலாம்.

- தசரதன் அந்த நரைமயிரைப் பார்க்காமல் இருந்திருந்தால் - அல்லது பார்த்தபிறகும் நரைமயிர்தானே என்று நினைத்து அதைப் பிடுங்கி எறிந்திருப்பானானால்

- தசரதனுக்கு ராம பட்டாபிஷேகம் பற்றிய நினைவு உடனடியாக வந்திருக்காது.

- ராமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவித்திருக்க மாட்டான்.

- முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்த கூனிக்கு ராமனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி தோன்றியிருக்காது.

- கூனி கைகேயியை சந்தித்து அவளது நல்ல மனதைக் கெடுத்திருக்க மாட்டாள்.

- கூனியின் கோள்மூட்டலுக்கு கைகேயி இரையாகியிருக்கமாட்டாள்.

- தசரதனிடம் இரண்டு வரங்களை நினைவுபடுத்தி ‘ராமனைக் காட்டுக்கு அனுப்பு’ என்று கைகேயி கட்டளையிட்டிருக்க மாட்டாள்.

- ராமன் காடேக வேண்டிய நிலையே உருவாகியிருக்காது.

- ராமனோடு சீதையும் காட்டுக்குப் போக வேண்டிய நிலையும் பிறந்திருக்காது.

- காட்டில் ராவணனின் அருமைத்தங்கை சூர்ப்பனகையை ராம - லெட்சுமணர்கள் சந்திக்க வேண்டியிருந்திருக்காது.

- சூர்ப்பனகையின் முலையையும் - மூக்கையும் வெட்டி அவளை மானபங்கப்படுத்திய கொடுஞ்செயலும் நிகழ்ந்திருக்காது.

- சூர்ப்பனகை தனது அண்ணன் ராவணனிடம் ராம - லெட்சுமணர்கள் - பெண் என்றும் பாராது தன்னை மானபங்கப்படுத்திய அக்கிரமம் பற்றிப் புகார் செய்திருக்கமாட்டாள்.

- தங்கைக்கு ராம - லெட்சுமணர்கள் இழைத்த கொடுமையால் சினம் கொண்ட ராவணன், சீதையை அவள் தங்கியிருந்த குடிலோடு இலங்கைக்குத் தூக்கிச் சென்ற சம்பவமும் நடந்திருக்காது.

- சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடவேண்டிய அவசியமும் ராமனுக்கு ஏற்பட்டிருக்காது.

- அதற்காக சுக்ரீவனின் அண்ணன் வாலியை கோழைத்தனமாக மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து யுத்த தர்மத்துக்கும் - ராஜ நீதிக்கும் புறம்பான வகையில் கொலை செய்த குற்றத்திற்கும் ராமன் ஆளாகியிருக்கமாட்டான்.

- யுத்தத்தில் ஜெயிப்பதற்காக - ராவணனது தம்பியை - விபீஷணனைப் பதவி ஆசை காட்டித் தன் பக்கம் இழுத்துக் கொண்ட மாப்பழியையும் ராமன் சுமந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

- யுத்த முடிவில் - அசோக வனத்திலிருந்து தன்னைச் சந்திக்க ஆவலோடு ஓடி வந்த தனது மனைவி சீதையைக் ‘கற்பிழந்தவள்’ என்று அபாண்டமாய் குற்றஞ்சாட்டி - அவளை நெருப்புக் குண்டத்தில் - அக்னிப் பிரவேசம் செய்ய - காட்டுமிராண்டித்தனமாகக் கட்டளையிடவும் - ராமனுக்கு நேர்ந்திருக்காது.

- அயோத்திக்கு வந்து அரசனாக முடி சூட்டிக் கொண்ட பின்னர் - யாரோ ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை சீதைக்கு ஒப்பிட

- உடனடியாக ராமன் - தனது மனைவியை மீண்டும் சந்தேகித்து - சீதை நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராது - "அவளைக் காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள்" என்று கர்ண கொடூரமாகக் கட்டளையிட்டிருக்கமாட்டான்.

- காட்டில் பிறந்த லவன் - குசன் என்ற அவனது மகன்களே ராமனின் சபைக்கு வந்து தகப்பன் ராமனை இழித்துரைக்கும் அவலம் நிகழ்ந்திருக்காது.

அட; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ராமாயணம் என்ற கற்பனைக்கே இடமிருந்திருக்காது.

ஒரு மயிர் - அதுவும் நரை மயிர் தசரதன் கண்ணில் பட்டதால் - அடுக்கடுக்காக நிகழ்ந்த அவலங்கள் - அசிங்கங்கள் - களங்கங்கள் - அவப்பெயர்கள் - அநீதியும் அக்கிரமும் கலந்த அத்துமீறிய நடவடிக்கைகள் எல்லாம் விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின!

இத்தனைக்கும் காரணமான அந்த நரை மயிரின் மகத்துவத்தைத்தான் பழ.நெடுமாறன் தற்காலத் தமிழக அரசியலோடு ஒப்பிட்டு "அய்யோ கலைஞர் பதவி விலகவில்லையே" என்று தினமணி கட்டுரை மூலம் அங்கலாய்த்திருக்கிறார்.

இதன்மூலம் இன்றைய தமிழகத்திலும் கம்ப ராமாயண காலத்து அசிங்கங்கள் - அநாகரீகங்கள் - ஒழுங்கீனங்கள் எல்லாம் அரங்கேற வேண்டும் - தமிழகத்தின் சிறப்புகள் எல்லாம் சீர்குலைய வேண்டும் என்று விரும்புகிறாரோ நெடுமாறன்?


(ஒரு மயிருக்கு இரண்டு கட்டுரை, நல்ல வேளை தசரதனுக்கு நிறைய நிரைமயிரு இல்லை :-)

8 Comments:

Litmuszine said...

"/( என்ன ஒரே மயிரா இருக்கு )/"
இதுதான் இட்லிவடை பஞ்சா !!

Anonymous said...

கருணாநிதியை உசுப்பி விட்டு நாய் போல் வள் வள் என்று குரைக்க வைக்க ஒரு நரைத்த மயிர் போதும் :).

Anonymous said...

ஆத்திகர்களைவிட கருணாநிதியின் ராமநாம/ராமாயண ஜபம் கடந்த ஒரு வருடமாக அதிகமாக உள்ளதே ? என்ன விஷயம்னேன் ? புண்ணியம் தேடிக்கொள்ளும் முயற்சியா ?

இளையவர் லண்டன் அல்லது பாங்காக் சென்றிருக்கும் போது மதுரைக்காரருக்கு பட்டம் சூட்டும் ஆசை இந்த தசரதருக்கும் இருந்திருக்கலாம் இல்லையா ? அதற்கு கோபாலபுரம் மனைவியாரின் வரம் ஏதேனும் பின்னணியில் இருக்குமோ ? அப்படி ஏதேனும் நடந்திருந்தால் இளையவர் போர்க்கொடி தூக்கியிருந்தால், பேரன் சகோதரர்கள் அதற்கு ஒத்து ஊதியிருந்தால் (கவனிக்க - இது சாதிச் சாடல் அல்ல!) அறிவாலயமே ரணகளம் ஆகியிருக்கும் இல்லையா ? யார் ஒரிஜினல் திமுக என ?

அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்கே தான் இன்னும் பதவி விலகவில்லை என இந்தக் கட்டுரை சொல்கிறதோ ?

என்னவோ போங்க :-)

ஹரன்பிரசன்னா said...

தசரதன் வழுக்கையாக இருந்து தொலைத்திருக்கலாம்.

Ram Ravishankar said...

ஆஹா, தமிழக அரசியல் உலகத்தரத்தை தாண்டி போயிட்டிருக்கு! Lack of education of masses makes these so called உலக தலைவர்கள் to exploit. What a disgraceful mature leadership!

Krish said...

I don't know what the CM achived by his 5 time tenure as CM! The state could have done it well if someone new ruled. I dont know why second level leaders of DMK are not protesting for CM post. MK and Stalin and may his son later.

R.Gopi said...

Anonymous said...

கருணாநிதியை உசுப்பி விட்டு நாய் போல் வள் வள் என்று குரைக்க வைக்க ஒரு நரைத்த மயிர் போதும் :).

ஹரன்பிரசன்னா said...

தசரதன் வழுக்கையாக இருந்து தொலைத்திருக்கலாம்.
---------------------------------

Ah haa kelambitaangayaaa, kelambitaanga.........

Anonymous said...

இவருக்கு எங்கேந்து தான் நேரம் கிடைக்குதோ ஒண்ணுமே புரியல? சரி சரி அதுக்கு ஒரு கவிதை எழுதிடாதிங்க...