பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 09, 2008

அழகிரியின் டெலிபோன் பேட்டி

குமுதம் ரிப்போட்டரில் வந்த அழகிரியின் டெலிபோன் பேட்டி

`அப்பா'வுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுத்தீர்கள்? சிறப்புப் பரிசு ஏதாவது?

``சிறப்புப் பரிசா? அப்படியெல்லாம் ஏதும் இல்லை. நான் எப்போதும் வழக்கமாகக் கொடுக்கும் பரிசான அவர் அணிந்து கொள்ளும் ஆடையைத்தான் நான் இப்போதும் வாங்கிக் கொடுத்தேன். மற்றபடி எப்போதுமே அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொள்வேன். அவ்வளவுதான்.''

சரி, `மாறன் சகோதரர்கள் அப்பாவைச் சந்திக்கவே இல்லை. நான் உயிரோடு இருக்கும்வரை அது நடக்கவே நடக்காது' என்று கூறினீர்களா? அது உண்மைதானா?

``ஆமாம். நான் அப்படித்தான் கூறினேன். அவர்கள் வந்து பார்த்தார்கள், பேசினார்கள் என்றால், அதை அவர்கள் நடத்தும் டி.வி.யில் காட்டியிருக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? அதற்குள் `சந்திப்பு நடந்தது' என்கிற மாதிரி வதந்தியை யார் கிளப்பினார்களோ தெரியவில்லை. அதற் காகத்தான் அழுத்தம் திருத்தமாக `அவர்களைத் தலைவர், சந்திக்கவே இல்லை' என்ற உண்மையை அனைவருக்கும் எடுத்துச் சொன்னேன். நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களின் உறவு என்பது இருக்கவே இருக்காது. அதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். எப்போதுமே நடக்காது.''

ஏன் இவ்வளவு பிடிவாதம்? தலைவரை அவர்கள் சந்தித்து உறவாடுவதில் என்ன இருக்கிறது?

``என்ன இருக்கிறதா? ஏதோ எல்லாமும் அவர்கள்தான் என்பதைப்போல் அல்லவா பேசினார்கள். தலைவர் யார்? அவருடைய உழைப்பு என்ன? அவரும் சரி, கோடானுகோடி தொண்டர்களும் சரி, ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி வளர்த்த இந்தக் கழகத்திற்கு அவர்கள் எப்போது வந்தார்கள்? என்ன செய்தார்கள்? யாருக்குச் சமமாக உயர்த்திக் காட்டிக் கொள்கிறார்கள்? இதை எப்படி ஏற்க முடியும்? நான் இல்லை... ஒரு சாதாரண தொண்டனுக்குக் கூட இயக்கம் என்றால் அது தலைவர்தான்! அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அப்படியிருக்க, அவர்கள் செய்தது என்ன? காட்டிக் கொண்டது என்ன? அதை எப்படி மறக்க முடியும்?''

இப்படியே இருந்துவிட முடியுமா? முடிவே கிடையாதா?

``அவ்வளவுதான். இப்படியே இருக்கவேண்டியதுதான். இனிமேல் ஒன்றுமில்லை!''

நீங்கள் இப்படி இருப்பது - மாறன் சகோதரர்கள் பிரிந்திருப்பது - இதனால் கட்சிக்கு பலவீனம் ஏற்படாதா? எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடாதா?

``அவர்களால் என்ன ஆகப்போகிறது? இது தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களின் உழைப்பால் எழுந்து நிற்கின்ற கோட்டை. அஸ்திவாரமாக தொண்டர்கள் நிற்கிறார்கள். யாரும் எதையும் செய்து விடமுடியாது. தலைவரின் தியாகம் என்ன என்பதை தொண்டர்கள் அறிவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பும் ஏற்படாது.''

இந்த அளவிற்கு உறுதியாக அவர்களை எதிர்க்கின்றீர்களே, அவர்கள் நடத்தும் டி.வி. தொழிலுக்கு ஏதாவது...?

``அப்படிச் செய்வதோ அல்லது அப்படிச் சொல்லி அரசியல் செய்வதோ எனக்குப் பழக்கமில்லை. அவர்கள் வளர்ந்த விதம் வேறு. நாங்கள் வளர்ந்த விதம் வேறு. தலைவர் எங்களை அப்படி எல்லாம் வளர்க்கவில்லை. அவருடைய குணம்தான் எங்களுக்கும். கெடுத்துப் பழக்கமில்லை. அவர்கள் பாட்டிற்கு அவர்கள் தொழிலைச் செய்யப் போகிறார்கள். அதிலென்ன இருக்கிறது? ஊரில் ஒரு டாக்டர் இருந்தால் வேறு டாக்டர்களே இருக்கக் கூடாதா? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவரவரும் தொழில் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படித்தான் எல்லாமும். யாரையும் கெடுக்க மாட்டோம். இடையூறாகவும் இருக்க மாட்டோம்.''

மாறன் சகோதரர்களுக்காக தளபதி பரிந்து பேசுவதாகவும், பகையை மறந்து சுமுகம் காணலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளதே...?

``இருங்கள். அவர் (ஸ்டாலின்) ஏன் அப்படிச் செய்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. அவ்வளவுதான்!''

இப்படி ஒரு வரி பதிலாகச் சொன்னால் எப்படி?

``எனக்கு எதுவுமே தெரியாதே. தெரிந்தால்தானே விளக்கமாகச் சொல்ல முடியும். தெரியாத விஷயத்தைப் பற்றி நான் என்ன கூற முடியும்?''

எல்லாவற்றையும் மறந்து, மாறன் சகோதரர்கள் உங்களிடமே வந்து `சமாதானம்' என்று நின்றால் என்ன செய்வீர்கள்?

``அதற்கு வாய்ப்பே இல்லை. எப்படிச் சமாதானம் ஆக முடியும்? அவர்கள் செய்ததை எப்படி மறக்க முடியும்? அவர்களால் பதினைந்து பேர் ஆறு மாதம் சிறையில் இருந்தார்கள். இப்போது கண்டிஷன் பெயிலில் வெளியே வந்திருக்கிறார்கள். அந்தக் குடும்பங்கள் பட்ட வேதனையும் கஷ்டமும் கொஞ்சமா? எதை மறக்கச் சொல்கிறீர்கள்? எப்படிச் சமாதானமாக முடியும்?''

மதுரை தினகரன் ஊழியர்கள் இறந்த கஷ்டம்?

``அதில் எனக்குத் தொடர்பில்லை என்று சி.பி.ஐ. கூறிவிட்டது. என்மீது வீண்பழி சுமத்தப்பட்டது.''

கடைசியாக ஒன்று. ஸ்டாலின் மூலமாக மாறன் சகோதரர்கள் உங்கள் குடும்பத்திற்குள் நுழைந்தால்...?

``நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி நடக்காது என்பதை ஏற்கெனவே கூறிவிட்டேன். ஒருவேளை அப்படி நடந்தால்... அவர்களுக்குள் சுமுக உறவு என்று ஏற்பட்டால்... நான் அவர்களிடமிருந்து விலகி வந்து விடுவேன். அதாவது தயாநிதி, கலாநிதியோடு எங்கள் குடும்பத்தில் யார் உறவு வைத்துக் கொண்டாலும் நான் குடும்பத்திலிருந்தே விலகி நின்று கொள்வேன். அதில் கொஞ்சம் கூட மாற்றம் இருக்காது. இதுதான் என் முடிவு.''

இனி எந்தவிதமான சமாதான முயற்சியும் ஏற்படாதா? யாராவது பெரியவர்கள் வந்து பேசினால்?

``என் முடிவு ஒன்றுதான். முடிந்து போன கதை அது!''

3 Comments:

Indian Voter said...

> அவர்களால் பதினைந்து பேர் ஆறு மாதம் சிறையில் இருந்தார்கள். இப்போது கண்டிஷன் பெயிலில் வெளியே வந்திருக்கிறார்கள். அந்தக் குடும்பங்கள் பட்ட வேதனையும் கஷ்டமும் கொஞ்சமா? எதை மறக்கச் சொல்கிறீர்கள்?


- அடப்பாவிகளா! இவனுங்க அடிச்சுக்கிடதுல மூணு பேரு செத்துப் போனாங்களே.. அவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா.. இல்ல, அவங்க குடும்பம் எல்லாம் வேதனைப்படலையா?

Anonymous said...

கலைஞர் பிறந்த நாளில் அவருடைய இல்லத்துக்கு அருகேயுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் தயாளு அம்மாள் உபயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனவாம். அன்றைய பூஜைகள் உபயதாரர் என கோயிலில் தயாளு அம்மாளின் பெயரையே எழுதி வைத்திருந்தனராம்.

in Kumudam reporter

Anonymous said...

ஒரு இரகசியம் சொல்லட்டா. ஔரங்கசீப் அவரது தந்தை ஆட்சியில் இருக்கும்போது எங்கே இருந்தார் என்ன செய்து கொண்டிருந்தார் என தெரியுமா? யோசிங்க