பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 10, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-06-08

முனி இ.வக்கு எழுதும் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

உனது tamilhindu.com கும்மி கவிதையை நீ அழிப்பதற்கு முன்பே நான் படித்துவிட்டேன். எதற்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? இந்துமதம் தமிழரின் தாய் மதமா இந்தியர்களின் தாய் மதமா என்று தேவலோகத்தில் இருக்கும் சாமிகளிடம் எல்லாம் விசாரித்துவிட்டேன்; அவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். அடுத்த வாரம் பதில் சொல்லுவதாக ராமர் சொல்லியிருக்கிறார். எது எப்படியோ தினமும், காலை, மாலை அந்தப் பதிவின் பின்னூட்டங்கள் எல்லாம் படித்துவந்தேன். புதிதாய் திருமணமானவர்களைப் போல், இரண்டு பக்கத்தினரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமலே பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்க (உன்னை இரண்டு தரப்பினரும் சாத்திக் கொண்டிருக்க)... செம காமெடி.

ஆங் சொல்ல மறந்துவிட்டேன், இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாம். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். கட்டணம் ஒரு ஜோடிக்கு 2,750.

வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம். பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டெண்டர்களும் உண்டு. அதை யார் அடிக்கப் போகிறார்கள்? கூடிய விரைவில் டிவி, எஃப்எம் ரேடியோ எல்லாம் வந்துவிடுமாம். இத்தனை களேபரங்களுக்கிடையில் என்ன தனிமை என்று யோசிக்கிறாயா? அதுவும் சரிதான். இறங்கும் போது குழந்தையுடனோ விவாகரத்து விண்ணப்பத்துடனோ இறங்கினாலும் ஆச்சரியபடக் கூடாது.

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்ற பாடலுக்கு என்ன அர்த்தம் என்று ரொம்ப நாளாகக் கேட்டுக்கொண்டிருந்தாய். இந்தச் செய்தியைப் படித்தபின்னாவது உனக்கு அர்த்தம் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரொம்ப நாள் முன்பு, சர்க்கரையை பிராமணர்கள் உபயோகிக்க மாட்டார்கள். ஏனென்றால் சர்க்கரை உற்பத்தி செய்ய நாய் எலும்பை காடலிஸ்டாக உபயோகப்படுத்தினார்கள். அதே போல் டால்டாவில் மிருகக் கொழுப்பு உபயோகித்தார்கள்..

இந்த வாரம் குமுதம் வாங்கி படித்தவர்கள் எல்லோரும் நான்-வெஜ்ஜுக்கு மாறினார்கள். எப்படி என்று கேட்கறீயா? குமுததுடன் Ranbaxy என்ற மருந்து கம்பெனி Revital என்று இரண்டு மல்டிவிட்டமின் மாத்திரையை இலவசமாகக் கொடுத்தது. அது நான்-வெஜ்!.அந்த காப்சியூல் மேல்பாகம் மிருகக் கொழுப்பினால் செய்தது.(மாடா, பன்னியா என்று தெரியலை) 'இலவசமா தந்தா நம்ப மக்கள் பினாயிலையும் குடிப்பாங்க' என்று கவுண்டமணி ஒரு படத்தில சொல்வார். அடுத்த முறை மாத்திரை இலவசமாக வரும் போது வெஜ்காரர்கள் மேல் பகுதி பினாயிலை, சாரி, மிருகக்கொழுப்பை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் எண்ணையை மட்டும் குடிக்கலாம் :-)

நிறைய பேருக்கு வெஜ், நான் வெஜ் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது என்று தெரிவதில்லை. பார்க்க: http://www.hinduonnet.com/businessline/2001/04/12/stories/14125499.htm

'பிரிக்க முடியாதது எது?' என்று திருவிளையாடல் நாகேஷ் மாதிரி கேள்வி கேட்டால் ஜோசியத்தையும் எடியூரப்பாவையும் என்று சொல்லலாம். குமாரசாமி இவரிடம் விளையாட்டுக் காண்பித்துக்கொண்டிருந்த போது Yeddyurappa என்று இருந்த பெயரை Yeddiyurappa என்று மாற்றினார்கள். பத்திரிகை எதற்கு வீண் வம்பு என்று செல்லமாக Yeddy என்று கூப்பிட, அது எடியூரப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் BSY என்று தன்னைக் கூப்பிடுமாறு பத்திரிகைகளுக்குச் சொல்லியிருக்கிறார். பெயருக்கு காஸ்மெடிக் சர்ஜரி செய்யும் ஒரே நபர் இவர் தான்.

ஆனால் அதற்கு முன்னால், கர்நாடகத்தில் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா புதன்கிழமைதான் தனக்கு நல்ல நாள் என்று முடிவுசெய்தார் அல்லவா? அதற்குச் சொல்லியிருப்பதுபோல் உண்மையில் ஜோசியம் காரணமில்லை.. மக்களுக்குத் தொண்டு செய்ய எல்லா நாளும் நல்லநாள் தானே. ஏன் தாமதம் ஆயிற்று தெரியுமா ? எடியூரப்பா கவர்னரைச் சந்தித்த போது, கவர்னர் மத்திய உள்துறையிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்திருக்கிறார். அதில், 'ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதால், உடனே ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யும் கடிதத்தில் கையெழுத்திட டிலே' என்று இருந்தது. உடனே எடியூரப்பா அருண் ஜெட்லிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார், அவர் என்ன செய்வார் பாவம்; அவர் அத்வானிக்கு ஒரு ஃபோன், அத்வானி உடனே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஃபோன். பிரதமர் சோனியாவிடம் பேசினாரா என்று தெரியவில்லை, ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு ஃபோன். பிரணாப் முகர்ஜி அத்வானியிடம் ஜனாதிபதி வெளிநாடு டூரில் இருப்பதால் தாமதம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அத்வானி முன்பு பீகார் ஆட்சிக் கலைப்புக்கு நடுராத்திரியில் வெளிநாட்டில் இருக்கும் கலாம் ரூம் கதவைத் தட்டினீர்கள் என்று மறக்காமல் செலக்டிவ் அம்னீஷியாவை நினைவுப்படுத்தியிருக்கிறார்.

தொட்டப்பல்லபூர் என்ற இடத்தில் ஓர் ஏக்கரில் வாழை தோப்பு ஒன்று இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்காமல் தொடர்ந்து படிக்கவும். இந்தத் தோப்பில் மனிதக் கழிவு உரமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வாழை மரத்துக்கு 63 லிட்டர் சிறுநீர் தேவைப்பட்டதாம். சிறுநீர் கொண்டு வளர்ந்த வாழைமரம் எல்லாம் 3 வாரத்துக்கு முன்பே பூத்துக் குலுங்கியதாம். வாழைத் தார் கூட 3 கிலோ எடை அதிகமாம். இந்த ஆராய்ச்சியை ஸ்ரீதேவி என்ற விவசாயக் கல்லூரி மாணவி தன் டாக்டர் பட்டத்துக்காகச் செய்திருக்கிறார். அவர் முகவரி sri233011@yahoo.com.

போன வாரம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸ கிலானிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு பெட்டியைப் பரிசாகக் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஆச்சரியத்திற்கு காரணம், அந்தப் பெட்டியை கிலானி திறந்து பார்த்தபோது அதற்குள் பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களின் டிவிடிகள் இருந்தன. (திருட்டு டிவிடியா என்று தெரியவில்லை.) மகிழ்ச்சியில் குஜாலாகிப் போனார் கிலானி. கிலானி ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் ஷாரூக்கானின் தீவிர ரசிகர்.

அரசு மருத்துவமனையில் மருந்தோ டாக்டரோ இல்லாமல் உயிரிழப்பு நேர்ந்தால் அது தமக்கு அவமானம் என்று கலைஞர் சொல்லியிருக்கார். ஆனா இவர் கழுத்து வலி என்றால் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போகிறார், இவர் பிள்ளை லண்டன் போகிறார் ஏன் என்று கொஞ்சம் விசாரித்து சொல்லேன்.

ராஜாஜி, பெரியார், அண்ணா வழியில் நடக்கிறார் என்று சொல்லியிருக்கார் கலைஞர். அவர்கள் எல்லாம் இப்படியா ஆடம்பரமா பிறந்த நாள் கொண்டாடினாங்க ? எது எப்படியோ கலைஞர் - 85க்கு வாழ்த்துக்கள்!!

நேசத்துடன்,
முனி

0 Comments: