இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி - Keywords ( கலைஞர் குடும்பம், ஆட்சிக்கு மார்க்,ராமதாஸ், பிஜேபியுடன் கலைஞர் கூட்டு, அன்புமணி ராமதாஸ்.... )
மத்தியில் தேர்தல் கண்ணுக்கெட்டும் நேரத்தில், கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பி.ஜே.பி. இந்தச் சூழலில் கூட்டணிக் கணக்குகள் குறித்து 'சோ'விடம் அரசியல் ஆரூடம் கேட்காமல் இருக்க முடியுமா..!
''தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகாவில் பி.ஜே.பியின் ஆட்சி..!''
''கடந்த 15 வருஷங்களாகவே கர்நாடகாவில் பி.ஜே.பி. முன்னேறிண்டுதான் இருந்தது. விலைவாசி, தீவிரவாதம் போன்ற பிரச்னைகளால் காங்கிரஸ் மேல மக்களுக்கு நம்பிக்கை குறைஞ்சுபோச்சு. அதுக்கும் மேல தேவகவுடாவும் அவர் மகன் குமாரசாமியும் கர்நாடகாவில் அடிச்ச கூத்து பி.ஜே.பி. மேல சின்னப் பரிதாபத்தை உண்டாக்கிடுத்து. ஜெயிச்சா எடியூரப்பாதான் முதல்வர்னு பி.ஜே.பியிடம் இருந்த உறுதி, காங்கிரஸ்ல யாருக்கும் இல்லை. அங்கே நாலஞ்சு பேர் முதல்வர் ஆசையில் இருந்ததால, அவங்களால முன்னணிக்கு வர முடியலை!''
''கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இனி, அந்தத் திட்டத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''
''காங்கிரஸ் வந்துடும்னு நினைச்சார் கலைஞர். ஆனா, அங்கே பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருப்பதால், பரபரப்பா ஏதாவது பண்ண முயற்சிப்பார். ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தா, 'எங்களுக்கு நியாயம் வேண்டும்! தர்மம்வேண்டும்! தண்ணீர் வேண்டும்!'னு எப்பவும் போல ஏதாவது அறிக்கை விட்டுண்டே பேச்சுவார்த்தைனு காலத்தை ஓட்டியிருக்கலாம். இப்போ அதுக்கும் வாய்ப்பு இல்லை.
தேர்தல்ல ஒகேனக்கல் திட்டம் குறித்து எடியூரப்பா எந்த வாக்குறுதியும் கொடுக் கலைன்னாலும், திட்டத்தை நிறைவேத்த வழி விடுறதில் அவருக்கும் தர்மசங்கடம்தான். இனி என்ன பண்ணுவா..! கோர்ட்டுக்குப் போகலாம். தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கு பொறுப்பைத் தள்ளிப்போட அதானே ஒரே வழி? அங்கே போயிட்டா, யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாது! 'காவிரி நம்பர் டூ'வா மாறிடும் ஒகேனக்கல்!''
''குஜராத், ஹிமாச்சல், கர்நாடகா என காங்கிரசுக்கு அடுத்தடுத்து சரிவுகள். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய கூட்டணிகளில் மாற்றம் இருக்குமா? குறிப்பாக, தமிழகத்தில்..?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பிக்குனு தனியா வாக்கு வங்கி கிடையாது. ஆனால், நாடாளுமன்றத் தேர்த லைப் பொறுத்தவரை பி.ஜே.பிதான் இப்போ பந்தயத்தில் முந்தும் குதிரை. இப்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.கதான் தேர்தலுக்கு முன் பி.ஜே.பி யோடு கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கூட்டணி யால் இருவருக்கும் லாபம்.
பி.ஜே.பியைக் காட்டிலும் தமிழகத்தில் காங்கிரசுக்குக் குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி இருக்கிறதால தி.மு.க. இப்போ பி.ஜே.பி. பக்கம் போகாது. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு பேரோடயும் கூட்டணி போடாம பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியைப் பிடிச்சா, அப்போ இந்த நிலைமையில் மாற்றம் இருக்கும். ஜெயலலிதாவை முந்திக்கொண்டு பி.ஜே.பிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பார் கலைஞர். ஏன்னா, எப்போதுமே தேர்தல் முடிந்த பிறகு, சாதகமான கூட்டணியில் தன்னை இணைத்துக்கொள்ள அவர் தவறுவதில்லை!''
''கூட்டணிக்குள் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்து வரும் ராமதாஸின் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''அன்புமணி அடுத்தடுத்து விவகாரங்களில் சிக்கும்போதெல் லாம் தி.மு.க. தரப்பில் இருந்து அவருக்கு எந்த உதவியும் கிடைக்கிறதில்லை. தமிழகத்தில் அன்புமணிக்கு ஆதரவாக ஒலிக்கிற ஒரே குரல், அவங்க அப்பா ராமதாசுடையது. இதுல தி.மு.க. மேல கோபம் இருந்திருக்கலாம். இதுபோக, தேர்தல் சமயத்தில் பா.ம.கவுக்குக் குறைவான தொகுதிகள், சம்பந்தம் இல்லாத தொகுதிகள்தான் கலைஞர் ஒதுக்குவாரோனு ராமதாசுக்குச் சந்தேகம் இருக்கலாம். அதனால், இப்போதிருந்தே இப்படி அதிரடி பண்ணிண்டு இருந்தா, கடைசி நேரத்தில் எப்படி முடிவெடுக்கவும் வசதியா இருக்கும்னு நினைச்சிருக்கலாம். ஆனா, இது மாதிரி தொடர்ச்சியா இம்சை கொடுக்கிறவங்களை மக்கள் எப்போதும் ஆதரிச்சதில்லை.
ஆனா, ஒரு விஷயம்..! பொது நலமோ, சுயநலமோ... யாரும் சொல்லத் தயங்குகிற கருத்துக் களை ராமதாஸ் மட்டும்தான் சத்தம் போட்டுச் சொல்றார். கலாசாரச் சீரழிவு, அரசியல் அராஜகம் மாதிரியான விஷயங்களில் பா.ம.க. மட்டும்தான் தன் எதிர்ப்பை உரக்கப் பதிவு செய்து வருகிறது!''
''அன்புமணி மீதான விவகாரங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''அவர் சொல்ற சில விஷயங்கள் எல்லாம் சுத்தப் பேத்தல். சினிமாவில் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவர் யாரு? சினிமாவில் சிகரெட் மட்டுமா பிடிக்கிறான்? எல்லாம்தான் பண்றான். அதுக் கெல்லாம் தடை போடவேண்டி யதுதானே..? ரஜினி, விஜய் இவர் சொல்றதுக்குச் சம்மதிச்சாங்களேன்னு கேட்டா, அவங்களுக்கு வேற வழி இல்லை. மீறி சிகரெட் பிடிச்சா தியேட்டருக்குள்ள புகுந்து பா.ம.ககாரங்க கலாட்டா பண்ணுவாங்களோனு இங்கே இருக்குற சினிமாக் காரங்களுக்குப் பயம் இருக்கும். ஏற்கெனவே அப்படிப் பண்ணி னவங்கதானே இவங்க! ஆனா, மும்பை நடிகர்கள்கிட்ட இவ ரோட அதிகாரம் செல்லுபடிஆகலையே..!''
''85வது பிறந்த நாள் கொண்டாடவிருக்கிறார் முதல்வர். அவரிடம் உங்களுக்குப் பிடித்ததும், பிடிக்காததும்..?''
''எந்தவொரு 'ப்ரமோட்டரு'ம் இல்லாத அவருடைய அரசியல் வளர்ச்சி அபாரமானது! கலைஞர், தி.மு.கவில் வளர்ச்சி அடைந்துகொண்டு இருந்த காலத்தில் அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், ஈ.வி.கே.சம்பத் ஆகியோரை தி.மு.கவின் 'ஐம்பெரும் தலைவர்கள்' என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பிரபலமான பட்டியலில் இடம் பிடிக்காத கலைஞர், அவர்களை எல்லாம்விட மதிப்பான உயரங்களை எட்டி, 'இன்று தி.மு.க என்றால் கருணாநிதிதான்!' என்ற உச்சத்துக்கு உயர்ந்துள்ளார். அவருடைய சாதுர்யமான பேச்சு, எழுத்தாற்றல், சூழ்நிலைக்குத் தக்கவாறு வளைவது, நிமிர்வது போன்ற எல்லாமே குறிப்பிடத்தக்கவை!
என்ன... கலைஞரின் அத்தனை ப்ளஸ்களையும் 'குடும்பத்தினரையே முன்னிலைப்படுத்தி, அவர்களுடைய உயர்வையே பிரதானமாகக் கருதுவது' என்ற ஒரு மைனஸ் அமுக்கிவிடுகிறது. அதே போல, அவரது இந்து மத துவேஷமும் அநாவசியமானது!''
''கொலை வழக்கில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அழகிரிக்குக் கட்சியில் பதவி வழங்குவதற்குத் தடை இல்லை என்று சொல்லலாமா?''
''ஏதோ இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தகுதி பார்த்து தான் பதவி கொடுத்தது மாதிரி கேட்கிறீங்களே! ஸ்டாலின் நீங்கலாக, ஒரே நாளில் அரசியல்வாதியான தயாநிதி மாறன், கனிமொழியின் வளர்ச்சியெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியும்னா, இதுக்கு என்ன வந்தது! அழகிரிக்கும் பதவி கொடுத்தாக வேண்டிய நிலைமையில்தான் இப்போ கருணாநிதி இருக்கார். தயாநிதி மாறன் கெட்டிக்காரர்... கனிமொழி நல்ல கவிஞர்னு சொல்லிப் பதவி கொடுத்த மாதிரி, அழகிரிக்கும் ஏதாவது சொல்லிப் பதவி கொடுத்தால், யார் கேட்கப் போறாங்க!''
''தமிழகத்தில் மின்வெட்டு..?''
''அட, நீங்கதான் சொல்றீங்க, தமிழ்நாட்டுல மின்வெட்டுனு! தமிழ்நாட்டுல 'ஏ.சி, டி.சி'னு ரெண்டு வகை கரன்ட் போக, மூணாவதா 'ஏ.வி' கரன்ட்னு ஒண்ணு இருக்கு. அதுதான் ஆற்காடு வீராசாமி கரன்ட்! அது எப்ப வரும், எப்ப போகும்னு சொல்ல முடியாது. விளக்கை போட்டே வைக்கணும். நீங்களா வீட்டுல விளக்கை அணைச்சுட்டு உட்கார்ந்தா, அதுக்குப் பாவம் ஆற்காடு வீராசாமி என்ன பண்ணுவார்!''
''இது மார்க் போடுற சீஸன். தமிழக அரசுக்கு நீங்க எத்தனை மார்க் போடுவீங்க..?''
''மார்க் போடுற அளவுக்கு இவங்க ஒண்ணும் பெருசா சாதிச்சுடலை. சொல்லப்போனா இங்கே ஒரு மாற்றம் ரொம்ப அவசியமா இருக்கு. இருந்தாலும், இவுங்களுக்கு 30 மார்க் போடலாம்! ஆனா, இந்த 30 என்பது 'அவுட் ஆஃப் ஹண்ட்ரட்' இல்லை. 'அவுட் ஆஃப் பிட்டி'! அதாவது, பரிதாப அடிப்படையில் போடுற மார்க்!''
( நன்றி: விகடன் )
Read More...
Collapse...