பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 26, 2008

`தசாவதாரம்' விழா பேச்சுக்கள்

ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம் போல தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

`கலைஞரின் பாராட்டு, என் அசதிகளை எல்லாம் ஆனந்தமாக மாற்றி விட்டது'' என்று கமலஹாசன் கூறினார்.

அமிதாப்பச்சன், கமலஹாசன் ஆகியோருடன் நான் இணைந்து நடிக்க விரும்புகிறேன்'' என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கூறினார்.


விவரம் கீழே...

( ஜாக்கிசான் போல் தமிழ்நாட்டில் எல்லோரும் இருந்திருந்தால், தமிழ்நாடு என்றோ சுத்தமாக இருந்திருக்கும் - செய்தி விளக்கம் கடைசியில் )
கருணாநிதி பேச்சு

தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும் போது கூறியதாவது:-

ஒரு நாள் என் இல்லத்திற்கு காலை நேரத்தில் கமல் வந்தார். தசாவதாரம் படத்தைப்பற்றி பேசும்போது இதுவரையில் எடுத்திருக்கின்ற புகைப்பட ஸ்டில்களை என்னிடத்திலே காட்டினார். நான் பார்த்தது படமல்ல, புகைப்படங்கள்தான். ஸ்டில்கள்தான். அந்த ஸ்டில்களில் கமல் மாத்திரமல்ல, ஒரு வேதியர், ஒரு அமெரிக்க நாட்டு அதிபர், தமிழகத்தின் தலைவர் என்று இப்படி கமல் 10 உருவங்கள் கமல் ஒப்பனையால் அந்த படங்களில் விளங்கிய காட்சிகளை கண்டேன்.

கமலுக்கு முத்தம் கொடுத்தேன்

உள்ளபடியே நான் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது, இதுயார், யாரைப்போல என்று கமலைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அவ்வளவு இயற்கையாக, அற்புதமாக அப்படியே அச்சாக ஒப்பனை செய்யப்பட்டிருந்த அந்த காட்சியை கண்டு நீங்கள் பெருமையாகக் கருதினாலும் சரி அல்லது கேலியாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது பாசத்தின் உச்ச கட்டமாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது கலைத் திறனை இந்த கருணாநிதி எப்படியெல்லாம் ரசிக்கிறான் என்று தெரிந்து கொண்டாலும் சரி கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.

நான் முத்தம் கொடுத்தது எனக்கே தெரியாது. அவ்வளவு மெய் மறந்து போனேன். அந்தப் படங்களை பார்த்து, அப்போதே சொன்னேன். ஸ்டில்களே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன் கமல் என்று நான் என்னுடைய உணர்வுகளை அன்றைக்கு வெளிப்படுத்தினேன்.வைராக்கியத்தை புலப்படுத்தும் வகையில்

தசாவதாரத்தில் முதல் காட்சியாக ராமானுஜரை, நீ இனிமேல் நாராயணா என்று சொல்லக்கூடாது, பரமசிவத்தின் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்று மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு இணங்க மறுத்த ராமானுஜர், தன்னுடைய மனைவி, மக்கள், குடும்பம், உற்றார், உறவு என்ற அத்தனை பேருடைய கெஞ்சுதலுக்கும் இணங்காமல் தியாகத்திற்கு தயாராகிறார். நான் தியாகம் செய்தாலும் செய்வேன். என்னுடைய உயிருக்குயிராக எந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றேனோ, அந்த பெயரை நான் மறக்க மாட்டேன், அதை மாற்றிச் சொல்ல மாட்டேன் என்று அதே பெயரைத்தான் அவருடைய கொள்கை வெறியை, அவருடைய வைராக்கியத்தை புலப்படுத்துகிற வகையில் அந்த காட்சி அமைந்திருக்கிறது. அப்போது என்னிடத்தில் கமல் சொன்னார். கொள்கை மாறக்கூடாது, ஒருவர் ஒரே நிலையில் இருக்க வேண்டும். மனதிலே சஞ்சலம் ஏற்படக்கூடாது என்ற உறுதிக்கு நீங்கள் கொண்டிருக்கின்ற கொள்கை உரத்திற்கு இது பக்தி கலந்த காட்சியாக இருந்தாலுங் கூட, இந்த காட்சியின் மையம் அத்தகையப் பொருளைத் தருகிறதா அல்லவா என்று கேட்டார்.

ஆதங்கத்தோடு..

நான் எண்ணிக்கொண்டேன். ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால், இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்ற ஆதங்கத்தோடு தான் இந்த படத்தை நான் புகழ்ந்து கொண்டே வெளிவந்தேன்.

கமலஹாசனுக்கும், ஜாக்கிசானுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கமலஹாசன் பிறந்த ஆண்டும் 1954. ஜாக்கிசான் பிறந்த ஆண்டும் 1954. கமலஹாசன் பிறந்தது 7.11.1954. ஜாக்கிசான் பிறந்தது 7.4.1954. ஆக இருவரும் பிறந்தது 7-ம் தேதிதான். கமலைவிட ஜாக்கிசான் சரியாக 7 மாதங்கள் தான் மூத்தவர். கமல் தனது 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் முதன் முதலாக நடித்தார். ஜாக்கிசான் அவருடைய 8-வது வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாங்க் டின் பார்'' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.

ஜாக்கிசான் நடித்த புகழ் பெற்ற படங்கள் ஆர்மர் ஆப் காட், "போலீஸ் ஸ்டோரி'', ரஷ் அவர் போன்றவை. ஜாக்கிசான் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கமல் இதுவரையில் 240 படங்களில் நடித்திருக்கிறார்.உயிரோடு இருக்கும் போதே வணங்குங்கள்

ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதாக அவரைப்பற்றிய புத்தகத்திலே நான் படித்து பார்த்தேன். "உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.''

இன்னொன்று, உலகமே ஜாக்கிசானை சூப்பர் ஹீரோ என்று அழைத்தாலும் கூட, அவர் தன்னுடைய ஹீரோ யார் என்று சொல்லிக் கொண்டாரென்றால் "காவல் துறையைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக தீயணைப்பு படை வீரர்களையும் தான் நான் நிஜ ஹீரோக்கள் என்பேன். உயிருக்கு உலை வைக்கும் வேலையில் இருந்து கொண்டு இவர்கள் ஆற்றும் சமுதாய பணி பாராட்டுக்குரியது'' என்று சொன்னவர் ஜாக்கிசான்.

"களத்தில் குதிப்போம்-வெற்றியை குவிப்போம்'' இதுவே ஜாக்கிசானின் தாரக மந்திரமாக போற்றப்படுகிறது.

ஜாக்கிசானின் பிறப்பு

அவருடைய சண்டைக்குழுவில் புதிதாகச் சேருபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் எடுபிடி வேலைகள் தான் தரப்படுமாம். அவர் சொல்கிறார். "எனது குழுவினரை என் குழந்தைகள் போல் காப்பேன். (இப்போதுள்ள ஸ்டண்ட் நடிகர்களுக்கு தரவேண்டிய பாடம் இது) அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் தான் பொறுப்பு. உண்மையான அக்கறை செலுத்துவதால் நான் என்ன சொன்னாலும் அதை என் ஆட்கள் செய்கிறார்கள். கட்டிடத்திலிருந்து குதித்து கீழே காரில் கண்ணாடியில் தலைக்குப்புற விழ வேண்டுமானாலும் தயங்காமல் மறு நொடியே செய்வார்கள். ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியாத எவ்வித சண்டைக் காட்சிகளையும் அவர்களை விட்டு நான் செய்யச் சொல்வதில்லை'' என்று ஜாக்கிசான் கூறியிருக்கிறார்.

இவருடைய பிறப்பு, வளர்ப்பு இரண்டுமே அதிசயமானது, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, படித்தறிந்து தெரிந்து கொள்ளவேண்டியது.

சார்லஸ்-லீலீசான் தம்பதியருக்கு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்னும் இடத்தில் பிறந்தவர் ஜாக்கிசான். ஜாக்கிசானின் தந்தையிடம் பிரசவ சிகிச்சையின் செலவான 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலையில் அந்தக் குடும்பம் தடுமாறியது. அவருடைய பெற்றோர்களுக்கு அவர் பிறந்த போது பிரசவ செலவிற்காக மருத்துவர்களுக்கு 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, என்ன செய்வதென்று தடுமாறியபோது, அப்போது மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர், ஜாக்கிசானின் தந்தையிடம் "எத்தனையோ பேருக்கு பிரசவம் பார்க்கும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. மருத்துவ செலவுத் தொகையை நானே கட்டிவிடுகிறேன். மேலும் 1500 டாலர் தருகிறேன். உங்கள் மகனை தத்து கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டார்.

நன்மைகளில் ஒன்று ஜாக்கிசான்

ஜாக்கிசானின் தந்தை இரண்டொரு நாளில் பதில் கூறுவதாகச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால் உறவினர்கள் எல்லாம் கண்டித்தனர். நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தனர். அதனைக் கொண்டு மருத்துவ மனையிலே பணத்தைக் கொடுத்து விட்டு குழந்தையுடன் வீடு திரும்பினார். இது நடக்காமல் போயிருக்குமேயானால் இன்றைக்கு நாம் ஜாக்கிசானை காண முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே உலகத்தில் அதிசயங்கள், ஆச்சரிய நிகழ்வுகள், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவதால் உலகுக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகளில் இதுவும் ஒன்று. அப்படி கிடைத்த நன்மைகளிலே ஒன்றுதான் நம்முடைய நண்பர் ஜாக்கிசான் ஆவார்.

கிரீடத்தில் ஒரு முத்து

நம்முடைய கலைஞானி கமலஹாசனுடைய புகழ் கிரீடத்தில் இன்னும் ஒரு முத்து பதிக்கப்பட்டது போன்ற விழா, இந்த விழா என்று கூறி, கமலை வாழ்த்தி, இந்த படம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, வாரக்கணக்கில் அல்ல, மாதக்கணக்கிலே, வருடக்கணக்கிலே தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாட்டிலும், வெளியிலே உள்ள பகுதிகளிலும் இந்த படம் வெற்றிபெற்று நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை உங்களுடைய வாழ்த்துகளோடு இணைந்து கமலுக்கு வழங்கி விடைபெறுகிறேன்.
கமலஹாசன் பேச்சு

``பழகிய சில நிமிடங்களிலேயே ஜாக்கிசான் என் நண்பர் என்று சொல்லும் தைரியத்தை அவர் எனக்கு கொடுத்து விட்டார். ஒரே பிரசவத்தில் பத்து பிள்ளைகள் பெற்ற பிள்ளையை பார்த்து குதூகலிக்கிற தாயை போன்றவர், முதல்-அமைச்சர் கலைஞர். அவருடைய பாராட்டுகள், எனக்கு பல்சுவை விருந்து போல் இருந்தது. கே.எஸ்.ரவிகுமாரை சிகரத்தில் தூக்கிவைக்கும் படமாக `தசாவதாரம்' இருக்கும்.

இந்த படத்தை பற்றிய செய்திகளை இரண்டு வருட காலமாக இருட்டடிப்பு செய்தோம். இனி, அவைகள் ஒவ்வொன்றாக வெளிவரும். படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் குறையக்கூடாது என்பதற்காகத்தான், செய்திகளை பதுக்கி வைத்தோம்.ஆனந்தமாக மாறியது

`தசாவதாரம்' படத்தின் சில காட்சிகளை கலைஞர் பார்த்துவிட்டு பாராட்டினார். நான் இந்த படத்துக்காக உழைத்த உழைப்பில் ஏற்பட்ட அசதிகளை எல்லாம் அவருடைய பாராட்டு ஆனந்தமாக மாற்றிவிட்டது.

நாம் இனிமேல் கைகோர்த்தபடி நடக்கலாம் என்று கூறியதன் மூலம் ஜாக்கிசானின் நல்ல உள்ளம் புரிந்தது. அவருடைய எளிமை என்னை கவர்ந்தது. அவருடைய மனிதநேயம் என்னை கவர்ந்தது. இன்று முதல் எங்கள் நட்பு தொடரும்.''

விஜய் பேச்சு

``ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி மூன்று பேரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. இது, ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.

நான், ஜாக்கிசானின் மிகப்பெரிய ரசிகர். அவருடைய படங்களை பலமுறை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். அவருடைய சண்டை காட்சிகளை பார்த்து கைதட்டியதில், என் கைகள் எல்லாம் சிவந்து போய் இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய வெறித்தனமான ரசிகன், நான்.

ஸ்டைல்


அமிதாப்பச்சனின் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திய சினிமாவில் அவருக்கு மாற்றாக யாரும் இல்லை. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அவர்தான். யதார்த்தமான நடிப்புக்கு, மம்முட்டி. அவரிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களில், நானும் ஒருவன்.

கமலஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்களை பார்த்து, ஒரு உண்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். சில போலீஸ் அதிகாரிகளே இதை என்னிடம் கூறியிருக்கிறார்கள். 25 வருடங்களுக்கு முன் அவர் நடித்த `அபூர்வ சகோதரர்கள்' படத்தை பார்த்த பிரமிப்பு எனக்கு இன்னும் நீங்கவில்லை. அந்த குள்ளமான கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார்? என்ற ரகசியம் இதுவரை தெரியவில்லை.

ராம நாராயணன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் பேசும்போது, ``கலையுலகின் மூத்த மகன் சிவாஜி 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். அவருடைய கலைவாரிசு கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார். இன்னும் 10 வருடங்கள் கழித்து 100 வேடங்களில் நடித்து, அவருடைய சாதனையை அவரே முறியடிப்பார்'' என்றார்.

ஹேமாமாலினி

நடிகை ஹேமாமாலினி பேசும்போது, ``10 வேடங்களில் ஒரு நடிகர் நடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. கமலஹாசன் மிக திறமையான நடிகர். இந்த படம் அவருக்கு ஒரு `லேன்ட் மார்க்' ஆக இருக்கும்'' என்றார்.

நடிகை ஜெயப்பிரதா பேசும்போது, ``தசாவதாரம் படத்தில் நானும் நடித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் 40 வருடங்கள் கழித்து கூட என் நினைவில் நிற்கும் படமாக தசாவதாரம் இருக்கும்'' என்றார்.

நடிகை மல்லிகா ஷெராவத், ``வணக்கம் சென்னை...இவ்வளவு பெரிய மேதைகள் கலந்துகொண்ட மேடையில் நானும் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.

அசின்

நடிகை அசின் பேசும்போது, ``தசாவதாரம் ரொம்ப விசேஷமான படம். இந்த மாதிரி ஒரு படத்தில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் ரொம்ப வித்தியாசமானது மட்டுமல்ல. விறுவிறுப்பாகவும் இருக்கும்'' என்றார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து, தெலுங்கு சினிமா பாடல் ஆசிரியர் வென்னிலகன்டி, இந்தி பாடல் ஆசிரியர்கள் புவனசந்திரா, அமீர் ஆகியோருக்கு கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வரவேற்று பேசினார். விழா நிகழ்ச்சிகளை நடிகை ஷோபனா தொகுத்து வழங்கினார்.ஜாக்கிசான் பேச்சு
``இந்த விழாவில் நான் கலந்துகொள்வதற்கு, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை எனக்கு 25 வருடங்களாக தெரியும். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார்.

நான் நடித்த பல படங்களை அவர் இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து என் படங்களை அவர் இந்தியாவில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் நான் அடிக்கடி சென்னை வர முடியும். மீண்டும் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.

சேவை-நன்மை

முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். சினிமாவுக்கு அவர் நிறைய சேவை செய்து இருக்கிறார். பல நன்மைகளை செய்து இருக்கிறார்.

அமிதாப்பச்சனை, எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர், சூப்பர்ஸ்டாருக்கு சூப்பர்ஸ்டார். `தசாவதாரம்' பட காட்சிகளை பத்து நிமிடங்கள் பார்த்தேன். வாவ்...வாவ்...வாவ்...அமிதாப்பச்சன், கமலஹாசன் ஆகியோருடன் நான் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன். நானும் ஒரு நடிகர்தான். எனக்கும் நடிக்க தெரியும். பாட தெரியும். சண்டை போட தெரியும். `டைம்' இருந்தால், கூப்பிடுங்கள். நாம் சேர்ந்து படம் பண்ணலாம். நடிக்க வேண்டிய காட்சிகளில், நீங்கள் இருவரும் நடியுங்கள். காதல் காட்சிகளை மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள். நான் நடிக்கிறேன்.''

அமிதாப்பச்சன்

``எனக்கு முதல் விருது சென்னையில்தான் கிடைத்தது. `சவுத் ஹிந்துஸ்தானி' என்ற படத்துக்காக, கலைஞர் கருணாநிதி கையினால் அந்த விருதை பெற்றேன். அதனால் எனக்கு சென்னையை மிகவும் பிடிக்கும்.

நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், கமலஹாசனை சந்திப்பேன். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றரை படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதில், ஒரு படம் திரைக்கு வந்தது. இன்னொரு அரை படம் வெளிவரவில்லை.

கமலஹாசன், திறமையான நடிகர் மட்டுமல்ல. தனித்துவமானவர். `தசாவதாரம்' படத்தில் அவர் நடித்த காட்சிகளைப் பார்த்து, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொறாமையாக இருந்தது. எங்களால் செய்ய முடியாததை, கமலஹாசன் செய்து கொண்டிருக்கிறார்.''

மம்முட்டி

``இந்த விழாவுக்கு நான் வந்ததே, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்களை எல்லாம் பார்க்கத்தான். உங்களை (ரசிகர்களை) மாதிரிதான் நானும் பார்க்க ஆசைப்பட்டேன். என்னை இங்கே உட்கார வைத்துவிட்டார்கள். கமலஹாசனுக்கு, நான் பழைய ரசிகர்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய படங்களை பார்த்து, நம்மை மாதிரியே ஒரு ஆள் நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று நினைப்பேன். அவர் நிறைய சாதனைகளை படைத்து விட்டார். பத்து வேடங்களில் நடித்தவர், உலகிலேயே யாரும் இல்லை. இது, உலக சாதனை.

கடின உழைப்பு

அவருடைய சாதனைகளுக்கு, கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் காரணம். ஒரு படத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. கமலஹாசன் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்து இருக்கிறார். இது, பேசும் படம் அல்ல. பேசப்படும் படம்.''ஜாக்கி 'மிஸ்டர் க்ளீன்':

"தசாவதாரம்' "சிடி' யை முதல்வர் கருணாநிதி வெளியிடும் போது அதை சுற்றி கட்டியிருந்த பேப்பரையும்,ரிப்பனையும் அவிழ்த்து கீழே போட்டனர். சி.டி., வெளியிடப்பட்ட பிறகு முதல்வரும் மற்றவர்களும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டனர். ஆனால் மேடையில் கிடந்த அந்த பேப்பரையும், ரிப்பனையும் பார்த்த ஜாக்கிசான் உடனே இருக்கையிலிந்து எழுந்து அந்தப் பேப்பரையும், கட்டியிருந்த ரிப்பனையும் எடுத்துக்கொண்டு போய் மேடைக்கு வெளியில் ஓரமாக போடப் போனார். அப்போது தான் அவரை பார்த்த கமல் உடனே ஓடிச்சென்று ஜாக்சானை அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைத்தார். ஜாக்சிசானின் செயலுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.நேரடி அனுபவம் - ஆசிப் மீரான்
தசாவதாரம் - இசை வெளியீடு - என் பார்வையில்

பின்குறிப்பு: கலைஞர் குறிப்பிட்ட ஜாக்கிசான் பற்றிய புத்தகம் ‘குதி'. வெளியீடு: கிழக்கு பதிப்பகம். அவர்தான் சொல்ல மறந்துட்டார் என்று எனக்கு ஒருவர் சொல்லுகிறார்.

8 Comments:

Anonymous said...

உங்கள் இருவர் பதிவிலும் இந்த நிகழ்வு பதியப்படவில்லையே ? நடந்தது உண்மையா ?
Fans, scribes cane-charged at Chennai movie function

Anonymous said...

விழா பற்றி ரிபோர்ட் நன்றாக உள்ளது.

கலைஞரின் பேச்சு, கமல் பேச்சு அருமை.

உண்மையில் தசா விழா கலக்கி விட்டது.

Anonymous said...

"Dravida Nadu; Illayel Sudugadu" - This was the principle on which DMK was founded. Now can you ask Karunanidhi what happened to the Dravida Nadu principle? He will answer you that the Principle went to Sudugadu to help DMK come to power. Now this guy is talking about Ramanujar & being principled. Thalai Ezhuthu.

Anonymous said...

ஆனால் ஜாக்கிசான் எதற்கு என்று புரியவில்லை.. அவர் ஒரு திறமையான ஸ்டண்ட் மாஸ்டர் அவ்வளவுதான் அவருக்கு கமலின் திறமைகள் புரிய வாய்ப்பேஇல்லை இதை படியுங்கள் அவரே இதை உணர்த்தியுள்ளார்

http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/april/250408b.asp

ஒரு இளவரசன் கால்பந்தாட்டம் பார்த்துக்கொண்டு இருந்தானாம், போட்டி முடிவில் மந்திரியை பார்த்து நன்றாகாகத்தான் இருந்தது, இருந்தாலும் ஏன் ஒரு பந்துக்கு இவ்வளவு போட்டி அப்பாவிடம் சொல்லி அனைவருக்கும் ஒர் பந்து வங்கித்தரச்சொல்லுங்கள் என்றானாம் .. அது தான் நினைவிற்கு வந்தது

Bala

Anonymous said...

When asked by a (woman) congress MLA about dravida nadu, karunanidhi had said "nadavai kazhatri pavadai thooki paar, theriyum", according to vijayakanth

Anonymous said...

உங்க ஊரில் ஆர்ட்டிஸ்ட் பஞ்சமா?
-ஜாக்கிசான் கேட்ட அதிரடி கேள்வி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜம்மென்று வந்து இறங்கிவிட்டார் ஜாக்கிசான். இரவு பத்து மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தசாவதாரம் பட தயாரிப்பாளர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. சென்னை தாஜ் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, தனியார் செக்யூரிட்டிகளும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவே அவர் சிங்கப்பூர் ஏர்லைன்சில் திரும்புகிறாராம். பல வருடங்களாக ஜாக்கிசான் படங்களை இந்தியாவில் திரையிட்டு வரும் ஆஸ்கார் ரவிச்சந்திரன், நேரடியாக தனது தம்பி சுரேஷை அனுப்பி ஜாக்கிசானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது தசாவதாரம் படத்திலிருந்து சில காட்சிகள் அவருக்கு திரையுட்டு காண்பிக்கப்பட்டதாம்.

அவற்றை பார்த்த ஜாக்கிசான், இந்த கேரக்டரில் யாரு நடிச்சிருக்கா? அந்த கேரக்டரில் யாரு நடிச்சிருக்கா? என்று கேள்வி கேட்டாராம். அவர் பார்த்த அத்தனை கேரக்டரும் கமல் என்ற ஒருவரே நடித்ததுதான் என்று ஆஸ்கார் சுரேஷ் விளக்கியதும், ஏன் உங்க ஊரில் ஆர்டிஸ்ட் பஞ்சமா? ஏன் எல்லா கேரக்டரையும் அவரே நடிக்கணும்? என்று கேஷ§வலாக ஜாக்கி கேட்க, அதிர்ந்து போனாராம் சுரேஷ். ஜாக்கிசான் ஊரில் டபுள் ஆக்ஷனே பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.எஸ்.

Anonymous said...

It seems, Kalaignar is eagerly accepting to prside such functions, so that, the acress are coming in their most lovely dresses, Then Sreya... now.....

suppamani

Anonymous said...

இந்த நிலையில் ராமகோபாலன் குற்றச் சாட்டை `தசாவதாரம்' பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மறுத்தார். மாலை மலர் நிருபரிடம் அவர் கூறியதாவது:-

தசாவதாரம் நாத்திகனை ஆத்திகனாக்கும்படம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இப்படத்தை பார்த்தால் கடவுளை நம்பி சாமியை கும்பிடுவார்கள். தியேட்டர்களில் குங்கும பொட்டு வைத்து இருப்பவர்களைபடம் ரிலீசுக்கு பின் பார்க்க முடியும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். 24 மணி நேரமும் பக்தி உணர்வுடன் தான் இருக்கிறேன். இந்துக்கள் மனதை இப்படம் புண்படுத்தாது. கடவுள் நம்பிக்கையை தூண்டும் படமாக இருக்கும்.

இவ்வாறு ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறினார்.