பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. தமிழ்த்திரையுலகில் தனது வித்தியாசமான வில்லத்தனத்தாலும், குணச்சித்திர நடிப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்தவர் ரகுவரன்.
கடந்த 10 தினங்களுக்கு உடல் நிலை கோளாறு காரணமாக சேத்துப்பட்டில் உள்ள மேத்தா நர்சிங் ஹோமில் ரகுவரன் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது உடல்நலம் தேறிய ரகுவரன் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ரகுவரன் இன்று காலை 6.15 மணிக்கு உயிரிழந்தார்.
ரகுவரன் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். நடிகை ரேவதி மருத்துவமனைக்கு நேரில் சென்று ரகுவரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ரகுவரனின் உடல் பாண்டிபஜாரில் உள்ளஅவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு நாளை தகனம் செய்யப்படும் என தெரிகிறது.
வாழ்க்கை வரலாறு
1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந் தேதி கோவை மாவட்டத்தில் ரகுவரன் பிறந்தார். அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ரகுவரன் ஏவிஎம் தயாரித்த "மனிதன்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.
தொடர்ந்து 1982ம் ஆண்டு "ஏழாவது மனிதன்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் ருக்மா, ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்களில் நடித்த ரகுவரன், எழுத்தாளர் சிவங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
அந்த படத்தில் மதுவுக்கு அடிமை யான ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் பாத்திரத்தில் நடித்த ரகுவரன் தனது சொந்த வாழ்க்கையி லும் போதைப் பொருளுக்கு அடிமை யானது சோகமான ஒற்றுமையாகும்.
1986ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து திரையுலகில் தனக்கு ஏற்பட்ட தொய்வை சரி செய்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ரகுவரன் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தார்.
தெலுங்கில் வெளிவந்த லங்கேஷ் வரடு என்ற படத்தில் ராவணனாகவும் ரகுவரன் நடித்துள்ளார். 1990ம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படத்தில் மிகச்சிறப்பாக ரகுவரன் நடித்திருந்தார். அதே ஆண்டு ரஜினியுடன் சிவா என்ற படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தார்.
தொடர்ந்து ரஜினியுடன் பல படங்களில் வில்லனாக நடித்து பெரும் புகழ்பெற்றார். பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என அவரது படங்களில் பிரதான வில்லன் பாத்திரத்தை ரகுவரனே ஏற்றார். சமீபத்தில் வெளிவந்த சிவாஜி படத்தில் கூட ரஜினியுடன் குணச்சித்திர பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார்.
விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் ஆகிய இளைய தலைமுறை நடிகர்களுடனும் பல படங்களில் ரகுவரன் நடித்துள்ளார். கடைசியாக வின்சென்ட் அசோகன் நடித்து வெளிவந்த சில நேரங்களில் என்ற படத்தில் வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார்.
சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியே ரகுவரன் கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சியாகும். தொடக்கம் என்ற படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ரகுவரன் அப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் சிறந்த வில்லன் விருதை இரண்டு முறையும், பிலிம்பேர் விருதை ஒரு முறையும் ரகுவரன் வாங்கியுள்ளார். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி ரோகிணியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.
விவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்
அவர் குடும்பத்துக்கு அனுதாபங்கள்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 19, 2008
நடிகர் ரகுவரன் காலமானார்
Posted by IdlyVadai at 3/19/2008 11:16:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலிகள். அஞ்சலி படமாகட்டும், புரியாத புதிர், சம்சாரம் அது மின்சாரம், பாட்ஷா, அருணாச்சலம் என அவர் கலக்கிய படங்கள் பல. கடைசியில் குடியினால் மரணமடைந்த பல்வேறு பெயர் பெற்ற நடிகர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துவிட்டார்.
ஆமாம். சமீபகாலமாக இட்லிவடை ஒரே டல்லடிக்கிறதே. அடிக்கடி பதிவுகளோ சூடான விஷயங்களோ காணுமே ? என்ன ஆச்சு ? எட்டு பேருக்கும் ஆணி பிடுங்கும் வேலை அதிகமா இல்லை சரக்கு மாஸ்டர் மாத்திரம் பதியவேண்டிய நிர்பந்த்மா ? என்ன ஆச்சு ஓய் ? சீக்கிறம் பாடிகாட் மூனீஸ் போன்ற லேட்டஸ்ட் சமாச்சார பதிவுகளை பதியும் ஓய்.
கேள்வி: மாநிலங்கவைத் தேர்தலில் திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், காரணம் ஒருவர் முஸ்லிம் வேட்பாளர் ஜின்னா, மற்றொருவர் கிறிஸ்தவ வேட்பாளர் வசந்தி ஸ்டான்லி என்றும், அதனால் இந்துக்களுக்கு 'அல்வா' கொடுக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு நாளிதழில் ஒருவர் எழுதியிருக்கிறாரே?
பதில்: கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது திருச்சி சிவா, கனிமொழி ஆகிய 2 இந்துக்களை தானே நிறுத்தினோம். அப்போது இந்த 'பிரகஸ்பதி' என்ன சொல்கிறது.
நான் அண்ணா நகரில் வசித்த காலத்தில், ரகுவரன் எனது பக்கத்து வீட்டுக்காரர்..அமைதியான மனிதர்..தனிமை விரும்பி...அதுவே அவரை குடிக்க தூண்டியது போலும்...அற்புதமான திரைக் கலைஞரை தமிழ் திரை உலகம் இழந்து விட்டது..
தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை!
அன்னாரது குடும்பத்தாருக்கு "இட்லி வடை" மறு மொழி பதிவாளர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்..
//ஆமாம். சமீபகாலமாக இட்லிவடை ஒரே டல்லடிக்கிறதே. அடிக்கடி பதிவுகளோ சூடான விஷயங்களோ காணுமே ? //
சரக்கு மாஸ்டர் மட்டும் இருந்தால் போதுமா ? சர்வர்கள் வேண்டாமா ?
ராமதாஸ் ஏதாவது செய்தி கொடுப்பார் என்று நினைத்தேன் ஏமாத்திவிட்டார். விஜயகாந்த் ஏமாத்திவிட்டார். ஜெயமோகன் ஏமாத்திவிட்டார்.
அப்பறம் டல்லடிக்கிறது என்றால் ?
என்னது ஜெயமோகன் ஏமாத்திவிட்டாரா ? நல்ல கதை. தினமும் தனது பதிவில் சாரு நிவேதிதா ரேஞ்சுக்கு காமம் பற்றி எழுதித்தள்ளுகிறாரே ?
படிப்பதில்லையா ? இதோ ஒரு சாம்பிள். பாவம் தொல்காப்பியர் ((மற்றும் கலைஞர் மற்றும் இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் கேஆரேஸ்)
* * * * * * * * * * * * * * *
http://jeyamohan.in/?p=315
நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா. விவேகானந்தன் எம்.ஏ.பி.எல்., தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார்.
* * * * * * * * * * * * * * *
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
[அகத்திணையியல் 5]
பழைய உரை
மாயோன் மேவுவது காடுடைய நிலம். சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம். தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம். இந்த நான்கு நிலங்களும் முல்லை
குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும்.
புது உரை
மாயோனின் குணமுள்ளவன் மேய விரும்பும் [புணர்ந்து அனுபவிக்க] பெண் காடு போன்ற இளமைப்பொருள் உடையவள். சேயோனின் குணம் உள்ளவன் மேய மலைபோன்ற இளமைப்பொருள் உள்ள பெண். வேந்தனைபோன்றவர்கள் மேய வயல் போல ஊற்று உள்ள இளமைப்பொருள் உள்ள பெண். வருணனை போன்றவர்கள் மேய மணற்பாங்கான நிலம் போன்ற இளமைப்பொருள் உள்ள பெண் என்று பெரியோர் சொல்லியுள்ளனர்.
* * * * * * * * * * * * * * *
அன்னாருக்கு வயது 49 இல்லை 60? ஆளுக்கு ஆள் குழப்பரேளே ஓய் ~x(
Hindu, NDTV - 60
CNN IBN, Deccan Herald, TOI - 49
Post a Comment