பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 06, 2008

டெல்லி மேல்சபை தேர்தல் - ராமதாஸ், கலைஞர்

பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி. சீட் கொடுத்தே ஆக வேண்டும - ராமதாஸ்
பா.ம.க. கேட்பது நியாயம் அல்ல - கலைஞர்


ராமதாஸ் பேட்டி

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் டெல்லி மேல்-சபை சீட் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதால் தி.மு.க. அணியில் இருந்து விலகப்போவதாகவும் செய்தி வெளிவந்துள்ளதே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

பதில்:- இவ்வாறு வெளிவந்துள்ள செய்தி பொய்யான தகவல் ஆகும். இதுகுறித்து நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், துணை பொதுச்செயலாளர்களிடம் விவாதம் நடத்தினோம். இதன்பிறகு இன்று (வியாழக்கிழமை) எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகர் `பென்ஸ்பார்க்' ஓட்டலில் நடக்கிறது.

கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருக்கிறேன்.

கருணாநிதி மறுப்பு

எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் முதல்-அமைச்சர் கருணாநிதியை கோட்டையில் சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை சீட் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.

ஆனால், முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு சீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

கருணாநிதிக்கு கடிதம்

நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நான் ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தில் பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை எம்.பி. சீட் கொடுத்தே தான் ஆக வேண்டும் என்று எழுதியிருந்தேன். இந்த கடிதத்தை எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், முதல்-அமைச்சரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுத்தார். இந்த கடிதத்திற்கு இது வரை எந்த பதிலும் வரவில்லை. ஆகவே, தான் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் 18 இடங்களை வைத்துக்கொண்டு ஒரு சீட் கேட்கும் போது, 35 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் கூடுதலாக ஒரு சீட் கேட்கிறார்கள். இந்த நிலையில், தி.மு.க. தன்னிடம் இருக்கும் 4 இடங்களை எப்படி பங்கிட்டு கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- 2004 பாராளுமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதாக தி.மு.க. விளக்கம் அளித்துள்ளது. 2004 ஒப்பந்தத்தில் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒப்பந்தமும் ஒரு பகுதி தான். அதன் மூலம் தான் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே, 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற தி.மு.க.வின் வாதம் சரியல்ல.

எங்களுக்கு தகுதி உள்ளது

தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு 96 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த எம்.எல்.ஏ. சீட்டுகளை வைத்து டெல்லி மேல்-சபை எம்.பி. பதவிக்கு பங்கு போடவேண்டும். இவ்வாறு பங்கீடு செய்யும்போது எங்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும்.

9 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு மேல்-சபை உறுப்பினர் பதவியும், 35 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 2 மேல்-சபை எம்.பி. பதவியும் கொடுக்கப்போவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களை கொண்ட எங்களுக்கு ஒரு மேல்-சபை சீட் கொடுப்பதற்கு எல்லா தகுதியும் உள்ளது.

2010-ல் பா.ம.க.வுக்கு எம்.பி. சீëட் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, ஜி.கே.மணியிடம் கூறி உள்ளார். 18 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும்போது ஏன் இப்படி சொல்லுகிறார்கள்?

பா.ம.க.வுக்கு மேல்-சபை தேர்தலில் ஒரு இடம் வேண்டும் என்று கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சீட்டு பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மேல்-சபை சீட்டும், தி.மு.க.வுக்கு ஒரு மேல்-சபை சீட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு சீட்டும் கொடுப்பது தான் சரியானதாக இருக்கும்.

தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறது. அமைச்சர்கள் பதவி, வாரிய தலைவர்கள் பதவி எல்லாம் அவர்களிடம் உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு கடந்த 2 வருடங்களாக நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருகிறோம். இப்படியிருக்கும் சூழ்நிலையில் எங்களுக்கு தி.மு.க. ஒரு மேல்-சபை சீட் கொடுப்பதுதான் நியாயம்.

அ.தி.மு.க. ஆதரவா?

கேள்வி:- அ.தி.மு.க. அணியில் இருந்து உங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதே?

பதில்:- அரசியல் வட்டாரத்தில் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

கேள்வி:- அப்படியானால் அ.தி.மு.க. தரும் ஆதரவை ஏற்பீர்களா? அல்லது அ.தி.மு.க. ஆதரவை கேட்பீர்களா?

பதில்:- இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் இப்போது எப்படி பதில் சொல்ல முடியும். ஆலோசனை கூட்டத்தில்தான் முடிவு செய்வோம்.

கேள்வி:- இப்போது ஏற்பட்டுள்ள நிலை அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் அல்லவா, அப்படியானால் எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் இப்போது நிச்சயமாக பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- கூட்டணியில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இந்த கேள்வியே இப்போது எழவில்லை.
கலைஞர் பதில்

"டெல்லி மேல்சபை தேர்தல் குறித்து பா.ம.க.விற்கு ஓர் இடம் இந்த முறை ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் 3.3.2008 தேதியிட்டு ஒரு கடிதமும், 4.3.2008 தேதியிட்டு ஒரு கடிதமும் எழுதியதோடு 3-ந் தேதி ஒரு முறையும், 4-ந் தேதி ஒரு முறையும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை என்னிடம் அனுப்பி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென்றும், அப்படி கோருவது அவர்களுடைய உரிமை என்றும், அதை வழங்குவது கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற எனது கடமை என்றும், அது தான் கூட்டணியின் தர்மம் என்ற நம்பிக்கையில் 7-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பு பதில் தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறார்.

எனவே, இந்த விளக்கத்தினை அவருக்கும், நாட்டிற்கும் தந்திட விரும்புகிறேன்.

டாக்டர் அன்புமணிக்கு எம்.பி. சீட்டு

2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

28.6.2004 அன்று மாநிலங்கள் அவை தேர்தல் நடைபெற்ற போது, சட்டமன்றத்தில் தி.மு.க.விற்கு 30 இடங்களும், காங்கிரசுக்கு 25 இடங்களும், பா.ம.க.விற்கு 19 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 இடங்களும் இருந்த நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு இடத்தில் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்த போதிலும், அவ்வாறு தி.மு.க. தனக்கொரு இடத்தை எடுத்து கொள்ளாமல், தனது 30 வாக்குகளையும் பா.ம.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வழங்கி, அந்த இரண்டு கட்சிகளின் சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாசும், சுதர்சன நாச்சியப்பனும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட ஒத்துழைத்தது.

டாக்டர் அன்புமணி ராமதாசை அப்போது மாநிலங்களவை உறுப்பினராக, தி.மு.க. வெற்றி பெற செய்ததால்தான் அவர் மத்தியிலே மந்திரியாக முடிந்தது. இன்றளவும் மந்திரியாக நீடிக்க முடிகிறது.

திடீர் எண்ணம்

எந்த அளவிற்கு தி.மு.க. தன்னுடைய தோழமை கட்சிகளுக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தது என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். 2004-ம் ஆண்டு அவ்வாறு பா.ம.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி 29.06.2010 அன்று வரை மாநிலங்களவை உறுப்பினராக நீடிக்க இயலும். அவருடைய பதவிக்காலம் தற்போது ஒன்றும் முடிந்து விடவில்லை.

மேலும் பா.ம.க. நிறுவனத்தலைவர் 21.2.2008 அன்று என்னை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது, மாநிலங்களவை தேர்தல் குறித்தோ, அதிலே தங்கள் கட்சிக்கு ஓரிடம் வேண்டும் என்றோ கேட்கவே இல்லை. அது மாத்திரமல்ல, அன்றைய தினமே அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை சந்தித்தது பற்றியும், பேசியது பற்றியும், விவரித்த நேரத்திலே கூட செய்தியாளர், டெல்லி மேல்சபை தேர்தல் குறித்து முதல்-அமைச்சரிடம் விவாதித்தீர்களா? என்று கேட்டபோது, அது பற்றி முதல்-அமைச்சரிடம் எதுவும் பேசவில்லை என்று டாக்டர் ராமதாஸ் விடையளித்ததாகத்தான் அவர்களது தமிழ் ஓசை 22-ந் தேதி நாளிதழே குறிப்பிட்டுள்ளது.

இதிலிருந்து இந்த தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கும் எண்ணம் திடீரென்று 3.3.2008-ல் தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.

எந்த குறிப்பும் கிடையாது

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த நேரத்திலே கூட ஒவ்வொரு கட்சியுடனும் உடன்பாடு செய்து கொண்ட போது பா.ம.க.வுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் 31 சட்டமன்ற இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதே தவிர, டெல்லி மேல்சபை உறுப்பினர் ஒன்று அவர்களுக்காக தரப்பட வேண்டும் என்று எந்த குறிப்பும் கிடையாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று வலியுறுத்திய காரணத்தால், அப்போது அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அடுத்து வரும் டெல்லி மேல்சபை தேர்தலில் ஒரு இடம் அவர்களுக்கு தருவதாக தி.மு.க. ஒப்புக் கொண்டது. அந்த வார்த்தையைக் காப்பாற்றிடும் வகையில் 2006-ம் ஆண்டு நடந்த டெல்லி மேல்சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதுவும் தி.மு.க. தோழமைக் கட்சியிடம் காட்டிய உறுதிப்பாட்டுக்கான உதாரணம்தான்.

வெற்றி

இன்னொரு உதாரணத்தைக் கூடச் சொல்ல முடியும். 1995-ம் ஆண்டு மூப்பனார் டெல்லி மேல்சபை உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்த போது, மூப்பனார் த.மா.கா. என்ற கட்சியைக் கண்டு, தி.மு.க.வுடன் உறவு கொண்டு அந்த தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றோம்.

அந்த வெற்றிக்கு பின்னர், மூப்பனார், ஜெயந்தி நடராஜன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் த.மா.கா.வில் இருந்து கொண்டு காங்கிரஸ் சார்பாக தாங்கள் பெற்ற டெல்லி மேல்சபை உறுப்பினர் பொறுப்புகளில் நீடிப்பது சரியல்ல என்ற கருத்துடன் 3 பேரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை 9.9.1997 அன்று ராஜினாமா செய்து விட்டார்கள்.

தோழமை கட்சிகளிடம் உறுதி

காலியாகி விட்ட அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் 1997-ம் ஆண்டு வந்தபோது, தி.மு.க. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 165 இடங்களைப் பெற்றிருந்தது. அதன் காரணமாக மாநிலங்களவை இடைத்தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. சார்பில் 3 பேரை நிறுத்தி வெற்றி பெறலாம் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் அந்த எண்ணத்துடன் தி.மு.க. நடந்து கொள்ளவில்லை. மாறாக மூப்பனாரிடம் கூறி த.மா.கா சார்பிலேயே 3 பேரை நிறுத்திக் கொள்ளலாம் என்றும், தி.மு.க. ஒருவரைக்கூட நிறுத்தாமல், அந்த 3 பேருக்கும் வாக்களித்து வெற்றிவாய்ப்பைத் தேடித்தரும் என்று கூறி, அந்த தேர்தலில் என்.அப்துல்காதர், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெற்றி பெற வழிவகுத்தது. இதுவும் தி.மு.க. தோழமைக் கட்சிகளிடம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்பதற்கான உதாரணம்தான்.

3 பேரை அனுப்பலாம்

தற்போது கூட தி.மு.க. சட்டப்பேரவையில் 96 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது 6 வாக்குகளையும் தி.மு.க.வுக்கு அளித்தாலே, இந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. 3 உறுப்பினர்களை தன் கட்சியின் சார்பாக அனுப்பிட இயலும்.

ஆனால் அவ்வாறு கூட தி.மு.க. கேட்கவில்லை. தான் இரண்டு இடங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 28 வாக்குகளையும், பா.ம.க. உள்ளிட்ட எஞ்சிய தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஓர் இடத்திலும் போட்டியிடலாம் என்ற நிலையில் 2004-ம் ஆண்டு கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்ற பா.ம.க. தற்போது ஓர் இடம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கேட்பது நியாயம் தானா?

தோழமைக்கு அப்பாற்பட்டு

டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் கடந்த முறை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவில்லை என்று எழுதியிருந்தார். அப்போது அதற்கான அவசியம் ஏற்படாததால் கூட்டப்படவில்லை.

மேலும், டாக்டர் ராமதாஸ் தன் கடிதத்தில், "அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம், எனவே, டெல்லி மேல்-சபை தேர்தலில் கூடுதலாக ஒரு இடம் தாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் கோரப்படுவதைப் போன்று, நாங்களும் கோருவதற்கு எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்'' என்று எழுதியிருப்பது எந்த அளவிற்கு தோழமை உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றது என்பதை இந்த அறிக்கையினை மீண்டும் ஒருமுறை டாக்டர் ராமதாஸ் படித்தால் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

எனவே, அவர் இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புகிறேன்.''

1 Comment:

Arun said...

//எனவே, அவர் இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புகிறேன்.//

சீட்டு தர முடியாது!! என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ... ;-)