பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 20, 2008

தமிழே, தப்பிச்சுக்கோ!


நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும் பயிற்சியும் சிந்தனை ஒழுக்கமும் அர்ப்பணிப்புணர்வும் அவரது இசைக்குத் தனியொரு அந்தஸ்து அளிக்கிறது. மேதை என்று நிச்சயம் சொல்வேன். இந்திய இசை உலகில் அவரது தரத்துக்கு நெருக்கமான மேதைகள் என்று உடனே யாரையும் எனக்குச் சொல்லத் தோன்றாது.
மேதைகளுக்கு பலவீனம் இராதா என்ன? இளையராஜாவுக்குச் செய்யுள்.


அவர் ஏன் எழுத விரும்புகிறார் என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பது சிரமம். ஆனால் அதை ஏன் எல்லோரும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை. வாழ்நாளெல்லாம் புகழ்ந்து தீர்க்க அவருடைய இசை இருக்கிறது. போதாதா? எதற்காக அவரைக் கொம்பு சீவி விட்டு வெண்பாவும் விருத்தமும் எழுத அல்ல - யாக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்றைக்குச் சென்றிருந்தேன். இளையராஜாவின் இரண்டு புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா. ஆய்வுக் கோவை என்று ஒன்று. அடியார் அடியொற்றி என்று இன்னொன்று. ஆய்வுக்கோவை, அவரைப் பற்றிப் பல கல்வியாளர்களும் கவிஞர்களும் சேர்ந்து எழுதியது. அடியார் அடியொற்றி, அவரே யாத்தது.

இளையராஜாவின் எழுத்துத் தாக்குதல்கள் இதற்கு முன்பும் வெளிவந்திருக்கின்றன. சில அனுபவக் கட்டுரைகள் அவற்றின் விஷயத்துக்காகப் பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். புதுக்கவிதை மாதிரி சிலவும் மரபுக்கவிதையின் வாசனையில் டி.ராஜேந்தர்பாணி மோனைகள் மிக்க உரை வீச்சுகள் சிலவும் எழுதியிருக்கிறார். அவை நூலாகவும் வந்துள்ளன. மௌனம், மரணம், தவம், மனிதன், ஆத்மா, உள்ளே, வெளியே, வானம், வெட்டவெளி, அறிந்தவை, அறியாதவை, விடுதலை, வேள்வி என்று வரிசையாக நூறு சொற்களை இந்த ரகத்தில் எடுத்து வைத்துக்கொண்டு பெர்முடேஷன் காம்பினேஷனில் தொகுத்தால் கிடைக்கக்கூடிய கவியுருவங்கள் அவருடையவை.

சரி, நான் பாக்குப் போடுகிறேன், இளையராஜா கவிதை எழுதுகிறார் என்றுதான் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நேற்றைய விழாவில் அவரை மாணிக்கவாசகராகவும் சுந்தர மூர்த்தி நாயனாராகவும் பத்ரகிரியாராகவும் பட்டினத்தாராகவும் உருவகப்படுத்தி (ஒரு அம்மாள் - அவர் ஒரு புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், பெயர் மறந்துவிட்டது. அறுபத்தி நாலாவது நாயன்மார் என்றே அடித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.) பேசிய தமிழறிஞர்களின் வீர உரைகளைக் கேட்டபோது அடிவயிறு கலங்கிவிட்டது. சுகி. சிவமும் தெ.ஞானசுந்தரமும் இளையராஜாவைக் காட்டிலும் சிறந்த புலவரே இல்லை என்று பேசுவதைக் கேட்டால், இத்தனை காலம் இவர்கள் வாயாரப் புகழ்ந்த கம்பனும் பாரதியும் அரை டிரவுசர் அணிந்து ராஜாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து யாப்பிலக்கணமும் இன்னபிறவும் படிக்கவேண்டுமென்று சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது.

அத்தனாம்பெரிய தமிழறிஞர்களெல்லாம் புகழ்கிறார்களே என்று அவரும் தம்பங்குக்கு எம்பாவாய், எம்பாவாய் என்று வம்படியாக த் திருவெம்பாவை ஸ்டைலில் பா, பாவாகப் பாடிப் பொழிந்து தீர்க்கிறார். மாணிக்கவாசகருக்குக் கூடக் கொஞ்சம் மீட்டர் பிரச்னை வருமோ என்னமோ. இளையராஜாவுக்குச் செய்யுள் என்பது சர்க்கரை வியாதிக்காரருக்குச் சிறுநீர்போல் தங்குதடையற்றுப் பொழிந்துகொண்டே இருக்கிறது. இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமேதான் என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை.

புகழ்பெற்ற சந்தங்களை வைத்துக்கொண்டு பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்பி இன்னொரு பா புனைவது பெரிய தொழில்நுட்பமோ, கலையோ அல்ல. இதற்கு தியானமெல்லாம் வேண்டாம். மனம் குவிந்து, கண்கள் மூடி, நெஞ்சு நெகிழ, அவனருளாலே அவன் தாள் வணங்கித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்பதுமில்லை. மிக எளிய குழந்தை விளையாட்டு போன்றதுதான். யாரால் வேண்டுமானாலும் எளிதில் செய்துவிட முடியும். மொழிப்பயிற்சி மட்டும் கொஞ்சம் இருந்தால் போதுமானது. இணையத்தில் அறிமுகமான நண்பர், கவிஞர் ஹரி கிருஷ்ணனுடன் (மரபிலக்கியம்) மெசஞ்சரில் உரையாடும்போதெல்லாம் தவறாமல் இந்த விளையாட்டை விளையாடுவேன்.

ஏதோ ஒரு தேர்தல் சமயம் நடிகை ரம்பா பிரசாரத்துக்குப் போகவிருக்கிறார் என்று செய்தி வர, அந்தச் சமயம் ஹரி லைனில் வந்தார். கம்பராமாயணம் தொடர்பான ஒரு புத்தக முயற்சியில் அவர் இருந்த சமயம் அது. சும்மா சீண்டிப்பார்ப்பதற்காக

கொம்பா இது கொடியா வெறும் அம்பாவென எண்ணி
ரம்பாவெனும் விண்மீனினை ரசியாதொரு கூட்டம்
அம்போவென அவரேறிட அம்பாசிட ரீந்து
லம்போதரன் துணையோடொரு தேர்தல் பணி தந்தார்.

என்று ஆரம்பித்தேன். நியாயமாக என்னை அவர் கொலையே செய்திருக்கலாம். உருப்படமாட்டீர் என்பதுடன் நிறுத்திக்கொண்டார். மாறாக, கம்பனிடம் சந்தம் இருந்தாலும் நுட்பம் குறைவு; அது உங்களிடம் மிகுந்திருக்கிறது என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசியிருப்பாரேயானால் என்ன நினைப்போம்?

அப்படித்தான் இருந்தது நேற்றைய விழாவில் இளையராஜாவின் பாப்புலமையை வியந்து சிலாகித்த தமிழறிஞர்களின் பேருரைகள்.

வாஜ்பாயி, அப்துல் கலாம், இளையராஜா போன்றோரையெல்லாம் அவர்களது உண்மையான திறமை புதைந்துகிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டு பாராட்டினாலோ, மதிப்புரை வழங்கினாலோ, விமரிசித்தாலோ அவர்களது துறையில் அவர்களுக்கு உபயோகமாகவும் தனிப்பட்ட முறையில் ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் தரத்தக்கதாகவும் இருக்கும். இவர்களையெல்லாம் கவிஞர்கள், புலவர்கள் என்று அங்கீகரித்து, கிரீடம் சூட்டிவிட்டால் தாளுக்கும் மைக்கும்தான் கேடு.

இசையில் இளையராஜா தொட்ட உயரங்கள் அதிகம். என்னால் ரசிக்கவும் வியக்கவும் மட்டுமே முடியும். ஆனால் பா விஷயத்தில் அவர் அடிக்கிற கூத்துகள் அதிர்ச்சிகரமாகவே உள்ளன. இன்றைக்கு மாணிக்கவாசகரை வேஷ்டி உருவி ஓடவிட்டதுபோல நாளைக்கு யார் இவரிடம் அகப்படுவார்களோ என்று உள்ளம் பதறுகிறது. அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் பன்னிருவர், அடுத்த வரிசை ஆசாமிகளெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். ஏற்கெனவே பாரதியாருக்குக் குறிவைத்து ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. வெளிவரவிருக்கும் ‘அஜந்தா' என்கிற படத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாமல் தானே ஏதோ ஒரு பாடல் அல்லது செய்யுள் 'யாத்து' பாடி இணைத்துவிட்டதாகப் பேசும்போது குறிப்பிட்டார். அது பாரதியாருக்கு என்னவோ ஒரு பதில் சொல்கிறதாம்.

கண்டிப்பாக மேற்படி தமிழறிஞர்கள் அதற்கொரு விழா வைத்துப் பழிவாங்காமல் விடப்போவதில்லை. இசைத்தாயின் தலைமகன், தமிழ்த்தாயைப் படுத்தாமல் விடுவது தமிழ்கூறும் நல்லுலகுக்கு அவர் செய்யும் பேருபகாரமாக இருக்கும் என்பது திண்ணம்.
(நன்றி: பா.ராகவன் )

30 Comments:

Anonymous said...

ஜெயமோகனுக்கு அப்புறம் பா.ரா.வும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. எனினும் இது விகடனில் இன்னும் வெளியாகவில்லை. பா.ரா எந்தப் பத்திரிக்கையில் இதெல்லாம் எழுதுகிறார் அல்லது உங்களுக்கு மட்டும் தனி மடலில் எழுதுகிறாரா அல்லது பா.ரா வும் இட்லிவடையில் ஒரு கோயிஞ்சாமியா ?

ஆமாம் அடிக்கடி பா.ரா. சமாச்சாரம் இட்லிவடையில் வருகிறது. என்ன வோய்,, கோயிஞ்சாமி கிளை ரிவைவ் ஆகிவிட்டதா என்ன ?

IdlyVadai said...

//ஜெயமோகனுக்கு அப்புறம் பா.ரா.வும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. //

இந்த கட்டுரையை படித்த பின் நானும் இதையே தான் அவரிடம் சொன்னேன்.

எனினும் இது விகடனில் இன்னும் வெளியாகவில்லை. பா.ரா எந்தப் பத்திரிக்கையில் இதெல்லாம் எழுதுகிறார் அல்லது உங்களுக்கு மட்டும் தனி மடலில் எழுதுகிறாரா அல்லது பா.ரா வும் இட்லிவடையில் ஒரு கோயிஞ்சாமியா ?

நோ கமெண்ட்ஸ் :-)

//
ஆமாம் அடிக்கடி பா.ரா. சமாச்சாரம் இட்லிவடையில் வருகிறது. என்ன வோய்,, கோயிஞ்சாமி கிளை ரிவைவ் ஆகிவிட்டதா என்ன ?//

இதற்கும் நோ கமெண்ட்ஸ் :-)

Anonymous said...

//கொம்பா இது கொடியா வெறும் அம்பாவென எண்ணி
ரம்பாவெனும் விண்மீனினை ரசியாதொரு கூட்டம்
அம்போவென அவரேறிட அம்பாசிட ரீந்து
லம்போதரன் துணையோடொரு தேர்தல் பணி தந்தார்.//

யோவ், இது மெய்யாலுமே நல்லா கீதுயா!

Anonymous said...

இதே புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருந்தால்..பாரா வின் இந்தக் கட்டுரை எப்படி மாறியிருக்கும் என்று யாராவது ஒரு அங்கதம் (ஜெயமோகன் தவிர வேறு யாராவது) எழுதுங்களேன் !!

பினாத்தலாரே.. நீர் தான் நினைவுக்கு வருகிறீர்..

வால்பையன் said...

தமிழ் இலக்கியத்தில் ஒரு பக்கம் வசவு மழைகள்
ஒரு பக்கம் வாழ்த்து மழைகள்.

வசதி இருபவனிடம் அண்டி கொள்வது தானே நல்ல ஆண்டிக்கு அழகு

வால்பையன்

பினாத்தல் சுரேஷ் said...

சரியாச் சொன்னீங்க பா ரா.

நானும் இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகன் தான். ஆனால் சினிமாப்பாட்டு அவர் எழுதும்போதே ஒரு தொழில்முறைக்கவிஞர்(?!) இன் குறை தெரியும். பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா, எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா ன்னு சொதப்பி இருப்பார்.

சினிமாப்பாட்டுக்கே அப்படின்னா செய்யுள் எல்லாம் வீட்டிலே ஹாபி ரேஞ்சுக்கு அல்லது நான் வலைப்பதிவு எழுதறமாதிரி:) வச்சுக்கறதுதான் நல்லது!

Gowri Shankar said...

கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டாங்களோ? ஒரு மேடை, மைக் + பாராட்டி பேச ஒரு வி.ஐ.பி கெடச்சா என்ன பேசுறோம்னு மறந்துருவாங்க.....! இதே மாதிரி தான் பா.விஜய் கூட ஒரு பாராட்டு விழாவில முதல்வரை ரொம்பவே புகழ்ந்துட்டாரு....!!

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" - இந்த பாலிசி தான்...!

Anonymous said...

இது மெய்யாலுமே நல்லா கீது.

Kudos to Raghavan.

Thanks to Idli Vadai for sharing this.

Sabbash.

God Bless,
thanks and Regards,
srinivasan.

Anonymous said...

இதில் இளயராசாவை குற்றம் சொல்ல முடியாது.. அவருக்கு இருக்கும் திறமைகளில், கவிதை இயற்றுவதும் ஒன்று...அவர் ஒன்றும் பேச்சாளர்களுக்கு காசு கொடுத்து துதி பாடச்சொல்ல வில்லை.. பேச்சாளர்கள் புகழ் துதி கொஞ்சம் ஓவர் ஆக பாடினால், பாவம் ராசா என்ன செய்வார்..

எவர் என்ன சொன்னாலும், இட்லி வடை சொன்னாலும், சரி.......அவர் இசையில் செய்த சாதனைகளை நோக்கும் போது..இந்த புகழ் எல்லாம் இளையராசாவின் கால் தூசுக்கு சமம்.. ..

இட்லி வடைக்கு இளையராசாவின் மேல் என்ன "காண்டு" ??

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஒரு வேண்டுகோள், தயவு செய்து இனிமேல் எழுதியவர் பேரை கடைசியில் போடுவதற்க்குப் பதில் முதலில் போடுங்கள்.

Anonymous said...

adapaavingala... 'kavingar' kanimozhiya compare pannum pothu, raajakku ennaiya korachal...!!!

Anonymous said...

thalaiva ilyarajavadhu sirapana tamil padaluku music pottu irukaru annal tamila kola panni tamil tamilnu kathikitu alayura mu ka pondra alungala tamil thai in thala magan endru jolra podum tamil arinjerkala eppadi paraturadhunu theriyalaye

manipayal said...

"" இளையராஜாவுக்குச் செய்யுள் என்பது சர்க்கரை வியாதிக்காரருக்குச் சிறுநீர்போல் தங்குதடையற்றுப் பொழிந்துகொண்டே இருக்கிறது. இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமேதான் என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை""
சூப்பரா சொன்னீங்க நண்பா!

Sridhar V said...

//இன்றைக்கு மாணிக்கவாசகரை வேஷ்டி உருவி ஓடவிட்டதுபோல//

பா.ரா.விற்க்கும் இந்த "டவுசரை அவுக்கும்" வியாதி இருக்கு போல :-)

திருவள்ளுவரையும் கூட விட்டு வைக்கவில்லை அவர்கள். இதில் வேடிக்கை்கை என்னவென்றால் அவருடைய கவிதைகளை விமர்சித்தால் மூக்குக்கு மேல் கோபமும் வந்துவிடும் அவருக்கு.

ஒரு வேளை இப்படியெல்லாம் இருப்பதால்தான் அவர் இசை'ஞானி' என்று அறியப்படுகிறாரோ என்னமோ...

Anonymous said...

I DO NOT AGREE to this at all. A person can demonstrate his multi-dimensional talents. You cant say that Ilayaraja can only comose music. Of course, Music is one of his unique great strength. It dones'nt mean that he should not focus on his other strengths. If you have really read Ilayaraja's books/thoughts, you wont publish such a one-sided article. That too I dint expect such an article from Idly vadai. I always respect most of the articles in Idly Vadai, But I believe I need to re-think. I am not writing this just because I love Ilayaraja's contributions as crores of people love his creativities. Before deciding anything, the facts needs to be analysed properly. I dint want to hurt you but basically wanted to think in all sides.

Anonymous said...

Dear Pa Ra Sir,

I want to know: http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_20.html - Did you write this article about Ilaiyaraaja's writings? I am shocked! If yes, why didn't you publish it in your site and chose to do it on IdlyVadai's blog? If you reply yes, I am ready to write an antithesis for this hypothesis of yours! When can we have it?

With thanks & regards,
Vijay.

IdlyVadai said...

திரு. விஜய்,
இந்தக் கட்டுரையை மண்டபத்தில் யாரும் எழுதித் தராமல் நானே சொந்தமாகத்தான் எழுதினேன். என்னுடைய இணையத்தளத்திலும் இது இடம் பெற்றிருக்கிறது. பார்க்க: http://www.writerpara.net/archives/11. இட்லிவடை என் நண்பர். எழுதியதும் இதை அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். அவரது வலைப்பதிவில் இதனை வெளியிடலாமா என்று கேட்டார். எனக்கென்ன ஆட்சேபணை இருக்க முடியும்? இப்படிக் கேட்காமல் 1000 பக்கங்கள் கொண்ட என் புத்தகத்தையெல்லாம் மக்கள் உலகுடைமை ஆக்கிக்கொண்டிருக்கும் சூழலில் இது ஒரு பெரிய விஷயமா? போட்டுக்கொள்ளுங்கள் என்றேன். போட்டுவிட்டார். அவ்வளவே.

இதனை ஒட்டியோ வெட்டியோ நீங்கள் எழுதுவதிலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.
இப்படிக்கு
பாரா

IdlyVadai said...

மேலே உள்ள பதில் பாரா எனக்கு அனுப்பியது.

Anonymous said...

Dear Pa Ra Sir,

Thanks for answering my question. It was not asked suspecting your writing capability. In fact, it emerged due to the shock and surprise as to how somebody like Pa Ra could use such unparliamentary words to describe something, just because he didn't like it. I wanted to confirm that you were the author of this article before preparing my antithesis for your hypothesis.

It is a pity that you haven't given any example or evidence for why you feel Ilaiyaraaja is a bad writer. The article is just a compilation of your hard feelings for Ilaiyaraaja, the reasons for which are best known only to you! The unfortunate part is that your fans, who believe that you are always correct, have started supporting your claims in the comments section without bothering whether what they write is based on facts, opinions, rumors, perceptions or misconceptions.

I shall start writing my reply to your article and post it here as soon as it is ready. As I am an amateur novice compared to an established professional writer like you, it is not surprising that I need more time to counter your argument. I shall make sure that my reply is posted soon and will not keep you waiting for long.

PS: Please forgive me for writing in English. I am not familiar with using Tamil Unicode. However, I will try to author my reply to your comment in Tamil Unicode itself.

With thanks & regards,
Vijay.

Anonymous said...

ஹ்ம்ம்.. ஒரு துறையில் விற்பன்னராக உள்ளவர், வேறு எந்த துறையில் எப்படிக் கும்மி அடித்தாலும், அவனை ஆடல் வல்லான் என்று புகழ்கிற மடமை, இத்தமிழ்த் திருநாட்டின் தலைவிதியோ எனத் தோன்றுகிறது.

சாலமன் பாப்பையா - அங்கவை சங்கவை என்று அசிங்கப்படுத்தியதற்குக் கொதித்தெழுந்த நெல்லை கண்ணன், பிரபஞ்சன், அறிவொளி எல்லாம் இந்தப் பேச்சாளர்களையும் சற்று கவனிக்க வேண்டும்.

"நீ என்னடா, பாரதியையும் மகா கவிங்கறே! வைரமுத்துவையும் மகா கவிங்கறே!!" என்று ஒரு தயாரிப்பாளரை, காரை விட்டிறங்கி அறைந்ததார் இளையராஜா என்று, 90-களின் ஆரம்பத்தில் நக்கீரனில் படித்த துணுக்கு நினைவுக்கு வந்தது. இப்போது, இவ்விதமான பாராட்டுகளை கூசாமல் கேட்கும் young king, அன்று டைமண்டுவின் மீதுள்ள கோபத்தினால் தான் அப்படிச் செய்தார்போலும்.

Sabari said...

Please please post this message.

Dear Pa Ra and Idlyvadai,
can you tell me answers for the below questions?
1. Is there any scale or measurement to judge the good or bad lyric or poetry?
2. If you say his music is good then how???? (how you are measuring the music?) why are you discouraging TR?
3. how you are saying kamban and barathi as great poets?
4. do you accept kamban or barathi as great poet if they writes the same content now?

Gurumoorthy said...

என்ன செய்ய எல்லோருக்கும் தான் ஜிங்-ஜா கோஸ்டிகள் இருப்பார்கள்(பா ரா வுக்கும் உண்டு, இட்லி வடைக்கும் உண்டு, ராஜாவுக்கும் உண்டு), ஒருவரை criticize செய்வதும் புகழ்ந்து பேசுவதும் இயல்பு தான் இதில் ஆச்சிறியபட ஒன்றும் இல்லை.

பாஸ்கர். said...

கம்பன் எழுதியது,

எவன் செய இனிய இவ்வழகினை எய்தினோன்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்

இளையராஜா எழுதியது,

பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா? இம்மையை நான் அறியாததா?
சிறு பம்மையின் நிழலில் உண்மையை உணர்ந்திட
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்,
ஒருமுறையா? இரு முறையா? பலமுறை பலபிறப்பு எடுக்க வைத்தாய்
புதுவினையா பலவினையா? கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள் அருள் அருளென்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே..
அருள் விழியால் நோக்குவாய்.. மலர்பதத்தால் தாங்குவாய்..
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..!!


சும்மா ஒருவரை Criticize செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக எல்லாம் இது போல செய்தால் பக்கம் பக்கமாக நான் உங்களை(பா ரா, இட்லிவடை) பற்றியும் நீங்கள் இன்னொருவரை பற்றியும் எழுத வேண்டும், அவர் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள்!!! மனதில் வைத்து கொள்ளுங்கள் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" அது போல உங்கள் எழுத்தும் உங்களுக்கு உயர்வாக தெரியும், உங்கள் எழுத்தையும் நீங்கள் செய்வதை போல மற்றொருவர் விமர்சனம் செய்வார், அதனால் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.....

அன்புடன்,
பாஸ்கர்.

பாஸ்கர். said...

நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் முன்பு உள்ள Comment ல் ஒன்று கூற மறந்து விட்டேன், மதிப்பிற்குரிய பா ரா,
தாங்கள் கம்பனின் கவியில் கண்டறிந்த இலக்கிய சுவையை கூற முடியுமா? அதே போல இளையராஜாவின் பாடலில் இல்லாத வெற்று பகுதியையும் காட்டுங்கள். கண்டிப்பாக மலுப்பலான பதில் வேண்டாம்.....

அன்புடன்,
பாஸ்கர்.

பாலா said...

இளையராஜாவுக்கு பா ரா அளவுக்கு இல்லை இலக்கிய அறிவு இருக்காது, ஏனெனில் பா ரா கம்பன் வீட்டு கட்டுத் தறி அன்றோ!!!!!! அவர் அளவுக்கு யார் தான் வர முடியும்?

Erode Nagaraj... said...

இப்படித்தான் ஜெகத்ரக்ஷகனை ஒரு ஆழ்வார் என்று சில மாதங்களுக்கு முன் கூறினார்கள்... பாடிப் பாரிசில் பெறும் கவிஞர்கள் பொய், இப்போது பாரிசில் பெற்றுப் பாடுகிறார்கள்... கலைஞர் தலைமையில் கவியங்கம் போல..

Erode Nagaraj... said...

ஆமாம், ஏன் இசை என்று லேபிளில் ஒரே ஒரு பதிவு தான் உள்ளது?

Anonymous said...

Tamilanai innoru tamilan thootruvadhum , avan meedu por thoduppadhum innum thodargiradhu... endru enakku indha katturaiai padikkum podhu thondrukiradhu.
Isaignani avargal ondrum arasiyal vaadhikalaipola thannaipaatri maedail pugalndhu paesa yaaraium amarthavillai.
Tamil ungalukku mattum sondham illai. Isaignani in anaithu padaipuukalaium nadu nilamaiyudan vaasithu paarungal / eludhum podhu adhae nilail eludhungal.
Tamilanai potrunghal avar tamil isai manam engum veesa seiungal. nandri.

Anonymous said...

Tamilaium / iasai um neengal pirithupparthadhinaal vandha kulappam thaan idhu.

Tamil gnanamum , isai gnanum saerndhu , isainanikku kidaithippadhai enni
perumaippadavittalum paravaillai,
kurai solvadhai thavirungal.

Vijay Venkatraman Janarthanan said...

அனைவருக்கும் வணக்கம்!

என்னடா பா. ரா. வின் எழுத்துக்கு மறுப்புரை எழுதுவதாகச் சூழுரைத்து விட்டுக் காணாமல் போய்விட்டானே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது மீண்டும் வந்துவிட்டேனோ? கவலை வேண்டாம் - நான் சொல்ல வந்ததைச் சொல்லிமுடித்த பின் மீண்டும் (நீங்கள்) காணாமல் தான் (நான்) போகப் போகிறேன் - என் வேலையைப் பார்த்துக்கொண்டு!

இவ்வளவு தாமதமாய் வந்ததற்குக் காரணமிருக்கிறது - இப்போதுள்ள பல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் போல எழுதுபொருளைப் பற்றி எதுவுமே தெரியாமல் மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை! அதனால் தான் இந்த ஓராண்டு இடைவெளியில் இளையராஜாவின் வெண்பாக்களையும் அவற்றிற்கான் பொழிப்புரைகளையும் அவ்வப்போது படித்துக்கொண்டு இந்த முயற்சிக்காக என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன் - எதற்காக என்றால்: எழுதுவது என் கருத்தாக இல்லாமல் உண்மையையொற்றியதாக இருக்க வேண்டும் என நான் விரும்புவதால்!

முழுவதையும் படிக்க: http://drjvvr.blogspot.com/2010/01/blog-post.html

- விஜய்.