பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 01, 2008

சட்டசபையில் அமளியை கிளப்பினார் ஜெ

ஒழுங்காக ஸ்ரேயா, நமிதா பற்றிய பேசிக்கொண்டு ஜாலியாக இருந்த சட்டடபையில் இன்று ஜெ வந்து அமளியை கிளப்பினார்.

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, பார்வையாளர்களுக்கும், மீடியாவிற்கும் நல்ல போனி. வழக்கம் போல் நக்கல், கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு, வெளிநடப்பு என்று எல்லாம் இருந்தது.

திமுக, அதிமுக உறுப்பினர் களிடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதையடுத்து, பத்து நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.


வழக்கமாக எதிர்கட்சி தலைவர், தலைவி சட்டசபை லாபி வரை வந்துவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு சென்று விடிவார்கள். ஆறு மாததுக்கு மேல் கையெழுத்து போடாவிட்டால் பதவியும், அலவன்ஸும் போய்விடும்.

ஆளுநர் உரை மீது இதுவரை எம்எல்ஏக்கள் பேசிய பேச்சுக்கள், எழுப்பிய கேள்விகளுக்கு கடைசி நாளான இன்று முதல்வர் பதில் தருவார். ஆனால், முதல்வரின் பதிலுரைக்கு முன் எதிர்க் கட்சித் தலைவர் பேசுவது மரபு. ஆனால், ஜெயலலிதா வருவாரா இல்லையா என்பது தெரியாததால் எதிர்க் கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தான் பேசுவார் என எதிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென சட்டசபைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். இதுவே ஒரு செய்தியாக இருப்பது தமிழ்நாட்டின் தலைவி(தி)

ஜெ பேச்சு:
நான் இங்கே சொல்கின்ற கருத்துக்கள் ஆளுங்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளிக்குமா என்பது சந்தேகமே. கவர்னர் உரை என்பது ஒரு நாடகம் தொடங்கப்படுவதற்கு முன்பு திரையை உயர்த்துவது போல, ஒரு ஆட்சியில் என்னென்ன திட்டங் கள், என்னென்ன கொள்கைகள் இருக்கிறதோ அதற்கான முன்னோட்டம் தான் கவர்னர் உரை.

ஆனால் இந்த கவர்னர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லை. மக்கள் நலன் காக்கும் அரசாக இது தெரியவில்லை. ஒரு அரசு அதனுடைய இலக்குகளை அடைவதற்கு அதற்கான வழிமுறைகளும் தெரிய வேண்டும். இல்லையென்றால் அரசு தடுமாறும் நிலை உருவாகும்.

இந்த முதலமைச்சரும், இந்த அரசும் கவர்னர் உரையில் எல்லாம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனக்கு முன்பு பேசிய உறுப்பினரின் (பீட்டர் அல்போன்ஸ்) பேச்சு கூட இந்த ஆட்சிக்கும், முதலமைச் சருக்கும் இதமாக இருந்திருக்கும்.

இங்கு பேசிய பலர் தாலாட்டு போலவும், முதலமைச்சருக்கு லாலி பாடுவது போலவும் பேசினார்கள். யாராவது ஒருவர் உண்மையை பேச வேண்டுமே. இந்த நாடு திசை மாறி சென்று கொண்டிருப்பதை உணர்த்த வேண்டுமே என்ற அடிப்படையில் உண்மைகளை எடுத்து சொல்வதற்காக நான் வந்துள்ளேன் என்று ஜெயலலிதா பேசிய போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி குறுக்கிட்டார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் யாரும் இங்கு உண்மை பேசவில்லை என்பது போல பேசுகிறார். அதனை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன் என்று கோவிந்தசாமி கூறினார். அப்போது ஜெயலலிதா, யாரும் உண்மை பேசவில்லை என்று தான் கூறவில்லை என்று கூறிவிட்டு, தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார்.

இந்த மாநில அரசு தயாரித்துள்ள கவர்னர் உரையில் அரசுக்குள்ள பொறுப்புகளை ஏற்காமல் தட்டிக் கழித்துவிட்டு, மத்திய அரசு மீது பழியை, பொறுப்பை சுமத்தியிருக் கிறார்கள். ஒரு அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் நிதி பெறுவதில் தவறில்லை. நாங்களும் அவ்வாறு கேட்டுள்ளோம்.

கடந்த ஆட்சியின் பல திட்டங்களை சுட்டிக்காட்டி அதற்கு இந்த அரசு நிதி கேட்டிருக்கிறது. இது இந்த ஆட்சியின் புதிய யோசனைகள் அல்ல என்பது மக்களுக்கும் தெரியும்.

மத்திய அரசு, நான் முதலமைச்சராக இருந்த போது என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல திட்டங்களை தடை செய்து மக்களை வஞ்சித்தது. மத்தியிலும், மாநிலத் திலும் ஒரே அரசு அமைந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ மத்திய அரசை திருப்திப்படுத்தும் வகையில் மாநிலத்தின் உரிமைகளை இந்த அரசு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி வேண்டு மென்றால், சட்டம்ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு என் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் சமூக விரோதிகளுக்கும், தீவிரவாதி களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் புகலிடம் தருகின்ற அரசாக இந்த அரசு மாறி வருகிறது.

நான் முதல்வராக இருந்த போது, இவர்களையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வைத்திருந்தேன். ஆனால் தற்போது தமிழகம் ஆயுத கூடாரமாக மாறி வருகிறது. தோழமைக்கட்சி தலைவர்களை கூட பாதுகாக்க முடியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாக்கப் பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. தினமும் பத்திரிகை, டிவிகளை பார்த்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல்வேறு குற்றச் செயல்கள் நிகழ்வதை காண முடிகிறது என்றார் ஜெயலலிதா.

தொடர்ந்து விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வரவும் தயாராக இருப்பதாக முதல்வர் அறிவித்தது குறித்து ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, நிதி அமைச்சர் அன்பழகனை பற்றி குறிப்பிடும் போது, உதவி பேராசிரியர் என்று கூறியதை தொடர்ந்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், எந்த புரட்சியும் செய்யாத உன்னைப்போய் புரட்சித் தலைவி என்று கூறும் போது, அவரை (நிதியமைச்சரை) பேராசிரியர் என்று சொல்வதில் என்ன தவறு என்று ஜெயலலிதாவை பார்த்து ஒருமையில் கேட்டார். இதனால் அவையில் திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு, அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.


இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் அன்பழகன், 50 ஆண்டுகளுக்கு முன்பு யார், யார், என்னவாக இருந்தார்கள் என்பது பற்றி எங்களுக்கும் பேசத் தெரியும் என்று கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் ஆட்சேபம் எழுந்தது.

ஒட்டுமொத்த அதிமுக உறுப்பினர்களும் அன்பழகனை நோக்கி பாய்ந்து வந்தனர். அப்போது அவர்களில் பலர் அன்பழகனுடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் பாய்ந்து வந்தார்கள். முதலமைச்சர்,நிதி அமைச்சர் ஆகியோரை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அரணாக நின்றனர். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக குரலெழுப்பினர்.

இருதரப்பிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் நிலை ஏற்பட்டது. அவையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பரபரப்பான சூழ்நிலையில் 11.30 மணியளவில் 10 நிமிடம் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்து விட்டு தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றார்.

பின்னர் 11.39 மணியளவில் சபாநாயகர் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
பின்னர் அமைதியான சூழ்நிலையில் அவை தொடங்கியதும் பேசிய சபாநாயகர், சிறிது நேரத்திற்கு முன்பு இங்கு நடந்த பிரச்சனைகளின் போது என்னுடைய இருக்கைக்கு முன்னே வந்து நின்று கொண்டு சிலர் ஆவேசமாக பேசினார்கள். அவர்களை நான் வெளியேற்றி இருப்பேன்.


ஆனால், அவை அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனி பிரச்சனையின்றி சபை அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் இது வரை 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இனி 10 நிமிடங்களில் உங்கள் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்றார்.

அப்போதும் ஜெயலலிதா எழுந்து ஆவேசமாக பேசினார். முதல் முறையாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து சில கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசுகையில், பேரறிஞர் அண்ணாவால் பேராசிரியர் என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் நிதியமைச்சர் அன்பழகன். இந்த அவையின் மூத்த உறுப்பினர். அவரை இப்படி அவதூறாக, மரியாதைக் குறைவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா.

ஜெயலலிதா பழைய விஷயங்களைப் பேசுவார் என்றால், விஷம், மோர் என்று நாங்களும் பழைய விஷயங்களை பேச நேரிடும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, கடந்த 30ம் தேதி துரைமுருகன், விதி 110ன் கீழ் கொண்டு வந்த அறிக்கையை சுட்டிக் காட்டினார். ஏற்கனவே டிஜிபி எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தாரோ, அதே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 26.11.2007ல் டிஜிபி அறிவித்த பிறகு, 25.1.2008ல் திருமாவளவன் கூட்டம் நடத்த எப்படி அனுமதிக்கப்பட்டது. இந்த சட்டப்படி அவரை கைது செய்திருக்கலாமே என்று சொன்னார்.

அப்போது விடுதலைச்சிறுத்தைகள் எம்எல்ஏ கு.செல்வம் எழுந்து இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி பொடா மறு ஆய்வுக்குழு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது தவறில்லை என்று சொல்லி இருக்கிறது.

அதைப்பற்றி அரைகுறையான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார். எங்கள் தலைவரை பற்றி இவர் பேசுவதற்கு அருகதை இல்லை. நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. எங்கள் கருத்துரிமை பற்றி தான் பேசினோம் என்றார்.

இதற்கு அதிமுக உறுப்பினர் ஆட்சேப குரல் எழுப்பினார்கள்.

8 Comments:

Anonymous said...

இப்படி எழுதியதன் மூலம் நீங்கள் சபையை அவமதித்துவிட்டீர்கள் என்று
உரிமைமீறல் பிரச்சினை கொண்டு வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக எழுதவும் :).
மிக முக்கியமான, தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினையை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து
அவர்கள் விவாதித்தை, ஜாலியாக
என்று எழுதியதன் மூலம் உங்கள்
பார்பன புத்தியைக் காண்பித்து
விட்டீர்கள் என்று இதுவரை
யாரும் வலைப்பதிவுகளில்
எழுதவில்லையா, ஒவர் டு
தமிழச்சி, அசுரன்,லக்கிலிக் &
ஸ்டாலின் :(

Anonymous said...

ayya, i asked you to fix top tucker, but you removed that column :(

Bharat

வாக்காளன் said...

தமிழ்நாட்டின் தலைவி(தி)

-----

சில குறிப்பிட்ட வரிகள் மட்டும் highlight பன்னி காட்டியிருப்பது....
---------------------
நல்ல டெக்னிக் தான்.. உங்ககிட்ட தான் பாடம் எடுத்துக்கனும்.. அது அப்படியே வருதுல?? சூப்பர்

IdlyVadai said...

பரத் அது இலவசமாக jk-rating தருவது, அதில் ஏதோ பிரச்சனை அதனால் அதை எடுத்துவிட்டேன்.
நன்றி
இட்லிவடை

IdlyVadai said...

வாக்காளன் ஏதோ எழுதினேன் :-)

Anonymous said...

The person Ramaiah was an ordinary M.A who worked as an ordinary lecturer that too in a college founded by his own caste people Mudhaliars. He hardly worked as a lecturer for few months, rest he applied leave and finally resigned. During his entire career as a college lecturer he attended college and taught anything hardly for a couple of months. Shamelessly the entire TN is calling sucha a moron as a Professor. At the same time calling this arrogant lady as Puratchi Thalaivi is another shame. TN people dont have any self respect in addressing people with some title for which they dont deserve. Addressing policitcal criminals with titles make Tamilians a laughing stock among outsiders. Stop calling this corrupt politician Ramaiah (aka) Anbazhagan as Professor any more

இலவசக்கொத்தனார் said...

//ஜெயலலிதா பழைய விஷயங்களைப் பேசுவார் என்றால், விஷம், மோர் என்று நாங்களும் பழைய விஷயங்களை பேச நேரிடும் என்று எச்சரித்தார்.//

இது என்ன மேட்டர்? மறந்து போச்சே... கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...

Anonymous said...

//எந்த புரட்சியும் செய்யாத உன்னைப்போய் புரட்சித் தலைவி என்று கூறும் போது,//

இது எனக்கு ரொம்ப நாளா இருக்கிற கேள்விங்க! நீங்களாவது சொல்லுங்களேன்.