பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2008

அட காங்கிரஸுக்கும் ரோஷம் வந்துட்டுது

காங்கிரஸ் இன்று முதல் முறையாக வெளிநடப்பு செய்தது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டசபையில் இன்று காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.


விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று காங்கிரஸ் கோரியது. நாங்கள் தயார் செய்து பேச ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று திமுக சொன்னது.

இன்று இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியது. புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.

கருணாநிதி பதில்:


காங்கிரஸ் உறுப்பினர்களின் உணர்வுகளை நான் அறியாதவன் அல்ல. ஏறத்தாழ ஒரு வார காலமாக சென்னையிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசு அனுமதிப்பதாக கருத்தில் கொண்டு அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திருமாவளவனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் புலிகளை ஆதரித்து பேசுவதை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். இதில் வேறு வழியில்லை. பொடா சட்டம் சரியாக பயன் படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக ஞானசேகரன் எடுத்துக் காட்டியிருப்பதற்கு ஏற்ப புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச நான் ஆதரவு தருவதாக கருதக்கூடாது. அரசு நடத்தும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் இருப்பதை சொல்ல வேண்டிய நிலையில்நான் இருக்கிறேன்.

இந்த அவையில் முன்பு மதிமுக பற்றி பிரச்சனை எழுப்பப்பட்டபோது என் கருத்தைதெளிவாக கூறியிருக்கிறேன். ராஜீவ் காந்தி கொலைக்கு முன்பு, பின்பு என்று இந்த பிரச்சனையை இரு பிரிவாக பிரித்துத்தான் அணுக வேண்டும் என்று நான் முன்பே சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் அந்த கருத்தில் உறுதியாக உள்ளேன்.

திமுக தோழமைக்கட்சிகள் இதுபோன்ற செய்திகள் வராமல் பார்த்துக்கொள்வது தான் அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. என் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதனை நான் கூறவில்லை.

தமிழகத்திற்கு ஊனம் எதுவும் வரக்கூடாது என்ற கருத்தில்தான் இதனை நான் கூறுகிறேன். ராஜீவ்காந்தி பெரிய தலைவர். அவரது மறைவை அலட்சியப்படுத்த முடியாது. அதற்காக அவரை இழந்து வாடும் காங்கிரஸ் காரர்கள் பல் விளக்க வில்லையா என்று கேட்பதும் தவறுதான். அதேபோல முன்னாள் முதல்வர் குறித்து கூறிய கருத்துக்களும் வருந்தத்தக்கதுதான்.

தான் அவ்வாறு கூறவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறானதுதான். ஞானசேகரன் கூறுவது போல திருமாவளவனை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சட்டத்தில் இடம் இருந்தால் அதனை செய்ய அரசு தயாராக உள்ளது.

எனவே தக்க, திறமையான, கற்றறிந்த வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து இதுபோன்ற செயல்களை தடுக்க சட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இந்த அளவில் இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்ஆனால், இந்த பதிலில் திருப்தியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், பொடா சட்டம் இல்லாத நிலையில் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் திருமாவளவன் மீது வேறு கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

பொடா சட்டதை எதிர்த்தவர்களே இவர்கள் தான். வைகோ இதே போல் பேசிய போது, தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்கள். கலைஞர் இரங்கல் கவிதை எழுதியதை பற்றி சட்டசபையில் பேசவில்லை. தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசினால் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் என்கிறார் கலைஞர் ஆனால் இரங்கல் கவிதை எழுதினால் பரவாயில்லையா ? திருமாவளவன் மட்டும் என்ன பாவம் செய்தார் ?

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அட இவர்களுக்கு கூட ரோஷம் வருகிறதே என்று திமுக தரப்பு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

0 Comments: