பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 10, 2008

சீறிக்கிளம்பிய குஷ்புயல்!

இன்று வந்த ஜூவியில் குஷ்பு, திருமாவளவன் பற்றி "சீரிக்கிளம்பிய குஷ்புயல்!" என்ற கட்டுரை.

தொடர்புடைய செய்தி இங்கே "குஷ்பு திருமாவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!"
( தினத்தந்தி, தட்ஸ்தமிழ் 'ஆழி' பதிப்பகத்தை 'ஆயி' என்று தவறாக சொல்லியிருக்கிறார்கள், கவனமாக படிக்கவும் :-) )


"நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் கிளம்பும் போது என்னருகில் வந்த குஷ்பு, 'எனக்கொரு பிரச்னையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும், சார்' என்றார்.

"அதுக்காகப் பிரச்னையைத் தேடி ஓடிக்கிட்டே இருக்காதீங்க' என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்"புத்தாண்டு பிறந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தனக்குப் பிடித்த 'சர்ச்சை பிராண்ட்' புஸ்வாணம் ஒன்றைக் கொளுத்தி மறுபடியும் மீடியாக்களின் ''லைம் லைட்'டுக்கு வந்திருக்கிறார் நடிகை குஷ்பு.

கடந்த ஆண்டு தமிழகப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு வாய் திறக்க... அவர் பேச்சைக் கண்டித்து பா.ம.க-வும், விடுதலைச்சிறுத்தைகளும் போராட்டம், மறியல், வழக்கு என கொந்தளித்துவிட்டன. அதே கற்பு மேட்டரின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் புதிய சர்ச்சைக்கு விதை போட்டிருக்கிறார்.

கடந்த 6-ம் தேதி சென்னை யில் நடந்த ஒரு புத்தக வெளி யீட்டு விழாவில் குஷ்புவும், திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். அதில்தான் இப்படியரு சர்ச்சை சூடு கிளம்பியிருக்கிறது. சூட்டைக் கிளப்பியவர் என்று இலக்கிய வட்டாரத்தால் சுட்டிக் காட்டப்படுபவர் கவிஞர் அறிவுமதி. என்ன நடந்தது என்று முதலில் அவர் சொல்கிறார்-

''இலக்கிய விழாவில் அரசியல் பேச வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது குஷ்புதான். ஆழி பதிப்பகத்தார் வெளியிட்ட சில நூல்களில் ஒன்றை எம்.பி-யான கனிமொழி வெளியிட... குஷ்பு பெற்றுக்கொண்டார். வேறொரு நூலை தோழர் திருமாவளவன் வெளியிட்டார். அவர் விழா அரங்கத்துக்கு வந்தபோது, அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள். ஆனால், திருமாவளவனைப் பார்த்தவுடன் கால்மேல் கால்போட்டு வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார் குஷ்பு. விழாவுக்கு வரும்போதே நக்கல் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒத்திகை பார்த்துவிட்டு, அதை அங்கே அரங்கேற்றியிருக்கிறார்'' என்கிறார் அறிவுமதி.

குஷ்புவின் செயல் பற்றி திருமாவளவன் என்ன சொல்கிறார்? ''நான் அந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாகத்தான் போனேன். நான் போனபோது, தமிழச்சி தங்கபாண்டியன் பேசிக் கொண்டிருந்தார். எல்லோருக்கும் வணக்கம் சொல்ல அனைவரும் பதில் வணக்கம் செய்தனர். என்னைப் பார்த்ததும் குஷ்பு, முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். நான் சிலமுறை அவருக்கு வணக்கம் சொல்லமுயன்றேன். ஆனால், அது தெரிந்தே அவர் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டார். குஷ்புவை பேசக் கூப்பிட்டபோது, தான் பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் பற்றிப் பேசாமலும், நிகழ்ச்சியைப் பற்றிப் பேசாமலும், எங்கள் அமைப்பைப் பற்றி ரொம்பவும் கிண்டலாக சில வார்த்தைகளை உதிர்த்தார்.

பேச எழுந்து சென்றபோது எனக்கு வணக்கம் சொல்லியிருந்த குஷ்பு, 'வணக்கம் சொல்லாட்டா அதுக்கும் ஒரு கேஸ் போட்டுருவாங்க, இப்பவே 26 கேஸ் ஆயிடுச்சு. இதுக்காக என் குழந்தைகளோடு கோர்ட்டுக்கு அலைஞ்சு பாதி வக்கீலாயிட்டேன். இன்னும் ஒண்ணு ரெண்டு போட்டா முழு வக்கீலாயிடுவேன்' என்று சொல்லவும்... அவருக்கு எதிர்ப்பு சொல்லி அறிவுமதி பேசினார்.

இதற்குப் பதிலாக குஷ்பு மீண்டும் மைக்கைப் பிடித்து, 'நான் எழுதினதை இங்கே யாராச்சும் படிச்சீங்களா? அது என்னன்னு உங்களுக்குத்தெரியுமா?' என்று ஆங்கிலத்தில் கொதிக்க ஆரம்பித்தார். அதோடு கூட்டத்தினர் அவரை நோக்கி வீசிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ஆவேசமாகக் கூட்டத்தினரை நோக்கிக் கைகளை நீட்டியபடி முன்னேற முயற்சித்தார். அவரை நான் தடுத்து, 'உணர்ச்சிவசப்படாதீர்கள்' என்று அமைதிப்படுத்தினேன். பிறகு அவருக்குப் பதில் சொன்னேன்.

'நாங்கள் எவ்வளவோ போராட்டங்களை தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஊடகங்கள் பிரதான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், உங்களுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டத்தை முதன்மைப்படுத்தி செய்தியாக்கின. அதுதான் உங்களை கோர்ட் வரைக்கும் கொண்டுபோய் நிறுத்தியது. எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. உங்களுக்கு ஒரு பிரச்னையென்றால் சொல்லுங்கள்... அங்கேயும் நாங்கள் நிற்போம்' என்று சொல்லிவிட்டு,

'இங்கே கருத்துரிமையை நாங்கள் பறிப்பதாகப் பேசினார்கள். குஷ்பு விஷயத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களை மனதில் வைத்தே கார்த்தி சிதம்பரமும், கனிமொழியும் 'கருத்து' என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு அந்த அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்

கூட்டம் போட்டாலோ, இரங்கல் கவிதை எழுதினாலோ ஜெயலலிதா போன்றவர்கள் வன்மையாக எதிர்த்துக் கருத்து சொல்கிறார்கள். இதையெல்லாம் கருத்து அமைப்பு எப்படிப் பார்க்கிறது என்பதைப் பதிவு செய்ததா? அப்படியானால் குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை கொடுப்பவர்கள், மற்றவர்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால் அதற்கு வாதாட வேண்டாமா?' என்று பேசினேன். இதற்கு கனிமொழி ரொம்பவே கோபப்பட்டார்'' என்றதிருமாவளவன்,

''நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் கிளம்பும் போது என்னருகில் வந்த குஷ்பு, 'எனக்கொரு பிரச்னையென்றால் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும், சார்' என்றார். 'அதுக்காகப் பிரச்னையைத் தேடி ஓடிக்கிட்டே இருக்காதீங்க' என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்'' என்றார்.

மைக்கில் பேசியது தவிர நேரடியாகவும் அறிவுமதி மற்றும் திருமாவளவனிடம் சற்று காரசாரமாக ஏதோ விவாதித்தார் குஷ்பு. ஆனால், அதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது-

''அந்த புத்தக வெளியீட்டு விழாவுல நடந்த விஷயங்கள் எதையுமே நான் பெருசா எடுத்துக்கலை. ஆனால், என்னைக் குறிவெச்சு சிலர் தொடர்ந்து ஏன் தாக்குதல் நடத்துறாங்கங்கிற கேள்விக்கு இன்னும் எனக்கு விடை தெரியலை. கால்மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கறது பெரிய தப்பா, சார்? என் கால்மேல என் இன்னொரு காலைப் போட்டு உட்காருவேன். இது என் சுதந்திரம், இல்லையா..! திருமாவளவன் சாரை நான் அதுவரைக்கும் நேரில் சந்திச்சதில்லை. அந்த விழாவுலதான் சந்திச்சேன். அவரோட பேச்சை ரசிச்சேன். ஆனால், அவர்கிட்ட ஒரு வார்த்தைகூடப் பேசலை. நான் ஒத்திகை பார்த்து விழாவுல வந்து இப்படியரு பிரச்னையைக் கிளப்பறதா சொல்றதையும் ஒப்புக்க மாட்டேன். காரணம், நான் நடிக்கப் போகும்போதே ஹோம் வொர்க் ஏதும் பண்ண மாட்டேன். ஸ்பாட்டுல டைரக்டரோட ஆர்ட்டிஸ்ட்டாத்தான் நான் இருப்பேன். திருமாவளவன் சாரை புண்படுத்த வேண்டுமென்று எதுவும் நான் பேசலை. ஆனா, அவமதிச்சேன்னு அவங்க புதுசா கிளப்புற பிரச்னைக்கு 'எதுவும் சொல்ல விரும்பலை'ங்கறதுதான் என் பதில்'' என்று கேசுவலாகப் பேசினார் குஷ்பு.

இந்தப் பிரச்னையில் கனிமொழியின் கருத்தறிய, அவரைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரது நண்பர்கள் வட்டாரம் மட்டும்தான் நம்மிடம் பேசியது. ''கருத்து அமைப்பின் மூலம் கனிமொழி எவ்வளவோ முக்கியப் பிரச்னைகளுக்குத் தமிழகம் முழுவதும் கலந்துரையாடல் நடத்தி தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார். இலங்கைப் பிரச்னையிலும் அவர் அதிக அக்கறை செலுத்துகிறார் என்பதற்கு செஞ்சோலையில் நடந்த படுகொலை விவகாரத்துக்காக நடத்தப் பட்ட உண்ணாவிரதத்தில் அவர் காட்டிய ஆர்வம் எல்லோருக்கும் தெரியும். திருமாவளவன் சொன்ன கருத்துக்களை அவர் கோபாவேசமாக எதிர்கொள்ள வில்லை. அதையும் கேட்டுக்கொண்டார், அவ்வளவுதான்'' என்றார்கள்.
(நன்றி: ஜூவி )குமுதம் ரிப்போட்டர் கவரேஜ்
நாரதர் செல்லும் இடமெல்லாம் கலகம் என்பதைப் போல, நடிகை குஷ்பு செல்லும் இடமெல்லாம் இப்போது சர்ச்சைகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

‘ஆழி பதிப்பகம்’ சார்பில், கடந்த 6_ம்தேதி சென்னையில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. பத்து புத்தகங்களை மொத்தமாக வெளியிட்ட அந்த விழாவில் கனிமொழி எம்.பி., தமிழச்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘கற்றது தமிழ்’ பட இயக்குனர் ராம், நடிகை குஷ்பு உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகை குஷ்பு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு வணக்கம் வைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக குஷ்புவுக்கு எதிராக வி.சி. கட்சித் தொண்டர்கள் கூச்சல் எழுப்பி, விழாவின் நோக்கத்தையே திசை திருப்பிவிட்டனர் என்பதுதான் புத்தக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

‘ஒருவருக்கு வணக்கம் சொல்லாததுகூட சர்ச்சைக்குரிய விஷயமாகிவிடுமா?’ என்ற கேள்வி நம்மைக் கிள்ள, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திருமாவளவனிடம் தொலைபேசி மூலம் இதுபற்றிப் பேசி விளக்கமறிய முற்பட்டோம்.

“பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு அந்த விழாவுக்குச் சென்றேன். அப்போது மேடையிலிருந்த கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், அறிவுமதி உள்பட மேடையிலிருந்தவர்கள் எழுந்து நின்று எனக்குக் கைகொடுத்து வரவேற்றனர். ஆனால், இவங்க (குஷ்பு) மட்டும் என்னைப் பார்க்காத மாதிரி திரும்பி உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் பார்த்தால் வணக்கம் சொல்லலாம் என்று நினைத்தேன். கடைசிவரை பார்க்கவேயில்லை.

குஷ்பு அவர்கள் பேசியபோது, அங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றிப் பேசியிருக்கலாம். அதை விட்டுவிட்டு அவர், ‘‘திருமாவளவன் சார் வரும்போது நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவருக்கு வணக்கம் சொல்லவில்லை என்று தப்பா எடுத்துக் கொள்ளப் போகிறார். அதனால், இப்போது வணக்கம் சொல்கிறேன். வணக்கம் சொல்லாவிட்டால் வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்’’ என்று பேசியதுதான் பிரச்னைக்குக் காரணம்.

வணக்கம் சொல்லாமல் இருந்தது பிரச்னைக்குக் காரணமே கிடையாது. மேடையில் நின்றுகொண்டு ஒரு மாதிரி வணக்கம் சொல்லிவிட்டு, ‘வணக்கம் சொல்லா விட்டால் வழக்குப்போட்டுவிடுவார்கள்’ என்று கிண்டலாக அவர் பேசியபோதுதான் அறிவுமதி எழுந்து சென்று, ‘உங்களுக்கு வேண்டுமானால் திருமாவளவன் சாதாரண ஆளாக இருக்கலாம். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர். நீங்கள் மரியாதை கொடுத்தால் கொடுங்கள். இல்லையென்றால் போங்கள். ஆனால், வணக்கம் போடவில்லையென்றால் வழக்குப் போட்டுவிடுவார்கள் என்று கிண்டல் அடித்துப் பேசுவது சரியில்லை. இந்த மாதிரி பேசுகிற வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்’ என்று பேசினார். உடனே அவுங்க மைக்கை பிடித்து ஆவேசமாகக் கத்தி கூச்சல் போட்டார்கள்.

அப்போதுதான் நான் அவர்களை சமாதானப் படுத்தும் விதமாகப் பேசினேன். ‘நானும் உங்களைத் தப்பாக நினைக்கவில்லை. நீங்களும் என்னைத் தப்பாக நினைக்க வேண்டியதில்லை. அதோடு முடிந்துவிட்டது’ என்று நான் சொன்னேன்’’ என்றார் திருமா.

உங்களைப் பற்றி குஷ்பு சொன்னதற்கு நீங்கள் மறுத்துப் பேச வாய்ப்பு இருந்தபோது நடுவில் கவிஞர் அறிவுமதி குறுக்கிட்டுப் பேசியதுதான் சர்ச்சையை மேலும் அதிகப்படுத்திவிட்டதாகக் கூறுகிறார்களே? “இந்தக் கேள்வியை அறிவுமதியிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், அவ்வளவு கூட்டத்தில் குஷ்பு பேசி யதுதான் பிரச்னைக்கே காரணமாக அமைந்துவிட்டது. வணக்கம் சொல்லாததற்கு யாராவது வழக்குப் போட்டு விடுவார்களா? குஷ்பு அப்படிப் பேசுவது கிண்டல்தானே? அதனால்தான், அறிவுமதிகூட ‘உங்கள் (குஷ்புவின்) கணவர் சுந்தர் எனக்கு தம்பி மாதிரி. அந்த உரிமையில் கேட்கிறேன். நீங்கள் இப்படிப் பேசுவது நாகரிகமான செயல் அல்ல’ என்று பேசினார்.’’

உங்களை குஷ்பு எழுந்து நின்று வரவேற்கவில்லை என்பதற்காக உங்கள் ஆதரவாளர்கள் கூச்சல் போட் டதாகக் கூறப்படுகிறதே?

“இல்லை. அதெல்லாம் தப்பு. யாரும் கூச்சலே போடவில்லை. அறிவுமதி பேசியதற்குப் பிறகு அவர் அமைதியாகி பிரச்னையை முடித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு ஆவேசமாகப் பேசி பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டார்கள்.’’

திருமாவளவன் என்றாலே தப்பான கண்ணோட்டத்தில் குஷ்பு பார்ப்பதாகக் கருதுகிறீர்களா?

“அவர் பேசியதில் இருந்து அப்படிதான் தெரிகிறது. நான் பேசும்போது, ‘யாராவது படித்திருக்கிறீர்களான்னு நீங்க கேட்கிறீங்க. அப்படியெல்லாம் பேசுவது சரியல்ல. இந்தியா டுடேயில் நீங்க சொன்ன கருத்துக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்கடுத்து தமிழ்நாட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் யோக்கியமானவர்களான்னு நீங்க கேட்டபோதுதான் பிரச்னை வந்தது’ என்று சொன்னேன். பிரச்னைக்குக் காரணமே நீங்கள்தான் என்றும் சொன்னேன்.’’

உங்கள் இருவருக்கும் இடையே எழுந்துள்ள கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

“அந்த விழாவிலேயே முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ‘எங்களைப் பற்றித் தவறாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கு எதிரானவர்கள் இல்லை நாங்கள்’ என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.’’

விழா சர்ச்சைக்குறித்து நடிகை குஷ்புவிடம் விளக்கம் பெற தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண் டோம்.

“இதுபற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நடப்பதையெல்லாம் பார்க்கும் போது இனிமேல் எந்த விழாவுக்கும் செல்ல வேண்டாம் என்ற மனநிலைதான் ஏற்படுகிறது. நேற்று நடந்தது அந்த விழாவோடு முடிந்துவிட்டது. அதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை’’ என்றார் குஷ்பு விரக்தியான குரலில்.

நாரதர் கலகமாவது நன்மையில் முடியும் என்பார்கள். இவர்கள் கலகம்.....?

7 Comments:

Anonymous said...

போடு மகனே !!! போடு...

குஷ்பூ வுக்கு, ஊர்ல இருக்கிறவன் எல்லாரோட சங்கையும் ஊதுறதே வேலையா போச்சு ... வந்தோமா..போனோமா ன்னு இருக்காம...நாய அடிப்பானேன்...பீய சுமப்பானேன்...

Anonymous said...

Follow-up :

குஷ்பு போன்றவர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைத்தவர்களால் ஏற்பட்ட அவமானம்தான் சென்னையில் நடந்த நிகழ்ச்சி. குஷ்புவுக்கு தெரிந்த மேடை நாகரீகம் அவ்வளவுதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமாவளவனை மேடையிலேயே மிகக் கடுமையாக சாடினார் குஷ்பு.

அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மீடியாக்களும் கற்பு பற்றிய அவரது பேச்சுக்களை தவறாகப் பிரசுரித்து பிரச்சினையை அவர் பக்கம் திசை திருப்பி விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டிப் பேசினார் .

இதைக் கேட்டு கொந்தளித்துப் போன விடுதலைச் சிறுத்தை தொண்டர்களை சமாதானப்படுத்திய திருமாவளவன், மேற்கொண்டு ஏதும் ரசாபாசமாகி விடாமல் பார்த்துக் கொண்டார். தன்னால் நிகழ்ச்சி கெட்டு விடக் கூடாதே என்பதற்காக, திட்டமிட்டபடி புத்தகத்தையும் வெளியிட்டார். அதை குஷ்பு பெற்றுக் கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்து திருமாவளவனின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். நமக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது

அது ஒரு இலக்கிய மேடை. அங்கே நடந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச மேடை நாகரீகம் கூட அந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. அவரது பழைய கதைகளைப் பேச வேண்டிய களம் அதுவல்ல.

ஏதாவது ஒரு வடிவில் தனக்கு அனுதாபம் தேடிக் கொள்வதில் குறியாக இருக்கிறார் அந்த நடிகை. அவரோடு லாவணி பாடிக் கொண்டிருப்பது வீண் வேலை. என்னால் நிகழ்ச்சி கெட்டுவிட்டதாக யாரும் நினைக்கக் கூடாது என்பதால் அமைதி காத்தோம். அதுவும் நல்லதாகப் போய்விட்டது. இப்போது அவரது சுய முகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இலக்கியத்துக்கு தொடர்பே இல்லாத ஒரு பெண்ணை அழைத்து வந்து இப்படியெல்லாம் தேவையற்ற அவமானங்களைத் தேடிக்க கொண்டது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் தவறு. இனியாவது இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அறிவுமதி போன்ற கவிஞர்களின் பெருமை குஷ்பு போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய அறிவீனம் என்றார்.

என் இஷ்டம் - கோபப்பட்ட குஷ்பு

குஷ்புவின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். முதலில் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கு? அதான் எல்லாரும் நிகழ்ச்சியைப் பார்த்தார்களே, உங்கள் இஷ்டப்படி எழுதிக் கொள்ளுங்கள் என்றவர் சிறிது நேரம் கழித்து, ஒரு மேடையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்வது குற்றமா? அது என் இஷ்டம். யாருக்கு எப்போது மரியாதை தரவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

குஷ்பு புயலா - அறிவுமதி கொதிப்பு

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், குஷ்புவின் நடத்தைக்கு மேடையிலேயே கண்டனக் குரல் எழுப்பியவருமான அறிவுமதி நம்மிடம் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கு திருமாவளவன் வருவார் என்று குஷ்புவுக்குத் தெரியும். நாடறிந்த ஒரு மக்கள் தலைவரை, ஒடுக்கப்பட்ட இனத்தின் போராளியை திட்டமிட்டே அவமானப்படுத்தி இருக்கிறார் அந்த நடிகை. சரியான ஒத்திகையோடு அவர் நடத்திய மேடை நாடகம் இது.

தமிழர்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு இம்மாதிரி அரை வேக்காட்டு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கப் போகிறதோ... இப்போதும் பாருங்கள், நமது ஊடகங்கள் என்ன நடந்தது என்பதை முழுமையாக எழுதாமல், ஏதோ அந்தப் பெண் புரட்சி செய்து விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன.

இன்றைக்குக் கூட, குஷ்புவை புயல் என்று வர்ணித்து ஒரு பத்திரிகையில் அவரை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இதுதான் காலக் கொடுமை என்பது. அன்றைக்கு திருமாவளவன் மட்டும் தடுத்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒரு நல்ல பண்பாளராக அவர் நடந்து கொண்டார். இந்தப் பண்பை குஷ்பு மாதிரி பெண்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான். இது போன்ற இலக்கிய விழாவுக்கு அந்தப் பெண்ணை அழைத்ததே தவறுதான் என்றார் கோபத்துடன்.

Anonymous said...

குஷ்பு போன்றவர்களை இலக்கிய விழாவுக்கு அழைத்தவர்களை வன்மையாக கண்டிக்கிறோன்.

அன்புடன்
ரா.கிரிஷ்

குயில் said...

குஷ்பு போன்றவர்களை இலக்கிய விழாவுக்கு அழைத்தவர்களை வன்மையாக கண்டிக்கிறோன்.

அன்புடன்
ரா.கிரிஷ்

Anonymous said...

I am going to release a book n Kushboo. Kushboo will receive the first copy from Thirumavalavan and Kanimozhi will speak about the book. How is that. Who knows by now Kizhaku might have published books on Kushboo, Thiruma and Kanimozhi.

IdlyVadai said...

குமுதம் ரிப்போட்டர் கவரேஜ் சேர்க்கப் பட்டுள்ளது

seethag said...

a woman without any political ,family, caste support is trying to survive...so there will eb lots of issues. sometimes she may be right sometimes she may make mistakes...no one will give her a chance..i support kushboo. this function may have ahd problem..but just imagine what she went through??i am not surewhta thiruma is sayign..he has doen a somersault now..until they chase her out these charcters are not going to be quiet..