பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2007

கலைஞர் இரங்கல் பா - இளங்கோவன் கடும் தாக்கு

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விஷயம் தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியை மத்திய அமைச்சர் இளங்கோவன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் பிறந்தநாள் விழா சத்யமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மறைந்த தலைவரின் உருவ படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியது..

மறைந்த மரகதம் சந்திரசேகர், தமிழக காங்கிரசுக்கும், அகில இந்திய காங்கிரசுக்கும் பாலமாக விளங்கினார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று டெல்லிக்கு தெரியவில்லை.

ராஜீவ் காந்தியை எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொன்றார்களோ, அதே இயக்கத்தைச் சேர்ந்தவர் இறந்ததற்காக இங்கு ஊர்வலம் நடத்துகிறார்கள். போஸ்டர் ஒட்டுகிறார்கள். பெரிய பதவி வகிப்பவர்கள் இரங்கல் பா பாடுகிறார்கள், அதை அரசு துறையே வெளியிடுகிறது. இது எவ்வளவு பெரிய அவலம். கேட்டால், தமிழ் உணர்வு என்கிறார்கள். இந்த இயக்கத்தால் எத்தனையோ அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அவர்களுக்கு தமிழ் உணர்வு இல்லையா? நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் உறங்கி கொண்டிருக்க வேண்டும், அடங்கி கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாத போது, நம்மை அரசில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்க்கும் போது நாம் சேராமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

தினந்தோறும் வன்முறை நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சின்ன சம்பவம் என்று எடுத்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆமாம் சாமி போடுவதற்காகவா நாம் காங்கிரசில் இருக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றால் சிலருக்கு கோபம் வருகிறது. நீங்கள் ஆட்சிக்கு வரும் போது அதையெல்லாம் தடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதை நான் சொன்னால் இளங்கோவனை அடக்கி வையுங்கள் என்று சொல்கிறார்கள்.

நான் அடங்கி, ஒடுங்கி தான் போய் கொண்டிருந்தேன். விடுதலைப்புலிகளை ஆதரித்து, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் நடத்துவதை பார்க்கும் போது எப்படி சும்மா இருக்க முடியும்?
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நாம் எப்படி மன்னிக்க முடியும்? ராஜீவ் கொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று அந்த அமைப்பின் தலைவர் ஆணவமாக பதில் கூறியிருக்கிறார்.

தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க நாம் என்ன அடிமைகளா? நாம் ஜால்ட்ரா அடித்து கொண்டே இருக்க வேண்டுமா? வெள்ளைக்காரர் களிடமிருந்து அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த நாம் இப்போது அடிமையாக இருக்க வேண்டுமா?

முதல்வருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த போக்கை வளரவிட்டால் நமக்கே ஆபத்தாகத்தான் முடியும். நாம் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி கொண்டிருக்கிறோம். விரைவில் விடிவுகாலம் வரும்.

0 Comments: