பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 28, 2007

பூனைக்கு மணி கட்டினார் மலைச்சாமி

தமிழ் மொழிபெயர்ப்பாளர் பல மாதங்களாகவே இல்லாமல் இருந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய பாய்லர் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக எம்.பி.,யான மலைச்சாமி தமிழிலேயே தொடர்ந்து பேசினார். இதை மொழி பெயர்க்க ஆள் இல்லாத காரணத்தாலும் மற்ற எம்.பி.,க்கள் விழித்தனர்.

பார்லிமென்ட்டின் இரு அவைகளிலுமே அந்தந்த மாநில மொழிகளில் எம்.பி.,க்கள் பேசலாம். இவர்கள் தங்களது தாய்மொழியில் பேசும்போது, அதை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மொழிபெயர்க்க ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். குறிப்பிட்ட எம்.பி., என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை உடனுக்குடன் இந்த ஊழியர்கள் மொழிபெயர்த்து மைக்கில் ஒலிபரப்புவர். இதனால், தங்களது சொந்த மொழிகளில் பிரச்னைகளை பேசும் வாய்ப்பு எல்லா எம்.பி.,க்களுக்குமே உண்டு.ஆனால் ராஜ்யசபாவில் பணியாற்றி வந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று ஒரு ஆண்டு ஆகும் நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் பலமுறை முறையிட்டும், கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும்படி விளம்பரம் வெளியிட்டும் யாரும் வரவில்லை என ராஜ்யசபா அலுவலகம் காரணம் கூறியதாக தெரிகிறது. பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் இந்த பிரச்னை நேற்று ராஜ்யசபாவில் வெடித்தது. நேற்று மதியம் ராஜ்யசபாவில் இந்தியன் கொதிகலன் சட்ட மசோதா மீது அதிமுக வைச் சேர்ந்த மலைச்சாமி எம்.பி., பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.அப்போது எழுந்த அவர், முதலில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். "ராஜ்யசபாவில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லை என்ற குறையை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளோம். அதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பல காரணங்களை கூறி இப்பிரச்னை இழுத்தடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை எனகூறி விளம்பரம் செய்யப்பட்டதாகவும், ஆட்கள் கிடைக்கவில்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. விளம்பரம், எங்கு எந்த நாளிதழில் தரப்பட்டது? தமிழ் நாளிதழ்களில் அல்லவா விளம்பரம் செய்திருக்க வேண்டும்? நிரந்தரமான பணி இது என்ற போதிலும் இப்பிரச்னை "ஜெனரல் பர்ப்பஸ்' கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது போல தெரியவில்லை. போகாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது. எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதை தவிர்க்க நினைக்கிறீர்கள். இன்று என்ன ஆனாலும் சரி. பூனைக்கு மணி கட்டும் நடவடிக்கையாக நான் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் தான் பேசப் போகிறேன்' என்று கூறினார். மலைச்சாமியின் இந்த திடீர் தாக்குதலால் பிற எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.,க்கள் மத்தியில் உற்சாகம் கிளம்பியது. அவர்கள் பலத்த ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் தமிழில் பேச ஆரம்பித்தார் மலைச்சாமி. "தமிழ் தொன்மையான மொழி. தனித்தன்மையான மொழி. இனிமையான மொழியும்கூட. காட்டுமிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலங்களில் கூட எனது தமிழன் ஏடு கொண்டு இலக்கியம் படைத்துள்ளான். அப்படி கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழிதான் எங்களது அருமை தமிழ்மொழி' என்று பேசிவிட்டு தமிழ் மொழியின் சிறப்பு குறித்த பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒன்றை சரளமாகக் கூற, அவையில் பரபரப்பு கூடியது.

மலைச்சாமி என்ன பேசுகிறார் என்பதை புரியாமல் பிற எம்.பி.,க்கள் முழித்தனர். எம்.பி.,யின் பேச்சை எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாமல் ஊழியர்களும் பார்த்துக் கொண்டிருக்க அவைத் தலைவர் இருக்கையில் இருந்த சந்தோஷ் பகரூடியா," மிஸ்டர் மலைச்சாமி, நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். ஆனாலும், நீங்கள் தமிழில் பேசுவதால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை' என்று கூறினார். ஆனால் பிற தமிழக எம்.பி.,க்கள் சையதுகான், அன்பழகன், கோவிந்தராஜர், மைத்ரேயன், திருச்சி சிவா, சுதர்சன நாச்சியப்பன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் அனைவரும் மலைச்சாமிக்கு ஆதரவாகவும் அவரை தமிழிலேயே பேசும்படியும் உற்சாகப்படுத்தினர்.

அவையில் திடீரென கிளம்பிய இந்த பரபரப்பால் சற்று கூச்சல் கிளம்பியது. "மலைச்சாமி தமிழில் பேசுவதில் நியாயம் உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னை வேண்டுமென்றே காலம் கடத்தப்படுவது முறையல்ல' என கர்நாடக, ஆந்திர மாநில எம்.பி.,க்கள் உள்பட பலரும் எழுந்து குரல் கொடுத்தனர். பின்னர் இறுதியாக மலைச்சாமி, " தமிழ் மொழிபெயர்ப்பாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அடையாளப்படுத்தவே தமிழில் தொடர்ந்து பேசினேன். அனைத்து எம்.பி.,க்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே இனி நான் இந்த மசோதா மீது ஆங்கிலத்திலேயே எனது உரையை தொடர்கிறேன்' என்று கூறிவிட்டு கொதிகலன் மசோதா மீது ஆங்கிலத்தில் பேசி முடித்தார். இதனால், ராஜ்யசபாவில் எழுந்த திடீர் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
( செய்தி: தினமலர் )

4 Comments:

வால்பையன் said...

என்ன கொடும சார் இது!
எம்.பி , எம்.ல், ஏ -க்கள் கூடும் இடம் என்றாலே அடிதடியும் , மைக் பறக்கும் காட்சி தான் ஞாபகத்துக்கு வரும், உயிருக்கு உத்தரவு இல்லாத ஒரு வேலைக்கு யார் மனு போடுவார்கள்,
எங்களுக்கும் Z பிரிவு பாதுகாப்பு தருவதாக சொல்லுங்கள், நான் கூட மனு போடுகிறேன்

வால்பையன்

முத்துகுமரன் said...

வாழ்த்துக்கள் மலைச்சாமி.

Hariharan # 03985177737685368452 said...

செம்மொழி கண்டான், நவீன ராஜராஜசோழன், கனிமொழியப்பர் கருணாநிதிதானே ஆளும் மத்திய கூட்டணி அரசின் பிதாமகர்!

அதுசரி தமிழின் தமிழ் கருணாநிதி கட்டுப்பாடு மிகுந்த மகன் அழகிரிக்கு பதவி பரிந்துரைக்கலாம்னு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது ஆப்டர் ஆல் மொழி பெயர்ப்பாளர் தட்டுப்பாடு மேட்டரே இல்லை!

ஆரியத்தலைமை கொண்ட அதிமுக கட்சியின் மலைச்சாமி இப்படி சைக்கிள் கேப்பில் தமிழ் மொழிப் பற்றைக் காட்டுவது காப்பிரைட் தமிழ் ஆக்ட்(டிங்) படி குற்றம்!

Anonymous said...

"செம்மொழி கண்டான், நவீன ராஜராஜசோழன், கனிமொழியப்பர் கருணாநிதிதானே ஆளும் மத்திய கூட்டணி அரசின் பிதாமகர்!"

hariharanai naan vanmaiyaga kandikkiren.. "kanimozhiyappar"..ithu correct... "chemmozhi kaNdaan"..appo naama ellam vEramozhi kaNdavargaLaa :D.. athu saringa hariharan..yaarathu "naveena rajaraja chozhan"? yemba vootla sollittu vanthittaya..varalaaru.com-la sollidava..:D