பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 16, 2007

கருணாநிதியை கைது செய்ய வேண்டும் - ஜெ பேட்டி

ஜெயலலிதா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்..


கேள்வி:_ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே. இதுகுறித்து உங்கள் நிலை என்ன?

பதில்:_விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கம் ஆகும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் தேசவிரோதிகள், தேசதுரோகிகள். தேசதுரோக செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சிலர் மீது பாய்வது ஏன் என்று புரியவில்லை.

விடுதலைபுலிகள் இயக்கத்தின் செயல்பாட்டையும், புலிகளின் தலைவர்களில் ஒருவரின் மறைவுக்கும் தமிழ்நாடு முதல்வர், தமிழக அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி, செய்தித்துறையின் மூலம் இரங்கல் வெளியிட்டுள்ளார். இதற்காக கருணாநிதியைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை?.


கேள்வி:சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழகம் முழுவதும் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறதே...


பதில்:_எந்த வகையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாலும் அது தேச துரோகம் தான். விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேரணி, ஆர்ப்பாட்டம் என எதுவும் நடத்தக்கூடாது. இத்தகைய பேரணிகளுக்கு அரசு அனுமதி அளித்தால் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும். விடுதலை புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க.தெளிவாக இருக்கிறது. அதுபோல் மத்திய அரசின் நிலையும் தெளிவாக இருக்க வேண்டும்.

கேள்வி: வைகோ கைதால் உங்கள் கூட்டணி பாதிக்குமா?

பதில்: தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியைப் பற்றி பேசுவோம். சிந்திப்போம். இப்போது எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும், காங்கிரசானாலும், பாரதீய ஜனதாவானாலும் ஒரு காலகட்டத்தில் வைகோவின் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. என்னை பொறுத்தவரை இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது.

கேள்வி:காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு குறித்து...

பதில்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணசாமியை மனிதாபமான அடிப்படையில் தான் சந்தித்தேன். அவரை எனக்கு பல ஆண்டுகளாகத்தெரியும். முன்னதாக காங்கிரசுடன் உறவு வைத்திருந்தபோதிலிருந்தே அவர் எனக்கு நல்ல நண்பர்.

கேள்வி: கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறதே?

பதில்:_முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அணை தொடர்பாக நாங்கள் ஆட்சியில் இருந்தபோது உச்சதிமன்றத்துக்கு சென்று ஆணையை பெற்றோம். அதன்பிறகு வந்த மைனாரிட்டி தி.மு.க.அரசு எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. முல்லைப்பெரியாறு அணை, பாலாறு பிரச்சனை போன்ற மக்கள் பிரச்சனைகளில், ஜீவாதார பிரச்சனைகளில் இந்த அரசு கவனம் செலுத்துவதில்லை.

கேள்வி:நந்திகிராமத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:நந்திகிராமத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலையை அளிக்கிறது. மேற்கு வங்க மாநில அரசு இத்தகைய வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுக்கு அடங்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட வேண்டும்.

கேள்வி:_2011_ல் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாமல் பா.ம.க.தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க.நிறுவனர் கூறியுள்ளாரே?

பதில்: (சிரித்துவிட்டு) கனவு காண்பதற்கு அனைவருக்குமே உரிமை உண்டு.

கேள்வி:_அணு சக்தி ஒப்பந்தத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:_அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாக குரல்கொடுத்த இந்தியாவின் முதல் அரசியல்வாதி நான்தான். அ.தி.மு.க. இதனை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மத்திய அரசு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறது. அடிக்கடி உங்கள் நிலைப்பாட்டை ஏன் மாற்றிக்கொள்கிறீர்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சில நெருக்குதல் காரணமாக தேர்தல் விரைவில் வரத்தான் செய்யும்.

கேள்வி:_தேர்தல் விரைவில் வரும் என்று எப்படி சொல்கிறீர்கள்
?

பதில்:எல்லாவிஷயங்களையும் விவரமாக சொல்லிவிடமுடியாது. எனக்குத்தெரியும் விரைவில் தேர்தல் வரும் என்று.

கேள்வி:3அணி எப்போது அமையும்?

பதில்:3வது அணி என்று ஒன்று இல்லை.

கேள்வி: தி.மு.க.வின் நெல்லை மாநாடு பொறுப்பு முதல்வரை அறிமுகப்படுத்ததான் என்று கூறப்படுகிறதே...

பதில்:அதுதான் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதே.

கேள்வி:_குஜராத் முதல்வர் மோடி பதவி விலகவேண்டும் என்று கோரப்படுகிறதே?

பதில்:_இனிமேல் பதவி விலகுவது எதற்காக. தேர்தல் தான் வருகிறதே.

கேள்வி:_தமிழகத்தில் சட்டம்_ஒழுங்கு எப்படி உள்ளது?

பதில்:_தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்தான் உள்ளது.

கேள்வி:_புதிய தொழிற்கொள்கை குறித்து உங்கள் கருத்து.

பதில்:_இது அர்த்தமற்ற ஒன்றாகும். புதிய தொழிற்கொள்கையின் மூலம் பல அறிவிப்புகளை செய்திருக்கிறார்கள். ஆனால் அதனை செயல்படுத்தும்வரை இந்த அரசு தொடராது.

கேள்வி:_பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது....

பதில்:_பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நான் முதல்வராக இருந்தபோது 2006_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பிறகு தேர்தல் வந்துவிட்டது. ஆட்சிமாற்றமும் ஏற்பட்டுவிட்டது. இதற்கு வேண்டிய தீர்வு காண தி.மு.க.அரசு எந்தவிதத்திலும் சிந்திக்கவில்லை.

கேள்வி:_உங்களுக்கு இப்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதா?

பதில்:_ஏதோ அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுவதில்லை.

2 Comments:

Thanjai Ram said...

கவலைப்படதவர் உச்சநீதிமன்றத்தில் பெரிய லிஸ்ட் கொடுத்தார்

Anonymous said...

///கேள்வி: தி.மு.க.வின் நெல்லை மாநாடு பொறுப்பு முதல்வரை அறிமுகப்படுத்ததான் என்று கூறப்படுகிறதே...

பதில்:அதுதான் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதே.////

யாரு ? கனி மொழி ??

குடும்பத்த காபந்து பண்ணுறதில... மு. க வா விட சிறந்தவர் இருக்க முடியாது....