பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2007

திமுக அரசு மைனாரிட்டி அரசு தான் - ராமதாஸ்

அதிரடி அரசியலுக்குப் பேர் போனவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே ஆளுங்கட்சிக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வரும் இவர், சமீபத்தில் ‘எதிர் வரும் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இடம் பெறாத மாற்று அணி ஒன்றை உருவாக்கி, பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் வகையிலான திட்டம் தீட்டி வருகிறோம்’ என்றொரு தகவலை வெளியிட்டு, அரசியல் களத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளார்.

பலருக்கு வியப்பையும், சிலருக்குத் திகைப்பையும் கொடுத்துள்ள இந்த அறிவிப்பு பற்றி விளக்கமறிய ராமதாஸை தைலாபுரத்திலுள்ள அவர் வீட்டில் சந்தித்துப் பேசினோம். தனது கம்ப்யூட்டரில் பூச்செடிகளை ஸ்கேன் செய்தபடி நமது கேள்விகளை எதிர் கொண்டார்.தமிழக அரசியலில் நீங்கள் மட்டுமே முக்கியப் புள்ளியாக இருக்கிறீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு உரிய இடத்திலிருந்து உரிய மதிப்பு உடனடியாகக் கிடைத்து விடுகிறது! இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?

‘‘எங்களது பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருவதால் மட்டுமே இது சாத்தியமானது. அதாவது எதையும் தீர்க்கமாக யோசித்து, அதை எங்கள் அரசியல் குழுவில் தீவிரமாக விவாதித்து, மக்களுக்கான பிரச்னைகளைக் கையிலெடுத்து போராட்ட வடிவம் வரை கொண்டு செல்வதால்தான் இது சாத்தியமாகிறது.’’

இப்படியெல்லாம் தீர்க்கமாக யோசிக்கும் உங்கள் கூட்டணி தர்மம் மட்டும் குழப்பமாக இருக்கிறதே?

‘‘கூட்டணி என்பது பற்றிய விளக்கத்தை நான் நிறைய முறை விரிவாகவே சொல்லி விட்டேன். இப்போது தமிழகத்தில் செயல்படுவது கூட்டணி அரசு அல்ல. கூட்டணியும் அல்ல. தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு வைத்திருந்தோம். அது தேர்தலோடு முடிந்து விட்டது. இப்போது இருக்கின்ற அரசு சிறுபான்மை அரசு. இதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், எங்களின் கூட்டணி இருந்தால்தான் ஆட்சியை தி.மு.க. தொடர முடியும் என்ற நிலையிருப்பதால் ஆதரவு கொடுத்திருக்கிறோம். இந்த ஆதரவை, எந்தச் சூழ்நிலையிலும் வாபஸ் பெற மாட்டோம். அதே சமயம், எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம். இதில் எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. சில ஊடகங்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொன்னால், எங்களுடைய கொள்கை வேறு. வழிமுறை வேறு. இலக்கும் வேறு. எங்களுக்கென்று தனிப்பாதை இருக்கிறது. இப்படியிருக்கையில், கூட்டணி என்று சொல்லிக் குழப்புவதில் அர்த்தமே இல்லை. இப்போதைய அரசு குறைந்தபட்ச செயல்திட்டமோ, அதற்கான குழுவையோ நியமிக்காத நிலையில், நாங்கள் அரசை விமர்சிக்க மட்டுமே செய்வோம். எங்கள் விமர்சனம் சில சமயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு தர்ம சங்கடத்தைத் தரலாம். அதே சமயம், எங்கள் விமர்சனத்தை முதல்வர் கலைஞர் சரியாகப் புரிந்து கொள்கிறார். இது போதும்.’’

உங்களைப் புரிந்து கொண்ட முதல்வர் கலைஞர் தானே ‘மதியாதார் வாசல் மிதியாதே’ என்றெல்லாம் கேள்வி பதிலில் கூறியிருந்தார்?

‘‘கலைஞர் அதை எந்தச் சூழ்நிலையில், யாரைக் குறிப்பிட்டு, எதற்காகச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. இதை எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.’’

அதிருக்கட்டும். தி.மு.க. கொண்டுவர நினைக்கும் துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம், நெய்வேலி அனல் மின்திட்டம் போன்றவை பா.ம.க.வின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் வகையில் உங்கள் ஏரியாவில் கொண்டு வருவதால்தானே எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?

‘‘அப்படிச் சொல்ல முடியாது. ஓசூர், மதுரை போன்ற நகரங்களில் கூட சில திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். டைட்டானியம் தொழிற்சாலை விவகாரத்தில் 2000 பெண்களை அழைத்து, முதன் முதலில் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்தது நான்தான். ஆக, மக்களைப் பாதிக்கும் விதத்தில் எங்கு பிரச்னை வந்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். அதே சமயம், பா.ம.க.வின் வாக்கு வங்கி தமிழகம் முழுக்க வியாபித்துள்ள நிலையில், இந்தக் கேள்வியே தவறாக இருக்கிறது. மேலும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் கூடவே கூடாது என்பதற்காக, முதன்முதலாக மாபெரும் மாநாடு நடத்தியதும் நாங்கள்தான். இந்த மண்டலம் எங்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்துத் தொடங்கப்பட்ட திட்டமல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.’’

இதற்கிடையில் நீங்கள் பல்வேறு திட்டங்களை அறிக்கையாகக் கொடுத்து வருகிறீர்கள். மாதிரி பட்ஜெட்டைக் கூட பல வருடங்களாகக் கொடுத்து வருகிறீர்கள். இதில் எதையாவது தி.மு.க. தலைமை படித்துப் பார்த்து விளக்கம் கேட்டுள்ளதா?

‘‘நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு அறிக்கையையும் எல்லா அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை அது பற்றி யாரும் விளக்கமும் கேட்டதில்லை; வினாவும் எழுப்பியதில்லை. இவர்கள் இதையெல்லாம் படிக்கிறார்களா என்பதும் சந்தேகம்தான். அதே சமயம் எல்லாத் திட்டங்களையும் கலைஞர் படிக்கிறார் என்று மட்டும் தெரியும்.’’

கலைஞர் ஆட்சியில் காவல்துறையும், கல்வித் துறையும் கெட்டுக் கிடக்கிறது என்று பகிரங்கமாகச் சொல்லி வருகிறீர்கள். மற்ற துறைகளில் குறைகளே இல்லை என்று கருதுகிறீர்களா?

‘‘எல்லாத் துறைகளிலும் குறை இருக்கத்தான் செய்கிறது. மணல் பிரச்னையிலிருந்து வேளாண் பிரச்னை வரை பலவற்றிலும் குறை இருக்கவே செய்கிறது. எல்லா சர்க்கரை ஆலைகளிலும் ஒரு மாதத்தில் கரும்பை வெட்டி அதற்குரிய பணத்தைக் கொடுப்பதாக அமைச்சர் சொல்ல முடியுமா? இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.’’

இந்தப் பிரச்னையை மனதில் வைத்துத்தான் சேலம் ரயில்வே கோட்ட விழாவில் வீரபாண்டி ஆறுமுகத்தை அவமானப்படுத்தினீர்களாக்கும்?

‘‘அவர் ஊரில் நடந்த அந்த விழாவில் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறோம். உண்மையைச் சொல்லப்போனால், அவர்தான் எங்கள் கட்சியையும் பா.ம.க. நிர்வாகிகளையும் பல சூழ்நிலைகளில் புறக்கணித்து அவமானப்படுத்தி வந்துள்ளார். சேலம் தொகுதியின் முடிசூடா மன்னரான அவர், எவ்வளவு பெரிய அமைச்சர்? அவரை நாங்கள் அவமானப்படுத்த நினைக்கக்கூட முடியாதே!’’

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செல்வாக்கு வளர்ந்து வருவதை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?

‘‘சில கேள்விகளுக்கும், சிலரைப் பற்றிய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வதைத் தவிர்த்து வருகிறேன். புரிகிறதா?’’

சரி, பொதுவான கேள்வி ஒன்று. நடிகை குஷ்பு போன்றவர்கள் ஆதரிக்கும் பாலியல் கல்வி அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

‘‘இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். பரவலான கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு அமலாக்கப்படவேண்டிய விஷய மிது. நமக்கு அடிப்படை பாலியல் கல்வி வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதே சமயம், இந்தக் கல்வியை, எந்த வகுப்பிலிருந்து போதிப்பது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இந்தக் கல்வியில் ரொம்ப முழுமையாகப் போகாமல் ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றி அதன் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் மட்டும் இருந்தால் நல்லது.’’

இப்படி பல விவகாரங்களுக்கும் ‘பளிச்’ என்று பதில் சொல்லும் நீங்கள் முதல்வராக, கலைஞர் வாழ்த்தெல்லாம் கூறியிருந்தார். அந்த வாழ்த்தில் கிண்டல் அல்லது உள்நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

‘‘கலைஞர் என்னைக் கிண்டல் அல்லது உள்நோக்கத்துடன் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவர் வாழ்த்து உண்மையானது. பலிக்கக் கூடியது. வசிஷ்டர் வாயால் வாங்கிய வாழ்த்து அது. மனதாரத்தான் அவர் வாழ்த்தியிருக்கிறார்!’’

உங்களின் போக்கு தி.மு.க.வுக்கு எதிராகப் போவது போல் வெளிப்படையாகவே தெரிகிறதே?

‘‘உண்மையில் தி.மு.க.தான் பா.ம.க.வுக்கு எதிராகப் போவது போல் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆற்காட்டார் சமீபத்தில் தனித்துப் போட்டியிட்டு 150 இடங்களைப் பிடிப்பது நிச்சயம் என்கிறார். அதை தலைவர் கலைஞர் ஆமோதித்துக் கொள்கிறார். இப்போதெல்லாம் வளர்ந்த கட்சிகள் மட்டுமன்றி, நேற்று கட்சி ஆரம்பித்தவர்களே தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. இதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.’’

நீங்கள் ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் என்ற பெயரில் தி.மு.க.வுக்கு தர்மசங்கடத்தைத் தொடர்ந்து கொடுக்கிறீர்கள். உண்மையில் இந்த ஆட்சி உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

‘‘நான் எப்போதும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பவன் என்று எல்லோருக்குமே தெரியும். மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசி வருவதால் நல்லதும் நடந்துள்ளது. கெட்டதும் நடந்துள்ளது. என் கருத்து தி.மு.க.வுக்கு மனக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கலாம். அதற்காக என் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இதே ஆட்சியில் சில நல்ல விஷயங்கள் நடந்த போது பாராட்டியும் இருக்கிறேன். ஆக, ஆட்சி பற்றி புதிதாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை.’’

இதற்கிடையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கி தலைமை தாங்கப் போவதாக அறிவித்துள்ளீர்கள். அதற்கான தகுதி பா.ம.க.விற்கு இருக்கிறதா என்ன?

‘‘இந்தக் கேள்விக்கு நான் கொஞ்சம் விரிவாகவே பதில் சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு கட்சியும் யாருக்காவது துணைக் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நான் முன்னரே சொன்னது போல் இரண்டு பேர் சேர்ந்து நேற்று கட்சி ஆரம்பித்துக் கொண்டு, ஒருவரையருவர் வருங்கால முதல்வர் என்று அழைத்துக் கொள்ளும் போக்குதான் இருக்கிறது. இந்நிலையில், நாங்கள் 1989_ல் பா.ம.க.வை ஆரம்பித்து 18 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் துணை போயிருக்கிறோம். இதெல்லாம் ஒரு துணைக் கட்சியாகச் செயல்பட்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது பா.ம.க. ஒரு முழுமையான அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்துவிட்டது. முன்பு எங்களுக்கு வடக்கே மட்டும் பலம் இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது பா.ம.க. வடக்கில் மட்டுமின்றி தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

இந்த முழுமையை அடைய தீவிரமாக உழைத்து வருகிறோம். இங்குள்ள பெரிய கட்சிகள் காட்டாத உழைப்பை, வியர்வையை, ரத்தத்தைச் சிந்தி வளர்ந்து வருகிறோம். அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடு நடத்தியிருக்கிறோம். அத்தனை தொகுதிகளுக்கும் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் அமைப்பும், கட்சியும் இருக்கப் போய்த்தானே இது சாத்தியமாகி இருக்கும்.

அடுத்து, சமய சமுதாய நல்லிணக்க மாநாடு. கிட்டத்தட்ட 14 மாநாடு நடத்தியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு மதத் தலைவர்களை ஒருங்கிணைத்தோம். இதையடுத்து தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னையான நதிநீர் விவகாரத்தில் அதிரடியாக பல போராட்டங்கள் நடத்தினோம். முல்லைப் பெரியாறு விஷயத்திற்காகவும் காவிரி, பாலாறு பிரச்னைக்காகவும் போராட்டம், வழக்கெல்லாம் நடத்தி வருகிறோம். அது போல் மொழி என்று எடுத்துக்கொண்டால், ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முழக்கம்’ என்ற நிலை மாறி மறைந்து விட்டது. ஆட்சி மொழி, பயிற்சி மொழியில் மட்டுமின்றி விளம்பரப் பலகை தொடங்கி சின்னத் திரை, பெரிய திரை, ஊடகங்களிலும் தமிழ் மொழி காணாமலே போய்விட்டது. இதற்காகக் குரல் கொடுத்த பா.ம.க.வின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.

அதுபோல கடந்த ஐந்து வருடங்களாக மாற்று நிதி நிலை அறிக்கை கொடுத்து வருகிறோம். சில அறிக்கை, அரசின் அறிக்கையை விட நிறைவாக இருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். மேலும் தொழில் கொள்கை, விவசாயக் கொள்கை, ஊரக வளர்ச்சிக் கொள்கை போன்றவற்றின் தொலை நோக்குத் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.

எங்களது அறிக்கைகளை நடைமுறைப்படுத்தினாலே தமிழகம் பொற்காலத்தை அடைந்துவிடும். அந்த அளவிற்கு சிறப்பான திட்டங்கள் அவை. மேலும் ‘தமிழ்நாடு உழவர் பேரியக்கம்’ என்று அரசியல் கலப்பில்லாத அமைப்பை ஆரம்பித்து வேளாண் வளர்ச்சிக்குக் குரல் கொடுத்து வருகிறோம். ‘பசுமைத் தாயகம்’ மூலம் ஆறுகளைக் காக்க போராடியுள்ளோம். ஏரிகளில் தூர்வாரி உள்ளோம். மக்களுக்கான பிரச்னைகளில் தீர்வு காண நாங்கள் போராடிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இது போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை, பண்பாட்டுக் காவலரா அதாவது மாரல் போலீஸா என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஆம்... அந்தப் பட்டத்திற்கு நான் தகுதியானவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இவை மட்டுமின்றி பல ஆண்டுகளாக நிர்வாகிகளுக்குப் பயிலரங்கு நடத்தும் ஒரே கட்சி நாங்கள்தான். இப்படி பல நிலைகளைக் கடந்து வரும் எங்களுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று இப்போது சொல்லுங்கள்!’’

இதெல்லாம் களப் பணிகள். ஆனால் மாற்று அணித் தலைவராக மற்ற கட்சிகள் உங்களை ஒப்புக் கொள்ளுமா?

‘‘அதைப் பற்றி இப்போதே ஏன் சிந்திக்க வேண்டும்? இந்த அணி 2011_ல் வரப் போகும் தேர்தலுக்கு உருவாகப் போகும் அணி. அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு மற்ற கட்சிகளுடன் கலந்து பேசுவதுதான் சரியாக இருக்கும். அதுவரை எங்கள் கட்சியைப் பலப்படுத்தவும், வளப்படுத்தவும், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி அவர்களிடம் நெருக்கத்தைக் காட்டி அங்கீகரிக்க வைக்கவும் பாடுபட்டு வருவோம்!’’
(நன்றி: ரிப்போட்டர் )

1 Comment:

R.Subramanian@R.S.Mani said...

Very mischievious by simply saying thanks to REPORTER; Is it from your REPORTER AS EXCLUSIVE FOR IDLY vADAI OR republished the matter from KUMUDAM REPORTER ? - SUPPAMANI