பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

மூக்கு மேல் விரல் வைப்பீங்க - கேப்டன் பேட்டி

ஜூவியில் கேப்டன் பேட்டி. படித்த பின் மூக்கு மேல விரல் வைப்பீங்க !

‘அரசியல் என்பது குப்பை’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ‘குப்பையே அரசியலாகி’ தி.மு.க. அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டி ருக்கும் காலம் இது!

சென்னை மாநகரே குப்பைமேடாக மாறிய நிலையில், ‘இரண்டு நாள் அவகாசம் தருகிறேன். மொத்தக் குப்பையும் அள்ளப்படவில்லை என்றால், நானே என் கட்சித் தொண்டர்களுடன் குப்பை அள்ளுவேன்’ என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டமாக அறிக்கை விட்டார்.

அடுத்த நாளே அம்மா அறிக்கைவிட... அ.தி.மு.க. வி.ஐ.பி-க்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குப்பை அள்ள ஆரம்பித்தார்கள். அவ்வளவுதான்... மாநகராட்சியும் போலீஸுமாகச் சேர்ந்துகொண்டு மளமளவென முடிந்தவரை குப்பை அள்ள ஆரம் பித்துவிட்டனர்.

இப்படி ‘குப்பை’யைக் கிளறிவிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள வங்கி ஒன்றில் கூலாக ‘அரசாங்கம்’ படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த்திடம்,‘‘என்ன சார், நீங்க குப்பை அள்ளப் போகலையா?’’ என்று கேட்டோம்.

சிரித்துக்கொண்டே, ‘‘நான் வெறும் அரசியல் ஸ்டன்ட் அடிக்கறதுக்காக அப்படிச் சொல்லலை. என் வீட்டுக்குப் பக்கத்தில் மலைபோல குப்பை தேங்கியிருக்கு. அதுக்குப் பக்கத்துல சட்டையே போடாம ஒரு குழந்தை... அதை முழுக்க முழுக்க ஈ மொச்சுக்கிட்டிருந்தது. அந்தக் குழந்தையை அங்கே இருந்து தூரே எடுத்துட்டுப் போனேன். கொஞ்ச நேரத்துல குழந்தையோட தாய் அங்கே வந்தாங்க. அதுக்குள்ள என் கட்சிக்காரங்களும் வந்துட்டாங்க. ‘ஊர் முழுக்கக் குப்பை அள்ளலை. வேறே ஒரு கம்பெனிக்கு கான்ட்ராக்ட் விட்டதில் ஏதோ குளறு படியாம்’னு புலம்பலா சொன்னாங்க.

உடனே சென்னை மாநகராட்சியில் இருக்கிற எங்க கட்சி கவுன்சிலர்களை வரவழைச்சுப் பேசி னேன். அதுக்குப் பிறகுதான் ‘குப்பையை நானே அள்ளுவேன்’னு அறிக்கை விட்டேன். என்னோட அறிக்கைக்குப் பிறகு ரெண்டு கழகங்களும் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பு ஆகியிருக்கு. விஜயகாந்த் ரோட்டுக்கு வந்து குப்பையை அள்ளி பொலிட்டிக்கல் மைலேஜ் எடுத்துடக் கூடாதுங்கிற பயமேகூட, இந்த வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் காரணமா இருக்க லாம்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம் அடுத்த கேள்விகளைக் கேட்டோம் -

‘‘உங்க கவுன்சிலர்கள் சொன்னதை மட்டுமே வச்சு இந்த விஷயத்தில் அரசியல் பண்றீங்களா?’’

‘‘இதுக்காக நான் மாநகராட்சிக்குப் போய் துப்பு துலக்குற வேலையெல்லாம் செய்யலை! என் கட்சிக்காரங்க கிட்டயேதான் என்ன நடந்துச்சுன்னு கேட்டேன். ஏற்கெனவே இருந்த ‘ஒனிக்ஸ்’ கம்பெனிக்காரங்களோட டெண்டர் காலம் முடிஞ்சதும், அவங்களே தொடர்ந்து குப்பை அள்ளுறதா சொல்லியிருக்காங்க. ஆனா, என்ன காரணத்தாலோ அரசாங்கம் ஒப்பந்தத்தை நீட்டிக் கலை. ஏன்னு கேட்டா, ‘டெண்டர்ல அவங்க அதிக ரேட்டு சொல்லியிருந்தாங்க. அதைவிட கம்மியா குப்பை அள்ள சம்மதிச்சவங்களுக்கு டெண்டர் விட்டுட்டோம்’னாங்க. ஏழு வருஷமா குப்பையை அள்ளுனவங்களை, மு.க.ஸ்டாலின் மேயரா இருந்தப்போ வெளிநாட்டுல இருந்து குப்பை அள்ள வந்தவங்களை இப்போ கழட்டிவிட்டது எதுக்காக? சரி, கம்மியான ரேட்டுக்குக் குப்பை அள்ளுறோம்னு சொன்னவங்களால ஏன் குப்பையை அள்ள முடியலை? இது ரெண்டுக்கும் ஒரே பதிலைத்தான் மக்கள் பேசிக்குறாங்க. ‘ஏற் கெனவே இருந்தவங்ககிட்டே கமிஷன் பேசியிருப்பாங்க... படியலைன்னதும் ‘கட்’ பண்ணியிருப்பாங்க. புதுசா வந்தவங்களை வேறு ஏதோ நிர்ப்பந்தங்களால கண்டிப் போடு தட்டிக் கேட்டு வேலை வாங்க முடியாம மாநகராட்சித் தவிக்குது’னு மக்கள் பேசிக்கறாங்க. இதுக்கு வலு சேர்க்கிற மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியும், குப்பை அள்ள விடப்பட்ட டெண்டர்ல முறைகேடு நடந்திருக்கலாம்னு சொல்லியிருக்கு.

சென்னை முழுக்க குப்பை அள்ளுறது திடீர்னு நின்னுப் போச்சுனு இப்ப பரபரப்பா பேசுறாங்க. ஆனா, என் கட்சியோட நாலு கவுன்சிலர்கள் இருக்கற ஏரியாவுல பல மாதங்களாவே குப்பை அள்ளப்படலை. மாநகராட்சி தொடர்பான வேற வேலைகளும் செய்யப்படலை. பிரபாகர்ங்கற கவுன்சிலர் இதுபத்தி பலமுறை புகார் சொல்லியிருக்கார். யாரும் கண்டுக்கலை. பார்த்தாரு... வார்டு மக்கள் சப்போர்டோட, தன் வார்டுல இருக்கற மாநகராட்சியின் சில அலுவலகங்களைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துட்டாரு. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தர் பிரபாகரனிடம், ‘நீ என்ன ரெளடியா? நாங்க நினைச்சா உன்னையும் உன் தலைவரையும் இல்லாமப் பண்ணி டுவோம்’னு மிரட்டியிருக்கார்.

இது மட்டுமில்லை... நான் ஜெயிச்ச விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியையும் இதேபோலத்தான் இந்த அரசு புறக்கணிக்குது. விருத்தாசலம் தமிழ்நாட்டுலதான் இருக்கான்னு எனக்கே சந்தேகம் வருது. தொகுதியோட வளர்சிக்குன்னு சில திட்டங்களைப் போட்டு, அதை அரசுகிட்டே கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை!’’

‘‘யார்கிட்ட கொடுத்தீங்க? ‘எதுவும் செய்யலை, யாரும் சரியில்லை’னு போறபோக்குல அரசாங்கத்தை குறை சொல்றது என்ன நியாயம்?’’

‘‘ஆதாரம் இல்லாம எதையும் பேச மாட்டேன். விருத்தாசலம், ரொம்ப பின்தங்கிய தொகுதி. அதுக்குக் கல்லூரியும், மருத்துவ வசதியும், சாலை வசதியும் கேட்டு முதலமைச்சரை சந்திச்சேன். ‘பார்க்கலாம்’னு சொன்னார். அடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்தேன். ‘கண்டிப்பா செஞ்சு கொடுக்கறேன். இந்த ஆட்சியில அரசியலுக்கு அப்பாற்பட்டுத்தான் மக்கள் பணிகள் நடக்குது’னு பெருமையாச் சொன்னாரு. அப்புறம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., பொன்முடின்னு எல்லாரையும் பார்த்தேன். இதுல பொன்முடி, தான் ஒரு அமைச்சர்ங் கிறதையே மறந்துட்டுப் பேசினார்.

‘என்னய்யா செய்ய முடியும்? எப்படிச் செய்ய முடியும்? கேட்டவுடனே கல்லூரி கட்டறது சாதாரண விஷயமா? பார்க்கலாம், போயிட்டு வாங்க’னு என்னை எடுத்தெறிஞ்சு பேசினார். அந்தப் பொன்முடிக்கு நான் இப்ப சில கேள்விகளை உங்க மூலமா கேட்கறேன்... நலத்திட்ட உதவி வழங்குறதுக்காக கடலூருக்கு முதல மைச்சர் போன இடத்துல கூட்டணிக் கட்சியோட எம்.எல்.ஏ-வான வேல்முருகன் கோரிக்கை வச்சாருனு சொல்லி, திண்டிவனம் - பண்ருட்டி - விழுப்புரத்துல மூணு பொறியியல் கல்லூரிகளுக்கு மேடையிலேயே அனுமதி கொடுத்திருக்காரு முதலமைச்சர். அதே பகுதியில் இருக்கிற விருத்தாசலம் என்கிற பாவப்பட்ட ஊருக்கும் ஏதாச்சும் செய்ய வேண்டியதுதானே? நான் இவங்ககூட கூட்டணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தா, மூணு கல்லூரியையும் விருத்தாசலத்துக்கேகூட கொடுத்திருப்பாங்க!

அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பணி நடந்துகிட்டிருக்குன்னு முதலமைச்சரும், மு.க.ஸ்டாலினும் சொல்றதெல்லாம் சுத்தப் பொய்ங்க!’’

‘‘இதுவரைக்கும் நீங்கள் கையில எடுத்த பிரச்னைகள் தீர்ந்திருக்கா? இல்லை, நேரத்துக்கு தகுந்தமாதிரிதான் நீங்களும் அரசியல் செய்றீங்களா?’’

‘‘எல்லாக் கட்சிகளும் ரெண்டு வாரத்துக்கு முன்னால தென் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்தாங்க. டைட்டானியம் தொழிற்சாலை வரக்கூடாதுன்னு குரலை உயர்த்தினாங்க. ஆளுங்கட்சியோட கூட்டணி போட்டவங்களே தி.மு.க-வை கடுமையா விமர்சிச்சாங்க. அதோட சரி. நான் அந்த விஷயத்தை விடாம பார்த்துட் டிருக்கேன். இப்பத்தான் முக்கியமான நிகழ்வுகள் அங்கே நடந்துட்டிருக்கு.

டாடா செய்யப்போற வேலையை அங்கேயே ரொம்ப வருஷமா செஞ்சிட்டிருந்த வைகுண்டராஜனைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் ஏதேதோ வழிகள்ல முயற்சி செஞ்சது. அவரை ‘தாதா’ன்னு முதலமைச்சரே சொன்னார். ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு போலீஸ் அவரைத் தேடிச்சு. இந்த நிலையில தி.மு.க., தன்னோட மத்திய அமைச்சர்களை விட்டு டாடாவுக்கு ஆதரவா அந்த ஏரியாவுல மக்கள் இயக்கமே நடத்துச்சு. இனி வைகுண்டராஜன் சகாப்தம் முடிஞ்சு போச்சுன்னு அந்த ஏரியா மக்கள் நினைச்சாங்க. என்ன மாயம் நடந்துச்சோ, என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாங்களோ... வைகுண்டராஜன் தன்னோட தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டு நூறு காரோட சொந்த ஊருக்குப் போறார்.

அவர் மேல இருந்த வழக்குகளுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்குது! அவரைத் தேடின போலீஸ், அவருக்கே பாதுகாப்புக் கொடுக்குது. இதுக்கு என்ன காரணம்னு அங்கே இருக்கற மக்கள் கேட்கறாங்க. வைகுண்டராஜனே இனி மணல் எடுத்து பிசினஸ் செய்வாரா? டாடாக்காரங்க வந்து ஃபேக்டரி கட்டுவாங்களான்னு குழம்பிப்போய் இருக்காங்க. இதுல பெரிய கொடுக்கல்-வாங்கல் அரசியல் இருக்குன்னு நான் சொல்றேன். இது தப்புன்னா, இந்த அரசாங்கம் வைகுண்டராஜனோட போட்டுக்கிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னன்னு சொல்லணும். இதை நான் கேட்கலை, தேரிக்காட்டுல இருக்கற மக்கள் கேட்கறாங்க. போறபோக்குல சில தினங்கள்ல தன்னைத் தாதான்னு சொன்ன முதலமைச்சருக்கே வைகுண்டராஜன் சால்வை போர்த்தி ஆசீர்வாதம் வாங்கினாலும் வாங்குவார்னு மக்கள் பேசிக்கறாங்க. அந்தப் பகுதிக்குப் பெரிய தொழிற் சாலை வர்றதை நான் எதிர்க்கலை. டாடா ஃபேக்டரி கட்டட்டும். ஆனா நிலம் கொடுத்தவங்களுக்கு லாபத்துல பங்கு கொடுக்கணும். எல்லாருக்கும் வேலை வாய்ப்புக்கான உறுதியைக் கொடுக்கணும். இல்லேன்னா, நானே களத்துல இறங்கிப் போராடுவேன்!’’

‘‘கூட்டணியே இல்லைனு சொல்லிட்டிருக்கற நீங்க, மூப்பனார் நினைவு இடத்துக்குப் போனப்ப, ‘மூப்பனார் இருந்திருந்தா என்னோட அரசியலே வேற மாதிரி இருந்திருக்கும்’னு பேசியிருக்கீங்களே...’’

‘‘மூப்பனார் தன்னோட தமிழ் மாநில காங்கிரஸை எந்தக் கட்சியோடவும் கூட்டணி இல்லாம நடத்திட்டிருந்தா, நான் கண்டிப்பா அதோட கூட்டணி வெச்சிருப்பேன். அவரோட அரசியல் அட்வைஸைக் கேட்டிருப்பேன். இதை மனசுல வெச்சு சொன்ன வார்த்தைகளை தப்பாப் புரிஞ்சுக்கிட்டு நான் ஏதோ காங்கிரஸோட கூட்டணி சேரப்போறதா எழுத ஆரம்பிச்சுட்டாங்க. காங்கிரஸ்காரங்களும் ‘விஜயகாந்த் இனி நம்ம பக்கம்தான்’னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. நான் மக்களோட கூட்டணி போட்டுக்கிட்டிருக்கேன். எம்.ஜி.ஆர். பேச முடியாம இருந்தப்பவும், தமிழ்நாட்டை நல்லபடியா ஆண்டுக்கிட்டிருந்தாரு. ‘ஊமையாவே ஒருத்தர் ஆட்சி செய்யறாரு’னு ஏளனம் பேசினவங்க, வாய்க்கிழிய இலக்கியத்தையும், இலக்கணத்தையும்தான் பேசினாங்க. அவங்க இலக்கியத்துக்கு மக்கள் மயங்கலை. அவங்களுக்காக வாழ்ந்துட்டிருந்த எம்.ஜி.ஆ-ரைத்தான் நம்பினாங்க. அவர் மக்களை நம்பினார். நானும் நம்புறேன்!’’

‘‘நீங்க இந்த அரசாங்கத்தை எதிர்க்கிற அளவுக்கு பா.ம.க-வும் நல்ல எதிர்க்கட்சியா இருந்து அரசாங்கத்தோட நிறைகுறைகளைச் சொல்லிட்டிருக்கே..?’’

‘‘எங்கே எதிர்த்தாங்க..?! மணல், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம்னு எதிர்த்துட்டிருந்தவங்க, தடாலடியா பல்டி அடிக்கறாங்க. முதலமைச்சருக்கு நன்றி சொல்லி செயற்குழுவுல பா.ம.க. தீர்மானம் போடுது! ‘எதுக்கும் ஒரு எல்லை உண்டு... சும்மா மிரட்டிப் பார்க்காதீங்க... முடிவு எடுக்கும் காலம் வந்துடுச்சு’னு தி.மு.க-வும் பா.ம.க-வுக்கு சவால் விட்டுச்சு. கடைசியில என்னாச்சு? ‘நாங்க சொன்னதெல்லாம் தோழமை கொண்டவங்களுக்கு இல்லை. துரோகிகளுக்கு!’னு முதலமைச்சர் விளக்கம் கொடுக்கறாரு. இவங்க ரெண்டு பேரும் ஊரை ஏமாத்த தங்களுக்குள் எதிர்த்துக்கிடறாங்களான்னு மக்களே குழம்பிப்போய் நிற்கிறாங்க. நான் மக்களுக்காகத்தான் இந்த ஆட்சியைக் கேள்விகள் கேட்கறேன்’’ என்று நிறுத்திய விஜயகாந்த், ஏதோ நினைத்தவராக,

‘‘எல்லோரும் நான் புலம்புறதா நினைச்சுட்டிருக்காங்க. தேர்தல் வரட்டும். என்கிட்ட இருக்குற சில விவரங்களை வெளியிடுறேன். அப்போ எல்லாரும் மூக்கு மேல விரல் வைப்பாங்க’’ என்று பொடிவைத்து முடித்தார் விஜயகாந்த்.
( நன்றி: ஜூவி )

0 Comments: