பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

கல்வி குறித்து ராமதாஸ் பேச்சு

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே புதன்கிழமை தமிழக மாணவர் சங்கத்தினரின் தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது...

"முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் குழு அறிக்கை அளித்து 2 மாதமாகிறது. அதை உடனடியாக வெளியிட்டு, சட்டப்பேரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்ய முடியாவிட்டாலும், வரும் கல்வி ஆண்டிலாவது சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தற்போது கல்வித் திட்டத்தில் நர்சரி கல்வி, மாநிலத் தேர்வு வாரிய முறை, ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன் முறை, மத்திய அரசின் சிபிஎஸ்இ முறை ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கு மாறாக சமச்சீரான, தரமான, கட்டாயக் கல்வி முறையை வழங்க வேண்டும்.

தாய்மொழியில் அதாவது தமிழில், பாடங்கள் போதிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டும் இருந்தால் போதும். ஜெர்மனி, பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை 2 ஆண்டுகளில் கற்கும்போது ஆங்கிலத்தை 12 ஆண்டுகளில் மாணவர்கள் சரளமாகக் கற்க முடியும்.

1966-ம் ஆண்டு மத்திய அரசு கோத்தாரி கமிஷனை அமைத்து கல்வி குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு பணித்தது. இக்குழுவின் அறிக்கை 1967-ல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

குழு அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு அப்போது கூறியது.

இதையடுத்து 1986-ல் தேசிய கல்விக் கொள்கை தீர்மானமும் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தியது.

1988-ல் மத்திய கல்வி வழிகாட்டுக் குழுவும் இதே கருத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 1990-ல் ஆசார்ய ராமமூர்த்தி குழு, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைப்பது குறித்து ஆராய 1993-ல் அமைக்கப்பட்ட யஷ்பால் குழுவும் சமச்சீர் கல்வி மற்றும் அருகமை பள்ளி முறையை வலியுறுத்தியது.

அருகமை கல்வி முறையைக் கொண்டு வருவதன் மூலம் முதலமைச்சரின் வீட்டுக் குழந்தைகளும், ஐஏஎஸ் அதிகாரி வீட்டு குழந்தைகளும் எந்தப் பள்ளியில் படிக்கிறார்களோ, அதே பள்ளியில் மற்ற ஏழை மாணவர்களும் பயில வழி ஏற்படும். ஒரே மாதிரியான பாட திட்டத்துக்கான சமச்சீர் கல்விமுறை, பாகுபாடுகளைப் போக்கும்.

வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சமச்சீர் மற்றும் அருகமை பாட திட்டம்தான் பின்பற்றப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனமும் இதையே வலியுறுத்துகிறது. 40 ஆண்டுகளாகியும் மத்திய, மாநில அரசுகள் இதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.

இதற்குக் காரணம் மக்களுக்கு சமச்சீர் கல்வி முறையை அளிப்பதில் அக்கறை காட்டவில்லை என்பதே ஆகும்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் செப்டம்பர் 8, 2006-ல் முன்னாள் துணைவேந்தர் பி. முத்துக்குமரன் தலைமையில் 10 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இரண்டு மாதங்களாகியும் குழுவின் அறிக்கையை அரசு வெளியிடவில்லை.

குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களுக்கு ஓரளவு மானியம் அளிக்கலாம். இல்லையெனில் அனைத்து பள்ளிகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றினால், அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டத்தைக் கொண்டு வர முடியும்.

தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டாம் என்று அரசு கருதினால் முத்துக்குமரன் குழு அறிக்கையை வெளியிட்டு, விவாதித்து அதை அடுத்த கல்வியாண்டில் நிறைவேற்ற உறுதி செய்ய வேண்டும்

0 Comments: