பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 25, 2007

ஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு - கலைஞர் பேட்டி

சேது சமுத்திர திட்ட பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை முழு திருப்தி அளிக்கவில்லை கருணாநிதி பேட்டி.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்ட முடிவில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் :

கேள்வி:- சேது சமுத்திர திட்டத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வேறு பாதையில் அமைப்பது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதே ஒரு பின்னடைவு இல்லையா?

பதில்:- ஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு தான். அதற்காகத்தான் வேலை நிறுத்தம், முழு அடைப்பு எல்லாம் நடத்துகிறோம். உங்களுடைய உணர்வுகளை நாங்களும் பெற்றிருப்பதால் நிச்சயமாக நாங்கள் நடத்துகின்ற இந்த வேலை நிறுத்தம், கடையடைப்பு இவைகள் எல்லாம் பயன் விளைவிக்கும் என்று கருதுகிறேன்.

கேள்வி:- உச்சநீதிமன்றத்தில் தற்போது இடைக்கால தடை விதித்திருக்கிறார்கள், வேறு பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று யோசிக்கின்றார்கள். இந்த அளவில் வேலை நிறுத்தம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்?

பதில்:- `பந்த்' நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துவது, குரல் எழுப்புவது இவைகள் எல்லாம் அவர்களின் காதுகளில் விழ வேண்டும், அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.

கேள்வி:- பொதுவாக இந்த பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? ஏமாற்றம் அளிக்கிறதா?

பதில்:- எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. முழுமையான திருப்தியும் அளிக்கவில்லை. அதனால் தான் முழு அடைப்பு, வேலை நிறுத்தம்.

கேள்வி:- விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த வேதாந்தி உங்களை பற்றி அவ்வாறு பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார், இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களே?

பதில்:- அவர் அடியோடு மறுக்கவில்லை. நான் சொல்லவில்லை, பகவத் கீதையில் இருப்பதை சொன்னேன் என்று பகவத் கீதையையும் குற்றம் சாட்டியிருக்கிறார்.


கேள்வி:- அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்றுள்ளாரே, அவர் பிரதமரை சந்தித்து இன்றைய தீர்மானங்களை வலியுறுத்துவாரா?


பதில்:- அவர் மின்சாரதுறை பற்றிய கூட்டம் ஒன்றிலே கலந்து கொள்வதற்குத் தான் டெல்லி சென்றிருக்கிறார்.

கேள்வி:- நாங்கள் தி.மு.க.வுடன் சித்தாந்த `போரை' தொடங்கியிருக்கிறோம் என்று இல.கணேசன் கூறியுள்ளாரே?

பதில்:- அவர்கள் நிலைக்கு தமிழ்நாட்டில் `போர்' (ஆழ்துளை கிணறு) தான் தொடங்க முடியுமே தவிர `போர்' தொடங்க முடியாது.


கேள்வி:- பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- தாக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. செய்தது தவறு என்பது தான் என்னுடைய கருத்து.

கேள்வி:- ராமர் குறித்தும், வால்மீகி குறித்தும் தெரியாதவர்கள் இந்தியாவில் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று பா.ஜ.க.வின் அகில இந்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே, இது எந்த வகையில் நியாயம்?

பதில்:- நான் அதை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன். ஏனென்றால் இப்படி சொல்கின்றவர்கள் தான் வால்மீகி ராமாயணத்தையும், கம்ப ராமாயணத்தையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை அறியச் செய்தவர் ராஜகோபாலாச்சாரியார் போன்ற மேதைகள். இன்னும் சொல்லப் போனால் பண்டித நேருவே அது ஆரிய திராவிட போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை அறியாதவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்பது நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பர்களுடைய வாதம் என்றால் அதை நான் ஆதரிக்கின்றேன்.


கேள்வி:- மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த உமாபாரதி தமிழ்நாட்டிற்கு வந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால், அவர்களை நாங்கள் கொலை செய்வோம், உயிரை கொடுத்தாவது நாங்கள் இந்த திட்டத்தை நிறுத்துவோம், இந்த திட்டத்திற்காக பாடுபடும் அரசு அதிகாரிகளை எங்கள் ஆட்சி வரும்போது நாங்கள் தேடித் தேடி கண்டுபிடித்து ஒழிப்போம் என்று பேசியிருக்கிறாரே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- இதே உமாபாரதி மத்திய அரசில் ஒரு மந்திரியாக இருந்த போது தான், இந்த திட்டத்திற்கே அனுமதி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அந்த அனுமதியை மத்திய அரசு வழங்கிய போது அவருக்கு உயிர் இருந்ததா? இல்லையா என்பது எனக்கு தெரியாது.

கேள்வி:- 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப்பாதை அமைத்தால் பரவாயில்லை, திட்டம் வந்தாக வேண்டும் என்று சொன்னீர்கள், ஆனால் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, இந்த திட்டத்திற்கு மாற்றுப்பாதை சாத்தியமில்லை என்று சொல்கிறாரே?


பதில்:- அவர் நேரடியாக பொறுப்பேற்று இந்த திட்டத்திற்கு பாலம் கட்டுகிறவர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவன். என்னால் முடிந்ததை நான் சொன்னேன். கட்டுகிறவருக்கு அதைப்பற்றி அதிகமாகத் தெரியும். அதனால் அவர் அதை விளக்கி இருக்கிறார். மாற்றுப்பாதை ஒன்று அவர்களால் முடிந்து அதை கட்டினால் நான் அதை வரவேற்க தயாராக இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், வேறு பாதை மூலமாக திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது பாலுவின் வாதம். மாற்றுப்பாதையை கண்டுபிடிக்க முடியாது என்கிறார். நான் அப்படி இருந்தால் வம்பு இல்லாமல் போய்விடுமே என்று பார்த்தேன். அதுவும் இல்லை என்கிறார்கள், என்ன செய்வது?


கேள்வி:- ஆதம் பாலத்தை உடைத்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் 2001-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இப்போது அவர்களுடைய நிலையை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார்களே? பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருக்கிறார்களே, பேசுகிறார்களே?

பதில்:- பா.ஜ.க.வை ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், முதல்நாள் சொன்னதை மறுநாள் மாற்றுவது தான் அவர்களுக்கு வாடிக்கை.

கேள்வி:- பிரச்சினை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் காங்கிரசோ, மத்திய அரசோ இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்களா? ஏன் என்றால் தேர்தல் வருகிறது. ராமர் பெயரை சொன்னால் ஓட்டு போய்விடாதா என்ற அச்சம் அவர்களுக்கு வராதா?

பதில்:- தி.மு.க. அண்ணாவை இழந்த பிறகு நடைபெற்ற பொதுதேர்தலில் பெரியார் எங்களை ஆதரித்தார். அந்த நேரத்தில் பெரியாரிடம் ராமர் என்ன பாடுபட்டார் என்று உங்களுக்கு தெரியும். அதற்கு பிறகும் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க எண்ணிக்கையை பெற்றதும் உங்களுக்கு தெரியும். அவ்வளவுதான்.

கேள்வி:- வட இந்தியாவில் காங்கிரசார் அவர்களுக்கு வாக்கு குறையும் என்று நினைக்கலாம் அல்லவா?

பதில்:- எனக்கு தெரியாது. அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் இருக்கிறார்கள், ஆனால் பா.ஜ.க. தாங்கள்தான் இந்துக்களின் பிரதிநிதி என்பதை போல அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அப்படி அவர்கள் சொல்வது இந்து மதத்தின் பெருமையை குலைப்பதாகும்.

கேள்வி:- பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து கவர்னரை சந்தித்து அந்த கட்சியினர் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களே?

பதில்:- எனக்கு முழு விவரங்கள் தெரியாது. ஆனால் கல் எறிந்ததை நான் கண்டிக்கிறேன். ஆனால் உங்களை போன்ற சில பத்திரிகையாளர் அதை சிறிய விஷயமாக விடமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

கேள்வி:- கண்ணகி மதுரையை எரித்ததை நீங்கள் நம்புகிறீர்கள், ஆனால் ராமர் பாலம் போட்டதை நம்பக் கூடாதா என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே?


பதில்:- நீங்கள் நான் எழுதிய பூம்புகார் படம் பார்த்திருக்கிறீர்களா? கடைசி காட்சியை எப்படி எழுதியிருக்கிறேன் என்று பார்த்திருக்கிறீர்களா?


கேள்வி:- அண்ணா தி.மு.க. என்று பெயர் வைத்துக் கொண்டு ஜெயலலிதா, கருணாநிதி ராமாயணத்தை எதிர்க்கிறார். இந்து மதவாதிகளின் மனதை புண்படுத்துகிறார் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அந்த பெயர் இவ்வளவு நாட்கள் கழித்தா அவர்களுக்கு பொருந்தாமல், போய்விட்டிருக்கிறது. பெயர் வைத்த அன்றைக்கே பொருந்தாதே. அப்போதே நான் இந்த பெயர் வைத்ததை பற்றி சட்டசபையிலே பேசியிருக்கிறேன். அ.தி.மு.க என்றால் அது தி.மு.க. அல்லாதது. மங்கலம் என்றால் அதற்கு ஒரு பொருள். அமங்கலம் என்றால் மங்கலம் அல்லாதது. தி.மு.க. என்றால் திராவிட இயக்க உணர்வுகளை, பகுத்தறிவு கருத்து உட்பட அனைத்தும் அடங்கியது. அ.தி.மு.க. என்றால் அதற்கு விரோதமானது. எதிரானது. நியாயம், அநியாயம் மாதிரி.

கேள்வி:- இது போன்ற இந்துத்துவா கருத்துக்களை வேரூன்ற செய்வதால், இதை எதிர்த்து ஒரு பிரசார இயக்கத்தை தி.மு.க.வும், தோழமை கட்சிகளும் நடத்த முன்வருமா?

பதில்:- அநேகமாக இந்த இந்துத்துவா அல்லது மதவெறி பிரசாரம். இதற்கு எதிராகத்தான் எங்களுடைய தோழமை கட்சிகளின் அணுகுமுறைகள் இருந்து வருகின்றன. அதை அவ்வப்போது வலுப்படுத்திக்கொள்கிற நாளாக வருகிற 30-ந் தேதி சென்னை பொதுக்கூட்டம், தோழமை கட்சிகள் கலந்துகொள்கிற பொதுக்கூட்டம் அமையும்.

கேள்வி:- நர்மதா அணைக்கட்டு பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் கூறும்போது, மிகப்பெரிய முதலீட்டில் நடத்தப்படுகின்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று தீர்ப்பளித்ததை மனதிலே கொண்டு, அதே அடிப்படையில் தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருமா?

பதில்:- நம்முடைய அறிவார்ந்த வக்கீல்கள் நீதிமன்றங்களில் இந்த சான்றுகளை எல்லாம் எடுத்து வைத்து வாதாடுவார்கள். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்.


கேள்வி:- மத்திய அரசிலே நீங்கள் அங்கம் பெற்றிருக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் வேலை நிறுத்தத்தை நடத்தலாமா?

அமைச்சர் அன்பழகன்:- மக்கள் கருத்தை வலுப்படுத்துவதற்காகத்தான் இந்த வேலை நிறுத்தம் செய்கிறோம்.

கேள்வி:- ராமர் பாலம் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.

பதில்:- எப்போது நம்புகிறார்கள். உமாபாரதி மத்திய மந்திரியாக இருந்தாரே, வாஜ்பாய் அமைச்சரவையில், அப்போது இந்த திட்டத்திற்காக அனுமதி கொடுத்தார்களே. அப்போது ராமர்பாலம் தெரியவில்லையா? அப்போது கோயலே அந்த கோப்பிலே கையெழுத்து போட்டிருக்கிறாரே?

கேள்வி:- பா.ஜ.க. கடந்த முறை அயோத்தியில் ராமர் பிரச்சினை என்று கூறி அரசியல் நடத்தினார்கள். இன்றைக்கு அவர்கள் தங்களுடைய எதிர்கால அரசியலுக்கு ராமர் பாலத்தை பிடிமானமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்:- அப்படி முயற்சிக்கிறார்கள்.

கேள்வி:- அது வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- 1971-ம் ஆண்டு அனுபவம் இருக்கிறது.

கேள்வி:- வேதாந்தியின் மிரட்டலுக்கு பயப்படாமல், மக்கள் பணிகளிலே தொடர்ந்து ஈடுபடுங்கள் என்று சோனியாகாந்தி செய்தி அனுப்பி இருப்பதாக ஏடுகளில் வந்திருக்கிறதே?

அமைச்சர் அன்பழகன்:- ஆம். இணைந்து தொண்டு புரிவோம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.

4 Comments:

Anonymous said...

கழுவும் மீனில் நழுவுற மீன் கதைதான்..
நேரடி பதில் என்று வந்திருக்கிறது இவரிடம் இருந்து. நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று அவரும் விரும்புவார் என்று நாமும் நம்புவோம்..!

- மனசு நோகடிக்காதவன்.

Anonymous said...

It is funny that he is protesting by bandh instead of protesting in Delhi. The Centre wants three months and is willing to find amicable solution by considering all options like realigning the route. The DMK minister and MK
contradict this. Are they speaking with forked tongues - one before th court and one in chennai. MK and DMK are going beyond the limits. They will pay a heavy price
for all this.

R.Subramanian@R.S.Mani said...

Generally God RAMA is described as Kind Hearted and very soft God. But it seems this time he is waiting for A "BALI"; is it Central or State Govt.-SUPPAMANI

Anonymous said...

just read the following lines it is coming in The Great Epic (What Kalaignar said) Silapathigaram.....
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக்கடவுளரும் மாதவருங் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டர் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள்.....
வஞ்சின மாலை 39-46.
(வட்டித்து விட்டாள் எறிந்தாள் = சுழற்றி விட்டெறிந்தாள்)

பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
முத்தோர் குழவி யெனுமிவரை கைவிட்டுத்
தீதிறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றோரான் கூடல் நகர்.
(வஞ்சின மாலை 53-57.)
(அழல் மண்டிற்று = தீ பற்றி அழித்தது)

paditheergala itharku enna solvar namma cm..........Kannagi than mulaiyai thirugi Madurai erithal.........is this possible? Poombuhar padathil mulayai killi erivathu pol kattinal censor board antha padathai release seiya vittuirukkathu........... sari naamum Ramar engineering padithathu pol varum kalathil matrinal etru kolvara namma CM?