பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 19, 2007

கருணாநிதி மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ்சுக்கு தீவைப்பு

* பெங்களூரில் இருக்கும் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தின. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

* முதல்-அமைச்சர் கருணாநிதி கொள்கை ரீதியாகக்கூறும் கருத்துக்கு, கருத்து அடிப்படையில் பதில்தர முடியாத கோழைகள், இப்படி காலித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.- கீ.விரமணி

* பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு பஸ்சுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதில் 4 பயணிகள் கருகி உயிரிழந்தனர்....இந்து அமைப்புக்கள் தாக்குதல்
நேற்று இரவு 7 மணி அளவில் அங்கு வந்த சுமார் 100 பேர் கொண்ட கும்பல் கருணாநிதிக்கு எதிராகவும் திமு.க.வுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். அப்போது சிலர் வீட்டு மீது கல்வீசி தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. சிலர் பெட்ரோல் குண்டுகளையும் வீசினார்கள்.

இது பற்றி கேள்விப்பட்டதும் ஜே.பி.நகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் போராட்டம் நடத்தியவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர். கருணாநிதியின் மகள் செல்வியும், மருமகன் செல்வமும் நேற்று சென்னைக்கு வந்துவிட்டதால் தாக்குதல் நடந்தபோது வீட்டில் அவர்கள் இல்லை. காவலாளியும், வேலைக்கார பெண்ணும் இருந்தனர்.

போராட்டம் நடத்தியவர்கள் வீட்டுக்குள் சில துண்டு பிரசுரங்களை வீசி எறிந்தனர். அதில் ராமருக்கு எதிராக கருணாநிதி இன்னும் பேசினால் தொலைத்து விடுவோம். ராவணனுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என்று எழுதப்பட்டு இருந்தது.


இந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டபோது சில இந்து அமைப்பினர் இரவு கருணாநிதியின் மகள் வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். போலீசார் சென்றதும் அவர்கள் கலைந்து சென்று விட்டனர். இப்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

கீ.விரமணி அறிக்கை
சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி கூறிய கருத்துகளுக்காக, ராமாயணம் என்பது புராணமே தவிர, வரலாறு அல்ல என்று அறிவியல் ரீதியான கருத்தினைக் கூறியதற்காக உரிய முறையில் பதில் அளிக்க தெரியாதவர்கள் கர்நாடகத்தில் பெங்களூரில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வி இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். காவிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பது படு கோழைத்தனமான செயல் ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்-அமைச்சர் கருணாநிதி கொள்கை ரீதியாகக்கூறும் கருத்துக்கு, கருத்து அடிப்படையில் பதில்தர முடியாத கோழைகள், இப்படி காலித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி கூறிய கருத்துக்கும், அவரது மகள் இல்லத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட அநாகரிகச் செயல்களை அனைவரும் கண்டிப்பதோடு, இவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், இவர்களது வாதங்களில் உள்ள பலவீனம் பற்றியும் நாடு தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு ஆகும். கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

பஸ் எரிப்பு

தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ஓசூர் ரோடு பொம்மனஹள்ளி அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணி அளவில் ஒரு மர்ம கும்பல் திடீரென்று பஸ்சை வழிமறித்தது.

பஸ் நின்றதும் அந்த கும்பல் தங்களது கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை பஸ்சுக்குள் வீசினார்கள். பஸ்சுக்குள் தீப்பிடித்ததும் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு இறங்கினார்கள்.

ஆனாலும் அதற்குள் பஸ் முழுவதும் தீ பிடித்து எரியத்தொடங்கியது. பலர் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டனர்.

பஸ்சில் இருந்த பயணிகளில் 4 பேர் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கி கருகி செத்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பஸ்சை வழிமறித்து தீ வைத்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து சென்றார்கள். சம்பவம் பற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். பஸ்சுக்கு தீவைத்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஸ்டாலின், கனிமொழி வீடுகளுக்கு பாதுகாப்பு
சென்னையில் உள்ள முதல்வரின் மகனும், அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மகள் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


0 Comments: