பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 16, 2007

கொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் பேட்டி

கட்சியை வளர்ப்பதற்காக நாட்டை காடாக்கும் எந்த போராட்டத்தையும் நடத்தலாம் என்று செயல்படுபவர்கள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருக்குவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை கண்டு மனம் கொதித்துப் போயிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று கருணாநிதி கருதுகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தைலாபுரத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேள்வி: சில அரசியல் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம்; எத்தகைய போராட்டத்தை யும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்து விட்டது என்று முதல்வர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?

பதில்: இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்பு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும், வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு, விமான நிலையங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் நுழைய எதிர்ப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற விஷயங் களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளன.

இந்த போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தி வந்துள்ளன. அதே சமயம் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு இந்த கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. தேவைப்படும்போது விமர்சிக் கிறார்கள். அவசரமான பிரச்சனை களில் ஆர்ப்பாட்டங்களை நடத்து கிறார்கள். இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகளின் மிக கடுமையான விமர்சனத்தால் மிகவும் மென்மை யாக பேசக் கூடியவர் என்று கருதப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கே மிக கடுமையாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த பிரச்சனையில் இடதுசாரிகளின் எதிர்ப்பால் மத்திய அரசு நிலைக்குமா? என்கிற அளவுக்கு நிலைமை முற்றி வருகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளில் பல முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போய் கிடக்கின்றன.

இதையெல்லாம் சொல்வது இடதுசாரி கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதை சுட்டிக் காட்ட அல்ல. அரசியலில் அவர்கள் ஒரு முடிவை மேற்கொண்டு அதே சமயம் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களை பற்றி எந்த கட்சியும் குற்றம் சொல்லவில்லை; பழி சுமத்தவில்லை.

மாறாக ஒவ்வொரு பிரச்சனையிலும் இடதுசாரி கட்சி தலைவரை அழைத்து பேசுகிறார். சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். மத்தியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக இப்படித் தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதே நிலைமைதான் தமிழகத்திலும் உள்ளது.

இங்கு திமுகவுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கின்றன. பாமகவும், இடதுசாரி கட்சிகளும் கொள்கை நிலைப் பாட்டுக்கேற்ப அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களை நடத்து கிறோம். அரசியலில் இது தவிர்க்க முடியாதது.

ஆனால் இங்கே பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மத்தியில் இருப்பது போல ஒரு ஒருங்கிணைப்புக் குழு இல்லை. அப்படி இருந்திருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகளை கலந்து பேசி குறைத்திருக்கலாம். அரசின் சில முடிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம், பாராட்டுகிறோம். அதே போல சரியில்லாத நடவடிக்கைகளை எதிர்க்கிறோம்.

தேவைப்படும்போது போராட்டங்களை நடத்துகிறோம். இதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. டாடா டைட்டானியம் தொழிற் சாலையில் ஓராயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து விட்டு பல ஆயிரம் பேரை பாதிக்க விடுவது எப்படி நியாயம் என்று நாங்கள் கேட்கிறோம்.

கே: முடிவெடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறுவதன் அர்த்தம் என்ன?
ப: முதல்வர் என்ன கருதுகிறார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கான காரணம் என்று கூறியிருப்பதுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது. திரும்ப திரும்ப அதை படித்து மனம் கொதித்துப் போயிருக் கிறேன்.

சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும், அமைதியும் ஏற்பட வேண்டும் என்று மாவட்டந் தோறும் மாநாடுகளை நடத்தி வருகிறேன். அப்படி நடந்த ஒரு மாநாட்டில் முதலமைச்சரே கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

இப்படியெல்லாம் பாடுபட்டு வருகிற எங்களை பார்த்து நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு தூபம் போடுபவர்களை போலவும், வன்முறையை தூண்டுபவர்களை போலவும் முத்திரை குத்தும் முயற்சி என்னை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் நான் மனம் நொந்து போயிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக இந்த பழிச் சொற்கள் என்னை பெரிதும் பாதித்துள்ளது.

கே: காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று முதல்வர் கருதுகிறாரா?
ப: அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும். அவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே கேட்டு வருகிறார்கள். ஒரு கூட்டணி நீடித்து, நிலைத்து வெற்றிகரமாக அமைவதற்கும், கூட்டணியை உருவாக்குவதற்குமான காரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்த தொடர்பு முக்கியமானது. இதை நான் சொல்லவில்லை. இன்றைய முதல்வர் கருணாநிதிதான் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். இது இப்போதும் பொருந்தும்.

கே: பாமகவை மட்டும் குறிப்பிட்டு கருணாநிதி விமர்சனம் செய்கிறார். ஆனால் கடுமையாக விமர்சிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை ஒன்றும் சொல்லாதது ஏன்?
ப: இதை நீங்கள் கருணாநிதி யிடம்தான் கேட்க வேண்டும். இதற்கான காரணமும் அவருக்குத் தான் தெரியும்.

கே: இந்த பிரச்சனையால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?
ப: நிச்சயம் ஏற்படாது. நான் பல முறை கூறியிருக்கிறேன். 5 ஆண்டு காலத்திற்கு திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று அன்று சொன்னதில் நாங்கள் இன்றும் உறுதியாக இருக்கிறோம். எங்களால் இந்த ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

0 Comments: