பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 18, 2007

ராமதாஸ் ( வழக்கம் போல் ) சூடான பேட்டி

எரிமலையாகிறார் ராமதாஸ்... ‘‘அரசின் தவறுக்கு ஆதாரம் இருக்கிறது!’

‘எனது இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன். கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டிருக் கிறேன். அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மன உளைச்சல் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னைப் பற்றி முதலமைச்சர் கலைஞர் சொன்ன சில வார்த்தைகள் மனதை பெரும் பாரமாக அழுத்துகின்றன...’’

- திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் எதிரில் அமர்ந்திருந்த நம்மிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேச ஆரம்பித்தார் டாக்டர் ராமதாஸ். மனதின் காயம் அவர் வார்த்தைகளின் வழியே வெளிப்பட்டது. அவருடன் உரையாடலைத் தொடர்ந்தோம்...

‘‘நீங்கள் சுட்டிக்காட்டிய அநேக பிரச்னைகளை... குறிப்பாக துணை நகரம் உட்பட பல திட்டங்களை உங்கள் எதிர்ப்பால் திரும்பப் பெற்றுக் கொண்டவர் முதல்வர். அவரது வார்த்தைகளா உங்களைப் புண்படுத்திவிட்டன?’’

‘‘ஆம். சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் களம் இறங்கியபோது, இந்த ஆட்சியின் அவல நிலை அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு ஆட்சியில் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அதிகாரிகளின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அவர்கள் சொல்லும் தகவல்களை சரிபார்த்த பிறகே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அதைச் செய்தியாக வெளியிடவும் செயல்படுத்தவும் வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சரோ, ‘வீட்டு வசதி வாரியத்துக்காக

நிலங் களைக் கொடுத்தவர்கள், அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட விவரம் தெரியாமல் சில தலைவர்கள் அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். அதே தலைவர்கள் எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்ட சூழ்நிலையில் வன்முறையற்ற அமைதி, நட்புறவு ஆகிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதாலேயே நாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்கு கைகொடுப்பவர்கள் என்ற குற்றத்துக்கு நாமும் ஆளாகிவிடுவதா?’ என்று சொல்லியிருக்கிறார். கூடவே, ‘முடிவெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டி ருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்.

கூட்டணியை முறித்துக்கொள்ள காலம் பார்த்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் சொல்லியிருப்பது என்னை வருத்தமடையச் செய்கிறது. நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை இப்போது முதலமைச்சருக்குச் சொல்கிறேன். முதல்வர் சொல்வது போல் வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கொடுத்த அனைவருமே அரசாங்கத்திடமிருந்து பணம் வாங்கவில்லை. பத்து சதவிகிதம் பேர்தான் பணம் வாங்கியிருக்கிறார்கள். மக்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அந்த நிலங்களில் குடியிருப்புகளைக் கட்டாமல் இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலா பத்து ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் சொன்னால் நான் வன்முறையைத் தூண்டுவதாகச் சொல்கிறார் முதலமைச்சர். தமிழக அரசின் கவனத்துக்கு பல விஷயங்களை அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் முதலமைச்சருக்கு வராத கோபம் இப்போது வரக் காரணம் என்ன? இந்த விவகாரத்தில் மக்களும் நானும் சொல்வது நிஜம் என்பதால்தான்.

அங்கே வீடுகளைக் கட்டி குடியிருக்கும் மக்கள் என்னிடம் ஓடி வருகிறார்கள். எங்கள் எம்.பி-யான ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடத்திய போராட்டத்துக்கு பலனில் லாததால் நானே அந்தப் பகுதிக்குச் சென்றேன். ஒரு இதய நோயாளி, ‘என் வீட்டை இடிக்க அரசாங்கம் நாள் குறித்து விட்டது. அதே நாள்தான் என்னுடைய கடைசி நாள்’ என்று கண்ணீர் விட்டார். அப்போது, ‘உங்கள் வீட்டை இடிக்க புல்டோஸர் வந்தால் அதன் சாவியைப் பிடுங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இதில் எங்கே வன்முறை இருக்கிறது?

தி.மு.க. ஆட்சியில் இல்லாத வன்முறையா என் வார்த்தைகளில் வந்து விட்டது? தென்காசியில் பட்டப்பகலில் கொலை, சென்னையில் தொடர்ந்து கொலை, மதுரையில் மாநகர மேயர் தன் கணவரோடு சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார். அங்குள்ள பத்திரிகை அலுவலகத்தில் மூவர் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார்கள். எல்லாவற்றையும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. இதுவா சட்டம் - ஒழுங்கு? எனக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. நான், என்ன பேசுகிறேன் என்பதை உணர்ந்து அறிந்து பேசுகிற பக்குவமுள்ள குடிமகன்.’’

‘‘முதலமைச்சரிடம் நீங்கள் தனியாகச் சொல்ல வேண்டிய விஷயங்களை, கோரிக்கைகளை மக்கள் மத்தியில் சொல்லி அதையே அரசியலாக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள் என்று தி.மு.க-வினர் சொல்கி றார்களே?’’

‘‘சில விஷயங்களைக் கடிதமாக எழுதுகிறேன். லாட்டரி, கஞ்சா ஆகிய விவகாரங்களை சட்டமன்றத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் மூலம் எழுப்பினோம். என்ன நடவடிக்கை எடுத்தார் முதலமைச்சர்? மார்ட்டின் என்ற ஒரு லாட்டரி வியாபாரியை இதோ பிடிக்கிறோம், அதோ பிடிக்கிறோம் என்றது காவல்துறை. மார்ட்டினை கைது செய்தார்களா? என்ன ஆனார் அந்த மார்ட்டின்? இப்போதும் லாட்டரி வியாபாரம் தமிழகத்தில் சக்கைப்போடு போடுகிறது.

ஒரு அமைச்சரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை நானே நேரில் போய் முதலமைச்சரிடம் சொன்னேன். அந்த அமைச்சரைப் பற்றிச் சொன்னால் முதல்வருக்குக் கோபம் வருகிறது. ‘எதற்கும் ஒரு எல்லை உண்டு’ என்று எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

எல்லாவற்றையும் விடுங்கள், காவிரி இறுதித் தீர்ப்பு நகலை தமிழக அரசிடம் கேட்டோம். கொடுக்கவே இல்லை. அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதற்கு முதல் நாள் கொடுத்தனுப்புகிறார்கள். ஆகவே, இந்த மாதிரி சூழ்நிலையில் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் சொல்வதுதான் சரி என்று எனக்குப்படுகிறது.’’

‘‘டைட்டானியம் தொழிற்சாலை விவகாரத் தில் ஏதோ பலனை எதிர்பார்த்துத்தான் நீங்கள் அதை எதிர்க்கிறீர்கள் என்று சில அரசியல் கட்சித் தலைவர்களே சொல்கிறார்களே?’’

‘‘முதல்வரே அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சூசகமாக சொல்கிறார். ‘மூன்று மீட்டர் ஆழத்துக்குஅந்தப் பகுதியில் மணல் எடுத்தால் பாலைவனமாகாது. எதிர்ப்பாளர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ இது முதல்வரின் கூற்று. டாடா நிர்வாகத்தின் கூற்று என்ன? ஏழு மீட்டர் ஆழத்துக்கு மணல் எடுப்போம் என்பதுதான். அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் இரண்டு தரப்புமே என்ன செய்யப்போகிறோம் என்ற முடிவுக்கு வராத நிலையில் அங்குள்ள மக்களின் நிலங்களைப் பிடுங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது அரசு.

டைட்டானியம் விவகாரத்தில் முதலமைச்சருக்கு ஒரே ஒரு கேள்வியை உங்கள் மூலம் கேட்கிறேன். ‘நீங்களும் டாடாவும் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் நகலை வெளியிட முடியுமா?’ இதற்கு முதல்வர் பதில் சொல்லட்டும்.

டாடாவுக்கு முன்பே அந்தப் பகுதியில் மணலை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வைகுண்டராஜன் என்பவருக்கு எதிராக தி.மு.க. ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்குமா? 97-ம் வருடம் வைகுண்டராஜனுக்கு எதிராக நெல்லையில் பெரும் கூட்டத்துடன் உண்ணாவிரதமிருந்தேன். அப்போதும் கலைஞர்தான் முதலமைச்சர். இப்போது இந்த மணல் விவகாரத்தில் ஏதேதோ பலன்களை எதிர்பார்த்துத்தான் ஆளும்கட்சியும் காய் நகர்த்துகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

டைட்டானியம் விவகாரத்தில் நாங்கள் கருத்துக் கேட்பு இயக்கம் நடத்துகிறோம். முதலமைச்சரோ தனது அமைச்சர் பெருமக்களை வைத்துக் கருத்துத் திணிப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்!’’

‘‘சரி, இவ்வளவு மனக்குமுறல்களோடு கூட்டணியில் இருக்கத்தான் வேண்டுமா என்று எப்போதாவது யோசித்ததுண்டா?’’

‘‘என்னைப் பொறுத்தவரை இந்த அரசுக்கு என்னால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் வாயை மூடிக்கொண்டு பா.ம.க. ஒரு ஓரமாக இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இடதுசாரிகள் ஒரு தவறை சுட்டிக் காட்டினால் அது அவர்களுடைய கொள்கை, நிலைப்பாடு என்று மத்தியில் சோனியாவும், மன்மோகன் சிங்கும் கருதுகிறார்கள். அது அவர்களுடைய உயர்ந்த அரசியல் நாகரிகத்தைக் காட்டு கிறது. ஆனால், இங்கே இருப்பவர்களோ அதை அரசியல் ஸ்டண்ட் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழகத்தில் இதைவிட அரசியல் நாகரிகம் முன்னெப்போதும் தரம் தாழ்ந்ததில்லை!’’

‘‘தி.மு.க. ஆட்சிக்கு மார்க் போடச் சொன்னால் எவ்வளவு மார்க் போடுவீர்கள்?’’

‘‘மார்க் போடுவது இருக்கட்டும்’’ என்ற ராமதாஸ், பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை எடுத்துப் புரட்டிவிட்டு, அதிலிருந்து சில புகைப்படங்களை நம்மிடம் காட்டியபடி பேச ஆரம்பித்தார். ‘‘இந்த ஆட்சியின் நிலையை மணல் விவகாரத்தைக் கொண்டு எடை போடுகிறேன். நீங்கள் பார்க்கும் படங்களை எங்கள் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறோம். தாமிரபரணியின் மணல் கொள்ளைதான் இந்தப் படங்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக கோவையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் மீது பேராசிரியர் அன்பழகன் கவர்னரிடம் ஒரு மனு கொடுத்தார். இன்று, அதே பிரமுகருடன் இன்னும் இருவர் சேர்ந்துகொண்டு தமிழக ஆறுகளின் மணலை கூறுபோட்டு விற்கிறார்கள். இதை நான் அறிக்கையாக சொல்ல, பெயரளவுக்கு சில லாரிகளைப் பிடித்தார்கள். பெரும்பாலான லாரிகள் மீது வழக்கே போடவில்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது என்று நான் சொல்கிறேன்... இல்லை என்று சொல்ல முதல்வர் தயாரா? நடக்கிறது என்று சொன்னால் அதைச் செய்வது அதிகாரிகளா? கட்சிக்காரர்களா? கட்சிக்காரர்கள் இல்லையென்று முதல்வர் சொல்வாரேயானால், எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? பதில் சொல்வாரா முதல்வர்?’’

‘‘கொதித்துக் கொண்டிருக்கும் உங்களை அ.தி.மு.க. பக்கம் கொண்டுபோக முன்னாள் டி.ஜி.பி-யான அலெக்ஸாண்டர் மூலம் ஜெயலலிதா முயற்சிப்பதாக ஒரு தகவல் உலவுகிறதே?’’

‘‘இது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் பொய். இதைப் பரப்புவது தமிழகத்தின் உளவுத்துறையாகத்தான் இருக்க வேண்டும். அது உளவுத்துறையா அல்லது பொய் பரப்புத் துறையா? இவர்களைப் போன்றவர்கள் கொடுக்கும் தகவல்களைக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்’’ என்று சீறியவர், ‘‘சரி, யார் அந்த அலெக்ஸாண்டர்? அவர் எப்படியிருப்பார்... கறுப்பா சிவப்பா?’’ என்று நம்மிடம் கேட்டார்
( நன்றி: ஜூவி )

3 Comments:

ஹரன்பிரசன்னா said...

திரைக்கதை ரொம்ப நல்லா இருக்கு. க்ளைமாக்ஸ் எப்படி இருக்குமோ?

Anonymous said...

Ayya Ramadoss has calculated his steps effectively and he is now making the progress. He is able to show moral reason for his steps. Even if he switches parties a hundred times he will still flourish - no doubt.

Anonymous said...

ராமதாஸ் கேட்கும் கேள்விகளுக்கு கருணாநிதி வழக்கம்போல ஒரு மோதிரம், அண்ணா, பெரியார், வன்முறை, நட்பு, தமிழ், காட்டுமிராண்டி, கொள்கை, ஆணையம், கமிட்டி, குழு, ஆலோசனை, பரிசிலனை, வேதனை, நாகரிகம், நடவடிக்கை என்று ஒரு சப்பை கட்டு கட்டுவார்.

கதிரவன் தினமும் வரும்.