பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 15, 2007

கலைஞருக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அறிக்கை

நேற்று கலைஞர் அறிக்கைக்கு இன்று ராமதாஸ் "வீடு பறிபோய்விடுமோ என்று பரிதவித்து நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் பேசியதை அமைதியை குலைக்கும், அராஜகத்தை தூண்டும் பேச்சு என்று முதல்-அமைச்சர் பழிபோடுவது வியப்பாக இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் காட்டமான அறிக்கை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் :


``சாவியைப் பிடுங்குங்கள் பூட்டை உடையுங்கள்'' என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறதென்றால் என் செய்வது-தமிழகத்தின் அமைதி கருதி தலைக்குனிந்து கொண்டுதான் இருக்க வேண்டியதுள்ளது என்றும் சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்து விட்டது என்றும் முதலமைச்சர் கருணாநிதி ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஒரு தலைவர் என்று அவர் குறிப்பிடுவது என்னை பற்றித்தான் என்பதை நாள்தோறும் நாளேடுகளை படிப்பவர்கள் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.


முதல்-அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சோழிங்கநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிற குடியிருப்புகளை அகற்றிவிட்டு அங்கே புதிய குடியிருப்புகளைக் கட்டப் போவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்களை அங்கிருந்து காலி செய்வதற்கான நடவடிக்கை வேகமாகத் தொடங்கியிருக்கிறது.

நாள்தோறும் அதிகாரிகள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள். புல்டோசர் வண்டிகளை வைத்து வீடுகளை இடித்துவிடுவோம் என்று சொல்லுகிறார்கள். அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி எங்களுக்கு வாழ்வளியுங்கள் என்று அந்த மக்கள் பலமுறை என்னைச் சந்தித்து முறையீடு செய்தார்கள்.

அவர்களின் பிரதிநிதி என்ற முறையில் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை முறையிட்டிருக்கிறார். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அவர்களுக்காகப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். சட்டப் பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்த மக்களை கோட்டைக்கே அழைத்துச் சென்று, வீட்டு வசதித்துறை அமைச்சரை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு பரிவுகாட்ட வேண்டும் என்று வாதாடியிருக்கிறார்.இத்தனைக்குப் பிறகுதான், அவர்களது பிரச்சினைதான் என்ன என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காக நான் அங்கே சென்றேன். ஆண்களும், பெண்களுமாகத் திரண்டு வந்து என்னிடம் கதறி அழுதார்கள். நிம்மதியாக வாழ முடியவில்லை. எந்த நேரத்தில் புல்டோசர் வண்டிகள் வந்து வீடுகளை இடித்து நொறுக்குமோ என்று நாள்தோறும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்று தாய்மார்கள் கண்ணீர் மல்க கதறி அழுதார்கள்.

இருதய நோயால் அவதிப்படுகிற சில முதியவர்கள் அதிகாரிகளின் மிரட்டல் ஒரு பக்கம், புல்டோசர் வண்டிகள் வந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கமாக அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதனால் எந்த நேரத்தில் எங்களது மூச்சு அடங்குமோ தெரியவில்லை என்று மனம் நெகிழக் கூறினார்கள்.

இதனால் மனம் உடைந்து போன நான், நீங்கள் அஞ்சுகிறபடி எதுவும் நடக்காது என்று உறுதி கூறினேன். முதல்வர் கருணாநிதியிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுகிறேன். அவரும் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பார் என்று நம்பிக்கையூட்டினேன். இதனை காவல் துறை ரகசிய எழுத்தர்களிடம் முதல்வர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இத்தனைக்குப் பிறகும் உங்கள் வீடுகளை இடிப்பதற்காக புல்டோசர் வண்டிகள் வந்தால், நீங்கள் எல்லோரும் திரண்டு போராடுங்கள்; அதையும் மீறி வண்டி நுழைந்தால் சாவியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சொன்னேன்.

நான் மட்டுமல்ல, வேறு எந்தத் தலைவரானாலும், அந்த நேரத்தில் இப்படித்தான் பேசியிருப்பார்கள். ஏன்? நம்முடைய முதல்-அமைச்சரும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதிருந்தால், அந்த மக்களுக்கு ஆறுதல் கூற இப்படித்தான் பேசியிருப்பார்.நான் இப்படிப் பேசியதைத்தான் அமைதியைக் குலைக்கும் முயற்சி என்றும் அராஜகப் போராட்டத்தைத் தூண்டும் பேச்சு என்றும் வலிந்து கற்பனை செய்து கொண்டு முதல்-அமைச்சர் என் மீது பழிபோடுகிறார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிக்கை வெளிவந்த அதே நிமிட நேரத்தில் தெற்கே தென்காசிப் பட்டினத்தில் பட்டப்பகலில் நடுவீதியில் நடந்த கோஷ்டி கலவரத்தில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் வெளிவந்தது. இன்று மட்டுமல்ல, நாள்தோறும் இத்தகைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாட்டின் நிலைமை இப்படி இருக்கையில், வீடு வாசல்கள் பறிபோய்விடுமோ என்று பரிதவித்து நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் பேசியதை, மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் முயற்சி, அராஜகத்தைத் தூண்டும் பேச்சு என்று முதல்-அமைச்சர் பழிபோடுவது வியப்பாக இருக்கிறது.அரசியல் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டமும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிற முதல்-அமைச்சர், நான்கு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசும்போது, நான் செய்கின்ற காரியத்தை நான்கு பேர் ஏதோ பேசி என்னைச் சலிப்படையச் செய்து காரியத்தை கெடுத்துவிட முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதும், அவர்களோடு நின்று போராடுவதும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமை. இந்த ஜனநாயக கடமையை ஒரு கட்சி ஆற்றுகின்றபோது அது கட்சியை வளர்த்துக் கொள்வதற்கான செயல் என்று கொச்சைப்படுத்துவதையும், நான்கு பேர் ஏதோ பேசுகிறார்கள் என்று ஏளனம் செய்வதையும் சட்டப்பேரவைப் பணியில் பொன்விழா கண்ட கருணாநிதி போன்ற தலைவரிடமிருந்து, அரசியல் அறிஞரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.தோழனாய், நண்பனாய், அரசுக்கு ஆலோசனைகளை கூறி வருகிற என்னை எதிரியாக ஏன் பார்க்க வேண்டும்? வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்று எங்கள் மீது ஏன் முத்திரை குத்த முயல வேண்டும்?

தோழமை கட்சி என்றால் எதையும் பேசக்கூடாது என்று கருதுவதும், அப்படி பேசினால், அது போராட்டத்தைத் தூண்டும் செயல் என்று பழிசுமத்துவதும் அரசியல் பெருந்தன்மையாகாது. அரசியலில் தங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாத கட்சிகள் என்று எதையாவது அடையாளம் காட்ட முடியுமா? தி.மு.க. அந்த இலக்கணத்திற்கு உட்பட்டதா? உண்மை இப்படி இருக்கையில், பாட்டாளி மக்களுக்காக, பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுப்பதையும், அவர்களுக்காகப் போராடுவதையும் கட்சியை வளர்த்துக் கொள்வதற்கான செயல் என்று பழிபோடுவது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறதே தவிர, வேறல்ல.

1 Comment:

ஹரன்பிரசன்னா said...

"அட்டைபட ஆறுமுகம்" - அப்பாடி இதில் ஒன்றிலாவது தமிழ் இருந்ததே...!