பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 18, 2007

123 பற்றி துக்ளக் தலையங்கம்

பிரதமர் பாராட்டுக்குரியவர் ! துக்ளக் தலையங்கம்


தேசத்தின் மீதுள்ள பற்றைக்காட்ட, பலதரப்பட்டவர்களுக்கும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. அமெரிக்காவுடன் நமது நாடு செய்துகொள்கிற, அணுசக்தி பற்றிய ஒப்பந்தத்திற்கான வடிவம் (வசதிக்காக, "ஒப்பந்தம்' என்றே கூறுவோம்) ஏற்கப்பட்டிருப்பது, "நமது தேசத்தின் மாட்சிமை பறிபோகிறது' என்ற ஆட்சேபனையை, பல திசைகளிலிருந்து கிளப்பியிருக்கிறது.

இடதுசாரிகளிலிருந்து, அறிவாளிகள் உட்பட, பா.ஜ.க.வரை இதை பலர் எதிர்க்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே ரகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. சிலருக்கு, அமெரிக்கா என்றாலே சந்தேகம்; சிலருக்கு அமெரிக்க எதிர்ப்பு, அரசியல்
அந்தஸ்தைத் தரும் என்ற நம்பிக்கை; சிலருக்கு இந்திய – அமெரிக்க நட்பு சீனாவுக்கு பிடிக்காது என்பதால், அதுவேண்டாத உறவு என்கிற கொள்கைப்பிடிப்பு; சிலருக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம், நமது அணுசக்தி ஆராய்ச்சியையே கூட முடக்கிவிடும் என்ற உண்மையான அச்சம்.

இதில் முதல் மூன்று ரகத்தவர்கள் காட்டுவது ஒன்று – ஆதாய எதிர்ப்பு, அல்லது அர்த்தமற்ற எதிர்ப்பு. ஆகையால், கடைசி ரகத்தவர்களின் அச்சத்தைப் போக்குவதுதான், அரசின் கடமை. அந்தப்பணியை பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிகாரிகளும் சரிவர செய்துவருகிறார்கள். பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடந்தால், அப்போது அரசு தரப்பின் விளக்கங்கள், மேலும் தெளிவை உண்டாக்கி, ஒப்பந்தம் பற்றி உண்மையான அச்சம் கொண்டிருப்பவர்களின் சந்தேகங்களைப் போக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஒப்பந்தம் பற்றி, மக்கள் நினைத்துப்பார்க்கக் கூடியதும் – நினைத்துப்பார்க்க வேண்டியதும், ஒரு சில அம்சங்கள்தான். இந்த ஒப்பந்தத்தினால், நமக்குக்கிட்டுகிற பயன் – நாட்டின் மின்சாரத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய அணுமின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, வேண்டிய எரிபொருள் கிட்டும். நமது நாடு செய்த அணுஆயுத பரிசோதனைகளை அடுத்து, "அணுசக்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவை இந்தியாவிற்குக் கிட்டாது' – என்று நமக்கு விதிக்கப்பட்ட "சர்வதேசத் தனிமை'யிலிருந்து நாம் வெளியே வருகிறோம். இந்த
ஒப்பந்தம் அமல் ஆகிறபோது, அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற சில
நாடுகளிலிருந்தும் நமக்கு தொழில்நுட்ப உதவி கிட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பாதுகாப்புத் தேவைகளுக்காக இயங்கிவருகிற அணு ஆராய்ச்சி நிலையங்கள், அமெரிக்கா அல்லது அயல்நாட்டு சோதனைகளுக்கு அப்பாற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, நமது பாதுகாப்புக்கான அணுசக்தி ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும் என்கிற அச்சம், ஆதாரமற்றது.

நாம் அணுஆயுதப் பரிசோதனை (அணுகுண்டு வெடிப்பு) செய்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்கிற உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது என்பது உண்மையே; அப்படி ரத்து செய்தால் நமக்கு அவர்கள் அளித்த எரிபொருள், மற்றும் உள்ள பல சாதனங்கள் ஆகியவை திருப்பித் தர வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால், அப்படி ரத்து செய்வதானால், அதற்கு முன் அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய நிபந்தனைகள் பல, இந்த ஒப்பந்தத்திலேயே உள்ளன. நோட்டீஸ் தருவதிலிருந்து, இந்தியாவுடன் கலந்தாலோசனைகள் செய்வது உட்பட,
உலகச்சந்தையில் நிலவுகிற விலையின்படி இந்தியாவிற்கு நஷ்டஈடு கொடுத்துத்தான் எதையும் திரும்பப் பெறமுடியும் என்பது வரை உள்ள, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான், அமெரிக்கா "ஒப்பந்த ரத்து' பற்றி யோசிக்க முடியும்.

தவிர, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் ஸ்தம்பித்து போகாத வகையில்தான், பொருட்கள் திரும்பப்பெறுவது நடக்க முடியும் என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. ஆகையால், நாம் அணுஆயுத சோதனைகளை நடத்தினால்கூட, மீள முடியாத பின்னடைவு, இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படாது.

நமது சிவில் தேவைகளுக்கான, அணுசக்தி ஆராய்ச்சி, அயல்நாட்டு சோதனைக்கு உள்ளாவதால் நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது; மாறாக இதை ஏற்றால், அணுமின் உற்பத்தியை பெரிய அளவில் பெருக்கிக்கொள்ள வழி செய்கிற தொழில்நுட்பமும், எரிபொருளும் நமக்குக்கிட்டும்.

இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறபோது, ஒரு நாடு ஏற்கக்கூடாத எதையும் நாம் ஏற்றுவிடவில்லை; எந்த ஒரு அடிமை சாசனத்தையும் இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலமாக எழுதிக்கொடுத்து விடவில்லை. இதன்மூலம் அமெரிக்காவுடனான உறவும் பலப்படும். அதுவும் நல்லதே; அதற்காகவே இதைக் கண்டிக்கிற, சீன தாசர்களாகிய இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி, இந்த
ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்துள்ள பிரதமர், பாராட்டுக்குரியவர்.
(நன்றி: துக்ளக் )

3 Comments:

Anonymous said...

if there is one person who makes me proud as indian that is dr. manmohan singh. earlier it used to be two people, i mean mr.kalam.
now that we have sent him home and waiting for mrs.gandhi to ascend throne let me relish my last days of pride.

வடுவூர் குமார் said...

இதே ரீதியில் இதை எதிர்ப்பவர்கள் சொன்னால் மக்கள் உண்மையை உணர்ந்துகொள்ளமுடியும்.

Anonymous said...

Cho is correct. The next best will be if he can convince the BJP. They are acting as if there is a national shame, my opinion about BJP is very very low. even at the national issues these BJP guys act as if they are not level headed... this isa time to isolate the left as their motives could be different.