பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 12, 2007

தி.மு.க. vs. பா.ம.க.

"தி.மு.க. ஆட்சி பற்றி டாக்டர் ராமதாஸின் விமர்சனங்கள் !" என்ற தலைப்பில் துக்ளகில் வந்தவை.


சமீபத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் சுயநிதிக் கல்லூரிகளில் மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், இதை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்றும் விமர்சித்து பேட்டிகள், அறிக்கைகள் வெளியிட்டார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு பதில் அளிக்க, அதையும் குறை கூறி டாக்டர் ராமதாஸ் மீண்டும் கருத்துக் கூற, இதன் தொடர்ச்சியாக, "இப்படிப்பட்ட பகிரங்க விமர்சனங்களால், தோழமை கெட்டு விடும்' – என்று
முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.




ஆனால் டாக்டர் ராமதாஸ், இந்த ஒரு பிரச்சனையில் மட்டுமின்றி, முதலமைச்சர் வசம் உள்ள போலீஸ் இலாகாவின் செயல்பாடு உட்பட, பல விஷயங்களில் தமிழக அரசை குறை கூறியே வந்திருக்கிறார். அவற்றுக்கெல்லாம் முதல்வர் ஏனோ எந்த பதிலும் அளிக்கவில்லை. குறைந்தபட்சம் "கவிதை' மூலமாகக் கூட எதுவும் சொல்லவில்லை. தி.மு.க. அரசு பற்றி டாக்டர் ராமதாஸ் செய்த விமர்சனங்களில் ஒரு பகுதியை வாசகர்களுக்கு நினைவூட்ட, இங்கு பிரசுரித்திருக்கிறோம்.




(இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் கூறி வந்துள்ள கருத்துக்கள், மாதவாரியாக, தினத்தந்தி, தினமலர், தினமணி, மாலைமுரசு, மாலைமலர் ஆகிய பத்திரிகைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)

ஜனவரி மாதத்தில்...

* தமிழக அரசு, இலவசங்களால், வறுமையை ஒழிக்க முடியாது.

* பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

* தமிழ் ஆய்ந்த தமிழன் ஆட்சியில் இருக்கிறான்; தமிழ்தான் ஆட்சியில் இல்லை.

பிப்ரவரி மாதத்தில்...

* பள்ளிக்கூடத்தின் பக்கத்திலேயே கஞ்சா விற்பனை நடக்கிறது. காவல்துறைக்கு மன்னிப்பே கிடையாது.

* 1967லிருந்து தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்தும், இளைஞர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

* காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் முதல்வர் மாறி மாறி பேசுவது ஏன்?

* "வாட்' அமலுக்கு வந்த பிறகும், விலைவாசி உயர்ந்துள்ளது என்றுதான் கூறுகிறார்கள்.

மார்ச் மாதத்தில்...

* சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால், "எடு செருப்பை' என்று விவசாயி கூற வேண்டும்.

* தி.மு.க.வின் கிளையல்ல பா.ம.க.. கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. விவாதிப்பதில்லை. இலவச டி.வி.யால் வறுமையைப் போக்கிவிட முடியுமா?

* காவிரிப் பிரச்சனையில் தமிழக அரசு, ஆமை வேகத்தில் செயல்படுகிறது.

* குஜராத்தில் மதுக்கடைகளின் வருமானம் இல்லாத நிலையிலும், வளர்ச்சிப் பணிகள் அங்கு தடைப்படவில்லை.

* என் கையில் போலீஸ் இலாகா இருந்தால், 6 மாதத்தில் கள்ளச் சாராயம் இல்லாத நிலையை ஏற்படுத்துவேன்.

* மதுபான விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வித்தியாசம் இல்லை.

* மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது; லாட்டரி, கள்ளச் சாராயம், கஞ்சா எதையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை.

* ரிலையன்ஸ் காய்கறி கடை பற்றி, தமிழக அரசு வாய் திறக்காதது ஏன்?

* கலைஞர் மேற்பார்வையில், அறிவாலயத்தில் தயாரானதுதான் வெற்றிகொண்டான் அறிக்கை!

* தோழமை என்பது, ஒரு வழிப்பாதையாக இருக்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. நடந்து கொண்டது தோழமை உணர்வை கட்டிக் காக்கும் செயலா?

* தி.மு.க. – பா.ம.க. இடையே எங்குமே நல்லிணக்கம் இல்லை. பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு ஆயா வேலைக்குக் கூட பரிந்துரை செய்ய முடிவதில்லை. தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம். கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

ஏப்ரல் மாதத்தில்...

* கரும்பு விவசாயிகளின் புகார்களை கட்டுக் கட்டி, அமைச்சர் வீரபாண்டியாரிடம் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பார்கள்.

* தமிழ்நாட்டில் ஆறு "க'க்கள் (கஞ்சா, கள்ளச்சாராயம், கடத்தல், கற்பழிப்பு,
கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து) அதிகரித்துள்ளன.

மே மாதத்தில்...

* பாலாறு பிரச்சனையில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் மாறி மாறி தூங்கிக் கொண்டு இருந்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

* என்னால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைப் பற்றி பொது விவாதத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க. தயாரா?

* வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினர் மீது பாசம் இருப்பது போல தி.மு.க., அ.தி.மு.க.வினர் நடிக்கின்றனர். அவர்கள் தேர்தல் நேரத்தில் பேசுவதை
நம்பக் கூடாது.

* 13 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை வரியை வசூலிக்காமல் இருக்கிறார்கள்.
அதை வசூலித்தால், டாஸ்மாக் வருமான இழப்பை சமாளிக்க முடியாதா?

ஜூன் மாதத்தில்...

* சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமான, சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும்.

* ஓராண்டு காலமாக லாட்டரி சீட்டு மோசடியை, அரசுக்குச் சுட்டிக்காட்டி
வந்துள்ளேன்.

* உயர் கல்வித் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. அது
இருந்தால் செயல்படுகிறதா என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள்.

* சென்ற ஆட்சியில் கருணாநிதி, காவல்துறையில் ஈரல் கெட்டு விட்டது என்று கூறினார். இன்று காவல்துறையில் ஈரல் அடியோடு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையே செயல்படுகிறதா, இல்லையா என்று தெரியவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றவை தவிர, "டாக்டர் ஐயா'வின் பிரசித்தி பெற்ற "தி.மு.க.வின் பச்சைத் துரோகம்' என்ற குற்றச்சாட்டு, "அங்கொன்றும், இங்கொன்றுமாக' என்ற கிண்டல் மற்றும் "சென்னை சங்கமம்' குறித்த விமர்சனம் ஆகியவற்றையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தற்போது கடைசியாக "2011ல் பா.ம.க. தலைமையில் (கூட்டணி) ஆட்சி அமைப்போம்' என்று டாக்டர் ராமதாஸ் கூறத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பின்னணியில்தான், "பகைமை உருவாக இடமளிக்க வேண்டாம்' என்று முதல்வர் மன்றாடுகிறார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

1 Comment:

Anonymous said...

It seems doctor would certainly go to AIADMK but that would not be in the near future - because of the benefits in the central government.

Thuglak is somewhat voicing and trying to create a mass opinion for moving DMDK towards AIADMK, isn't it?