"அதர்மத்துக்குப் பயந்து கூட்டணி சேர மாட்டேன்!" ஜூவியில் வந்த கேப்டன் பேட்டி ( நன்றி ஜூவி )
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள், விஜயகாந்த்தின் அந்தஸ்தை உயர்த்தி இருக்கிறது. அதேசமயம், ‘அவர் எதிர்ப்பது தி.மு.க-வைத்தான் என்றாலும் அ.தி.மு.க. ஓட்டுக்களைப் பிரிப்பதன் மூலம், தி.மு.க-வுக்கு மறைமுகமாகக் கைகொடுத்துக்கொண்டு இருக்கிறார்’ என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்திருக்கிறது. ‘கட்சி தொடங்கி ஐந்து தேர்தல்களைக் கண்ட தே.மு.தி.க., கடைசிவரை கணிசமான ஓட்டு வாங்கித் தோற்றுக்கொண்டே இருக்குமா, கூட்டணி அரசியலுக்குள் நுழைந்து அதிகாரத்தில் உட்காருமா?’ என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது.
இடைத்தேர்தல் களைப்பிலிருந்த விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்தோம்.
‘‘அ.தி.மு.க. ஓட்டு வங்கியைப் பதம் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களது அரசியல் இலக்குதான் என்ன?’’ என்று ஆரம்பித்ததுமே, இடைமறித்துப் பேசத் தொடங்கினார் விஜயகாந்த்-
‘‘நம்மூர்ல ஓட்டு அரசியல் இல்லை, நோட்டு அரசியல்தான் கொடிகட்டிப் பறக்குது. நாட்டுல ஜனநாயகம் இருக்கா, இல்லையான்னே தெரியலை. அரசியல்னா... இந்தக் கட்சிக்கு இவ்வளவு ஓட்டு, இவங்க பலம் இது, இது தி.மு.க. ஓட்டு, அது அ.தி.மு.க. ஓட்டுன்னு ஒரு காலத்துல இருந்துச்சு. இப்போ அது இல்லை.
யார் பணம் வெச்சுக்கிட்டு அதிகாரத்துல இருக்காங்களோ அவங்களுக்குத்தான் ஓட்டுன்னு ஆகிப்போச்சு. உள்ளாட்சித் தேர்தலையும் பார்த்துட்டேன், இதோ இந்த இடைத்தேர்தலையும் பார்த்துட்டேன். பலசாலி பந்தயத்துல ஜெயிப்பான்ங்கற மாதிரி, முதலமைச்சரோட பையன் பலசாலியா போலீஸ் புடைசூழ வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கார். இந்த இடத்துல ‘எந்தக் கட்சி ஓட்டு, எந்தக் கட்சி எடுத்துக் கிட்டது? எந்த ஓட்டு யாருக்கு விழுந்திருக்கு?’ங்கற ஆராய்ச்சியெல்லாம் தேவையே இல்லை.
அ.தி.மு.க. ஓட்டை நாங்க வாங்கலை. விஜயகாந்த் வந்தான், அதனால் அ.தி.மு.க-வோட ஓட்டு போயிருச்சுங்கறதெல்லாம் பொய் சார். நான் வரலைனாலும், இருக்கற கழகங்களோட ஓட்டுக்களைப் புதுசா யார் வந்தாலும் வாங்கியிருப்பாங்க, அவங்க சுத்தமா இருந்தா...’’
‘‘தேர்தல் கமிஷனின் கண்காணிப்பில் நியாயமாக நடந்த தேர்தலில்தான் நாங்கள் ஜெயித்திருக்கிறோம் என்று தி.மு.க. சொல்கிறதே?’’
‘‘தேர்தல் நியாயமா நடக்கலைனு மதுரையில இருக்கிற ஒவ்வொருத் தருக்கும் தெரியும். எந்த அமைச்சர் எங்க வெச்சு காசு கொடுத்தார், என்னென்ன டெக்னிக்குல நோட்டுக்களைக் கொடுத்தாங்கன்னு எனக்குத் தெரியும். வீடியோ ஆதாரமே இருக்கு.
நான் கார்ல போயிக் கிட்டிருக்கேன், ஒரு மூத்த அமைச்சர் வேட்டியை மடிச்சுக் கட்டி, கையில கத்தையாப் பணத்தை வெச்சுக்கிட்டு வள்ளல் கணக்கா விநியோகிச்சுக்கிட்டுப் போறார். காங்கிரஸ் கட்சி இவ்வளவு கேவலமா போகும்னு நான் நினைக்கலை. காங்கிரஸ்காரங்க, முதலமைச்சரோட மகன் போட்டோவை பெரிசாப் போட்டு ஓட்டுக் கேட்கறாங்க. இவருக்கும் காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தம்? இதை நான் கேட்டதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்குக் கோவம் வருது. ‘காங்கிரஸைப் பத்திப் பேச விஜயகாந்த்துக்கு என்ன தகுதியிருக்கு’னு பதில் சொல்றாரு. எந்தத் தகுதியுமே இல்லாத ஒருத்தரோட படத்தைப் போட்டு ஓட்டுக் கேட்கறீங்க, உங்க கட்சியில எந்தத் தலைவரும் இல்லையா? கட்சியை அடமானம் வெச்சு, அவருக்குக் கீழ மண்டிபோட்டு நிக்கற இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
தொகுதியில இருக்கற காங்கிரஸ்காரங்களை எனக்குத் தெரியும். பலர் என்னை வந்து பார்த்தாங்க. பணம் வாங்குனதாவும் சொன்னாங்க. ‘கை நீட்டி வாங்குன பணத்துக்காக ‘கை’க்குத்தான் ஓட்டுப் போடுவோம். ஆனா, எங்க குடும்பத்துக்காரங்களை உங்களுக்குத்தான் ஓட்டுப் போடச் சொல்லியிருக்கோம்’னு சொன்னாங்க. இப்படி சிலபேர்கிட்ட ஷாஃப்ட்டா டீல் பண்ணினாலும், ‘பூத்துக்குள்ள எங்க சின்னத்துல நீங்க குத்தலைனா வெளியில வர்ற உங்களை நாங்க குத்துவோம்’னு பலரையும் மிரட்டியிருக்காங்க. இவங்க எல்லாருமே எலெக்ஷன் கமிஷன்கிட்ட வரத் தயார். ஆனா, அதோட விளைவுகளைத் தாங்கத் தயாரில்லை!
கோபால்சாமியும், நரேஷ்குப்தாவும் சோதனை போட்டுக்கிட்டிருந்த அதே தெருவுல முதலமைச்சரோட பையன் தலைமையில் ஒரு கோஷ்டி பணம் கொடுக் கறாங்க. நான் நேரா அங்கே போனேன். அது ஒரு சின்ன சந்து. அந்தச் சந்துக்கு ரெண்டு பக்கமும் போலீஸ் வேன் நிக்குது. உள்ளே ஏதோ கலாட்டாங்கற ரேஞ்சுக்கு போலீஸ் போட்டிருக்காங்க. சந்துக்குள்ள யாரையும் விடலை. அங்க வசிக்கறவங்களை வெளியில விடாம அவங்க வீட்டுக்குள்ளேயே போய்ப் பணம் கொடுக்கறாங்க.
முதலமைச்சர் மகன் போய்ப் பணம் கொடுத்தாரே, அந்த வீடுகள்ல சின்ன பசங்க இருந்திருப்பாங்க, அவங் களுக்குத் தேர்தல்னா என்னன்னு மனசுல பதிவாகும்? பணம் வாங்கிக்கிட்டு ஓட்டுப் போடணும்னுதானே பதிவாகும். பிஞ்சு மனசுல நஞ்சை விதைச்சிருக்கற தி.மு.க., சமூக நோக்கமிருக்கற கட்சின்னு அதன் தலைவர் இனி சொன்னார்னா, அது மக்களை ஏமாத்துற காரியம்தான். இடைத்தேர்தல்ல எல்லாக் கூத்துக்களையும் பண்ணிட்டு தி.மு.க. அமைச்சருங்க புத்தர் சம்பந்தப்பட்ட ஒரு விழாவுல கலந்துக்கிட்டிருக்காங்க! பேராசிரியர் அன்பழகன் ‘புத்தரைப் போல வாழ நாம் பாடுபட வேண்டும்’னு பேசியிருக்காரு. மக்கள் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க!’’
‘‘தி.மு.க-வைத் திட்டிக்கிட்டே மறைமுகமா அந்தக் கட்சி ஜெயிக்கற மாதிரி ஓட்டுக்களைப் பிரிக்கறது அரசியல்ரீதியா சரியா வருமா? அ.தி.மு.க-வோடு நீங்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறதே?’’
‘‘ரெண்டு பேரையும் நான் எதிர்க்கிறேன். சொல்லப் போனா, நாட்டுல பழைய கட்சிகளே இருக்கக் கூடாது. மக்களோட கஷ்டம் தெரிஞ்சவங்க அதிகாரத்துக்கு வரணும்.காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தல்ல பணம் கொடுத்து அ.தி.மு.க. ஜெயிச்சிருச்சுன்னு அப்போ தி.மு.க-காரங்க சொன்னாங்க. இப்போ அதே கோஷத்தை இந்த இடைத்தேர்தல்ல அ.தி.மு.க. போடுது. இவங்க இப்படின்னா, தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கற கட்சிங்க வெளிப்படையா மோதிக்குது, அதிகாரத்துல தேவை யான பங்கை எடுத்துக்குது.
‘நிமிட்ஸ்’ கப்பல் வரக்கூடாதுன்னு அறிக்கை விடறாங்க. அந்தக்கப்பலைக் கட்டுப்படுத்தற அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கிட்ட இருக்குன்னு சொல்றாங்க. மத்திய அரசாங்கம் என்ன அந்தரத் துலயா தொங்குது... எல்லாமே நீங்கதானே, அறிக்கை விடறதை நிறுத்திட்டு அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துங்க. கம்யூனிஸ்ட் கட்சி மேல எனக்குப் பெரிய மரியாதை இருந்துச்சு. அதுவும் கழகங்களுக்கு இணையா களத்துல குதிச்சிருச்சு. ‘மரம்விட்டு மரம் தாவி சண்டை போடறவர்’னு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருத்தர் மதுரையில என்னைப் பத்திச் சொன்னார்.
நான் தாவுறது சினிமா கதையிலதான்...இவங்க நிஜத்துல தேர்தலுக்குத் தேர்தல் தாவிக்கிட்டிருக் காங்களே... எல்லாமே சுயநலத்துக்குத்தானே..? இதே மதுரை மேற்கு தொகுதியில காங்கிரஸ் 53 ஆயிரம் ஓட்டு வாங்கி அ.தி.மு.க-விடம் தோத்துருச்சு. இப்போ பதினஞ்சு கோடி ரூபாய் செலவு செஞ்சு ஏகப்பட்ட கட்சிகளை ஒண்ணு சேர்த்துக்கிட்டு ஏழாயிரம் ஓட்டு அதிகம் வாங்கி அதே அ.தி.மு.க-வை ஜெயிச்சிருக்கு. இதை அவங்க சால்வையைப் போட்டுக் கொண்டாடறாங்க. இவங்ககூடக் கூட்டணி வெச்சா அது மக்களுக்கு நான் செய்யற துரோகம்! அராஜகத்தோட உச்ச கட்டத்தைப் பார்த்தும், இன்னும் ஜனநாயகத்துல நம்பிக்கை வெச்சு எனக்கு ஓட்டுப் போட்டாங்களே, அவங்க ஒவ்வொருத்தர் காலையும் பிடிச்சு நன்றி சொல்றேன். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்துக்காகக் கட்சி ஆரம்பிச்சாரோ அதையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டுத் தொண்டனோட மனசு தெரியாம நடந்துகிட்டிருக்கற அ.தி.மு.க-வோடவும் போக மாட்டேன். மொத்தத்தில் அதர்மத்துக்குப் பயந்து, நான் யாருடனும் கூட்டணி சேரமாட்டேன். என் இலக்கு... தனிச்சு நின்னு மக்களை என் பக்கம் திரட்டறதுதான். அதை நான்தான் செய்யணும்னு இல்ல. மக்களுக்குப் பிடிச்சவங்க யார் செஞ்சாலும் ஓகே-தான்!’’
‘‘இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உங்கள் சாய்ஸ் யார்?’’
‘‘சந்தேகமே இல்லாம அப்துல்கலாம்தான். இதுவரைக்கும் இருந்த ஜனாதிபதிகள்ல ரொம்ப வித்தியாசமானவர். ஒரு தமிழர். ரெண்டு இட்லியை சாப்பிட்டுக்கிட்டு சிட்டுக் குருவியா அந்த மாளிகையில சுறுசுறுப்பா வலம் வந்துகிட்டிருக்கறவர். அவரையும் இவங்க அரசியலுக்குள்ள இழுத்துஅவமானப் படுத்திட்டாங்க.
தமிழ், தமிழ்னு சொல்றாங்களே... ஒரு தமிழரை இவங்க ஏன் ஜனாதிபதியா ஏத்துக்க மாட்டேங்கறாங்க? அப்துல்கலாமை விட்டுட்டு அவருக்கு மாற்றா வரப்போற ஒரு அம்மாவுக்குத் தமிழ்நாட்டுல ஊர்வலம் நடத்துறாங்க. கேட்டா, பெண்களை மதிக்கிறோம்ங் கறாங்க. இவங்க தானே இந்திராகாந்தியை மதுரை ஊர்வலத்துலஅடிச்சாங்க. அப்ப இவங்களோட பெண்கள் பாசம் எங்க போச்சு..?’’
-கண்கள் சிவக்கப் படபடக்கிறார் விஜயகாந்த்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 04, 2007
ஜூவி - விஜயகாந்த் பேட்டி
Posted by IdlyVadai at 7/04/2007 06:39:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ʞ1ɐʇ ǝ1qısuǝs
uʍop ǝpısdn said...
This is looking good
//uʍop ǝpısdn said...//
looking good
Post a Comment