பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 06, 2007

சில நேரங்களில் சில புதிர்கள்! - ஞாநி

சில நேரங்களில் சில புதிர்கள்! என்று ஆனந்த விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.

வாழ்க்கையில் நிறை-யவே புதிர்கள் இருக்கின்றன. குடும்ப வாழ்க்கையில், தனி மனித வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் என நம் வாழ்வின் சகல பகுதிகளும் புதிர்களால் ஆனவைதான். ஒவ்-வொரு புதிராக அவிழ்த்துக்-கொண்டு முன்செல்வதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அற்பம், பிரமாண்டம், உன்னதம், கேவலம், சோகம், நகைச்சுவை என எல்லா ரசங்களிலும் இருக்கும் புதிர்களில், இந்த வாரம் எனக்குப் புதிராகத் தெரிந்த சில...



புதிர் 1: அப்துல் கலாம்

இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே ‘கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதி’கள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியான-வரே அல்ல! காரணம், அவர்

இந்தியாவை மேலும் மேலும் ராணுவமய-மாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்-கான ரூபாய்களை ராணுவத்-துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.

எங்கு சென்றாலும் மாணவ-மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது; அவ்வளவுதான்!

அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையி-லிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்-கலைக்கழக இளைஞர்-களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.

உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப்படவில்லை.

தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட-லாமா, கூடாதா? தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா? நன்கொடை என்ற பெயரில் கொள்ளை- அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா? இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.

தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து- முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்தி-லிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்த-தாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது. தற்போ-தைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை ‘திரும்பப் போட்டியிட விருப்ப-மில்லை’ என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின்போது, ‘ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார்’ என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.

அப்துல் கலாம் எப்படி ஒரு ‘ஐகான்’ ஆக இளைய சமுதாயத்-துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.

புதிர் 2: பெண் குடியரசுத் தலைவி

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவியாக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் மீது, ‘எந்தப் பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. தன் கணவரையோ, துணைவரையோ, மகன், மகள், மாமன், மருமகன்களையோ... பேரன், பேத்திகளையோ... உடன் பிறந்த, உடன் பிறவாத சகோதர சகோதரிகளையோ, நண்பர்களையோ, அவர் அமைச்ச-ராகவும் ஆளுநராகவும் இருந்த சமயங்களில், அரசு விஷயங்-களில் தலையிட அனுமதித்தது இல்லை என்று அவருடன் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுவே இன்றைய அரசியல் சூழலில் அபூர்வமான நல்ல தகுதியாகும்’ என்று நான் எழுதிய அடுத்த வாரத்தில், அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை பி.ஜே.பி. தலைமையில் ஒரு பெரிய படையே தொடர்ந்து வீசி வருகிறது.

அவர் ஆரம்பித்த வங்கியில் ஊழல், சர்க்கரை ஆலை திவால், அவர் கணவர் மீது ஆசிரியை ஒருவரைத் துன்புறுத்தி தற்-கொலைக்குத் தூண்டிய குற்றச்-சாட்டு, அவர் சகோதரர் மீது கொலைக் குற்றச்சாட்டு என்று பட்டியல் நீளுகிறது.

எனக்குப் புதிராக இருப்ப-தெல்லாம், இந்தக் குற்றச்சாட்டு-களை ஏன் பி.ஜே.பி. இத்தனை வருடங்-களாகப் பேசவில்லை என்பதுதான்! பிரதீபா, ராஜஸ் தான் ஆளுநராக இருந்து, பி.ஜே.பி-யின் மத மாற்றச் சட்ட வரை-வைத் திருப்பி அனுப்பியபோது-கூட இதை-யெல்லாம் அவர்கள் பேசவில்லையே!

பிரதீபாவை எதிர்க்கும் பைரோன்சிங் ஷெகாவத் மீதும் பதில் குற்றச்சாட்டுகள் இப்போது வீசப்படுகின்றன. ‘அவர் ராஜஸ் தான் முதல்வராக இருந்தபோது, பி.ஜே.பி. அமைச்சர்களின் சபலத் துக்குத் தீனி போட்ட ஒரு தரகியை சமூக நலத் துறை தலைவியாக்கி-னார்’ என்பது அவற்றில் ஒன்று. இது தவிர, அவர் மீதும் ஊழல், மருமகனின் நில மோசடிக் குற்றச் சாட்டுகள். ரொம்ப ஆராய்ச்சி செய்து, 1947-ல் ஷெகாவத் போலீஸ்-காரராக வேலை பார்த்தபோது லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் ஒரு குற்றச்சாட்டு!

இருவர் மீதுமான மேற்படி குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையென்று வைத்துக்கொண்டால், இதுவரை ஷெகாவத் முதலமைச்சராகவும் துணைக் குடியரசுத் தலைவராகவும், பிரதீபா மாநில அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்ததே தவறுதான்!

‘அந்தப் பதவிகளில் எல்லாம் இருந்து விட்டுப்போகட்டும். ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு மட்டும் அவர்கள் வரக் கூடாது’ என்று வாதாடுவார்களா-னால்... அது என்ன லாஜிக் என்பது எனக்குப் புதிராக இருக்கிறது.

ஊழல், மோசடி, தகிடுதத்தங்கள், சமரசங்கள் செய்யாமல் இந்திய அரசிய லில் ஒருவர் எங்கேயும் எம்.எல்.ஏ-வாக என்ன, கவுன்சிலராகக்கூட ஆக முடியாது என்பதுதான் யதார்த்த நிலை! ஜனாதிபதி பதவிக்கு மட்டும் எப்படி ஒரு அரிச்-சந்திரன் அல்லது அரிச்சந்திரியை இதர சந்திரஹரிகள் தேர்ந்தெடுத்துவிட முடியும் என்று எதிர்பார்க்கி-றோம்?

இருக்கும் மோசமான சூழலில், முதல் முறையாக ஒரு பெண் குடியரசுத் தலைவி ஆவதை இன்னும் ஓரடி முன்னால் என்ற அளவில் மட்டுமே பார்க்கவும், வரவேற்கவும் முடியும்.

புதிர் 3: ‘சிவாஜி’ படம்

கமர்ஷியல் சினிமாவுக்கு லாஜிக் கிடையாது; ஃபார்முலா மட்டும்தான் உண்டு என்ற லாஜிக்கைச் சகித்துக்-கொண்டு ஏற்றுக்கொண்டாலும், ‘சிவாஜி’ படத்தின் அடிப்படை லாஜிக் இவ்வளவு ஓட்டையாக இருப்பதை தமிழ்ச் சமூகம் ஏன் பொருட்படுத்தவில்லை என்பதும் புதிர்தான்.

படத்தின் அடிப்படை, கறுப்புப் பண ஒழிப்பின் மூலம் இந்தியாவை வல்லர-சாக்குவது (இந்தியாவை வல்லரசாக்க இன்னும் எத்தனை பேர் இப்படிக் கிளம்புவார்களோ?). உள்ளூர் கறுப்புப் பண முதலைகளை பிளாக்மெயில் செய்து, ரஜினி அவர்களிடம் பிடுங்கும் க.பணத்தை ஹவாலா தரகர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வெ.பணமாக்கு-கிறார். இங்கேதான் சிக்கல். உள்ளூரில் பிடுங்கிய பணம் இங்கே முஸ்லிம் தரகர் கையில்! அதற்கு ஈடாக வெள் ளைக்காரத் தரகன் டாலர்களாக அனுப்பும் வெள்ளைப் பணம் ரஜினியின் சமூக நல டிரஸ்ட்டுக்கு வருகிறது.

ஓ.கே! இங்கிருப்பவரிடம் ஒப்படைக்கப்பட்ட க.பணம் எப்படி வெள்ளைத் தரகனுக்குப் போய்ச் சேரும்? அந்த இந்திய ரூபாய் இங்கேயேதானே சுற்றிக்கொண்டு இருக்கும்! ஆக, ரஜினி செய்ததெல்லாம் ஒரு க.பணத்துக்குச் சமமாக இன்னொரு க.பணத்தை இங்கேயே வெ.பணம் என்ற பெயரில் உலவவிடுவதுதான். ஹவாலாபடி பண மாற்றம் என்பது வெள்ளைக்காரன் இங்கே வாங்கும் சரக்குக்கு இந்த ஊர்ப் பணத்தைத் தருவதும், இந்திய தரகர் அமெரிக்கா வில் வாங்கும் சரக்குக்கு வெள்ளைக் காரன் அங்கே அந்த ஊர்ப் பணத் தைத் தருவதும்தான். அப்படித்தான் கணக்கை அவர்களுக்குள் சரி செய்வார்கள்.

ஓர் உதாரணத்துக்குச் சொல்வதா னால்... அதிகாரபூர்வமாக ஏற்றுமதி செய்ய முடியாத கஞ்சா, ஹெராயின் போதைப் பொருட்கள் இங்கிருந்து அமெரிக்கா செல்லும். அதற்கு, ஈடாக ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ். என்று இங்கே வரும். அதாவது, கறுப்புப் பண ஒழிப்புக்குத் திரையில் காட்டப்படும் அதிரடி வழியின் தொடர்ச்சி... பயங்கரவாதம், போதை மருந்து வியாபாரத்தை மேலும் ஊக்குவிப் பதுதான்!

கறுப்புப் பணத்தை ஒழிக்கச் சொல்லும் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவது எப்படி நியாயம் என்பது இன்னொரு புதிர்!

புதிர் 4: தாஜ்மஹால் - உலக அதிசயம்!

‘நீங்கள் ஓட்டுப் போடாவிட்டால், தாஜ்மஹால் உலக அதிசயப் பட்டிய லிலிருந்து நீக்கப்பட்டுவிடும்’ என்று என்னை மிரட்டி தினசரி எஸ்.எம்.எஸ். சித்ரவதை நடக்கிறது.

இந்தியாவில் இருக்கும் தாஜ்மஹால் முதல் கண்ணதாசன் பாட்டு, இளைய ராஜாவின் மெட்டு, எம்.பி.சீனிவா சனின் சேர்ந்திசை, ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள், புரிசை கண்ணப்பத் தம்பிரானின் கூத்து வரை எல்லாமே நம்முடைய சொத்துக்கள் தான். இதில் எதையாவது அதிசயம் அல்லது இல்லை என்று சொல்வ தானால், அதை யார் சொல்வது?

இவைதான் உலக அதிசயங்கள் என்று வரையறுக்க ஏதாவது உலகளா-விய அமைப்பு இருக்கிறதா? இல்லை. ஐ.நா. சபை புராதன, மரபான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலை அவ்வப்போது தயாரிக்-கிறது. ஏழு அதிசயம், எட்டு அதிசயம் பட்டியல் அல்ல அது!

இப்போது தாஜ்-மஹாலை ஓட்டுக்கு விட்டி-ருப்பது யார் என்பது தான் புதிர். இதை ஏதோ தனியார் நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. ஏன் செய்கிறது? பிராண்ட் பிரமோஷனும் வர்த்தக-மும்தான் நோக்கம்.

இது புரியாமல் இன்டர்-நெட்டிலும் ‘ஆர்க்குட்’ வெப் தளத்திலும் செல்போனிலும் என் உயிரை வாங்கும் ஐ.டி. இளைஞர்கள் எப்படி அதி புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள் என்பதுதான் அசல் புதிர்.

புதிர் 5: மதுரை மேற்கு இடைத் தேர்தல்!


இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் 75 சதவிகிதம் வாக்குப்பதிவு மதுரையில் நடந்ததே முதல் புதிர். தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்க ளுக்கு எப்படி இப்படி ஒரு திடீர் நம்பிக்கை ஏற்பட்டது என்பது அதன் துணைப் புதிர்.

தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளைச் செய்வதற்கு முன் பாக வன்முறை, லஞ்சம் இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. வாக்காளர் களில் கணிசமானவர்களின் குடும்பத் துக்கு 1,500 முதல் 3,000 ரூபாய் வரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் கொடுத்திருப்பது ஆதாரம் கிடைக் காத உண்மை!

மக்கள், பணம் வாங்கிக்கொண்டு அதற்கு விசுவாசமாக ஓட்டுப் போட்டார்கள் என்று வைத்துக்கொண் டால், மக்களே ஊழல் பேர்வழிகள் ஆகிவிட்டார்கள் என்று அர்த்தமா?

இலவச டி.வி. முதலான ‘சமூக முன்னேற்ற’ நடவடிக்கைகளை ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள் என்று வைத்துக்-கொண்டால், தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல், வன்முறை, அராஜகம் பற்றியெல்லாம் மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா?

அல்லது, ‘எந்தக் கட்சியானாலும் சரி... என்ன அராஜகம், வன்முறைகள் செய்தாலும், எங்களை நேரடியாக பாதிக்காதவரை ஓ.கே! எங்களுக்கு இலவசங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கும்வரை எதையும் கண்டு கொள்ள மாட்டோம்’ என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தமா?

எந்த முறைகேடும் நடக்கவில்லை; தேர்தல் ஆணையம் முதல் அரசியல் கட்சிகள் வரை எல்லாரும் நேர்மை யாகவும் ஒழுக்கமாகவும் செயல்பட்டு, அதன் அடிப்படையில் நடந்த தேர்தல் இது என்பதுதான் உண்மையானால்... ஓ, இந்த அதிசயம் தமிழகத்தில் எப்படி ஒரே இரவில் நிகழ்ந்தது என்பது-தான் புதிர்களிலேயே பிரமாண்டமான புதிர்!
( நன்றி: ஆனந்த விகடன் )

3 Comments:

Anonymous said...

//‘எந்தக் கட்சியானாலும் சரி... என்ன அராஜகம், வன்முறைகள் செய்தாலும், எங்களை நேரடியாக பாதிக்காதவரை ஓ.கே! எங்களுக்கு இலவசங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கும்வரை எதையும் கண்டு கொள்ள மாட்டோம்’ என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தமா?//

அந்த நிலைக்கு மக்கள் புதிதாக வருவதா? அந்த சுயநல, குறுகிய மனப்பான்மை கொண்ட மனநிலையில் தானே ஐயா நம்மில் பெரும்பான்மையினர் அப்போதிலிருந்தே வாழ்ந்து வருகிறோம். ஜனநாயகத்தில் மக்களின் நிலைக்கு ஏற்ப தான் தலைவர்கள் அமைகிறார்கள். மக்கள் மாறாதவரை நாட்டின் தலையெழுத்து மாறாது.

Anonymous said...

"குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப்படவில்லை."

மற்ற குடியரசுத் தலைவர்கள் எதோ இவைகளுக்காக பல முயற்சிகள் எடுத்தது போலவும், ப்ரதிபா பாடில் முயற்சி எடுப்பார் என்பது போலவும் கட்டுரையாளர் கூற முயற்சித்து இருப்பது நகைப்புக்கு உரியது.இந்தியாவில் குடியரசுத் தலைவரின் அதிகார எல்லை மிகவும் குறுகியது என்பது ஞாநி அறியாதது அல்ல. கலாம் குடியரசு தலைவராக வர வேண்டும் என்று நினைப்பவரகள் அவரது பொது வாழ்வில் தூய்மை, எளிமை,சுதந்திரமான நேர்மையான சிந்தனை, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு வளையாத தன்மை, முதலானவற்றையே விரும்பினர்

"வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி."

வல்லரசு என்பதற்கு அறிவு மிக்க இந்தியர்கள், யாரையும் சார்ந்திராத தன்னிறைவு பெற்ற இந்தியா ஒவ்வொரு இந்தியனுக்கும் நல்ல வாழ்வு, அறிவியல் பலம் என்பதைதான் கலாம் தொடர்புபடுத்தி வந்திருக்கிறாரே தவிர அணு -ராணுவ பலத்தை மட்டும் முன்னிறுத்தியது இல்லை.

"எங்கு சென்றாலும் மாணவ-மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார்."

இளைய தலை முறையினருடன் பேசுவது, அவர்கள் சந்தேகங்கள் தீர்ப்பது முதலனவை பிரசாரம் என்றால் கட்டுரையாளரும் அதைதான் பல முறை செய்திருக்கிறார். மொத்ததில் குடியரசு தலைவராக வருபவர் வாய் முடி மவுனியாக இருந்தால் போதும் யாருடனும் பேசாதிருந்தால்தான் அவர் 'சரியாக' இருக்கிறார் என்ற அதிசய விதியை நடைமுறைப் படுத்த ஞாநி விழைகிறார்

Anonymous said...

//‘எந்தக் கட்சியானாலும் சரி... என்ன அராஜகம், வன்முறைகள் செய்தாலும், எங்களை நேரடியாக பாதிக்காதவரை ஓ.கே! எங்களுக்கு இலவசங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கும்வரை எதையும் கண்டு கொள்ள மாட்டோம்’ என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தமா?//

அந்த நிலைக்கு மக்கள் புதிதாக வருவதா? அந்த சுயநல, குறுகிய மனப்பான்மை கொண்ட மனநிலையில் தானே ஐயா நம்மில் பெரும்பான்மையினர் அப்போதிலிருந்தே வாழ்ந்து வருகிறோம். ஜனநாயகத்தில் மக்களின் நிலைக்கு ஏற்ப தான் தலைவர்கள் அமைகிறார்கள். மக்கள் மாறாதவரை நாட்டின் தலையெழுத்து மாறாது.

We all know this. we all will not accept this is public. What you have said summs up the indian politics of 60Yrs.