பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 18, 2007

வெட்கமில்லை வெட்கமில்லை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் மீது சாட்டப்பட்டுள்ள மிக வலுவான குற்றச்சாட்டுகள் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சியடைய வைக்கின்றன.


இக்குற்றச்சாட்டுகளுக்கான பிரதிபா பாட்டீலின் பதிலோ மிக சாதுர்யமானது. "நாட்டின் மிகப் பெரிய பதவிக்காக போட்டியிடுகிறேன். பிரசாரம் என்ற பெயரில் என் மீது குற்றம்சாட்டுவது மூலமாக அந்தப் பதவியின் கண்ணியத்தைக் குறைத்து விடாதீர்கள்; இதுவரை எனது 50 ஆண்டுகால பொதுவாழ்வில் எனது மனசாட்சியின்படியே நடந்து வந்துள்ளேன்'.

மிக வினோதமான பதில் இது! மனசாட்சி என்ற அளவுகோல் எப்படி இவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக முடியும்? ஓர் ஊழல்வாதிக்கு அவரது மனசாட்சிப்படி லஞ்சம் வாங்குவது குற்றம் அல்ல; ஒரு திருடனுக்கு அவனது மனசாட்சிப்படி திருடுவது குற்றம் அல்ல; இதேபோல் கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் அவர்களது மனசாட்சியின்படி கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் குற்றம் அல்ல!

அவருக்கு வக்காலத்து வாங்கும் வகையில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி இது ஒன்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் அல்ல. இந்தியாவைப் பொருத்தவரை நேரடியாக மக்களே குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது. இங்கு எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே வோட்டளித்து தேர்வு செய்யும் பதவி இது என்று "அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே' என்ற அடிப்படை உண்மையைக்கூட மிக லாவகமாக மறைத்திருக்கிறார்! "மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பத்தை அறிந்து நடந்து கொள்ளத் தேவையில்லை; அது எங்களுக்கு அவசியமும் இல்லை; ஓட்டுப்போட்டுவிட்டாயா உனது வேலை முடிந்தது, ஓரம்போ! மீதி விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' - என்று வாக்காளரின் கன்னத்தில் அறையாத குறையாகப் பேசியிருக்கிறார். ஆஹா, திருவாளர் பொதுஜனத்தின் மீதுதான் இவருக்கும் இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கூட்டணிக்கும் எவ்வளவு மரியாதை?

மே-13 உ.பி. முதல்வராகப் பதவி ஏற்கிறார் மாயாவதி. பதவி ஏற்று ஒருமாதகாலம் கூட ஆகவில்லை. மாயாவதியும் சோனியாவும் தில்லியில் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சுகளும் பேரங்களும் நடக்கின்றன. உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி நிதி தருவதாக மத்திய அரசு அறிவிக்கிறது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில ஆளுநர் டி .வி. ராஜேஸ்வர் அறிவிக்கிறார்! பிறகென்ன, தனது நலன், உ.பி.யின் நலன் இரண்டும் கவனிக்கப்பட்டாகி விட்டது! இனி தேசநலன் பற்றி எனக்கென்ன அக்கறை என்ற ரீதியில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரே எங்கள் வேட்பாளர் எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார், மாயாவதி! புதிய குடியரசுத் தலைவருக்கான முதல்கட்டத் தேர்தல் பணி இனிதே வெற்றியுடன் முடிந்தது!

அடுத்தகட்டம் ஆரம்பமாகிறது! அடுத்த குடியரசுத் தலைவர் "தான் கேட்ட நேரத்தில், கேட்ட இடத்தில் கையெழுத்திடும் நபராக இருக்க வேண்டும்' என்ற நோக்கில் தங்களது அணியின் வேட்பாளரைத் தேட ஆரம்பித்தார் சோனியா! பிரணாப் முகர்ஜி, கரண்சிங், சிவராஜ் பாட்டீல்... என ஒவ்வொருவராக ஓரங்கட்டப்பட்டு கூட்டணியின் ஏகோபித்த ஆதரவுடன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் பிரதிபா பாட்டீல்!

போனஸôக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சிவசேனையும் பிரதிபாவை ஆதரிக்கிறது! பிரதிபாவை வேட்பாளராக நிறுத்தியதால் பெண்ணினத்திற்கே பெருமை தேடித் தந்துவிட்டதாக கூட்டணியினர் கூத்தாடினர்!

பிரதிபா மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பத்திரிகைகளும், பய செய்திகளும், அரசியல் வல்லுநர்களும், கட்டுரையாளர்களும் வெளிச்சம் போட்டுக் காட்டியபொழுது, காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் "தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே' என்ற காந்திய வழியைப் பின்பற்றியது!

லஞ்சம், ஊழல் கறைபடியாத பல தலைவர்களை இன்றும் கொண்டுள்ள கட்சி இடதுசாரி கட்சிகள் மட்டுமே! ஆனால் இடதுசாரிகள், இன்று பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளுடன் கூடிய பிரதிபா பாட்டீலை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது வேட்பாளர் இவர்தான் என்று சுட்டிக்காட்ட, அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் "ஆமாம்' - என்று தலை அசைத்தார்கள்!

அனைத்துக் கட்சிகளும் சென்ற தேர்தலில் அப்துல் கலாமை ஆதரித்தபொழுது, தோல்வி உறுதி என்ற நிலையிலும் தங்களின் நிலைப்பாடு முக்கியம் என்று கேப்டன்

லட்சுமி சைஹலை அப்துல் கலாமுக்கு எதிரான வேட்பாளராக நிறுத்திய இவர்களது துணிச்சல் இப்போது எங்கே போயிற்று?

இத்தனைக்கும் அப்போது இடதுசாரிகளின் ஆதரவு காங்கிரஸýக்கோ ஆளும் பாஜக அணிக்கோ தேவையேயில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசோ இடதுசாரிகளின் ஆதரவிலும் தயவிலும்தான் காலம் தள்ள வேண்டிய நிலை! இத்தகைய வலுவான நிலையில் இருக்கும்போது சென்ற முறை போட்டியிடச் செய்த கேப்டன் லட்சுமியையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாமே! பிரதிபா பாட்டீலை மிக மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார்கள்!

சமீபகாலமாகவே நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் மத்தியில் இடதுசாரிகளின் தயவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சோனியாவின் தயவில் தற்போதைய இடதுசாரிகளின் அரசியல் இருக்கிறதா என்ற சந்தேகமே வருகிறது! மொத்தத்தில் இடதுசாரிகள் இடது "ஸôரி'களாக மாறி வருகிறார்கள்!

மகளிர் உரிமையை நிலைநாட்ட கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விடுவாரா தமிழக முதல்வர் கருணாநிதி? "அனைத்துக் கட்சி அருமைச் சகோதரிகாள் வாரீர்! வாரீர்! அணி அணியாக வாரீர்! - அன்னை நாடு காத்திட என்றுமே அழியா ஜனநாயகம் பூத்திட அன்னையொருவர் ஏறுகிறார் அரியாசனம்! அதற்கு வாழ்த்தளிக்க - வரவேற்று மகிழ வாரீர்! வாரீர்!' என்று தனக்கே உரிய பாணியில் அழைத்தார்! தமிழகம் முழுவதுமிருந்து கார், வேன், பேருந்துகளில் வருகை! கூட்டணிக் கட்சித் தலைவர் ராமதாúஸ அதிர்ந்து போகும் அளவுக்குப் பேரணி!

சென்னை மாநகரமே திக்குமுக்காடியது! "பெண்ணினத்திற்குப் பெருமை தேடிய கலைஞர் வாழ்க!', "பிரதிபா பாட்டீல் வெல்க!' என விண்ணதிர முழக்கம்! மேலும் ஒரு வரலாறு படைத்தார் கருணாநிதி!

1937-ல் நீதிக்கட்சி தொடங்கியது. 1938-ல் திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. இதன்மூலம் திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் தற்போதைய வயது சரியாக 80. நீதிக்கட்சி 1944-ல் திராவிடர் கழகம் ஆனது. திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவி அரசியலாகப் பரிணாம வளர்ச்சி எடுத்து 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2007-ல் இன்றும் அதே திமுக ஆட்சிதான்! துரதிருஷ்டம் என்னவென்றால் இந்த 40 ஆண்டு கழக ஆட்சிகளின் காலத்தில், சட்டசபையில் கருணாநிதியின் 50 ஆண்டு பொன்விழா சாதனை காலத்தில், 80 ஆண்டு திராவிட இயக்க பாரம்பரியத்தில் ஒரு தமிழ்ப்பெண்கூட குடியரசுத் தலைவருக்கான முழுத்தகுதிகளுடன் உருவாக முடியாததுதான்!

பெண்ணினத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடி வரும் தமிழக முதல்வர் குறைந்தபட்சம் தனது 5 முறை முதல்வர் பதவியில் ஒரு முறையாவது தனது கட்சியை சார்ந்த ஒரு பெண்ணை முதல்வர் பதவியில் அமர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்ணினத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கலாம்! ஒருவேளை அதுதான் 2 முறை ஜெயலலிதா முதல்வராக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோமே; அது திமுகவின் சாதனைதானே என்று விட்டுவிட்டாரோ என்னவோ?!

அடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாட்டைப் பார்க்கலாம்! முதலில் இருந்தே பைரோன்சிங் ஷெகாவத்தான் எங்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்று உறுதியாக இருந்தது. பிறகு சோனியா - மாயாவதி திடீர் கூட்டு, பிரதிபாவுக்கு சிவசேனை ஆதரவு, மூன்றாவது அணி கைவிரிப்பு... என அடிமேல் அடிவிழ முற்றிலும் நிலை தடுமாறியது! "மூன்றாவது அணி கலாமை ஆதரித்தால் தான் போட்டியில் இருந்து விலகத் தயார்' என ஷெகாவத் மூலமாகவே அறிக்கைவிட்டது! இரண்டாவது முறை போட்டிக்கு கலாம் மறுத்துவிடவே நிலைமை இன்னும் மோசமாகியது! வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்சிங்... என பாஜகவின் அனைத்து முதல்கட்டத் தலைவர்கள் புடை சூழ தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்குச் சென்று ஷெகாவத்தை சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வைத்தார்கள்.

ஊழல் சம்பாத்தியத்துக்கும், சொத்துகளுக்கும்தான் இதுவரை "பிநாமி' கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால் தனது கட்சியின் சார்பாக ஒரு "பிநாமி' வேட்பாளரையே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருக்காக கட்சித் தலைவர்களும் கூட்டணித் தலைவர்களும் நாடு முழுவதும் வீடுவீடாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வேண்டி "பாஜக ஒரு வித்தியாசமான கட்சி' என்பதை மீண்டும் உறுதி செய்தது.

இறுதியாக மூன்றாவது அணியின் லட்சணத்தைப் பார்ப்போம். முதலில் யார், யார் பெயரையோ யோசித்தார்கள். ஊடகங்களிடம் கிசுகிசுத்தார்கள். இறுதியில் ஒன்றும் உருப்பட்டு வராது எனத் தோன்றவே "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்போல்' அப்துல் கலாமே இரண்டாவது முறை நீடிக்கட்டுமே என்று தங்களது பெருந்தன்மையைக் காட்டினார்கள்'! அதை கலாம் முதலில் நாசூக்காகவும் பிறகு நேரடியாகவும் மறுத்த பிறகு மூன்றாவது அணியின் நிலைப்பாடு மிக மோசமானது! பிரதிபா, ஷெகாவத் இருவருக்கும் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை, தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தார் ஜெயலலிதா!

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது ஊர் ஊராய், தெருத்தெருவாய், வீடுவீடாய்ச் சென்று "எங்களுக்கு வாக்களிக்க மறந்து விடாதீர்கள், உங்கள் ஜனநாயகக் கடமையை மறந்து விடாதீர்கள்' என்று புன்னகைத்து பிரசாரம் செய்யும் இவர்கள் தங்களுக்கும் அத்தகைய கடமை உண்டு என்ற அடிப்படை நியாயத்தைக்கூட குப்பைத் தொட்டியில் எறிந்தார்கள்! தோற்றாலும் பரவாயில்லை, பிரதிபாவுக்கும் ஷெகாவத்துக்கும் எதிராக எங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்; ஜனநாயகத்தின் மாண்பைக் காப்போம் என்றல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்!

பாவம், என்னதான் செய்வார்கள் அவர்கள்?! லக்னௌ, ஹைதராபாத், சென்னை, தில்லி... என ஊர் ஊராய்ச் சென்று கூடிப்பேசியும் தங்கள் அணியின் தலைவரையே தேர்ந்தெடுக்க முடியாத நிலை. அவர்களுக்குள்ளேயே போட்டா போட்டி! இந்நிலையில் எங்கே இவர்கள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள்?

இறுதியாக பெண்ணுரிமை பற்றி பேசுபவர்களுக்கும் அதன் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கும் ஒரு செய்தி. (எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமும் தர்க்கமும் செய்யும் தர்க்கவாதிகளை இங்கு மறப்போம்) இத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதிபாவைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் இன்றைய மத்திய ஆளும் கூட்டணி பெண்ணினத்தை கௌரவப்படுத்துவதற்குப் பதிலாக அதை அவமானப்படுத்தியிருக்கிறது! களங்கப்படுத்தியிருக்கிறது!

ஒளவையார் முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை இந்த நாட்டின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ ஆயிரம் பேர்! வேலுநாச்சியார், ஜான்சிராணி, சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அருணா ஆஸப் அலி, உஷா மேத்தா, நிர்மலா தேஷ்பாண்டே, சௌந்தரம் ராமச்சந்திரன், இந்திரா காந்தி, கேப்டன் லட்சுமி, கிருஷ்ணம்மாள் ஜகநாதன், மேதா பட்கர், உஷாராய், அருந்ததி ராய், ருக்மிணி அருண்டேல், எம்.எஸ். சுப்புலஷ்மி, லதா மங்கேஷ்கர், பி. சுசீலா, எஸ். ஜானகி, டாக்டர் சாந்தா, ஷபனா ஆஷ்மி, இந்திரா நூயி, கிரண்பேடி, கல்பனா சாவ்லா, பி.டி. உஷா, சானியா மிர்சா...என சுதந்திரப் போராட்டம் தொடங்கி அரசியல், வரலாறு, கல்வி, விஞ்ஞானம், சமூக சேவை, கலை, இலக்கியம், விளையாட்டு... இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனை பேர்? நிலைமை இவ்வாறு இருக்க இந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பதவிக்கு இவ்வளவு குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஒரு பெண்மணிதான் கிடைத்தாரா?

ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, சஞ்சீவரெட்டி, கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் என மாபெரும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், மேதைகள் அலங்கரித்த பதவியில் அமரப் போகிறார் பிரதிபா பாட்டீல்!

ஒரு டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்டு... விண்ணப்பிக்க திருவாளர் பொதுஜனம் எவ்வளவு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது, எவ்வளவு அலைச்சல் அலைய வேண்டியிருக்கிறது? அது இல்லை, இது இல்லை, இது போதாது, தகுதிச் சான்றிதழ் வேண்டும் என எத்தனை முறை திருப்பி அனுப்பப்படுகிறார்.

ஆனால் இன்றைய மத்திய ஆளும் கூட்டணியோ தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரின் பின்னணி என்ன, அவரிடம் உள்ள குறைபாடுகள் என்ன, உயர் தகுதிகள் என்ன..? என்பதையெல்லாம் ஆராயாமல், பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இத்தனை குற்றச்சாட்டுகள் வந்தபிறகும் மறுபரிசீலனை தேவையில்லை, எங்கள் முடிவை மாற்ற இயலாது, எங்கள் வேட்பாளரின் வெற்றியை யாரும் தடுக்கவும் முடியாது, "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், வெட்கமில்லை வெட்கமில்லை வெட்க மென்பதில்லையே' - என்பதையே கூட்டணியின் தாரக மந்திரமாகக் கொண்டு நாளை நடக்கும் தேர்தலில் வெற்றியும் பெறப் போகிறார்கள்!

எனது 18 ஆண்டு கார்ட்டூனிஸ்ட் பணியில் இதுவரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட குடியரசுத் தலைவரை கார்ட்டூனில் கொண்டு வந்ததில்லை..! அதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்! ஆனால் அதைத் தங்களது வேட்பாளர் தேர்வு மூலம் உடைத்துக் காட்டியிருக்கிறார்கள் இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர்! "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோ வென்று போவான்!' என்ற மகாகவி பாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டு இப்போதைக்கு நம் மனதைத் தேற்றிக் கொள்வதைவிட வேறு வழி நமக்குத் தெரியவில்லை!
( நன்றி: தினமணி )

4 Comments:

Anonymous said...

மிகச் சிறந்த கட்டுரை. ஆளும் காங்கிரசின் கேவலமான போக்கினை எடுத்துரைக்கிறது. பிரதிபா என்ற பெண்ணின் கிரிமினல் சாதனையையும் சோனியாவின் பிடிவாதத்தையும் இடதுசாரிகளின் களவாணித்தனத்தையும் படம் பிடத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Anonymous said...

cho ramasamy recent audio speech:
www.esnips.com/web/bseshadri-podcasts

TBCD said...

/*மொத்தத்தில் இடதுசாரிகள் இடது "ஸôரி'களாக மாறி வருகிறார்கள்!*/
Oru pathirikai ippadi tharam thalnthu pogalama..pengal yendral kevalama..thangal karuthukalai munn vaika veru varthaigaley illaya..yenna.

Anonymous said...

வெட்கமாக இருக்கு. As a voter I didn't think that far.. I really feel ashamed for the kind of leaders we have elected.

From PSG, Coimbatore