பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 18, 2007

திருப்தியும் அதிருப்தியும்


இந்த கார்ட்டூனை வெளியிட்டமைக்கு வருந்துகிறோம் என்ற தலைப்பில் வந்த தினமணி கார்ட்டூன், மற்றும் தலையங்கம்.

திருப்தியும் அதிருப்தியும்
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட போது, மிக நல்ல தேர்வாகவே தெரிந்தது.

நெருக்கடியான நிலையில் இருந்து விடுபட காங்கிரஸ் கட்சித் தலைமை கடைசி நேரத்தில் எடுத்த முடிவு அது என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் முதல் பெண்மணியாக அவர் சித்திரிக்கப்படுகிறார். அவர் என்ன சாதாரண அரசியல்வாதி, தனக்கென்று தனி ஆளுமை இல்லாதவர் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு அரசியல் களத்தில் விரிவான, பலதரப்பட்ட அனுபவம் இருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் மாநில அமைச்சர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர், மாநிலங்களவை துணைத் தலைவர், மிகவும் தன்னடக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் விசுவாசி என்பதெல்லாம் அவருக்குள்ள சாதகமான அம்சங்கள். அதே சமயம் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தபோது, மதமாற்றத் தடைச் சட்டத்தில் கையெழுத்திட முடியாது என்பதில் அவர் காட்டிய உறுதியிலிருந்து அவரால் கடுமையான முடிவுகளையும் எடுக்க முடியும் என்று அறியலாம். அவர்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்படும்வரை அவரைக் குறித்து எந்தவித சர்ச்சையும் மூண்டதில்லை.

அவர்தான் வேட்பாளர் என்று அறிவித்த 3 வாரங்களுக்குள், அவரைப் பற்றிய ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்து அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரம் இல்லை, காழ்ப்புணர்ச்சியால் காரணம் என்று அவர் சமாதானம் சொன்னாலும், பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்பது வேறு விஷயம். மக்கள் எதையும் நீண்ட நாள்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வதில்லை, அவர் மீதான ஊழல் புகார்களும் மறக்கப்பட்டுவிடும் என்பதெல்லாம் உண்மையே.

பதவிக்கு வந்தால் உடனேயே அவருடைய மதிப்பு உச்சாணிக் கொம்புக்குப் போய்விடாது. கடந்த இரு வாரங்களில் தனக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க அவர் மிகுந்த பாடுபட வேண்டியிருக்கும். நம்முடைய அரசியல் கட்சிகளிலும் நிர்வாகத்திலும் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதை உணர இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், நமது கட்சியில் அப்படிப்பட்டவர்கள் யார், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா, நாம் எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

ஆளும் கட்சி அல்லது கூட்டணி தேர்வு செய்யும் நபர் பற்றிய தகவல்களை, மத்திய அரசின் உளவுப்பிரிவு போலீஸôர் திரட்டி அரசின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏதோ அவசரத்தில், அரைகுறையான தகவல்களுடன் யாரையாவது தேர்ந்தெடுப்பது அல்லது யாரையாவது நியமிப்பது என்பதே அரசின் நடவடிக்கையாக ஆகிவிட்டது. ஏதோ ஒரு பிரச்னை தனக்கு நேர்ந்துவிட்டது என்றால், உடனே அதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. அதன் நீண்டகால விளைவு குறித்து ஏதும் சிந்திக்கப்படுவதில்லை.

1990-களில், தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்ற உடன், அப்போதைய பிரதமர் வி.பி. சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவற்றிடம் நிதி உதவி கேட்கச்சென்றபோது அவர்கள் அளித்த நிர்பந்தத்தின்பேரிலேயே நம் நாட்டில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பவை கட்டாயமாக ஏற்கவைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் பதவிக்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக முதலில் சிவராஜ் பாட்டீல் பெயர்தான் பரிந்துரைக்கப்பட்டது. அதை முதலில் நிராகரித்தவர்கள் இடதுசாரி கட்சியினர். பிறகு சோனியா காந்தி பிரதிபா பாட்டீலுக்குக் குறி வைத்தார்.

2002-லும் கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எப்படிப்பட்ட சக்திகள் வேலைசெய்கின்றன என்பதை அறிய கடந்த இரு வாரங்கள் நல்ல வாய்ப்பாக இருந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கோபமாகவும் மெüனமாகவும் இருக்கின்றனர்.

நம்வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல், பிரதிபா பாட்டீலை ராஜஸ்தான் ஆளுநராக நியமித்துத் தொலைத்தோமே என்று தனது விதியை மனதுக்குள் நொந்தபடியே இருக்கிறார் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். ""அவருக்கு உடல்நிலை சரியில்லையே''என்று தன்னைப்பற்றி கட்சித் தலைவர் சோனியா காந்தி, பலர் அறிய வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே என்று உள்ளூர கொதித்துக் கொண்டிருக்கிறார் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அழைத்து யோசனை கேட்கிறார்கள், தீர்மானம் என்றால் வாசகம் எழுதித்தரச் சொல்கிறார்கள், குடியரசுத் தலைவர் பதவியில் இவரை வைத்தால் நம் கதி என்ன ஆகுமோ என்று கட்சித் தலைமையே நம்மைச் சந்தேகிக்கிறதா என்று கொதித்துப் போயிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

இடதுசாரிகள் விதித்த நிபந்தனைகளின்படியான அத்தனைத் தகுதிகளும் நமக்கு இருக்கிறது, மாயாவதியும் ஆதரவு தரத்தயாராக இருக்கிறார்; அப்படியும் கட்சித் தலைமை நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற ஆதங்கம் மூத்த தலைவரான நாராயண் தத் திவாரிக்கு நிறையவே இருக்கிறது.

மார்கரெட் ஆல்வாவை யாரும் கிறிஸ்தவராகவே பார்ப்பது கிடையாது என்றாலும், கிறிஸ்தவர் என்ற காரணத்துக்காக அவரை வேட்பாளராக்க மறுத்துவிட்டனர். இப்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை கட்சித்தலைமை ஏன் ஓரங்கட்டியது என்பதற்கு விளக்கம் அளித்துக் கொண்டே போகலாம்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மிக அருகில் இருந்து கவனித்தவர்கள், பிரதிபா மீது இத்தனை புகார்கள் அடுக்கடுக்காய் வருவதற்குக் காரணம் உள்ளே இருக்கும் அதிருப்தியாளர்கள்தான் என்பதை எளிதாகக் கூறிவிடுவார்கள்.

காலங்கடந்துதான் காங்கிரஸ் தலைமைக்கு இது புரிந்திருக்கிறது; சேதத்தைக் குறைக்கும் வகையில், பைரோன் சிங் ஷெகாவத்மீது காங்கிரஸ் கட்சியும் பதில் குற்றச்சாட்டுகளைக் கூற ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியில் முதிர்ந்த தலைவர்கள் இல்லை என்பதால் அல்ல. முதிர்ந்த தலைவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கட்சித் தலைமை தயாராக இல்லை.

நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான தேர்தல் என்ற போதிலும் அதில் அரசியல் தலைகாட்ட இதுவரை அனுமதித்ததே இல்லை. 1969-ம் மட்டும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை, மனசாட்சிப்படி வாக்களித்து தோற்கடிக்க வைத்தனர் இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள். வி.வி. கிரி அப்போது குடியரசுத் தலைவர் ஆனார். ஆனால் அப்போதுகூட புழுதிவாரித்தூற்றும் செயலும் நடைபெறவில்லை, அந்த அளவுக்குத் தகுதி குறைவானவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படவும் இல்லை.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் சர்ச்சையே கூடாது என்பதுதான் மரபாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறை அதுவும் மீறப்பட்டுவிட்டது என்பது வருத்தத்தைத் தருகிறது.பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ பேசிய ஒலிப்பதிவு ( பத்ரி பதிவு வழியாக )

அருன் ஷோரி (32.16 நிமிடங்கள்)
சோ ராமசாமி (20.55 நிமிடங்கள்)
( நன்றி: தினமணி, பத்ரி )

0 Comments: