பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 04, 2007

நரேஷ் குப்தாவின் நச் பேட்டி

குமுதம் ரிப்போட்டரில் வந்த மதுரை இடைத்தேர்தல் ஹீரோ நரேஷ் குப்தா பேட்டி. நேர்மையான அதே சமயம் கண்ணியமான பதில்கள். ( நன்றி குமுதம் ரிப்போட்டர் )

முன்னெப்போதும் இல்லாத பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல். இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளும், அதை நடைமுறைப்படுத்த அது காட்டிய உறுதியும்தான். இயல்பாகவே இதுபோன்ற நெருக்கடிக்கு ஆளானவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விமர்சிப்பதுண்டு.

ஆனால், இந்தமுறை மதுரையிலுள்ள தி.மு.க. வட்டச்செயலாளர் தொடங்கி முதல்வர் கலைஞர் வரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவைத் தங்களின் விமர்சனக் கணைகளால் விளாசித் தள்ளிவிட்டார்கள்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நரேஷ்குப்தா கண்டிப்புக்கும் நேர்மைக்கும் உதாரணமாகக் காட்டப்படும் வெகுசிலரில் ஒருவர். கணக்கிலும் _ காந்திய சிந்தனைகளிலும் தனித்தனியே முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள நரேஷ்குப்தா மீதான விமர்சனங்கள் இன்றுவரை தொடர்ந்தபோதும் ரிலாக்ஸான மனநிலையோடு, நமது கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

மதுரை இடைத்தேர்தலின்போது தனிப்பட்ட முறையில் நீங்கள் நெருக்கடிக்கு ஆளானதாகவும், மாநில அரசுத் தரப்புக்கு தேர்தல் ஆணையம் நெருக்கடி தந்ததாகவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எது உண்மை?

‘‘இந்தத் தேர்தலின்போது ஆரம்பத்திலிருந்தே சில விஷயங்கள் சரியாக இல்லை. ‘பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது... எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது...’ என்றெல்லாம் அடுத்தடுத்து புகார்கள் வந்தன. மொத்தத்தில் நிலைமை இயல்பாக இல்லை. இதைத் தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின்படி ஆய்வு செய்தது.

செப்டம்பர் 2006_ல் மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோதும் இதுமாதிரியான புகார்கள் வந்தன. அப்போது நிலைமையை ஆய்வு செய்ய வந்த இந்திய துணைத் தேர்தல் ஆணையாளர் பட்டாச்சார்யா, ‘தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதன் அடிப்படையில் அப்போது சில நடவடிக்கைகளை எடுத்தோம். அந்த ஆலோசனையைத்தான் இப்போது பின்பற்றினோம்.

இப்போது, தேர்தல் பணிகள் ஆரம்பித்த நிலையிலேயே கலெக்டர், தேர்தல் அதிகாரி மற்றும் சில போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. இது குறித்து நான் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தேன். அதைத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைக்கலாமா என்று தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இந்த நேரத்தில் நிலைமை கொஞ்சம் சீரானது.

இதன் பிறகும்கூட பயமில்லாமல் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வியும் தயக்கமும் வாக்காளர்கள் மத்தியில் இருந்தது. இதனால் நான் களத்தில் இறங்கி, அந்த பயத்தைப் போக்க முயன்றேன். சமீபத்தில் உ.பி., பீகார், கோவா மாநிலங்களில் அமைதியாக தேர்தல் நடக்கக் காரணம், விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றியதுதான். அதே தரத்துடன் இங்கும் தேர்தல் நடத்த விரும்பியே இத்தனையையும் செய்தோம். இதில் நான் நெருக்கடிக்கு ஆளானேன்... அரசுக்கு நெருக்கடி தந்தோம்... என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமேயில்லை.’’

மாநில அமைச்சர் ஒருவரே உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினார் அல்லது அதட்டல் தொனியில் பேசினார் என்றொரு தகவல் உண்டு....

‘‘இப்படிக் கேள்வி கேட்டு, அதற்குப் பதில் சொல்லும் அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.’’

‘வேட்புமனு தாக்கலின்போது ஐந்து பேருக்கு மேல் சென்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவார்கள்?’ என்று முதல்வர் கலைஞர் ஆதங்கப்பட்டிருக்கிறாரே?

‘‘விதிமுறைப்படி இப்படி கூட்டமாகப் போய் வேட்புமனு தாக்கல் செய்வது தவறுதான். கடந்த காலங்களில் இதுமாதிரி நடந்தபோதும், தவறு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர, ராஜ்யசபாவுக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூட்டத்தை அனுமதிக்கும் தேர்தல்கமிஷன், இதற்கு மட்டும் அனுமதிக்கக் கூடாதா? என்று கேட்கிறார்கள். ராஜ்யசபா தேர்தலுக்கான விதிமுறைகளில் எத்தனை பேர் உடன் வரலாம் என்று எந்த விதிமுறையும் இல்லை. ஆனால் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு தெளிவான விதிமுறைகள் உள்ளன.

மதுரையில் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு இதுமட்டும் காரணமல்ல. மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள், மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர்கள், கடமையிலிருந்து தவறியவர்கள் எனப் பல காரணங்கள் இருந்தன.’’

அப்படி மாற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு 24 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசு நிர்ப்பந்திக்கப்பட்டதாமே?

‘‘இது ஒன்றும் புதிய விஷயமில்லையே. இந்தக் குற்றச்சாட்டைச் சொல்பவர்களுக்கு, இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான் என்பது நன்றாகவே தெரியும். 24 மணி நேரம் என்று கெடு விதித்து ஆணைகளைப் பிறப்பிப்பது தேர்தல் ஆணையத்தின் ஸ்டைல். எல்லா மாநிலங்களிலும், எல்லாத் தேர்தல்களின் போதும் இந்த வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் கால அவசரத்தை முன்னிட்டுத்தான் இது சொல்லப்படுகிறதே தவிர, யாருக்கும் நெருக்கடி தர அல்ல.

கடந்த பொதுத்தேர்தலில் (அ.தி.மு.க. ஆட்சியின் போது) சேலம் கலெக்டரையும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரையும் மாற்றும்போது இதே மாதிரிதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.’’

மாற்றப்பட்ட அதிகாரிகளுக்குப் பதிலாக யாரை நியமிக்கலாம் என்று அரசு அளித்த மூன்று பெயர்கள் கொண்ட பட்டியல் புறக்கணிக்கப்பட்டு, நீங்களே குறிப்பிட்ட நபரைப் பரிந்துரைத்தீர்களாமே?

‘‘தவறு செய்தார்கள் அல்லது தவறுக்குத் துணை போனார்கள் என்பதற்காக ஓர் அதிகாரி மாற்றப்படும்போது, அந்த இடத்திற்குப் புதிதாக வருபவர், அதே தவறைச் செய்யாத நபராக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்வதில் தவறில்லையே.

அந்த நெருக்கடியான நேரத்தில் சென்னையிலிருந்தோ, வேறு தொலைவிலிருந்தோ ஓர் அதிகாரியை நியமித்தால், அவர் பழைய பணியிடத்திலிருந்து விலகி மதுரை வந்து சேர்வதற்கே சில நாட்கள் ஆகிவிடும். இந்த நேர விரயத்தைத் தவிர்க்க மதுரையிலேயே உள்ள எந்த அதிகாரியை நியமிக்கலாம் என்று மதுரையின் முன்னாள் மற்றும் இந்நாள் கலெக்டர்களை ஆலோசித்தேன். மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த அதிகாரியை அவர்கள் பரிந்துரைத்தார்கள். அவருடைய பணிகளை ‘ரிவியூ மீட்டிங்’கின்போது நானும் கவனித்திருக்கிறேன். அவர் திறமையான, நேர்மையான அதிகாரிதான். இது தவிர, தனிப்பட்ட முறையிலும், ஆய்வு நடத்தி அவர் அரசியல் தொடர்பில்லாதவர் என்பதை உறுதி செய்து கொண்ட பின்பே அந்த அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

அதே போல போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டவுடன், அங்கேயே உள்ள தென்மண்டல ஐ.ஜி.யை அந்த இடத்தில் நியமிக்கச் செய்தோம். மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலின் போதும் நேரத்தின் அவசியம் கருதி இப்படித்தான் செய்தோம்.

ஆக, எந்தவித உள்நோக்கமும் இன்றிச் செய்யப்பட்ட இந்த நடவடிக்கைகள் பற்றி முதல்வரோ, முதல்வர் அலுவலக அதிகாரிகளோ என்னிடம் கேட்டிருந்தால், இந்தப் பின்னணிகளைச் சொல்லியிருப்பேன். மற்ற மாநிலங்களில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் தேர்தல் அதிகாரியிடம் பேசி உரிய விளக்கங்களைப் பெறுகிறார்கள். இங்கு அது இல்லை. என்னிடம் நீங்கள் கேட்கிறீர்கள். நான் சொல்கிறேன். யாருமே கேட்காதபோது இதையெல்லாம் நானாக எப்படி முன் கூட்டியே சொல்ல முடியும்?’’

நீங்கள் தொகுதியிலேயே முகாமிட்டு, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் சென்று விசாரணை நடத்தியதும் கூட விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறதே?

‘‘எல்லா வாக்குச் சாவடிகளுக்கும் நான் போகவில்லை. பதற்றமான புகார்கள் வந்த வாக்குச் சாவடிகளுக்கு மட்டுமே நான் நேரில் சென்றேன். ‘பயமில்லாமல் வாக்களிக்கிறீர்களா?’ என்று வாக்காளர்களிடம் நேரில் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற முறையில் இது என் கடமையும் கூட. தவிர, என்னுடைய அனுபவம் மற்றும் அறிவுக்காகவும் களத்திலும் இறங்கி எனது பணிகளைச் செய்தேன். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு எனது வருகை பயத்தைத் தந்திருந்தால், என்னுடைய செயல் தவறில்லைதானே?’’

தொடக்கத்தில் இருந்தே தேர்தல் கமிஷனின் சிந்தனை ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும், வெற்றி பெற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். அப்படி ஒரு சிந்தனை உங்களிடம் இருந்ததா என்ன?

‘‘அப்படி எந்தச் சிந்தனையும் எனக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ இல்லை. இங்கேதான் ஜாதி, அரசியல் என்றெல்லாம் தொடர்புபடுத்தி அதிகாரிகளை விமர்சிக்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் ஒருவன் அளிக்கும் அறிக்கையை வைத்து மட்டும் தேர்தல் ஆணையம் செயல்படாது. வேறு மாநிலங்களிலிருந்து இங்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகளும் தினசரி அறிக்கை அனுப்புவார்கள். தேர்தல் ஆணையம் அதையும் கவனத்தில் கொள்ளும். ஆக, எதுவுமே விதிமுறைப்படி நடக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டதே தவிர, முன்பே திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.’’

கடந்த முப்பது நாட்களாக மதுரையில் தேர்தல் ஆணையத்தின் ஆட்சிதான் நடந்தது என்று தி.க. தலைவர் வீரமணியும் கூட விமர்சித்திருக்கிறார்....

‘‘அரசியல்வாதிகளின் விமர்சனம் எல்லாவற்றிற்கும் நான் கவலைப்பட முடியாது. பதில் சொன்னாலும் நன்றாக இருக்காது. தேர்தல் நடத்துவது மட்டும்தான் எங்கள் வேலை. ஆட்சி செய்வது அல்ல. வாக்குச் சாவடியைத் தாண்டி நாங்கள் அதிகாரம் செய்ய முடியாது. அதற்குத் தேவையும் கிடையாது.’’

கடந்த ஆட்சியின்போது நடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் காட்டாத கடுமையை, இதில் காட்டியதாக ஒப்பிட்டுச் சொன்ன போது, அதை குழந்தைத்தனமானது என்று விமர்சித்தீர்கள். இது சரியா?

‘பத்தாண்டுக்கு முன்பு அப்படி இருந்தது... கடந்த ஆண்டு இப்படி இருந்தது...’ என்று ஒப்பிடுவது தவறு. அந்தத் தேர்தலின்போதும் சில முறைகேடுகள் நடந்ததாக தி.மு.க. புகார் சொன்ன போது, நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அப்போது நடந்த தவறை முன்னுதாரணமாக வைத்து இப்போதும் செய்யலாமா? நல்ல விஷயங்களைத்தான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். கெட்டவைகளை அல்ல என்ற அடிப்படையில்தான் இந்த ஒப்பீடு வேண்டாம் என்று சொன்னேன்.’’

தி.மு.க. என்பதாலேயே அதன் மீது உரசல் போக்கை தேர்தல் ஆணையம் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறாரே கலைஞர்?

‘‘எந்த அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கென சில நிர்ப்பந்தங்கள், தேவைகள் இருக்கும். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் தமிழ்நாட்டுக்காரன் அல்ல. உ.பி.காரன். அங்கு அ.தி.மு.க.வும் இல்லை. தி.மு.க.வும் இல்லை. எனவே இங்கு அவர்களுக்கு நான் சாதகமோ, பாதகமோ செய்யவேண்டிய அவசியமில்லை. என் வேலையை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு சாராருக்கு நான் ஆதரவு காட்டியிருந்தால், இன்னொருவர் என்னைப் பாராட்டியிருக்க வேண்டுமே...? ஆனால் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் வித்தியாசமின்றி என்னை விமர்சிக்கத்தானே செய்கிறார்கள்?’’

‘நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததற்காக ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த விஷயம் எந்த நிலையில் உள்ளது?

‘‘அந்த நான்கு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு வழக்கு கோர்ட்டில்தான் நடக்கும். என்னுடைய வேலை என்று தனிப்பட்ட முறையில் இதில் எதுவுமில்லை. தேர்தல் ஆணையம் ஏதேனும் அறிவுறுத்தினால் அதன்படி நடந்துகொள்வேன்.’’


கடந்த பொதுத்தேர்தலின்போது பொன்னேரி தொகுதியில் இருபதாயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக உங்களிடம் புகார் சொல்லியும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல ஜெயலலிதா மீதான இந்தப் புகாரும் கேட்பாரற்றுப் போய் விடுமோ என்று சந்தேகப்படுவதாக கலைஞர் சொல்லியிருக்கிறாரே?


‘‘உண்மையைச் சொன்னால், அந்த விஷயம் பற்றி தி.மு.க. புகார் சொல்லும் முன்பாகவே எங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் அதனால்தான் புதிய வாக்காளர்கள் கோரிக்கைக்காக 19743 விண்ணப்பங்கள் வந்ததில், ஆய்வுக்குப் பின் சுமார் 11,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகம் முழுக்க 19 லட்சம் விண்ணப்பங்களில் 13 லட்சம் நிராகரிக்கப்பட்டன. இப்படி தவறாக வாக்காளர்களைச் சேர்க்க முயன்றவர்கள் மீது இன்றளவும் வழக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, யார் சொல்கிறார்களோ இல்லையோ, தவறு நடந்தால் நான் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.’’

இவ்வளவு நெருக்கடிகள் மற்றும் விமர்சனங்களைத் தாண்டி இந்தப் பதவியில் நீடிப்பதை விரும்புகிறீர்களா?

‘‘ ‘ஹை_புரொஃபைல்’ பதவிகள் என்று சில உண்டு. அது மாதிரி பதவிகளுக்குப் போனால் சந்தோஷத்துடன் சங்கடங்களும் வரும். இந்தப் பதவி மக்கள் நேரடியாகக் கவனிக்கும் முக்கியமான பதவி. புத்திசாலிகள் கூடுதலான விஷயங்களுக்கு ஆசைப்படாமல் இதுமாதிரியான பணிகளைத்தான் விரும்புவார்கள். ‘நீ தலைமைச்செயலாளர் பதவிக்கோ, உள்துறைச் செயலாளர் பதவிக்கோ போகிறாயா? இல்லை... அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்குப் போகிறாயா?’ என்று கேட்டால், நான் பேராசிரியர் வேலைக்குத்தான் போவேன்.

அந்த அளவுக்கு அமைதியை, இந்த வேலையிலும் பார்க்க முடியும். அதிகாரம் உடையதும் கூட. அதே நேரத்தில் இங்கு நியாயமாக இருந்து தேர்தலை ஒழுங்காக நடத்தாவிட்டால் ஜனநாயகத்துக்கே ஆபத்து வரும் சூழ்நிலை உண்டாகும். அதற்கு இடம் தராத வகையில் செயல்படுவதால் இந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது.

இந்த இடத்தில் இருந்துகொண்டு நான் இரட்டை வேடம் போடக்கூடாது. கடவுள் இருப்பதையும் மறந்துவிட முடியாது. என்னைப் பற்றி சிலர் செய்யும் விமர்சனங்கள் என்னை வேதனைப் படுத்தத்தான் செய்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எனக்கு ஆதரவாக இருப்பதால் இந்த விமர்சனங்கள் எனக்குப் பெரிதாகப்படவில்லை. வழக்கம் போல, நான் அனுமதிக்கப்படும் வரை என் பாணியிலேயே எனது பணியைத் தொடர்வேன்’’

3 Comments:

ஹரன்பிரசன்னா said...

Its one of the good interviews I read. Poor Guptha, sandwiched in between DMK and ADMK.

Unknown said...

This man is really a hero with such a simplicity and guts. Seeing this person, gives us the hopes.

Continue your gr8 work GUPTA!!!

Jai Hind!!

Anonymous said...

My salutes are for Mr.Guptha. It is because of such officers whatever little law and order is prevailing in India. Let his tribe grow.

Sa.Thirumalai