பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 09, 2007

சந்திரசேகர் சொன்ன கருத்துக்கள்

மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி: 4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட "மண்டல்' மற்றும் "அயோத்தி' பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்: சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்: 1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்: மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்: மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்: இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு: மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்: கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்? எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்: ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
( நன்றி: தினமணி )

2 Comments:

Unknown said...

// உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.
//

இது இன்னும் அப்படியேதான் உள்ளது. சொரணையற்ற சமுதாயம் நாம் முன்னேறிவிட்டதாக iPOD களின் விற்பனையைக் கொண்டு அளக்கிறது . :-(((((

நாடோடி said...

//இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.//

என்ன இது கம்யூனிச அடித்தளத்த ஆட்டுறாரு?.. போச்ச தேசபற்று பத்தி பேசுறாரு..