பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 11, 2007

பி.எஸ்.என்.எல்.

‘‘ஒரு செல்போன் இணைப்புக்கு ரூ. 2,845 என்ற அளவில்தான் விலை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், ரூ. 4,940 என்ற விலையில் கருவிகளை சப்ளை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் தொலைத்தொடர்புத் துறைக்கு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை அனுமதிக்க மாட்டேன்... அதனாலேயே டெண்டர் நிறுத்தப்பட்டது...’’ என்று அ.ராசா சில நாட்களுக்கு முன் ஒரு குண்டை தூக்கி போட்டார். அதை பற்றிய முழு விவரம் கீழே...

என்ன பிரச்சனை ?

அதிக தொகை கேட்ட நிறுவனங்கள்

தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 கோடியே 55 லட்சம் செல்போன் இணைப்புகளை கூடுதலாக உருவாக்குவதற்கான நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த டெண்டர் விடப்பட்டது. இதில் எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்களுக்கு இந்த டெண்டரை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நிறுவனங்கள் மிக அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கியதை எதிர்த்து மோட்டரோலா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பிறகு கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கை வாபஸ் பெற்றது.


இதையடுத்து, எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் தயாநிதி மாறன் பதவி விலகி, புதிய தொலைத்தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றவுடன் நிலைமை மாறியது. அந்த டெண்டரை ஆ.ராசா நிறுத்தி வைத்தார். இதற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. ( ஏன் மோட்டரோலாவிற்கு தரவில்லை என்றும் விளக்கமும் கேட்டிருக்கிறார். )


டெண்டரை நிறுத்தி வைத்தது ஏன்? என்பதற்கு ஆ.ராசாவின் விளக்கம்:

மத்திய அரசுக்கு சொந்தமான மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு செல்போன் இணைப்புகளை உருவாக்குவதற்கான 2ஜி, 3ஜி கருவிகள், ஒரு இணைப்புக்கு ரூ.2,845 என்ற விலை அடிப்படையில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஒரு இணைப்புக்கு ரூ.4940 என்ற விலையில் கருவிகள் சப்ளை செய்ய டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு இணைப்புக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக ஏலத்தொகை கேட்கப்பட்டுள்ளது. ஒரு இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் வீதம் இழப்பு என்றால், மொத்தம் 4 கோடியே 55 லட்சம் இணைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிவரை இழப்பு ஏற்படும். தேவையின்றி இவ்வளவு அதிக தொகை கொடுக்க வேண்டி இருக்கும். இதை நான் அனுமதிக்க மாட்டேன். எனவே, டெண்டருக்கு அனுமதி அளிக்காமல் இருக்கிறேன்.
( நல்ல லாஜிக் தான் )

மறு டெண்டர்

இதுபோன்ற சூழ்நிலைகளில் இத்தகைய தாமதம் தவிர்க்க இயலாதது. தவறுகளை எந்த சந்தர்ப்பத்திலாவது திருத்த வேண்டும். இதனால் நாட்டின் தொலைபேசி சேவையை அதிகரிப்பதில் பாதிப்பு ஏற்படாது. மீண்டும் டெண்டர் விடப்படும். ஏலத்தில் பங்கேற்ற 5 நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஒருவேளை, இந்த டெண்டரை அமல்படுத்த பி.எஸ்.என்.எல். விரும்பினால், 2ஜி கருவிகளை வாங்குவதை பற்றி மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.


வேலை நிறுத்தம்

இந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்களும், அதிகாரிகளும் 11-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் நம்பூதிரி வெளியிட்ட அறிக்கை:

நாலரை கோடியே ஐந்து லட்சம் ஜிஎஸ்எம் இணைப்புகளுக்கான ஒப்பந்தம் 2006 மார்ச்சில் கோரப்பட்டு அக்டோபரில் இறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து மோட்டராலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஏப்ரலில் வாபஸ் பெறப்பட்டது. எனினும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இன்னமும் காலதாமதம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் கோரப்பட்டால் மேலும் இரண்டு ஆண்டுகள் காலதாமதமாகும். இதனால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

எனவே ஜிஎஸ்எம் இணைப்புகளுக்கான ஒப்பந்தத்தை உடனே செயல்படுத்தக் கோரி ஜூலை 11-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 கோடியே 55 லட்சம் செல்போன் இணைப்புகளை உருவாக்குவதற்கு கருவிகளை வாங்குவதற்கான டெண்டருக்கு ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், ஜூலை 11-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அது காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறும். புதிதாக டெண்டர் விட்டால், கருவிகள் சப்ளை செய்யப்படுவதற்கு 2 வருடம் ஆகிவிடும். இதனால் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும்


பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. மத்திய அமைச்சரே குற்றம்சாட்டுகிறார். இதில் இருந்தே இந்த குற்றச்சாட்டு திட்டமிட்டு வெளியிடப்பட்டிருப்பது தெரிகிறது. தி.மு.க. தலைமைக்கு எதிராக போனால், தி.மு.க.வுக்கு அடிபணிய மறுத்தால் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இதை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் கதி இதுதான். இந்த குற்றச்சாட்டானது, மல்லார்ந்து படுத்துக்கொண்டு ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்புவது போல் உள்ளது.


ஜெ பேட்டி:

கேள்வி:- தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரியாக இருந்தபோது ரூ.10 ஆயிரம் கோடி இழபëபு ஏற்பட்டிருப்பதாக புதிதாக அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தி.மு.க. மந்திரி ராசா குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- அவர்களே சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது உண்மையாகத் தான் இருக்கும். இந்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இதுபற்றி மேலும் விளக்கங்களை அவரிடம்தான் கேட்க வேண்டும். இப்போது இந்த மோசடியை ஏன் அம்பலப்படுத்துகிறார்கள்? இதற்கு ஏன் இவ்வளவு தாமதமா என்பதையும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைமையையும் தி.மு.க. விளக்க வேண்டும்.

மாறன் தரப்பில் என்ன சொல்லுகிறார்கள்:

‘‘தயாநிதி மாறன் பதவியில் இருந்த மூன்றாண்டுகளில் இது போன்ற டெண்டர் விவகாரங்களில் அவர் தலையிடுவதே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. காரணம், பி.எஸ்.என்.எல். என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு. அதற்கான தேவைகளை அறிந்து முடிவெடுக்க அங்கே உயர்மட்டக் குழு உண்டு. அவர்களே எந்த முடிவையும் எடுப்பார்கள். இவர் அறிந்தவரை, பி.எஸ்.என்.எல்.லின் இந்த முயற்சி, எதிர்கால வளர்ச்சி மற்றும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த விஷயத்தில் வேறு எந்த வகையான தொடர்பும் தயாநிதிக்கு இல்லை.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சிலர் :

‘அமைச்சர் சொல்வதுபோல பத்தாயிரம் கோடி இழப்பு என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட தொகை. அமைச்சர் சொன்ன விவரப்படியே டெண்டர் வழங்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த இழப்பே சுமார் 3530 கோடி ரூபாய்தான். அதிலும் கூட முதற்கட்டமாக முப்பது சதவிகித உபகரணங்கள்தான் வாங்கப்பட இருக்கிறது. அமைச்சர் சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இதற்காக ஆகும் செலவு சுமார் 1170 கோடி ரூபாய்தான். ஆனால் கூடுதல் வசதிகளுக்காகவும், கூடுதல் இணைப்புகளுக்காகவும், திட்டமிடப்பட்ட இந்த ஏற்பாட்டைச் செய்யாமல் டெண்டரை ரத்து செய்தால், உரிய இணைப்புகளை வழங்க முடியாமல், வரும் இரண்டாண்டுகளில் பி.எஸ்.என்.எல். இழக்கப் போகும் வருவாய் சுமார் 36 ஆயிரம்கோடி ரூபாய். எனவே, இவர்களின் அரசியல் சண்டைக்காக பி.எஸ்.என்.எல்.லின் வளர்ச்சியையும், பொதுமக்களின் வசதிகளையும் பலியிட வேண்டாம்!’’ என்ற கோரிக்கையுடன், இது தொடர்பான புள்ளி விவரங்களுடன் கூடிய மூன்று பக்க கடிதம் ஒன்றையும் உலவ விட்டிருக்கிறது இந்த அதிகாரிகள் குழு!

இந்த பிரச்சனை என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும் :-)

3 Comments:

Anonymous said...

முழு விவரங்களுக்கு சிவாஜி படம் பார்க்கவும் :-) எல்லாம் ப்ரொபஷனல் எத்திக்ஸ் பா....

Anonymous said...

என்ன பெரிய கம்ப சூத்திரம் ( அதென்ன கம்ப சூத்திரம், அவுரு இன்னா மேக்ஸ் வாத்யாரா)

//இந்த பிரச்சனை என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும் :-)//

ஒத்த வார்த்தையில சொன்னா..(அட அது இல்லங்க)

அமுங்கிபோகும்...!!!!

வடுவூர் குமார் said...

என்னங்க? கார்ட்டுன் பக்கத்தில் திரு சந்திரசேகரா?