பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 17, 2007

கலைஞர் விடுதலையை எதிர்த்து வழக்கு

இந்துக்களை இழிவாக பேசிய முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை வாபஸ் பெற்றதை ரத்து செய்து, அவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு குறித்து 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

24-10-2002 அன்று கிறிஸ்துவர்கள் சென்னையில் நடத்திய கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி பேசினார். இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என்று அவர் பேசினார். அவரது பேச்சு இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் ஆர். பிரேம்நாத், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 28-10-2002 அன்று கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நான் வழக்கறிஞராக ஆஜரானேன்.

இது குறித்து எழும்பூர் போலீஸôர், கருணாநிதிக்கு எதிராக 14-11-2003-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதன்பிறகு அந்த வழக்கு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து நான் ஆராய்ந்தேன். 17-8-2006 அன்று இந்த வழக்கில் இருந்து கருணாநிதியை விடுதலை செய்து 15 வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் கருணாநிதியை விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கருணாநிதிக்கு எதிராக புகார் கொடுத்தவருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே இவ்வழக்கில் இருந்து கருணாநிதியை விடுதலை செய்துள்ளனர்.

கருணாநிதி முதலமைச்சராக ஆனபிறகு, இந்த வழக்கை வாபஸ் பெற 27-5-06-ல் பொதுத்துறை செயலாளர் (சட்டம் ஒழுங்கு) ஆணை வெளியிட்டுள்ளார்.

பொதுநல முக்கியத்துவம் வாய்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவோ வாபஸ் பெறவோ தகுந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனவே இவ்வழக்கை வாபஸ் பெற 27-5-06 ல் பொதுத்துறை செயலாளர் வெளியிட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வழக்கை மீண்டும் நடத்துமாறு சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் இம்மனு குறித்து 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
(தினமணி செய்தி)

0 Comments: