பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 28, 2007

திராவிட கட்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை - ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு பிறகு பதவிக்கு வந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியை நிறுவ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.


திமுக கூட்டணியில் அங்கம் வகித்து கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாமக, தற்போது நடந்து வரும் திமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. எனினும் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாமக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக, உயர்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது எழுப்பி வருகிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி, எதற்கும் ஒரு அளவு வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடியாக ராமதாஸ், தனக்கு வாய்ப்பூட்டு போட முடியாது என்று அறிக்கை விட்டார். இந்த நிலையில் திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்ற பொருள்படும் படி பரபரப்பான பேட்டி ஒன்றை டெஹல்கா டாட் காம் என்ற இணையதளத்திற்கு அளித் துள்ளார். தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் அளித்த அந்த பேட்டியின் விவரம் வருமாறு:

கேள்வி: பல்வேறு விஷயங்களில் திமுக அரசை பாமக எதிர்த்து வருகிறது. இதை விளக்க முடியுமா?

பதில்: சென்னைக்கு அருகே 140 கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம்பெயரச் செய்யும் அளவிற்கு துணைநகரம் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டது. அதை எதிர்த்தோம். 5 ஆயிரம் குடும்பங்களை அப்புறப் படுத்தும் வகையிலான விமான நிலைய விரிவாக்கத்தையும் எதிர்த்தோம். இந்த விஷயங்களில் அரசு எங்களது கருத்துக்களை ஏற்றுக் கொண்டது. சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைவதை துவக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம்.

ஏனெனில் இது லட்சக் கணக்கான சிறிய வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடாகும்.கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் ஆறாக பெருகி ஓடும் என்று திமுக அரசு வாதிடுகிறது. நாங்கள் இந்த வாதத்தை ஏற்க தயாராக இல்லை. இப்படி பல்வேறு விஷயங்களில், கொள்கைகளில் கருத்து வேறுபாடு உள்ளது. நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.

கே: உங்கள் கட்சியின் செயல் பாட்டை திமுக தாங்கி கொள்ளா விட்டால் என்ன நடக்கும்?

ப: அரசியலில் எதையும் யாரும் கணிக்க முடியாது. பாமகவை பொறுத்தவரை நாங்கள் திமுக அரசை தொடர்ந்து ஆதரிப்போம்.

கே: நீங்கள் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந் திருக்கிறீர்கள். இந்த இரண்டு அணிகளின் தலைவர்களை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

ப: கருணாநிதியை பொறுத்தவரை நான் அவருடன் தொலைபேசியில் பேச விரும்பினால் இப்போதே என்னால் பேச முடியும். அவரை சந்திக்க வேண்டும் என்றால் நாளையே எனக்கு நேரம் ஒதுக்குவார். எனக்கு மட்டுமல்லாமல் எல்லா கூட்டணி தலைவர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்கிறார். ஜெயலலிதாவுடன் தொலை பேசியில் பேச வேண்டும் என்றால் கூட இரண்டு வாரம் காத்திருக்க வேண்டும்.

கே: 2011ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாமகவின் எண்ணம் நிறைவேறுமா?

ப: 1957ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக பிடித்தது 15 இடங்கள் தான். 1962ல் 50 இடத்தை வென்ற திமுக, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அதுகூட ஒரு கூட்டணியை ஏற்படுத்தி தான் அவர்களால் ஆட்சிக்கு வர முடிந்தது. மக்களின் நம்பிக்கையை பெருவதை கொண்டே ஒரு கட்சி வளருகிறது.

கே: திராவிட கட்சிகளின் செயல்பாடு குறித்து உங்களது மதிப்பீடு என்ன?

ப: அந்த கட்சிகள் பெரிய அளவில் எதையும் சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் விரும்பியிருந்தால் வறுமையை அடியோடு ஒழித்திருக்க முடியும். கல்வியில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் கேரளாவுக்கு இணையாக எழுத்தறிவை பெறுவதில் தமிழகத்தை முன்னேற்றி இருக்க முடியும்.

பெருந்தலைவர் காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்தார். ஆனால் இவர்களோ கல்வியில் தனியாரை ஊக்குவித்தனர். மதுவை விற்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

கே:பாமகவின் வன்னியர் சங்கத்தில் அடித்தளம் பாதிக்கப்பட்டுள்ளதா?

ப: பாமக இதையெல்லாம் விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டது. 80களில் வன்னியர் சங்கத்தின் போராட்டங் களின் பயனாக மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் 108 சாதிகளுக்கு இடம் கிடைத்தது. தற்போது பாமக வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சியாக இல்லை. அனைத்து சாதியினரின் ஆதரவையும் அக்கட்சி பெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

5 Comments:

Anonymous said...

இரண்டு மூன்று மாவட்டங்களில் மட்டும் அறைகுறை செல்வாக்கை வைத்துக்கொண்டே இந்த அளவு வாய் கிழிகிறது. திராவிட கட்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதும் சாராயத்தைப்பற்றி சொல்பதும் சரிதான்.

ஆனால் அவர்கள் நினைத்திருந்தால் வறுமையை ஒழித்திருக்கலாம் என்பதுதான் பெரிய ஜோக். வறுமையை ஒழிக்க இவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று கொஞ்சம் கோடி காட்டினால் நன்றாக இருக்கும்.(அவர் குடும்பத்தின் வறுமையை இல்லை)

அமிழ்து - Sathis M R said...

சாதியை வைத்து இரண்டு மூன்று மாவட்டங்களில் கட்சி வளர்த்தாகிவிட்டது. அடுத்தது ஆட்சிக்குக் குறி வைக்கும் போது சாதி வேகாது... தமிழக அளவில் மக்கள் உணர்ச்சியைத் தூண்ட இருக்கவே இருக்கிறது தமிழ். தமிழைக் காக்கிறோம் என்ற போர்வையில் மக்கள் தொலைக்காட்சியின் மூலம் கட்சி வளர்ப்பது கண் கூடு! சில சமயங்களில் இவர்கள் தொலைக்காட்சியில் எடுத்து வைக்கும் கருத்துகள் மாநிலங்கள் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது!

Anonymous said...

டாக்டர் காய்ச்சல் .. டாக்டர் ஊசி போட்டார், வலிக்குது.. பீச்சு ரொம்ப அதிகம்தான்.


வெய்யில் அதிகமா இருக்கு டாக்டர்.. ஒரு மரம் இருத்தா... ... ... சரி டாக்டர்.

Anonymous said...

மரம் வெட்டி அய்யா ஒரு திராவிடனே இல்லை என்ற உண்மையை கூடிய சீக்கிரம் மஞ்ச துண்டு கண்டுபிடித்துவிடும் என்று நம்பலாம்.

அக்குஹீலர் சுப்ரமணியன் said...

யார் திராவிடன் ????????