பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 29, 2007

தில் தலைவர் விஜயகாந்த் - பேட்டி

ஆனந்த விகடனில் வந்த பேட்டி.( நன்றி: விகடன் )
சென்னை-தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபம்; (விகடன்) பயிற்சி முகாமின் முதல் நாள். ‘சிறப்பு அழைப்பாளரோடு சந்திப்பு’ என சஸ்பென்ஸ் வைத்தபோது, வருவது யாரோ என ஆவலும் எதிர்பார்ப்புமாக அமர்ந் திருந்தார்கள் மாணவர்கள். சரியாக ஆறேகால் மணிக்கு மண்டபத்துக் குள் எந்தவித பந்தாவும் இல்லாமல் நுழைந்த அந்தப் பிரபலம்- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். விகடன் இதழ்களின் மூத்த பத்திரிகையாளர்கள் மூன்று பேருடன், மாணவ நிருபர்களும் கேள்விச் சரம் தொடுக்க... பேட்டி உற்சாக வெடியாக வெடித்தது.


‘‘சினிமாவிலும் அரசியலிலும் இழந்ததும் பெற்றதும் என்ன?’’

‘‘நடிகனாக இருக்கும்போது சேர்த்தது பேரு, புகழ், காசு, பணம். அதில் வெற்றியும் இருக்கு, தோல்வியும் இருக்கு! ஆனால், அரசியலில் இழந்ததுதான் அதிகம். என்னை நம்பி சினிமாவில்

இருக்கும் விநியோகஸ்தர்களிடம் ‘விஜயகாந்த் படத்தை வாங்காதீர்கள்’ என்று தடை போட்டார்கள். படத்தை ரிலீஸ் செய்ய முடியாதபடி தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

அறிவாலயத்தில், முன்பக்கம் தி.மு.க. கட்சி அலுவலகம், பின்னால் கல்யாண மண்டபம் என இருக்கிறது. அறிவாலயம் மாதிரி எனக்கும் திருமண மண்டபமும் கட்சி அலுவலகமும் ஒன்றாக அமைந்தது. அது பொறுக்காமல் மண்டபத்தை இடித்தார்கள். ‘ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது’ என்று இகழ்ந்தவர்கள், 8.38 சதவிகிதம் ஓட்டு வாங்கியதும் என்னைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்தார்கள். இடையில் ஒருமுறை கலைஞரைப் பார்க்கப் போனேன். ‘விஜயகாந்த் தடுமாறுகிறார்’ என்று அதுவேகூட செய்தியானது. ஆனால், நான் போன விஷயம் வேறு! போன இடத்தில் மண்டபம் பற்றியும் பேச்சு வந்தது; அவ்வளவுதான்! ஒருவேளை, நான் தி.மு.க-வோடு கூட்டணி வைத்திருந்தால் மண்டபத்தை விட்டிருப்பார்கள்!’’

‘‘ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்கள். ஆனால், மதுரை இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் அரசியல் வாதிகள் பணம் கொடுத்தால் வாங்கிக்குங்கன்னு சொல்றீங்களே?’’

‘‘இதுவே பொதுத் தேர்தலாக இருந்தால், இன்னும்கூட வாங்குங்கன்னு சொல்லியிருப்பேன். மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர் கள், இப்போது அந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ‘ஆயிரம், ரெண்டாயிரம்னு வாங்காதீங்க; ஐந்து வருஷத்துக்கு கணக்கு பண்ணி மொத்தமாக பெரிய தொகையா பேசி வாங்குங்க’ என்றேன். நான் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எப்போதும் எதிரானவன்தான். மதுரையில் நடந்த பண பேரத்தை ஆதாரத்தோடு வீடியோ எடுத்து, தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தாவிடம் கொடுத்தது நான்தான்!’’

‘‘எப்போதும் இரண்டாவது, மூன்றாவது இடத்திலேயே இருந்தால், உங்களை நம்பி இருப்பவர்கள் சோர்வடைந்துவிடுவார்களே... கூட்டணி சேரும் திட்டம் உண்டா?’’

‘‘நானாக யாருடனும் கூட்டணிக்குப் போக மாட்டேன். அவர்களாக வந்து சேர்ந்தால் பார்ப்போம்..!’’

‘‘உங்க லாஜிக் புரியலையே?’’

‘‘அவங்க வர மாட்டாங்கன்னு தெரியும். இருந்தாலும் ச்சும்மா விடுறதுதான். அப்படி நான் சொன்னா தானே உங்களுக்குச் செய்தி (சிரிக்கிறார்)! என்னைப் போலவே தனித் தனியா எல்லா கட்சிகளும் நிற்கட்டும். அப்போ தெரியும், என் பலம் என்ன என்று! மதுரையில், காங்கிரஸ் போன தடவையைவிட இந்த முறை 7,000 ஓட்டு அதிகமா வாங்கியிருக்கு. அதுக்கு 15 கோடி ரூபாய் செலவாகியிருக்கு. இந்த 15 கோடியையும் தொகுதியோட நன்மைக்குச் செலவு செய்திருந்தால், விஜயகாந்த் பற்றி பயப்படவே வேண்டாமே! ஜெயலலிதாவும் கருணாநிதியும் நிஜமாகவே மக்களுக்கு நல்லது பண்ணியிருந்தா, விஜயகாந்த் என்கிற ஒருத்தன் வரவேண்டிய அவசியமே இல்லையே?’’

‘‘மற்றவர்களைக் குடும்ப அரசியல் என்று விமர்சிக்கும் உங்கள் கட்சியிலும் உறவுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறதே? உங்கள் மைத்துனரின் கையில்தான் கட்சி இருப்பதாக சொல்லப்படுகிறதே?’’

‘‘நீங்கள் நல்லதைப் பார்க்க மறுக்கிறீர்கள்; கெட்டதை மட்டும் தோண்டி எடுத்து என்னிடம் கேட்கி றீர்கள். நான் கட்சி துவங்கும்போதே, என் மைத்துனரும் மனைவியும் அதில் உறுப்பினர்கள். அவர்கள் படித்தவர்கள் என்பதால், அவர்களிடம் சில பொறுப்பு களைக் கொடுத்திருக்கிறேன். மற்றபடி கட்சி ரீதியான முடிவுகளை நிர்வாகிகள் தான் எடுக்கிறார்கள். மாவட்டவாரியாக நடக்கிற விஷயங்களைத் தனித்தனி ஃபைலாகப் போட்டு என் பார்வைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.’’

‘‘விவசாயிகள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உங்கள் விவசாயக் கொள்கை என்ன?’’

‘‘விவசாயத்தை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகள் உண்டோ, அவ்வளவையும் இதய சுத்தியோடு ஆராய்ஞ்சு செயல்படுத்த முனையணும். விவசாயத்துக்கு மானியம் அதிகமா கொடுக்கணும். ஆனா, இங்கே என்ன நடக்குது? விவசாயிகள் நம்ம நாட்டின் முதுகெலும்புன்னு சொல்லிக்கிட்டே, அந்த முதுகெலும்பை உடைக்கிற வேலையைத்தான் நம்ம அரசியல்வாதிகள் செய்துட்டிருக்காங்க. நதிகளை இணைக்கணும்னு தன்னோட சட்டமன்றப் பொன்விழா மேடையில் கலைஞர் பேசினாரே... பிரதமர், சோனியா முன்னாடி மேடையில் வேண்டுகோள் வெச்சுட்டா மட்டும் போதுமா? நினைக்கிறப்ப எல்லாம் அவங்களோட போன்ல பேச முடிகிற ஒருத்தர், இப்படி மேடையில் பேசிவிட்டுத் தன் கடமையைக் கழிச் சுக்கிறது சுத்த ஹம்பக்கா தெரியலையா?’’

‘‘குடும்பத் தலைவர், நடிகர், கட்சித் தலைவர்... இந்த மூன்றில் எது சந்தோஷமானது? ஏதாவது, ஒன்றை மட்டும்தான் சொல்லணும்?’’

‘‘சாதிக்கணும்னு நினைக்கிறவனுக்கு எல்லாமே சந்தோஷம்தான். சினிமா, குடும்பம், அரசியல் இந்த மூன்றுமே எனக்கு முக்கியம்தான். என் மனைவி என்னைவிடப் படிச்சவங்க. என் வெற்றிக்குப் பின்னால இருக்கிறவங்க அவங்கதான். நான் சோர்ந்து போகும் போதெல்லாம் அவங்கதான் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்காங்க. வீட்டுக்குப் போனால், நான் குடும்பத் தலைவன். ஞாயிற்றுக்கிழமைகள்ல நான் ஷூட்டிங்ல கலந்துக்கிறது கிடையாது. அது என் குழந்தைகளுக்கான நாள். வீட்டில் இருக்கும்போது சினிமாவை மறந்துவிடுவேன்; சினிமாவில் இருக்கும்போது அரசியலை மறந்துவிடுவேன்!’’

பேட்டியை முடித்துக்கொண்டு, மாணவர்களின் உற்சாக வழியனுப்புதலோடு விடைபெற்றார் விஜயகாந்த். கிளம்பும்போது நம்மிடம், ‘‘இளைய தலைமுறையினரிடம் இத்தனை நேரம் பேசிக்கொண்டு இருந்தது எனக்குள் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருக்கு. ‘எனது கனவு ஒரு நாள், ஒரு பொழுது, இன்று இல்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் விடியும்’ என்றார் கறுப்பு இன மக்கள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். இந்த இளைஞர்களுடன் பேசி, அவர்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டு அறிந்துகொண்டதில், புதுத் தெம்பு கிடைச்சிருக்கு; அவர் சொன்ன அந்த வரும் காலம் எனக்கு வந்தாச்சு என்ற நம்பிக்கை வேர் விட்டிருக்கு! என்ன பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும் தலைவணங்கப் போவதில்லை என்கிற என் உறுதியான முடிவும் மேலும் வலுப்பட்டு இருக்கு!’’ என்று புன்னகையோடு அழுத்தமாக நம் கைகளைப் பற்றிக் குலுக்கி விடைபெற்றார் விஜயகாந்த்.

2 Comments:

Anonymous said...

கேப்டனின் தில் யாருக்கும் வராது.


சிங்கம் சிங்கிளாத் தான் நிக்கும்..

வடுவூர் குமார் said...

நல்லாத்தான் இருக்கு.
ஆனா! எப்ப பார் மண்டபம் பிரச்சனையை பேசுவதை தவிர்க்கலாம்.யார் கண்டா வெட்டி/ஒட்டி போடும் போது இதைப்போட்டா பத்திரிக்கை விற்பனை ஆகும் என்று போடுகிறார்களோ! என்னவோ!
ஒத்துக்கொள்கிறேன்,வலி அவருக்குத்தானே.